@Copyright – C.N.Ramamurthy M.Com, B.L. Founder President, Vanniyar Kootamaippu.
e-Book Publication – E-edition Version – 1 – 2021
Publisher:
Kshatriyas Documentary
For Contacts:
Kshatriyas Documentary
# 7, First Main Road,
Kamdar Nagar, Nungambakkam,
Chennai – 600 034
Email – info@vanniyarkootamaippu.com
+91 9941311788
URL: www.vanniyarkootamaippu.com
தமிழகத்தின் சர்தார்
பு.ம. ஆதிகேசவலு நாயகர்
சரிதம்
அன்பார்ந்த சொந்தங்களே!
நமது வன்னிய சமுதாயத்தில் உதித்து சமுதாயப் பணியாற்றிய பெரியோர்களின் பலரது வாழ்க்கையை நாம் தொடர்ந்து எழுதி வருவதை அறிவீர்கள். அதனை படிக்கும் நம் மக்கள் கசிந்திருகி பேசும் போது எனது நெஞ்சம் நெக்குறுகுகிறது. இதோ! அந்த வரிசையில் இந்திய சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு தனது வாழ்க்கையையும், செல்வத்தையும் இழந்து தியாகியான சர்தார் பு.ம. ஆதிகேசவலு நாயகரின் வாழ்க்கைச் சரித்திரம் இப்போது உங்கள் கைகளில் தவழ்கிறது. சர்தாரை பற்றி முழுமையாக எழுதுவதற்கான புத்தகங்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. அவரைப் பற்றி எழுதப்பட்ட பத்திரிகை செய்திகளும், சிறிய புத்தகங்களில் இருக்கும் கிடைக்கப்பெற்ற தகவல்களே இங்கு அவரது சரித்திரமாக இடம் பெறுகிறது.
சிறைச்சாலையில் சிரிப்பொலி!
தொடர்ந்து சிரிப்பொலி கேட்கிறது!
எப்படி தெரியுமா?
சிம்மக் குரலால் சீறும் மேங்களின் இடி போல!
எங்கு தெரியுமா!
சித்திரவதைக்கு சிறப்புப் பெற்ற சீமைக்காரன் சிறைச்சாலையிலே!
சிறைச்சாலை என்றால் சிந்திய மூக்கும், சிணுங்கும் முனங்கல்களும் தான் சின்னம் என்பது சிறைச்சாலையின் இலக்கணம்.
ஆனால் அங்கே ஒரு சிரிப்பொலி? இல்லை! இல்லை! சிரிப்பலை?
அதுதான் ‘சர்தார்’ பு.ம. ஆதிகேசவலு நாயக்கரின் சிரிப்பொலி.
ஆம்! இப்படித்தான் அவரை ‘திருச்சி சிறையினிலே’! என்ற நூலில் அதன் ஆசிரியர் திரு. எஸ்.எஸ். கரையாளார் எம்.எல்.ஏ. (வெளியிட்ட நாள் 01.06.1941) 245 கைதிகளைப் பற்றி குறிப்பிட்டு அதில் சர்தாரை இவ்வாறு அறிமுகப்படுத்துகிறார். அந்த நூலில் குறிப்பிட்டுள்ள சிறையிலிருந்தவர்கள் பட்டியலே பறை சாற்றுகிறது. சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய பிரமுகர்களை.
அந்நூலில் சர்தாரைப் பற்றிய விளக்கத்தை இங்கு பார்ப்போம்.
எண் : 1, ஏகப்ப நாயக்கர் தெரு, கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, சென்னை என்ற விலாசத்திற்கு நீங்கள் ஒரு கடிதம் எழுதி அனுப்பினால், அதை வாங்குபவர் நமது மாஜி சென்னை உதவி மேயர் ஸ்ரீ.பி.எம். ஆதிகேசவலு நாயக்கர்தான். ஜெயிலிலிருக்கும் பொழுதே இவர்தான் சத்தியாக்கிரகிகளுக்கு வரும் கடிதங்களைச் சிறை ஆபீசிலிருந்து வாங்கிக் கொடுத்துக் கொண்டிருந்தார். இதற்காக இவருக்குப் பதினைந்து நாள் தனியாகத் தண்டனை வஜா கொடுக்கப்பட்டது.
காலையில் 5 மணிக்கு கையில் ஒரு கம்பை வைத்துக் கொண்டிருப்பார். ‘என்ன செய்கின்றீர்கள்?’ என்று கேட்டால், பாணா ‘கற்றுக் கொடுக்கிறேன்’ என்பார். கசரத்து செய்வார். இதெல்லாம் செய்த பிறகு, கண்ணாடி முன்னால் உட்கார்ந்து மீசையை அழகு படுத்திக் கொள்வர். சர்தார் ஆதிகேசவலுவிடம் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஒரு சிரிப்புச் சிரிப்பார்.திரும்பவும் சொன்னால் இன்னும் உரக்கச் சிரிப்பார். கோபம் என்பதே இவருக்கு வராது. ஜெயில் அதிகாரிகளிடத்தில், முக்கியமாக ஜெயிலரிடம், இவர் அளவு கடந்த பிரேமை கொண்டுவிட்டார். எங்களுக்கு வேலை செய்து வந்த ‘கிரிமினல் கைதிகள்’ கூட ஜெயில் அதிகாரிகளைப் போலவே இவருக்கும் பயப்பட்டார்கள்.
ஏப்ரல் மாதம் 30ம் தேதி இவருக்குப் பிரிவுபசாரம் செய்யும் பொழுது ஸ்ரீ. ராமகிருஷ்ண ராஜூ, ‘ஸ்ரீ, நாயக்கருடைய சிரிப்பை நாளை முதல் ஜெயிலில் நாம் கேட்க முடியாது. அது இல்லாமல் ஜெயிலில் நமக்குச் சந்தோஷம் குறைந்துவிடும். இவர் ஏன் சென்னை ரேடியோவிலிருந்து வாரம் ஒருமுறை சிரிக்கக்கூடாது? என்று கேட்டார்.
எங்கும் எப்பொழுதும், எவர் முன்பும் சிரிப்பார் நமது நாயக்கர். அத்தகைய சிரிப்பு இந்திய அரசியல் வாழ்வுக்கு எவ்வளவு அனுகூலமாக இருக்கிறதென்பது நாயக்கரின் நடவடிக்கைகளைக் கவனித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நன்றாகத் தெரியும். இவர் மே மாதம் 1ம் தேதி விடுதலையானார்.
சிரித்து, சிரித்து சிறையிலிடுவார்கள் சிலர். ஆனால் சிறையிலிட்டாலும் சிரிப்பார்க்ள் சிலர். அந்த சிலரிலே ஒருவர்தான் சர்தார். வடசென்னையிலிருக்கும் கொருக்குப்பேட்டைப் பகுதியான வளமான வைணவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் சர்தார்.
அந்தக் காலத்தில் பெருந்தனக்காரர் என்று அழைக்கப்பட்ட புதுவை மதுரை முத்து நாயக்கர் மற்றும் அமிர்தம்மாளின் மூன்றாவது மகனாக 09.09.1899ல் பிறந்தார். இவரது மூத்த சகோதரர்கள் பு.ம. ஜெயராம நாயக்கர், பு.ம. லஷ்மணபெருமாள் நாயக்கர். இருவரும் ரயில்வே துறையில் பணியாற்றி வந்தார்கள். ஆதிகேசவன் என்று பெற்றோர்களால் பெயரிடப்பட்டு செல்வச் சிறப்பாய் வளர்ந்து வந்த திரு. சர்தார் தன்னுடைய இளமைப் பருவத்தில் அந்தக் காலத்திலேயே சிறப்புப் பெற்ற கிறித்துவக் கல்லூரி பள்ளியில் பயின்று வந்தார். ‘தம்பியுடையான் படைக்கஞ்சான்’ என்பது போல் இவருக்கு இரு தம்பிகள் திரு. பு.ம. கருடபதி நாயக்கர், திரு. பு.ம. சுந்தரராஜ நாயக்கர் ஆகியோர் ஆவார்கள்.
இளமையிலே பொதுத் தொண்டும் மக்கள் சேவையும் தன்னுடைய நிலையாகக் கொண்டதனால் பணிக்கு ஏதும் செல்லாமல் தன் குடும்ப வியாபாரமான சுண்ணாம்புக் கால்வாய் பணியைத் தொடரலானார் சர்தார்.
அந்தக் காலத்தில் சிமெண்ட் இல்லாத நேரத்தில் சுண்ணாம்புதான் வைத்துக் கட்டிடங்கள் கட்டப்பட்டன. ஆகையால் சுண்ணாம்பு கட்டிடத்திற்கு தேவைப்பட்ட காரணத்தினால் செல்வந்தர்களும், தொழிலதிபர்களும் தனவந்தர்களும் இவருடன் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். இதுவே பிற்காலத்தில் இவருக்கு அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் பெயரையும் பிரபலத்தையும் அளித்தது.
கெரோசின் தொழிலாளர்களின் போராட்டம் அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கத்தை நிலை குலையச் செய்ததென்றால் அது மிகையல்ல. அன்றைய நாளேடான இந்து பத்திரிகை 28.05.1927, 01.06.1927, 06.07.1927 மற்றும் 11.07.1927 இதழ்களில் ஆஃப். மேசே அன்ட் கம்பெனி போராட்டத்தையும், அதன் விளைவாக பிரிட்டிஷ் அரசின் நிலை தடுமாற்றத்தையும் வெட்ட வெளிச்சமாக்குகிறது.
நாயக்கரோடு அன்று பணியாற்றிய போராட்டத் தளபதிகள் திரு. ஆ. சிங்காரவேலு செட்டி, திரு. சக்கரை செட்டி, திரு. ஏ.டு. சாஸ்திரி, ஆந்திர கேசாரி டி. பிரகாசம், திரு. எம்.கே. ஆச்சாரி ஆகியோராவர்.
தொழிலாளர்கள் முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்த சர்தார் ரயில்வே தொழிலாளர்கள் முன்னேற்றத்திலும் தன் கவனத்தைச் செலுத்தினார். அதன் விளைவாக 1. மெட்ராஸ் சதர்ன் மராட்டா ரயில்வே யூனியன் (MNDSM அல்லது Madras and Southern Maratha Union) சதர்ன் இரயில்வே எங்மென்ஸ் யூனியன் (MSM அல்லது Railway Young Mans Union) இவைகளை தோற்றுவித்து தலைமையேற்று நடத்திச் சென்ற பெருமை நாயக்கருக்குண்டு. இவரோடு தோள் கொடுத்து பணியாற்றிய ‘மண்ணின்’ மைந்தர்தான் ‘தமிழ்த் தென்றல்’ என்ற போற்றப்படுகின்ற திரு. வி. கல்யாண சுந்தரனார் என்கிற திரு.வி.க. இதனால் அவர் ரயில்வே தொழிற்சங்கத்திலிருந்த சதர்ன் மராட்டா ரயில்வே இயக்கங்கள் போன்றவற்றை தோற்றுவிக்க முற்படலானார்.
