வெளியான தேதி : 13.10.2019/சென்னை

முரசொலி பத்திரிகையில் வெளிவந்த செய்தியறிக்கை

விக்கிரவாண்டி தேர்தல் பிரச்சாரத்தில் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் அறைகூவல்!

 

விக்கிரவாண்டி, அக். 13-

………………………………………………………………….

கழகத்தை தொடங்கிய போது அறிஞர் அண்ணா அளித்த வாக்குறுதி!

அறிஞர் அவர்கள் இந்த இயக்கத்தை தொடங்கிய நேரத்தில் தெளிவாக எடுத்துச் சொன்னார்.

‘இந்தக் கழகம், ஏழை – எளிய மக்களுக்காக, விவசாயப் பெருங்குடி மக்களுக்காக, தொழிலாளர்த் தோழர்களுக்காக, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, சிறுபான்மைச் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் என ஒட்டு மொத்தத் தமிழனத்திற்கும் பாடுபடும்’ என்று அறிவித்தார்கள்.

தலைவர் கலைஞர் அவர்கள் அடிக்கடி குறிப்பிட்டுச் சொல்லுவார், ‘நான் மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவன்’ என்று சொல்லுவார். எனவே, அந்தச் சமுதாயத்திற்குத்தான் நான் பாடுபடுவேன் – பணியாற்றுவேன் என்று தொடர்ந்து கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

குறிப்பாக இந்த விக்கிரவாண்டி தொகுதியைப் பொறுத்தவரையில் மிக மிக பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்திருக்கக் கூடிய மக்கள் வாழும் பகுதி என்பதை எல்லோரும் நன்றாக அறிவீர்கள்.

பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்திருக்கக் கூடிய வன்னியர் சமுதாய மக்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்த தலைவர் தான் நம்முடைய தலைவர் கலைஞர் அவர்கள் என்பது நாடறிந்த உண்மை.

 

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு தந்து வாக்குறுதியை நிறைவேற்றியவர் கலைஞர்!

1989 – தேர்தலில் போட்டியிட்ட நேரத்தில், அப்போது தலைவர் கலைஞர் அவர்கள் தந்த உறுதிமொழி அது.

‘மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் இருக்கக்கூடிய மக்களின் கோரிக்கையான 20சதவிகித இட ஒதுக்கீட்டை நான் ஆட்சிக்கு வந்தவுடன் உடனடியாக அந்தச் சமுதாயப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி கலந்துரையாடி அறிவிப்பேன்’ என்று வன்னியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக விளங்கிய சி.என். இராமமூர்த்தி உள்ளிட்ட வன்னிய சமுதாய மக்களின் பிரதிநிதிகளை எல்லாம் அழைத்து உறுதியளித்ததோடு, ஆட்சிக்கு வந்தவுடன், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு 20 சதவிகித இட ஒதுக்கீட்டைத் தந்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

இடஒதுக்கீட்டுப் போராளிகளின் குடும்பங்களுக்கு ஈடிணையிலா உதவிகள்!

அதுமட்டுமல்ல, 1987-ல் போராட்டம் நடந்த போது அன்றைக்கு ஆட்சியில் இருந்தது அ.தி.மு.க. அப்போது இட ஒதுக்கீடுக்கான போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

1996ல் ஆட்சிக்கு வந்த நேரத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியான வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு, தலா 3 லட்சம்  ரூபாய் நிதியுதவி அளித்தார்.

அப்படி உயிர்த்தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீடு போராட்டத் தியாகிகளாக அங்கீகரித்து, அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் ‘பென்ஷன்’ அறிவித்தார்.

சுதந்திரப் போராட்டத் தியாகிகள், மொழிப் போர்த் தியாகிகளுக்கு இணையாக அளிக்கப்பட்ட அந்த அங்கீகாரத்தின் விளைவாக, இன்றுவரை அந்தக் குடும்பங்களுக்கு பென்ஷன் வழங்கப்பட்டு வருகிறது.

 

 

இராமசாமி படையாச்சியாருக்கு திருவுருவச்சிலை

அதேபோல் மறைந்த எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட போது, தலைவர் கலைஞர் அவர்கள் உடனடியாக என்னை அழைத்து, அவர்கள் தேர்வு செய்த மூன்று இடங்களில் ஒன்றை தேர்ந்தெடுக்கச் சொல்லி, வன்னியர் சமுதாயத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாச்சியார் அவர்களுக்கு, சென்னை – கிண்டி ஹால்டா சந்திப்பில் முழு உருவச் சிலை அமைத்து, அதனைத் திறந்து வைத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

1954ஆம் ஆண்டில் இருந்து 1957ஆம் ஆண்டு வரையில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர் தான் இராமசாமி படையாச்சியார் அவர்கள்.

அதேபோல், திண்டிவனம் வெங்கட்ராமன் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்த நேரத்தில் கேபினெட் அந்தஸ்துள்ள மத்திய அமைச்சராக்கினார் தலைவர் கலைஞர் அவர்கள்!

கழக ஆட்சியில் – முதல்வரின் செயலர்களில் ஒருவர் வன்னியர்|

திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான், முதலமைச்சர் அலுவலகத்தில், வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த திரு. காசி விஸ்வநாதன் ஐ.ஏ.எஸ். அவர்கள், முதல்வரின் செயலாளராக நியமிக்கப்பட்டு – பிறகு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராகவும் அமர வைக்கப்பட்டார்.

புகழ் பெற்ற சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக, வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்த பொற்கோ அவர்கள் நியமிக்கப்பட்டார்.

வன்னியர்களின் சொத்துக்களைப் பாதுகாக்க வாரியம்!

வன்னியர் சொத்துக்களைப் பாதுகாக்க கழக ஆட்சியில்தான், ‘வன்னியர் நல வாரியம்‘ அமைக்கப்பட்டு – அதற்கு அந்தச் சமுதாயத்தைச் சேர்ந்த சந்திரசேகரன் ஐ.ஏ.எஸ். அவர்கள் முதல் தலைவராகவும், பிறகு ஜி.சந்தானம் ஐ.ஏ.எஸ். அவர்கள் இரண்டாவது தலைவராகவும் நியமிக்கப்பட்டதை வன்னியர் சமுதாய மக்கள் நன்கு அறிவார்கள். ஆனால், இன்றைக்கு நம்மைப் பார்த்து சிலர் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

யார் குறை சொல்கிறார்கள்? அந்தச் சமுதாயத்தைப் பயன்படுத்தி லாபம் அடைந்தவர்கள் இன்றைக்குத் தவறான பிரச்சாரத்தைச் செய்து நடந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அதற்கான விளக்கங்களைத் தான் இன்றைக்கு நான் எடுத்துச் சொன்னேனே தவிர, வேறல்ல.

4 நாட்களுக்கு முன்பு ஒரு அறிவிப்பை நான் வெளியிட்டிருக்கிறேன். என்னவென்றால், இதே மாவட்டத்தில் வன்னியர் இனத்திற்காகக் குரல் கொடுத்து உயிர் நீத்த தியாகிகளுக்கு கழக ஆட்சி வந்தவுடன் மணிமண்டபம் அமைப்போம் என்ற அந்த உறுதி மொழியை நான் தந்திருக்கிறேன்.

மேலும் அதே உணர்வோடுதான் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த ‘;ஏ.ஜி.‘ என்று அந்நாளில் எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஏ. கோவிந்தசாமி அவர்களுக்கு ஒரு மணிமண்டபம் அமைக்க வேண்டும். காரணம், ஏ.ஜி. அவர்களும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பாடுபட்டவர் – பணியாற்றியவர்.

அண்ணா தலைமையில் முதன்முதலில் அமைச்சரவையில் பொறுப்பேற்றுப் பணியாற்றியபோது, அவர் வேளாண்துறை அமைச்சர் மட்டுமல்ல, உணவுத்துறை அமைச்சர் பொறுப்பையும் சேர்த்துப் பார்த்தார். எனவே, அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில் இந்த மாவட்டத்தில் நிச்சயமாக ஒரு மணி மண்டபம் அமைக்கப்படும் என்று நான் ஏற்கனவே, அறிவித்திருக்கிறேன்.

தாழ்த்தப்பட்ட – பழங்குடி இனத்திற்கு தலைவர் கலைஞர் செய்த நன்மைகள்!

வன்னியர் சமுதாயத்திற்கு மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் என்றாலும், அவர்களுக்கான உரிமையை பெற்றுத்தரப் போராடியவர் தலைவர் கலைஞர் அவர்கள். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினருக்கான இட ஒதுக்கீட்டை 16 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக உயர்த்திக் கொடுத்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வரதராஜன் அவர்களை, சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்து அழகுபார்த்தவர் தலைவர் கலைஞர் அவர்கள்.

அதேபோல், பழங்குடி சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவரும் தலைவர் கலைஞர் அவர்கள்தான். இவற்றையெல்லாம் தலைவர் கலைஞர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்த நேரத்தில் செய்திருக்கிறார்.

நாங்கள் ஆட்சிக்கு வருகிற போது நாங்கள் வழங்கும் உறுதிமொழிகளை தலைவர் கலைஞர் வழி நின்று நிச்சயமாக எடுத்துச் செய்வோம் என்பதை உங்களுக்குத தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்தக் காணை பகுதியில் தி.மு.கழக ஆட்சியின் மூலமாக பல நல்ல திட்டங்களை நிறைவேற்றித் தந்திருக்கிறோம். அதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டு வரப்பட்டது, கிராமங்கள் தோறும் ரூபாய் 20 லட்சம் மதிப்பில் குடிநீர் வசதி செய்து கொடுத்தோம். பல திட்டங்கள் கொண்டு வந்து நிறைவேற்றி யிருக்கிறோம்.

விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில், இந்தத் தொகுதி மக்கள் பயன்படக்கூடிய வகையில் 103 ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலமாக 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு குடிநீர் மற்றும் பல்வேறு நலத்திட்டப் பணிகள் எல்லாம் நிறைவேற்றித் தரப்பட்டிருக்கிறது.

அதேபோல், கரும்புக்குப் பயிர்க்கடன் பெற்றிருக்கக்கூடிய விவசாயிகள் அதைத் திரும்பச் செலுத்த முடியாத நிலையில் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சர்க்கரை ஆலைகளில் உள்ள நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்காமல் இருப்பதைச் சரிசெய்ய இந்த அரசு ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கின்றதா என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.

 

 

பணக்காரர்களின் 76 ஆயிரம் கோடி கடனைத் தள்ளுபடி செய்த அக்கிரமம்!

நாடு முழுவதும் இருக்கக்கூடிய 220 பணக்காரர்களின் கடன் ஸ்டேட் வங்கியில் இருக்கிறது. எவ்வளவு தொகை என்றால் ரூபாய் 76 ஆயிரம் கோடி. அந்த 220 பணக்காரர்களுக்கு இருக்கக்கூடிய கடனை ஸ்டேட் வங்கி மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் தள்ளுபடி செய்திருக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் விவசாயிகளின் கடனைத் தள்ளுபடி செய்வதற்கு மத்திய அரசிற்கு மனது வரவில்லை. அதைத் தட்டிக் கேட்க இங்கு இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி முன்வருகிறதா என்றால் இல்லை.

ஏனென்றால், பயந்து – அஞ்சி – நடுங்கி – எடுபுடி ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். எனவே, இப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் எல்லோரும் முடிவு கட்ட வேண்டும்.

எந்தத் துறையாக இருந்தாலும் ஊழல், உள்ளாட்சித் துறையாக இருந்தாலும், பொதுப்பணித்துறையாக இருந்தாலும், கேவலம் குப்பை எடுப்பதில் கூட ஊழல் நடைபெறுகிறது, நெடுஞ்சாலைத் துறையாக இருந்தாலும் சரி – எந்தத் துறையாக இருந்ததாலும், எல்லாத் துறையிலும் லஞ்சம் ஊழல்! அதனை விசாரிக்க வேண்டும் என்று நம்முடைய ஆர்.எஸ். பாரதி எம்.பி., அவர்கள் வழக்குத் தொடுத்தார். அதனை விசாரித்த உயர் நீதிமன்றம், இதில் முகாந்திரம் இருக்கிறது என்று சி.பி.ஐ. விசாரிக்க உத்திர விட்டது.

உடனடியாக எடப்பாடி பழனிச்சாமி என்ன செய்திருக்க வேண்டும்? தைரியமிருந்தால் தமது பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால், தடை உத்தரவு வாங்கினார். அப்படி  தடை உத்தரவு வாங்கியிருந்தாலும் அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு தடை உத்தரவுகள் நீக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும்.

இன்றைக்கு விக்கிரவாண்டி தொகுதிக்கு முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனி சாமி பிரச்சாரத்திற்கு வந்திருக்கிறார். அவர் என்ன பேசினார் என்ற செய்தி எனக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

நேற்று முன்தினம் நாங்குநேரியில் தேர்தல் தேர்தல் பிரச்சாரத்தில் பேசுகிற போது நான் சொன்னேன். ‘;எம்.ஜி.ஆர். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; அண்ணா மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; பக்தவத்சலம் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; தலைவர் கலைஞர் அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்; ஆனால், எடப்பாடி பழனிசாமி அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்த காரணத்தினால் ஒரு விபத்தின் காரணமாக முதலமைச்சராக வந்து அமர்ந்திருக்கிறார்’ என்று சொன்னேன்.

அதற்கு விக்கிரவாண்டியில் எடப்பாடி பழனிச்சாமி, ‘நான் விபத்தில் முதலமைச்சர் ஆகவில்லை; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்’ என்று பதிலளித்துப் பேசியிருக்கிறார்.

நான் இதுவரையில், விபத்தினால் முதல்வர் ஆனவர் எடப்பாடி என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், காலில் விழுந்து முதலமைச்சர் ஆன ஒருத்தர் உண்டு – காலில் விழுந்து கூட முதலமைச்சர் ஆகியிருக்கலாம். ஆனால், சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி தவழ்ந்து போனதை வாட்ஸ் அப்பில் பார்த்திருப்பீர்கள்.

(மக்களை நோக்கி) பார்த்தீர்களா இல்லையா? (‘ஆம், எடப்பாடி தவழ்ந்து சென்று முதலமைச்சரான வீடியோவை பார்த்தோம்’ என மக்கள் முழக்கம்) அதைத்தான் நான் சொன்னேன். ‘தவழ்ந்து போவது மண்புழு! மண்புழு தான் அதுபோன்று தவழ்ந்து போகும்’ என்று சொன்னேன்.

அதற்கு அவர், ‘நான் மண்புழுதான் – விவசாயிகளுக்குப் பயன்படுகிறேன்’ என்றார். மண்புழு என்பது, மண்ணிற்குள் தான் தவழும். இவர் சசிகலாவின் காலில் அல்லவா தவழ்ந்தார்! சசிகலாவின் காலில் தவழ்ந்து முதலமைச்சராகிவிட்டு, வெட்கம் இல்லாமல், ‘நான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர்’ என்று சொல்கிறீர்களா?

நான் கேட்கிறேன், சரி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் என்றால் தைரியம் இருந்தால் – தெம்பு இருந்தால் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மக்களை வந்து சந்தியுங்கள், நானும் வந்து சந்திக்கத் தயார்.

அம்மையார் ஜெயலலிதா அவர்கள் மறைந்தபோது ஓ.பி.எஸ். அவர்களைத் தான் முதலமைச்சராக உட்கார வைத்தார்கள். ஓ.பி.எஸ். முதலமைச்சராக இரண்டு மாத காலம் இருந்தார். ஆனால், சட்டமன்றத்தில் எங்களைப் பார்த்து சிரித்த காரணத்தினால், அவரை நீக்கிவிட்டு, யாரைப் பதவியில் அமர்த்தலாம் என்று, சசிகலா தன்னையே முதலமைச்சராக அறிவித்தார். அதையெல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்!

பதவியில் அமர வைத்த சசிகலாவுக்கே துரோகம் செய்தவர்கள்!

சசிகலா பதவி ஏற்பதற்கு 5 நாட்களுக்கு முன்பு சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த காரணத்தால், சிறைக்குச் செல்ல வேண்டிய நிலைமை வந்துவிட்டது. அப்போது யாரை முதலமைச்சராக்கலாம் என்று யோசனை செய்த போது, காலில் ஏதோ தவழ்ந்திருக்கிறது. அந்த அம்மா பரிதாபப்பட்டு இந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் பதவி கொடுத்துவிட்டு, அவர் சிறையில் இருக்கிறார்.

பதவி கொடுத்த அம்மாவிற்கு – சிறையில் இருக்கும் அம்மாவிற்கு துரோகம் செய்து விட்டு நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் எல்லோரும் நன்றாக இருப்பீர்களா? என்று நான் கேட்கிறேன். இதற்கெல்லாம் பதில் கிடைக்கும் காலம் வரப்போகிறதா இல்லையா என்று பாருங்கள். ஆட்சி மாற்றம் நடைபெற்றதும், நீங்கள் அத்தனை பேரும் சிறையில் தான் இருக்கப்போகிறீர்கள்.

இப்போது நான், சகோதரிகளுக்கு ஒரு அண்ணனாக, இளையோருக்கு ஒரு சகோதரனாக, வயதானவர்களுக்குப் பேரனாக  உங்களிடத்தில் உரிமையோடு ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களின் வாழ்க்கைத் தரங்களை உயர்த்த தலைவர் கலைஞர் அவர்கள் என்னென்ன திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார் என்பது உங்களுக்குத் தெரியும்.

தி.மு.க ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் உங்களுக்காகவும் உங்களின் பிரச்சினைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தான் சூரப்பட்டு முதல் அன்னியூர் சாலை அமைத்துத் தரப்பட்டது. உயர்நிலைப் பள்ளியைத் தரம் உயர்த்தித் தந்தோம். ஆரம்ப சுகாதார மையம் அமைத்துத் தந்தோம்.

3 மேல் நிலை நீர் தேக்கத் தொட்டி அமைவதற்குக் காரணமாக இருந்தது தலைவர் கலைஞரின் ஆட்சிதான் – அதை மறந்திருக்க மாட்டீர்கள். இடைத் தேர்தல் வெற்றியை கலைஞர் நினைவிடத்தில் காணிக்கையாக்குவேன்! இந்த வெற்றியை, சென்னை மெரினா கடற்கரையில் உறங்கிக்கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் காணிக்கையாக்குவோம்!

அந்த இடத்தைப் பெறுவதற்கு நாம் என்னென்ன பாடுபட்டோம் என்பது உங்களுக்குத் தெரியும்.

தமிழர்களுக்கு –தமிழ்நாட்டிற்கு – தமிழுக்காக வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து காட்டியிருக்கக் கூடிய, ஓய்விற்கே ஒய்வு கொடுத்த தலைவர் கலைஞர் அவர்களுக்கு 6 அடி இடம் கொடுக்க மறுத்த ஆட்சி இந்த எடப்பாடி ஆட்சி. கலைஞருக்கு இடம் கொடுக்க மறுத்தவர்களுக்கு, இந்தத் தமிழ்நாட்டில் இடம் கொடுக்கலாமா?

தி.மு.க ஆட்சிக்காலத்தில் சூரப்பட்டு பகுதியில், இதே வெங்கமூர் பகுதிக்கு தண்ணீர் வருவதற்கு தடுப்பணை கட்டியது, குளம் வெட்டியது, நூலகம் அமைத்தது, தார்ச் சாலை அமைத்துக் கொடுத்தது, தலைவர் கலைஞர் அவர்கள் பெயரால் வீடுகள் உருவானது என பல திட்டங்கள் தி.மு.க.வின் ஆட்சிக் காலத்தில்தான் நடைபெற்றன என்பது உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

தற்போது உங்களுக்கு இருக்கக்கூடிய கோரிக்கை என்ன? அதனையும் நான் அறிவேன். ஆளியூர் ஊராட்சியில் இருந்து சானிமேடு கிராமத்தை தனி பஞ்சாயத்தாகப் பிரிப்பது, இடுகாடு அமைத்துத் தருவது போன்ற கோரிக்கைகள் தான். உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் நிச்சயமாகத் தீர்த்து வைத்திட முடியும்.

அத்தியூர் பகுதி மக்கள் மறந்திருக்க மாட்டீர்கள். பனமலை பேட்டை முதல் அரியலூர், திருக்கை வரை சாலை வசதி ஏற்படுத்திக் கொடுத்த ஆட்சி தி.மு.க. ஆட்சி.

சொன்னதைச் செய்வோம்! செய்வதைச் சொல்வோம்!

அரசு உயர்நிலைப் பள்ளி ஏற்படுத்திக் கொடுத்தது, பால்பண்ணை உருவாக்கியது, அங்கன்வாடிக் கட்டிடம் கட்டியது, பகுதி நேர கூட்டுறவுக் கடை கொண்டு வந்தது என, இப்படி பல திட்டங்களை தி.மு.க ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்ததை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்.

நாங்கள், சொன்னதைச் செய்வோம் செய்வதைத் தான் சொல்வோம்! அந்த அடிப்படையில் நீங்கள் எல்லோரும் நம்முடைய வேட்பாளர் புகழேந்தி அவர்களுக்கு சிறப்பானதொரு வெற்றியை தேடித் தரவேண்டும். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். நன்றி.

இவ்வாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.

  • ••• •

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu