வன்னிய சொந்தம் – ஓர் அறிமுகம்!

“ழ” கரத்துக்குப் போராடும் ஒரே வன்னிய தமிழன்

‘ழ’ கரக் கவிஞர் கடலூர் அ. தேவநாதன்

 

முன்னுரை

 

உலகத்தில் எத்தனையோ வியப்புக்குரிய சாதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. சாதனையாளரைப் பற்றி கவலைப்படாத பிறவிகள் தமிழ்நாட்டில் நிறையவே உண்டு. ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த மக்களும் கவலையே படாதவர்களாக இருப்பதை அதாவது நம் தாய் மொழியான தமிழ்மொழியை ‘ழ’ கர ஒலிப்புடன்  பேச வேண்டும் என்ற கொள்கையுடன் இல்லாமல் சிகர ஒலிப்பான சிறப்பு ஒலிப்பான இனிய அழகிய ஒலிப்பான அதைத்தான் தமிழர்கள் தேடிப்பிடித்து தவறுதலாகத் தாறுமாறாக்கிப் பேசுவதைப் பெருமையாகக் கொள்வதை கடந்த 3000 ஆண்டுகளாக பரம்பரை பரம்பரையாக ‘ழ’ கர ஒலிப்புக்கு ‘ல’ கரமோ அல்லது ‘ள’ கரமோ அல்லது ‘ய’ கரமோ அளித்துப் பேசும் நாக்கொண்டோர் இங்கின்றி வேறெங்குமே காண இயலாது. தமிழர்களில் 95% பேர்களுக்கு மேல் ‘ழ’ கர ஒலிப்பை சீர்கேடு அடையச் செய்து பேசிடுவார்கள். ஆனால் எழுதும் போது மட்டும் ‘ழ’ கர எழுத்தை சரியாக எழுதிடுவார். எழுதும் போது ‘ழ’ கரம் எழுதுபவர் பேசும் போது ‘ழ’ கர ஒலி பேசவேண்டாமா? இப்படி ‘ழ’ கர ஒலிப்பைப் பேசத் தெரியாதவர்களில் மேதைகள் நிறையவே உண்டு என்றால் அவர்களை எப்படி மேதைகள் என்று ஒப்புக் கொள்ளமுடியும்? தமிழ் என்று ‘ழ’ கர ஒலிப்புடன் பேசுவோர்தான் தமிழர்கள். பேசாதவர்கள் தமிழர்களே அல்ல எனலாம்.

 

தொல்காப்பியர் மொழி இலக்கணம் படைத்தார். திருவள்ளுவர் திருக்குறள் படைத்தார். ஆனாலும் அவர்கள் காலத்திலிருந்தே ‘ழ’ கர ஒலிப்புக்கு மதிப்பளிக்காமல் ழ, ள, ல மூவொலிப்பையும் கலந்து பேசியுள்ளது வேதனைக்குரியது. தாம் தமிழைத் தவறாகப் பேசுகிறோம் என்பதை ஒரே ஒரு தமிழன் கூட இது நாள் வரை கண்டுபிடிக்கவில்லையே! இந்த உண்மை அவலத்தைக் கண்டுபிடித்துச் சொன்ன ஒரே தமிழன் பற்றிய வாழ்க்கைக் குறிப்பைப் பெருமையுடன் அளிக்கிறேன்.

 

புகழுக்குரிய வன்னியர்

 

இந்த பெருமகனாரின் தொண்டு காலப்போக்கில் வெகு புகழ் அடையும். தமிழ் ஒரு செம்மொழி என்று முதன்முதலில் சொன்னவர் பரிதிமாற் கலைஞன் என்ற சூரிய நாராயண சாஸ்திரியார். 150 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போதுதான் அவருக்கு புகழ் பாடுகிறோம். பயன் கருதாது தமிழ் ‘ழ’ கரத்துக்குப் பாடுபடும் ஒரே தமிழர் தமிழ் ‘ழ’ கரம் பணிமன்ற மாநில தலைவர் கடலூர் அ.தேவநாதன்.

 

அதைப் போல தமிழன் சிறப்பையும் ‘ழ’கர ஒலிப்பின் தேவையையும் கண்டுபிடித்து வெளிக்காட்டி வழிகாட்டி, கடலூர் அ.தேவநாதன் அவர்கள் ஆவார். அந்த வன்னியகுலப் பெரியவரை நமது இனம் மறக்கவியலாது. அவரின் தொண்டைப் பாராட்டுவோம். செம்மொழி என்று சொன்னதற்காக சாஸ்திரியார் பாராட்டப்படுகிறார். தமிழ் ‘ழ’கரம் பேசாத தமிழர்களைப் பற்றி தோலுரித்துக் காட்டிய இந்த வன்னியரை அவரைவிட பன்மடங்கு சிறப்பு வேண்டுமல்லவா? அரசாங்கம் செய்ய ஏன் தயக்கம் காட்டுகிறது? நாமாவது பாராட்டுவோம். அவர் வன்னியர் என்பதற்காக புறம் தள்ளுவதா?

 

அவருடைய சமுதாயத் தொண்டு மொழித் தொண்டு எத்தகு உயர்வான ஒன்று!

 

வாழ்க்கைக் குறிப்புகள்

 

அன்றைய தென்னாற்க்காடு மாவட்டத்தின் தலைநகரம், இன்றைய கடலூர் மாவட்டத்தின் தலைநகரம் கடலூர். இந்த நகராட்சி எல்லைக்குள் இருந்த கண்டக்காடு, என்ற சிறு கிராமத்தில் அப்பாவு வன்னியருக்கும், தெய்வானை அம்மாளுக்கும் 10ஆவது பிள்ளையாக பிறந்தார். அ.தேவநாதன். 01.07.1963ல் ஆண்டு உப்பலவாடியிலும் உயர்நிலைப்பள்ளிப் படிப்பை மஞ்சக்குப்பம் புனித ஜோசப் பள்ளியிலும் முடித்தார்.

 

மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் எழுத்தராக மாண்புமிகு உள்ளாட்சிதுறை அமைச்சராக அப்போது இருந்த திரு. எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பரிந்துரையால் சேர்ந்தார். பின்னர் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் தேறியதால், தொழிலாளர் துறைக்கு அனுப்பப்பட்டார். இவரிடம் எந்தக் கெட்டப் பழக்கமும் கிடையாது. தண்ணீரைத் தவிர வேறு எந்த பானமும் அருந்தியவரல்லர். நியாயம் தவறாதவர்.

 

கையூட்டுக் கொடுக்காத கையூட்டுப் பெறாத நேர்மையான அரசு அலுவலராக இருந்து 30.06.1991ல் பணிநிறைவு பெற்று ஓய்வில் அனுப்பப்பட்டார். ஓய்வுக்குப் பின் தமிழ்  இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு தமிழ் மாநாடுகள் சென்னை, மதுரை, ரிஷிகேசம், அந்தமான், பாங்காக், மும்பை என்று எங்கு நடந்தாலும் சென்று வருவார். மொழிப் போரில் பங்கேற்று இருமுறை சிறையில் தள்ளப்பட்டுள்ளார். கோவை செம்மொழி மாநாட்டுக்கு கட்டுரை அனுப்பியும் அரசு தேர்வு செய்யவில்லை. காரணம் தமிழ் என்று ‘ழ’கர ஒலியை எனக்கு எல்லா தமிழர்களும் சரியாகப் பேசுகிறார்களோ, அப்போது தான் அது ஒரு செம்மொழி ஆகும். அதுவரை ஏட்டுச் சுரைக்காய் தான் என்று எடுத்துச் சொன்னதால் தேர்வு ஆகவில்லை. பொய் எழுதத் தெரியாத மனிதர் இவர்.

 

இவர் தொழிலாளர் அலுவலராக (மாவட்ட அலுவலர்) சிறப்பாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின்னரும் 9 ஆண்டுகள் த.நா. சட்ட ஆலோசனைக்குழு அலுவலகத்தில் தொழிலாளர் அலுவலராக சொற்ப மதிப்பூதியத்தில் சிறப்பாக பணிபுரிந்தார். பின்னர் அலுவலகம் தேவையில்லையென்று அரசு முடிவெடுத்து மூடிவிட்டதால் இலக்கியத்துக்கு உழைத்து தமிழ் அறிஞர் ஆனார். இலக்கணம் கற்று கவிஞரும் ஆனார். மூன்று கவிதை  நூல்கள் எழுதியுள்ளார். ‘ழ’கரத்தை வலியுறுத்தி மட்டுமே பாடல்கள் எழுதுவார். இவரது சாதனை உலகத் தரம் வாய்ந்தது. வேறு யாரும் இந்தவாறு தொண்டு ஆற்றுவது கடினம். தமிழ் உலகப் பத்திரிகைகள் எல்லாமே பாராட்டியுள்ளன. தமிழ் ‘ழ’கரம் பணி மன்றம் 1995ல் ஆரம்பித்து ஆண்டுத்தோறும் விழா எடுத்து 2002ல் மற்றும் 2006 என இருமுறை தமிழ் ‘ழ’கர மாநில மாநாடுகள் நடத்தினார். TAMIL NADU டமில் நடு என்ற அரசு பெயரைத் தவறாகச் சூட்டிவிட்டு தமிழ்நாடு (THAMIZH NAADU) என்று படியுங்கள் என்று புராணப் புளுகைப் போல அரசு பரப்பி விட்டது சரியல்ல என்கிறார் இந்த தமிழறிஞர். இதுவரை எந்தத் தமிழறிஞரும் இவரது கூற்றை மறுத்தது இல்லை மறுக்கமுடியாது! அத்தனை வலுவான கருத்து இவருடையது.

 

தமிழர்கள் எல்லா ‘ழ’கரச் சொற்களையுமே தவறாகவே ஒலித்துப் பேசுவதை இழிவாய் எண்ணுகிறார். கடந்த 3000 ஆண்டுகளாக எந்த ஒரு தமிழனும் கண்டுகொள்ளாததைக் கண்டெடுத்து வெளிச் சொன்ன பேரறிஞர் இவர் தான் எனலாம்.

 

தொல்காப்பியர் தனது 95வது எழுத்ததிகாரப் பாடலில் ர, ழ ஆகியவை பேச நூனிநா மடங்கி மேலெழுந்து மேலண்ணம் வருடினால் ர, ழ ஆகிய இரண்டும் பிறக்கும் என்றதை இவர் மறுக்கிறார். அண்ணம் வருடினால் ‘ர’ ஒலி வரும். ‘ழ’கரம் பேசும் போது வரவே வராது என்று நிரூபித்துள்ளார். இதையெல்லாம் அறிந்த அரசு இவரது திறமையைக் கண்டு கொள்ள மறுக்கிறது. காரணம் இவர் வன்னியர் என்பதாலோ? இவரின் தொண்டு தமிழை வளர்ப்பதற்கேயாம்.

 

2004-ல் அறிவியல் தமிழ்ப்பாட நூலில் அரசு ஒலிப்புப் பயிற்சிக்கு 8 முகங்களின் படங்களில் ழ, ள, ல, ர, ற, ந, ன, ண ஆகியவை ஒலிக்கும் முறையை விளக்கியது. அப்படம் தவறுதலாக வரைந்துள்ளதை இவர் எடுத்து சொல்லி அரசுக்கு எழுதினார். இரண்டே மாதங்களில் அவர் சுட்டிக் காட்டிய தவற்றை நிவர்த்தி செய்து இவரால் வரைந்து அனுப்பப்பட்ட ஒரே படத்தில் இந்த 8 எழுத்தொலியையும் அடக்கியது வியப்புக்குரியது.  திருத்தத்தை அரசு வெளியிட்டது. 2005 மே மாதத்தில் இதற்காக இவருக்கு கலைமாமணி விருது வழங்கியிருக்க வேண்டும்.

