சார்பட்டா பரம்பரை வன்னியர் அதிகம் பங்கெடுத்த ஒரு பாரம்பரியம். சார்பட்டா பரம்பரை என்பதே வீரமிக்க, போர்குணம் மிகுந்த வன்னியர்கள் தான் மிகுதியாக பங்கெடுத்து இருக்கிறார்கள். வரலாற்றை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுத்த இயக்குனர் ப.ரஞ்சித் இந்த உண்மையை புரிந்து இருப்பார். சார்பட்டா திரைப்படத்தில் வரும் பசுபதி கேரக்டர் உண்மையான சார்பட்டா பரம்பரையின் வாத்தியாரான வன்னியர் சமூகத்தை சார்ந்த, இராயபுரம் ஏழுமலை நாயக்கரின் வரலாற்றை உந்துதல் கொண்டு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
இராயபுரம் ஏழுமலை நாயக்கரின் அரசியல் வாழ்க்கை திராவிட முன்னேற்ற கழகத்தில் துவங்கி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தில் முடிந்தது.
1994 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஏழுமலை நாயக்கரின் வாழ்க்கை மிக வலிமிகுந்தது.
அவர் மறைந்த பொழுது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின்தலைவர் திருமிகு வைகோ அவர்கள் 18.04.2007 அன்று சமர்ப்பித்த நினைவு அஞ்சலி கீழே உங்கள் பார்வைக்கு.
‘எங்கள் நெஞ்சில் வாழ்கிறார் ஏழுமலை’
என் நெஞ்சில் மறையாத உயிர் ஓவியமாகத் திகழும் மாவீரன் ஏழுமலை அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலே நடைபெறுகின்ற இந்த வரலாற்று நிகழ்வினைக் கண்டவுடன்
“சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதை அம்பில்
பட்டுப் பாடூன்றும் களிறு”
எனும் குறள்பாதான் மனதில் எழுகிறது.
இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உலகத்துக்கே பொதுமறை தந்த வள்ளுவப் பெருந்தகை, இப்பாடலில் அருமையான கருத்தைச் சொன்னார்.
ஆயிரம் வேல்கள் பாய்ந்தாலும், ஈட்டிகள் பாய்ந்தாலும் எத்தனைத் துன்பங்கள் சோதனைகள் நேர்ந்தாலும், சிதைந்து போக மாட்டார்கள், பின்வாங்க மாட்டார்கள், நெஞ்ச உறுதியிலே மாறுபட மாட்டார்கள். சிதைவிடத்து ஒல்கார் உரவோர் – உரம் மிக்கவர்கள்.
நூற்றுக்கணக்கான வேல்களும், கூர்மையான அம்புகளும் பாய்ந்தாலும், போர்க்களத்திலே உறுதியாக நிற்கின்ற போர்முகத்து வேழம் போல, போர்க் களத்து யானையைப் போல உறுதி வாய்ந்தவர்களாக இருப்பார்கள் என்று வள்ளுவன் கூறியதற்கு இலக்கணமாகத் திகழ்ந்த எங்கள் மாவீரன் ஏழுமலையை நினைவுபடுத்துவதற்காக என் அருமைச் சகோதரன் ஜீவன், கோபியின் முன் ஏற்பாட்டோடு மூன்று போர் முகத்து வேழங்களை – யானைகளை இந்த மேடையின் முகப்பிலே கொண்டு வந்து நிறுத்தி உள்ளார்கள்.
அந்த யானைகள் முன்னாலே அணிவகுத்துச் செல்ல, அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையுடன் செல்லுகின்ற ஒரு பட்டாளம்தான் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வீறு கொண்ட பட்டாளம் என்பதை நினைவுறுத்துகின்ற விதத்தில் இந்த மூன்று போர் யானைகள் இங்கே அழகாக நிறுவப்பட்டு இருக்கின்றன.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று தாரக மந்திரத்தைத் தந்திட்ட தமிழ்த்தாயின் தலைமகன் அண்ணா அவர்கள், 1949 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 18 ஆம் நாள், இன்றைக்குச் சரியாக 58 ஆண்டுகளுக்கு முன்பு எந்த இடத்தில் உரை ஆற்றினாரோ – அதே இடத்தில், ஆண்டுகள் 58 ஓடி மறைந்ததற்குப் பின்னர், ‘அண்ணாதான் எங்கள் தலைவர் – அண்ணாதான் எங்களுக்கு வழிகாட்டி – அண்ணாவின் மார்க்கமே எங்கள் பாதை என்று அடியொற்றிச் செல்லுகின்ற ஒரு பாசறை நிகழ்ச்சியாக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்கூட்டத்தை அண்ணா பேசிய அதே ராபின்சன் பூங்காவிலே, எந்தப் பகுதியிலே நின்று அவர் உரை ஆற்றினாரோ அதே இடத்தில் ஏழுமலை நினைவு நாள் கூட்டமாக, எனது தோழர்கள் ஏற்பாடு செய்து இருக்கிறார்கள்.
பல்லாயிரக் கணக்கான தமிழ்ப் பெருமக்கள், கழகத்தோழர்கள், தோழமைக் கட்சியாகிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் திரண்டு இருக்கின்ற இந்த மாபெரும் கூட்டத்தில் உரை ஆற்றுகின்ற இந்த உயர்ந்த நல்ல வாய்ப்பை எனக்கு வழங்கி இருக்கின்ற வட சென்னை மாவட்டக் கழகத்துக்கு என் மனம் கவர்ந்த நன்றியைக் காணிக்கை ஆக்குகின்றேன், கடமையின் நிமித்தம்!
1949 செப்டம்பர் 19 ஆம் நாள். இதே இடத்திலே பொதுக்கூட்டம். ஒரே ஒரு வேறுபாடு. அன்று வானம் கருத்து இருந்தது. சூல்கொண்ட மேகங்கள் திரண்டு இருந்தன. கரும்பஞ்சுப் பொதிகளென மஞ்சுக் கூட்டம் நிறைந்து இருந்தது. வானிலே மின்னல்கள் பாய்ந்து சென்றன. தூரத்தில் இடி முழக்கம் கேட்டது. மழை பொழிந்தது. அந்த மேடையில் பாவேந்தர் பாரதிதாசனும் இருந்தார்.
அம்மேடையிலே பேசிய பேரறிஞர் அண்ணா அவர்கள், ‘மழை பலமாகப் பெய்துகொண்டு இருக்கிறது; இந்த மழையைச் சமாளித்துக் கொண்டு ஏராளமான மக்கள் வந்து இருக்கிறார்கள். தாய்மார்கள் சங்கடத்தோடு சமாளித்துக் கொண்டு நிற்கிறார்கள்’ என்று உரை ஆற்றிய அந்த நிகழ்ச்சி, வரலாற்றின் பக்கங்களில் கல்வெட்டாக அமைந்த நிகழ்ச்சி, இங்குதான் ராபின்சன் பூங்காவுக்கு அருகிலே நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள் – நெடுங்காலமாகத் திராவிட முன்னேற்றக் கழகத்திற்காகப் பாடுபட்ட தோழர்கள் தொலைவிலே இருந்து எங்கள் உரையைச் செவி மடுக்கக்கூடும்.
ஒரு 50 ஆண்டுக் காலத்தில், 1967 வரையிலும், ஏன் புரட்சித் தலைவர் பிரிகின்ற காலம் வரையிலும், எந்த திராவிட முன்னேற்றக் கழக மேடைப் பொதுக்கூட்டத்திலே எப்படிப்பட்ட பேச்சாளர் பேசினாலும், மேடையில் பேசத் தொடங்கிய உடன், எப்படி அகரம் எழுதி விட்டுத்தான் எழுத்தைப் படிப்பதைப் போல, உயிர் எழுத்தின் முதல் எழுத்தாகிய அகரத்தைச் சுட்டிக் காட்டித்தான் தமிழ் மொழியைப் படிப்பது போல, எந்தப் பொதுக்கூட்ட மேடைக்குச் சென்றாலும் ‘49 இல் ராயபுரம் ராபின்சன் பூங்காவிலே பேரறிஞர் அண்ணா பேசினார். ‘திராவிட முன்னேற்றக் கழகம் உதித்தது’ என்ற கருத்தைப் பேசாத மேடை கிடையாது. அப்படி உருவாக்கப்பட்ட இயக்கம் இது.
அண்ணாவின் பேச்சால் உருவாக்கப்பட்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொன்னால், இன்றைக்கு நான் தியாகி மாவீரன் ஏழுமலையை நினைவூட்டிச் சொல்லுகிறபொழுது எத்தனையோ பேருடைய உழைப்பிலும், தியாகத்திலும் இயக்கம் வளர்ந்தது. இந்த இயக்கத்துக்காகப் பாடுபட்டவர்கள், கல்லடியும், சொல்லடியும் வாங்கியவர்கள், இரத்தம் சிந்தியவர்கள், கண்ணீர் சிந்தியவர்கள், வியர்வைக் கொட்டியவர்கள், சிறைவாசம் ஏற்றவர்கள் என்பதை அடித்துச் சொல்லுகிற வேளையில், தாளமுத்து நடராஜன் கல்லறை அமைந்து இருக்கின்ற மூலக்கொத்தளம் இடுகாட்டிலேதான் எங்கள் மாவீரன் ஏழுமலையின் கல்லறையும் அமைந்து இருக்கின்றது.
தாளமுத்து நடராஜனின் தியாகத்தைச் சொல்லி, இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போரிலே அவர் மடிந்ததை எடுத்துச் சொல்லி, இது இரத்தத்தால் வளர்ந்த இயக்கம், தியாகத்தால் வளர்ந்த இயக்கம், கே.வி.கே. சாமி சிந்திய இரத்தம், ஆலந்தூர் சின்னான் சிந்திய இரத்தம், நெல்லிக்குப்பம் மஜீத், வண்ணை பாண்டியன், கோவை ஆரோக்கியசாமி, உடையார்பாளையம் வேலாயுதம், கடைசியாக திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகும் பச்சை இரத்தம் பரிமாறிய பிரதாபச்சந்திரன் வரையிலும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் பாடுபட்ட தோழர்களின் தியாகத்தைச் சொல்லி, அண்ணாவின் கொள்கையைச் சொல்லி வளர்க்கப்பட்ட இயக்கம். பேரறிஞர் அண்ணா உருவாக்கிய இயக்கம் என்போம்.
இன்றைக்கு நெடுந்தொலைவு வந்து விட்டோம். ஆனால், இதை நான் நினைவூட்டுவதற்குக் காரணம் அத்தனைப் பேர் தியாகம் செய்து, தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு, அண்ணாவின் இயக்கத்துக்காகத் தத்தம் உயிர்களைத் தியாகம் செய்து அந்த இயக்கம் வளர்ந்தது. படிப்படியாக வளர்ந்தது. அப்படி உருவாக்கப்பட்ட இயக்கத்துக்கு மதிப்புமிக்க கலைஞர் தலைமை தாங்குகிறாரே, அந்த இயக்கத்திலே என்ன நிலைமை ஏற்பட்டு இருக்கிறது என்பதை எனக்கு முன்பு பேசியவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
நான் பகை உணர்ச்சி கொண்டு பேசவில்லை. திராவிட இயக்கத்திலே எங்களை ஒப்படைத்துக் கொண்டு நாங்கள் பாடுபடுகிறோம். இதே இடத்தில் 1993 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 26 ஆம் நாள் என்னைப் பேசுவதற்கு அழைத்துக் கொண்டு வந்தார் ஏழுமலை. பக்கத்திலே இருக்கக்கூடிய சூளைமேட்டிலே நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு அழைத்துக் கொண்டு வந்தார்.
இன்றைக்கு இந்தக் கூட்டத்துக்கு வருகிற வழி நெடுகிலும் செய்யப்பட்டு இருந்த ஏற்பாடுகளைப் பார்க்கிறபொழுது, இன்று எங்கள் தலைமை அலுவலகமான தாயகத்தில் இருந்து ராபின்சன் பூங்கா வரையிலும் பல்லாயிரக்கணக்கான கொடி மரங்களிலே எங்கள் பதாகைகள் பட்டொளி வீசிப் பறக்கின்றன.
தாயின் மணிக்கொடி பாரீர் – அதைத்
தாழ்ந்து பணிந்து வணங்கிட வாரீர்
என்று கவிஞன் கூறியதைப் போல, நம்பற்குரியராம் அவ்வீரர், தங்கள் நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார் என்பதைப் போல, எங்கள் கொடிகள் இன்றைக்குப் பட்டொளி வீசிப் பறக்கின்றது, தாயகத்திலே இருந்து ராபின்சன் பூங்கா வரையிலும்!
இவ்வளவு ஏற்பாட்டைச் செய்து இருக்கின்ற என்னுடைய அன்புத் தம்பிமார்களை, சகோதரர்களை, ஜீவன், மனோகரன், கோபியை, உடன் இருந்து பாடுபட்ட மாவட்ட, பகுதிக் கழகப் பொறுப்பாளர்களை நான் நெஞ்சாரப் பாராட்டுகிறேன். இவ்வளவு சிறப்பாக ஏழுமலையின் நினைவை மனதுக்கு உள்ளே வைத்து வணங்கிக் கொண்டாடுகிற வேளையில், ஏழுமலையின் மகன் பக்கத்திலே இருந்து கேட்டான். ஏன் மிகவும் மனம் உடைந்து, நலிந்த நிலையிலே எங்கள் வீட்டுக்கு வந்தீர்கள்? உடல் நலமாக இருக்கிறதா? என்று என்னிடத்திலே கேட்டான். நான் நலமாகத்தான் இருக்கிறேன். உன் தகப்பனார், உன் தந்தை இருந்திருந்தால் எவ்வளவு பாதுகாப்பாக இருந்திருக்குமே என்றுதான் நான் கவலையோடு கூறினேன்.
இதே மேடைக்குப் பக்கத்திலே இருக்கக்கூடிய சுழல் மெத்தைக்கு, ஏழுமலை என்னை அழைத்துக்கொண்டு வந்த அந்த நாள் எனக்கு ஞாபகம் வருகிறது. அந்த மேடையும் என் நினைவில் இருக்கிறது. ஒரே ஒரு வேறுபாடு. இன்று மூன்று போர் யானைகளை முன்னாலே நிறுத்தி இந்த மேடையை அமைத்து இருக்கிறார்கள். அன்றைக்கு, பாய்ந்து செல்லுகிற ஏழு புரவிகள், அதிலும் போர்க்களத்துக்குச் செல்வதைப்போல, மின்னல் வேகத்திலே செல்வதைப் போல, ஏழு குதிரைகளை அழகாக அமைத்து, அந்த ஏழு குதிரைகள் இழுத்துச் செல்லுகின்ற ரதத்தின் மீது ஒரு மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையிலே கொண்டு வந்து இதேபோல என்னை நிற்க வைத்துப் பேசி அழகு பார்த்தாரே என் சகோதரன் ஏழுமலை, அவர் இன்றைக்கு இல்லையே என்றுதான் நான் எண்ணிப் பார்க்கிறேன். அந்த நிகழ்வும் எனக்குப் பசுமையாக நினைவுக்கு வருகிறது.
1993 நவம்பர் 26 ஆம் நாள் என்னை அழைத்துக் கொண்டு வந்து பேச வைத்த ஏழுமலை அவர்களுடைய தியாகத்தை நான் எண்ணிப் பார்க்கிறேன். எவ்வளவோ மன உறுதியோடு போராடினார் என்பதை நான் யோசித்துப் பார்க்கிறேன்.
எழுச்சிப் பேரணி
1994 ஏப்ரல் 16.தமிழக அரசியல் வரலாற்றிலே அதுவரை காணாத ஒரு காட்சி. சென்னையில் எழுச்சிப் பேரணி நடத்தினோம். இன்று சுவர் எழுத்துகள் எங்கும் பளிச்சிடுகின்றன. எல்லா அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களும், தங்கள் நிகழ்ச்சிகளை, மாநாடுகளை இன்றைக்குச் சுவர் எழுத்துகளிலே எழுதிப் போடுகிறார்கள். ஆனால், 94 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 எழுச்சிப் பேரணிக்கு ஏழுமலையின் அன்புக்கட்டளையின்பேரில், சென்னை மாநகரம் எங்கும் “வைகோ அழைக்கிறார்” என்ற எழுத்துகள், சீனத்துச் சுவர் எழுத்துகளைப் போல அன்றைக்குப் பளிச்சிட்டன. அப்படி ஒரு பேரணியை இதுவரை எவரும் நடத்தியது இல்லை என்பதையும் நான் எண்ணிப் பார்க்கிறேன்.
அந்தப் பேரணி நடைபெறுவதற்கு ஒரு வார காலத்திற்கு முன்னர், கருப்பு, சிவப்புக் கொடி பிடித்து வரக்கூடாது என்றும், அதற்காகவே திட்டமிட்டு எங்களுக்குத் தடை விதிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டபோது, அப்படி கருப்பு, சிவப்புக் கொடி பிடித்து வந்தால், மாறுகால், மாறுகை வாங்கப்படும் என்று இன்றைக்குத் திராவிட முன்னேற்றக் கழக அரசில் அமைச்சர்களாக அமர்ந்து இருப்பவர்கள் எச்சரிக்கை விடுத்தார்கள்.
நிச்சயமாகப் பேரணி நடக்கும். நாங்கள் வன்முறையில் ஈடுபட மாட்டோம். ஆனால், எந்தச் சக்தியாலும் எங்கள் பேரணியைத் தடுக்க முடியாது. உலகமே எதிர்த்து வந்தாலும் அந்தப் பேரணியை நடத்திக் காட்ட முடியும் என்று நாங்கள் திட்டமிட்டு, அன்று பிற்பகலிலே 3.00 மணி அளவிலே தொடங்கிய பேரணி, மறுநாள் காலையில்தான் நிறைவுற்றது. தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில், பிற்பகலில் தொடங்கிய பேரணி, மறுநாள் வைகறைப் பொழுதையும் கடந்து, பொழுது புலர்கிற நேரத்திலே முடிந்த வரலாறு அதுவரை கிடையாது. அந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டு வரலாற்றிலே மறக்கமுடியாத நிகழ்ச்சி. அதை நடத்திக் காட்டிய ஏழுமலையின் புகழ் என்றைக்கும் இருக்கும்.
பிறந்தவர்கள் மடிவதை யாராலும் தடுக்க முடியாது. மரணத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. நேற்று இருந்தவன் இன்று இல்லை. இன்று இருப்பவன் நாளை இல்லை.
பாளையாம் தன்மை செத்தும்
பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும்
காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ்வியல்பும் முன்னே
மேல்வறும் மூப்பும் ஆகி
நாளுநாள் சாகின்றோமாம்
நமக்கு நாம் அழாதது என்னோ!
என்று குண்டலகேசியிலே பாடல் இடம் பெற்று இருக்கிறது. ஆக, மரணத்தை யாராலும் வென்று விட முடியாது. ஆனால், புகழ்மிக்கவர்கள் மரணத்தை வெல்கிறார்கள். ஏழுமலை என்றைக்கும் நிலைத்து இருக்கிறார்.
பேரணிக்கு முதல் நாள், மேடையைப் பார்வையிட என்னை அழைத்துக் கொண்டு செல்லுகிறார். கடற்கரையிலே அமைக்கப்பட்ட மேடையைக் காண்பிக்கிறார். என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்று என்னுடைய நெஞ்சம் பூரிக்கின்ற விதத்திலே சுற்றிக் காட்டுகிறார்
எழுச்சிப் பேரணியை பிற்பகல் மூன்று மணிக்குத் தொடங்க வேண்டும். அந்தப் பேரணிக்கு என்னை அழைத்துச் செல்வதற்கு நான் தங்கி இருந்த விடுதிக்குச் சிங்கம் போல் பாய்ந்து வந்தார் ஏழுமலை. அவருக்குப் பக்கத்தில், மன உறுதி படைத்தவராக, வைரத் தூணாகத் திகழ்ந்த செல்வராஜ் அவர்களும் ஏதோ துள்ளிக் குதிக்கின்ற சிங்கக் குட்டிகளைப் போல, வாலிப வயதினரைப் போல் அவர்கள் நான் தங்கி இருந்த அறைக்கு வந்தார்கள்.
‘இலட்சக்கணக்கானவர்கள் திரண்டு வருகிறார்கள், சைதாப்பேட்டை தாண்டி வந்து விட்டது கூட்டம், நீங்கள் புறப்படுங்கள், பேரணியைப் பார்வையிடும் மேடைக்கு வாருங்கள்’ புறப்படுங்கள் என்று சொல்லி அழைத்துச் சென்றார்.
மேடைக்கு அழைத்துச் செல்கிறார். மேடைக்கு அருகிலே நான் போய் நிற்கிறேன். இன்னும் சற்று நேரத்திலே பேரணி தொடங்கி வந்து விடும் என்று சொல்லுகிறார். நான் மிகுந்த மனமகிழ்ச்சியோடு இருக்கிறேன். என் மனதிலே அந்தக் காட்சியை என்றைக்கும் மறக்க முடியாது.
அப்பொழுது ஓடி வந்த வேளச்சேரி பகுதித் தோழர்களின் அன்பு, ஆர்வத்தின் காரணமாக மணிப்புறாக்களைப் பறக்க விட வேண்டும் என்று சொல்லி என் கரத்திலே ஒரு மணிப்புறாவைக் கொண்டு வந்து கொடுத்தார்கள். ஆர்வத்தின் காரணமாக அந்தப் புறாவை அவர்கள் கொண்டு வந்த வேகத்தில் அந்தப் புறாவின் இறக்கை பாதிக்கப்பட்டு இருக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை. அவர்கள் அதைக் கொண்டு வந்த முறையில், அதைப் பறக்க விட வேண்டும் என்று இருந்த ஆர்வத்தில் அதைப் பாதுகாப்பதிலே சிறு கவனக்குறைவு ஏற்பட்டு விட்டது. ஏழுமலை கையிலே கொண்டு வந்து அந்தப் புறாவைக் கொடுத்து, வைகோ கையில் கொடுத்து இந்தப் புறாவைப் பறக்க விடச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். புறாவை என் கையிலே கொடுக்கும்போது நான் சற்றுத் தயக்கத்தோடு வாங்கினேன். இரண்டு புறாக்களைப் பறக்கவிடச் சொன்னார்கள். ஒரு புறா பறந்தது. மற்றொரு புறாவை எடுத்துப் பறக்கவிடும்போது அது இறகு ஒடிந்த பறவையாக கீழே விழுந்தது. என் மனம் துயரப்பட்டது. ஏதோ மனதுக்கு உள்ளே ஒரு வேதனையாக அந்த நிகழ்ச்சி மனதிலே காயத்தை ஏற்படுத்தியது.
அந்தப் பேரணியின் நிறைவில் நடைபெற்ற கூட்டத்தில், அதிகாலை நாலரை மணிக்கு ஏழுமலை மேடையிலே நின்று முழங்குகிறார். ‘எச்சரிக்கிறேன், எச்சரிக்கின்றேன். எங்களை அழிக்க நினைக்கின்றவர்களை எச்சரிக்கின்றேன். கவனத்தோடு இருங்கள்’ என்று எச்சரிக்கை செய்து அவர் பேசி முடித்தபோது, நான் பொன் ஆடையைப் போர்த்தி அவரை ஆரத் தழுவிக் கட்டிக் கொண்டேன்.
‘என் சகோதரனே வெற்றி பெற்றுவிட்டாய். தமிழகத்தின் ஒட்டுமொத்தக் கவனத்தையும் ஈர்ப்பதிலே நீ வென்று விட்டாய்’ என்று பாராட்டினேன். பொழுது புலர்ந்ததற்குப் பின்னர்தான் நான் பேசினேன். ஆறு மணி ஐம்பது நிமிடத்துக்குப் பேசிவிட்டுச் சென்றேன்.
எவ்வளவு மனமகிழ்ச்சி! எவ்வளவு புளங்காகிதமான நிகழ்ச்சி! மறுநாள் காலை 17 ஆம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சி. அந்தத் திருமண நிகழ்ச்சிக்கு ஏழுமலை என்னை அழைத்துக் கொண்டு செல்லுகிறார். மணமக்களை வாழ்த்திப் பேசிவிட்டு, என் இல்லத்திலே கொண்டு வந்து விட்டுவிட்டுச் சென்றார்.
அன்று மாலையிலே அவர் கடற்கரைக்குக் குடும்பத்தாரோடு சென்று பேரணி நடைபெற்ற இடத்தைச் சுட்டிக் காட்டினார். மேடை பிரித்தும், பிரிக்கப்படாமலும் இருக்கிறது. 17 ஆம் தேதி அதைக் காண்பிக்கிறார்.18 ஆம் தேதி இடி விழுந்தது எங்கள் தலையிலே.18 ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு ஏழுமலை அமர்ந்து இருக்கிற இடத்தில், ‘அவர் கழுத்திலே மாலை போடப் போகிறோம், அவருக்கு சால்வை அணிவிக்கிறோம்’ என்று வஞ்சகர்கள், கயவர்கள் வந்தார்கள். அப்போது அவர் பக்கத்திலே வேறு தோழர்கள் இல்லை. உணவு அருந்தச் சென்று விட்டார்கள். தன்னந்தனியாக இருந்த எங்கள் சிங்கத்தை, அவர் கழுத்திலே மாலை போடுவதாகச் சொல்லி – மாலையும், சால்வையும் அணிவிக்கிறபொழுதே கட்டாரியால் வெட்டிச் சாய்த்தார்கள். ஏககாலத்திலே ஏராளமான ஆயுதங்கள் மேலே பாய்ந்தன, கத்திகள் பாய்ந்தன, அரிவாள்கள் பாய்ந்தன. நொடிப் பொழுதிலே துடிக்கத் துடிக்க அவரைச் சிதைத்துப் போட்டுவிட்டுப் போனார்கள்.
