மனிதர் குல மாணிக்கம்

கல்விக் கொடை வள்ளல்

பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர்

 

சி.என்.ஆர்.,

நிறுவனத் தலைவர்

 

பெருமைமிகு இனத்தின் பேரன்பான சொந்தங்களே!

 

நாடெங்கும் நான்கு குலங்களாக பிரிக்கப்பட்ட மக்களில்  நான்காம் வருணத்தவரான சூத்திரர் பட்டியலில் நம்மையெல்லாம் இடம் பெற வைத்தனர் மேட்டுக்குடியினர். 19-ம் நூற்றாண்டின் தொடக்கம் அதற்கு மாற்றான உருவம் கொண்டு கல்வியை தம் கையிலெடுக்க முயன்றதின் உச்சமாக அமைந்தது.

 

அதிலும் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிறந்த (1824) நமது இனத்தைச் சார்ந்த பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் வரலாறு எழுத்தில் எழுத முடியாத வைக்கப்பட வேண்டிய ஆவணம் மேட்டுக்குடியினரில் ஒரு பிரிவினர் ஆங்கிலேயரின் கீழ் பணிபுரிந்து, ஏவல் வேலைகளை செய்து உயர்ந்த மனிதர்களாக உலா வந்து கொண்டிருந்தனர். அவர்களில் பலர் அன்னையரின் துணையோடு தமிழகத்தில் கல்விக் கலைகளை உருவாக்கி செயல்பட்டு வந்தனர்.

 

இப்படியொரு காலகட்டத்தில் பிறந்தார் நமது வள்ளல் பி.டிலீ. என்னடா இது! கட்டுரையை ஆரம்பிக்கும் முன்னரே பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கரைப் பற்றி எழுதுகிறேன் என்று உங்களுக்கு எண்ணத் தோன்றுகிறதோ? ஆம்! சொந்தங்களே! அந்தளவுக்கு என் தேகம் முழுவதும் நிறைந்து நிற்பவர் நமது செங்கல்வராய நாயக்கர் அவர்கள். அவரது பெயரில் இருக்கிற அறக்கட்டளையின் கீழ் நமது சமுதாய மக்களுக்கும், பிற இனத்தினருக்கும் செய்யப்படுகிற கல்விப் பணிகள், மருத்துவப் பணிகள் எண்ணற்றவை.

 

இது போன்ற அறக்கட்டளைகள் இன்றைக்கு பலராலும் செய்யப்படுவதால் அதற்கு பெரிய மரியாதை இருக்காது. ஆனால் செங்கல்வராய நாயக்கரின் எண்ணத்தில் உதித்தது. 1870-ம் ஆண்டு என்பது தான் நமது தேகத்தில் அவர் நிறைந்து நிற்பதற்கு காரணம். சுமார் 140 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மண்ணில் வாழ்ந்த ஒரு மனிதன் தனது 40 வயதில் தனக்கு இறப்பு நேர்ந்தால் என்று நினைத்து ஒரு நாள்… ஒரேயொரு நாள்… காலை படுக்கையிலிருங்நது எழுந்தார் நாயக்கர்.

 

அப்போது முடிவெடுத்தார், உயில் எழுவதென்று உடன் அழைப்பு விடுத்தார். கூடிய பெருமக்கள் முன்னிலையில் உயிலின் சாராம்சத்தை சொன்னார். உயில் தயாரானது.

 

சொந்தங்களே! வன்னிய குல மக்களே! யாரிடத்தும் கொள்ளையடிக்கவில்லை, எவர் மீதும் தவறு சொல்லி சம்பாதிக்கவில்லை. நேர்மையாய் தொழில் செய்து குடும்பமே ஒன்று சேர்த்து உழைத்து சம்பாதித்த ஒப்புயர்வற்ற சொத்துக்களை கண் இமைக்கும் நேரத்தில் உயிலாக  எழுதி அதை அப்போதே செயல்பாட்டுக்கும் கொண்டு வந்தார். தனது சொத்துக்களை அறக்கட்டளைக்கு உரிதாக்கிய செங்கல்வராய நாயக்கர், அன்று முதல் தனது பணிக்கு ஊதியமாக ஒரு தொகையை எடுத்து வாழ்நாளை வாழ்ந்து காட்டினார் என்றால் அந்த மனிதகுல மாணிக்கத்திற்கு இந்த நாடு செய்த நல்லதுதான் என்ன? என்று என் மனம் வெதும்புகிறது.

 

 

கடந்த இதழில் நாம் படித்து அறிந்த சேலம் மாவட்டத்தைச் சார்ந்த கல்வி வள்ளல் சங்கர கந்தசாமிக் கண்டரின் கல்விச் சேவைக்கு உந்து சக்தியாகவும், உதாரணமாகவும் திகழ்ந்தவர் நமது மதிப்புக்குரிய செங்கல்வராய நாயக்கர் அவர்கள். கண்டர் தனது இறப்புக்கு பின் பொது நல காரியங்களுக்கும், கல்விக்கும் சொத்துக்களை தந்தாலும், வாரிசாக தனது தாயாரையும், மனைவியையும் வைத்துவிட்டுச் சென்றார்.

 

கண்டரின் தாயார் வீராயி அம்மாளின் விவேகமிக்க வீரத்தால் கண்டரின் சொத்துக்கள் காப்பாற்றப்பட்டன. அதனால் இன்றளவும் அவர் கண்ட கனவுகள் எல்லாம் அவரது வம்சத்தினராலேயே நனவுகளாக்கப்பட்டது. அது மட்டுமல்ல இன்றளவும் கண்டரின் பெயரும், புகழும் அப்பகுதிகளில் உயர்ந்து விளங்குகிறது.

 

ஆனால், செங்கல்வராய நாயக்கருக்கு…! விதியின் விளையாட்டை யார் அறிவார்? உயர்ந்த சிந்தனை, தொலை நோக்கான பார்வை, கர்ணனை மிஞ்சும் தானதர்மம், பாரிக்கு இணையான தியாக வள்ளல், எதற்கும் ஈடில்லாத கடவுள் பக்தி, கொண்ட கொள்கையில் நம்பிக்கை என பலவும் ஒரு முகமாக விளங்கிய மனிதர்குல மாணிக்கம் செங்கல்வராய நாயக்கரின் வாழ்க்கை வரலாறு ஓர் உன்னதமான காவியம்.

 

எம் சொந்தங்களே! என் மனதில் ஆயிரமாயிமாய் அலை மோதுகின்றன. ஆனந்த அலைகள் இப்படி உயர்வான எண்ணம் கொண்ட உயர்ந்த மனிதர்களின் குல வழித் தோன்றலாய் இவ்வன்னிய குலத்தில் பிறந்தமைக்காக நெஞ்சு நிமிர்த்தி பெருமைப்படுகிறேன். எவர் செய்ய முடியும் இது போன்ற மனித குல செயலை? இதற்கு முன்பும், பின்பும் எவரேனும் ஓர் உதாரணத்தை எடுத்துக் காட்டமுடியுமா?

 

கல்விக்காக நமது சொத்துக்களை தந்து விட்டுப் போன வரலாற்றை 150 ஆண்டு கால வரலாற்றில் எங்கேனும் எவராயினும் யாராவது ஒருவரை சுட்டிக் காட்ட முடியுமா? முடியாது. ஏனென்றால், அப்படி யாரும் வாழவில்லை. வாழ்ந்து காட்டியதாக வரலாறும் இல்லை. இந்த மண்ணின் மக்களுக்காக தம் உதிரத்தைச் சிந்தி உழைத்து கிடைத்த சொத்து சுகத்தை, தான் உயிரோடு வாழ்ந்த காலத்திலேயே ஊருக்கு கொடுத்து வாழ்ந்த அந்த உத்தமனுக்கு இணையாக கட்டை விரல் உயர்த்தி சவால் விடுகிறேன், எவரேனும் இருக்கிறார்களா? என்றால் இல்லை என்பது தான் மனிதகுலத்தின் பதிலாக இருக்கும். உத்தம குலத்தில் பிறந்த உயர்ந்த மனிதன். மனிதர் குல மாணிக்கம் வள்ளல் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கரின் வாழ்வில் சம்பவங்களை தொகுத்து எழுதுவதற்கு முன்பு, இப்புவியில் புண்ணிய புதல்வராய் வந்துதித்த அப்பெருமகனாரின் காலடிச் சுவட்டை வணங்கி நாடு போற்றும் வாழ்க்கைச் சரிதம் உங்கள் கைகளில்!

 

நாயக்கரின் பூர்வீகமே அபூர்வமானது. ஆமாம், சொந்தங்களே! நமது மனிதர் குல மாணிக்கம் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கரது பூர்வீகம் மதுரை தென் மாவட்டத்தின் தலைநகரம். நான்மாடக் கூடலாம். மதுரையம்பதியில் வாழ்ந்த நாயக்கரது குடும்பத்தின் தலைவர் பெருமாள் நாயக்கர்.

 

 

 

நாயக்கரது தந்தையாரான பெருமாள் நாயக்கர் ஆங்கிலேயரின் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். அதில் சுபேதார் மேஜர் என்ற பதவி வகித்தார் பெருமாள் நாயக்கர். இவரது நேர்மையையும், கடமை உணர்வையும் பார்த்து வியந்த ஆங்கிலேய அரசு சர்பகதூர் பட்டத்தை அளித்து கௌரவித்தது.

 

அத்தகைய சூழலில் காஞ்சிபுரத்திற்கும். அரக்கோணத்திற்கும் இடையில் உள்ள பகுதியான, தற்போது பழூர் என்றமைக்கப்படும் கிராமத்தை அடுத்த ஊவேரி என்னும் கிராமத்தில் பலகாணி நிலத்தை விலைக்கு வாங்க சந்தர்ப்பம் ஏற்பட்டது. நிலம் வாங்கியதை தொடர்ந்து மதுரையிலிருந்து குடும்பத்தையே ஊவேரி கிராமத்திற்கு அழைத்து வந்து விட்டார் பெருமாள் நாயக்கர்.

 

பெருமாள் நாயக்கருக்கு மூன்று மனைவிகள். வள்ளியம்மாள், தெய்வானையம்மாள், மீனாட்சியம்மாள் ஆகிய பெயர்களுடைய அம்மூவரில் முதல் இருவர் சகோதரிகள், இதில் வள்ளியம்மாளை ஊவேரியிலும், தெய்வானையம்மாளை சென்னையிலும், மீனாட்சியம்மாளை மதுரையிலும் குடி வைத்து குடும்பம் நடத்தி இருக்கிறார். இவர்களில் வள்ளி, தெய்வானை ஆகிய இருவரின் பூர்வீக்ம் கோவிந்தவாடி அகரம்.

 

முதல் மனைவி வள்ளியம்மாளுக்கு அருணாச்சல நாயக்கர் என்ற மகனும், மூன்று பெண் பிள்ளைகளும் இருந்துள்ளனர். இரண்டாம் மனைவியான தெய்வானையம்மாவிற்கு மோகன ரங்கம், செங்கல்வராயன், சோமையா, மதுரை என்ற நான்கு ஆண் பிள்ளைகள் வாரிசுகளாக விளங்கினர். மூன்றாவது மனைவியான மீனாட்சிக்கு பாப்பம்மாள் என்ற பெண் குழந்தையும், கிருஷ்ணசாமி, ஏகாம்பரம் என்ற இரண்டு ஆண் குழந்தைகளும் இருந்தனர்.

 

சொந்தங்களே! வாசக நெஞ்சங்களே! நாம் படிப்பது 19 ஆம் நூற்றாண்டு தொடக்கத்தில் நடந்தது என்பதை கவனமாக பதிவு செய்து கொள்ளுங்கள். அக்கால கட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளை குடும்பத்தில் வைத்துக் கொள்வதென்பது சகஜமான ஒன்றுதான். சொத்து பத்துக்களுக்காகவும், உயரிய அந்தஸ்துக்காகவும் இப்படி திருமணம் செய்து கொள்வதும் இயல்பானதாக கருதப்பட்டது அக்காலம். அதை மனதில் உள்வாங்கியே மேலே சொன்ன பூர்வீக வரலாற்றை படிக்க வேண்டும்.

 

முற்றிலும் வைஷ்ணவ சமயத்தை பின் பற்றிய பாரம்பரியமான இந்துக் குடும்பம் பெருமாள் நாயக்கரது குடும்பம். குடும்பத்து வழக்கப்படி அருணாச்சல நாயக்கரே மூத்தபிள்ளை என்பதால் போற்றி வளர்க்கப்பட்டார். தந்தைக்கு பின்பும் கூட குடும்பச் சொத்துக்கள் யாவும் அவரது பெயரிலேயே இருந்து வந்துள்ளது.

 

 

 

ஆயினும் இரண்டாம் மனைவி தெய்வானையம்மாளின் இரண்டாவது புதல்வரான செங்கல்வராய நாயக்கரைத் தவிர வேறு யாரும் அக்குடும்பத்தில் படித்தவர்களாக விளங்கினார்கள் என்பதற்கான குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை. ஆனால், ஓரு விஷயத்தில் உறுதியாகவும், நேர்மையாகவும் இருந்து வந்துள்ளனர். குடும்பத்திலுள்ள ஆண்கள் அனைவரும் தந்தையின் பெயருக்கேற்பவம், அவரது புகழுக்கேற்பவும் தாங்களும் ராணுவப் பணி புரிவது என்பதை கடமையாக கருதி நிறைவேற்றி இருக்கின்றனர்.

 

பெருமாள் நாயக்கரது குடும்பம் மதுரையிலிருந்து ஊவேரிக்கு வந்த போதே செங்கல்வராய நாயக்கர் குழந்தையாக இருந்துள்ளார். அவரது இனிஷியலில் உள்ள பி.டி. என்ற எழுத்துக்கள் முறையே தந்தை பெருமாள் நாயக்கரையும், தாய் தெய்வானைம்மாளையும் குறிப்பதாக நாயக்கரே உயிலில் தெரிவித்துள்ளார்.

 

இன்றைக்கு அரசாங்கத்தில் ஏதோ புதிதாக கண்டுபிடித்தது போலவும், பெண் வர்க்கத்திற்கு குறிப்பாக தாய்க்குலத்திற்கு பெருமை சேர்ப்பதாகவும் சொல்லி தந்தையின் பெயரை இனிஷியலாக பயன்படுத்துவது போல் இனி தாயின் பெயரையும் இனிஷியலாக பயன்படுத்தலாம் என்று புதிதாக சட்டம் போடப்படுகிறது. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்தவித சட்டமும் இயற்றாத நிலையில் தன்னிச்சையாக தானே தன் தாயார் பெயரை இனிஷியலாக இணைத்து. பெ.தெ. என தன் பெயரை பதிவு செய்த நாயக்கர் மறுமலர்ச்சியான, புதிய சிந்தனைக்கு என்ன பெயரிடுவது?

 

அதுதான் செங்கல்வராய நாயக்கர் தனது இனிஷியலில் உள்ள லீ என்னும் எழுத்து அவர் பெயரைக் குறிக்கும் என்று நம் உயிலில் கைப்பட எழுதி இருக்கிறார். தந்தையின் பெயரை மட்டுமே முதல் எழுத்தாக பயன்படுத்திய ஆணாதிக்க சமுதாயத்தில் நாயக்கரின் தாய் தந்தையர் மீதான பற்று அப்போதே மெச்சும்படி பேசப்பட்டு இருக்கிறது.

 

இங்கு குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் நாயக்கர் பட்டம் சம்பந்தமானது. விஜயநகர சாம்ராஜ்ய வாரிசுகளாக இங்கு  வந்த நாயக்கர்கள் வேறு உதாரணத்திற்கு திருமலை நாயக்கர் போன்றோரின் வாரிசுகள். இந்த மண்ணில் பூர்வகுடிகளாக வாழ்ந்த வன்னிய மக்களுக்கு இருந்த நாயக்கர் பட்டம் வேறு.

 

ஆங்கிலேயர் ஆட்சி செய்த சமயம் இங்கிருந்த ஆதிக்கக்காரர்கள் பலரும் துரை என்ற பட்டப் பெயரால் அழைக்கப்பட்டது போல இங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய விஜயநகர நாயக்கர்களைப் பார்த்து பூர்வகுடிகளாக இருந்தவர்களில் மேல்தட்டு வர்க்கமாயிருந்த ஒரு பகுதியினர் நாயக்கர்கள் என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும் அல்லது அதிகாரம் செய்தவர்கள் எல்லாம் துரையானதைப் போன்று இவர்களும் நாயக்கர்களாகி இருக்கலாம்.

 

வன்னியர்களை நாயக்கர்கள் என்ற இனப்பெயருடன் வரலாற்றிலோ, இலக்கியங்களிலோ அல்லது கல்வெட்டுக்களிலோ எங்கும் குறிக்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. நம் இனத்தவரின் பூர்வீகப் பெயர்களாக சம்புவராயர்கள், வன்னிய குல சத்திரியர்கள், பள்ளிகள், வில்லுகள், வன்னிய இராசக்குடிகள் என்பவையே குறிப்பிடப்பட்டிருக்கிறது.

 

பல கல்வெட்டுக்களில் சம்புவராயர், பள்ளி என்ற குறிப்புகள் உள்ளன. இந்தப் பள்ளி  இனத்தவரே கொள்ளிடக் காவிரிக்கரையின் வடக்கே உள்ள பழங்கால ராஜ்ஜியங்களின் போர் மறவர் இனத்தவராக விளங்கி உள்ளனர். இந்தப் பள்ளிகளான வன்னியர்கள் சோழ வம்சத்தவர்கள் என்பதும், இவர்களில் சம்புகராஜன் என்ற அரசன் இருந்ததும், தென்னிந்திய தீபகற்பத்துக்குச் சம்புகத்தீவு என்பதும் இலக்கிய காலந்தொட்டு சொல்லப்படுகிற பழம் பெயர் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே வன்னிய இனம் ஆண்ட இனமென்பதும், நாயக்கர் பட்டம் இடையில் வந்ததென்பதும் பெரும்பாலானோரின் கருந்து.

 

 

வன்னியர்களாக இப்பள்ளி இனத்தவர்களுக்கு வில்லிகள் என்ற பட்டமும் உண்டு.  அதாவது வில்லுடையவர்கள், விற்போரில் வல்லவர்கள், வீரர்கள் என்பவையே அதன் பொருள். இந்த விற்படை வீரர்கள் பற்றி பல கல்வெட்டுக்கள் உள்ளன. வன்னியர்களுக்கு வன்னியர் இராசக்குடிகள் என்ற பெயர் கூட பண்டைய ஆவணங்களில் வருகிறதே தவிர நாயக்கர்கள் என்ற பட்டப் பெயரால் யாரும் அழைக்கப்பட்டதாக குறிப்புகள் எதுவும் காணப்படவில்லை.

 

இந்த வன்னியர்கள் வாழ்ந்த ஊர்கள் தாம் வன்னவேடு (வன்னிவேடு) என்று அழைக்கப்பட்டன. வடதமிழகத்தில் இப்படிப்பட்ட வன்னவேடுகள் சுமார் 25 ஆயிரம் கிராமங்கள் இருந்துள்ளதால் தமிழகத்தில் இந்த சமுதாயம் எப்போதுமே பெருங்குடியான சமூகமாகவே விளங்கி இருப்பது தெளிவாகிறது. எனவே, நாயக்கர் பட்டம் பற்றிய ஆய்வை இத்துடன் முடித்து நமது வள்ளல் நாயக்கரின் சீர்மிகு செயல்கள் நிறைந்த வாழ்க்கையை தொடர்ந்து படிப்போம் வாருங்கள்.

 

பூர்வகுடி இனத்தவரான வன்னிய மக்கள் ஒரு காலகட்டத்தில் நிலங்களில் பாத்தியதை இல்லாத கூலிகள், அடிமைகளாக மாற்றப்பட்டனர். அதிகாரங்கள் மொத்தமும் நிலச்சுவான்தாரர்கள், குத்தகைதாரர்கள், மேளாக்கள், மிட்டாக்கள், மிராசுகள், படிநிகராணிகளிடம் இடம் மாறிவிட்டன.

 

கல்வி அறியாமை இல்லாததால் மேட்டுக்குடியினரை அனுசரித்துப் போய் சலுகைகளையும்., ஆளும் உரிமையையும் பெற்றுக் கொள்ளத் தெரியாத பேதமையினராக வாழ்ந்தனர் வன்னிய மக்கள். இந்திய ஆட்சி முழுவதும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் மொத்தமாய் அடகு வைக்கப்பட்டிருந்த கால கட்டம் அது. ஆங்கிலேயரை எதிர்த்து போராட்டங்கள் உருவாக ஆரம்பித்த காலநேரமும் அதுதான்.

 

நாயக்கர் உயிரோடு இருந்த காலகட்டத்தில்தான் ஆங்கிலேய அரசு ஒரு முக்கிய சட்டத்தை இயற்றியது. அதாவது அடிமை முறை ஒழிப்புச் சட்டம்.

 

1854 இல் இயற்றப்பட்ட அந்த அடிமை முறை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரக்காரணமாக இருந்தவர்கள் இரண்டு வகுப்பினர்கள்தான். அவர்கள் வன்னியரும், இன்றைய தாழ்த்தப்பட்டவர்களும். 1854-க்கு முன் இப்பெருமக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து இருப்பார்கள் என்பதற்கு இச்சட்டம் ஒரு அத்தாட்சி.

 

நாடே இருந்த தகிப்பான சூழலில், மன்னராட்சி முடிந்து குறுநில மன்னர்களின் ஆட்சியும், பாளையக்காரர்கள் ஆட்சியும் முடிவுறும் தருவாயான இக்கட்டான சூழலில் 1829 ஏப்ரல் 10-ந் தேதி இப்புண்ணிய பூமியில் அவதாரித்தார் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர்.

 

 

இந்திய ஆட்சி முழுமையாக ஆங்கிலேயர் வசம் வந்துவிட்ட நேரம். 1940-இல் உயர்நிலைப் பள்ளியாகத் துவக்கப்பட்ட இன்றைய மாநிலக் கல்லூரிதான் நாயக்கர் கல்வி கற்க சேர்க்கப்பட்ட ஆரம்பப்பள்ளியாக விளங்கியது. அன்றைய நிலையில் ஆங்கிலேயர்களின் பிள்ளைகளும், வசதியான மேட்டுக்குடி இனத்தவரின் பிள்ளைகளும் மட்டுமே அப்பள்ளியில் பயின்றனர். அன்றைக்கு இருந்த ஒரே பள்ளியும் இதுதான் என்றால் நாயக்கரின் குடும்ப நிலை எவ்வளவு உயர்வாக இருந்துள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

 

எழும்பூரில் உள்ள எடின்பர்க் இல்லத்தில் தான் அப்பள்ளி இயங்கியது. நாயக்கர் அப்பள்ளியில் சேரும் போது அதன் தலைமை ஆசிரியராக இருந்தவர் ஈ.பி. பாவல் என்னும் ஆங்கிலேயர். அப்போது நாயக்கருடன் கல்வி கற்ற 14 மாணவர்களில் சுமார் பத்து நபர்கள் வரை பிற்காலத்தில் புகழ் பெற்ற பெரும் புள்ளிகளாக விளங்கினார்கள்.

 

செங்கல்வராய நாயக்கரின் வர்த்தகத்திலும் வாழ்க்கையிலும் கடைசி வரை உடனிருந்த ராமய்யங்கார் போன்றோரெல்லாம் இந்தப் பள்ளித் தோழராக அறிமுகமானவரே. திவான் ஆஃப் கொச்சின் சுப்பிரமணிய பிள்ளையும், ராஜா சர்.டி. மாதவராய், சர்.டி. முத்துச்சாமி ஐயர் போன்றோரும் அவ்வாறான பள்ளித் தோழர்களாக இருந்தவர்களாவர்.

 

இந்தப் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பக் கல்வி வகுப்புகளுக்கு, அந்தக் காலத்திலேயே இரண்டு ரூபாய் கட்டணமாம். உயர்நிலைப் பள்ளி வகுப்புகளுக்கு நான்கு ரூபாய் கட்டணமாகவும் வசூலித்துள்ளனர். இப்பணத்தைக் கட்டி பிள்ளைகளைப் படிக்க வைக்க வசதியின்றியே அக்காலத்து பெரும்பாலான மக்கள் கல்வியறிவு பெற முடியாமல் வாழ்ந்துள்ளனர் என்றால் அவர்கள் என்ன வாழ்க்கையை வாழ்ந்து இருப்பார்கள்.

 

அப்போதைய சென்னைப் பல்கலைக் கழகத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கிய அந்த உயர்நிலைப் பள்ளியை நிர்வாகித்தவர்கள் 14 பேர்களைக் கொண்ட குழுவினராக இருந்தனர். ஜார்ஜ் நார்ட்டன் உட்பட ஏழு ஆங்கிலேயர்களும், ஏழு இந்தியர்களும் கொண்ட அக்குழுதான் பள்ளியை நிர்வகித்தது. அதன் பிரசிடெண்ட்டாக இருந்தவர் நார்ட்டன். இந்த ஏழு இந்தியர்களில் 4 பிரமுகர்கள் அப்போதைய பச்சையப்பர் அறக்கட்டளையின் நிர்வாகிகள் என்பதை நன்றாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டிய ஓர் விஷயமாகும். இதை முன்னுதாராணமாகக் கொண்டுதான் பிற்காலத்தில் எழுதப்பட்ட உயிலுக்கு அடித்தளமிட்டுக் கொண்டார் நாயக்கர்.

 

சென்னையில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் நாயக்கரது பெற்றோரின் குடும்பம் எண். 6 ஜெனரல் காலின்ஸ் ரோடு, வேப்பேரி என்ற சென்னை விலாசத்தில் தான் வசித்து வந்துள்ளது. எனவே இந்த வீடும் அவரது தந்தை காலத்திலேயே வாங்கப்பட்டதாக இருக்க வேண்டும். தந்தையார் பெருமாள் நாயக்கர் செங்கல்வராய நாயக்கரின் 26 வயதிலேயே மரணமடைந்து இருக்கிறார். அதனால் அந்த வீடு முன்பே வாங்கப்பட்டு பூர்வீகமாய் இருந்துள்ளது புலனாகிறது.

 

 

பெருமாள் நாயக்கரின் மறைவால் அவ்வளவு பெரிய குடும்பத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு படித்த இளைஞரான நாயக்கரது தலையில் சுமத்தப்பட்டது. நிலபுலன், வாடகை, வருமானம், வியாபார முதலீடுகள், தந்தையின் பென்ஷன் என்று அப்போதும் குடும்ப வருவாய்க்கு குறைவில்லாத நிறைவான நிலைமையே இருந்தது.

 

பெரிய கூட்டுக் குடும்பத்தின் ஏனைய ஆண் உறுப்பினர்கள் அனைவரும் ராணுவத்தில் பணியாற்றியதால், குடும்ப நிர்வாகத்தை தனி ஒரு ஆளாக  நின்று கவனிப்பது நாயக்கருக்குப் பெரும் பிரச்சனையாக இருந்தது. இந்த நேரத்தில் நாயக்கருக்கு வாழ்நாள் முழுவதும் ஒத்துழைப்பு தந்து உதவியவர்களில் முக்கியமானவர்கள் வி. ஆர். பசவப்பிள்ளையும், டி. சுந்தரம் பிள்ளையும்தான். இவர்கள் இருவரும் தான் நாயக்கரின் சுமைக்கு தோள் கொடுத்து உதவியவர்கள். நாயக்கருக்கு உற்ற உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. (வன்னியரில் ஒரு பிரிவினர் பிள்ளை என்ற பட்டத்தையும் கொண்டிருந்தனர்.)

 

சென்னையில் இயங்கிய ஆங்கிலேயரின் புகழ் பெற்ற வர்த்தக நிறுவனமான ஷண்ட் அன் கோ என்னும் கம்பெனியில் சுமார் 74 ஆயிரத்து 200 ரூபாய் வரை முதலீடு செய்து பங்குதாரரானார் நாயக்கர். இதற்கு மேற்சொன்ன இருவரும்தான் பூரண ஒத்துழைப்பு கொடுத்தவர்கள். இந்த நிறுவனம் அப்போது இந்தியாவிலிருந்து தோல் பருத்தி முதல் மஞ்சள், எட்டிக் கொட்டை, மருந்துப் பொருட்கள் மற்றும் மளிகைப் பொருட்கள் வரை அனைத்தையும் கொள்முதல் செய்து, இங்கிலாந்துக்கும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கும் அனுப்பிக் கொண்டிருந்தது.

 

அந்த நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்த்ததோடு, பெரும் தொகையை சம்பளமாகக் கொடுத்து நாயக்கரை தனது நிறுவனத்தின் துபாஷியாகவும் நியமனம் செய்து கொண்டது ஷண்ட் அன் கோ என்ற அக்கம்பெனி. அக்காலத்தில் உள்ளூர் மொழி, பழக்க வழக்கங்கள் எதையுமே புரிந்து கொள்ள இயலாமல், அதிகாரத்தை மட்டும் கைப்பற்றிக் கொண்டிருந்த ஆங்கில நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் உள்ளூர் மொழி மற்றும் ஆங்கிலம் இரண்டும் தெரிந்த மக்கள் தொடர்பாளர்கள் கட்டாயமாகத் தேவைப்பட்டனர்.

 

அந்தப் பொறுப்பில் இருந்தவர்களே ‘துபாஷ்’  என்று அழைக்கப்பட்ட மொழி பெயர்ப்பாளர்கள். இந்தப் பதவியை அக்காலத்தில் அதிகமாக கைப்பற்றி அங்கம் வகித்தவர்கள் பெரும்பாலும் முதலியார், பிள்ளை, (வேளாளர்) பிராமணர் என்ற மேட்டுக்குடி வகுப்பை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். இதில் பச்சையப்ப முதலியாரும் புகழ்பெற்ற துபாஷியாக விளங்கினார்.

 

இந்த துபாஷிகள் எடுத்துச் சொல்வதே அப்போதெல்லாம் ஆங்கிலேயருக்கு வேதவாக்கு நாட்டில் நடக்கின்ற நல்லது கெட்டதுகளையும் இவர்கள் மூலமாகவே ஆங்கிலேயர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு வகையில் இந்த துபாஷிகளை ஆங்கிலேயரின் விழிகள் என்று அழைக்கலாம்.

 

இவ்வரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு மேலே  சொன்ன மேட்டுக்குடி வகுப்பினர் தங்களது இனத்தவரின் விருத்திக்கும் உகந்ததை மட்டுமே ஆங்கிலேயரின் பார்வைக்கு கொண்டு சென்றனர். அதன் மூலம் அதிகாரமிக்கப் பதவிகளில் தம் இனத்தவர் மட்டுமே நியமனம் பெறும்படி பார்த்துக் கொண்டனர். நிலமாகவும், நன்கொடைகளாகவும், அனைத்து நிலங்களையும் இவர்களின் பெயருக்கே எழுதி வைக்கும்படி ஆங்கிலேயரிடம் சொல்லி நற்பெயர் பெற்று பெரும் பணக்காரர்கள் ஆனார்கள்.

 

கொடிகட்டிப் பறந்த இந்த மேட்டுக்குடி இனத்தவரின் ஜெகஜாலங்களைத் தாண்டி வன்னிய சமுதாயத்திலேயே படித்து துபாஷ் பதவி வகித்த ஒரே குடும்பம். அநேகமாக செங்கல்வராய நாயக்கருடையதாகத்தான் தோன்றுகிறது. இந்தப் பதவியும், நாயக்கரது தந்தை பெருமாள் நாயக்கர் ஆங்கில ராணுவத்தில் பணியாற்றிப் பெற்றிருந்த நற்பெயரின் காரணமாகவும், படித்தவரான செங்கல்வராய நாயக்கரின் ஆங்கில புலமைக்காகவும் தான் கிடைத்திருக்கக் கூடும்.

 

நாயக்கரின் இப்பணிக்காகவும், வர்த்தகத்துக்காகவும் பசவப்பிள்ளை மற்றும் சுந்தரம் பிள்ளை ஆகிய இருவரும் பெரும் உதவியாக இருந்தனர். பசவப்பிள்ளை ஊரெங்கும் அலைந்து திரிந்து ஷண்ட் அன் கோவுக்கு சப்ளை செய்ய வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கி வந்தார். அவற்றை கம்பெனியின் குடோனுக்கு அனுப்பியதோடு மட்டுமல்ல, அக்குடோனுக்கு நிர்வாகியாகவும் பணியாற்றினர் சுந்தரம் பிள்ளை.

 

 

ஹண்ட் அன் கோவிற்கு கேரளாவில் கொச்சியிலும், கர்நாடகவில் பெங்களூரின் கெம்பேகவுடா ரோட்டிலும், ஆந்திராவில் ஹைதராபாத்திலும், சென்னையில் ராஜாஜி சாலையில் இருந்த ஸ்டீமல் ஹவுஸிலும் கிடங்குகள் இருந்துள்ளன. அதுமட்டுமல்ல, பசவப்பிள்ளையும், சுந்தரம் பிள்ளையும் அப்போது தர்மகாரியங்களுக்குப் புகழ் பெற்றிருந்த பச்சையப்பர் அறக்கட்டளையிலும் நாயக்கரது காலத்துக்கு முன்பே போர்டு உறுப்பினர்களாகவும் இருந்து வந்துள்ளனர்.

 

பசவப்பிள்ளை இரண்டாண்டுகள் அதன் ட்ரஸ்டியாக பணியாற்ற, அதன் பிறகு 14 வருடங்களாக அப்பதவியை வகித்துள்ளார். அதற்கு பிறகு சுந்தரம் பிள்ளையின் மகனான ராவ் சாஹிப் நடராஜன் பிள்ளை என்பவர் அதன் ட்ரஸ்டியாக இருந்துள்ளார். பொதுவாக பச்சையப்பர் அறக்கட்டளைக்கும் வன்னியருக்குமான தொடர்பு வெகு இயல்பாக சர்வ சாதாரணமாக இருந்து வந்துள்ளது.  இதுவும் நமது செங்கல்வராய நாயக்கருக்கு உயில் எழுத அடிப்படையோ என்னவோ?

 

உத்தியோகமும், வர்த்தகமும் ஒருங்கே இணைந்து வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த காலகட்டத்திற்கு சற்று முன்புதான் திருமணமாகி இருந்தது. வெகுகாலம் வரை நாயக்கருக்கு குழந்தைப் பேறு இல்லாமல் தவித்தார் நாயக்கர். அவர் தம் மனைவியும் வேண்டாத கடவுள் இல்லை, போகாத கோவில் இல்லை. இதனால் நாயக்கர் இரண்டாவதாக ஒரு திருமணமும் செய்து கொண்டார்.

 

ஆனால், விதியை வெல்ல இப்புவியில் இதுவரை யாருமே பிறக்கவில்லையே! இரண்டாவது மனைவிக்கும் குழந்தை இல்லாமல் போக மனம் வெறுத்து மனதளவில் தவிக்க ஆரம்பித்தது நாயக்கருக்கு. இதற்கு குடும்ப முன்னுதாரணமும் ஒரு காரணம்.

 

அவரது தந்தை பெருமாள் நாயக்கருக்கு மூன்று மனைவிகள், மூன்று மனைவிகளுமே வேண்டிய அளவு பிள்ளைப் பேறு பெற்று அதை சீரும் சிறப்புடன் வளர்த்து ஆளாக்கினர். தம் வம்சா வழியை பெரிய அளவு கீர்த்தியுடன் ஆளாக்கியதில் அகமகிழ்ந்து  போனார் பெருமாள் நாயக்கர். அந்த ஆனந்தத்திலேயே இறைவனடி சேர்ந்தார் பெருமாள் நாயக்கர்.

 

ஒன்பது குழந்தைகளைப் பெற்ற தனது தாய் தந்தையரின் வம்சா வழிக்கு தன்னால் ஒரு வம்சத்தை உருவாக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார். எத்தனை செல்வங்கள் இருந்து என்ன செய்ய? ராஜ வாழ்க்கையும், பெயரும், புகழும் இருந்தும் தனக்கானதாக எதுவுமே இல்லையென்று வருந்தினார். ஒன்று இரண்டு மனைவிகள் இருந்தும் பிள்ளைப் பேறு கிட்டாததால் நாயக்கர் அக்குறையை பெரிதாக்கி முடமாகிப் போனார்.

 

விதியை நொந்து தள்ளாடியவரின் அலங்கோலமான மனது. ஆன்மீகப் பணிக்கு தயாரானது. ஆம் சொந்தங்களே! அவரது அன்றாட வாழ்க்கைப் பணிகளின் கம்பீரமும், பரிபாலனமும், கடவுளின் சன்னதியில் சதாகாலமும் முறையிட்டுக் கிடக்கும் சரணாகதி நிலைக்கு நாயக்கர் ஆளாக நேரிட்டார்.

 

நாயக்கர் தான் வாழ்ந்த காலத்தில் அதிகம் வழிபட்டது திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாளையும் தாயார் அம்மையையும் தான். அதற்கடுத்து அவரது சொந்த கிராமமான ஊவேரிக்கு அருகிலிருந்த ஸ்ரீபெரும்புதூர் திருவுடையவர். ஆன்மீகத் தேடல்களில் மடைமாற்றம் ஆகிவிட்ட வாழ்க்கையை வாழ்ந்தார் நாயக்கர்.

 

ஸ்ரீபார்த்தசாரதி சன்னதிக்கு தினசரி பூமாலையும் பூஜைக்கு வேண்டிய சந்தனத்தையும் கொடுத்து அனுப்புவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதே போல் ஸ்ரீபெரும்புதூர் சன்னதிக்கு மாதந்தோறும் திருவாதிரை நட்சத்திரத்திற்கு பூமாலையும் சந்தனமும் தவறாமல் அனுப்பிக் கொண்டிருந்தார்.

 

திருக்கோயில்களுக்கு வேண்டிய பூக்களுக்காக ஒரு பூந்தோட்டத்தையே நிர்மானித்திருந்தார். அதற்காக கண்ணையா – லட்சுமி தம்பதியரான ஒரு வேலைக்காரனின் குடும்பத்திற்கு மாதம் பத்து ரூபாய் சம்பளம் கொடுத்து பரம்பரையாக வேலை செய்ய பணிக்கு அமர்த்தி இருந்தார்.

 

அதுமட்டுமல்ல ஸ்ரீபார்த்தசாரதி சன்னதியின் தினசரி பூஜைக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில், வேப்பேரியில் உளள அவரது ஜெனரல் காலின்ஸ் ரோடு பங்களாவின் மேற்குப்புற நிலத்தை லா. கிருஷ்ணசாமி முதலியார் என்பவரிடம் இருந்து ஆயிரத்து நானூறு ரூபாய்க்கு விலைக்கு வாங்கினார் நாயக்கர். அந்தப் பூந்தோட்டத்தை எப்படியெல்லாம் உருவாக்கி, எவ்வகையில் நிர்வகித்து வரவேண்டுமென்பதற்கு அரிய கனவும் கண்டு வந்தார் நாயக்கர்.

 

 

இதற்கிடையே அவரது தந்தையின் மறைவிற்குப் பிறகு தனது சகோதர, சகோதரிகளின் குடும்பம், அவர்களின் வாரிசுகள், விதவையாகி நிற்கும் மூன்று தாயார்கள் என்று பெரிய குடும்ப உறுப்பினர்களை வைத்துக் கொண்டு குடும்ப கௌரவத்தின் பாரம்பரியப் பெயரை புகழுடன் காப்பாற்றி வருவது என்பது நாயக்கரின் வாழ்க்கை மனோபாவத்துக்குப் பெரும் சுமையாகத் தோன்றியது.

 

அதனால் மூதாதையர்களின் சொத்துக்களை, அவரவர் பங்கு பாகத்தை பிரித்துக் கொடுத்து பொறுப்புகளை பகிர்ந்து கொள்வதென முடிவெடுத்தார் நாயக்கர். 1855 ஆம் ஆண்டு மே மாதம் 20ம் நாள் கூடலூர்  ஐயலு நாயக்கர், கோடகம் வெங்கடசாமி  செட்டி ஆகிய சமுதாயத் தலைவர்களின் முன்னிலையில் குடும்ப உறுப்பினர்கள் அடங்கிய பாகப்பிரிவினைக்கான பஞ்சாயத்து ஆயம் கூட்டப்பட்டு குடும்பச் சொத்துக்கள் பிரிக்கப்பட்டன.

 

அதே மே மாதம் 29 ஆம் நாள் பஞ்சாயத்துத் தீர்ப்பும் உறுதியானது. இந்தப் பஞ்சாயத்துக்கு முன்பே பெருமாள் நாயக்கரின் மூத்த மனைவியான வள்ளியம்மாளின் முதல் பிள்ளையான அருணாச்சல நாயக்கர் மறைந்து விட்டார். அவருக்கு வாரிசுகளாக இரண்டு மைனர் ஆண் குழந்தைகளும், வேதவல்லி, பொன்னாம்மாள், முளகம்மாள் என்ற மூன்று பெண் குழந்தைளும் இருந்தனர்.

 

அருணாச்சல நாயக்கரின் மறைவால் அவரது குடும்பச் சொத்துக்களையும் நாயக்கரே நிர்வகித்து வரவேண்டிய நிலை ஏற்பட்டது. பிரிக்கப்படாத குடும்பச் சொத்துக்கள் அனைத்துமே மூத்தமகன் என்பதால் அவரது பெரியலேயே சொத்துக்கள் இருந்தன. அருணாச்சல நாயக்கர் உயிருடன் இருந்த காலத்தில் ஊவேரி கிராமத்தில் தர்மசத்திரம் கட்ட அவரிடம் 2500 ரூபாய் கிரயம் பேசி, 22 காணி நிலத்தை வாங்கிச் சத்திரமும் கட்டி இருந்தார் நமது நாயக்கர்.

 

இதில் தினசரி பக்தர்களுக்கும், பைராகிகளுக்கும் சதாவர்த்தி அல்லது அரிசி, பருப்பு முதலான மளிகைப் பொருட்களை கொடுத்து வந்தனர். வெளியூர் பயணிகள் தங்கிச் செல்ல வேண்டிய வசதிகள் செய்து  கொடுக்கப்பட்டன. இது போன்ற எல்லா விஷயங்களும் பஞ்சாயத்து பேச்சில் பேசப்பட ஒரு வழியாக உடன்பாடு ஏற்படும் சூழல் உருவானது.

 

கூடலூர் ஐயலு நாயக்கர் மற்றும் கோடகம் வெங்கடாசாமி செட்டி ஆகியோர் மூலம் நடைபெற்ற குடும்பச் சொத்து பஞ்சாயத்து ஏனைய பங்காளிகள், அவர் தம் வாரிசுதாரர்க்ள், உறவினர்கள் என அனைவருக்கும் உடன்பாடு ஆனது. அனைவரும் பூரண சம்மத்துடன் கையொப்பமிடத் தயாரான நிலையில் ஏகாம்பர நாயக்கரான சகோதரர் மட்டும் மனக்குறையுடன் மறுத்து நின்றார்.

 

செங்கல்வராய நாயக்கரின் தந்தை பெருமாள் நாயக்கரின் மூன்றாவது மனைவியான மீனாட்சியம்மாளின் மூத்த மகன்தான் இந்த ஏகாம்பர நாயக்கர். நாயக்கருக்கும் இவருக்குமான பிரச்சனை வளர்ந்து கடைசியில் கோர்ட் வரை சென்று விட்டது. இந்த வழக்கின் நிமித்தம் நாயக்கருக்கு மனதளவில் பெரும் சோகம் குடிகொண்டு விட்டது.

 

ஏகாம்பர நாயக்கரின் பங்கு பாகத் தகராறின் காரணமாக சுமார் 13 வருடம் கழித்து (1868) சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். மூதாதையர்களின் சொத்தை அனுபவித்துத்தான் வாழ வேண்டும் என்ற நிலையில் அப்போது நாயக்கர் இல்லை. அவருக்கு வந்து கொண்டிருந்த வருமானமே பல தர்ம காரியங்களுக்குப் பயன்பட்டுக் கொண்டிருந்த பவிசான காலமது.

 

அந்த நிலையில் தனது சொந்த சகோதரருக்கு தான் சரியாக சொத்துப்பாகம் தரவில்லை என்ற பொய்யான காரணத்தை சொல்லி, குடும்ப வழக்கு கோர்ட் படி ஏற வேண்டிய நிலையை ஏகாம்பர நாயக்கர் தோற்றவித்த விதம் நாயக்கருக்குப் பெரும் மன சஞ்சலத்தை ஏற்படுத்தி விட்டது.

 

ஏகாம்பரநாயக்கர் மேலும் 50 ஆயிரம் கேட்டுத் தொடுத்த வழக்கில் இருவருமே பாரிஸ்டர் வழக்கறிஞர்களை நியமித்து  வழக்கை நடத்தினர். வழக்கு என்று வந்துவிட்ட பின்பு அதை விட்டுக் கொடுக்க இடம் தாராமல் மன உறுதியுடன் வழக்காடி போராடினார். நாயக்கருக்கு ஆதரவாக மற்ற சகோதரர்கள் அனைவரும் சாட்சியம் கூறி நெஞ்சில் பால் வார்த்தனர்.

 

முறைப்படியான பஞ்சாயத்து ஆவணங்கள் அனைத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார் நாயக்கர். உடனே அப்போதைக்கு வேறு வழியின்றி ஏகாம்பர நாயக்கர் தனது வழக்கை வாபஸ் வாங்கிக் கொண்டாலும், மீண்டும் சில காலம் கழித்து அதே வழக்கைத் தொடுத்தார் சென்னை உயர்நீதி மன்றத்தில்.

 

 

வழக்கை விசாரித்த உயர்நீதி மன்ற நீதிபதி சர் ஆடம் பிட்டில் ஸ்டோன். அது பொய் வழக்கு என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். இதனால் கற்றத்தார் மத்தியில் அவரது நேர்மை நிலை நாட்டப்பட்டது. கௌரவம் நிலைத்து நின்றது. அவரது சகோதரர்கள், உற்றார், உறவினரின் மத்தியில் நாயக்கர் சொல்வதே வேதவாக்கு என்னும் உயர்ந்த நிலை ஏற்பட்டது. சமூகத்தில் அந்தஸ்து உயர்ந்து கொண்டே போனது.

 

இப்படி அரும்பாடு பட்டுத் தேடி வைத்துள்ள சொத்து, அதன் நிர்வாகம், குடும்ப பெயர், கௌரவம் அனைத்தையும் பொறுப்பேற்றுக் கொண்டு செல்ல ஒரு தகுதி வாய்ந்த தவப்புதல்வனையோ வேறு வாரிசுகளையோ பெற இயலாது போயிற்றே என மறுபடியும் துயரத்தில் ஆழ்ந்தார் நாயக்கர். அப்படியானால் இச்சொத்தை நிர்வகிக்கப் போகும் வாரிசு யார்? அதற்கு தகுதியான நபர் யார்? என்று மனம் ஏங்க ஆரம்பித்தது.

 

அவருக்கென்று ஒரு சொந்த வாரிசு உருவாகாத பிரச்சனையில் சுற்றி நிலவிய சூழ்நிலைகளை முழுமையாக ஆராய்ந்து அனைத்தையும் பரிசீலித்த பின்பு அதற்கேற்ற ஒரு வாரிசையும் தேர்ந்தெடுத்தார். நாயக்கரின் உடன்பிறந்த சகோதரர்களில் மொத்தம் மூன்று பேர் இருந்தனர். அவர்களது குடும்பங்களிலிருந்து ஒருவரை வாரிசாக தேர்வு செய்வதென முடிவெடுத்தார் நாயக்கர்.

 

இறுதியாக மூன்று சகோதரர்களில் மூத்தவரான மோகனரங்கம் நாயக்கரின் புதல்வர் வரதராஜூலு என்பவர் செங்கல்வராய நாயக்கரின் செல்லப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டு வளர்த்து வந்தார். இவரை வளர்த்து ஆளாக்கிப் படிக்க வைத்தது அனைத்துமே நாயக்கர்தான். ஆயினும் முறைப்படி அவரை தத்து எடுத்துக் கொண்டதற்கான சாட்சியமும் இல்லை, அதற்கு காரணமும் இருந்தது.

 

தனது சித்தப்பா செங்கல்வராய நாயக்கர் எதிர்பார்த்தது போல வரதராஜூலு நாயக்கரிடம் கல்வியறிவில் நாட்டம் இல்லாதவராக இருந்துள்ளதும், அதனால் பள்ளி இறுதி வகுப்பையும் தாண்டவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  குழந்தையில்லாத செல்வத் தம்பதியினார் தனது வளர்ப்புப் பிள்ளைக்கு அதிக செல்லம் கொடுத்து வளர்த்ததால் செல்வச் செழிப்புள்ள குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இயற்கையாக அமைந்துவிடும். ஒரு வகையான ஊதாரித்தனம் வரதராஜூலுவிடம் அளவுக்கதிகமாக இருந்தது.

 

வரதராஜூலு உயிருடன் இருந்த காலம் முழுவதும் நாயக்கரின் காலின்ஸ் ரோடு அரண்மனையில் தான் வாழ்ந்துள்ளார். அவருக்கு ஓரளவு வயது உயர்ந்த போது, தனது வீட்டை ஒட்டி ஒரு சிறிய பங்களாவையும் உருவாக்கிக் கொடுத்து, அதற்கு வேண்டிய அளவு இரும்பு மரச்சாமான்கள் உட்பட, வேலைக்காரர்களையும் நியமித்து ராஜபோக வாழ்க்கையை அனுபவிக்குமாறு வாழ வைத்துள்ளார் நாயக்கர்.