அந்நிய அடிமைத்தனம் என்பது அவனுக்காக ஊழியம் செய்வது என்ற எண்ணத்தைக் கொண்டு மேலும் காங்கிரஸ் பேரியக்கத்தை வளர்ப்பதனால் எல்லாவற்றுக்கும் விடிவு காண முடியுமென்று சர்தார் எண்ணினார்.
மூத்த காங்கிரஸ் தலைவர்களான ஸ்ரீமான் ஸ்ரீனிவாச அய்யங்கார் போன்றவர்களோடு நேரடி தொடர்பு கொண்டவர். தினமும் அவரது மைலாப்பூர் இல்லத்தில் சென்று அவரைப் பார்ப்பதை கடமையாகக் கொண்டிருந்தார். இதற்காக தினமும் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்று வருவாராம் சர்தார்.
தொழிலாளர் மீதிருந்த பற்றுதலால், சற்று அதிகமாகவே தேசிய நலத்திலும், காந்தியத்திலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் சர்தார்.
திருமதி. அன்னிபெசன்ட் திரு. B.P. வாடியா, Dr. அருண் டேல் மற்றும் ஸ்ரீமான் சீனிவாச ஐயங்காருடனும் இவரது தேசப்பணி தொடர்ந்தது. ‘காங்கிரஸ்காரர்கள் கைது’ என்ற செய்தி எட்டியவுடன் முதல் விலங்கு போடப்படுகிறதென்றால் அது நாயக்கரின் திருக்கரங்களுக்கே என்று சொன்னால் அது மிகையல்ல.
காங்கிரஸ் மாநாடுகள் நடைபெற்ற காலகட்டங்களிலும் நாயக்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளாத மாநாடுகளே இல்லை என்று கூறலாம். நாயக்கர் ஒருமுறை கைது செய்யப்பட்ட பொழுது அவரது மூத்த மகள் திருமதி. பு.ஆ. கௌசல்யா தேவி வேணுகோபால் அந்நாளில் ஐந்து வயது சிறுமி. எப்படி அவர் கொடூரமாக கைது செய்யப்பட்டார் என்பதை இன்றைக்கும் நினைவு கூறுகிறார். தன் கழுத்திலிருந்து ஆறு சவரன் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்றனர் அன்றைய காவலரிடம் கேட்டதற்கு தண்டனைத் தொகையாக என்று கூறுகிறார். அப்பொழுது சிறை செல்லும் முன் தண்டனைத் தொகையை முன்னமே கட்டிவிட்டுத்தான் செல்லவேண்டும்.
ஒருமுறை சர்தாரை கைது செய்கின்ற பொழுது அவருடைய மனைவி திருமதி. இராஜம்மமாள் குழந்தையை பிரசவித்துக் கொண்டு தாய் வீட்டிலிருந்து வருகிறார். அந்தக் குழந்தையைப் பார்க்கிறார் நாயக்கர். சில மணித்துளிகளில் அவர் சிறைக்குச் சென்றாக வேண்டும். அந்தக் குழந்தையின் அழகிலே மயங்கி ஒன்றி கண்களில் நீர் மல்க அந்த குழந்தைக்கு தாமோதரன் என்று பெயரிடுங்கள் என்று கூறி விடை பெற்றுச் செல்கிறார். அவர் மனைவியின் கைகளிலோ அலங்கரிக்கிறது ‘கைக்குழந்தை’! ஆனால் அவர் கைகளிலோ அந்நியனின் அநியாய அரசின் விலங்கு அலங்கரிக்க காத்திருக்கிற நேரம்!
அன்றைய சிறையில் கொடுமைகளை இன்று நினைத்தாலும் நெஞ்சங்கள் வேதனைக்குள்ளாகும் என்பதை யாரும் மறுக்க இயலாது. கடிதங்களெல்லாம் கருப்பு மை தடவப் பட்டு தான் வரும். அதுபோல சிறையிலிருப்பவர்ளுக்கு கொடுக்கப்படும் கடிதங்களும் அதே கதிதான்.
எந்த சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப் போகிறார்கள் என்பது யாரும் அறியாத, புரியாத சிதம்பர ரகசியம். அவருடன் மிகத் தோழமையாக சர்தாரின் செயல் வீரனாக செயல்பட்டவர். பிற்காலத்தில் அவர் மருமகனும் அவர் மனைவியின் தம்பியுமான வழக்கறிஞர் திரு. நா. வேணுகோபால் நாயக்கர். அவர் நாயக்கரின் சிறை வாசத்தைப் பற்றி இப்படிக் குறிப்பிடுவார். சர்தாரைக் கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்திருந்தார்கள்.
உள்ளே நடக்கும் செய்திகள் யாருக்கும் வெளியே தெரியாது. வெளியே நடப்பவைகளும் உள்ளே யாருக்கும் புரியாது. இந்த வேளையில் செய்தி பரிமாற்றத்திற்கும், யாரெல்லாம் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள், யாரையெல்லாம் கைது செய்ய இருக்கிறார்கள் என்ற செய்தியையெல்லாம் பகிர்ந்து கொள்ள அமைந்த இடம் எது தெரியுமா? கழிப்பறைதான்.
காலை 4 மணியளவில் காவல் நிலையத்திலிருக்கும் கைதிகளை கழிப்பறைக்கு அழைத்து வருவார்கள். இது காவலில்லாத இடம் மட்டுமல்ல. கண்காணிப்பு இல்லாத இடமும் கூட. அந்த இடத்தில் இரவிலே 11, 12 மணியளவில் இடம் பிடித்துக் கொண்டால் கைதிகளை அழைத்து வரும் போது அவர்களிடத்திலே செய்திகளை பகிர்ந்து கொள்ள முடியும். அந்தக் கழிப்பறையின் நிலை எப்படிப்பட்டது என்பதை இன்றைக்கு நினைக்கக் கூட முடியாத நரக வேதனை. மலத்தின் மணத்தை மகிழ்ச்சியுடன் முகர்ந்து கொண்டிருந்த நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா? அதிலும் அங்கே எந்த ஒளியும், வெளிச்சமும் இல்லாத ஓர் நிலையில், எந்த உயிரினம் யார் மீது எப்படித் தாக்கும் என்கிற மரண பயத்திலும் இருக்க வேண்டும். கைதிகள் அழைத்து வரப்பட்டதும் அவர்கள் செய்யும் கனைப்புகள்தான் அவர்களுக்கான அறிகுறிகளும் அறிவிப்புகளும். அதை வைத்துதான் அவர்கள் அடையாளங்கண்டு சங்கடச் செய்தியாக இருந்தாலும் பகிர்ந்து கொள்வார்கள். அதையும் காதோடுதான் பேசியாக வேண்டும்.
நாயக்கர் சிறைக்குச் சென்ற பொழுது அவர் வீட்டிலே விட்டுச் சென்ற பெருந்தொகை எவ்வளவு தெரியுமா? இரண்டு ரூபாய்தான்! அதில் அவரது மனைவி 8 குழந்தைகள் உண்டு. உயிர் வாழ வேண்டும். கடைசியாகப் பிறந்த குழந்தை சர்தார் சிறை செல்வதற்கு முன் பெயரிட்ட தாமோதரன் என்ற அழகிய பெட்டகத்தை அடக்கம் செய்தார்கள். மருத்துவத்திற்கு கூட பண வசதியில்லாமல் என்று அந்த நூலில் குறிப்பிட்டுள்ளனர்.
மகாத்மாவும், சர்தாரும்
சென்னைக் கடற்கரையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தல் நாயக்கர் மகாத்மாவுக்கு வழங்கிய வரவேற்புரை நிகழ்வுக்கு நிழற்படமே சான்று.
ஸ்ரீமான் சீனிவாச ஐயங்கார் தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மின்சார வசதியும் கிடையாது. ஒலி பெருக்கி (மைக்) வசதி இல்லை என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. ‘சிம்மக்குரல்’ சர்தாருக்கு மைக் தேவையா? என்ன? ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலில் உள்ள வாசங்கள் இவ்வாறு குறிப்பிடுகின்றன.
‘அரசாங்கம் தன்னை அறியாமல் அண்ணலுக்கு அரச வரவேற்பு அளித்துவிட்டது. சுரேந்திரநாத் ஆர்யா, இராமபத்திர உடையார், ஆதிகேசவலு நாயக்கர் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் நின்றது போதாதென்று, துப்பாக்கிகளுடன் போலீஸார் ரயில்வே நிலையத்திற்குள் அணிவகுத்து நின்றனர்’. (ப.எண். 402, 403)
‘இம்முறை காந்திஜி வந்த போது திருவல்லிக்கேணி கடற்கரையில் பொதுக் கூட்டம் நடைபெறும் இடத்திற்குத் ‘திலகர் கட்டம்’ என்று பெயர் சூட்டப்
பெற்றிருந்தது. சீனிவாச ஐயங்கார் தலைமை தாங்க, சத்தியமூர்த்தி அண்ணலின் சொற்பொழிவை மொழிபெயர்த்தார். வரவேற்புரைகள் அளிப்பது தொடக்கத்தில் அனுமார் வால் போல் நீண்டு கொண்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரஸின் சார்பாக ஆதிகேசவ நாயக்கர் வரவேற்புரை படித்துக் கொடுத்தார்.’ (ப.எண். 406)
‘இராயவரம் ராபின்சன் பூங்காவில் பெருங்கூட்டம் கூடி நின்று அண்ணலை உற்சாகமாக வரவேற்றனர். அண்ணலின் சொற்பொழிவை ஆதிகேசவலு நாயக்கர் தமிழில் மொழிபெயர்த்தார்.’ (ப.எண். 646)
1935ல் அண்ணல் காந்தி அவர்கள் காங்கிரஸில் இருந்து விலகியிருந்த காலத்தில் பத்திரிகை நிருபர்கள் சர்தாரிடத்தில் இந்த ஆண்டு காந்தி பிறந்தநாளை கொண்டாடுவீர்களா? என்று கேட்டதற்கு அவர் இப்படி விளையளித்தார். ‘காந்தி காங்கிரஸை விட்டு விலகலாம். ஆனால் காங்கிரஸ் என்றும் காந்தியை விட்டு விலகாது’ என்றார். இவ்வாசகத்தை பெட்டிச் செய்தியாக அன்றைய இந்து நாளிதழ் (30.09.1935) வெளியிட்டது.
காந்தியின் மீதிருந்த பற்றுதலால் தன்னை கதர் இயக்கத்திலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் சர்தார். சுதேசி இயக்கத்திற்காக கதராடைகளை கணிசமாக ஏந்திக் கொண்டு கடை வீதிகளில் ஊர்வலமாய் வந்து வாய்விட்டுக் கூவி அழைத்து விற்றவர்தான் இந்த வித்தகர்.
காந்தியம் என்றால் கள்ளுக்கடை மறியல் இல்லாமலா? கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் பலமுறை காவலர்களாலும், கள்ளுக்கடை காவலர்களாலும், கணிசமாய் தன் உடம்பிலே விழும்புண்களை வரவேற்றவர்தான் அந்த விற்பன்னர்.
திருமதி. இராஜம்மமாள் ஆதிகேசவலு
சர்தாருக்கு கிடைத்த ‘தங்கச்சுரங்கம்’ வாழ்க்கைத் துணை என்பதற்கு இலக்கியம்! இலக்கணம்! திருமதி. இராஜம்மாள் அம்மையார், செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகத்தின் அருகிலுள்ள செய்யூர் கிராமத்தின் சீர்மிகு செல்வச் சீமான் உப்பள அதிபர் நாராயணசாமி நாயக்கர் திருமதி. தனம்மாளின் நான்காவது குழந்தையாக பிறந்தவர். இவர் மண நாள் 07.07.1927 என்று செய்தி மடல் என்ற பத்திரிகை குறிப்பிடுகிறது.
செல்வக் குடும்பத்தில் பிறந்திருந்தும், செல்வக் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டிருந்தாலும், இன்னலுக்கும், மின்னலுக்குமான இடிதாங்கி போல வாழ்ந்திருந்தார் திருமதி. இராஜம்மாள் பிறந்த வீட்டில் செல்வமும், செழுமையும்
மட்டுமே கண்ட அவர் ‘இல்லை’ என்கின்ற சொல்லை எதிலுமே காணாத அவர் வாழ்க்கைப்பட்ட பிறகு அவமானத்தையும், வறுமையையும் மட்டுமே சன்மானமாகப் பெற்றார்.
சர்தாரின் சரித்திரம் சாமான்யர்களுக்கு கூட சாசனம் அல்லவா? ஆனால் தியாகியின் தியாகியாக விளங்கிய இராஜம்மாள் ஆதிகேசலுவை எத்தனை பேர் அறிவார்கள். மண் மகளின் மென்மையை தன் தன்மையாக கொண்டவள் அல்லவா? இந்த தமிழ்ப் பெண். தன் கணவரின் செயல்பாடுகள் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றாது வறுமைதான் அவர்களின் வளமை என்றாலும் அதை வாழ்ந்து காட்டி வெளியில் தெரியாத ‘ஜான்சி ராணியாக’ வாழ்ந்தவர் அந்த அம்மையார்.
தான் வாழ்க்கைப்பட்ட வீட்டிலேயே வேலைக்காரியை விட தாழ்வாக தான் நடத்தப்பட்டாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் வாழ்ந்து காட்டிய விருட்சம் அந்த அந்த வேதனையின் தேவதை. இதுதான் சார்தார் அவருக்குக் கொடுத்த பரிசாக இருக்கும். அந்தக் குழந்தைக்கு உணவிருக்கிறதா? உடையாவது இருக்கிறதா? உன்னத படிப்பாவது இருக்கிறதா என்பதைப் பற்றிக் கவலைப்படமாட்டார் ‘சர்தார்’. சதா சர்வ காலமும் நாடும், சுதந்திரமும் அதில் தமது பங்களிப்பும் என்பதே சர்தாரின் வாழ்க்கையானது. தன் வீட்டுத் தோட்டத்திலேயே பயிரிட்டு அதிலிருந்து வரும் காய்களையும் கீரைகளையும் தன் குழந்தைகளுக்கு உணவாக்கி, அவர்களை கல்வியறிவிலும் கரையேற வைத்தவர் இவர்.
இந்த தம்பதியரின் அரும்பெரும் செல்வங்கள்தான் திருமதி. பு.ஆ. கௌசல்யா தேவி வேணுகோபால் B.Sc, B.T., திருமதி. பு.ஆ. சரோஜினி சங்கர நாராயணன் B.A., B.L., (வன்னிய குல ‘சத்ரிய முதல் பெண் வழக்கறிஞர்) வழக்கறிஞர் திரு. பு.ஆ. கோபால கிருஷ்ணன் B.A., B.L., Dr. பு.ஆ. வரதராஜன், திருமதி. பு,ஆ. இந்திராணி ஏழுமலை, திரு. பு.ஆ. சீனிவாசன் B.Sc., B.L., (குற்றவியல் நடுவர்) வழக்கறிஞர் திரு. பு.ஆ. தெய்வசிகாமணி M.A., B.L., இவர்களுக்கு கல்வியைக் கொடுத்து கரையேற்றி கலங்கரை விளக்கமாயிருந்தவர் இராஜம்மாள் எனும் தெய்வத்தாய்.
சர்தார், இராஜம்மாள் தம்பதியரிடத்தில் மனத்தாலோ, சொல்லாலோ, செயலாலோ ஒரு நாள் கூட, வேற நிலையையோ, மாற்று நிலையையோ யாரும் மருந்துக்கு கூட பார்த்திருக்க மாட்டார்கள்.
நாயக்கரின் கடைசி நாள் வரையில் அவர் சாப்பிட்ட இலையில் சாப்பிடுவதுதான் தன் வாழ்வில் கிடைத்த பேறு என்று வாழ்ந்து காட்டியவர் அந்த வடிவுக்கரசி.
சத்தியமூர்த்தியின் சீடரானார்
சத்தியமூர்த்தியும், சர்தாரும் நிழலும் நிஜமும் போல ஒன்றாகவே பணியாற்றியவர்கள். சத்தியமூர்த்தி தலைவராக இருந்தார். சர்தார் உபதலைவராக இருந்தார்.
வினோபாவேடன்
அண்ணல் காந்தியடிகளால் முதல் சத்தியாகிரகி என்று அடையாளங்காட்டப்பட்ட வினோபாவுடன் வேலூர் சிறையில், 1941 ஆம் ஆண்டு இருந்த போது திரு. நாயக்கர் அவர்களும், வினோபாவும் நட்பு கொண்டனர். அங்குதான் வினோபாவே, நாயக்கரிடம் தமிழ் கற்றுக் கொண்டு நாயக்கருக்கு இந்தி கற்றுத் தந்தார். இக்கல்வி இரண்டு ஆண்டுகள் தொடர்ந்தது. பின்னர் கூட்டங்களில் வினோபாவே ‘இவரே என் தமிழ் ஆசிரியர்’ என்று பக்தியோடு அறிமுகப்படுத்தும் அளவிற்கு சென்றது. 24.09.1964 குமுதம் வார இதழ் இதை வெளியிட்டுள்ளது.
திரு. இராஜாஜி அவர்கள்
‘காங்கிரஸ் என்றால் அபாயம் என்று அந்த நாளில் கருதப்பட்டது. மோட்டர் வண்டி இருக்கிறது சிறிது நேரத்தில் விபத்துக்கள்ளாகப் போகிறது! அதில் ஏறுங்கள் என்று சொன்னால், எத்தனை பேர் அதில் ஏற முன் வருவார்கள்? அப்படி ஆபத்தான அந்த காரில் ஏற முன் வந்த முக்கியமானவர்களில் திரு. ஆதிகேசவலு நாயக்கரும் ஒருவர். அவர் மிகவும் தைரியசாலி. ஆகையால் மக்கள் அவருக்கு ‘சர்தார்’ என்று பட்டமளித்தனர் என்று 1951 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் தேதி மாலை இராயப்பேட்டையில் நடந்த குடியரசு தின பொதுக் கூட்டத்தில் அன்று முதலமைச்சராயிருந்த திரு. இராஜாஜி அவர்கள், திரு. நாயக்கரைப் பற்றி குறிப்பிட்டார்.
திரு. பக்தவச்சலம் அவர்கள்
சர்தார் திரு. பு.ம. ஆதிகேசவலு நாயக்கர் சிறுவயது முதலே சிறந்த காங்கிரஸ் ஊழியராக பணியாற்றினார். அதனால்தான் அவர் ‘சர்தார்’ என்ற பட்டம் பெற முடிந்தது. அவர் பற்றி முக்கியமாக சொல்ல வேண்டுமானால் அவர் எப்போதும் தலைப்பாகையுடன் தான் காட்சியளிப்பார். பேசும் போதெல்லாம் அதிகமாக சிரிப்பார்.
திரு. ஆதிகேசவலு நாயக்கர் விடுதலைப் போராட்டத்தில் சிறந்த தொண்டாற்றியவர் என்று நாயக்கரைப் பற்றியும், அவருடன் அன்றைய முதலமைச்சர் திரு. பக்தவச்சலம் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது ‘சென்னை செங்கற்பட்டு காங்கிரஸ் கமிட்டியில் அவர் பணியாற்றினார். அவர் 1932 ஆம் ஆண்டில் சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்பட்ட போது கலந்து கொண்டார். நானும் எனது மாமா முத்துரங்க முதலியாரும் அந்த குழுவில் இருந்தோம். போலீஸாருக்கு தெரிந்து ஆவேசத்துடன் ஊர்வலத்தை அடித்து கலைத்தார்கள். நாயக்கர் பலமான அடிகள் பல பட்டு அவர் கீழே விழுந்த பின்பும் அடித்தார்கள். வேலூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்’ என்று நாயக்கருக்கு தான் பங்கு கொண்ட போராட்ட கால அனுபவங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டுள்ளார்.
திரு. மா.பொ.சி. அவர்கள்
‘வடபுலத்தில் ‘சர்தார்’ என்னும் பட்டப் பெயருடைய தலைவர் ஒருவராகத் தான் இருந்தார். அவர் வல்லபாய் பட்டேல் ஆவார். தென்புலத்திலே ‘சர்தார்’ என்ற பட்டப் பெயரில் இருவர் வாழ்ந்தனர். தேச விடுதலைப் போராட்ட காலத்திலே, அவர்களில் ஒருவர் வேதாரண்யம் வேதரத்தினம் பிள்ளை. மற்றொருவர் சென்னைவாசியான பு.ம. ஆதிகேசவலு நாயக்கர்.
பஞ்சகச்ச வேட்டியும், நெஞ்சிலிருந்து வயிறு வரை பித்தான்களைக் கொண்ட கோட்டும், வெள்ளைத் தலைப்பாகையும், வலது கையில் தடியுமாகக் காட்சியளிப்பார் ஆதிகேசவலு நாயக்கர். அந்தத் தோற்றமே அவர் ‘சர்தார்’ பட்டத்திற்கு உரியவர் என்பதைக் காட்டும். தொண்டாலும் அவர் சர்தார்தான்! சர்தார் நாயக்கரை தமிழர் மறப்பது நன்றி கொன்றதாகும். பலமுறை சிறை சென்ற தியாகி. பதவிக்காக கொண்ட கொள்கையை விடாதவர்…’ என்று நாயக்கரைப் பற்றிப் புகழ்ந்துரைக்கின்றார்.
கர்மவீரரும் சர்தாரும்
காமராசரை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக முன் மொழிந்த பெருமை நாயக்கருக்கு உண்டு.
காமராசருக்கு சர்தார் மீது மிகவும் பற்றுதலும், மரியாதையும் உண்டு. தன் தலைவர் சத்தியமூர்த்தியின் நிலையான தோழராக இருந்தமையால், 1947, ஆகஸ்ட் 15ம் தேதி நடந்த நிகழ்வே அதற்கு ஒரு சான்று. விடுதலை வரலாற்றின் எழுச்சி எழுத்தாளர் ரகமி அதை தினமலர் சுதந்திர தின பொன்விழா மலரில் இப்படி வெளியிட்டிருந்தார்.
இராயப்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில்
‘சென்னை இராயப்பேட்டை ஜில்லா காங்கிரஸ் மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு ஜில்லா காங்கிரஸ் கமிட்டி தலைவரான ஸ்ரீசர்தார் பி.எம். ஆதிகேசவலு நாயக்கர் தலைமை வகித்தார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவரான கே. காமராஜ் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். அப்போது காமராசருக்கு சிலர் மாலையிட வந்த போது அதனை அவர் தமது கழுத்தில் அணியச் செய்யாமல் கையிலே வாங்கிக் கொண்டார்.
காமராசர் ஏன் மாலைகளை ஏற்காமல் கையில் வாங்கிக் கொண்டார் என்று சில காங்கிரஸ்காரர்கள் கிசுகிசுத்த போது, காமராசர் அத்தனை மாலைகளையும் சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் கழுத்தில் அணிவித்துக் கொண்டே, ‘எனது குரு சத்தியமூர்த்தி ஐயனுடன் துணை மேயராக பதவி வகித்த சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் அல்லவா? நகரத்தின் மூத்த பிரஜை. இந்த சுதந்திரத்திற்காக என் குருநாதரின் போராட்டங்களில் இணைந்து பாடுபட்டவர் நமது சர்தார். ஆகவே இந்த மாலைகளை என் ஐயன் சார்பில் இவருக்கு அளிப்பதில் நான் மிக்க பெருமைப்படுகிறேன்’ என்றதும் மைதானமே பலத்த கரவொலியால் அதிர்ந்தது..’
பேரறிஞர் அண்ணா
‘மாற்றுக் கட்சிக்காரர்களையும் மதிக்கும் பண்பைப் பெற்றவர் சர்தார் அவர்கள்’ என்று சர்தாரைப் பற்றி நினைவு கூர்ந்தார் பேரறிஞர் அண்ணா. ஒரே மேடையில் எதிர்க் கட்சிக்காரர்களையும் பேச வைக்கும் பண்பாளர் என்றும் போற்றி இருக்கிறார்.
வழிபாட்டிற்குரிய மேயராக
சர்தார் செல்வராகவும், வர்த்தகராகவும், அரசியல்வாதியாகவும், போராட்ட வீரனாகவும், இருந்தது மட்டுமல்லாமல் சிறந்த நிர்வாகியாகவும் சமூகத் தொண்டனாகவும், சமயவாதியாகவும், விவசாய மற்றும் தோட்டக்கலை வல்லுநராகவும் விளங்கியவர்.
கால் நூற்றாண்டுகளுக்கு மேல் மாநகரட்சியின் உறுப்பினராக பணியாற்றியவர் . மாநகராட்சி உறுப்பினராக இருந்த பொழுது காலை எழுந்தவுடன் தன் தொகுதியை ‘நடந்து அளந்து’ பார்ப்பதில் பெருமகிழ்ச்சியும் உவகையும் கொள்வார். ஓங்கி உலகளந்த உத்தமனாய்! ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் ஓர் உறுப்பினரைப் போல அவர்களிடம் நலம் விசாரிப்பார். தன் வாக்காளர்களின் பிரச்சினைகளை கூர்ந்து கவனித்து அவர்களின் இடர்பாடுகளுக்கு தீர்வு காண்பதில் மிகவும் வேகத்தோடு செயல்படுவார். அது எந்தப் பிரச்சினையாக இருந்தாலும், சரி!
சாதி வித்தியாசங்கள், விருப்பு வெறுப்புகள் இல்லாமல் தன் கட்சிக்காரன் மாற்றுக் கட்சிக்காரன் என்று பாராமல் ஏழை என்பதால் பாராமலிருப்பதோ, பணக்காரன் என்பதால் பாராமலிருப்பதோ, பணக்காரன் என்பதால் பாசம் காட்டுவதோ, அவரின் பழக்கமல்ல. பச்சிளம் குழந்தையாக இருந்தாலும் சாப்பிட்டாயா? என்ன சாப்பிடுகிறாய்? என்று அவர் கேட்காமல் சென்றதே இல்லை.
சத்தியமூர்த்தி அவர்கள் உடல் நலக்குறைவால் செயல்பட முடியாத பொழுது சர்தார் தான் மேயராக இருந்து செயல்பட்டார். சரித்திரம் படைத்த துணை மேயர்களில் சர்தாரும் ஒருவர்.
இந்தக் கட்டத்தில் தான் மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் வசதி குறைவுடைய குழந்தைகளுக்கு மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
வறண்டு போகும் சென்னையை வளமான சென்னையாக மாற்ற, பூண்டி நீர்த்தேக்கத்தை செயல்படுத்தியவர் சர்தார் ‘சத்தியமூர்த்தி சாகரென’ தன் தலைவர் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்.
வடசென்னை கூட ஒரு பூங்காவாக மாறியிருந்தது இவர் காலத்தில் தான். தான் மேயராக இருந்தாலும் தன் வீட்டுக் குழந்தைகள் மற்ற தனியார் பள்ளிகளில் படிப்பதை நாயக்கர் விரும்பவில்லை. தன் குழந்தைகளும் மாநகராட்சி பள்ளியிலேயே பயில வேண்டும் என்று உண்மையான காந்தியவாதியாக வாழ்ந்தவர்.
இவர்கள் காலகட்டத்தில் தான் மேயரை “Worshipful Mayor” ‘வழிபாட்டிற்குரிய மேயர்’ என்று அழைக்க வேண்டும் என்று மாநகராட்சி தீர்மானித்தது.
பதவிகளால் சிலருக்கு பெருமையுண்டு. சிலரால் பதவிகளுக்கு பெயருண்டு. அதுதான் நாயக்கர்.
நாடாளுமன்ற பணி
சர்தார் நாடாளுமன்றத்தில் பணியாற்றியதன் நிலையாக பெருங்களத்தூர், நுங்கம்பாக்கம் தொடர் வண்டி நிலையங்கள் ஏற்பட்டது. இரயில்வே பயணிகள் ஆலோசனைக் குழுவிலும் பணியாற்றினார்.
முதல் அரசியல் அமைப்பு அமைக்கப்பட்ட பின்பு பாராளுமன்றத்திற்கு சென்னையின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் நாயக்கர் அவர்கள். 1952 வரையில் அவர் பதவி வகித்திருக்க முடியும். ஆனாலும் அவர் விடுதலைப் போரில் பெற்ற விழுப்புண்கள் அவரை விட்டு வைக்கவில்லை.
சமுதாயத் தொண்டு
தான் மிகவும் பிற்படுத்தப்பட்ட வன்னியர் குல சத்ரியராக பிறந்ததில் அவருக்கு பெரு உவகை உண்டு. ஆனால் தன் இன மக்கள் எல்லா விதத்திலும் முன்னேறாமல் மயங்கி இருக்கிறார்களே என்பதில் மிகவும் கவலை கொண்டவர். வன்னிய குல சத்ரிய மகா சங்கத்தின் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்.
தியாகிகள் நலச் சங்கம்
எந்த நேரத்திலும் சுதந்திரப் போராட்ட வீரர்களை நாயக்கர் மறந்ததில்லை. அவர்களுக்காக எல்லா நேரங்களிலும் உழைப்பதை பெருமையாகக் கொண்டவர். அதன் விளைவாக ALL INDIA POLITICAL SUFFERERS ASSOCIATION என்ற நிறுவனத்தையும் நடத்தி வந்தார்.
தியாகி இராமச்சந்திரன் அவர்கள், இவரை எந்நாளும் மறக்காமல் தன் வாழ்நாள் முழுவதும் சர்தார் இல்லத்திற்கு வந்து சர்தார் படத்திற்கு கற்பூரம் ஏற்றி வணங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
காரணம் ஒரு முறை போலீஸார் சர்தாரையும் தியாகி இராமச்சந்திரனையும் கைது செய்ய திட்டமிட்டனர். அதற்கான நேரமும் வந்தது, சர்தாரின் போராட்டங்களை எல்லாம் வெற்றி பெறச் செய்யும் இராமச்சந்திரனை எப்படியாவது சக்தியிழக்கச் செய்ய வேண்டும் என்று தீர்மானித்தார்கள். சர்தாரையும், இராமச்சந்திரனையும் கைது செய்ய வந்த பொழுது சர்தார் தன் கோட்டு பையில் வைத்திருந்த சாவியை எடுத்து என் கடையில் வேலை செய்யும் உனக்கெல்லாம் ஏன் இந்த வேலை ஓடிப் போய் வியாபாரத்தைக் கவனி என்று விரட்டி விட்டாராம். காவலர்களும் இராமச்சந்திரன் குள்ளமாக இருந்ததனால் கடைப் பையன் என்று நம்பி விட்டுவிட்டார்களாம். கடைசியில் காவல்நிலையம் சென்ற பொழுதுதான் காவலர்கள் கோட்டை விட்டதும், சர்தார் கோட்டுப் பையில் கை விட்டதன் மர்மம் முடிவுக்கு வந்தன.
தியாகி இராமச்சந்திரன் தப்பித்து மூன்று நாட்களுக்கு தன் வீட்டு ஓட்டு கூரை மேலே படுத்திருந்து காவலரிடமிருந்து தப்பினாராம். வீட்டு ஓட்டின் மீது மூன்று நாட்கள் வெயிலிலும், பகலிலும், இரவிலும் படுத்திருந்தார் என்பது இன்று தேர்தல் நேரத்தில் மட்டும் வீடு வீடாக ஓட்டு கேட்கும் ஜனநாயகவாதிகளுக்கு இதெல்லாம் தெரியுமா?
வ.உ.சி. அவர்கள் மறைந்த பொழுது தன் தலைமையில் சென்னையில் இரங்கற் கூட்டத்தை நடத்தியவர் நமது சர்தார்.
தோட்டக்கலை வல்லுநர்
நாயக்கருக்கு விவசாயத்தின் மீதும் குறிப்பாக தோட்டக்கலை மீதும் ஆர்வம் கொண்டவர். சிறைச்சாலையிலேயே காய்கறி தோட்டம் அமைத்து தியாகிகளுக்கு சிறைக் கைதிகளுக்கும் நல்ல ஊட்டச் சத்துணவை அளித்தவர்.
தன் இல்லத்திலேயே நல்ல ஒரு அழகான நந்தவனத்தை அமைத்திருந்தார். சர்தார் மறைந்து 50 ஆண்டுகள் ஆகியும் அவர் இல்லத்தில் இன்றைக்கும் அவர் விட்டுச் சென்ற மரங்கள், செடி, கொடிகள் அதற்கு சான்றாக இருக்கிறது.
இன்று பண்ணை வீடுகள் பிரபலமாக இருக்கிறது. ஆனால் இதை அந்தக் காலத்திலேயே நடத்திக் காட்டியவர் நாயக்கர். வண்டலூர் அருகில் சிறந்த மாம்பழத் தோட்டத்தையும் ரோஜாத் தோட்டத்தையும் நிர்மாணித்து அங்கே விவசாயமும் பார்த்து வந்தார். பல ஆண்டுகள் அந்த மாமரத்தின் நிழலிலும், ரோஜாவின் மணத்திலும் மனத்தைப் பறிகொடுத்தார் அந்த மண்ணின் மன்னர்.
சமய உறவு
சமயத்தில் ஆழ்ந்த பற்றுதலும் பரிச்சயமும் இல்லாதவராக இருந்தாலும் சமய நம்பிக்கை கொண்டவராகவே திகழ்ந்தார். முக்கிய நாட்களில் ‘திருமண்’ அணிவதை வழக்கமாக்கிக் கொண்டவர்.
அமாவாசை நாட்களில் தன் முன்னோர்களுக்கு வழிபாடு செய்வதை மிக முக்கியமாகக் கருதியவர். திருவேங்கடன் மீது ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியும் கொண்டவர். மார்கழி மாதத்தில் சிற்றஞ் சிறு காலையில் குடும்பத்தினர் அனைவரும் திருப்பல்லாண்டு, திருப்பள்ளியெழுச்சி, திருப்பாவை சேவிப்பதை குடும்ப கூட்டு வழிபாடு வளர வழக்கமாகக் கொண்டிருந்தவர். இன்று வரையில் சர்தாரின் இல்லத்தாரின் வீடுகளில் இம்முறை கடைப்பிடிக்கப்படுவது போற்றத்தக்கது. ஸ்ரீவைணவ மகா சங்கத்தில் முக்கிய பங்கு வகித்துக் கொண்டு மாநாடுகளிளெல்லாம் கலந்து கொள்ளும் பெருமையுடையவர் சர்தார். இவர் காலகட்டத்தில் இவர் பணியாற்றாத இயக்கங்களே இல்லை. சென்னை மகாஜன சபையின் தலைவராகவும், துணைத் தலைவராகவும் பல முறை பணியாற்றியவர்.
சாதனை நாயகனாக, சரித்திரத் திருமகனாக, வாழ்ந்திருந்த சர்தார் சுதந்திரப் போராட்டக் காலத்தில் வீழ்த்த முடியாத அந்த வீரனை, அவர் வாங்கியிருந்த விழுப்புண்கள் அவரின் கடைசிக் காலங்களில் வேதனைக்குள்ளாக்கி, வீழ்த்திக் காட்டியது. மண்டையில் வாங்கிய அடிகளால் அவர் வீழ்ந்தார். அவருக்கு நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அவர் கை, கால்கள் தானாகவே அதி வேகமாக அவர் உடம்பிலே ஆட்டத்தைக் கொடுத்து அதிர்வலைகளைக் கொடுத்தது.
சித்ரவதை சீமைச் சிறையிலே சிரித்த அந்த சிங்கம் மௌனத்தின் உருவமாக மரணத்தின் வாயிலை அலங்கரித்துக் கொண்டிருந்தது. வீட்டை மறந்து நாட்டை நினைத்து நாளும் உழைத்த அந்த நல்ல உள்ளம் 09.09.1964 அன்று ஓய்வு கொண்டது. ‘ஆதி’ என்ற பெயர் கொண்டதாலோ என்னவோ ஆதியில் வணங்கப்படும் ஆண்டவனாக ஆனைமுகத்தானின் பிறந்த நாளன்று அவன் திருவடி சேர்ந்தார். அவர் இறைவனோடு கலந்ததை இன்றுமல்லவா தமிழக வீடுகளில் நினைவு கூர்ந்து போற்றி வாழ்த்தி இருக்க வேண்டும்.
புதுச்சேரி அக்காலத்தில் வளமான நகரமே. ஆனாலும் அமைதிக்கு அடிக்கடி பங்கமேற்பட்டு வந்தது. வைணவ பக்தரும், தம் உழைப்பில் குடும்பத்தை வளர்க்க வேண்டியவருமான திரு. கிருஷ்ணசுவாமி நாயகர் குடும்பத்துடன் புதுவையை விட்டுச் சென்னை வந்து குடியேறினார். அக்காலத்தில் சென்னையில் துறைமுகத்துக்கு அடுத்தபடியபாக வணிக வளம் செழித்து ஓங்கிய இடங்கள் அம்பட்டன் வாராவதி என வழங்கப்பட்டும் ஹாமில்டன் வாராவதித் துறையும், மூலக்கொத்தளம் துறையுமே. இவ்விரு துறைகளிலும் முறையே தெற்கிலிருந்தும், வடக்கிலிருந்தும் பல திறப்பட்ட உள்நாட்டுப் பொருள்கள் இறக்குமதியாகிக் கொண்டே இருக்கும். இன்றும் இதனை ஓரளவு காணலாம். எனவே, திரு. கிருஷ்ணசுவாமி நாயகர் மூலக்கொத்தளம் அடுத்த கொருக்குப்பேட்டைப் பகுதியில் குடியேறிக் குடும்பத்தை நடத்தலானார். இவரே நமது திரு. சர்தார் ஆதிகேசவலு நாயகருடைய பாட்டனார் ஆவார்.
திரு. கிருஷ்ணசாமி நாயகருடைய குமாரர்களான திரு. மதுரை முத்து நாயகரும், திரு. இராகவலு நாயகரும் மிக்க தெய்வ பக்தி உடையவர்கள். ஸ்ரீவைணவப் பாங்கில் வாழ்க்கையை நடத்தியவர்கள். முதல் குமாரரான திரு. மதுரை முத்து நாயக்கரே நமது திரு. ஆதிகேசவலு நாயகர் அவர்களுடைய தந்தையார். இவர் சுற்று வட்டாரத்தைச் சார்ந்த பல கோயில்களுக்கு அறங்காவலராகப் பணிபுரிந்து மிக்க புகழ் அடைந்திருந்தார். ஆஜானுபாகுவான தோற்றமும், எடுப்பான பெரிய திருமண் காப்பும், சரிகைத் தலைப்பாகையும், கம்பீரமான கருப்பு நீள கோட்டும், அதற்கேற்ற இருபுறமும் தொங்கும் சரிகை அங்கவஸ்திரமும், கீழ்ப்பாச்சிய வேட்டியும், கைக்குட்டையும் கொண்டு செல்வது காணின், இவர் ஓர் குறுநில மன்னர் என்றே எண்ணும்படியாக இருக்கும்!
திரு. மதுரை முத்து நாயகர் அவர்கள் மிக்க உழைப்பின் பலனாகப் பெரும் சுண்ணாம்பு வியாபாரியாகவும், காண்டிராக்டராகவும் திகழ்ந்தார்.
மக்கள் அவர் மீது மிக்க மதிப்பும், அன்பும் கொண்டிருந்தனர். பெரியதனக்காரர் பதவியையும், அவர் வகித்து மக்களிடையே நல்வாழ்வைப் பரப்பி வந்தார்.
திரு. மதுரை முத்து நாயகரின் குமாரர்கள் ஐவராவர். இவர்கள் திரு. ஜயராம நாயகர், திரு. லட்சுமணப் பெருமாள் நாயகர், திரு. ஆதிகேசவலு நாயகர், திரு. கருடபதி நாயகர், திரு. சுந்தரராஜ நாயகர் ஆவர்.
திரு. ஆதிகேசவலு நாயகர் இளமையிலேயே உள்ளத்தில் தேசபக்தி குடி கொண்டவர். ஏழை மக்களின் துன்பங்களை அகற்றுவதில் அக்கறை கொண்டவர். இந்த உணர்ச்சிகள் அவரைத் தேசிய இயக்கத்திலும், தொழிலாளர் இயக்கத்திலும் தொடர்பு கொள்ளச் செய்தன. பழம் பெரும் தொழிலாளர் தலைவர்களான திரு. சிங்காரவேலு செட்டியார், திரு. வாடியா, திரு.வி. கல்யாணசுந்தரனார் முதலியவர்களுடன் சேர்ந்து தொழிலாளர் நன்மைக்காக பணிபுரிந்தார். வடசென்னைத் தொழிலாளர் சங்கத்தின் பொதுக் காரியதரிசியாகப் பதவி வகித்துச் சென்னையிலேயே முதன்முதலாக நடைபெற்ற பிரசித்தி பெற்ற தொழிலாளர் வேலை நிறுத்தத்தை 1917ல் வெற்றிகரமாக நடத்தி வைத்தார். சென்னை அரசாங்க அச்சுக் கூடத் தொழிலாளர்கள் சங்கத்திலும் சென்னை அரசாங்கப் பொது மராமத்துத் துறைத் தொழிலாளர்கள் சங்கத்திலும் அதிகமாக ஈடுபட்டிருந்தார்.
செங்கற்பட்டு ஜில்லாவிலும், சென்னை நகரிலும் காங்கிரஸ் இயக்கம் தோன்றுவதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் சர்தார் ஆதிகேசவலு நாயகர் அவர்கள். சிறந்த வழக்கறிஞரும், பெரும் தலைவருமான திரு. எஸ். சீனிவாச அய்யங்கார் அவர்களுடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டு, அவர் அரசியலிருந்து விலகும் வரை அவருடன் காங்கிரஸில் பணிபுரிந்தார். திரு. நாயகர் செங்கற்பட்டு ஜில்லா சென்னை மாநகர் காங்கிரஸ் சபையின் காரியதரிசியாகப் பல ஆண்டு இருந்து, திரு. எம்.கே. ஆச்சாரியர் முதலிய பிரபல தலைவர்களுடன் கிராமம் கிராமமாகச் சென்று தேசிய உணர்வைப் பரப்பினார். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து பல பெரிய பதவிகளைத் திரு. நாயகர் வகித்தார். சென்னை ஜில்லா காங்கிரஸ் சபையின் தலைவராகவும், தமிழ்நாடு காங்கிஸ் காரிய நிர்வாக சபையின் அங்கத்தினராகவும், அகில இந்திய காங்கிரஸ் சபையின் அங்கத்தினராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் பொதுச்சபையின் அங்கத்தினராகவும் சேவை புரிந்துள்ளார். காங்கிரஸ் சபையோடு நெருங்கி ஒத்துழைக்கும் சென்னை மகாஜன சபையின் தலைவராகவும் திரு. நாயகர் மும்முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட ஒத்துழையாமை சட்ட மறுப்பு இயக்கத்தை நடத்தி வைக்கச் சென்னையின் ஐந்தாவது சர்வாதிகாரியாக திரு. நாயகர் நியமிக்கப்பட்டுப் பலத்த தடியடிக்கு உட்பட்டுச் சிறை புகுந்தார். தலையில் ஏற்பட்ட உள்காயங்கள் அவரது முதிய பருவத்தில் நலிவு தந்து வெகுவாக மயக்கத்தை உண்டு பண்ணி வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களில் ஈடுபட முடியாமல் செய்துவிட்டன. பஞ்சாப் சிங்கமான திரு. லாலா லஜபதிராய் அவர்கள் மார்பில் ஏற்ற போலீஸ் தடியடிகளால் முன்னாள் இந்திய அரசாங்க உள்துறை அமைச்சர் திரு. கோவிந்த வல்லப பந்த் போலீஸ் தடியடியின் விளைவாக நரம்பு வலுவிழந்து, தலை அசைவு ஏற்பட்டு, உடல் தளர்ந்து இறந்தார். திரு. நாயகருடன் தடியடியும், பிரம்படியும் பட்டவர்கள் காலஞ்சென்ற திரு. சி.என். முத்துரங்க முதலியாரும், தற்போதைய முதலமைச்சர் திரு. மீ. பக்தவத்சலம் அவர்களுமாவார்.
இந்திய மக்களின் சம்மதம் இல்லாமல், இந்தியாவைத் தமக்கு அனுகூலமாக ஆங்கிலேயர்கள் யுத்தத்தில் ஈடுபடுத்தியதை எதிர்த்து மகாத்மா காந்தி யுத்த எதிர்ப்பு – தனி நபர் சத்தியாகிரகத்தை ஆரம்பித்த போது, அதில் சென்னை மக்களின் சார்பில் கலந்து கொள்வதற்காக திரு. சர்தார் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார். யுத்த எதிர்ப்பு கோஷம் புரிந்து சிறையும் புகுந்தார்.
1942 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் பம்பாயில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் சட்டசபையின் கூட்டத்தின் விளைவால், காங்கிரஸைச் சட்டவிரோத சபையாக்கித் தலைவர்களைக் காலவரம்பின்றிக் கைது செய்த போது திரு. சர்தார் நாயகர் அவர்களும் கைது செய்யப்பட்டார். இந்த முறை அவர் உடல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு விட்டது. கடைசி நாள் வரை உடல் நலம் இல்லாமலேயே திரு. சர்தார் நாயகர் வாழ நேரிட்டது.
மக்களுக்குச் சேவை புரிவதற்காகவும், அந்நிய அரசாங்கத்தைப் பல முனைகளிலும் எதிர்ப்பதற்காகவும், சட்டசபைகளையும், இதர மாவட்ட, நகராட்சி சபைகளையும் காங்கிரஸ் காப்பாற்ற வேண்டுமென்று தொடர்ந்து பிரசாரம் செய்தவர்களில் திரு. சர்தார் அவர்களையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இந்தக் கொள்கைக்குத் திரு. சத்யமூர்த்தி தான் மிக்க ஊக்கத்துடன் ஆதரவு தேடி வந்தார்.
சென்னை நகர சபையைக் கைப்பற்ற வேண்டுமென்று காங்கிரஸ் சபையின் சார்பில் அபேட்சகர்களை நியமிக்கும் சபையிலும் திரு. சர்தார் நாயகர் அங்கம் வகித்தார். காங்கிரஸின் சார்பில் பலத்த தேர்தல் பிரசாரம் செய்து, நகர சபைத் தேர்தலிகளில் அமோக வெற்றியும் அடைய மிக்க பாடுபட்டார். கொருக்குப்பேட்டைத் தொகுதியின் பிரதிநிதியாகத் திரு. சர்தார் நாயகர் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
திரு. நாயகர் நகர சபையின் மராமத்து வேலைக்குழு, நகர நிர்மாணக் குழு அங்கத்தினராகவும், வரி, நிதிக்குழுவின் தலைவராகவும் பணிபுரிந்தார்.
நகர சபை நிர்வாகங்களில் மிகத் திறமை பெற்றிருந்த திரு. எஸ். சத்தியமூர்த்தி அவர்கள் சென்னை மேயராக 1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது அரசியல் வாழ்க்கைத் துணைவராகத் திகழ்ந்த திரு. சர்தார் நாயகர் அவர்களும் அப்போது துணை மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திரு. சத்தியமூர்த்தி டில்லி சட்டசபைக் கூட்டங்களுக்கு அடிக்கடிச் செல்ல நேர்ந்தால், திரு. சர்தார் அவர்கள் பல சமயம் நகர சபைக் கூட்டங்களுக்குத் தலைமை வகித்து நடத்தினார். மேயருடைய அலுவலகங்களில் மிக்க பங்கு கொண்டு, மேயருக்குப் பதில் அதிக காலம் பணியாற்றிய துணை மேயர், திரு. சர்தார் நாயகர் அவர்கள் எனக் கூறலாம்.
சென்னை நகரின் பொது வாழ்க்கையில் மிகப் பிரபலமானவர் திரு. சர்தார் நாயகர் அவர்கள். சென்னை நகரின் சகல பொதுத் துறைகளிலும் மிக்க பங்கு கொண்டிருந்தார். அவரது கம்பீரமான தோற்றமே எவரையும் அவரிடம் உடனே ஈடுபடுத்தும். முறுக்கேற்றிய மீசை, சிரித்த முகம், அன்பு ததும்பும் கண்கள், மிடுக்கான நடை, கோட்டு, அங்கவஸ்திரம், தலைப்பாகை, கீழ்ப்பாச்சிய வேஷ்டி உடை, கையில் அழகிய தடி இவைகள் திரு. சர்தார் அவர்களின் இணைபிரியா சின்னங்கள்.
கூட்டங்களில் சிம்மக் குரலில் கம்பீரமாகப் பேசுவார். எவ்வளவு பெரிய கூட்டமானாலும் சளைக்காமல், ஒலி பெருக்கி இல்லா காலத்திலும் பேசுவார். அரசியல் விஷயங்களைப் பொது மக்களுக்கு புரியும்படி தமிழில் பேசுவதில் வல்லவர்.
திரு நாயகர் அவர்கள் அஞ்சா நெஞ்சம் படைத்தவர். ‘உச்சி வான் இடிந்து விழுகின்ற போதினும் கச்சை உடையணிந்த வேல் படைகள் வந்த போதினும் அச்சமில்லை! அச்சமில்லை! அச்சமென்பதில்லையே! என்று மனப்பான்மையை வாழ்ந்தவர். இதந்தரும் மனை நீங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும், கோடை இடி முழக்கத்தில் சிரிக்காமல் இருக்கமாட்டார் திரு. நாயகர். இவரது தனித் தலைமைக் குணங்களே இவருக்குச் ‘சர்தார்’ என்ற சிறப்புப் பட்டத்தை அளிக்கச் செய்தன.
திரு. சர்தார் அவர்கள் மிகக் கண்ணியமாக நடந்த கொள்வார். ஏழை – பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் அன்புடன் பழகுவார். மிக்க அநுபவமும், சாந்தமும் படைத்தவர். எந்தச் சபையில் அங்கம் வகித்தாலும், நடவடிக்கையில் கலந்து கொண்டாலும் இவரது தனிக்குண விசேஷங்கள் வெளிப்படும்.
புஷ்பச் செடிகள் வளர்ப்பதிலும், பூங்காக்களை நேர்த்தியாக அமைப்பதிலும், நல்ல காற்றுள்ள இடத்தில் உலவுவதிலும் திரு. நாயகருக்குப் பிரியம் அதிகம்.
திரு. சர்தார் அவர்களுடைய மனைவியார், செய்யூர் திரு. நாராயண சுவாமி நாயகருடைய புதல்வியராகிய திருமதி. ராஜம்மாள் ஆவார். திரு. சர்தார் அவர்களுக்கும் நான்கு குமாரர்களும், மூன்று பெண்களும் உள்ளனர். முதல் குமாரர் திரு. பு.ஆ. கோபால கிருஷ்ணன், பி.ஏ., சமுதாய நலத்துறையில் கல்வி வளர்ச்சி அதிகாரியாகப் பணியாற்றுகிறார். இரண்டாவது குமாரரான திரு. பு.ஆ. வரதராஜன் சுண்ணாம்பு வியாபாரம், கண்டிராக்ட் வேலைகளைச் செய்கிறார். அடுத்த குமாரர் திரு. பு.ஆ. ஸ்ரீனிவாசன் பி.எஸ்.ஸி., வாசித்துக் கொண்டிருக்கிறார். கடைசி குமாரர் திரு. பு.ஆ. தெய்வசிகாமணி, பி.ஏ., பி.எல்., வழக்கறிஞர் பாரத் சேவக் சமாஜத்தின் சென்னைக் கிளையின் தலைவராகவும், சென்னை மாணவர் சமூகத் தொண்டு சபையின் தலைவராகவும் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸின் மாநில இணை அமைப்பாளராகவும் உள்ளார். மற்றும் பல பொதுப் பணிகளிலும் பங்கு கொண்டுள்ளார்.
பெண்கள் கல்வியில் மிக்க ஊக்கம் கொண்டவர் சர்தார் அவர்கள். முதல் புதல்வி திருமதி. கவுசல்யா தேவி, பி.எஸ்.ஸி., பி.டி., பட்டம் பெற்ற தில்லியில் மதராசி பாடசாலையில் ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இரண்டாவது குமாரத்தி திருமதி. சரோஜினிதேவி, பி.ஏ., பி.எல்., பட்டம் பெற்று வன்னிய சமூகத்திலேயே முதலாவது பெண் வழக்கறிஞராகி உள்ளார். மூன்றாவது புதல்வி திருமதி. இந்திராணி தேவி தந்தையின் உடல்நலம் குன்றியதன் காரணமாக, உடனிருந்து சேவை புரிந்து பத்தாவது படிவத்துடன் தன் படிப்பை நிறுத்திக் கொள்ள வேண்டியதாகி விட்டது. ‘சட்டங்கள் செய்வதும், பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்.’ என்ற மகாகவி பாரதியின் கனவைத் தம்மால் இயன்ற அளவில் நிறைவேற்றியுள்ளார் திரு. சர்தார்.
திரு. சர்தார் அவர்களுடைய முதல் மருமகன் திரு. வேணுகோபால் நாயகர், பி.ஏ., பி.எல்., அனைத்து இந்திய கைவண்ணக் கழகத்தின், துணை இயக்குநராகப் புதுதில்லியில் பணிபுரிகின்றார். இவர் சென்னை ஸ்ரீவைணவ மகா சங்கத்தின் காரியதரிசியுமாவார். இரண்டாவது மருமகன் திரு. ந. சங்கர நாராயணன் பி.காம்., பிரபல கெமிக்கல்ஸ் தயாரிப்பாளர்களான சாராபாய் கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தஞ்சை ஜில்லா பிரதிநிதியாக உள்ளார்.
பலர் தோன்றி, மறைகின்றனர்… சிலர் தோன்றி உடல் மறைந்தாலும் உலகத்தார் உள்ளத்தில் மறைவதில்லை… இரண்டாவது பிரிவில் சிறப்பாக இடம் பெறுபவர், (09.09.1964ல்) சென்னையில் அமரரான நமது சர்தார் பு.ம. ஆதிகேசவலு நாயகர் அவர்கள்.
……சர்தார் நாமம் வாழ்க! வாழ்க! வாழ்கவே!
- ••
ஆம்! நான் குற்றவாளிதான்…
சுதேசமித்திரன் 05.12.1942 நாள் இதழில் சர்தாரைப் பற்றி ஒரு குறிப்பு கிடைக்கிறது. அதை இப்படி வெளிப்படுத்துகிறது.
(சென்னை ஜார்ஜ் டவுன் இரண்டாவது மாகாண மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் (05.12.1942)ல் சர்தார் ஸ்ரீ பு.ம. ஆதிகேசவலு நாயக்கர் வாக்குமூலம்)
‘ஸ்ரீமான் பு.ம. ஆதிகேசவலு நாயக்கர் 05.12.1942 காலை பத்து மணிக்கு திருவொற்றியூர் ஹைரோட், தியாகராய செட்டி பார்க் முன்பாக, ‘சட்டசபை அனுமதியின்றி இந்தியா யுத்தத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆகையால் யுத்த முயற்சிகளைப் பகிஷ்காரம் செய்யும்படிக் கேட்டுக் கொள்ளுகிறேன்’ என்று தமிழில் கோஷம் செய்தாரென்றும், சுமார் 500 பேர் கூடியிருந்ததாயும், பிறகு தாம் அவரைக் கைது செய்ததாயும், வண்ணாரப்பேட்டை டிவிஷன் இன்ஸ்பெக்டர் சாட்சியாக விசாரிக்கப்பட்ட போது கூறினார்.
ஸ்ரீமான் ஆதிகேசவலு நாயக்கர் சாட்சியை யாதொரு கேள்வியும் கேட்க விரும்புவதில்லை என்று தெரிவித்தார்.
ஏதாவது தெரிவிக்க விரும்பினால் கூறலாமென்று மாஜிஸ்டிரோட் கூறியதன் பேரில், தாம் ஒரு வியாபாரி என்றும், சென்னை ஜனப் பிரதிநிதி சபை, சென்னைக் கர்ப்பரேஷன் சபை ஆகியவற்றின் அங்கத்தினர் என்றும், தாம் சென்னை மாஜி டெபுடி மேயர் என்றும், சென்னை மகாஜன சபைத் தலைவர் என்றும், கலால் லைசென்ஸ் போர்ட் அங்கத்தினர் என்றும் ஸ்ரீமான் நாயகர் தெரிவித்தார்.
அப்போது ஒரு வாக்குமூலத்தை தாக்கல் செய்தார். அதில் குறிப்பிட்டிருந்தாவது: ஜனப்பிரதிநிதி சபை அங்கத்தினர் என்ற ஹோதாவில் அச்சபையின் முடிவான தீர்மானத்தை எனது தொகுதியின் வாக்காளர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது எனது நியாயமான கடமை. சென்னை ஜனப் பிரதிநிதி சபையும், இந்தியா சட்டசபையும் யுத்த முயற்சி சம்மந்தமாகக் கலந்து கொள்ளப்படவில்லை என்ற காரணத்திற்காக அதற்கு உதவக் கூடாதென்று முடிவு செய்திருக்கின்றன. சபைகளின் முடிவைத்தான் எனது தொகுதிக்குத் தெரிவிக்க முயன்றேன். இது கூடக் குற்றமாகக் கருதபடுமானால் நான் குற்றவாளி தான்’ என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
- ••
சிலை வைத்திடுக!
தேசிய ரயில்வே தொழிற்சங்கங்களைத் தோற்றுவித்தவர், அவைகளில் தலைவராக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் இயக்கத்தின் செயலாளராய், தலைவராய் இருந்தவர். காந்தியடிகளை 1921லேயே பம்பாயிலிருந்து அழைத்து வந்து சென்னை மெரினா கடற்கரையில் காந்தியடிகளின் முதல் பொதுக் கூட்டத்தை நடத்தியவர். 1921, 36 ஆகிய ஆண்டுகளில் நேருவைத் தமிழகத்திற்கு சுற்றுப் பயணமாக அழைத்து வந்து இந்திய சுதந்திரத்திற்கான பிரச்சார கனலை மூட்டியவர்.
காந்தியார் அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் தீவிர பங்காற்றி – சிறைப் பறவை என சொல்லத்தக்க அளவில் தமிழகத்தில் வேறு யாரை விடவும் அதிகமாக 11 ஆண்டுகள் சிறைக் கொடுமைகளை அனுபவித்தார். காந்தியார் அறிவித்த வரிகொடா இயக்கத்தை தீவிரமாக செயல்படுத்தும் முறையில் – இன்றைய சென்ட்ரல் ரயில் நிலையைம் அருகே இருந்த தனக்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களுக்கு வரி கட்ட மறுத்ததன் காரணமாக அந்த நிலங்களை இழந்தவர். (அதன் இன்றைய மதிப்பு பல நூறு கோடிகளுக்கும் மேல்.)
சர்தாரின் தேசப் பற்றுக்கு மதிப்பளித்து சர்தார் பு.ம. ஆதிகேசவலு நாயகருக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகில் உடனடியாக சிலை வைத்திட வேண்டுமென்று மாநில அரசிடம் வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் வேண்டுகோள் வைக்கிறோம்.
மாண்புமிகு மக்கள் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இந்திய பாராளுமன்ற சட்டமன்ற உறுப்பினர், சென்னை மாநகர துணை மேயர், சுதந்திர போராட்ட தியாகி சர்தார் அவர்களுக்கு சிலை வைத்திடுவார் என்று வன்னியர் குல சமுதாயம் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
- ••
இந்துமத பாடசாலை தோன்றி வளர்ந்து நாட்டுக் குழந்தைகளுக்கு 49 ஆண்டுகளாக நற்றொண்டு புரிந்து வருகிறது. பாடசாலையால் பல பெருமக்கள் உளமார அன்புகொண்டு, அதன் வளர்ச்சிக்கு ஆவனவற்றை இன்று வரையில் செய்து வந்தார்கள். செய்தும் வருகிறார்கள்.
அவர்களில் ஒருவர் சென்னை முன் நாள் துணை மேயர் இந்தியப் பாராளுமன்றம், சென்னை சட்டசபைகளில் உறுப்பினராக இருந்த சர்தார் பு.ம.
ஆதிகேசவலு நாயகர் அவர்கள் ஆவார். அவர்கள் நிகழும் குரோதி ஆண்டு ஆவணித் திங்கள் 25-ம் நாள் (09.09.1964) புதன் கிழமை ஆசாரியார் திருவடி அடைந்தார். அது கருதி நீத்தார் வழிபாடு (24.09.1964இல்) சென்னையில் நடைபெற்றது. இன்று முதலாண்டு நிறைவு நடக்கிறது. இதில் கலந்து கொண்டு வாலாஜாபாத் இந்து மத பாடசாலையின் சார்பில் இந்நூலை நினைவு மலராக வெளியிடுகிறோம். சென்னையில் புகழுடன் தோன்றி, புகழுடன் வளர்ந்து புகழுந்த வாழ்ந்து வந்த உயர்திரு. பு.ம. ஆதிகேசவலு நாயகர் அவர்கள் பல பொது நிலையங்களோடு தொடர்பு வைத்துக் கொண்டு அவைகளுக்கெல்லாம் நலங்கள் புரிந்து மகிழும் பண்பு கொண்டிருந்தவர்கள்.
வாலாஜாபாத் இந்து மத பாடசாலையும் அதன் சார்பிலுள்ள வள்ளலார் மாணவர் இல்லமும், திருவள்ளுவர் தொழிற்சாலையும் அவ்வண்ணலாருடைய அன்பிற்குரியவைகள். இந்து மத பாடசாலை, வள்ளலார் மாணவர் இல்லங்களில் நடைமுறைகளைப் பற்றி அறிந்து அப்பெரியார் என்றும் மகிழ்ந்தவர்கள். அந்தச் செம்மல் நம்மை விட்டுப் பிரிந்தார். புவி வாழ்வை நீத்து எம்பெருமான் திருவடிகளை அடைந்தார்.
- ••
சேவையில்
பட்டம் பெற்ற பன்னிருவர்
- கவி அரசர் ரவீந்திரநாத் தாகூருக்கு அவரது என்பதாவது பிறந்த தினத்தன்று ‘பாரத பாஸ்கர்’ எனப் பட்டம் சூட்டப்பட்டது!
- மோகன் தாஸ் காந்தியின் பெருமையைக் கண்ட திருமதி அன்னிபெசண்ட் அம்மையார் அவரை மகாத்மா வாக்கினார்!
- வங்கம் தந்த சிங்கமான சித்த ரஞ்சன்தாஸ் ‘தேசபந்து’ என்று புகழப்பட்டார்.
- சார்லி ஆன்ட்ரூஸ் மகாத்மாவின் பிரியத்தைப் பெற்றுத் ‘தீனபந்து’ என்று புகழப்பட்டார்!
- வங்க வீரர் ஜே.எம். சென்குப்தா ‘தேசப் பிரியா’ என்ற சிறப்புப் பெற்றார்!
- சுபாஷ் சந்திரபோஸ் ‘தேச கௌரவ’ என்றும், நேதாஜி (தலைவர்) என்றும் வெகுவாகப் பாராட்டப்பட்டார்!
- ஆந்திர பத்திரிகாவின் அதிபரும், அமிர்தாஞ்சன் உரிமையாளருமான ஸ்ரீநாகேஸ்வரராவ் பந்தலு ‘தேசாத்தோரகா’ என்று கொண்டாடப்பட்டார்!
- ஒரு சமயம் அகில இந்தியக் காங்கிரஸ் காரியதரிசியாக இருந்த திரு. கொண்டா வெங்கடப்பய்யா ‘தேசபக்தா’ என்று கௌரவிக்கப்பட்டார்!
- ஸ்ரீபிரகாசம் அவர்களுக்குக் கிடைத்த பட்டம் ‘ஆந்திர கேசரி’யாகும்!
- வல்லபாய் பட்டேல் மகாத்மாவால் ‘சர்தார்’ (வீரத்தலைவர்) பட்டமளிக்கப்பட்டார்!
- வேதாரண்யம் ஸ்ரீவேதரத்தினம் பிள்ளை அவர்கள் ‘சர்தார்’ பட்டம் பெற்றார். வேதாரண்யம் உப்பு சத்யாக்கிரக இயக்கத்தின் போது!
- சென்னை ஸ்ரீ பு.ம. ஆதிகேசவலு நாயகர் அஞ்சா நெஞ்சுடன் அண்ணல் காந்தியடிகளார் வகுத்த தேசியப் போராட்டங்களை முன்னின்று முரசு கொட்டி நடத்தியமைக்கு நன்றி மறவாத உலகம் அளித்த பட்டமே ‘சர்தார்’ என்பது!
- ••
திருக்குறளிலே ஒரு குறள் நம் நாயகர் அவர்களது பெருமை பேசிடும் குறள்:
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்”
பிறக்கும் பொழுதே உலகில் ஒவ்வொருவரும் தனித்தனித் தன்மையாகப் பிறப்பதில்லை. பிறப்பு எல்லாருக்கும் ஒத்த தன்மையாகவே இருக்கிறது. ஒவ்வொருவர் செய்யும் தொழிலைப் பொறுத்து அவரவர் பெருமைகளும் வேறுபடுகின்றன. அப்படி தனது உழைப்பினால் பெருமை பெற்றவர்களுள் ஒருவர் திரு. ஆதிகேசவலு நாயகர் அவர்கள்.
மகாத்மா காந்தியடிகளின் மகத்தான விதி வழிகட்கு உட்பட்டு சென்னையிலே ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்கக் காரணமாக இருந்தார். சென்னை நகரிலும் செங்கற்பட்டிலும் காங்கிரஸ் இயக்கம் தோன்ற இவரே காரணமாக இருந்தார். இவர் தம் அஞ்சா நெஞ்சத்தையும், நேர்மையினையும் கண்டு காந்தியடிகள் அளித்த வெகுமதி ‘சர்தார்’ என்ற பட்டமாகும். இவரைப் போன்று ‘சர்தார்’ என்ற பட்டம் பெற்ற மற்றவர்கள் திரு. பகவத்சிங், திரு. வல்லபாய்படேல், திரு. வேதரத்தினம் பிள்ளை ஆகியோர் ஆவர்.
ஒருமுறை 1941-ல் வேலூர் சிறையில் இருந்த போது, உடன் கைதியாக இருந்து வினோபாவேஜி தமிழ் கற்றுக் கொள்ள ஆவல் கொண்டு அங்கிருந்த நாயகரை வேண்டிக்கொள்ள, அவர் தமக்குத் தெரிந்த தமிழை உடனே கற்றுத் தந்தாராம்! பெண்கள் கல்விக் கற்கத் தயங்கிய காலத்திலே, பெண்கள் படிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அதற்கு எடுத்துக் காட்டாகத் தாம் இருக்க வேண்டுமென்று எண்ணித் தனது புதல்விகளான திருமதி. கௌசல்யா தேவியை B.Sc.,B.T.,யும் திருமதி. சரோஜினி தேவியை B.A., B.L., படிப்பும் படிக்க வைத்தார். இவரது மூத்த புதல்வி கௌசல்யாதேவியின் கணவர் திரு. வேணுகோபால் நாயகர், B.A., B.L., அனைந்திந்திய கைவண்ணக் கழகத்தின் துணை இயக்குநராகப் புதுடில்லியில் பணிபுரிகின்றார். திரு. நாயகர் அவர்கள் தமது உழைப்பாலும், தியாகத்தாலும், நேர்மையாலும் முன்னுக்கு வந்தவர்! காங்கிரஸ் இயக்கம் இன்று சென்னையில் ஆலமரம் போல் படர்ந்து வளர்ந்திருப்பதற்கு நாயகர் முதன்மைக் காரணமாவார்! திருவள்ளுவர் அழகாகக் கூறியது இங்கே பொருந்தும்.
‘துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக் கொண்டற்று’
-விவசாய உலகம்
- ••
சுதந்திர போராட்ட தலைவர்
சர்தார் P.M. ஆதிகேசவலு நாயகர்
தேசபக்தரின் மறைவு குறித்து கல்கி இரங்கல்
சென்னை, கொருக்குப்பேட்டை திரு. பு.ம. ஆதிகேசவலு நாயகர் என்றாலே சென்னைவாசிகளுக்கு அந்நாட்களில் ஒரு மதிப்பும், மரியாதையும் உண்டு. கதர் தலைபாகையும், கழுத்தை நெருக்கிப் பிடிக்கும் கோட்டும். பஞ்ச கச்ச வேட்டியுமாக அவர் வெளிவரும் கம்பீரத் தோற்றம் மட்டுமின்றி அவருடைய சிறப்பான கடவுள் பக்தியும், தேசப் பணியும் சேர்ந்து இவர் மதிப்புக்குரியவர் என்று கட்டியம் கூறும். காங்கிரஸில் சேருவது என்றால் சிறைவாசத்துக்கும், தியாக வாழ்க்கைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றிருந்த நாட்களில் திரு. பு.ம. ஆதிகேசவலு நாயகர் சென்னை காங்கிரஸ் கட்சியில் ஒரு முக்கியமான தலைவர். சென்னையில் உப்பு சத்தியாக்கிரகம் இவர் தலைமையில் சிறிது காலம் வெற்றியுடன் நடந்ததால் நகர மக்களிடம் ‘ஸர்தார்’ என்ற அன்புப் பட்டமும் பெற்றார்.
சென்னை நகராட்சி மன்றத்தில் பலகாலம் உறுப்பினராக இருந்து, சிறந்த பணியாற்றியிருக்கிறார். காலஞ்சென்ற எஸ். சத்திய மூர்த்தி அவர்கள் சென்னை மேயராக இருந்த காலத்தில் இவர் உதவி மேயராக இருந்து, திரு. சத்தியமூர்த்தி அவர்கள் தில்லி முதலிய இடங்களுக்குச் சென்றுவிடும் காலங்களில் வெற்றிகரமாகச் சென்னை நகராட்சி மன்ற அலுவல்களை நடத்திப் பெரும் புகழ் பெற்றார். காலஞ் சென்ற ஸ்ரீமான் எஸ். சீனிவாச அய்யங்கார் அவர்களிடம் நெருங்கிப் பழகி அவருடைய அன்பைப் பெற்றிருந்தார்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தியாகிகள் பாராட்டு விழா கொண்டாடப்பட்ட போது, ஸ்ரீஜயப்பிரகாஷ் நாராயணர் அவர்களிடம் சென்னையின் முதல் தியாகியாகக் கதராடை பெறும் கௌரவத்தையும் பெற்றார். ராஜாஜியும் இவரிடம் விசுவாசமும் மதிப்பும் கொண்டிருந்தார்.
இத்தகைய நல்ல தேசபக்தர் தமது அறுபத்தைந்தாவது வயதில், காலமான செய்தி கேட்டு வருந்துகிறோம். அவருடைய குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ••
சக்தி ஊட்டும் சர்தார் அவர்களே!
நாங்கள் நிலவுலகில் வாழ்ந்த காலத்துத் திருவருளால் அனைத்து மக்களும் போற்றிப் புகழ்ந்து வாழ்த்தும் வண்ணம் விளங்கிய தங்களைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தோம். தங்கள் பிரிவு எங்களுக்குப் பெருவருத்தம் தருகிறது.
தங்கள் குடும்பம் நாட்டு நலத்தில் கருத்துடைய குடும்பம். குழந்தைகளே நாட்டின் செல்வங்கள் என்பதை உணர்ந்து அவர்கள் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் சிந்தை குளிரச் செய்ய வல்ல குடும்பம். நமது குருகுலத்தின் பால் என்றும் இனிய அன்பு கொண்டு எங்கள் ஏழைக் குழந்தைகளை அன்புடன் வாழ்த்தி வரும் குடும்பம். தாங்கள் புரிந்த நற்செயல்கள் பலவாகும். 49 ஆண்டுகளாக நடைபெறும் வாலாஜாபாத் குருகுலத்தின் பால் தாங்கள் கொண்டிருந்த பற்றினை எண்ணும் நாங்கள் தங்கள் பிரிவைக் கருதி துன்புறுகிறோம்.
படைத்து, அளித்து, அழிக்கும் பரம்பொருளே!
தேவரீரது திருவருள் குறிப்பின்படி, எல்லா உலகங்களும், அவற்றில் வாழும் உயிர் வகைகளும் இயங்குகின்றன. இங்கு நடைபெறும் எண்ணில்லாத செயல்களுக்கு எங்களால் காரணம் தெரிந்து கொள்ள முடியவில்லை.
இனிய பண்புகளும், தூய திருவுள்ளமும் கொண்டிருந்த உயர்திரு. சர்தார் பு.ம. ஆதிகேசவலு நாயகர் அவர்கள் தேவரீர் திருவடிகளைச் சேர்ந்தார். அன்னாரது ஆருயிர் தேவரீர் திருவடி மலர்களில் என்றும் தங்கி இன்புறுவதாக எனத் தேவரீரை வேண்டுகிறோம்! இந்துமத பாடசாலையின் 1000 குழந்தைகள் சார்பிலும் வள்ளலார் இல்லத்தின் 800 சிறுவர்கள் சார்பிலும், தங்கள் பொன்னார் திருவடிகளைப் பணிந்து போற்றுகிறோம்.
பணிவார்ந்த
இந்துமத பாடசாலையார்
சென்னை.
24.09.1964
* ••• *