நான் தலைநகர் டெல்லியில் இருக்கிறேன். தொலைபேசியிலே தகவல் வருகிறது. ‘ஏழுமலையை வெட்டிச் சாய்த்து விட்டார்கள்’ என்றபோது, என் அங்கம் பதறியது. கை நடுங்கியது. குரல் தழுதழுத்தது. வில் ஒடிந்து போய் விட்டது, என் தேர் முறிந்து விட்டது, வீணையின் நரம்பு அறுந்து விட்டது. எவ்வளவு அழகான சிலையைச் செதுக்கினேன்? செதுக்கப்பட்ட சிலையின் முகமே சிதைந்து போய்விட்டதே? எவ்வளவு அன்போடு, ஆசையோடு அவருடைய அரவணைப்பிலே இந்த இயக்கத்தை வளர்த்துவிடலாம் என்று நான் திட்டமிட்டேன். அவரைச் சாய்த்து விட்டார்களே மண்ணிலே, இரத்தத்திலே சாய்த்துவிட்டார்களே என்று துடிதுடிக்க நான் ஓடோடி வந்தேன். அந்தத் துயரம் என் நெஞ்சிலே ஆழமான காயமாகப் பதிந்து இருக்கிறது.
நினைவுக்கு வருகிறது. அந்தக் கட்டத்தில்தான்,‘துன்பத்தில் தோள் கொடுப்பவன்தான் நண்பன்’ என்ற உணர்வோடு, ஐயா தினகரன் கே.பி.கே. வந்தார்கள். ஏழுமலையின் அலுவலகத்துக்கு வந்தார்கள். நான் அமர்ந்து இருந்த நாற்காலிக்குப் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். என் கைகளைப் பற்றிக் கொண்டார்கள். துன்பமான நேரத்தில் உங்களுக்குத் துணையாக இருக்க வேண்டும் என்றுதான் நான் இங்கு வந்து இருக்கிறேன் என்று சொன்னார்கள்.
கட்டுப்படுத்த முடியாத அழுகையை, கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியாமல் நான் துடித்தபோது, ஆறுதல் சொல்ல முடியாமல் தவித்தார்கள். இலட்சக்கணக்கான மக்கள் இந்த வடசென்னையிலே திரண்டார்கள். ஏழுமலையின் உடலை நாங்கள் தூக்கிச் சுமந்து கொண்டு போகிறபோது, சாலையின் இருமருங்கிலும் திரண்டு இருந்த தம்பிமார்கள் கதறி அழுதனர். இந்த வடசென்னையே ஒட்டுமொத்தமாக சென்னை மாநகரமே திரண்டு வந்து இருந்தது. ஐயா கே.பி.கே. அவர்கள் ‘நானும் மூலக்கொத்தளம் சுடுகாடு வரையிலே உங்களோடு நடந்து வருகிறேன்’ என்று அந்த ஐந்து கிலோமீட்டர் தொலைவும் என்னோடு நடந்து வந்தார்கள்.
மூலக்கொத்தளம் சுடுகாட்டில் சிதையிலே ஏழுமலையின் பூத உடலை வைத்துவிட்டு, அவருக்கு மலர்களை அஞ்சலியாகத் தூவி, அவருடைய இறுதிச் சடங்குகளை நிறைவேற்றினோம்.
வாழ்க்கை அமைப்பைப் பார்த்தீர்களா? பிறந்த குழந்தைக்குத் தாய் பால் ஊட்டுகிறாள். குழந்தை பிறந்தவுடன் அம்மா என்று குரல் கொடுக்கின்ற வேளையிலேயே, தாய் அமுது ஊட்டுகிறாள், பால் ஊட்டுகிறாள். மடிந்ததற்குப் பின்னரும், இந்த உடலிலே இருந்து உயிர் பிரிந்ததற்குப் பின்னரும், காலம் காலமாக நம் தமிழ் மக்கள் போற்றி வருகின்ற பின்பற்றி வருகின்ற மரபுப்படி, இறந்து போனவருடைய வாயில் பாலைப் புகட்டுகிறார்கள்.
வாழ்க்கை தத்துவத்தை நம்மவர்கள் எவ்வளவு அருமையாகப் பின்பற்றி வருகிறார்கள். ஆம்.
மண்தினி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்,
உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே
நெல்லும் கரும்பும் தமிழர்கள் விளைவிப்பது. அரிசி என்பது தமிழர்கள் பண்பாட்டோடு வளர்ந்தது என்பதால்தான், பால் கொடுத்து வளர்ந்த பிள்ளை, உணவு அருந்துகிற பக்குவம் வந்ததற்குப் பிறகு, அரிசியை உணவாகத் தருகிறார்கள். அந்த அரிசியை மணவிழா நிகழ்ச்சியிலே தூவுகிறார்கள். நெல்லைத் தூவுகிறார்கள். மணமக்களுக்குத் தூவுகிறார்கள். கணவன், மனைவியாகின்ற தம்பதிகளுக்குத் தூவுகிறார்கள். பூக்களையும், நெல்லையும் தூவுகின்ற அதே மக்கள்தான், இறந்ததற்குப் பிறகு அந்த உடலுக்கு வாயில் பாலைப் புகட்டி விட்டு, அரிசியைப் போடுகிறார்கள். பூக்களைப் போடுகிறார்கள். நெல்லும், பூக்களும் மணவிழா மேடையிலும் போடப்படுகிறது. அதைப் போல மடிந்ததற்குப் பிறகு சுடுகாட்டிலும் அந்த உடலிலே போடப்படுகிறது.
அதைத்தான் அழகாக சங்க இலக்கியத்திலே சொன்னான். இறந்து போன ஒருவனுடைய வீட்டில் ஒரு பறைச் சத்தம் கேட்கிறது. பிலாக்கணம் சத்தம் கேட்கிறது.
ஒஓரில் நெய்தல் கரங்க….
அந்த வீட்டிலே இழவுச் சத்தம். இன்னொரு தெருவிலே ஒரு மணவிழா நடக்கிறது.
அங்கே மேளச்சத்தம். இங்கே பிணம் கிடக்கிறது.
அங்கே மண விழா நடக்கிறது. இங்கே பிணத்துக்குப் பூக்கள் போடுகிறார்கள்.
அங்கே மணவிழா மேடையிலே பூக்கள் போடுகிறார்கள்.
இதுதான் வாழ்க்கை. கலைந்து போவதுதான். அதிலும், திருமூலர் சொன்னார். சாகிற வரைக்கும்தான் பெயர். இறந்ததற்குப் பின்னர் அந்தப் பெயரும் கிடையாது. வெறும் பிணம்தான் என்று சொல்கிறார்.
‘அழகுசிங்கம்’ என்று அழகான பெயரைச் சொல்லிக் கூப்பிடுவார்கள். அவர் இறந்து விட்டால், அந்த வீட்டாராக இருக்கட்டும், உறவினராக இருக்கட்டும், சுந்தரமூர்த்தியை நாம் சுடுகாட்டுக்கு அழைத்துக் கொண்டு போவோம் என்று சொல்வது இல்லை. பிணத்தை எப்போது எடுக்கிறீங்க? என்றுதான் கேட்பார்கள். சுந்தரமூர்த்தியை எப்போது எடுக்கலாம் என்று கேட்பது இல்லை. அந்தப் பெயரும் அதோடு மறைந்து போய் விடுகிறது. இறந்ததற்குப் பிறகு அந்த உடலுக்குப் பெயர் கூடக் கிடையாது. அதைப் பிணம் என்றுதான் சொல்வார்கள். தூக்கிச் சென்று, கூடி அழுது, சுடுகாட்டிலே தகனம் செய்து, நீரில் குளித்து, அந்த நினைவை மறந்துவிட்டு, தங்கள் வாழ்க்கைப் பயணத்தைத் தொடருகிறார்கள். இதுதான் வாழ்க்கை!
ஆயினும், கொள்கைக்காக வாழ்பவர்கள், இலட்சியங்களுக்காக வாழ்கின்றவர்கள் மக்கள் மனத்திலே நிலைத்து இருக்கிறார்கள். இந்த மண்ணுக்காக, மண்ணில் வாழும் மக்களுக்காக, உயர்ந்த கொள்கைகளுக்காகத் தங்களை அழித்துக் கொண்டவர்கள், வாழ்கிறார்கள். பெரியார் வாழ்கிறார், அண்ணா வாழ்கிறார், கே.வி.கே. சாமி வாழ்கிறார், பிரதாபச்சந்திரன் வாழ்கிறார், உடையார்பாளையம் வேலாயுதம் வாழ்கிறார், வண்ணை பாண்டியன் வாழ்கிறார், நெல்லிக்குப்பம் மஜீத் வாழ்கிறார், திராவிட இயக்கத்தினுடைய வீரர்கள் வாழ்கிறார்கள், தீக்குளித்த தியாகிகள் வாழ்கிறார்கள் என்று சொல்லுவதைப் போலத்தான் எங்கள் இயக்கத்தின் வரலாற்றில், களபலியான எங்கள் ஏழுமலை எங்கள் நெஞ்சத்திலே நிலைத்து வாழுகிறார்.
ஆயிரம் ஈட்டிகள் எங்கள் மீது பாய்ந்து இருக்கின்றன. ஆயிரம் சோதனைகள் எங்களைச் சூழ்ந்து இருக்கின்றன. அத்தனைச் சோதனைகளையும் தாங்கிக் கொள்கின்றவர்களாக நாங்கள்இருக்கிறோம். அத்தகைய வீரர்கள் எங்களோடு இருப்பவர்கள், இந்த மேடையிலே இருப்பவர்கள், எதிரிலே இருப்பவர்கள். நாங்கள் தேர்தலில் தோற்று இருக்கலாம். தேர்தல் களத்திலே வெற்றிகளைப் பெற முடியாமல்கூட போய் இருக்கலாம். ஆனால், அரசியல் களத்தில், எங்கள் மீது எவ்வளவோ தாக்குதல்களும், சோதனைகளும் சூழ்ந்தாலும்கூட இந்த இயக்கத்தைப் பாதுகாத்து வருகிறோம் என்று சொன்னால் ஏழுமலையின் நெஞ்சுரம் வாய்ந்த தீரர்கள் மறுமலர்ச்சி தி.மு.க.வில் இருக்கிற காரணத்தினால், நாங்கள் எதற்கும் கலங்காமல், அஞ்சாமல் இந்த இயக்கத்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம், நடத்துவோம். இந்த இயக்கத்தை எவராலும் அழிக்க முடியாது. இந்த இயக்கம் என்றைக்கும் இருக்கும். தியாகத்திலே பிறந்த இயக்கம். நெருப்பிலே பிறந்த இயக்கம், உறுதியில் வளர்ந்த இயக்கம்.
யானைகளை அமைத்து வந்து நிறுத்தி இருக்கிற ஜீவன் அவர்களே! குமரகுருபரர் அழகாகச் சொன்னார். இந்த மேடையிலே இருக்கிற தளகர்த்தர்கள் அப்படிப்பட்டவர்கள் என்பதனாலே நான் சொல்கிறேன்.
எப்படிப்பட்டவர்கள் தெரியுமா,
‘வேத்தவை காத்து உவப்பு எய்தார்
மாத்தகைய அந்தப் புரத்து பூனை
புறங்கடைய கந்து கொள் பூட்கைக் களிறு!’
எனப் பாடினார் குமரகுருபரர்!
அரசனின் அவையில் பதவிக்குப் பல் இளித்து, அந்தப்புரத்துக்கு உள்ளே சென்றுக் கொண்டு இருக்கின்ற பூனையைப் போன்றவர்கள் அல்ல இந்த வீரர்கள். சங்கிலியால் கட்டப்பட்டு இருந்தாலும் போர் முழக்கம் கேட்கிற போது, பேரிகை முழங்குகின்றபோது, சங்கிலியை அறுத்துக்கொண்டு பாய்ந்து,மன்னனை வெற்றி பெறச் செய்கின்ற பட்டத்து யானையைப் போன்றவர்கள் என்று குமரகுருபரர் சொன்னாரே, அப்படிப்பட்ட களிறுகள்தான் இந்த மேடையிலும், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழர்கள்!
எந்த இலட்சியங்களுக்காகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினாரோ, அந்த இலட்சியத்திற்காக நாங்கள் இருக்கிறோம். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தோடு கூட்டணி அமைத்துக் கொண்டது. இது இயற்கையான கூட்டணி. நியாயமான கூட்டணி. விலகிச் சென்றவர்களைப் பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. அவர்கள் விலகிச் சென்றதைப் பற்றி யாரும் இங்கே கவலைப்படவும் இல்லை. உரிய மதிப்பையும், மரியாதையும் கொடுத்து இந்த இயக்கத்திலே, மற்றவர்களுக்கெல்லாம் இல்லாத பதவிகளையும் கொடுத்துதான் இந்த இயக்கம் அவர்களை வைத்து இருந்தது. துரோகம் செய்தார்கள், வஞ்சகம் செய்தார்கள். விலகிச் சென்றார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.
ஆனால் இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கிறார்களே, அவர்களை ஏவி விட்டவர்களுக்குச் சொல்லுவேன். இந்த இயக்கம் ஏன் தோன்றியது? ஒரு குடும்ப ஏகாதிபத்தியத்தினுடைய தாக்கத்தை எதிர்த்துத் தோன்றியது. மறுமலர்ச்சி அப்படித்தானே தோன்றியது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உழைத்த ஏழுமலை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீரன் என்று பாராட்டப்பட்ட ஏழுமலை எந்த நோக்கத்துக்காக எங்களோடு அணிவகுத்தார்?
எந்த நோக்கத்திற்காக, எந்த ஆதிக்கத்தை எதிர்த்து இந்த இயக்கம் விதைக்கப்பட்டதோ, உருவாக்கப்பட்டதோ அதைவிட ஆயிரம் மடங்கு காரணங்கள் இன்றைக்கு வலுவாக இருக்கின்றன. 93 இல் இருந்த ஆதிக்கத்தை விட 100 மடங்கு ஒரு குடும்பத்தின் ஆதிக்கம் இன்றைக்குக் கோலோச்சிக் கொண்டு இருக்கின்றது.93 இல் இருந்த சுயநலத்தைவிட இன்றைக்கு ஆயிரம் மடங்கு சுயநலம் மண்டிக் கிடக்கிறது அண்ணா உருவாக்கிய இயக்கத்திலே. எந்த நோக்கத்திற்காக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உருவானதோ, ஐவர் தீக்குளித்து இந்த இயக்கத்தை உருவாக்கினார்களோ, அந்தக் காரணங்கள் 1000 மடங்கு இன்றைக்கும் இருக்கின்றன. அதைத்தான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.
(இரா.ஏழுமலை 13 ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக்கூட்டம் (18.4.2007)
REF: http://mdmk.org.in/article/mar09/eraelumalai