 

தனக்குப் பிறகு வரதராஜூலு வளர்ந்து தன்னைப் போலவே படித்து, உழைத்து, குடும்ப நற்பெயரைக் காப்பாற்றி, தர்ம காரியங்களை தொடர்ந்து செய்வார் என்ற நம்பிக்கை நாயக்கரின் மனதில் விடைபெறத் துவங்கியது. அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை தகர்ந்ததால் மளமளவென்று பல தர்மஸ்தாபனங்களை தானே நிறுவ ஆரம்பித்தார் நாயக்கர்.

 

தெய்வீக திருப்பணிக்காக அமைக்கப்பட்ட அழகிய பூந்தோட்டம் ஒருபுறமிருக்க, அதிலே புகழ் பெற்ற ஆசிரமம் ஒன்றையும் அமைத்தார் நாயக்கர். இந்த ஆசிரமத்தில் தங்கி, இறைப்பணி செய்து வந்த சிவப்பிரகாச சுவாமிகளோடு பல சீடர்களையும் தங்க வைத்து, ஆன்மீகப் பள்ளியொன்றையும் நடத்தி வந்தார்.

 

சுப்பையா சுவாமிகள், ஆனந்த போதினி என். முனுசாமி முதலியார், சோமசுந்தர நாயக்கர் போன்றோரெல்லாம் சாதி, மத வித்தியாசமின்றி, இந்த ஆசிரமத்தில் வளர்த்தெடுக்கப்பட்ட பெருந்தகையாளர்கள் ஆவார்கள். அக்காலத்தில் அனைத்து துறைகளிலும் புகழ் பெற்ற டாக்டர் ராஜாபாதரும் கூட சிவப்பிரகாச சுவாமிகளின் சீடர்தான்.

 

தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த் சுவாமி சஹஜானந்தரும் கூட இந்த ஆசிரமத்தால் வளர்த்தெடுக்கப்பட்டு கல்வியறிவு பெற்றவராவார். இவர்தான் பிற்காலத்தில் சிதம்பரத்தில் அமைந்த ஹரிஜனங்களுக்கான நந்தனார் குலத்தை தோற்றுவித்தார். இவரது பக்தி மார்க்கத்தின் தூண்டுதலில் மிகப்பெரிய ஆன்மீகவாதியான மற்றொரு செல்வந்தர் டி.பி. இராமசாமிப்பிள்ளை என்பவர். இவரது ஆதரவினால்தான் மிகப்பெரிய மகானும் யோகியுமான காசிவாசி சிவானந்தர் நான்கு வேதங்களையும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தார்.

 

 

இதனுடன் நாயக்கர் தானே முன் நின்று ஸ்தாபித்து நடத்தி வந்த வேதாந்த வித்யா கால கட்டத்திலேயே ஒரு லட்ச ரூபாய் முதலீட்டில் நடைபெற்று வந்தது. இச்சபா ஆற்றிய மகத்தான பணி, தமிழிலிருந்த திருக்குறள், ஆழ்வார்களின் படைப்புகள் போன்றவற்றை தெலுங்கு மொழியில் மொழி பெயர்ப்பு செய்து நூல்களாக வெளியிட்டதுதான். மேலும் பல்வேறு இனத்தைச் சார்ந்த கல்விமான்களை ஆதரித்து பொருளுதவி செய்து போற்றி வந்தனர்.

 

நாயக்கரின் இவ்வளவு ஆன்மிகத் தேடலுக்கும் காரணமாக இருந்தவர் திருமலை நல்லான் சக்கரவர்த்தி ஸ்ரீனிவாச ஐயங்கார் என்பவர்தாம். அவரை இறைநெறியில் ஊக்குவித்துப் பல்வேறு ஆன்மீகக் காரியங்களில் ஈடுபட வைத்தவர். அவருக்கு இரண்டு வேதாந்தங்களையும் உபதேசித்தவர் சமஸ்ராயணம் செய்வித்தவர்.

 

வாரிசுகள் அற்ற தனது திரண்ட சொத்துக்களின் வருவாய் அனைத்தையுமே தான் உயிருடன் இருந்த போதே இவர் செலவிட்ட வழியின் மூலமாக, நாயக்கருக்கு மக்கள் மத்தியில் அப்போதே கொடை வள்ளல் பி.டி.லீ. என்ற பெயர் நிலைத்துவிட்டது. அப்போதைக்கு அவர் செய்த நற்காரியங்களின் பட்டியலை பார்ப்போம்.

 

நாயக்கர் தான் குடியிருந்த வேப்பேரி வீட்டின் அருகிலேயே ஏழை மாணவர்களுக்கான தொழிற்பயிற்சிப் பள்ளியை துவக்கினார். இதில் சாதி, மத, பேதமற்று மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். ஃபிட்டர், டர்னார், வெல்டல், எண்ணெய் பிழிதர், தச்சு, அச்சுக்கலை, எலட்ரீஷியன் போன்ற தொழிற்பாடங்களைத் துவக்கி கல்வி போதித்தார். இதற்கு 1886-ல் அரசு அங்கீகாரம் கிடைத்தது.

 

ஒரு அநாதை இல்லம் துவக்கி நடத்தினார். இதில் ஏழைகள், விதவைகள், முதியவர்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டதுடன், உடை மருத்துவம் மற்றும் தங்கும் வசதியும் செய்து கொடுக்கப்பட்டன. தகுதியானவர்களுக்கு கைத்தொழில் பயிற்சியும் கற்றுத் தரப்பட்டது.

 

வேப்பேரியில் இருந்த சாலைத் தெருவில் மருத்துவமனை தொடங்குவதற்காக ஒரு தனி வீட்டையும் அடமானத்திற்கு வாங்கிப் போட்டார். இந்த வீடு ஜேசுதாஸ் பிள்ளை மற்றும் வெங்கடாசாமி நாயுடு என்பவர்களுக்குச் சொந்தமானது. இவர்களால் வீட்டை திருப்ப இயலாததால் நல்ல காரியத்திற்க்காக வீடு பயன்படட்டுமே எனச் சொல்லி நாயக்கருக்கு வீட்டை தர சம்மதித்தனர்.

 

முற்றிலும் ஏழ்மை நிலையிலிருக்கும் சாதாரண ஜனங்கள் தங்கிச் சிகிச்சை பெற்றுச் செல்லும் நோக்கத்தோடு அந்த மருத்துவமனையை ஆரம்பிக்க எண்ணி இருந்த நாயக்கரின் மற்றொரு புதுமையான நோக்கம் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

மிகவும் செலவு பிடிப்பதும், இந்தியச் சூழ்நிலைக்கு ஒத்துவராததுமான ஆங்கில மருத்துவம் மட்டுமின்றி, இந்திய மண்ணின் சொந்த மருத்துவ முறைகளான சித்த, ஆயுர்வேத மருந்துவ முறைகளான இஸ்லாமியர்களின் யுனானி மருத்துவ முறையிலும் கூட பொது மக்களுக்குச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டுமென்பது நாயக்கரது விருப்பம். எனவே அங்கு பணிபுரியும் ஆங்கில மருத்துவ சேவகர்களுக்கும், செவிலியர்களுக்கும் மேற்கண்ட உள்ளூர் மருத்துவ முறைகளும் கூட கற்றுத்தரப்பட வேண்டுமென்று பெரிதும் விரும்பினார் நாயக்கர்.

அவர் மறைந்து 150 ஆண்டுகளுக்குப் பின்பு இன்றைக்கு அந்தக் கலவை மருத்துவம் நம் மண்ணிற்கு ஏற்ற வைத்திய முறை என்பதை உணர்ந்து அதை அமுலாக்க பல ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. இது நாயக்கரின் தொலை நோக்கான பார்வைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.

 

நாயக்கரது எண்ணப்படியே அந்தக் கட்டிடத்தில் அவரது மறைவிற்கு பிறகு சுமார் 40 வருடங்கள் கழித்து 01.09.1913இல் ஒரு மருத்துவமனை திறக்கப்பட்டது. இது நாயக்கரின் உயிலில் எழுதப்பட்டு விட்டபடியால் தான் அறக்கட்டளை நிர்வாகத்தினரால் அது துவங்கப்பட்டது. சி.பானு எனும் ஆயுர்வேத மருத்துவ நிபுணர் அதற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 26.04.1916ல் தான் முறைப்படியான மருத்துவமனை துவக்க விழா நடைபெற்றது.

 

கோபாலச்சந்தர் அப்போது புகழ் பெற்றிருந்த ஆயுர்வேத மருத்துவர். இவர் தன்னிடமிருந்த அவ்வளவு மருந்துகளையும் நாயக்கரின் மருத்துவமனைக்கு நன்கொடையாகக் கொடுத்து உதவினார். மருத்துவமனை மக்களுக்கு மகத்தான சேவை செய்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது. அநேகமாக இந்தியாவில் அனைத்து நவீன வசதிகளுடனும் திறக்கப்பட்ட முதல் ஆயுர்வேத மருத்துவமனை இதுவே ஆகும்.

 

இந்த மருத்துவமனையின் சேவையைப் பார்வையிட்ட அப்போதைய சென்னை மாநகராட்சி (1923) கவுன்சிலர்கள் குழு மருத்துவமனையின் சேவையை பாராட்டியதோடு, நாடெங்கும் இது போன்ற ஆயுர்வேத மருத்துவமனைகள் துவங்கலாம் என்று சிபாரிசும் செய்தது. அத்துடன் ஆண்டொன்றுகுக ஐந்நூறு ரூபாய் மானியத்தையும் வழங்கியது. அதையும் 1931-ம் ஆண்டு ஆயிரம் ரூபாயாக உயர்த்தியது.

 

நாயக்கர் இறந்த பிறகும் அவரது சேவை மனோபாவம் செயலுக்கு வந்ததுடன் நாட்டிற்கே முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. அவர் உயிருடன் இருந்த போது துவக்கி வைத்த மற்றொரு புண்ணிய காரியம், ஊவேரி புத்தேரியில் அமைத்த தர்ம சத்திரமாகும். அது இன்றளவும் அநாதைகளுக்கும், பக்தர்களுக்கும் உணவளித்துப் பாதுகாக்குமிடமாகத் தான் செயல்பட்டு வருகிறது என்பதை நினைக்கும் போது மனதில் வானளாவ உயர்ந்து நிற்கிறார் நாயக்கர்.

 

1857 – நாடெங்கும் பீடித்த கடும் வறட்சியின் கொடுமையால் பஞ்சம் தலைவிரித்தாடியது. உண்ண உணவும், உடுக்க உடையும் கிடைக்காமல் நாடே நாசகார பஞ்சத்தின் பிடியில் உலுக்கப்பட்டு மக்கள் சின்னா பின்னமாகிக் கொண்டிருந்தனர். நாயக்கரின் பரோகார மனோபாவத்துக்கு முன் பஞ்சம் என்ன செய்துவிட முடியும்?

 

 

தனது சென்னை பங்களாவிலும், சொந்த ஊரான ஊவேரி சத்திரத்திலும் கதவுகளை இருபத்தி நான்கு மணி நேரமும் அகலத் திறந்து வைத்தார். வந்து குவிந்தனர் ஆயிரமாயிரமாய் மக்கள். அனைவருக்கும் தினசரி உணவை சமைத்து வழங்கிக் கொண்டே இருந்தார். நாயக்கர் வாழ்ந்த பகுதியில் வாழ்ந்தவர்கள் மட்டுமல்ல, சுற்றியிருந்த கிராமங்களில் இருந்தெல்லாம் மக்கள் திரண்டு வந்து உணவை உண்டு நாயக்கரை மனசார வாழ்த்திச் சென்றார்கள்.

 

1857-ல் வந்த இந்த பஞ்சத்தை மிஞ்ச காலன் கொண்டு வந்த அடுத்த பஞ்சம் அகில இந்தியத்துக்கும் சேர்த்து வந்த ஆண்டு 1866. அதிலும் குறிப்பாக ஒரிசா பஞ்சம் உலக பிரசித்தம். சரி! இதில் என்ன நாயக்கருக்கு பங்கு? என்றுதானே கேட்க வருகின்றீர்கள். அதிலும் நாயக்கர் ஆற்றிய பணி பெரும் பணியாகும்.

 

இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேய அரசே ஒரிசா பஞ்சாயத்தைப் பார்த்து திகைத்துவிட்டது. சென்னை மாகாண அரசு கூட, ஒரிசா மக்களுக்கு உதவும் பொருட்டு சென்னை ஷெரிப்பின் தலைமையில் ஒரு நிவாரணக் குழுவை அமைத்தது. அந்தக் குழுவில் செங்கல்வராய நாயக்கரையும் ஒரு பிரதிநிதியாக அரசு நியமித்தது. அதன் மூலம் நாயக்கர் அப்போது ஆற்றிய பணி வரலாற்றில் மகத்தான இடம் பிடித்த ஒன்றாகியது.

 

தனது செல்வத்தை மட்டுமின்றி, தனது செல்வாக்கையும் பயன்படுத்திப் பெரும் செல்வந்தர்களை எல்லாம் கருணையோடு வாரி வழங்க செய்து, அரசாங்கமே வியக்கும் அளவு பெருந்தொகையும், துணிமணிகளையும், தானியங்களையும் திரட்டித் தந்தார் நாயக்கர்.

 

இதைக் கண்டு வியப்புற்ற அப்போதைய சென்னை கவர்னர் நேப்பியர் உதக மண்டலத்திலிருந்து, நாயக்கரின் சேவையை வெகுவாகப் பாராட்டிக் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் துயறுரும் தேசத்தின் சக பிரஜைகளின் நிவாரணத்திற்காக தாங்கள் சாதித்துள்ள செயல் மகத்தானது. இதற்காக நான் தெரிவிக்கும் நன்றியையும் மரியாதையையும் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

 

அநேகமாக அப்போது தான் நாயக்கருக்கு வயது நாற்பதுக்குட்பட்டுத்தான். ஆனால், அவரது புகழ் இச்செயலால் பிரிட்டிஷ் பாராளுமன்றம் வரை சென்றது. அவர் செல்வத்திலும், அரசாங்க செல்வாக்கிலும், வியாபாரத்திலும், வருமானத்திலும் கொடிகட்டிப் பறந்த கால கட்டம் அது. அநேகமாக தென்னிந்தியாவில் நாயக்கரைத் தெரியாத செல்வந்தர்கள், சீமான்கள் யாரும் இல்லை என்றே கூறலாம்.

 

இதே நாற்பதுக்குட்பட்ட வாலிப வயதிலேயே நாயக்கருக்கு மீண்டும் தனக்கு பின்பு யார் கேள்வி விஸ்வரூபம் எடுத்தது. எனவே உயில் ஒன்றை எழுதியே தீர வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் நாயக்கர்.

 

 

செல்வந்தர்களின் வாரிசு இருந்தாலும் இல்லாவிட்டாலும், தங்களது இறுதிக்கால அபிலாசைகள், உயிலாக எழுதிவிட்டு மறைவது வாடிக்கையானது. அது அவரவர் இறுதிக் காலத்தில், ஆனால் நாயக்கருக்கு உயில் எழுதியே தீர வேண்டுமென தீர்மானத்தது 37வது வயதிலே என்பது தான் கவனிக்கத்தக்கது.

 

தனக்கு பின்பு வரதராஜூலு தன்னைப் போலவே பெயரும், புகழுடன் விளங்கி தன்னுடைய துபாஷ் பதவியையும் அவனே வகிக்க வேண்டும். தர்ம காரியங்களில் ஈடுபட்டு நல்ல கல்விமானாக, பக்திமானாக வரவேண்டும். தனது நண்பர்களிடத்தில் அவனும் நட்பு, பாராட்டி, உறவினர்களிடம் உறவாடி நற்பெயர் பெற வேண்டும். தனது சொத்துக்களை மட்டுமின்றி, தனது அரண்மனை போன்ற வீடும் வரதராஜூலுக்கு சொந்தமாக வேண்டும்.

 

தான் அமரும் நாற்காலி உட்பட ஏனைய மரச் சாமான்கள் தங்க, வைர, வைடூரிய நகைகள் அனைத்தும் வரதராஜூலுக்குச் சேர வேண்டும். தான் அணியும் தங்கத்தால் செய்த வைரம் இழைத்த கோட்டுப் பொத்தான்களைக் கூட வரதராஜூலு தான் அணிய வேண்டும். சுருங்கச் சொன்னால் வரதராஜூலு வாழ்க்கை என்பது, தனது வாழ்க்கையின் மறுமதிப்பாக, தொடர்ச்சியாக இருக்க வேண்டும் என்று பெரிய அளவில் எதிர்பார்த்தார் நாயக்கர்.

 

ஆனால், வரதராஜூலுவின் வாழ்க்கை முறை அவரது எதிர்பார்ப்பிற்கு கொஞ்சமும் ஒத்துப் போகவில்லை. எனவே அவர் தனது அந்திம காலத்தை அவரே விரைந்து எதிர்பார்த்தார் என்பதுதான் ஆச்சரியம். அதற்கு வேண்டிய ஆயத்தங்களாக உயில் எழுதியதோடு அல்லாமல் குடும்பச் சொத்துக்களை அவரவருக்குப் பிரித்துக் கொடுப்பது என்று அனைத்து வேலைகளையும் நேர்த்தியுடன் செய்யத் துவங்கிவிட்டார்.

 

நாயக்கரின் முதல் மனைவியின் தந்தை வேலாயுதம் நாயக்கருக்கு எழுபது வயதுக்கு மேல் இருக்கும். நாற்பது வயதுக்குட்பட்ட நாயக்கரோ, தனது மாமனாருக்கு முன்பு தான் மரிக்கப் போவதை உறுதி செய்து அவருக்கு மாதம் ஐந்து ரூபாய் வரை உதவித் தொகை வழங்க சொல்லியும், கடைசிவரை தனது வளர்ப்பு மகனான வரதராஜூலுவுடன் இருந்து குடும்பத்திலும், வியாபாரத்திலும் ஒத்துழைக்க வேண்டுமென்றும் குறிப்பிடடார் நாயக்கர்.

 

ஆன்மீகத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்ட மகான்களுக்கும், சித்தர்களுக்கும் மட்டுமே தமது அந்திம காலத்தைப் பற்றிய தீர்க்க தரிசன செய்தி தெரியவரும் என சொல்வதுண்டு. நாயக்கருக்கு தெரிந்தே இருந்தது. ஒருவேளை தெரியாமல் போயிருக்குமாயின் புகழ் பெற்ற செங்கல்வராய நாயக்கரின் உயில் என்ற ஒன்றும் எழுதப்படாமலே போயிக்கும். அவரது சொத்துக்களும், செல்வங்களும், அப்போதே என்னவாகி இருக்குமென்பதையும் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

 

நாயக்கர் அனுதினமும் வேண்டி மகிழும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி துணை என்ற நாமமிட்டே தனது உயிலைத் தொடங்குகிறார். நான் சார்ந்த மதத்தின் கோட்பாடுகளைக் கடைபிடித்து, அந்த ஸ்ரீபார்த்தசாரதியே அடியேனை ஏற்றுக் கொள்ளுமளவு ஒளிமிக்க வாழ்க்கையையும் வழங்கிய எல்லாம் வல்ல இறைவனை வணங்கி இந்த உயிலை எழுதுகிறேன் என்று துவங்குகிறது புகழ் பெற்ற செங்கல்வராய நாயக்கரது உயில்.

 

பிரதான உயில் எழுதப்பட்ட நாள் 1870 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 4 ஆம் நாள். அப்போது நாயக்கருக்கு வயது 41. தமிழில் எழுதப்பட்டு சி. சுப்பராயலு ஐயர் என்னும் உதவி மொழி பெயர்ப்பாளரால் மொழி பெயர்க்கப்பட்டு, எம்.டி. கோபாலச்சாரி என்னும் உயர்நீதி மன்ற மொழி பெயர்ப்பாளராலும் சரிபார்க்கப்பட்டு, அப்போதைக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்ட அந்த உயில் சென்னை ஓரியண்டல் வங்கி லாக்கரில் பத்திரமாக டெபாசிட் செய்யப்பட்டது.

 

ஒருமுறை ஒருவர் தனது உறவுமுறை, சொத்துக்கள் போன்றவற்றிற்காக உயிலை எழுதிவிட்டு அவர் இறப்பதற்குள் அதில் ஏதும் மாற்றங்களை உருவாக்க எண்ணினால், அதற்காக தனியே துணை உயில் எழுத வேண்டுமே தவிர பிரதான உயிலில் அடித்தல், திருத்தல் மாற்றங்கள் செய்ய இயலாது அல்லது முற்றிலும் புதிதாக ஒரு உயிலை எழுதி புதிதாகப் பத்திரப் பதிவு செய்யும் போது, முதல் உயில் தானே காலாவதியாகிவிடும். எனவே தனியே எழுதப்படும் துணை உயிலுக்கு கடிசில் (Codicil) என்று பெயர் வைக்கப்பட்டிருந்தது.

 

 

நாயக்கர் 1870-ம் ஆண்டு எழுதி, ஓரியண்டல் வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருந்த பிரதான உயிலுக்கு 1873-ம் ஆண்டு மே மாதம் 13ம் நாள் ஒரு கடிசில் எழுதி பதிவு செய்துள்ளார். இதை நான் இங்கு குறிப்பிடுவதற்கு காரணம் இந்த மூன்று வருட இடைவெளியில் தனது உறவினர்கள் பற்றி நாயக்கர் மனதில் ஏற்பட்ட பல்வேறு பிரதிபலிப்புகளைக் கடிசில் வாயிலாக நாமும் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காகத்தான்.

 

பிரதான உயில் எழுதிய போது ஐந்து ரூபாய் பணத்தைக் கொண்டு எப்படியான அத்தியாவசிய வாழ்க்கைத் தேவைகளை நிறைவு செய்து கொள்ளலாம் என்பது போன்ற யதார்த்தமான வாழ்க்கை நிலவரமே தெரியாத செல்வம் கொழித்த வாழ்க்கையில் இருந்திருக்கிறார் நாயக்கர்.

 

அதன்பிறகு அவர் ஏதோ ஒரு நேரத்தில் பணமின்றிச் சிக்கலில் அகப்பட்டுத் தவித்த போதுதான் பணம் என்றால் என்ன? அதன் உண்மையான மதிப்புகள் எவ்வளவு என்ற விவரமெல்லாம் அவருக்கு தெளிவு பெற ஆரம்பித்துள்ளது. அதனால்தான், தான் எழுதிய உயிலுக்குத் தானே ஒரு கடிசிலும் எழுதி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது நாயக்கருக்கு.

 

அப்போது சென்னை பத்திரப் பதிவு ரெஜிஸ்ட்டராக இருந்தவர் ஃபெர்சண்ட என்னும் ஆங்கிலேய அதிகாரி. அவர் முன்பு ஒப்படைக்கப்பட்ட கடிசிலில் சாட்சி கையொப்பமிட்டவர்கள் சிங்காரவேலு முதலியார் என்பவரும் எம். நாராயணசாமி  நாயுடு என்பவரும்தான். இந்த தமிழ் கடிசிலையும் மொழிபெயர்ப்பு செய்தது அதே சுப்புராயலு ஐயர்தான்.

 

மே 13, 1873 அன்று இந்தக் கடிசில் பத்திரப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எண். 12, புத்தகம். 2, வால்யூம் 3, 261 முதல் 268 வரையிலான எட்டு பக்கங்கள்.

 

இவரது பிரதான உயிலில் ஒவ்வொரு உறவு முறையினரின் முக்கியத்துவம். அவர்களுக்குள்ளான உறவு, தகுதி, வாழ்க்கை நிலவரத்துக்கு ஏற்ப கொடுக்க வேண்டிய மாத உதவித் தொகை போன்றவற்றை தனித்தனியே குறிப்பிட்டிருக்கிறார். தனது வரவு, செலவு – இருப்பு, அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் போன்ற விவரங்களுக்கு தனித்தனியே மெமோரண்டங்களையும் இணைத்துள்ளார்.

 

உயில் எழுதப்பட்ட தினத்திலிருந்து அவர் உயிர் வாழும் கால கட்டம் வரை அவரது வருமானத்தில் ஏற்படும் லாப நட்ட கணக்குகளும் அதே உயில் சொத்தில் சேர்த்துக் கழித்துக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதே என்பதை முக்கியமாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

உயில்கள் எழுதும் முறைப்படி, அவர் உயிருடன் இருக்கும் காலத்தில் அதே உயிலில் அனைத்து ஷரத்துக்களையும் நிராகரித்து விட்டு முற்றிலும் புதிய உயில் தயாரிக்கத் தனக்கு அதிகாரம் உண்டு என்பதைக் கூறியே எழுத ஆரம்பிக்கிறார் நாயக்கர்.

 

நாயக்கர் முதலில் குறிப்பிடுவது தனது மரணம் பற்றிய விஷயம் தான். அதாவது தான் மரணிக்க நேரும் போது, தனது சவ அடக்கத்திற்காக, ஆயிரம் ரூபாய் முதல் ஆயிரத்து ஐந்நூறு ரூபாய் வரை, தனது சொத்துக்களை நிர்வகிக்கும் அறங்காவலர்கள் செலவிட வேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றார்.

 

அவ்வாறு செலவழிக்கப்படும் தொகை கூட, பிரதானமாகச் சவ அடக்கத்திற்கும் (அதாவது எரித்தல்) அதன் பிறகு நடைபெறும் திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி கோவிலில் தளிகையிடுதல், நெய் விளக்கு ஏற்றுதல், அர்ச்சனை செய்தல் ஆகியவற்றிற்கும் செலவிடுதல் வேண்டும் என்பதாகும்.

 

அடுத்து, தனக்குப் பின்பு இந்த உயிலின் தனி இணைப்பில் (மெமோரண்டம்) குறிப்பிடப்பட்டுள்ள சொத்துக்கள் யாவற்றையும் தர்ம சிந்தனையுள்ள மாமனிதர் (Benevolent man) மா.ரா.ரா. ஸ்ரீபச்சையப்ப முதலியாரின் அறக்கட்டளையை நிர்வகிக்கும் நிர்வாகத்தினரே தமது நிர்வாகத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் பிரதான விஷயம்.

 

அவ்வாறு தனது உயிலில் காணும் சொத்துக்களையும் சேர்த்து நிர்வகிக்கும் பச்சையப்பர் அறக்கட்டளையானது, எனது சொந்த ஜாதியான வன்னிய இனத்திலிருந்து நன்கு கல்வி கற்ற, சமூக அந்தஸ்து பெற்ற, முக்கியப் பிரமுகர்களையும் அந்த அறக்கட்டளையில் உறுப்பினர்களாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுமாகும்.

 

இவ்வாறு ஒருங்கிணைத்து அமைக்கப்படும் அறங்காவலர் குழு, அவரது உயிலில் கண்ட சொத்துக்களை உயிலில் கூறியபடி  நிர்வகித்து வரவேண்டும். அப்படி மேற்கூறிய பச்சையப்பர் முதலியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தனது உயிலில் கண்டபடி சொத்துக்களை நிர்வகிக்க முன்வராத பட்சத்தில், நீதி மன்றத்தின் விருப்பப்படி தனது வன்னிய சமூகத்திலிருந்து நியமிக்கப்படும் நால்வருடன், கோர்ட் பொருத்தமென்று விரும்பும் மேலும் சில நியமனதாரர்களைக் கொண்ட அறங்காவலர் குழுவின் நிர்வாகத்தின் கீழ் உயிலில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நிறைவேற்றி வரப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.

 

செங்கல்வராய நாயக்கர் தமது இறுதிக் காலத்தில் தமக்குத்தாமே இவ்வளவு என நிர்ணயித்துக் கொண்ட மாத ஊதியத்தில் தான் வாழ்ந்து வந்தார் என்பதை எழுதும் போது எனது கண் கலங்குகிறது.

 

சொந்தங்களே! எப்படியொரு இனமாக நாம் இருந்திருக்க வேண்டும். என்னவொரு உயில்! ‘பாரெங்கும் தேடினாலும் பார் இது போன்ற மனிதனை’ என்ற எவரேனும் சுட்டிக்காட்ட முடியாது என்பதை மீண்டும் சவாலாகவே இந்நேரத்தில் பதிவு செய்கிறேன்.

 

தான் இறக்கும் வரை தனது சொத்துக்களை தன் இஷ்டத்திற்கு பயன்படுத்தி விட்டுத் தனக்குப் பின்பு மிச்சம் மீதமாகும் உடைமைகளை மட்டுமே அறக்கட்டளைக்குச் சேர வேண்டும் என்ற பெரும் பணக்காரர்களின் தர்ம சிந்தனைப்படி நாயக்கரது உயில் அமையவில்லை என்பதை உதாரணமாக காட்டுகிறேன்.

 

அதாவது நமது உயில் எழுதப்பட்ட காலத்திலிருந்து (1870) பொதுக் காரியங்களுக்காக ஒதுக்கப்படும் அவ்வளவு சொத்துக்களும், இதுவரையிலான கணக்கு வழக்குகளும், இனி அறக்கட்டளையின் கணக்கிலேயே சேர்க்கப்படும். அதை நிர்வகிக்கும் போது ஏற்படும் லாப நஷ்டங்களும் அதன் கணக்கிலேயே சேர்க்கப்படும் என்றே உயிலில் குறிப்பிடுகின்றார்.

 

 

எதிர்காலத்தில் தமது சொத்துக்களில் வருமானத்தைக் கொண்டு செய்யத் தக்கதாகத் தமது உயிலில் குறிப்பிடும் முக்கிய விஷங்கள் எட்டு மட்டுமே.

 

ஏழை மாணவர்களுக்கான இலவச மற்றும் உறைவிடத்துடன் கூடிய தொழிற்கல்விப் பள்ளி, அனாதைகளுக்கான விடுதி, இலவச மருத்துவமனை, துயரத்தில் வாடும் குழந்தைகள் மற்றும் ஆதரவற்றப் பெண்களுக்கு மாதாந்திர உதவித் தொகை, ஊவேரி அன்னச் சத்திரி ஆரம்பப்பள்ளி பரிபாலனம், திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி மூலவருக்கும், தாயார் அம்மைக்கும் தினசரி பூஜைக்கு வேண்டிய பூக்களும், மாலையும் அனுப்புதல், ஸ்ரீபெரும்புதூர் உடையவருக்குத் தினசரி பூஜைக்குத் தேவைப்படும் சந்தனத்தை அனுப்பி வைத்தல் ஆகிய இந்த எட்டு விஷயங்களே பிரதானமாய் அமைந்துள்ளன.

 

இவற்றில் கடைசியாகக் கூறிய ஆன்மீக விஷயங்கள் அதிமுக்கியம் என அவரே குறிப்பிடுகிறார். இவற்றைத் தவிர அவரது உயில்படி பெருந்தொகையாகச் செலவிடக் கூறி இருக்கும் விஷயங்கள் நான்கு.

 

அவரது மறைவு அவரது மனைவியின் மறைவு ஆகியவற்றின் ஈமச் சடங்குகளுக்காக தலா ரூபாய் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறும், தனது வளர்ப்பு மகன் வரதராஜூலுவின் திருமண செலவிற்காக ஆயிரம் ரூபாயும், அவரது மனைவியாக வரப்போகும் மணப்பெண்ணிற்குத் தங்க நகைகள் வாங்க ஆயிரம் ரூபாயும் செலவிட வேண்டும் என்று கூறி இருப்பது மட்டுமே பெருந்தொகைகள்.

 

அதே போல அவர் தங்க நகைகளும், பொருட்களும், அதிகப்படியாக உதவித் தொகை வழங்க வேண்டுமென்றும் தமது சிறிய பங்களாவில் அவரும், அவரது வம்சா வழிகளுமே குடியிருக்க வேண்டுமென்றும் சொல்வது வளர்ப்பு மகன் வரதராஜூலுவுக்கு மட்டுமே.

 

தனது வளர்ப்பு மகன் வரதராஜூலுவுக்கு வழங்கிய சொத்துக்கள் தவிர அறக்கட்டளைக்கென்று செங்கல்வராய நாயக்கர் எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ள சொத்துக்களின் அப்போதைய மதிப்பு தோராயமாக ஆறு லட்ச ரூபாய் (சரியாக 5 லட்சத்து 69 ஆயிரத்து 547 ரூபாய்., 12 அணா, 10 தம்படி) இன்றைய மதிப்பு 600 கோடிக்கு மேல் இருக்குமென்பது நிதர்சனம்.

 

அண்ணாசாலையில் உள்ள பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் மாளிகையின் பல மாடிக் கட்டிடம் உயில் மதிப்பின்படி 14 ஆயிரம் மட்டுமே. இன்றைக்கு எத்தனை கோடி பெறும் என்பதை வாசிக்கும் சொந்தங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.

 

 

நாயக்கர் கொடுத்த கடன் பட்டியல் நீளமானது. அந்தக் காலத்திலேயே அவருக்கு வந்து சேர வேண்டிய வெளிக்கடன் ரூபாய் நான்கு லட்சத்து 12 ஆயிரத்து 642 ஆகும். இது போக அறக்கட்டளைக்காக அவரால் எழுது வைக்கப்பட்ட அசையா சொத்துக்களின் அதாவது நிலம், வீடு போன்றவைகளின் பட்டியலும் நீளமானது.

 

அதே போல் வன்னியர்களுக்கான கல்வி உதவியும், இனத்தவர் மீதான நம்பிக்கையும் அவரது உயிலில் மேலோங்கி நிற்கிறது. சொந்தங்களே! என்ன கம்பீரமான வாழ்க்கை, தொழில், புகழ், நட்பு, கல்வி, ஆன்மீகம், கொடை, உறவு, பதவி, பழக்கம் என அனைத்திலும் நம் நெஞ்சங்களில் நிறைந்து  வானளாவ உயர்ந்து நிற்கும் அந்த மனிதர் குல மாணிக்கம் தமது தீர்க்க தரிசனமான உயில் எழுத நேர்ந்த எண்ணப்படி 27.10.1874ல் இப்பூலகை விட்டு மறைந்தார்.

 

‘நல்லன எல்லாம் தரும்’ – மூத்தோர் முதுமொழி நல்ல சிந்தனைகளும், நல்லது நடக்க வேண்டுமென நினைப்பர்வர்களுக்கும் அந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மட்டுமல்ல எத்துணை கடவுள்கள் இருந்தாலும் அனைவருமே அப்படி நல்லெண்ணம் கொண்டோரின் புகழுக்கு மறைவைத் தருவதில்லை. இல்லையேல் 150 ஆண்டுகளுக்கு பின்பு ஒரு மனிதனை வாழ்வாங்கு வாழ்ந்தார் என்று சொல்லி ஒரு இனத்தையே அவர் வழி நடக்கச் சொல்வதும், அவர் புகழ் ஓங்க பாடுபட நாம் சொல்வதும் நிகழுமா என்ன?

 

அது சாத்தியமே அல்ல. செங்கல்வராய நாயக்கரின் பரந்த உள்ளமும், கள்ளமில்லா கடவுள் பக்தியும், தொலை நோக்கான சமூக சிந்தனையுமே இன்றளவும் அவர் பெயர் புகழ்பாடுவதற்கு காரணமாகும். இதை காலம் தாமதித்து நம் இன மக்களிடம் கொண்டு செல்கிறோமே என்ற கவலையும், வருத்தமும் எனக்கு இருக்கிறது.

 

கணக்கிலடங்கா சொத்துக்களை மட்டுமல்ல, எண்ணிலடங்கா நல்ல மனிதர்களையும், தியாக சீலமான தலைவர்களையும் மறந்ததுதான் இந்த இனத்துக்கு பெரும் கேடு. தமிழகத்தில் மிகப் பெரும்பான்மையாய் வாழ்கின்ற ஒரு சமூகத்திற்கு அம்மாநிலத்திற்கு தலைமை தாங்கும் சக்தி உடைய ஒரு தலைவன் வரவில்லை என்றால் என்ன பொருள்!

 

நீங்கள் மதிக்காத எதுவும் உங்களை தேடி வராது என்பதை நம் சொந்தங்கள் இனியாவது உணரவேண்டும். நமக்காக நம் சந்ததிகளுக்காக வாழ்ந்து மறைந்தவர்களை நினைவுபடுத்தி வணங்குவது பெரும் போற்றதலுக்குரிய விஷயமாக நம் மக்கள் எண்ணிச் செயல்பட வேண்டும்.

 

வன்னிய சமூகத்தின் விடியலுக்காக செங்கல்வராய நாயக்கர் சிந்திவிட்டுப் போன உதிரம் ஒரு நாளும் மறையாது. மறையவும் விடமாட்டோம். நமது வன்னியர் கூட்டமைப்பு நாயக்கரின் உதிரத்தின் மீது ஆணையிட்டுச் சொல்கிறது. செங்கல்வராய நாயக்கரின் நோக்கம் நிறைவேற நிச்சயம் பாடுபடுவோம்! நாயக்கரின் புகழ் ஓங்குக! அவர் தம் கல்வி, ஆன்மீக, மருத்துவ, தானதர்மப் பணி மென்மேலும் வளர்க! என நெஞ்சார வேண்டி நாயக்கருக்கு வீர வணக்கம் செலுத்தி நிறைவு செய்கிறேன்.

 

  • ••

 

நாயக்கரின் வன்னியர் நலம்!

 

வன்னியர் குலத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு மாதந்தோறும் நூறு ரூபாய் வரை கல்வி உதவித் தொகை வழங்கப்பட வேண்டம். உறவினர்களில் அக்காலத்தைய பட்டப்படிப்பான எஃப்.ஏ. படிக்கும் மாணவர்கள் இருந்தால் அவர்களுக்கு இருநூறு ரூபாயும், பி.ஏ. முடித்து வழக்கறிஞராகப் படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாயும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் நாயக்கர். மேலும் ஐ.எஃப்.எஸ்., ஐ.சி.எஸ். போன்ற மிக உயர்படிப்பில் சேர்பவர்களுக்கோ, நல்ல அரசாங்க உத்தியோகத்தில் சேரும் வாய்ப்பிருந்தும் பணத்தேவை உள்ள உறவின் முறையினருக்கோ ஐயாயிரம் வரை உதவித் தொகை கொடுத்து விட்டு பிற்காலத்தில் வசூலித்துக் கொள்ளலாம் என குறிப்பிட்டுள்ளார்.

 

  • ••

 

 

 

அறக்கட்டளையும், வழக்கும்!

 

செங்கல்வராய நாயக்கருக்கு மரணம் தனக்கு நெருக்கமாக இருக்கிறது என்பதை தீர்க்க தரிசனமாக உணர்ந்த நிலையில், உயிலில் சொத்தை ஒரு அறக்கட்டளையை நடத்துபவர்களிடம் ஒப்படைக்கிறோமே! அதில் ஏதாவது தவறு ஏற்படுமே என்பது தெரிய வந்திருக்காதா என்ன? நாயக்கர் மனதில் நினைத்தவாறே நடந்தது.

 

அப்படி மேற்கூறிய பச்சையப்பர் முதலியார் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தனது உயிலில் கண்டபடி சொத்துக்களை நிர்வகிக்க முன் வராத பட்சத்தில், நீதிமன்றத்தின் விருப்பப்படி தனது வன்னிய சமூகத்திலிருந்து நியமிக்கப்படும் நால்வருடன், கோர்ட் பொருத்தமென்று விரும்பும் மேலும் சில நியமனதாரர்களைக் கொண்ட அறங்காவலர் குழுவின் நிர்வாகத்தின் கீழ், அவரது உயிலில் கூறப்பட்ட விஷயங்கள் நிறைவேற்றி வரப்பட வேண்டும் என்று எழுதி வைத்தார்.

 

நாயக்கரின் உயில்படி 03.02.1876ம் தேதி பச்சையப்பர் அறக்கட்டளை நாயக்கரின் அறக்கட்டளையை தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது. அன்றுமுதல் 22.12.1980-ம் நாள் அரசு தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டது வரை ஒரு நூறாண்டுகளில் முன்னேற்றத்திற்காக எதுவுமே செய்யவில்லை.

 

பச்சையப்பர் அறக்கட்டளையின் மோசடியை உணர்ந்த செங்கல்வராய நாயக்கரின் வாரிசுதாரர்களும் வரதராஜூலு நாயக்கரின் மகனுமான எல்.வி. செங்கல்வராய நாயக்கரும், அருணாச்சல நாயக்கர் பேரனும் சீனிவாச நாயக்கரின் இளைய மகனுமான எல்.எஸ். நடேசபிள்ளை என்பவரும் கோர்ட்டின் உதவியை நாடினர்.

 

அன்று ஆரம்பித்த நீதி கேட்கும் படலம் 2002-ல் தான் முடிவுக்கு வந்தது. வன்னியர் அதிகளவில் இடம் பெற்ற குழுவின் தலைமையில் சர்வ சுதந்திரமாய் செங்கல்வராய நாயக்கரின் அறக்கட்டளை செயல்ட ஆரம்பித்தது. நாயக்கரின் எண்ணம் அறக்கட்டளையை சுற்றி வருவதால் எல்லாம் நல்லதாகவே நடக்குமென்பது நம்பிக்கை.

 

 

 

 

நாயக்கரின் அசையும், அசையா சொத்துக்களின் பட்டியல்!

 

அறக்கட்டளைக்காக நாயக்கரால் எழுதி வைக்கப்பட்ட அசையா சொத்துக்களும், அசையும் சொத்துக்களும் நிறைந்த பட்டியலை படித்துப் பாருங்கள். எவ்வளவு தூரம் நாம் ஏமாற்றப்பட்டாலும் சுயமாக உழைத்து சம்பாதித்த சொத்து என்பதால் பலரால் அபகரிக்கப்பட்டாலும் இன்றும் அவரது சொத்துக்கள் மிஞ்சி இருப்பது அதிசயம்தானே. முதலில் அசையா சொத்துக்களின் பட்டியல் இதோ!

 

  1. டெலிகிராப் அலுவலக வீராச்சாமி பிள்ளை வீடும், கோச் வண்டி இல்லமும்

7,000.00

  1. சந்திரகிரி பாலகிருஷ்ணன் நாயுடுவின் மூன்று வீடுகள்

4,300.00

  1. மவுண்ட் ரோட்டில் (அண்ணாசாலை)யில் உள்ள பரோவாஸ் வீடு (இன்றைய அறக்கட்டளையின் பல மாடிக்கட்டிடம்)

14,000.00

  1. சர்ஃப்யூராஸ் உன்னிசா பேகம் வீடு

500.00

  1. ஸ்டீமர் ஹவுஸ் (கஹன்ஸ் வீடு)

36,500.00

  1. பெரிய தோட்டமும், பங்களாவும் (காலின்ஸ் ரோடு)

10,000.00

  1. சிறிய தோட்டமும், பங்களாவும் (காலின்ஸ் ரோடு)

4,000.00

  1. அச்சகம்

1,500.00

  1. பெங்களூரில் வாங்கப்பட்டுள்ள பங்களாவும் தோட்டமும்

7,000.00

  1. ராயப்பேட்டை, மைலாப்பூர் கடை வீதிகள் மொத்தமும் (இந்த சொத்து சகோதரர் மதுரை நாயக்கரால் வாங்கப்பட்டது. இவை எந்தக் கடை வீதிகள் என்பதற்கு சான்று எதுவும் இல்லை. அநேகமாக ஹாமில்டன் வாராவதி கடைவீதியும் மந்தைவெளி போஸ்ட் ஆபீஸ் கடை வீதி இடங்களாகவும் இருக்க வேண்டும். காலப்போக்கில் இந்த சொத்துக்கள் பலராலும் அனுபவ பாத்தியத்தின் அடிப்படையில் பாராதீனம் ஆகியுள்ளன.)

9,000.00

  1. பளு ஊர் அருகில் பங்கார் பள்ளே என்னும் கிராமத்தில் வாங்கப்பட்ட ஒன்றே அரைக்கால் காணி நிலம்

100.00

  1. ஜெனரல் காலின்ஸ் ரோட்டில் உள்ள இரண்டு கிரவுண்டு நிலம்

100.00

  1. நாயக்கர் வசித்த காலின்ஸ் ரோடு பெரிய பங்களாவிற்கு வடக்கேயும் சிறிய பங்களாவிற்கு மேற்கேயும் உள்ள பூந்தோட்டம் (இது பார்த்தசாரதி கோவிலுக்கு வேண்டி கிருஷ்ணசாமி முதலியாரிடமிருந்து வாங்கப்பட்டது…)

1,500.00

  1. ஊவேரி கிராமத்தில் குத்தகைக்காக கொடுக்கப்பட்டுள்ள தொகை…

700.00

  1. கோவிந்தவாடி கொணவரியனிடமிருந்து வாங்கப்பட்ட ஒரு காணி நிலம்

100.00

  1. ஊவேரி புத்தேரி கிராமத்திற்கு மேற்கே நீர் வழிப் பாதைக்காக வரதப்பிள்ளையிடமிருந்தும் மற்றவர்களிடமிருந்தும் வாங்கப்பட்ட நிலங்கள்

70.00

  1. ஊவேரி சத்திரத்திற்கு சுந்தர கிராமணியிடமிருந்து வாங்கப்பட்ட 2 காணி நிலம்

100.00

  1. ஊவேரி கிராமத்தில் சுந்தர கிராமணியிடமிருந்து வாங்கப்பட்ட நிலம்

150.00

  1. ஏகாம்பர நாயக்கருக்கு கொடுக்கப்பட்ட பணத்திற்காக பெறப்பட்ட நிலம்…

300.00

  1. ஊவேரி கிராமத்திற்கு அருகில் உள்ள 9 காணி மாந்தோப்புடன் மதிப்பு…

2,000.00

ஆகியவை இதைத் தவிர நாயக்கராலேயே மதிப்பு குறிப்பிடாமல் எழுதி வைக்கப்பட்டுள்ள சொத்துக்களின் பட்டியல் கீழே தரப்படுகிறது.

 

வடக்கு கடற்கரை ரோட்டில் உள்ள 8 கிரவுண்டு நிலம்.

 

தங்கசாலையில் உள்ள ஒரு கிரவுண்ட் நிலமும், பங்களாவும்…

 

ராயப்பேட்டை ஹைரோட்டில் 1 முதல் 27 வரை எண்ணுள்ள இடங்களில் உள்ள மொத்தம் 70 கிரவுண்டு நிலங்கள்…

 

கவுடியா மடம் ரோட்டில் உள்ள கொலைகாரன் பேட்டை சந்தில் உள்ள 10 கிரவுண்ட் நிலமும், பங்களாவும்…

 

ரண்டால்ஸ் வேப்பேரி ரோட்டில் உள்ள 90 கிரவுண்ட் நிலம்…

 

வேப்பேரி ஜெனரல் காலின்ஸ் ரோட்டில் உள்ள 40 கிரவுண்ட் நிலம்…

 

மேடக்ஸ் தெருவில் பங்களாவுடன் கூடிய நிலம் 90 கிரவுண்ட்…

 

ஊவேரி சத்திரத்திற்குச் சொந்தமான 50 ஏக்கர் நிலம்….

 

போன்றவை முக்கியமானவை…

 

 

நாயக்கரின் ஏனைய அசையும் சொத்துக்களின் பட்டியல்.

 

  1. உயில் எழுதும் போது நாயக்கருக்கு சொந்தமாக வங்கியில் இருந்த பணம் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகம்.

 

  1. விலை மதிப்பற்ற வைர கடுக்கண் 1 ஜோடி

 

  1. தங்க காப்பு கொலுசு 1 ஜோடி

 

  1. தங்க காப்பு 1 ஜோடி
  2. வைர மோதிரம் 2 ஜோடி

 

  1. வைடூரிய கடுக்கண் 1 ஜோடி

 

  1. வைர வைடூரியங்கள் இழைத்த தோள்பட்டை நகை

1 ஜோடி

 

  1. வைடூரிய கம்மல் 1 ஜோடி

 

போன்றவை…

 

 

 

  • ••

 

 

 

 

 

 

 

பி.டி.லீ. பொறியியல் கல்லூரியும்,

இன்றைய அறக்கட்டளையும்!

 

வள்ளல் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கர் அறக்கட்டளை கடந்த 137 ஆண்டுகளாக செயல்படுகிறது. ஏழை எளிய மற்றும் அநாதை மக்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை உருவாக்கி சமுதாயத்தில் கல்வி புரட்சியை உருவாக்கி இருக்கிறது.

 

தற்போது அறக்கட்டளையின் தலைவராக மாண்புமிகு நீதியரசர் தங்கவேல், உயர்நீதிமன்றம் (ஓய்வு) அவர்களும், அறங்காவலர்களாக திரு. தசரதன் ஐ.ஏ.எஸ்.  (ஓய்வு), டாக்டர் பிச்சை, திரு. ஏ.ஆர். இராமகிருஷ்ணன், டாக்டர் முரளிதரன், டாக்டர் குணசேகரன், பேராசிரியர் ஜெயபாலன், திரு. கதிர்வேல், திரு. அருள் போன்றோரும் செயலாளராக ஓய்வு பெற்ற நீதியரசர் சண்முகம் அவர்களும் பொறுப்பு வகித்து திறம்பட செயலாற்றி வருகிறார்கள்.

 

இந்த அறக்கட்டளையின் கீழ் காஞ்சிபுரத்தை அடுத்த நாயக்கரின் சொந்த ஊரான ஊவேரி கிராமத்தில் வள்ளல் பி.டி.லீ. செங்கல்வராய நாய்க்கர் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அரசு நிர்ணயித்த கட்டணத்தையே கல்வி கட்டணமாக பெறும் இக்கல்லூரியின் முதல்வராக திரு. சுந்தர் அவர்கள் வெகு சிறப்பாக செயலாற்றி வருகிறார். அனைத்து மக்களும் இக்கல்லூரியை பயன்படுத்திக் கொள்ள வேண்டுகிறோம்.

 

 

 

 

  • * ••• *

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu