வன்னிய குல முதல் நீதியரசர்
கொச்சின் திவான் சுப்பிரமணியம் பிள்ளை
சி.என்.ஆர்
அன்பான சொந்தங்களே!
நம் சமுதாயத்தின் முதல் நீதியரசர் கொச்சின் திவான் சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் என்பது நம்மவர்களில் எத்தனை பேருக்கு தெரியும் என்று கேட்டால் விடை அளிப்பது பலருக்கும் சிரமமே. நான் வன்னியர் குரல் இதழில் நமது முன்னோர்களை, அவர்களது பணியை, புகழை சொந்தங்களாகிய உங்களிடம் கொண்டு போய் சேர்ப்பதை எனது வாழ்நாள் கடமையாக செய்து வருகிறேன் என்பதை வாசக சொந்தங்கள் அறிவார்களென்று நம்புகிறேன்.
கடந்த 2011-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் இதழில் வன்னியகுல முதல் பெண் வள்ளல் சரஸ்வதி தனக்கோடி அம்மாளின் புகழ்மிக்க சரித்திரத்தை பதிவு செய்து இருந்தேன்.
அதிலே சென்னையில் பெரும் செல்வாக்கு பெற்ற கோடீஸ்வரரான இராமநாதன் பிள்ளையின் மகளும், கொச்சின் திவானாக இருந்த சுப்பிரமணியம் பிள்ளையின் பெயர்த்தியுமான சரஸ்வதி அம்மாள் என்று குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கும்.
அந்த கொச்சின் திவான் தான் நம் வன்னியகுல முதல் நீதியரசர் சுப்பிரமணியம் பிள்ளை ஆவார்கள். அந்த வன்னிய பெருமகனாரை பெற்றதற்காக வன்னியர் குரல் ஆசிரியர் குழுவே பெருமிதம் கொள்கிறது.
ஒருவர் வகித்த பதவியின் மதிப்பினை அவருக்கு பின்னர் அந்தப் பதவியை ஏற்றவர்களை வைத்து எடை போடலாம். அப்படி அப்பதவியை ஏற்க வந்தவர் ஒரு புகழ் பெற்ற அறிஞர் என்றால் அப்பதவியின் மகோன்னதத்தை பற்றி சொல்லவும் வேண்டுமா?
கொச்சியின் திவானாயிருந்த நம் சுப்பிரமணியம் பிள்ளையினை தொடர்ந்து கொச்சி திவானானவர்; பின்னாளில் நமது இந்திய நாட்டின் கவர்னர் ஜெனரலான திரு, ராஜகோபாலாச்சாரி அவர்கள்.
பதவியில் இருப்பவரே அதற்கு முன்னர் அப்பதவியில் இருந்தவரைப் பற்றி எடையிட்டு கூறத்தக்கவர் என்கிற வகையில் திரு, ராஜாஜி அவர்கள். நம் சுப்பிரமணியம் பிள்ளையைப் பற்றி அவ்வப்போது வானளாவ புகழ்ந்து பேசியும், எழுதியும் வந்துள்ளார் என்பதை உண்மையில் நமது பிள்ளையவர்களின் திறமையைப் பற்றியும் ஆழ்ந்த அறிவைப் பற்றியும் நமக்கு விளக்குகின்றது. இது வசிஷ்டர் வாயால் ‘பிரம்மரிஷி’ என்ற பட்டம் பெற்றதற்கு ஒப்பாகும்.
இப்படி பலராலும் பாராட்டப்பட்ட நமது வன்னியகுல முதல் நீதியரசர் சுப்பிரமணியம் பிள்ளையவர்களின் வரலாற்றினைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது நம் சமுதாய கடமையாகும்.
எட்டையபுரம் திவானாயிருந்த பசவப்பா பிள்ளையின் மகன் இராமசாமி பிள்ளைக்கு 1834ஆம் ஆண்டு பிறந்தார் சுப்பிரமணியம் பிள்ளை.
1833-ல் ஜான் மெக்கால்லே கொண்டு வந்த கல்வி சீர்திருத்த கொள்கையினால் இந்தியர்கள் உயர் கல்வி பெறும் வாய்ப்பை பெற்றனர்.
பள்ளிப் பருவத்தில் சர்.பீ.டி.லீ. செங்கல்வராய நாயக்கரின் பள்ளித் தோழனாக வளர்ந்தார் சுப்பிரமணியம் பிள்ளை.
பள்ளிப் படிப்பை வெற்றிகரமாய் முடித்த பின்னர் பிரஸிடென்சி கல்லூரியில் சேர்ந்தார். இவரின் ஆங்கில அறிவு ஆங்கிலேயர்களையே அசர வைத்தது.
பின்னாளில் சென்னை பிரஸிடென்சியின் முதன்மை அமைச்சரான இராஜாஜி அவர்கள் ‘சுப்பிரமணியம் பிள்ளையின் ஆங்கில புலமை நமது பிரஸிடென்சி கல்லூரியில் அவருக்கு பின்னால் படித்த மாணவர்களுக்கு ஓர் முன்னுதாரணமாக அமைந்தது’ என்று பெருமையாக குறிப்பிட்டார்.
சுப்பிரமணியம் பிள்ளையின் ஆங்கில புலமை அவருக்கு பல பரிசுகளை, வெற்றிக் கோப்பைகளை, பெற்றுத் தந்தது மட்டுமின்றி பெருமை வாய்ந்த “Elphinston Scholarship-ஐயும் ஈட்டுத் தந்தது. வகுப்பில் இவர் பெற்ற மதிப்பெண்கள் புகழ்பெற்ற கல்லூரி முதல்வரான (Powell) பவுலின் மனதிலும், ஏனைய ஆங்கில பேராசிரியர்களின் மனதிலும் இவர் மீது மதிப்பையும் மரியாதையையும் வரவழைத்தது. அவர்களின் அன்புக்கு பாத்திரமானமாணவரானார் சுப்பிரமணியம் பிள்ளை.
அதன் பின்னர் பி.எல். படித்து பட்டம் பெற்றார். அந்த ஆண்டு பல்கலைக் கழக முதல் மாணாக்கராக தேறி பல்கலைக் கழக பரிசைப் பெற்றார்.
முதல்வர் ‘பவுலின்’ அன்பினை பெற்ற மற்றொரு மாணவரான சர்.டி. மாதவராவ் என்பவர் அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்து திவானாயிருந்தார். அவரின் பரிந்துரையின் பேரில் திருவாங்கூர் மாவட்ட நீதிபதியானார் சுப்பிரமணியம் பிள்ளை.
இவருடைய நீதி பரிபாலனமும், நேர்மையும் சில ஆண்டுகளிலேயே இவரை ஆலப்புழை மாவட்ட முதன்மை நீதிபதியாகச் செய்தது. இவரது நீதி வழுவா நெறிமுறைகள் திக்கெட்டும் பரவியது. இது அந்த நேரத்தில் பக்கத்து சமஸ்தானமான கொச்சினுக்கு திவானாயிருந்த திரு. சங்குண்ணி மேனனின் காதுகளை எட்டியது. கொச்சினுக்கு ஒரு நல்ல நீதியரசரை நியமிக்க ஆர்வம் கொண்டிருந்த அவருக்கு சுப்பிரமணியம் பிள்ளை பற்றிய பெருமைகள் அமிர்தமாய் இனித்தது.
சுப்பிரமணியம் பிள்ளையும் கொச்சின் அரசரின் அழைப்பை ஏற்று 1866-ல் கொச்சின் அரசரின் தலைமை நீதியரசரானார்.
இதற்கு திருவாங்கூர் மகாராஜா இவருக்கு அனுமதியளித்தது மட்டுமின்றி அதுகாறும் சுப்பிரமணியம் பிள்ளை செய்த சேவையை பாராட்டி அவருக்கு பட்டு பீதாம்பரம், வைர மோதிரங்களையும், வீர சிங்களமம் அளித்து கௌரவித்தார்.
இவரது தலைமையில் கொச்சின் சமஸ்தானத்தில் நீதித்துறை மிகச் சிறப்பாக, நேர்மையாக செயல்பட்டதாக பல சரித்திர ஆசிரியர்களும், ஆங்கிலேய நீதித்துறை அதிகாரிகளும் கூறியுள்ளார்கள். சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள் உண்மையை கூறுவதில், நடுநிலையோடு தீர்ப்பு அளிப்பதில் யாருக்கும் அஞ்சியதில்லை.
அந்த அரசு கொச்சின் அரசரின் தலைமையின் கீழ் செயல்பட்டு வந்ததன் காரணமாக பல நீதிபதிகள் அரசுக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பளிக்க தயக்கம் காட்டி வந்தார்கள். ஆனால் சுப்பிரமணியம் பிள்ளை நம் நக்கீரர் போல் குற்றவாளி ஆண்டவனே என்றாலும், ‘குற்றம் குற்றமே’ என்று தீர்ப்பளிக்க என்றும் தயங்கியதில்லை. இந்த நீதிமானின் எழுது கோல் (பேனா) அந்த அரசரின் செங்கோலுக்கு என்றுமே பணிந்ததில்லை, வளைந்ததுமில்லை.
1868களில் பிரசித்த பெற்ற வழக்கு, கூழுர் கோவிலின் வழிபாட்டு முறைதனை முடிவு செய்யும் அதிகாரம் பற்றியது. அக்கோவில் கொச்சியில் பழம்பெருமை வாய்ந்த ஜமீன் குடும்பமான ‘பாளையத்து அச்சன்’ குடும்பத்தாரின் நிர்வாகத்தால் இருந்து வந்தது. அந்த வழிபாட்டு முறையை முடிவு செய்ய அரசருக்கே உரிமை என்று சிலர் வழக்கு தொடுத்திருந்தனர்.
இது இரு சாரார்களுக்குமிடையே பெரும் கலவரமாக உருவெடுத்தது. இந்த வழக்கில் கீழ் கோர்ட்டில் அரசருக்கு ஆதரவாய் தீர்ப்பும் வழங்கப்பட்டு எதிர் தரப்பினருக்கு தண்டனையும் வழங்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு மேல்முறையீட்டிற்கு நமது நீதியரசர் சுப்பிரமணியம் பிள்ளையிடம் வந்தது. அந்த வழக்கை ஆய்ந்து அறிந்த அவர் முக்கியமானவர்களை தண்டனையிலிருந்து விடுவித்து, சிலருக்கு தண்டனையும் குறைத்து தீர்ப்பு வழங்கினார்.
‘அரசருடைய எண்ணங்களுக்கு எதிராக செயல்படுவான் அரசுக்கு நன்மை பயக்க மாட்டான்’ என்ற வால்மீகியின் கூற்றை உணர்ந்த நமது சுப்பிரமணியம் பிள்ளை தனது தீர்ப்பால் அரசருக்கு சங்கடம் ஏற்படும் என எண்ணி தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைத்தார்.
இவரது நடுநிலைமையை பாராட்டிய திவான் சங்குண்ணி மேனன் அதனை ஏற்க மறுத்ததாக தன் வாழ்க்கை குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். மேலும் அரசருக்கு பரிந்துரைத்து அந்த வழக்கில் குற்றவாளிகள் என கருதப்பட்ட அனைவரையும் மன்னித்து விடுவிக்கவும் செய்தார் திவான் சங்குண்ணி மேனன்.
கால் நூற்றாண்டுக்கு மேலாக 1866 முதல் 1893 வரை கொச்சின் தலைமை நீதிபதியாக இருந்த சுப்பிரமணியம் பிள்ளை அம்மக்களின் மனங்களிலும், கொச்சின் நீதித்துறை வரலாற்றிலும் தன் நடுநிலைமையினாலும், நியாயமான தீர்ப்புகளினாலும், நீங்கா இடத்தை தக்க வைத்துக் கொண்டார்.
1893 ஆம் ஆண்டு கொச்சின் இளையராஜா மாட்சிமை பொருந்திய வீரகேரள வர்மாவால் கொச்சின் திவானாக நியமிக்கப்பட்டார். நமது சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள்.
அவர் திவானாக பதவியேற்றதும் கொச்சின் அரசில் பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார்.
உப்பு வாரியத்தில் பழைய எடையிடும் முறைதனில் நிகழ்ந்து வந்த முறைகேட்டினை, ஊழலை கண்டுபிடித்து முறைப்படுத்தி, அதனை தனியொரு வாரியமாக்கி நல்ல தலைமையின் கீழ் இயங்க வைத்தார்.
சுத்தத்திற்கும், சுகாதாரத்திற்கும் மிக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக கொச்சின் சமஸ்தானத்து Manual தெரிவிக்கின்றது.
மருத்துவதுறையில் பல மாற்றங்களை ஏற்படுத்தினார். அதுவரை பிரிட்டீஷ் அரசாங்கத்தின் உதவியோடு நடந்து வந்த பொது நல மருத்துவத்தை மாற்றி கொச்சின் சமஸ்தானத்துக்கென்றே முழு நேர மருத்துவ அதிகாரிகளை, பெண் மருத்துவ அதிகாரிகளை நியமித்து மக்களின் நலனைப் பேணச் செய்தார்.
முத்திரைத்தாள் முறையை அறிமுகப்படுத்தி பழைய ஓலைச்சுவடி முறையை மாற்றியமைத்தார்.
நிலங்களை முறையாக அளந்து, சர்வே செய்து நில உரிமத்தை நேர்படுத்தி மக்களுக்கு சங்கடமின்றி நியாயமான நிலவரி விதித்து அரசுக்கு வருமானம் வர வழிவகுத்தார்.
காடுகளின் வளத்தை பெருக்கி, அரசு நிலங்களை வரையறுத்து, காடுகளை அழிவினின்று காப்பாற்றினார். காடுகளிலிருந்து அரசுக்கு வருமானம் வருவதற்கான வழிவகைகளை செய்தார். அரசே காட்டு யானைகளை பிடித்து ஆண்டு தோறும் ஏலம் விடும் முறையை கொண்டு வந்து அரசின் கஜானா நிரம்பிட வழிவகை செய்தார்.
பல மலையாள புத்தகங்களை இவர் ஏற்படுத்திய ‘நியம நிர்மாண சபா’ பற்றி பாராட்டி எழுதியுள்ளன. இந்த சபை கொச்சின் சமஸ்தானத்து சட்ட திட்டங்களை, சுங்கவரி விதிமுறைகளை நிர்ணயிக்க ஏற்படுத்தப்பட்டதாகும். இது சுதந்திரமடைந்த பின்னர் நாம் உருவாக்கிய சட்டசபையின் முன்னோடி எனக் கூறலாம்.
திவான் சுப்பிரமணியம் பிள்ளையவர்கள் கொச்சின் ‘Gazette’ நடைமுறைப் படுத்தி அந்நாட்டு சட்டதிட்டங்களை பொது மக்களும் அறிந்து கொள்ளச் செய்தார்.
அவர் கொண்டு வந்த பல்வேறு சீர்திருத்தங்களை பட்டியலிட்டால், பக்கங்களே போதாது என்று எண்ணுமளவிற்கு இப்பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இப்படிப்பட்ட சீர்திருத்தங்களை அவர் சுனாமி வேகத்தில் தான் பதவியிலிருந்த குறுகிய காலமான மூன்றாண்டுகளில் வெற்றிகரமாக நிறைவேற்றினார்.
அவர் 26 ஆண்டுகள் தலைமை நீதிபதியாக இருந்த போது சந்தித்த வழக்குகள், அம்மக்களின் பிரச்சினைகளை அவருக்கு நன்கு உணர்த்தியிருந்த காரணத்தால் அப்பகுதியின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு கொள்வதும், அவைகளை நிவர்த்தி செய்ய வழிவகைகளை ஏற்பாடு செய்வதும் அவருக்கு எளிதாகிப் போனது. அதற்கு அவர் வகித்த திவான் பதவி தக்க அதிகாரங்களையும் அளித்தது.
ஆங்கிலேய அரசுக்கும், கொச்சின் சமஸ்தானத்துக்கும், பல்லாண்டுகளாக இருந்த பல்வேறு முரண்பாடுகளை களைந்தார். ஆனமலை நதியின் குறுக்கே அணையொன்று கட்டப் போவதாக மிரட்டியது ஆங்கிலேய அரசு அணைக் கட்டினால் பாசனமின்றி கொச்சின் சமஸ்தானத்து நிலங்கள் பாதிக்கப்படும். இது நம்முடைய முல்லைப் பெரியாறு தலைவலி போன்றது.
திவான் சுப்பிரமணியம் பிள்ளை அந்த இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி சரியான விகிதாசார முறையில் ஆங்கிலேயர்களின் பகுதிக்கும் கொச்சின் சமஸ்தான பகுதிக்கும் நதி நீரை பிரித்து கொள்ளும் முறையினை வகுத்து வரையறுத்து, இரு தரப்பினருக்கும் சமரசம் செய்து, அணை கட்டுவதை தவிர்த்தார்.
ஷோரணூர், எர்ணாகுளம் இரயில் பாதைக்கென்று நிலங்களை கையகப்படுத்தி, பல முன் முயற்சி நடவடிக்கைகளை முயன்று முடித்து வைத்தார் நமது திவான் அவர்கள்.
கொச்சின் அரசர் மாட்சிமை பொருந்திய வீர கேரள வர்மா நமது திவான் சுப்பிரமணியம் பிள்ளையின் அன்புக்கு பாத்திரமாகி, நெருங்கிய நண்பரானார். அது அரசருக்கு மிக்க தன்னம்பிக்கையை கொடுத்தது. அதனால் அதுகாறும் தன் முன்னோர்கள் செய்யத் துணியாத செயல்களிலும் துணிந்து செய்ய முனைந்தார் அரசர். அதுவரை காசிக்கு தீர்த்த யாத்திரை சென்ற கொச்சின் மகாராஜா எவரும் உயிருடன் திரும்பியதாக சரித்திரம் இல்லை. ஆதலால் எந்த மகாராஜாவுக்கும் காசிக்கு செல்ல துணிவதில்லை. ஆனால் திவான் சுப்பிரமணியம் பிள்ளையுடன் காசிக்கு சென்று வந்து இந்த மூட நம்பிக்கையை முடக்கிவிட முடிவெடுத்தார் முடிமன்னர். பல சர்ச்சைகளுக்கு பின்னர் மகாராஜா காசிக்கு செல்லும் நல்ல நாள் குறிக்கப்பட்டது. மிகுந்த கவனத்துடன், மனக்கலக்கத்துடன், தயக்கத்துடன் மகாராஜாவுடன் காசிக்கு சென்றார் திவான் சுப்பிரமணியம் பிள்ளை.
முன்னரே தேர்வு செய்யப்பட்ட அந்த நல்ல நாளில் காசியில், கங்கையில் நீராட வேண்டிய நாளில் மன்னருக்கு ஜுரம் கண்டது. அந்த குளிரில் பனிக்கட்டியாய் உறையும் கங்கை நீரில் குளித்தால் மன்னருக்கு நிமோனியா வந்தாலும் வரலாம் என அஞ்சிய திவான், கங்கை நதியில் அரசர் குளிக்குமிடத்திற்கு சற்று தூரத்தில் மேலே பெரிய பெரிய அண்டாக்களில் நீரை கொதிக்க வைத்து ஆற்றில் ஊற்றி நதி நீரையே வெதுவெதுப்பாகச் செய்தாராம்.
மன்னரும் அந்த இதமான சுடுநீரில் நீராடி நலமுடன் நாடு திரும்பினாராம். இது மன்னருக்கும் மக்களுக்கும் திவான் மீது இருந்த நன்மதிப்பை பன்மடங்கு உயர்த்தியது.
1896-ம் ஆண்டு தன் வயது உடல்நிலை ஆகியவற்றின் காரணமாக திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் சுப்பிரமணியம் பிள்ளை.
நீதிபதியாயிருக்கும் போதே, திருச்சூரில் சீதாராம் மில்ஸ் ரோட்டில் ‘வேலூர் இல்லம்’ எனும் பெரிய மாளிகையை பல ஏக்கர் நிலப்பரப்பில் கட்டி குடியிருந்தார் சுப்பிரமணியம் பிள்ளை. அங்கேயே தன் இறுதி காலத்தையும் கழிக்க திட்டமிட்டார்.
அந்த வீட்டை மகாராஜா தன் சொந்த உபயோகத்திற்காக கேட்டபோது கொடுக்க மறுத்துவிட்டாராம் பிள்ளையவர்கள். இதனை ராஜாஜி தன் வாழ்க்கை குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். 1900-ல் திடீரென மாரடைப்பால் மறைந்தார் நமது நீதியரசர் திவான் சுப்பிரமணியம் பிள்ளையவர்கள். அந்த திருச்சூர் வீட்டிலேயே அவரின் விருப்பப்படி அடக்கம் செய்யப்பட்டார். அவருடைய சமாதி இன்றும் அங்கு உள்ளது.
திவான் சுப்பிரமணியம் பிள்ளையவர்கள் கொச்சினுக்கு செல்லாமலிருந்திருந்தால், நமது சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாய் பேரும் புகழும் பெற்றிருப்பார் என்று அவ்வப்போது ஆதங்கப்பட்டு கொள்வாராம், திரு. ராஜாஜி அவர்கள்.
வி,ஆர். சுப்பிரமணியம் பிள்ளை – திருமதி பாலாம்பிகை அம்மாள் அவர்களுக்கு இரங்கநாதன் பிள்ளை, இராமநாதன் பிள்ளை, வெங்கடாசலம் பிள்ளை என்று மூன்று மகன்களும், விசாலாட்சி, ஜானகி, மீனாம்பாள் என்ற மூன்று மகள்களும் பிறந்தனர்.
இரங்கநாதன் பிள்ளையின் கடைசி மகளே வன்னியகுல பெண் வள்ளல் திருமதி சரஸ்வதி தனகோடி அம்மாள் அவர்கள்.
இராமநாதன் பிள்ளைக்கு ஒரு பிள்ளை பிறந்து இறந்து விட்டார். வெங்கடாசலம் பிள்ளைக்கு தனது மைத்துனரான மாமேதை அய்யாகண்ணு நாயகரின் மகளான சுந்தரியை மணம் புரிந்து வைத்தார் திவான். இவர்களுக்கு பிறந்தவர் வி.வி. வெங்கட சுப்பிரமணியம் பிள்ளை அவர்கள்.
மாமேதை அய்யாகண்ணு நாயக்கர் தான் வன்னியகுல விளக்கம் எனும் நூலை முதன் முதலில் ஆங்கிலத்தில் எழுதியவர் இதைத் தான் ‘வன்னியகுல சத்திரியர்’ எனும் அரசு அங்கீகாரத்தை பெற வேண்டி ஆங்கில அரசுக்கு அனுப்பி வைத்தனர் வன்னிய சங்கத்தினர். அதன் பிறகு அந்நூல் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது.
ஆங்கில நூலின் முகவுரையில் அய்யாகண்ணு நாயக்கர் இந்நூல் எழுத தன்னுடைய மைத்துனர் திவான் வி.ஆர். சுப்பிரமணியம் பிள்ளை நிரம்ப உதவியதாக நன்றி கூறுகின்றார். எனவே இந்நூல் உருவாகிட இவ்விருவரும் மிகவும் உழைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் இவர்கள் நம் வன்னிய குலத்திற்கு ஆற்றிய தொண்டு ஈடு இணையற்றது என்பதில் தாம் பெருமிதம் கொள்வோம்.
சென்னையிலிருந்த சொத்துக்களை இரங்கநாதன் பிள்ளையையும் வெங்கடாசலம் பிள்ளையையும் நிர்வகிக்க செய்து விட்டு, திருச்சூர் சொத்துக்களை இராமநாதன் பிள்ளை வசம் ஒப்புவித்துவிட்டு மறைந்தார் சுப்பிரமணியம் பிள்ளையவர்கள்.
இராமநாதன் பிள்ளை அவர்கள் தன் தந்தை திவானாயிருந்து சாதித்த சாதனைகளை ஆவணப்படுத்தியதுடன், அவரது ஆள் உயர உருவப்படத்தை திருச்சூர் டவுன் ஹாலில் கொச்சின் மகாராஜாவின் கையால் திறந்திடச் செய்தார். தன் தந்தையின் நினைவாக நினைவு மண்டபத்தை எழுப்பி அதில் அவரது சரித்திரத்தை கல்வெட்டில் பதிய வைத்தார்.
அதற்கு எதிரில் தனது தந்தையின் நினைவாக திருமண மண்டபம் ஒன்றை கட்டி அதனை இலவசமாக பொதுமக்களுக்கும் விழாக்களுக்கும் அளித்து வந்தார்.
தனது தமையனார் இரங்கநாதன் பிள்ளை இறந்த போது சென்னையில் (தற்போதைய டிரஸ்ட்புரத்தில்) அவருக்கு சமாதி எழுப்பி அவரது சரித்திரத்தை கல்வெட்டில் பதிக்கச் செய்தார்.
இராமநாதன் பிள்ளையவர்கள் இப்படி அங்காங்கே அவர்களின் குடும்பத்தினரின் சரித்திரத்தை ஆவணப்படுத்தி பதிய வைத்ததால் தான் இன்றைக்கு நம்மால் ஓரளவிற்காவது இப்பெருந்தகைகளின் சிறப்பியல்புகளை அறிய முடிகின்றது.
இராமநாதன் பிள்ளையவர்கள், சுந்தரம் பிள்ளையின் மகளும் ராவ்சாகிப் நடராஜப் பிள்ளையின் தமைக்கையுமான அம்மணி அம்மாளை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பிள்ளை பிறந்து இறந்து விட்டார். அதனால் இவர்கள் தங்கள் சொந்தங்களின் பிள்ளைகளை படிக்க வைத்து மன நிறைவு அடைந்தனர்.
இராமநாதன் பிள்ளையவர்கள் சொந்த பந்தங்களை ஆதரித்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார். இன்றும் அவருடைய நினைவுகளை தங்கள் நெஞ்சில் சுமந்து பலர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர் வேலூர் காலனி என்று தன் திருச்சூர் நிலத்தின் ஒரு பகுதியை மனைப்பிரிவு செய்து விற்றார்.
ஒவ்வோர் மனையிலும் தன் கையால் மா, பலா மரங்களை நட்டு வைத்தாராம். அவைகளை இன்றும் பயன்தரும் மரங்களாய் அங்கு குடியிருப்போர் மனதில் இடம் பிடித்துள்ளன. அவர் வெட்டிய கிணற்றையும், அவர் அவ்வீதிகளில் நட்ட பலா மரங்களையும் இன்றும் அவர் பெயரோடு இணைத்தே குறிப்பிடுகின்றனர் அப்பகுதி மக்கள்.
இராமநாதன் பிள்ளை தன் தந்தையின் வாழ்நாளுக்கு பின்னர் திருச்சூரில் தங்கி வாழ்ந்து வந்தார். இவர் வைர வியாபாரமும் செய்து வந்தார். அப்போது தன் வீட்டில் இரண்டு யானைகள் வளர்த்தாராம் பிள்ளையவர்கள்.
இந்த வள்ளல் இராமநாதன் பிள்ளை தனக்கு பின்னால் தான் வசித்த மாளிகையையும், மாளிகையை சேர்ந்த நிலத்தையும், கார், மர தளவாட சாமான்கள் உட்பட அனைத்தையும் தன் பணியாள் திரு. முத்துவுக்கு நன்கொடையாக அளித்துவிடச் சொல்லிவிட்டு மறைந்து போனார். இதரச் சொத்துக்களை தன் அண்ணன் வாரிசுகளுக்கு அளித்தாராம்.
அவரது பொன்னுடல் மறைந்தாலும் புகழுடல் நிலைத்து வாழ்வதை அப்பகுதி மக்கள் இன்றளவும் நினைவு கூர்ந்து சொல்வதில் இருந்து அவரது புகழை தெரிந்து கொள்ளலாம்.
வன்னிய சொந்தங்களே! நம் குலத்தில் பிறந்ததால் மட்டுமே இவ்வளவு பெயரும் புகழும் மிக்க ஒருவரை இத்தமிழ்ச் சமூகம் மறைத்துவிட்டது. இல்லையென்றால் அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டு இருக்காது. இனியாவது நம் முன்னோர்களையும், அவர்கள் செய்த பணிகளையும் ஆண்டு தோறுமாவது நினைவு கூர்ந்து அவர்கள் பெருமையை வருங்கால சந்ததியினருக்கு தெரியப்படுத்துவோம்!
வாழ்க நீதியரசர் சுப்பிரமணியன் பிள்ளை அவர்கள் புகழ்!