 

இவரது திறமைகளை அறிந்த தமிழ்வாணன், இவரை தமது பிரபலமானவர்களின் விலாசங்கள் என்ற புத்தகத்தில் இவர் பெயர் கவிஞர்கள் பட்டியலில் இருந்ததை தமிழறிஞர்கள் பட்டியலுக்கு மாற்றி முகவரியை வெளியிட்டது பெருமைக்குரியது. ராணி வார இதழ் இவர் ஒரு தமிழறிஞர் தான் என்பதை நேரடியாகப் பேட்டி கண்டு வெளியிட்டது ஒரு மகுடமாகும். மேலும் தமிழறிஞர்  முனைவர் மு.ச. சிவம் அவர்கள் தமிழகத்தின் 100 தமிழறிஞர்களை பேரா.க. அன்பழகனார் அவர்களை விட்டுப் பாராட்டச் செய்தார். இவரது பெயர் 3வது வரிசையில் வைத்துப் பாராட்டப்பட்டார்.

 

எந்த ‘ழ’கரச் சொல்லை யார் பாழ்படுத்திப் பேசினாலும் கடும் கோபம் வந்துவிடும். கேட்பதற்கு கொடுமையான ஒலியாக இருக்கும் என்பதோடு பொருளும் மாறி விடுகிறதே என்ற கவலை தெரிவிக்கிறார். இதில் இவர் சொல்லும் வருத்தம் யாதெனில் ஒட்டு மொத்த தமிழ் சமுதாயமும் எல்லா ‘ழ’கரச் சொற்களையும் ‘ள’கர, ‘ல’கர, ‘ய’கர மட்டும் பேசுவது பொறுக்க முடியாது என்கிறார்.

 

வத்தலக்குண்டு, அந்தமான், நிலக்கோட்டை, போடிநாயக்கனூர் ஆகிய இடங்களில் ‘ழ’கரப் பணி மன்றத்தின் கிளைகளை ஆரம்பித்து சொ. இராசாமணி கவிஞர் அந்தமான் அருண், திருமதி. உமா, திரு. இரவி ஆகியோரின் உதவியால் சிறப்பாக கிளைகளை நடத்தி வருவது பாராட்டுக்கு உரியது. சொ.இராசாமணி அவர்கள் மாநிலச்  செயலாளராக இருந்து இரவு பகல் பாராது உழைத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். அவர் தலைமை ஆசிரியராக இருந்தவர். கவிஞர் பாடல்கள் உடனுக்குடன் இயற்றி இசை அமைத்துப் பாடுவதில் வல்லவர். இந்த 2010ல் அமெரிக்கா சென்றவர். அங்கு ‘ழ’கர வகுப்புகள் நடத்திப் புகழை ஈட்டியுள்ளார். இங்கு சென்னை வந்து மாநிலத்தின் தலைவராக உள்ள வேதநாதன் அவர்களுடைய தலைமை கீழ் ‘ழ’கரப் பயிற்சி முகாம்களை நடத்தி வருவது பெருமையே.

 

‘ழ’கரப் பணிமன்றச் செயல்களுக்கு ஆனந்த திரையரங்கப் பங்குதாரர் உதவி செய்வது மன்ற வளர்ச்சிக்கு துணை செய்கிறது. வானருவி, தமிழ் ‘ழ’கரம் தமிழின் சிகரம் ‘ழ’கரத் தமிழமிர்தம் என்ற மூன்று நூல்களை எழுதியுள்ளார். எல்லாமே ‘ழ’கர வளர்ச்சியின் கருவாக இருக்கும்.

 

திருக்குறளின் முதல் குறளுக்கு இவர் எழுதியுள்ள பொருளுரை 100% உண்மைத் தன்மையுடன் பொய் பொருள் தராமல் இருப்பது பாராட்டுக்குரியது. பல அமைப்புகள் மூலம் இதுவரை 39 விருதுப் பெயர்கள் பெற்றுள்ளது பெருமைக்குரியது. ‘ழ’கரம் பற்றி இவர் எழுதாத இதழ்கள் இல்லை.

 

 

  • ••• •

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu