வன்னிய சங்கம் தோன்றிய வரலாறு

வன்னியர் மீது வரும் வீண் பழியையும், தாக்குதலையும் தடுத்துக் கொள்ளவும், நம் குல மக்களை ஒன்று சேர்த்து, ஓரணியில் கொண்டு வந்து, அவர்களை மேன்மேலும் முன்னுக்கு கொண்டு வரவும், நம் குலத்தின் பெயரால் ஓர் குலச் சங்கத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று அன்றைய கால தலைவர்கள் முடிவு செய்து காரியத்திலும் இறங்கி வேலை செய்ய முயன்றார்கள்

அதன்படி நம் குலச் சங்கம் தோன்றிய விவரத்தையும், அச்சங்கம் வளர்த்த வரலாற்றையும், செய்த தொண்டினையும் கீழே விவரிக்கிறோம். வாசகர்கள் கூர்ந்து கவனிக்கவும்.

சங்க அமைப்பு வேலையில் சென்னை தலைமை தாங்கிற்று!

சங்கம் தோற்றுவிக்க வேண்டும் என்ற எண்ணம் பொதுவாக தமிழ்நாட்டில் எல்லோருக்கும் இருந்திடினும், சென்னைத் தலைவர்கள் தான், இவ்வேலையில் முதன்மையாக நின்றனர். பல ஜில்லா முக்கியஸ்தர்கள் இவர்களுக்கு பக்க பலமாக இருந்து உதவி வந்தனர். இவ் அரும்பெரும் தொண்டில் ஈடுபட்டு இடைவிடாது உழைத்த பெரியவர்கள் எல்லாம் சாதாரணமானவர்கள் அல்ல.

  1. பிரபல கனதனவானகள்
  2. பெரும் நிலச் சொந்தக்காரர்கள்
  3. அரசாங்க உத்தியோகஸ்தர்கள்
  4. முதல் போட்டு, பல தொழிலை நடத்தும் முதலாளிகள்
  5. பிரபல வக்கீல்கள்
  6. படித்து பட்டம் பெற்ற ஆசிரியர்கள்

ஆக இத்தனை மதிப்பு வாய்ந்த பெரும் புள்ளிகள் எல்லாம் தனது வேலை நேரம் போக, மற்றுமுள்ள மீதி நேரத்தில் மேலே கண்ட சமூக தொண்டில் மிகவும் மும்முரமாக ஈடுபடலாயினர்.

••

வன்னிய சங்கம்தோன்ற மூலகாரணமாக இருந்தவர் யார்?

இவர்களுக்கு செல்வம் இல்லையா? சீரில்லையா? அல்லது மதிப்பில்லையா? எல்லாந்தான் இருக்கிறது. இருந்தும் ஏன் இவர்கள் இந்த ஜாதீய தொண்டில் இறங்கினார்கள்? இங்கு தான் நாம் மிகவும் யோசிக்க வேண்டும். இரட்டை குதிரை, நாலு குதிரை பூட்டிய சாரட்டில் செல்லக்கூடிய இக்கனதனவான்கள் எல்லோரும் தாங்கள் உயர்ந்து விட்டதைப் பற்றி மட்டும் மகிழ்ச்சியுற்று, தன்னுடைய வீட்டோடு இவர்கள் இருந்து விடவில்லை. தான் உயர்ந்துள்ளதைப் போல் தன் குல மக்களும் உயர வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டிருந்தனர். இதற்காக தங்களுடைய செல்வங்களை யெல்லாம் வாரி இறைத்தனர். வன்னியரை இழிவு படுத்தி நடத்திய நிகழ்ச்சிகள் எல்லாம் இவர்களுடைய மனதை சம்மட்டிக் கொண்டு தாக்கினது போல் செய்து விட்டன. மிகவும் மனம் புண்பட்டு போன இக்கனவான்களுடைய எண்ணம் எல்லாம் எதிர்காலத்தில் நம் குல  மக்கள் ஓர் உன்னத நிலையில் வர வேண்டும். இதற்காக நமது இழிவை போக்க நாம் இப்பொழுதிலிருந்தே இடைவிடாது வேலை செய்ய வேண்டும் என்றே கருதலாயிற்று.

இவ்வித எண்ணம் கொண்டு உழைக்க முன் வந்த கனவான்களிலே இம்மாகாணத்தின் முதல் தலைவராக மதிப்பிற்குரிய பெரியார், சென்னை கா. கோபால நாயகர் அவர்கள் முன்னின்று உழைக்கலானார். சென்னையிலுள்ள பல பெரியவர்களும் மற்றும் ஒவ்வொரு ஜில்லாவிலுள்ள பல கனவான்களும், நாயகர் அவர்களுடைய பக்க பலமாக இருந்து உதவலாயினர்.

வன்னிய சங்கத்தின் முதல் தோற்றம்! சென்னை இராயபுரத்தில் ஆரம்பம்!

இச்சமயத்தில் 05/02/1885ல் சென்னை இராயபுரத்தில் வன்னியர் பொதுக் கூட்டம் ஒன்று கூடியது. உள்ளூர் பிரதிநிதிகளும், வெளியூர் பிரதிநிதிகளும் இக்கூட்டத்திற்கு வந்து கலந்துக் கொண்டனர். சமூகம் முன்னேற வேண்டும். இதற்காக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து பாடுபட வேண்டும். நம் இனத்தின் மீது உள்ள இழிவை போக்க போராட வேண்டும். இதற்காக ‘வன்னிய குல அபிமான சங்கம்’ என நாம் ஓர் சங்கத்தை நிறுவி, உள்ளூரிலும், வெளி ஊரிலும் தீவிர பிரசாரம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து சங்கத்தையும் அமைத்து இதற்கான வேலையில் ஒவ்வொருவரும் தீவிரமாக உழைக்க இறங்கினர்.

30/05/1886ல் கடலூர் அடுத்த பரங்கி பேட்டை திரு. வி குருசாமி ராயர் இல்லத்தில் தென்னாற்காடு ஜில்லா வன்னியர் கூட்டம் ஒன்று நடந்தது. அதில் வன்னியரின் எதிர்காலத்தைப் பற்றி பேசப்பட்டு விரைவில் இந்த ஜில்லாவில் வன்னிய சங்கங்கள் பல தோன்ற வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டன.

19.02.1887ல் மீண்டும் சென்னை இராயபுரத்தில் வன்னியகுல அபிமான  சங்கத்தின் கூட்டம் ஒன்று நடைபெற்றது. எக்காரணத்தினாலோ க்ஷ கூட்டத்திற்கு போதிய ஜனம்  வராதபடியால் பிள்ளையாருக்கு பூஜையை மட்டும் நடத்திவிட்டு அனைவரும் கலைந்து சென்று விட்டனர்.

29.02.1887ல் மறுபடியும் அதே இடத்தில் சங்கக் கூட்டம் நடைபெற்றது. சென்னை திரு. நாடு ந. குமாரசாமி நாயகர் க்ஷ கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கூட்டம் கூட்டினதின் நோக்கத்தைப் பற்றி சே.மா. சோலை வேலாயுத நாயகர் விளக்கிப் பேசினார் மற்றும் பலரும், பிறகு கூட்டம் கலைவுற்றது.

••

சென்னை முத்தியாலு பேட்டையில் போட்டிச் சங்கம் உதயம்!

05.03.1887ல் சென்னை முத்தியாலுப் பேட்டை தம்பு செட்டி வீதி, 160, நெம்பருள்ள மேஸ்டர் அட்டெண்டு ஆபீஸ் சூபர்வைசர், திரு. ஆதி நாராயணசாமி நாயகர் இல்லத்தில் ஓர் வன்னியர் கூட்டம் நடைபெற்றது. அப்போது முத்தயாலு பேட்டை அக்கினி வம்ச க்ஷத்திரிய மகா சங்கம் என்று ஓர் சங்கம் நிறுவப்பட்டது. க்ஷ சங்கத்திற்கு நாடு. ந. குமாரசாமி நாயகர் தலைவராகவும், ஆதி நாராயணசாமி நாயர் உதவி தலைவராகவும், சே. முத்துசாமி நாயகர் காரியதரிசியாகவும் சே. மா. சோலை, வேலாயுத நாயகர் உதவி காரியதரிசியாகவும், பு. தியாகராய நாயகர் பொக்கிஷதாரராகவும், பு. பச்சையப்ப நாயகர் உதவி பொக்கிஷதாரராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மீண்டும் க்ஷ முத்தியாலுப் பேட்டை சங்கம் 17.04.1887 தேதியில் சென்னை லிங்கி செட்டி தெரு, 18, நெம்பருள்ள திரு. சக்கரை நாயகர்  இல்லத்தில் கூடியது.

••

பல பேருடைய அரிய முயற்சியால் இரண்டு சங்கங்களும் ஒன்றாயின!

இந்நிலையில் எடுத்த எடுப்பிலேயே இரண்டு சங்கங்கள் இருக்கக்கூடாது என்றும், இரண்டையும் ஒன்று சேர்த்து ஒரே பெயரில் ஒரே சங்கமாக அமைக்க வேண்டும் என்றும் சென்னையிலுள்ள நாமே இப்படி நடந்தால் நம்மைப் பின்பற்றும் வெளியூரிலுள்ள கிராம மக்கள் என்ன நினைப்பார்கள் என்று பலர் கருதி, 29.05.1887ல் இரண்டு சங்கத்தாரையும் இராயபுரத்திற்கு அழைத்து மத்தியஸ்தம் செய்தனர். இதன் பயனால் முத்தியாலுபேட்டை சங்கத்தை இராயபுரம் சங்கத்தோடு இணைக்கப்பட்டு இராயபுரம் வன்னியகுல அபிமான சங்கம் என்றே இனிமேல் வேலை செய்வதென்றும் இதற்கு நிர்வாகிகளாக, (நாடு ந. குமாரசாமி நாயகர் உத்தியோகம் மாறுதலாகி, உப்பளி சென்று விட்டபடியால் அவரது தம்பியான) திரு. அரங்கநாத நாயகரை தலைவராகவும், தே. இராகவ நாயகரை காரியதரிசியாகவும், சே. முத்துச்சாமி நாயகரை உதவி காரியதரிசியாகவும் நியமிக்கப்பட்டது.

  • ••

சங்க பிரசாரகர் சோலை. வேலாயுத நாயகரின் தென்னாட்டு திக் விஜயம்!

மேலும் சென்னையில் சங்கம் அமைத்ததோடு மட்டும் நிற்கக் கூடாதென்றும், வெளி ஜில்லாக்களிலும் சங்கங்கள் அமைத்து அவைகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டுமென்றும் இதற்காக ஒரு பிரதிநிதியை நியமித்து, பல ஜில்லாக்களுக்கும் அனுப்பி பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றும் ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த வேலைக்கு சே.மா. வேலாயுத நாயகரை சங்கத்தின் பிரசாரகராக நியமித்து வெளி ஜில்லாக்களுக்கு அனுப்பப்பட்டது.

இச்சமயத்தில் பரங்கிப்பேட்டை திரு. வி. குருசாமி ராயர் அவர்கள் சென்னை பிரசாரகரான திரு. சோலை. வேலாயுத நாயகர் தங்கள் ஜில்லாவான கூடலூர் ஜில்லாவிற்கு முதலில் அழைத்து அடியில் கண்டுள்ள இடங்களில் சங்கங்களை அமைத்து பிரச்சாரத்தை வைத்தனர். கீழ்கண்ட  ஊர்களில் எல்லாம் முறையே சங்கங்கள் அமைக்கப்பட்டன. அதாவது:-

13.06.1887 கூடலூர்

14.06.1887 சிதம்பரம்

14.06.1887 புவனகிரி, முள்ளிப் பள்ளம்

16.06.1887 வைத்தீஸ்வரன் கோயில்

17.06.1887 மாயவரம்

19.06.1887 சீர்காழி

20.06.1887 பூந்தோட்டம்

22.06.1887 புதுவராயன் பேட்டை

23.06.1887 திருவதிகை

24.06.1887 புதுபாளையம்

15.07.1887 பண்ருட்டி

25.07.1887 செங்கற்பட்டு

இச்சமயத்தில் வடாற்காடு ஜில்லாவிலுள்ள பல வன்னிய பிரபலஸ்தர்கள் தங்கள் ஜில்லாவிலும் சமூக பிரசாரம் செய்யவேண்டும். சங்கங்கள் அமைக்க வேண்டும் என்று சென்னையிலுள்ள சங்கத்தின் ஸ்தாபகரான திரு. கோபால நாயகரை வேண்டியனர். இதன் பேரில் சென்னை சங்கத்தார் வடாற்காடு ஜில்லாவிலும் அதன் பக்கத்து ஜில்லாக்களிலும் பிரசாரம் செய்ய தூசி. திரு. இராஜ கோபால பூபதியை அனுப்பி வைத்தனர்.

  • ••

வடாற்காடு ஜில்லாவில் தூசி, இராஜகோபால பூபதியின் மின்னல் வேகமான சுற்றுப் பிரயாணம்!

திரு. பூபிதி அவர்களும், வடாற்காடு ஜில்லாவிற்கு சென்று, அங்கு முக்கியஸ்தர்களாக இருந்தவர்களைக் கலந்து பிரசாரத்தை துவக்கினார். உள்ளூர் பேச்சாளர்களும் இவருடன் கலந்துக் கொண்டு ஆங்காங்கே சங்கங்களை நிறுவினர். முறையே:-

19.09.1887      காவேரிபாக்கம்

25.09.1887      தூசி

27.09.1887      இடையஞ்சாத்து

சித்தூர் (சித்தூர் தான் அன்று வடாற்காடு ஜில்லாவிற்கு தலைநகரம்)

01.10.1887      திருப்பத்தூர்

02.10.1887      நாட்ரம் பள்ளி

10.10.1887      ஆற்காடு

17.10.1887      திருவண்ணாமலை

சங்கத்திற்காக உழைத்த பழங்கால தலைவர்கள் சென்னை ஜில்லா

கூ. அய்யாசாமி பிள்ளை

அ. சொக்கலிங்க நாயகர்

மு. கன்னியப்ப நாயகர்

திருமலை பிள்ளை

பி. மாணிக்கம் பிள்ளை

கா. அண்ணாசாமி நாயகர்

க. ஆண்டியப்ப நாயகர்

ச. சிங்காரவேலு நாயகர்

ம.செ. பசுபதி பிள்ளை

வீரப்ப நாயகர்

தி.ரா. சுந்தரம் பிள்ளை

அ. வெங்கடாசல நாயகர்

செங்கற்பட்டு ஜில்லா

காஞ்சி சி. ஆறுமுக நாயகர்

கும்மிடி பூண்டி செங்கப்ப ரெட்டி (வி.எம்)

நெல்லூர் சி. ஆறுமுக நாயகர்

மவுளிவாக்கம் பா.ல. முருகேச நாயகர்

மதுராந்தகம் சி. இராமசாமி நாயகர்

வடாற்காடு ஜில்லா

ஆற்காடு தங்கவேலு நாயகர்

ஆற்காடு ஆ. பாரத்வாஜ முதலியார்

காவேரி பாக்கம் சடகோப நாயகர்

காவேரி பாக்கம் பூபதி ஜெகநாத ராஜா

வாலாஜா பேட்டை கோவிந்த ராஜ நாயகர்

திருச்சி ஜில்லா

கீழப்பெரம்பலூர் பி. ரெங்கசாமி படையாட்சி

தத்தனூர் இரா. துரைச்சாமி படையாட்சி

••

இன்னும் இது போன்ற மற்றும் பல ஊர்களில் பூபதி அவர்களின் பிரச்சாரம் காட்டுத் தீப் போல் பரவி ஆங்காங்கே பல சங்கங்கள் தோன்றலாயின.

இப்பிரச்சாரம் சேலம், கோயம்புத்தூர் முதலிய ஜில்லாக்களுக்கும் பரவின. அங்கும் பல முக்கியஸ்தர்கள் சங்கங்களை அமைத்து வேலை செய்யவாயினர். சேலத்திற்கு எம். இராஜரத்தின நாயகரும், கோயமுத்தூருக்கு எம்.பி. கருப்பண்ண கவுண்டரும், முக்கியஸ்தர்களாக இருந்து முன்னின்று உழைத்தனர்.

அன்னை வைத்த ‘தீ’ அடி வயிற்றிலே கோபாலர் வைத்த ‘தீ‘ தமிழ் நாட்டிலே!

ஆக சென்னையில் திரு. கா. கோபால நாயக்கர் வைத்த ’தீ’ (சங்க வேலைகள்) தமிழ் நாட்டிலுள்ள எல்லா ஜில்லாக்களிலும் பற்றிக் கொண்டது.

தென்னாற்காடு ஜில்லா

பூண்டியாங்குப்பம் இராமச்சந்திர படையாட்சி

கூடலூர் உ.பூ. ஆதிமூல ராயர்

பாலூர் துரைசாமி படையாட்சி

விழுப்புரம் மாரிமுத்து கண்டர்

புதுச்சேரி முருகப் படையாட்சி

நன்காத்தூர் வாழி. அரிராஜ கண்டர்

திண்டிவனம் நகர் நாடு. வரதராஜ கண்டர்

பண்ருட்டி ப.சி. கோவிந்தசாமி ராஜா

தஞ்சை ஜில்லா

கும்பகோணம் கோவிந்தசாமி நாயகர்

தஞ்சாவூர் சண்முகம் பிள்ளை

நாகப்பட்டணம் சோ. இராமசாமி நாயகர்

திருத்துறைப்பூண்டி குமாரசாமி ராயர்

இராஜ மன்னார்குடி வி. ராமசாமி நாயகர்

சேலம் ஜில்லா

கோட்டிபட்டி மலையாண்டி கண்டர் (வி.எம்.)

சீரகப்பட்டி பச்சைமுத்து படையாட்சி

நூலஹள்ளி வேங்கா கண்டர்

பாரூர் பண்ணந்தூர் செல்லாண்டி கண்டர் (வி.எம்)

கோயமுத்தூர் ஜில்லா

வி. தங்கமுத்து கண்டர் ஆர் பூபதி பழனியப்ப நாயகர்

வெளிநாடு

பம்பாய் மாரியப்ப நாயகர்

நெட்டால் பி. முனிசாமி நாயகர்

ஜாப்னா ம.வே. நாகரத்தினம் நாயகர்

மைசூர் எ. இராஜகோபால் பிள்ளை

….

அச்சமயத்தில் வன்னிய பிரபலஸ்தர்களுக்கு ஓய்வு ஒழிச்சலே கிடையாது. ’ஒன்று’ தமது அன்றாட வேலை வியாபார துறைகளை கவனிப்பது. (இந்த நேரம் போக) ‘இரண்டாவது’ சங்க வேலைகளை ஓடியாடி செய்வது. ஆக அக்கால தலைவர்களுக்கு தமது கனவிலும், நினைவிலும் சங்கம் அமைக்க வேண்டும். தனது ஜாதி முன்னேற வேண்டும் என்ற எண்ணமே அவர்கள் எல்லோருடைய மனதிலும் அன்று குடி கொண்டிருந்தது. இதுபோல் வேலைகளும் நடைபெற்று வந்தன.

சங்கம் ஆங்காங்கே தோன்றத் தோன்ற சங்கத்தின் பிரச்சாரம் காரணமாக மக்களிடையே உணர்ச்சி பொங்க பொங்க நம்மவரிடையே புதிய புதிய எண்ணங்கள் தோன்றி மேலுக்கு செல்லலாயின. அதாவது:-

தலைமை சங்கம் வேண்டும்! அதற்குக்ஷத்திரியஎன்ற பெயர் வேண்டும்!

நாம் இப்போது அமைத்து வரும் கிளைச் சங்கங்களோடு மட்டும் நின்று விடக்கூடாது. கூட்டங்கள் போடுவதினால் மட்டும் பிரயோசனமில்லை. நமக்கு ஒரு தலைமை சங்கம் வேண்டும். அது மாகாண சங்கமாக இருந்து வேலை செய்ய வேண்டும். அதில் எல்லா ஜில்லா பிரதிநிதிகளும் நிர்வாகிகளாக இருக்க வேண்டும். இந்த சங்கம் தலைநகரான சென்னையில் இருந்து எல்லா கிளை சங்கங்களையும் மேற்பார்வையிட்டு வேலை வாங்க வேண்டும் என்று அனைவரும் கருதலாயினர்.

மேலும் நாம் க்ஷத்திரியரானபடியால் நாம் அமைக்கப் போகும் தலைமை சங்கத்திற்கு வன்னிகுல க்ஷத்திரிய சங்கம் என்று தான் பெயர் இருக்க வேண்டுமே தவிர, வன்னிய அபிமான சங்கமென்றோ, அக்கினி வம்ச சங்கமென்றோ, பல தரப்பட்ட பெயர்கள் இருக்கவே கூடாது என்றும் முடிவு செய்தனர். இந்த எண்ணத்திற்கு ஏகோபித்த ஆதரவு இருக்கவே, 1887வது ஆண்டுக் கடைசியில் தலைவர்கள் அனைவரும் தலைமை சங்கம் அமைக்கும் வேலையில் மிக தீவிரமாக ஈடுபடலாயினர். மேலும் ஸ்தாபிக்கப் போகும் சங்கத்தை அரசாங்கத்தில் உடனே ரிஜிஸ்டர் செய்து விட வேண்டுமென்றும் திட்டம் வகுத்தனர்.

அக்காலத்தில் தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியும் ஏற்படவே இல்லை. ஜாதி சங்கங்கள் கூட இருந்ததில்லை. வன்னிய சங்கம் தான் முதன் முதலில் தமிழ்நாட்டில் உதயமாயிற்று. (காங்கிரஸ் கட்சி கூட வன்னிய சங்கம் ஏற்பட்ட பிறகுதான் ஏற்பட்டது.) எனவே அக்காலத்தில் ஒரு ஜாதிக்குள் ஒரு ஜாதி உயர்வு – தாழ்வு என்ற வர்ணாசிரம் முறையில் தான் போட்டிகளும், சச்சரவுகளும் நடைபெற்றுள்ளன. ஆகவே அக்கால முறையை ஒட்டியே நம் பெரியோர்கள் நம் வகுப்பிற்கு ’ க்ஷத்திரிய சங்கம்’ என்று பெயர் வைக்க முயன்றனர்.

 

  • ••• •
Menu