சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய மரபினர்கள் வன்னியர்களே என்பது வரலாற்று உண்மை. வன்னியர்கள் தொல்குடி மரபினர் என்பதற்கு, சேரன் பெருஞ்சோற்றுதியலாதன், மகாபாரதப் போரில் பாண்டவர் சேனைக்கு உணவளித்தான் என்பதே சான்று. சங்க காலத்தில் வன்னியர்கள் மழவர்கள் என்று போற்றப்பட்டனர். இவர்களில் அதியமான். வில்வில் ஓரி மற்றும் ஓய்மான் நல்லியக்கோடன் போன்றோர் மிகவும் புகழ் பெற்ற அரசர்கள். சேரர்களின் கிளையக்குடியே மழவர் குடியாகும்.
சோழர்கள் வன்னியர்கள் என்பதற்கு இன்றும் சிதம்பரத்தில் வாழ்ந்து வரும் பிச்சாவரம் பாளையக்காரரே சான்றாகத் திகழ்கிறார். தில்லையம்பலத்தில் வேறு யாருக்கும் முடி சூட்டாத அந்தணர்கள், சோழர் வழி வந்த பிச்சாவரம் பாளையக்காரருக்கே இன்று வரை முடி சூட்டி வருகின்றனர். இது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து வரும் பண்டைய மரபாகும்.
பாண்டிய மன்னர்களின் மரபினர் தற்போது வாழ்ந்து வரும் சிவகிரி, அளகாபுரி மற்றும் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்களே என்று வரலாற்றுப் பேரறிஞர் தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் கூறியுள்ளார். பல்லவர்கள் கல்வெட்டுக்களில் தங்களைப் பள்ளி என்று கூறிக்கொள்வதே அவர்கள் வன்னியர்கள் என்பதற்கும் சான்றாகும். பிற்கால சோழர் வரலாற்றில் வலிமைமிகு குறுநில மன்னர்களான காடவராயன் முதலாம் கோப்பெருஞ்சிங்கனும், அவர் மகன் இரண்டாம் கோப்பெருஞ்சிங்கனும் வன்னியர்களேயாவர். இவர்களது குலத் தோன்றலே கலிங்கத்தை வென்ற கருணாகரத் தொண்டைமான ஆவான்.
சாளுக்கிய வழித்தோன்றலான வன்னியர்கள் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு கூட பாளையக்காரர்களாக சித்தூர் பகுதியை வந்தனர். சாளுவராயர் என்ற பட்டமுடைய இவர்களைப் பற்றி, அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர் (150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்) எழுதியுள்ளார். இம்மரபில் தோன்றிய வன்னிய தேவன் என்பவன் புகழ்மிகு தளபதியாவான்.
சோழப் பேரரசு என்ற பெரும் மாளிகை அமைவதற்கு தூண்களாக விளங்கியவர்கள் வன்னிய சிற்றரசர்களே. அவர்களில் முதன்மையானவர்கள் காடவராயர், கச்சிராயர், பழுவேட்டரையர், சம்புவராயர், திருக்கோயிலூர் மலையமான், சேதிராயர், பங்களநாட்டு கங்கரையர், நீல கங்கரையர், வானாதிராயர், மழவராயர், கடந்தையர் போன்றோராவார்.
திருவண்ணாமலையை அரசாண்ட வல்லாள மகராஜன் வீரவன்னியனே. செங்கற்பட்டுக்கு அருகே உள்ள திருவடி சூலம் (திருவிடைச்சுரம்) என்ற ஊரில் கோட்டை கட்டி ஆட்சி செய்த காந்தவராயர், அவர் தம்பி சேந்தவராயர் மன்னர்கள் வன்னியர்களே. விஜயநகர சாம்பராஜ்யத்தையே கதிகலங்கச் செய்தவர்கள் இம்மாவீரர்கள்.
இலங்கையிலும் வன்னியர்கள் புகழ்க் கொடி நாட்டியவர்கள் என்பதற்கு வன்னியப் பிரதேசமே சான்று. வன்னியின் மறுபெயர் அடங்காப்பற்று. இப்பற்றியில் தோன்றியவனே பண்டார வன்னியன். விஜயநகரப் பேரரசில் வன்னியர்கள் பாளையக்காரர்களாக உருவெடுத்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
- காளாட்கள் தோழ உடையார் என்ற பட்டம் கொண்ட உடையார்பாளையம் பாளையக்காரர்கள்.
- மழவராயர் பட்டம் கொண்ட அரியலூர் பாளையக்காரர்கள்.
- கச்சிராயர் (காஞ்சித் தலைவன்) பட்டம் கொண்ட முகாசா பரூர் பாளையக்காரர்கள்.
- விளந்தை பகுதியை ஆண்ட கச்சிராயர்கள்.
- திருக்கணங்கூர் ஆண்ட கச்சிராயர்கள்.
- ராயப்பா நல்லூர் ஆண்ட காங்குடையார்கள்.
- சோழர் பட்டம் கொண்ட பிச்சாவரம் பாளையக்காரர்கள்.
- ராய ராவுத்மிண்ட நாயினார் பட்டம் கொண்ட வடகால் பாளையக்காரர்கள்.
- கொடியரசு பெற்ற கெங்கையாதிபதி சென்னாமலைக்கண்டியத் தேவர் என்ற பட்டம் பெற்ற காட்டாகரம் பாளையக்காரர்கள்.
- சேதுபதி மற்றும் நரங்கிய (நரசிங்க) தேவர் பட்டம் கொண்ட தத்துவாஞ்சேரி பாளையக்காரர்கள்.
- வாண்டையார் பட்டம் கொண்ட சேத்தூர் (கும்பகோணம் அருகே உள்ளது) பாளையக்காரர்கள்.
- உடையார் பட்டம் குறிச்சி மற்றும் ஒமாம்புலியூர் பாளையக்காரர்கள்.
- பாண்டியர் பட்டம் கொண்ட சிவகிரி பாளையக்காரர்கள்.
- ஆண்டு கொண்டார் பட்டம் கொண்ட அளகாபுரி பாளையக்காரர்கள்.
- இரட்டைக்குடையார் பட்டம் கொண்ட அளகாபுரி பாளையக்காரர்கள்.
- நாயக்கர் பட்டம் கொண்ட விடால் (மதுராந்தகம் அருகே உள்ளது) பாளையக்காரர்கள்.
என இப்பட்டியல் நீள்கிறது.
இன்னொரு குறிப்பிடத்தக்க வன்னிய அரசர் தாமல் சென்னப்ப நாயக்கர், இவரே சென்னையின் பெயருக்கு காரணமாக இருப்பவர். இவரது புதல்வர்களான வெங்கடப்ப நாயக்கர் மற்றும் அய்யப்ப நாயக்கர் ஆகியோரே. சென்னையை ஃபிரான்சிஸ் டே என்பவருக்கு கொடுத்தார்கள்.
அரசர்களாக மட்டுமின்றி ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலைப் போரிலும் வன்னியர்கள் பெரும் பங்கு வகித்தனர். தென்னாப்பிரிக்காவில் காந்தியை காப்பதற்காக குண்டடிப்பட்டு மாண்ட நாகப்ப படையாட்சி, வரிகொடா இயக்கத்தில் பங்கேற்று பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்களை இழந்த சர்தார் ஆதி கேசவ நாயக்கர். சிறையிலேயே குழந்தை பெற்ற கடலூர் அஞ்சலையம்மாள் என்று இப்பட்டியலும் நீண்டு கொண்டே போகிறது. காங்கிரஸ் கட்சிக்கு முன்பாக சங்கம் கண்டவர்கள் வன்னியர். 1883-ல் முதல் சங்கம் அமைத்தவர் பரங்கிப்பேட்டை குருசாமி ராயர் என்பவர்.
பின்னர் 1888ல் அண்ணாசாமி நாயகரும், கோபால் நாயகரும் இணைந்து வன்னிய குல க்ஷத்திரிய மஹா சங்கம் என்ற பெரிய அமைப்பைத் தோற்றுவித்தனர். மேலும் வன்னிய ரிஷி சுப்பிரமணிய நாயகர் என்பவர் வன்னிய குல மித்திரன் என்ற இதழையும் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா, க்ஷத்திரியன் என்ற இதழையும் வன்னிய சமூகத்திற்காக நடத்தினார்.
சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் கட்சியை முதலில் தோற்கடித்தவர்கள் என்ற பெருமைக்குரியவர்களும் வன்னியர்களே. 1952-ம் ஆண்டு நடைபெற்ற முதல் தேர்தலில் கடலூர் ராமசாமி படையாட்சியும், மாணிக்க வேல் நாயக்கரும் இணைந்து நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தில் கணிசமான இடங்களைக் கைப்பற்றினர். இன்றும் வன்னியர்கள் ஆதரவைப் பெறும் கட்சியே ஆட்சியைப் பிடிக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்பதற்கு இதை விட வேறு வரலாற்று ஆதாரங்கள் என்ன வேண்டும்.