வன்னியர்களுக்கு ஆதரவாக அனைத்து சமுதாயத் தலைவர்கள்!

(தமிழ்ச் சமூக தலைவர்கள் பார்வை)

நாம் ஏற்கனவே அறிவித்தபடி அக்டோபர் 1-ந் தேதி தினத்தில் இன உணர்வுடன் வந்த அனைத்து சமுதாய தலைவர்களையும் நமது தலைவர் சி.என்.ஆரும், பொதுச் செயலாளராகிய நானும் உணர்வுப் பூர்வமாய் இன்முகத்துடன் வரவேற்போம். 69 சதவீத இட ஒதுக்கீடு பாதுகாப்பு வேண்டியும், சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தியும் அனைத்து சமுதாய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை மயிலாப்பூர் 01.10.2010 அன்று சரியாக காலை 10 மணிக்கு தொடங்கியது.

இக்கூட்டத்தில் அகில இந்திய தேவர் பேரவை நிறுவனத் தலைவர் டாக்டர் ந. சேதுராமன், இந்திய தேசிய லீக் தமிழ் மாநிலத் தலைவர் திரு. எஸ்.ஜே. இனாயத்துல்லாஹ், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் சார்பில் மனித நேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சமது, இந்திய குடியரசு கட்சி மாநிலத் தலைவர் டாக்டர் செ.கு. தமிழரசன் Ex. MLA., கிறிஸ்துவ முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர் எம் ஜோசப் பெர்னாண்டோ அகில இந்திய யாதவ பேரவைத் தலைவர் திரு. கோபினாத் யாதவ்.

தமிழ் மாநில முஸ்லீம் லீக் மாநிலத் தலைவர் எஸ். ஷேக் தாவூத், கொங்குநாடு முன்னேற்றக் கழகம் மாநில செயற்குழு உறுப்பினர் பரணி கே. பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு முத்தரையர் சங்கம் மாநிலத் துணைத் தலைவர் இ. சுப்பிரமணியம், யாதவர் பேரவை மாநிலத் தலைவர் டாக்டர் இரா. காந்தையா, உழைப்பாளி மக்கள் கட்சி இராம. கோபால தண்டள்வர், தமிழ்நாடு மீனவர் முன்னேற்றச் சங்க மாநிலத் தலைவர் ஜே.கோசுமணி.

இந்து மக்கள் கட்சி மாநிலத் தலைவர் அர்ஜுன் சம்பத், முத்தரையர் சங்க தலைமை நிலைய செயலாளர், வி.வி. சாமி, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தமிழ்நாடு தலைவர் எரிமலை மு. இராமச்சந்திரன், தலித் மக்கள் முன்னணி மாநிலத் தலைவர் குமரி அருண், தேசிய விடுதலை சிங்கங்கள் கட்சி நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் எஸ். கிறிஸ்துதாஸ்.

அம்பேத்கர் மக்கள் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் ம. மத்தியாஸ், அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச் செயலாளர் வி. இரங்கநாதன் உள்ளிட்ட பல்வேறு சமுதாய அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

காலை 10-15க்கு ஆரம்பிக்கப்பட்ட கூட்டத்திற்கு வன்னியர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் சி.என்.ஆர். தலைவராக பொறுப்பேற்க, பொதுச் செயலாளர் வரவேற்புரையாற்ற அதன் பின் ஒவ்வொரு சமுதாயத்தின் தலைவரும் அவரவர் கருத்துக்களை மிகவும் ஆழமாக, ஆதாரத்துடன் எடுத்து வைத்தனர். இறுதியில் அனைத்து சமுதாய தலைவர்களின் ஒப்புதலோடு கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மண்டல் கமிஷன் பரிந்துரை செய்ததையடுத்து 16.11.1992-ம் ஆண்டு 50 சதவீதத்திற்கு மேல் இட ஒதுக்கீடு அளவு செல்லக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனால் இந்தியா முழுவதும் இட ஒதுக்கீடுக்கு ஆபத்து வந்தது. அப்போது தமிழகத்தில் இருந்த 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கும் பேராபத்து வந்தது. அன்றைக்கு தமிழக முதலமைச்சர் இருந்த ‘இந்திய சமூக நீதி பாதுகாவலர்’ புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அனைத்துக் கட்சி சமுதாயத் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஒருமித்த கருத்தை உருவாக்கினார்கள்.

பின்னர் சட்டமன்ற சிறப்பு கூட்டத்தை 31.12.1993ம் ஆண்டு கூட்டி சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து 31சி பிரிவில் சேர்த்து 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு கொண்டு வந்தார்கள். தொடர் நடவடிக்கையாக அதனை மத்திய அரசுக்கு அனுப்பி பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி 31பி & சி பிரிவில் சேர்த்து 76வது அரசியல் சட்டத்தை திருத்தி 9வது அட்டவணையில் சேர்த்து  பாதுகாப்பை பெற்றுக் கொடுத்தார். அப்போதைய ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா அவர்கள் 01.09.1994 அன்று ‘தமிழ்நாடு இட ஒதுக்கீடு 1993 சட்டத்திற்கு’ ஒப்புதல் வழங்கினார். இந்திய வரலாற்றிலேயே இட ஒதுக்கீட்டுக்கு அரசாணைகள் மட்டுமே போடப்பட்டு வந்த நிலையில் இட ஒதுக்கீட்டுக்கு சட்டப் பாதுகாப்பு கொண்டு வந்து தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மக்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தான் என்பதை யாரும் மறந்துவிட முடியாது. யாரும் உரிமை கொண்டாடவும் முடியாது.

இட ஒதுக்கீடு என்ற வரலாற்றில் அவரின் பெயர் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டதை சமூகநீதி ஆர்வலர்கள் இன்றைக்கும் மறந்துவிடவில்லை. இந்த இமாலய சாதனை புரிந்த அவருக்கு இக்கூட்டம் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. அதற்காக அவருக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் அனைத்து சமுதாய மக்களும் பெருந்திரளாக கலந்து கொள்வதாக இக்கூட்டம் முடிவு செய்கிறது.

69 சதவீத இட ஒதுக்கீடு சட்டமாக்கிய பிறகும் சில விஷகிருமிகள் உச்ச நீதிமன்றம் சென்று தடையாணை பெற முயற்சித்தனர். 17 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பிறகு 13.07.2010 அன்று உச்ச நீதிமன்றம் 69 சதவீத இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு தொடருவதற்கு அனுமதி வழங்கியும் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் 50 சதவீதத்திற்கு மேல் அதிகமாக உள்ளனர் என்ற விவரத்தை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் ஆதாரத்துடன் தமிழக அரசு இந்தாண்டு வழங்கி, 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்துக் கொள்ளவும், தேவைக்கேற்ப இட ஒதுக்கீட்டளவை உயர்த்திக் கொள்ள புதிய சட்டத்தை இயற்றிக் கொள்ளலாம் என்றும் வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது.

தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்த, மிகவும் பிறபடுத்தப்பட்ட, பிறபடுத்தப்பட்ட, சிறுபான்மையின் மக்களின் எண்ணிக்கை 90 சதவீதத்திற்கு மேல் உள்ளனர் என்று பல்வேறு கமிஷன்கள் தெரிவித்துள்ளது. 69 சதவீத இட ஒதுக்கீட்டை தக்க வைத்துக் கொள்வதோடு, இட ஒதுக்கீட்டின் அளவையும் உயர்த்திக் கொள்ள உச்சநீதிமன்றமே ஒரு அருமையான வாய்ப்பை வழங்கியுள்ளது. இதை பயன்படுத்தி இம்மக்களின் வாழ்வில் ஒளியேற்றுவதுதான் தமிழக முதல்வரின் தலையாய கடமையாகும். ஆனால், இந்த தீர்ப்பு வந்து ஏறக்குறைய மூன்று மாதங்களுக்கு மேலாகியும், தமிழக முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சி, சமுதாய தலைவர் கூட்டத்தை கூட்டி விவாதித்து சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு உத்தரவிட்டு என அனைத்து நடவடிக்கையிலும் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழக முதல்வர் ஒரு துரும்பை கூட எடுத்து போடாமல் மத்திய அரசின் சாதி வாரி கணக்கெடுப்பிற்கு காத்திருப்பதாக கூறுகிறார்.

உச்சநீதிமன்றம் ஓராண்டுக்குள் முடிவெடுக்க வேண்டுமென்று கூறியுள்ளது. தமிழக முதல்வரின் அசட்டுத்தனம் அவர் 69 சதவீத இட ஒதுக்கீட்டை ஒழிக்க நினைக்கிறாரோ என்று ஆதங்கப்பட வைக்கிறது. அவரின் இச்செயலை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாக தமிழக அரசு சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு உத்தரவிட்டு 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமென இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

மத்திய அரசு பொது நுழைத் தேர்வு கொண்டு வர முயற்சித்தது. இதனால் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின கிராமப்புற மாணவர்கள் குறிப்பாக இந்தி தெரியாத தமிழக மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த கொள்கை முடிவை தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வரும் ஆரம்ப நிலையிலேயே கண்டித்து, தடுத்து நிறுத்தாமல் எப்போதும் போல் தமிழக மக்களின் ‘காதில் பூ சுற்றும்’ நடவடிக்கை போல் வழக்கம் போல பிரதமருக்கு பெயரளவுக்கு கடிதம் எழுதினார். இக்கடிதத்திற்கு உரிய பதில் இல்லாததால் உச்சநீதிமன்றத்தின் வழக்கில் தமிழக அரசு இணைத்துக் கொள்வதாக கூறினார்.

அதே நேரத்தில் எதிர்கட்சி தலைவராக இருந்தும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் அக்கறை கொண்டுள்ள தமிழக முன்னாள் முதலமைச்சர் ‘இந்திய சமூக நீதி பாதுகாவலர்’ புரட்சித் தலைவி ஜெ. ஜெயலலிதா அவர்கள் கொதித்தெழுந்து 19.08.2010 அன்று பொது நுழைவுத் தேர்வை கண்டித்து கடுமையான கண்டனத்தை தெரிவித்து நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை செய்தார்.

உடனே மத்திய அரசு பொது நுழைவுத் தேர்வை நிறுத்தி வைப்பதாக அறிவித்தது. இது புரட்சித் தலைவி அவர்கள் மூலம் சமூக நீதிக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இதற்காக இக்கூட்டம் அவருக்கு மனதார நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு தமிழக அரசு உடனடியாக  உத்தரவிட்டு 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாத்திட வேண்டி முதற்கட்டமாக அனைத்து சமுதாய அமைப்புகள் சார்பில் இம்மாதம் 17ம் தேதி சென்னை மெமோரியல் ஹால் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதெனவும் இக்கூட்டம் முடிவு செய்கிறது.

22 சமுதாய சங்கங்கள் கொண்ட அனைத்து சமுதாய தலைவர்களின் ஒப்புதலோடு வெளியான தீர்மானத்தை நிறைவேற்றிய பின்பு நமது தலைவர் சி.என்.ஆர். பத்திரிகையாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.

மதியம் சுமார் மூன்று மணியளவில் முடிந்த இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சமுதாய தலைவர்களுமே ஆர்ப்பாட்டத்தை பெரிய அளவில் உருவாக்கி அரசை திணறடிக்க வேண்டுமென உறுதி பூண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அகில இந்திய தேவர் பேரவை பொருளாளர் எஸ். இசக்கி முத்து நன்றி கூறினார்.

நமது ‘வன்னியர் குரல்’ பத்திரிகை மூலம் மீண்டும் நமது வன்னியர் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து சமுதாய தலைவர்களுக்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

Menu