@Copyright – C.N.Ramamurthy M.Com, B.L. Founder President, Vanniyar Kootamaippu.

e-Book Publication – E-edition Version – 1 – 2021

Publisher:

Kshatriyas Documentary

For Contacts:

Kshatriyas Documentary

# 7, First Main Road,

Kamdar Nagar, Nungambakkam,

Chennai – 600 034

Email – info@vanniyarkootamaippu.com

+91 9941311788

URL: www.vanniyarkootamaippu.com

 

25 வீரத் தியாகிகள் குடும்பத்தை

தத்தெடுத்தார் சி. என். ஆர்.

 

 

அன்பான சொந்தங்களே! செப்டம்பர் 23-ந் தேதி ஞாயிறு அன்று நமது வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் ஆண்டு தோறும் நடத்தப்படும் வன்னியர் புரட்சி நாள் விழா இம்முறை தர்மபுரியில் நடந்தது. காலை 10.30 மணியளவில் 25 வீரத் தியாகிகளுக்கு 25வது ஆண்டு மலரஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி தொடங்கியது.

 

சிறப்பு அழைப்பாளர்களாக வந்து சிறப்பித்த தமிழ்நாடு வன்னியர் கிறிஸ்தவர் சங்கத்தின் மாநில தலைவர் அ. ஜோசப்ராஜ் அவர்கள், இட ஒதுக்கீடு போராட்ட தியாகிகளான விழுப்புரம் எஸ்.எம். பாலசண்முகம், உத்திரமேரூர் ஆர். விஸ்வநாதன் ஆகியோருடன் யாரும் எதிர்பாராத வகையில், நமது கோரிக்கைகளை வென்றெடுக்க காரணமான சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் கே. அன்பரசன் அவர்களும் விழாவில் கலந்து கொண்டு நம்மை கௌரவித்தார்.

 

விழா நடக்கும் இடத்துக்கு முன்பு வைக்கப்பட்டிருந்த நம் குல தியாகிகளின் படத்திற்கு நிறுவனத் தலைவருடன் சிறப்பு அழைப்பாளர்களும், மாநில நிர்வாகிகளுடன் நமது கூட்டமைப்பினரும் சேர்ந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள். நம்குல தியாகிகளின் காலடியில் முத்தான மூன்று கோரிக்கைகளில் நீதிமன்றத்தில் தான் பெற்ற வெற்றியை சமர்ப்பித்தார் நம் நிறுவனத் தலைவர் சி.என்.ஆர்.

 

 

சரியாக 11.00 மணிக்கு கூட்டம் தொடங்கியது. நம் குல சொந்தங்கள் ரோட்டரி ஹாலில் நிரம்பி வழிந்தனர். மாநில தலைவராகிய நான் நிறுவனத் தலைவரை விழாவிற்கு தலைமை ஏற்று நடத்திக் கொடுக்குமாறு வேண்ட, அதனை பொருளாளர் அருண்கென்னடி வழி மொழிந்தார்.

 

விழா தொடக்கமாக நமது கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திருமதி நவமணி சீனிவாசன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். அவரை தொடர்ந்து கொள்கை பரப்புச் செயலாளர் பச்சியண்ணன் அவர்களும், பரந்தாமன் அவர்களும் உரையாற்றினார்கள். அடுத்ததாக நமது மதிப்பிற்குரிய வழக்கறிஞர் அன்பரசன் அவர்கள் உரையாற்றினார்கள். அவர் பேசியதிலிருந்து தொகுத்தது.

 

தகடூரை தலைநகராகக் கொண்ட அதியமான் அரசாட்சி செய்த இந்த மண்ணில் பேசுவற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக பெருமை கொள்கிறேன். கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமானைப் போல் நமக்கு வள்ளலாகத் திகழ்பவர் நமது சி.என்.ஆர். அவர்கள்.

 

உங்கள் தலைவர் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் இருந்தே அவருடன் பழுகும் வாய்ப்பை பெற்றவன் நான். 80களில் சட்டக் கல்லூரியில் பயின்ற காலத்தில் நாங்கள் ஒரே அறையில் தங்கி படித்தவர்கள். அப்போதே சமுதாயப் பணிக்காக தினமும் அலைந்து திரிவார். எங்களது நண்பர்கள் கூட இப்படி சாதிக்காக உழைக்கிறாயே, இதெல்லாம் படிக்கும் போது தேவையா? என்று கேட்ட போது நான் சட்டம் படிக்க வந்ததே எனது சமுதாயத்திற்காக உழைப்பதற்காகத்தான் என்றார்.

 

 

எனக்கு தெரிந்து 1987-ல் நடந்த ஒரு வார சாலை மறியல் போராட்ட களத்தை தயார் செய்ததே சி.என்.ஆர். அவர்கள் தான் என்பது எனது கருத்து. அன்று முதல் இன்று வரை உங்களுக்காக உழைப்பதை ஒரு தவமாக எண்ணி செயல்பட்டு வருவதை நான் ஆச்சரியத்துடன் பார்த்து வருகிறேன்.

 

எனக்கு இந்த சபையில் பெரிய கௌரவத்தை அளித்தார்கள். ஆனால், அதை விட உங்களின் தன் உள் ஒதுக்கீடு கோரிக்கைக்காக வழக்காட வேண்டி நான் தயார் செய்த மனுவில் படித்துப் பார்க்காமலேயே கையெழுத்துப் போட்டாரே அதுதான் எனக்கு பெரிய கௌரவம். மனுவை தயார் செய்வதற்கான அரசு ஆணைகள், இட ஒதுக்கீடு கேட்பதற்கு தேவையான காரணங்கள் என அனைத்தையும் அவர் தந்தாலும் என்னை நம்பி பெரிய சமுதாயத்திற்காக வாதாடி வெற்றி பெற வேண்டிய மிகப்பெரிய பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தாரே… அதுதான் கௌரவம்.

 

அதியமான் என்றாலே ஔவையும், நெல்லிக்கனியும் நம்முன் வந்து விடுவார்கள். அதியமான் தனக்கு கிடைத்த அதிசய நெல்லிக்கனியை தமிழ் வாழ் வேண்டுமென்பதற்காக ஔவைக்கு கொடுத்தார். அதே போல் எனக்கு அந்த அதிசய நெல்லிக்கனி கிடைத்தால் அதை சி.என்.ஆர். அவர்களுக்கு கொடுத்து உங்களுக்கும் தொடர்ந்து சமுதாயப் பணியாற்றும் வாய்ப்பை கொடுப்பேன். நீங்கள் அனைவரும் சி.என்.ஆர். அவர்களின் கரத்தை வலுப்படுத்த வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன். என்று பேசினார் வழக்கறிஞர் அன்பரசன் அவர்கள்.

 

 

அவர்களுக்கு பின்பு இட ஒதுக்கீடு தியாகி உத்திரமேரூர் விஸ்வநாதன் அவர்கள் உரையாற்றி வந்தார்கள். அவர் பேசியதிலிருந்து…

 

இந்த நிகழ்ச்சியைப் பார்த்து திக்குமுக்காடிப் போனேன். நமது சமுதாயத்திற்காக வழக்கு தொடுத்து, அதில் வெற்றியும் பெற்றுத் தந்த வழக்கறிஞர் தகடூர், அதியமான், நெல்லிக்கனி என்று சொல்லி அதை தலைவர் சி.என்.ஆருக்கு கொடுப்பேன் என்று அவர் பேசியதில் உள்ளபடியே நமக்கு பெருமையாக இருக்கிறது. அதுவும் வழக்காடி வெற்றி பெற்றதில் என் பங்கு எதுவும் இல்லை. எனது கடமையை செய்தேன் என்று பெருந்தன்மையாக சொன்னார்.

 

 

அவரை நாம் அனைவரும் பாராட்டியே தீர வேண்டும். செய்ததெல்லாம் தலைவர் சி.என்.ஆர். தான் என்றார். அதைக் கேட்கின்ற போது உள்ளம் பூரிக்கிறது. இந்த சமுதாயம் போராட்ட களத்தில் இறங்கியது எதற்காக? கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தானே.

 

25 உயிர்களை களப்பலியாக்கினோம். மார்பை திறந்து காட்டி சுடு என்றான் வன்னிய இளை’ஞன். சுட்டான் போலீஸ். அப்படி இறந்த 25 வீரத் தியாகிகளின் தீரத்தால் 20 சதவீத இட ஒதுக்கீடு பெற்றோம். அதனால் பலன் ஏதும் விளைந்ததா? இல்லையே. இதனால் பலன் அடைந்தது மருத்துவர் இராமதாஸ் மட்டுமே. அதை வைத்து கோடி கோடியாய் கொள்ளை அடித்த இராமதாஸ், வீரத் தியாகிகள் 25 பேரின் குடும்பத்திற்கு இதுவரை எதுவுமே செய்யவில்லையே. இவரை எப்படி தலைவன் என்று சொல்ல முடியும். சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை எல்லாம் அடித்த இராமதாஸ் திருப்பி அடி வாங்கும் நேரம் வந்து விட்டது. இனியும் இராமதாசை நம்பி யாரும் ஏமாந்து போக மாட்டோம். இட ஒதுக்கீட்டில் நமக்கான பலன்களைக் கூட கேட்கவில்லை இராமதாஸ்.

 

 

அதனால் தான் நமது சி.என்.ஆர். அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உள் ஒதுக்கீடு வேண்டி வழக்கு தொடுத்தார்கள். அதில் இன்று வெற்றியும் பெற்று இருக்கிறார்கள். அந்த வெற்றியை பெற்ற சி.என்.ஆர். அவர்களை சாதாரணமாக நினைத்துவிட வேண்டாம்.

 

வன்னியர் சங்கம் சார்பாக எம்.ஜி.ஆருக்கு கறுப்புக் கொடி காட்டுவதென முடிவு செய்யப்பட்டது. அப்போது மதுராந்தகத்திற்கு வருகை தந்த எம்.ஜி.ஆருக்கு கறுப்புக் கொடி காட்ட தலைவராக நியமிக்கப்பட்டவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டார். கல்லூரியிலேயே படித்துக் கொண்டிருந்த சி.என்.ஆர். அவர்கள் துணிச்சலுடன் எங்களோடு போராட்ட களத்தில் இறங்கி கறுப்புக் கொடி காட்டினார்.

 

போராட்டகளத்தில் நாங்கள் கைது செய்யப்பட்ட போது கூட அவரை போகச் சொல்லியும் கேட்காமல் எங்களுடன் கைதானார். அப்படிப்பட்ட வீரம் மிகுந்த நெஞ்சத்திற்கு சொந்தக்காரர். அதுமட்டுமல்ல, பவானியிலே ஒரு கூட்டம். அக்கூட்டத்தில் இனி வன்னியன் ஒருவன் சுடப்பட்டாலும் பத்து போலீஸ் சுடப்பட வேண்டுமென்று பேசினேன்.

 

இப்பேச்சு காவல்துறையின் மூலம் வெளியே வந்துவிட, அது சட்டமன்றத்தில் பேச வேண்டிதாகி விட்டது. ஒரு அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்து கொண்டு இப்படி பேசலாமா? அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுமென்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார். உடனே நம் சி.என்.ஆர். அவர்கள் நான் பேசாத பேச்சுக்கு கொடுத்த கண்டனத்திற்கு தனது பேச்சை வாபஸ் பெறாவிட்டால், அவர் மீது வழக்கு தொடருவேன் என்று சொன்னார் சி.என்.ஆர். உடனே சி.பி.சி.ஐ.டி. போலீஸ் மூலம் விசாரிக்கப்பட்டதில் இப்படி பேசியது பாட்டாளி கட்சியின் பொதுச் செயலாளர் விஸ்வநாதன் என்றும் அருகிலிருந்தவர் வன்னியர் சங்க பொதுச் செயலாளர் சி.என். இராமமூர்த்தி அவர்களும் தான் என்று நிரூபிக்கப்பட்டது. உடனே அதற்காக வருத்தம் தெரிவித்து, மன்னிப்பு கேட்டார் முதல்வர் கருணாநிதி.

 

யாருக்கு வரும் இந்த மன தைரியம். அத்தகைய வைராக்கியம் வாய்ந்த தலைவர் சி.என்.ஆர். பின்னால் ஒன்றாய் இணைந்து அணி வகுப்போம். வெற்றியை காண்போம் என்றார் விஸ்வநாதன்.

 

இந்த வேளையில் பேச வந்தார் விழுப்புரம் எஸ்.எம். பாலசண்முகம். தமிழகத்திலே எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரத்தின் சக்தியினால் தான் இன்றைக்கும் ஆட்சி அதிகாரத்தில் அவருடைய இயக்கம் இருக்கிறது. எம்.ஜி.ஆர். என்ற மூன்றெழுத்து மந்திரம் போல் நமது வன்னிய சமுதாயத்துக்கு கிடைத்த மூன்றெழுத்து மந்திரம் சி.என்.ஆர். தமிழகத்தில் உள்ள மிகப்பெரும்பான்மையான சமுதாயங்களில் முதல் சமூகமான வன்னிய சமுதாயம் ஆண்ட பரம்பரையை சேர்ந்தது. இடையில் சதி வலையின் காரணமாக வீழ்ந்து விட்டோம். தமிழகத்தில் வன்னியர்கள் ஆளப்பிறந்தவர்கள் என்பதை மீண்டும் நிரூபிக்க நமது சமுதாயத்தை தட்டியெழுப்பி சாதிக்க வந்தவர் நமது தலைவர் சி.என்.ஆர். அவர்கள்.

 

 

சி.என்.ஆர். அழைத்தார் என்பதற்காக அரசியலை ஒதுக்கி வைத்து சமுதாயப் பணிக்காக கடமையாற்ற வந்துள்ளேன். கடந்த கால போராட்ட களங்களில் விழுப்புரம் மாவட்ட செயலாளராக வன்னியர் சங்கத்தில் பணியாற்றியதற்காக இராமதாஸ் என்னை ரௌடிகளை வைத்து அடித்து உதைத்து என் முகத்தை சிதைத்தார். அவர் பின்னால் சென்று ஏமாந்த காலம் முடிந்து விட்டது. இரண்டு ரூபாய் வாங்கி வைத்தியம் பார்த்துக் கொண்டிருந்த இராமதாசையும் தெரியும். கணக்கில்லா கோடிகளில் புரளும் இராமதாசையும் தெரியும். இந்த வேடதாரியை தூக்கியெறியும் நேரம், காலம் நெருங்கி விட்டது.

 

சமுதாயத்திற்காக உழைத்த பெரிய தலைவர்களையே அசிங்கப்படுத்தியவர் இராமதாஸ். இந்திய சுதந்திரத்திற்கு பின் நடந்த முதல் பொதுத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு எம்.பி.க்களையும், எம்.எல்.ஏ.க்களையும் வெற்றி பெற வைத்தவர்கள் பெருந்தலைவர் படையாட்சியார் அவர்களும், மாணிக்கவேல் நாயகர் அவர்களும் ஆவார்கள். அகில இந்தியாவிலும் காங்கிரஸ் வெற்றி பெற்ற போது சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் தோற்பதற்கு காராணமானவர் இராமசாமி படையாட்சியார்.

 

படையாட்சியாரே சண்டே லீடர் என்று பேசிய அசிங்கத்திற்குரிய உருவம் படைத்தவர் இராமதாஸ். உண்மையில் இராமதாஸ் தான் சண்டே லீடர். வாரத்தில் ஆறு நாளும் இரண்டு ரூபாய் வைத்தியம் பார்த்துவிட்டு ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் வன்னியர் சங்க செயல்பட்டுக்கு வந்து கார், சாப்பாடு என் எல்லா விஷயத்தையும் அனுபவித்தவர் இந்த சண்டே லீடர் இராமதாஸ். இப்படிப்பட்ட ஏமாற்றுக்காரர்களை ஓட விரட்டி நம் சமுதாய புரட்சித் தலைவர் இளஞ்சிங்கம் சி.என்.ஆர் அவர்களின் தலைமையில் அணி வகுப்போம். சமுதாயம் காப்போம். வெற்றி பெறுவோம் என்று பேசினார் எஸ்.எம். பாலசண்முகம் அவர்கள்.

 

நேரம் அதிகமாகிக் கொண்டே போக ரத்தின சுருக்கமாக பேச வந்தார் தமிழ்நாடு வன்னியர் கிறிஸ்தவர் சங்க தலைவர் திரு. அ. ஜோசப் ராஜ் அவர்கள்.

 

தமிழக முதல்வர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஆதரவை பெற்ற நமது வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி.என்,ஆர் கரத்தை வலுப்படுத்த தமிழ்நாடு வன்னியர் கிறிஸ்தவர் சங்கம் கை கோர்த்து செயல்பட வந்து இருக்கிறது. கூட்டமைப்பின் செயல்பாடுகளுக்கும், சி.என்.ஆர். அவர்களின் சமுதாய நடவடிக்கைகளுக்கும் நாங்கள் என்றும் உறுதுணையாக இருப்போம்.

 

நாங்கள் மதத்தால் கிறிஸ்தவர்களே தவிர பிறப்பால் வன்னியர்களே. நீங்கள் பின்பற்றும் சடங்குமுறைகளையே நாங்களும் பின்பற்றுகிறோம். நாம் அனைவரும் ஒரே இரத்தம் தான். அதுபோல் வன்னியர்களுக்கான அமைப்பு என்றால் அது வன்னியர் கூட்டமைப்புதான்.

 

 

நகரத்தார் பகுதிகளிலே ஒரு வழக்கம் உண்டு. அதாவது புது வீடு கட்டி குடிபுகும் நாளில் காலையில் அந்த வீட்டுக்கு சீர்வரிசையோடு செல்வதற்கு முன்பே அந்த வீட்டில் ஒரு பெண்ணை இருக்கச் சொல்லி இருப்பார்கள். இவர்கள் வீட்டிற்குள் யார் இருக்கிறார்கள் என்று கேட்டவுடன் உள்ளே இருக்கும் பெண், ‘நான்தான் மகாலட்சுமி இருக்கிறேன்’ என்பார். அதாவது வீட்டில் மகாலட்சுமி உலாவுவதாக ஐதீகம்.

 

ஒரு செட்டியார் தான் கட்டிய புது வீட்டிற்கு ஸ்ரீதேவி என்ற பெயரில் உள்ள பெண்ணையே இருக்க வைத்தால் என்ன? என்று யோசித்தார். அதன்படியே ஸ்ரீதேவி என்ற சிறுமியை அழைத்து பட்டாடை, நகை எல்லாம் கொடுத்து வீட்டில் இருக்க வைக்க முடிவு செய்தார். இதை அறிந்த ஸ்ரீதேவியின் அக்கா ராணிக்கு நம்மைவிட சிறயவளுக்கு இதெல்லாம் கிடைக்கிறதே என்று கோபம் வந்து விட்டது. அதனால் அவளும் அன்றைய இரவு ஸ்ரீதேவியுடன் அந்த புதுவீட்டில் இருந்து கொண்டாள். சிறுமிகள் இருவருக்கும் நடந்த சண்டையில் செல்லமாய் கோபித்துக் கொண்ட வேளையில் செட்டியார் சீர்வரிசையோடு வந்து சேர்ந்தார்.

 

வீட்டில் யார் இருக்கிறார்கள்? என்று கேள்வி எழுப்ப உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனால் அதட்டலான குரலில் உள்ளே யாரம்மா இருப்பது? பதில் சொல்லும்மா என்றவுடன் நான்தான் ஸ்ரீதேவியின் அக்கா இருக்கிறேன் என்று சொல்ல செட்டியார் குடும்பமே அதிர்ந்து விட்டது. காரணம் ஸ்ரீதேவியின் அக்கா மூதேவி அல்லவா? அதனால்தான்.

 

 

அதுபோல் நம் சமுதாயத்துக்கான ஸ்ரீதேவி, நமக்காக உழைத்து வரும் சி.என்.ஆர். அவர்கள் தான். (அப்படியானால் மூதேவி யார்? என்று கூட்டத்தினரை பார்த்து கேள்வி கேட்க இராமதாஸ் தான் அந்த மூதேவி என்று குரல் கொடுத்தனர்) அப்படியா? நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். அதனால் நம் தலைவர் சி.என்.ஆரின் தலைமையேற்று அவரது கரத்தை வலுப்படுத்த தமிழ்நாடு வன்னியர் கிறிஸ்தவர் சங்கம் எப்போதும் உறுதுணையாக இருக்குமென்று பேசினார்.

 

நிறைவாக நமது குல தெய்வமாக போற்றப்பட வேண்டிய அண்ணார் நிறுவனத் தலைவர் அவர்கள் உரையாற்ற வந்தார். தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வந்திருந்த அனைவரும் சால்வை அணிவித்தும், மலர் மாலை சூட்டியும் மரியாதை செய்து முடித்து, தலைவர் பேச ஆரம்பித்த போது இரண்டு மணியாகி விட்டது.

 

 

வன்னியர் கூட்டமைப்பு தான் முன்வைத்த மூன்று கோரிக்கைகளிலும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து வாதாடி இன்று வெற்றி பெற்று அதை நம் வீரத் தியாகிகளின் காலடியில் சமர்ப்பணம் செய்து இருக்கிறோம். இனி இந்த சமுதாயம் எவரிடமும் மண்டியிடத் தேவையில்லை. யாரிடமும், கையேந்தத் தேவையில்லை. இன்றில்லா விட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் நாளை மறுநாள். இந்த மூன்று கோரிக்கைகளையும் எந்த அரசாங்கமாக இருந்தாலும் நடைமுறைப்படுத்தியே தீரவேண்டும்.

 

அதற்காகவே நாம் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களை அவர் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதிலிருந்து ஆதரித்து நமது கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டி வருகிறோம். நிச்சயம் அவர் நமக்கான கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தி நம் சமுதாய மக்களின் வாழ்க்கையில் ஒளி விளக்கேற்றி வைப்பார்.

 

எழுதி வைத்துக் கொள்ளுங்கள்! வரும் 2013 ஆம் ஆண்டு வன்னியர் ஆண்டாக உறுதியாக அமையும். வன்னியர் கூட்டமைப்பின் ஆண்டாக அமையும். நமக்கான கோரிக்கைகளை வென்றெடுத்து விரைவில் தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தியாக வன்னியர் கூட்டமைப்பு உருவாகும். இந்த அமைப்பு விலை போகாத அமைப்பு. யாராலும் அசைத்து விட முடியாத அமைப்பு. என்னை எந்த சக்தியாலும் அடி பணிய வைக்க முடியாது. அதனால் வன்னியகுல சொந்தங்களே! உங்கள் நல் ஆதரவை எனக்கு தாருங்கள்.

 

தமிழகத்திலே உள்ள சமுதாய அமைப்புகளிலே அரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் ஒரே அமைப்பு நமது வன்னியர் கூட்டமைப்புதான். இராமதாஸ் நமது சமுதாய மக்களின் இரத்தத்தை உறிஞ்சினார். உயிர்களை பலி வாங்கினார். சமுதாய தலைவர்களை கொச்சைப்படுத்தினார். தலைவர்களை அடித்து உதைத்தார். கோடிகளை பதுக்கி வைத்திருக்கும் இராமதாசுக்கு முடிவு காலம் நெருங்கி விட்டது.

 

வன்னியர்கள் விழித்து கொண்டதால் தான் நடந்து முடிந்த மூன்று தேர்தல்களிலும் பா.ம.க.வை மண்ணை கவ்வ செய்தனர். அதனால் தான் இப்போது இட ஒதுக்கீடு இருபது சதவீதம் கேட்கிறார். உனக்கு இருபது என்றால் மற்ற 114 சாதியினருக்கு என்ன செய்வது? அவர்களை நமது எதிரிகளாக்கி சண்டை போட வைப்பதுதான் அவரது திட்டம்.

 

நமது சமுதாயத்தினர் மீது மற்ற சமுதாயத்தினர் வைத்திருக்கும் மரியாதையை கெடுத்தது யார்? மற்றவர்களை அடித்து, உதைத்து, கொலை கூட செய்யப்படலாம்.

 

ஆனால் இராமதாசுக்கோ, அவரது கொள்ளை குடும்பத்துக்கோ எதுவும் வரக்கூடாது. இப்படிப்பட்ட தலைவரை இனியும் அனுமதிக்கலாமா? பா.ம.க.தான் தேர்தலில் தோற்றதே தவிர வன்னியர்கள் தோற்கவில்லை. இராமதாசை தோற்கடித்ததன் மூலம் வன்னியர் சமுதாயம் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்கிறது.

 

இதோ, 25 வீரத் தியாகிகளில் ஒருவரான சித்தணி சேகரின் சகோதரர் லோகநாதன் இங்கே வந்துள்ளார். (மேடைக்கு வரச்சொல்லி தன் பக்கத்தில் நிற்க வைக்கிறார் தலைவர்) இவருக்கு எந்த உதவியும் செய்யாதவர் இராமதாஸ்.

ஆனால், அவரது கட்சியினர் இவரது இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அபகரிக்கத் துடிக்கின்றனர். நம் சமுதாயத்துக்காக உயிர் நீத்த அந்த 25  வீரத்தியாகிகளின் குடும்பத்தை வன்னியர் கூட்டமைப்பு சார்பில் நான் தத்தெடுத்துக் கொள்கிறேன். அதில் முதலாவதாக சித்தணி சேகரின் தாய் குடியிருக்க ஒரு வீடு கட்டித் தரப்படுமென்று உங்கள் முன் சபதம் செய்கிறேன்.

 

 

கொள்ளைக் கூட்ட கும்பலில் ஒருவரான அன்புமணி இராமதாஸ் வண்டலூர் மிருகக் காட்சி சாலையில் இருக்கும் சிறுத்தை புலி ஒன்றை தத்தெடுத்திருக்கிறார். அதற்கு ஆகும் செலவை அவரே ஏற்றிருக்கிறார்.

 

ஆனால் அன்புமணி எம்.பி. ஆவதற்கு உயிரைக் கொடுத்த 25 வன்னிய தியாகிகளுக்கு மட்டும் எதுவும் செய்வதற்கு மனம் வரவில்லை.

 

நான் சொல்வதை செய்து காட்டுபவன். ஒவ்வொரு தியாகிகளுக்கும் முறையான வகையில் அவர்களின் குடும்பத்திற்கான தேவைகளை நிறைவேற்றித் தருவேன். அதற்கு உங்களின் மேலான ஆதரவை தாருங்கள்.

 

சொந்தங்களே! கோயில் இல்லாத ஊரில் குடியிருக்கலாம். ஆனால், வன்னியர் கூட்டமைப்பின் கொடி பறக்காத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற நிலையை ஏற்படுத்த உங்கள் ஆதரவை தாருங்கள் என்று முழங்கினார் நமது தலைவர் சி.என்.ஆர். கூட்டம் ஆக்ரோஷமாய் ஆரவாரம் செய்து கையொலி எழுப்பியது.

 

முடிவில் தலைமை நிலைய செயலாளர் சண்முகம் நன்றியுரை நிகழ்த்த, கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரும் மதிய உணவு அருந்த, தலைவர் சி.என்.ஆர். விடை பெற்றுச் செல்ல விழா இனிதே நிறைவடைந்தது.

 

  • ••• •

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu