தனி ஒதுக்கீடும், வன்னியர் கூட்டமைப்பும்!

வன்னிய அடிகளாரும், வாழப்பாடியாரும் மறைந்து போன பின்பு 2005-ம் ஆண்டு வன்னிய சத்திரியர் சங்கத்தை உருவாக்கி தொடர்ந்து சமுதாய பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வன்னிய சமுதாயத்துக்கு ஒன்றிய அரசின் வேலை வாய்ப்பில் இரண்டு சதவீதமும், மாநில அரசு கல்வி வேலை வாய்ப்பில் 20 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது வன்னியர் சத்ரியர் சங்கம்.

அரசியல் நோக்கம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான். முதலில் சமுதாய மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவது தான் முக்கியமென்று செயல்பட்ட வன்னிய சத்ரியர் சங்கம். வன்னிய இன மக்களுக்காக தனி நல வாரியம் அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து ஆட்சியாளர்களை வியப்படைய வைத்தது.

வன்னிய சமுதாயத்தினரின் சொத்துக்கள் பல உயில்கள் மூலம் அறக்கட்டளைகளின் பெயரில் மொத்தம் 10 இலட்சம் கோடிக்கு மேல் உள்ளன. அதை மீட்டு வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் அமைத்திட வேண்டுமென்றும் வன்னியர் நிகர் நிலை பல்கலைக் கழகம் வேண்டுமென்றும் தொடர்ந்து போராட்டங்களை வகுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டது வன்னியச் சத்ரியர் சங்கம்.

காலத்தின் சூழல் மாறுபடுவதை போல் வன்னிய சத்ரியர் சங்கம், மற்ற 23 வன்னிய அமைப்புகளுடன் கலந்து பேசி கடந்த 2009-ல் வன்னியர் கூட்டமைப்பாக உருமாற்றம் அடைந்தது. சமுதாயப் பணிகளை செய்வதில் சளைக்காத எனது தொடர் போராட்டம் கடந்த 1970-ம் ஆண்டு தொடங்கியது. அது இப்போது வன்னியர் கூட்டமைப்பாக மாறி இருக்கிறது.

வன்னியர் கூட்டமைப்பின் சார்பாக கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்தியில் இரண்டு சதவீதமும், மாநிலத்தில் இருபது சதவீதமும் வேண்டி போராடி வந்த வேளையில், வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு என்ற எனது நீண்ட கால போராட்டத்தை செயலாக்க எண்ணி அப்போதைய முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

1989-ம் ஆண்டு தனி ஒரு சமுதாயத்திற்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க முடியாதென்று முழங்கிய முதல்வர் கருணாநிதி, 2006-ல் ஆட்சிக்கு வந்த பின்பு தாழ்த்தப்பட்டப்பட்டோர் பிரிவில் உள்ள 18 சதவீத இடத்தில் அருந்ததியர்களுக்கு  (SCA) என தனி ஒதுக்கீடாக உள் ஒதுக்கீடாக மூன்று சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 30 சதவீதத்தில் (NAY) என்று இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதமும் தனி ஒதுக்கீடாக உள் ஒதுக்கீடு செய்தார் முதல்வர் கருணாநிதி. அதே போன்று காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் வன்னிய சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 20 சதவீதத்தில் (MBCV) என்று 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வன்னியர் கூட்டமைப்பு தமிழகத்திலேயே முதன்முதலாக இக்கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கருத்தரங்குகள் என போராட்ட களங்களை அறிவித்து வெற்றிகரமாக நடத்தியும் காட்டியது.

இது குறித்து 20.11.2009 மற்றும் 03.05.2010 ஆகிய தேதிகளில் தமிழக முதல்வருக்கும், தலைமை செயலாளருக்கும் மனு கொடுத்தேன். எந்த விதமான பதிலும் இல்லாததால் இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மனுவை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.

வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நான் தொடுத்திருக்கும் இந்த வழக்கிற்கு பதில் சொல்ல வாய்தா மேல் வாய்தா வாங்கியது முந்தைய திமுக அரசு. இப்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நமது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிச்சயம் நிறைவேற்றுவாரென்று நம் சமுதாயமே எதிர் பார்த்து காத்திருக்கிறது.

வன்னியர் புராணத்தின் படி சம்பு மகரிஷி யாகத்தில் பிறந்த உத்திர வன்னியனே வன்னிய அரசர்களுக்கும், நம் வம்சத்தினருக்கும் முதலாமவர். எனவே பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் பிறக்கும் நாளை ‘வன்னியர் அவதரித்த நாள்’ என அறிவித்து வருடந்தோறும் அதற்கு விழா எடுக்கின்றோம்.

நம் சமுதாயத்திற்காக உயிர் நீத்த வீரத்தியாகிகளின் களப்பலியான செப்டம்பர் 17 முதல் 23 வரையிலான ஒரு வார காலத்தை வன்னியர் புரட்சி நாளாக அறிவித்து வருடந்தோறும் அந்த நாட்கள் ஒன்றில் வீரத் தியாகிகளுக்கு வீர வணக்கமும், நினைவஞ்சலி கூட்டமான விழாவினையும் தவறாமல் வன்னியர் கூட்டமைப்பு நடத்துகிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தபட உள்ளதை அறிந்து அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் உள்ள  வன்னிய குல மக்கள் வாழும் பகுதிகளில் நம் சமுதாய மக்கள் அவரவர் வாழும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பட்டப் பெயர்களை பயன்படுத்தாமல் சாதிவாரியாக கணக்கெடுக்க வரும் கணக்கெடுப்பாளரிடம் நம் சமுதாய மக்கள் அனைவரும் வன்னிய குல சத்திரியர் என்ற ஒரே பெயரை சாதியாக பயன்படுத்தி பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்து பணியாற்றி வருகிறது வன்னியர் கூட்டம்.

அதே போல் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் ஒழுங்கான முறையில் செயல்பட்டு அதிகாரமிக்க அமைப்பாக அதை உருவாக்க வேண்டுமென்றும் வன்னியர் கூட்டமைப்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறது. நிச்சயம் இதிலெல்லாம் வெற்றி காண்பது உறுதி.

வன்னியர் வரலாறு இப்படியாக புராணத்தில் ஆரம்பித்து கூட்டமைப்பில் வந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எந்த நோக்கித்திற்காக நமது சமுதாய முன்னோர்கள் வன்னிய குல சத்திரிய மகா சங்கத்தை ஆரம்பித்தார்களோ அதற்கு பங்கம் வராமல் இன்றளவும் என்னால் இயன்ற வரை 1980 முதல் இச்சமுதாய நலனின் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து தொடர்ந்து செயலாற்றி வருகிறேன்.

சங்கம் வைத்து சாதித்ததை விட அரசியல்வாதிகளின் அடிமையாகி அவர்களின் ஏவலாளியாக மாறி சாதித்து தங்களை வளர்த்துக் கொண்டதற்கு சாதித்தது தான் அதிகம். அதனாலேயே சமுதாய வளர்ச்சி என்பது தனி மனிதர்களின் வளர்ச்சியும், அதன் துதி பாடிகளின் வளர்ச்சியும் மட்டுமே என்றாகி விட்டது.

தினம் ஒரு அறிக்கை, வாரம் ஒரு முறை பேட்டி, மாதம் ஒரு முறை கூட்டணி என்று தில்லாலங்கடி ஆட்டம் போடும் இராமதாசின் வேடத்தை வன்னிய சமுதாயம் புரிந்து கொண்டது. இச்சமுதாயத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டதையே காட்டுகிறது. இனியும் நயவஞ்சகர்களின் வாய் வார்த்தையிலும், வேடத்திலும் மயங்காமல் உறுதியாய் நின்று உண்மையான சமூக எழுச்சியை உருவாக்க வன்னியர் கூட்டமைப்புக்கு வாருங்கள் சொந்தங்களே என உரிமையோடும், அன்போடும் அழைக்கிறேன்.

நம்மவர்களின் அனேகர் பேர் பல அரசியல் கட்சிகளில் சேர்ந்து உழைத்து வருகிறார்கள். ஆனால் கண்ட பலன் என்ன? சமூகத்திற்கு தீமை தான் ஏற்படுகிறது. அரசியல் கட்சிகளில் சேர்ந்துள்ளவர்கள் யாவரும் அவரவர் கடமையை சிறிதேனும் நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்து தினமும் ஒரு மணி நேரம் நம் சமுதாயப் பணிக்கு ஒதுக்குங்கள்.

படை திரட்டிய சமுதாயம் தயாராகி விட்டது. அன்னியனை விரட்டிய சம்பு குலம் அடிமையாகி விட்டது. அது மட்டுமல்ல தான் யார் என்பதையே அடியோடு மறந்து மாற்றார் பின் நிழலாய் அண்டி நிற்கிறது.

இவர்கள் உறக்கத்திலிருந்து எழுப்பி அவர்களுடைய வரலாறுகளை, முன்னோர்களை ஆதாரங்களுடன் எடுத்துரைத்து உணர்ச்சி பெருக்கெடுக்கச் செய்து சமுதாயத்தில் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை அடைய புரட்சிக்கு தயார் செய்ய வேண்டியது வன்னியர் கூட்டமைப்பின் கடமையெனக் கருதி உங்களையெல்லாம் வாஞ்சையோடு அழைக்கிறேன் சொந்தங்களே!

வாலிப சிங்கங்களே சிந்தியுங்கள்! சிந்தனைக்கு சிறிது நேரம் செலவிடுங்கள். அரியாசனத்தில் அமர்ந்து அரசு நடத்திய வன்னியத்தாயின் கழுத்தை அழகுறச் செய்த முத்துமாலை  அறுந்து, உடைந்து, சிதறுண்டு இருப்பினும், தூள் தூளாக்கப்பட்டு இருப்பினும், அந்த முத்துக்களை வன்னிய மக்களை ஒன்று சேர்த்து அது முறுக்கேற்றி ஒற்றுமையாகக் கோர்த்து மறுபடியும் அப்புகழ் வாய்ந்த மாலையை அன்னையின் மேனியை அழகு பெற அலங்கரிக்க வைப்பது நம் போன்றவர்களின் கடமையல்லவா?

வீர வன்னியனே! விழித்தெழு! உன்னுடைய கடமையைச் செய். சிந்தித்து செய். செய்வதென திருந்தச் செய். வரும் விதி வழியில் தங்காது. நமக்கான லட்சியத்தை அடைய நாம் ஒன்று பட வேண்டியது அவசர அவசியம்.

வாருங்கள் வன்னிய சொந்தங்களே! ஒன்றாய் நின்று, அணி அணியாய் சென்று, லட்சியத்தை வென்று சாதிப்போம்! சாதனை படைப்போம்! வாரீர்! வாரீர்!

Menu