வன்னிய குல தலைமகன்

ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா

 

சி.என்.ஆர்.

(நிறுவனத் தலைவர்)

 

உயிரினும் மேலான உயர்வான சொந்தங்களே!

 

வன்னியர் குரல் இதழில் நமது முன்னோர்களைப் பற்றி எழுதிவரும் கட்டுரைகள் பல இடம் பெற்றிருக்கின்றன. அறிஞர் பெருமக்கள், தனவான்கள், சான்றோர்கள், உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள், கல்விக்காக வாழ்வை அர்ப்பணித்தவர்கள் என்றெல்லாம் வரிசையாய் பட்டை தீட்டிய கட்டுரைகளும், கட்டுரையாளர்களும் அதிகம்.

 

முதல் முறையாக ‘வாள் முனையை விட பலம் வாய்ந்தது பேனா முனை’ என்ற உதாரணத்திற்கு மூல புருஷனாய் விளங்கி, இந்திய தேசத்துக்கும் செந்தமிழ் நாட்டுக்கும் மேலாக வன்னிய குல சமுதாயத்திற்காகவும் உழைத்த அரும்பெரும் தலைவர், வன்னியர் குலத்தின் தலைமகன் பத்திரிக்கை உலக பிதாமகன், சேலத்து கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்த நாரீசவர்மா அவர்களை முன்னிறுத்தி இக்கட்டுரையை எழுதுகிறேன்.

 

 

இதுவரை நான் தொகுத்து எழுதிய கட்டுரைகளின் இதை முதன்மையானதாக கருதுகிறேன். எல்லா செல்வங்களையும் விட உயர்ந்தது அறிவுச் செல்வம் அல்லவா? எண்ணிக்கையில் உயர்ந்து நிற்கும் வன்னிய குலத்தார் வாழ்க்கையில் கீழ் நிலையிலிருப்பதைக் கண்டு மனம் வெதும்பி எம்மக்களை அறிவு சார் பாதைக்கு திருப்பி அவர்களை சமூக வெற்றியாளர்களாக உயர வைப்பதையே நமது லட்சியம் என்று சொல்லி, செயல்பட்ட உயர்ந்த குணமுடையவர் வர்மா அவர்கள்.

 

வன்னியர் சமுதாயம் மட்டுமல்ல. தமிழகமே இந்த மாமுனிவரான ராஜரிஷி அர்த்த நாரீசவர்மாவை மறந்து போனது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் சாபக்கேடான விஷயமே. 19-ம் நூற்றாண்டில் பிறந்து 20-ஆம் நூற்றாண்டில் வியத்தகு மனிதராய் வாழ்ந்த அந்த கவிச்சிங்கத்தை மனித சமுதாயம் மறந்து போகலாம்; ஆனால் காலம் கைவிட்டு விடுமா என்ன?

 

சென்னையில் உள்ள கந்தசாமி நாயகர் கல்வி அறக்கட்டளையின் சார்பாக பெரியவர் க. சண்முக சுந்தரம் அவர்கள் 1995-ம் கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்த நாரீச வர்மா அவர்களின் வாழ்வியல் வரலாற்றை ஒரு ஆவண படைப்பாக பதிவு செய்து வெளிக்கொண்டு வந்தார். அதற்கு முன் துண்டு பிரசுரங்களாக, கட்டுரைகளாக சிறு அறிமுகம் கிடைத்திருந்த வர்மாவுக்கு இந்த நூல் தான் அவரின் புகழ்மிக்க கோட்டைக்கு திறவு கோலாக அமைந்தது.

 

அதன் பின் இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிய பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன் அவர்கள் வர்மாவின் வன்னி வம்ஸ பிரகாசிகை மற்றும் வன்னியகுல க்ஷத்ரிய சங்க உபதேசங்கள் என்ற நூல்களை 2007-ம் ஆண்டு மறுபதிப்பு செய்து வெளியிட்டார். அடுத்த ஆண்டு முனைவர் அ.ம. சத்தியமூர்த்தி அவர்கள் ஆய்வாளர்கள் பார்வையில் அர்த்த நாரீசவர்மா எனும் நூலை வெளியிட்டார்.

 

தமிழ்ச் சமூகம் வர்மாவை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் 2010-ஆம் ஆண்டு கவிஞர் காவிரி நாடன் அவர்களின் மேற்பார்வையில் ஆறு அண்ணல் அவர்களை தொகுப்பாசிரியராக கொண்டு சேலம் கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்த நாரீச வர்மாவின் க்ஷத்ரியன் இதழ்தொகுப்பு மொத்தமாக வெளியிடப்பட்டது. 17 தொகுதிகளை கொண்ட இந்த தொகுப்பு வர்மாவின் அறிவுப் பெட்டகத்தை அறிமுகம் செய்து வைத்தது. வர்மாவின் நூல்களையும் வர்மாவை பற்றி எழுதிய நூல்களையும் படைத்திட்ட படைப்பாளர்களுக்கு வன்னியர் சமூகத்தின் சார்பில் நெகிழ்ந்த நன்றிகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 

 

ஆயினும் இந்த கவிச்சிங்கம் வன்னியர் குலத்தில் பிறந்து விட்டவர் அல்லவா? போர்க் குணமிக்க சமூகப் போராளி, தேச விடுதலைக்காக அரும்பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர், தமிழ் இலக்கிய உலகிற்கு பல கொடைகளை வழங்கிய அறிஞர், அனைத்து சாதியினரும் உயர்வு பெற்று வாழ வேண்டும் என்ற மனிதநேய பற்றாளர், இவை அனைத்தையும் விட பத்திரிக்கை உலகிற்காக தனது சொத்து, சுகம், குடும்பத்தையே இழந்து பத்திரிக்கையை நடத்திய மிகப் பெரும் சிந்தனையாளன் என்ற பல உயரிய குணாம்சங்களை அணிகலனாக தரித்த இந்த ராஜரிஷியை நம் குலத்தவர் தவிர வேறு எவரும் அங்கீகரித்து போற்றவோ, மரியாதை செய்யவோ தயாரில்லை.

 

வன்னிய குலத்திற்கு ஏற்பட்ட இந்த சாபம் என்று நீங்குமோ? தெரியவில்லை. இந்த மனித குல மாமுனிவரின் ஒப்பற்ற சிந்தனைகளை அகிலத்திற்கு அறிமுகப்படுத்தி கௌரவிக்க தமிழறிஞர்களும், இலக்கியவாதிகளும் குறிப்பாக பத்திரிக்கையாளர்களும் ஏன் வரவில்லை என்பதை இக்கட்டுரையின் வாயிலாக கேள்விகளை எழுப்புகிறேன். தூங்குவது போல் பாவனை காட்டும் எனதருமை தமிழினமே! உந்தன் தவப்புதல்வன் தரணியில் தமிழர் நெஞ்சமெல்லாம் தஞ்சம் கேட்டு நிற்பது உனக்கு பெருமையல்ல சிறுமையன்றோ!

 

தீவிரவாதம், பயங்கரவாதம் என்ற சொற்களுக்கு வலிவும், பொலிவும், உயிர்ப்பும், உயர்வும் என்றும் உண்டென்பதை அன்றே வர்மா தம் வாய்மை, மெய்மை, செயல்பாடு அனைத்திலும் நிலை நிறுத்திக் காட்டியதை எவராவது மறுக்க இயலுமா? அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழும் பகுதிகளில் கலந்து வாழ்ந்து அவர்களுக்காக பாடுபட்டதை படித்துப் பார்த்த பின்பும் இம்மாபெரும் ரிஷியை அங்கீகரிக்க மறுப்பது மாபாவம் அன்றோ?

 

சொந்தங்களே! உங்கள் இதயக் கதவை திறந்து வையுங்கள். அதில் சூளுரைக்கிறேன். இந்த மகா கவிஞனை, தேசப்போராளியை, மனித நேயரை, கவிச்சிங்கத்தை, பத்திரிக்கையாளரை வன்னிய குல மக்களே! உங்கள் சார்பாக நமது வன்னியர் கூட்டமைப்பே கௌரவப்படுத்தி உயர்த்தும் அதற்கான அறிவிப்பை விரைவில் நமது வன்னியர் குரல் இதழ் மூலம் அறிவிக்கிறேன் என்ற செய்தியோடு இதோ அந்த போராளியின் போர்க்குணம் நிறைந்த வாழ்வியல் சரிதத்தை உங்கள் நெஞ்சங்களுக்கு காணிக்கையாக்குகிறேன்.

 

சேலத்தில் சுகந்ததிரும் சுகவனபுரியில் தெய்வபக்தியும், ஒழுக்கமும், பெருஞ்செல்வமும், நன்மதிப்பும் கொண்ட சுகவன நாயகர் தம் துணைவியாரோடு சிறப்பான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். மக்கட்பேறு வேண்டி, திருச்செங்கோடு அர்த்த நாரீசுவரரைப் பிரார்த்தித்து நோன்பிருந்தனர் இருவரும்.

 

இடப்பாகத்தில் சக்தியும், வலப்பாகத்தில் சிவனுமுள்ள திருமேனி கொண்ட மூலவருக்கு அர்த்த நாரீசர் என்று வடமொழியிலும், அம்மையப்பர் என்று தமிழிலும் அழைப்பது வழக்கம். மலைமேலும் அடிவாரத்திலும் திருக்கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் அர்த்த நாரீசரிடம் அளவற்ற பக்தி கொண்டவர் சுகவன நாயகர்.

 

 

 

நாயகரும், அவரது மனைவி இலக்குமி அம்மையாரும் அம்மையப்பனை அனுதினமும் வேண்ட கருவில் திருவுடைய திருமகனை 27.07.1874-ஆம் ஆண்டு சீரும் சிறப்புமாக பெற்றெடுத்தனர். ஈசன் அருளால் பிறந்ததால் அர்த்தநாரீசன் என்று அம்மையப்பர் பெயரையே வைத்தார்கள்.

 

வர்மா தன்னை பற்றி அவர் இயற்றிய சங்க காவியம் என்ற நூலில் நூலாசிரியன் எனும் தலைப்பில் எழுதியதை பார்ப்போம். நான் சேலம் நகரில் சுகவனபுரியில் வசித்த சுகவன நாயகரின் மகன். திருச்செங்கோடு அர்த்த நாரீசர் திருவருளால் பிறந்த சிவபக்தன். சீலமிக்க சோழர் திருக்குலத்தில் வந்த ரிஷி. செந்தமிழில் இசை பாடும் புலவன் எனது வாயில் பகவத் கீதையின் மணம் வீசும்.

 

அர்த்த நாரீசன் எனும் இனிய பேர் பெற்ற அறிஞன், விரும்பத்தக்க ஒப்பற்ற க்ஷத்ரியன், தமிழ்மன்னன் பத்திரிக்கைகளை வெளியிடுபவன். கவியரசன் இயற்றிய சங்க காவியம் படைத்தவன். செந்தமிழின் இலக்கணத்தையும் இயல் இசைகளையும் அறிவேன். என் முன்னோர் செய்த நல்வினையின் பயனால் முதல் குடியான வன்னியர் குலத்தில் பிறந்தார்கள் என்று பெருமை பட எழுதுகிறார்.

 

வர்மா முற்பிறவியில் செய்த தவப்பயனால் திருப்பூந்துருத்தி, இந்திர பீடம், சிவயோகி கரும்பாத்திர சுவாமிகளிடம் சிவதீட்சைப் பெற்று கல்வி கற்றார். மேலும் குருகுல வாசமிருந்து தமிழ், சமஸ்கிருதம், சமய நூல்களை கசடறக் கற்றார். அதனால் அவர் ஆன்மீக சிந்தனை உடையவராகவும், ஒழுக்கசீலராகவும், கல்வியாளராகவும், கவிஞராகவும், குலப்பற்றும், தமிழ்நாட்டுப் பற்றும், பாரத தேசப் பற்றும் கொண்டவராகவும், எழுத்தாளர் மற்றும் பத்திரிக்கையாளராகவும் திகழ்ந்தார்.

 

ஒரே புலவர் எளிய நடையிலும் உயர் நடையிலும் கவி புனையலாமென்ற வர்மா, பாரதியாரைப் போல பாமர மக்களுக்குப் புரியும் வகையில் பாக்களை எளிய நடையில் எழுதி மக்களுக்கு தேசபக்தியை ஊட்டினார். வடமொழியைக் கற்க சமஸ்கிருத பள்ளியில் சேர்ந்து படித்தார் வர்மா. கோயிலில் ஐயர் தவறாக மந்திரம் சொன்னால் அதை திருத்தி சரியான மந்திரத்தை சொல்லிக் கற்றுக் கொடுக்கும் அளவுக்கு பாண்டித்யம் பெற்றார்.

 

ஆங்கில புலமையையும் பெற்ற வர்மா, கர்நாடக சங்கீதம் கற்றுக் கொண்டு பாடினார். சங்கீதக் கீர்த்தனை இயற்றி, இசை இயக்குநராகவும் விளங்கினார். வர்மா வான சாஸ்திரமும், ஜோதிடமும் கற்று தெளிந்தார். குடும்பம் நடத்த வேலை செய்து பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற கவலை இல்லாதவர் வர்மா.

 

 

1905-ஆம் ஆண்டு இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபு வங்காள மாகாணத்தை இரண்டாகப் பிரித்தார். இது காசியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பிரச்சனையாக உருவெடுத்தது. 1906 டிசம்பரில் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் திலகர், அன்னியர்களின் பொருட்களை வாங்காமல் பகிஷ்கரித்தல் என்று அறிவித்தார். இது மிதவாதிகளுக்கு பிடிக்காமல் போனது.

 

தமிழ்நாட்டில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் தலைமையில் தீவிர இயக்கம் நடந்து வந்தது. இளைஞர்களுக்கு துப்பாக்கி சுடக் கற்று கொடுத்து வெள்ளையரை எதிர்த்துப் போர் புரிந்து, அவர்களை இந்தியாவை விட்டு துரத்த வேண்டும் என்று திட்டமிட்டது தீவிரமான திலகர் இயக்கம். இதனால் க்ஷத்திரியர் மீண்டும் அரசாள வாய்க்குமென்று நம்பிய வர்மா தீவிரவாதி ஆனார்.

 

அதற்காக சேலத்தில் ஸ்ரீ கழறிற்றறிவார் சபையை 1907-ல் வர்மா நிறுவினார். ஐந்து வருடங்கள் கழறிற்றறிவார் சபையில் சிவனடியார்களுக்கு பூஜை செய்யப்பட்டது. இச்சபையை நிறுவி க்ஷத்ரியர்களை தீவிரவாத இயக்கத்தில் சேர்த்து வந்தார் வர்மா.

 

வளங்கொழிக்கும் நிலங்களுக்கு உரிமையாளரான சம்பு குலசேகரர் நன்செய் இடையாறு கந்தசாமி கண்டரையும், ராஜகோபாலாச்சாரியாரையும் தீவிரவாத இயக்கத்தில் ஈடுபடுத்தினார் வர்மா. இதனால் ராஜாஜி சென்னையில் தான் வசித்த வீட்டிற்கு திலகர் பவனம் எனப் பெயரிட்டார்.

 

சேலம் அர்த்தநாரீசவர்மா, கோவை பூபதி பழனியப்பா, நன்செய் இடையாறு கந்தசாமி கண்டர், ஏமராஜ கண்டனூர் சின்னச்சாமி கண்டர் ஆகிய நால்வரும் தேசப்பணியைக் குலப்பணியாகவே செய்தனர். கழறிற்றறிவார் சபையை சத்திரியர் படை சேர்க்கும் அரசியல் சங்கமாகவும், சேலம் ஜில்லா வன்னிய குல க்ஷத்திரிய சங்கமாகவும் செயல்படச் செய்தார் வர்மா. கந்தசாமி கண்டரை தலைவராகக் கொண்ட அச்சபைக்கு பொக்கிஷ காரியதரிசியாக இருந்தார் வர்மா.

 

 

பூபதி பழனியப்பா கோவை ஜில்லா வன்னிகுல க்ஷத்திரிய சங்கமும், சந்திரகுல க்ஷத்திரிய சங்கமும் நிறுவினார். ஏமராஜகண்டனூர் சின்னசாமி கண்டல் கொடுமுடியின் சங்கத்திற்கு தலைவராக இருந்தார்.

 

1912-ஆம் வருடம் சேலம் சுதேசாபிமானி அச்சுக் கூடத்தில் மேனேஜராக பணியாற்றினார். அப்போது தான் ஸ்ரீ வன்னி வம்ஸப்ராகாசிகை எனும் நூலை வெளியிட்டார். அச்சுக் கலையை நன்கு அறிந்து கைதேர்ந்தவரானார் வர்மா. 1913-ல் இதன் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார்.  இப்புத்தகத்தில் தங்களை பற்றி தவறாக எழுதப்பட்டுள்ளதாக கம்மாளர் அவதூறு அச்சுக் கூடம் தடைபட்டது.

 

சென்னை வன்னிகுல க்ஷத்திரிய மகா சங்கத்தின் வெள்ளி விழாவையும் சேலம் ஜில்லா ஆறாமாண்டு விழாவையும் 1913-ஆம் ஆண்டு நஞ்சை இடையாறு ஊரில் நடத்திக் காட்டினார் கண்டர். இதில் வர்மாவும் தன் பங்கை சிறப்புடன் செய்து கொடுத்தார். 1917-ல் சேலம் ஜில்லா சங்கத்தின் பத்தாம் ஆண்டு விழாவையும் குதூகலமாக நடத்தினார்கள். இவ்விழாவிற்காக வந்த ஏமராஜ கண்டனூர் சின்னசாமி கண்டர் வர்மாவை தம் ஊருக்கு அழைத்துச் சென்று வசிக்க வீடும் வேண்டிய பொருளும் அளிக்க, கொடுமுடியில் சில காலம் வசித்து வந்தார் வர்மா. இருவரையும் போஜ மகாராஜாவும் காளிதாசனும் என்று உவமைபட அழைக்கலாயினர் அப்பகுதி மக்கள்.

 

 

1918-ல் சின்னசாமி கண்டர் கொடுமுடியில் இரண்டு நாள் மகாநாடு நடத்தினார். வர்மாவையும் பூபதி  பழனியப்பாவையும் க்ஷத்திரியர்களை மகாநாட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைக்க சுமார் ஒரு வருடகாலம் கோவை, சேலம், மதுரை ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தனர். 1918 மே மாதம் மகாநாடு தொடங்கி நடத்தப்பட்டது.

 

சேலம் திரும்பிய வர்மா துறவறம் பூண்டு தன் பெயருடன் இருந்த நாயகர் என்ற பட்டத்தை துறந்து தாடி வளர்க்க ஆரம்பித்தார். நான் க்ஷத்திரியன் ஆனதால் ராஜரிஷி என்ற பட்டத்தை ஏற்றுக் கொள்வதாக சொன்னார். 1921-ஆம் ஆண்டு திருவண்ணாமலை தாலுகாவில் நடந்த வன்னியர் சங்க கூட்டத்திற்கு சென்றார் வர்மா.

 

திருவண்ணாமலைக்கு முதல் பயணத்தை தொடங்கிய வர்மாவை அண்ணாமலையார் ஆட்கொள்ள ஆரம்பித்தார். அது சங்க காவியத்தில் ‘யான் வணங்கும் திருவருணை யண்ணல்’ என்று முடிவுரைப் பஞ்சகம் எழுதும் நிலைக்கு கொண்டு வந்தது. கூட்டத்திற்கு வந்த பொன்னுச்சாமி பிள்ளையின் குமாரர் குப்புசாமி கண்டர் அக்னி குல சத்திரிய சங்கத்தை நிறுவி இருந்தார். இவர்களது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்த வர்மா, இவர்களை வன்னியர் அல்லது தமிழ்நாட்டு சத்திரியர் எனும் நூலை பிரசுரிக்க வைத்தார்.

 

ராஜரிஷி வர்மா அருணையில் ரமண மகரிஷியை சந்தித்து ஆசி பெற்றார். அவரின் ஆசிரமத்திற்கு சென்று வந்ததில் பலரின் நன்மதிப்பை பெற்றார். ரமணரின் சிஷ்யர் ஸ்ரீகால்ய கண்ட கணபதி முனிவர் வேத சாஸ்திரங்களை நன்கு கற்றவர். இவருக்கும் வர்மாவுக்கும் நல்ல தோழமை ஏற்பட்டது.

 

வர்மா நம் இன மக்களுக்கு ஒழுக்கமும் அறிவுரைகளும் கற்பிக்க செய்யுட்களும் கட்டுரைகளும் எழுதினார். அதில் மிக முக்கியமானது வன்னியகுல பெருமக்களுக்கு உரைத்த உபதேச உரைகளாகும். கல்வியைக் கல், கட்சியொழி, கள்குடியை வேண்டாதே, கொல்லாதே, தன்னலத்தைக் கோராதே, நல்லோரைப் போற்று, புலை நீக்கு, புண்ணியஞ் செய், ஆனினங் காப்பாற்று, மரபொழுக்கம் பற்று என்று பத்து தலைப்புகளின் கீழ் பத்துக் கட்டளைகளை உபதேசித்த பின்பற்றமாறு வேண்டினார் வர்மா.

 

பத்தாவது கட்டளையின் இறுதியில், சினேகிதனே! திரும்பவும் ஒரு தரம் உன் ஜாதியை சிந்தித்து ‘நான் சத்ரியன்’ என்று சொல். தூக்கத்திலிருந்து விழி, ஜாதிக்கு  உழை. ஜாதி தர்மங்களைக் கைப்பற்று. இதுவே உனக்கு என்னால் முடிந்த உபதேசம் என்று முடிக்கிறார் வர்மா.

 

ராஜரிஷி வர்மா தனது கவிதைகளின் போது செந்தமிழ்ச் செல்வியின் பாதம் குமரி என்று பாடாமல் இலங்கை என்றே பாடுகிறார். அதற்கு அவரே விளக்கமும் சொல்கிறார்.

 

சங்ககாலம் முதலே தமிழர்கள் இலங்கையின் ஈழத்தில் குடியிருந்து வருகிறார்கள். இதற்கு குறுந்தொகையில் 343-வது செய்யுளைப் பாடியவரின் பெயர் ஈழத்துப் பூதன் தேவனார் என்பதே அத்தாட்சி. அதில் 189, 360-வது செய்யுட்களைப் பாடிய புலவர் ஈழத்திலிருந்து மதுரையில் குடியேறியதால் அவர் மதுரை ஈழத்து பூதன் தேவனார் எனப்பட்டார். 18-ம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் இலங்கையை பிடித்த போது ஜாப்னாவில் சேர அரசர் ஆண்டு வந்தார். வவுனியாவில் வன்னிய அரசர் ஆண்டார். 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் இலங்கையை பிடித்த போது கண்டியில் பண்டார வன்னியன் அரசாண்டு வந்தான். இப்பகுதியில் இன்றைக்கும் ஜனத்தொகையில் அதிகமானவர்கள் தமிழர்களே என்று விளக்குகிறார் வர்மா!

 

1920-ஆம் ஆண்டு வேலூரில் நடந்த வட ஆர்க்காடு ஜில்லா 14-வது அரசியல் மகாநாட்டில் தலைமை உரையாற்றினார் தமிழ்த் தென்றல் திரு.வி. கல்யாண சுந்தரனார். தேசபக்திக்குரிய வழிகள் பற்றி பேசும் போது ‘பாரததேவி மீது புலவர்கள் பாடியுள்ள பாக்களை இன்னிசைக் கருவிகளுடன் பாராயணஞ் செய்யலாம். சுப்பிரமணிய பாரதியின் பாடல்களும், சேலம் அர்த்தநாரீசவர்மா அவர்களின் பாடல்களும் மக்களுக்கு தேசபக்தி ஊட்டுவது போலக் கற்றை கற்றையாக அரசியல் நூல்களை ஒதியவரின் சொற்பெருக்குகளும் அப்பகுதியை ஊட்டா’ என்றார். இதைவிட வர்மாவின் கவி ஆற்றலுக்கு எவருடைய மதிப்புரையும் சிறந்ததாகாது.

 

பாரதியாரும் வர்மாவும் ஒரே பொருள் பற்றி பாடிய பாடல்களை ஒப்பு நோக்கிப் பார்க்கும் போது அவரவர் கவியின் தனிச்சிறப்பு புலனாகிறது. பாரதியாரின் மறைவுக்கு குறைவான எண்ணிக்கையில் தான் உற்றமும், சுற்றமும், நட்பும் வந்தது. பாரதியாரின் மறைவு குறித்து வேறு வித தகவல் எதுவும் இல்லாத நிலையில், அன்னாரின் மறைவுக்கு நமது ராஜரிஷி வர்மா அவர்கள் இரங்கற்பா எழுத அது 14.09.1921 தேதியிட்ட சுதேசமித்ரன் பத்திரிக்கையில் வெளியாகி இருக்கிறது என்பது எவ்வளவு ஆச்சரியமான விஷயம். கவிக்குயிலும், கவிச்சிங்கமும் ஒரே நேர்க்கோட்டில் பயணித்த இரு கவிஞர்கள் என்பதற்கு இதை விட வேறு சான்று தேவைதானா?

 

 

வர்மா விட்டுச் சென்ற செல்வங்கள் அவர் கல்வியறிவினால் தீட்டிய எழுத்தோவியங்கள் மட்டுமே. அவர் பத்திரிக்கைகளிலும் புத்தகங்களிலும் பற்பல கருத்துக்களை உணர்த்தும் வண்ண வண்ண எழுத்தோவியங்களை வரைந்தார். பாமர மக்கள் படிக்கும் வண்ணம் மிக எளிய நடையிலும், புலவர்கள் மகிழும் வண்ணம் உயர்ந்த நடையிலும் எழுதினார். 17.02.1934-ல் மகாத்மா காந்தி அடிகளுக்கு திருவண்ணாமலை மகா, ஜனங்கள் வாசித்தளித்த நல்வரவு பத்திரத்தை மணிப்பிரவாள நடையில் எழுதினார்.

 

வர்மா தன் வாழ்நாள் முழுவதும் பத்திரிக்கை நடத்துபவராகவே வாழ்ந்து வந்தார். அவரைப் போல 85 வயதில் பத்திரிக்கையின் ஆசிரியராக உலகத்தில் யாரும் இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. 1959-ஆம் ஆண்டு தமிழ் மன்னன் என்ற பத்திரிக்கையை வெளியிட்டார். அதில் பின்புற அட்டையில் வர்மா அச்சிட்டிருந்தது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதை அவரது மொழியிலேயே படியுங்கள்.

 

பத்திராதிபர் விண்ணப்பம்

 

தமிழ் மன்னர் குல மணிகளே!

 

யான் பத்திரிக்கைத் தொழிலில் என் ஆயுளில் முக்கால்பாகம் ஈடுபட்டு உழைத்து வருவது உலகப் பிரசித்தம் க்ஷத்திரியனை முதன்முதலில் ஆரம்பித்தேன். அதை நடைபெறவொட்டாமல் நம் குல மணிகள் கங்கணங்கட்டிக் கொண்டார்கள். க்ஷத்திரிய சிகாமணியென் மாத சஞ்சிகையை ஆரம்பித்தேன். அதுவும் அச்சுக் கூடத்தார் பொறாமையால் ஒரு வருடத்தில் நின்றுவிட்டது. காங்கிரஸ் கட்சியை ஆதரித்து வீரபாரதியென்னும் ஓர் பிரசுரம். வாரம் மும்முறையாக ஆரம்பித்தேன். பிரிட்டிஸ் சர்கார் அதன் மேல் கவனஞ்செலுத்தி பாரதியின் காட்சிகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்த சட்டசபையில் வாசித்து அச்சுக் கூட சட்டத்தைத் திருத்தி தமிழகத்தில் தமிழின் ஒரே பத்திரிக்கையாகிய வீரபாரதியின் மேல் வழக்கு தொடுக்க ஆரம்பித்ததும் அஃது நின்றுவிட்டது. இப்படியாக எனது எண்பதாவது வயதுவரை என் முயற்சிகள் வீணாயின. ஒர் சொந்த அச்சகம் வைக்க நான் செய்த முயற்சிகளும் பலிக்கவில்லை.

 

தற்போது முதுமைப் பருவம். இன்று வயது எண்பத்தைந்து. நாளை ஆடி மாதம் 12-ல் எண்பத்தாறு துவக்கம். வாரப்பத்திரிக்கை நடத்த என்னால் உதவியின்றி தனியாய் முடியாத படியால் அவ்விஷயத்தில் குத்திலுதித்த தனவான்கள் உதவியும் கிடைக்காதபடியால் ‘தமிழ் மன்னன்’ என்னும் இச்சஞ்சிகையை ஆரம்பித்திருக்கிறேன். இதன் மூலமாய் என் சொந்த கவிகளையும் காவியங்களையும் வெளியிட்டுத் தமிழகத்துக்கு பரிசளிக்க உத்தேசித்துள்ளேன். இப்பத்திரிக்கையால் வரும் ஊதியம் என் வாழ்க்கையை நடத்தக் கொஞ்சமும் போதாது. ஆதலால் ஓர் வித உபகாரத்தை நாடி இவ்விண்ணப்பத்தை வெளியிடுகின்றேன்.

 

சந்தாக்கள் சகாயதனம் இரண்டும் நான் வேண்டுகின்றேன். பத்து ரூபாய் வீதம் நூறு பேரிடம் ஆயிரம் ரூபாய் வசூலித்து என் கடைசி நாட்களுக்குதவியாக வைத்துக் கொள்ள என் ஆவல். வைர விழாவில் கிடைத்த ஐயாயிரத் தொகைகள் பத்திரிக்கை பிரசுரித்ததிலும் கடன் பெற்றவர்கள் கொடாததனாலும் தற்போது உதவவில்லை. பத்து ரூபாய் சகாயதனம் தரும் நூறு பேர்கள் முன்வர எனது கோரிக்கை எனது தொண்டை மதித்து நடக்கக் குலமக்களைத் தூண்டுகிறேன்.

ஆர்வலன்,

ராஜரிஷி சு. அர்த்தநாரீச வர்மா.

 

மேற்கூறிய விண்ணப்பத்தினால் வர்மா தமது 85 வயதிலும் கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி பத்திரிக்கையை நடத்தும் மனதிட்பமும் சிந்தனைத் தெளிவும் புத்திக் கூர்மையும் உடல் நலமும் கொண்டிருந்தார் என்பதை அறிந்து கொள்ளலாம். 85 வயதிலும் பத்திரிக்கை நடத்திய வர்மாவுக்கு முதல் பத்திரிக்கை க்ஷத்ரியன் ஆகும்.

 

முதன் முதலில் கோவையில் பூபதி பழனியப்பா நாயகர், அர்த்தநாரீச வர்மாவை ஆசிரியராக் கொண்டு க்ஷத்ரியன் பத்திரிக்கையை சிறிய அளவில் வெளியிட்டர். அவர் எதிர்பாராத விதமாக இறந்து விட வர்மா சேலத்துக்கு 16.04.1923 முதல் வாரப் பத்திரிக்கையாக  க்ஷத்ரியனை சுமார் இருபது ஆண்டுகள் நடத்தி வந்தார். காலத்தின் புதுமையினால் பல வெற்றிகளைக் கண்ட க்ஷத்ரியன் அதன் வாலிபப் பருவமான இருபதாம் ஆண்டில் தளர்ந்து மறைந்தது.

 

1951-ல் க்ஷத்ரியன் சரியாக பத்தாண்டுகளுக்கு பிறகு திருப்பாதிரிப் புலியூரிலிருந்து வெளி வந்தது. இப்போது வர்மாவுக்கு வயது 77. தடி ஊன்றிய வயதிலும் 1952 தேர்தலில் வன்னிய அபேட்சகர்களுக்கு வாக்களிக்கும்படி பிரச்சாரம் செய்தார். காங்கிரஸ் கட்சிக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் எதிராக கடுமையாக பிரச்சாரம் செய்து பத்திரிக்கையிலும் எழுதினார்.

 

வர்மா தள்ளாத வயதிலும் பேராற்றலுடன் சிறந்த கவிதையும் கட்டுரையும் எழுதி பத்திரிக்கையை நடத்தி வந்தவர் பொருளாதாரக் கஷ்டத்தால் நிறுத்தி விட்டார். க்ஷத்ரியன் சிகாமணி மாத இதழையும் நடத்தினார். ஆனால் ஒன்பது மாதங்களில் இதை நிறுத்தி விட்டார். மேலும் தமது மரபினருக்காக க்ஷாத்ர சூடாமணி அல்லது தமிழ்நாட்டு க்ஷத்ரியர் என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

 

பாரதியாரின் பெயரில் வீரபாரதி என்னும் செய்தி தாளினை வாரம் மும்முறை வெளியீடாக சென்னையிலிருந்து ஒரு வருடம் நடத்தினார். பிறகு சர்க்காரின் நடவடிக்கையினால் நிறுத்தப்பட்டு விட்டது. தமிழகம், தமிழ்மொழி, தமிழ் மன்னர் சரிதங்களை விவரிக்கும் ஒரு முத்தமிழ் மாத இதழாக 1959 மே மாதம் வெளியிடப்பட்டது. ஒரேயொரு இதழ் மட்டும் கிடைக்கப் பெற்ற தமிழ் மன்னன் பத்திரிக்கையை வர்மா நடத்திய போது அவரது வயது 85.

 

வர்மா பத்திரிக்கைகள் நடத்திய அதே வேளை புத்தகங்கள் எழுதுவதிலும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார் என்பது வியப்புக்குரிய விஷயம். தனது இளம்வயதில் சுந்தர விநாயகர் பதிகம் பாடி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். 1909-ல் சேரமான் வரலாற்றையும் வெளியிட்டார்.

 

1923-ல் சமஸ்கிருத நூல்களை ஆராய்ந்து பாரா சரஸ்மிருதி (மூலமும் உரையும்) பகவத் கீதா விலாசம், ஜாதி தத்வ நிரூபனம், லோகாந்தரம், ஜீவனும் ஈசனும், விதிமதி விளக்கம் ஆகிய புத்தகங்களை இயற்றி வெளியிட்டார்.

 

1912 ஜனவரியிலும், 1913 மே மாதத்திலுமாக இரண்டு பதிப்பைக் கண்ட வன்னி வம்ஸ ப்ரகாசிகை எனும் புத்தகம் வர்மாவை வெளி உலகுக்கு காட்டியது. வன்னிய வம்ச சத்ரிய குலத்தில் உதித்த சிறுவர்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு வினா விடையாக எழுதப்பட்டது இந்தப் புத்தகம். நீதிமன்ற வழக்கையும் இப்புத்தகம் சந்தித்தது.

 

மதுவிலக்குச் சிந்து, ஸ்ரீவன்னி குலோத்கர்ஷ தீபிகை, குலமாதர் குப்பிப் பாட்டு, வாலிபர் கீதம், மன்னர் குல வாலிபர் கீதம், கொடிப்பாடல், மழவரோதயம், அரசர் குல ஆச்சாரச் சிந்து, பள்ளியர், பரத்துவம், படையாட்சியர் பாடல், ஒற்றுமைப் பாடல் என பல்வேறு தலைப்புகளில் மிக அழகான பாடல்களை இயற்றி கவி உலகத்திற்கு பெருமை சேர்த்து இருக்கிறார்.

 

பத்திரிக்கை, இலக்கியம், கவிதை, தேசீயம் என்றெல்லாம் தன் திறமையை உருவாக்கி படைப்புகளை படைத்திட்ட ராஜரிஷி வர்மா பிறவியிலேயே சமயப் பணி செய்திட பிறந்த ஒரு மாமுனிவர். சமயத் தொண்டையும் குலத் தொண்டாகக் கருதியே செய்தார். சேலத்தில் கழறிற்றறிவார். சபை மூலம் செய்த சமயப் பணிக்கு எல்லையே இல்லை எனலாம்.

 

சகல சாஸ்திரங்களையும் கற்ற வர்மா சமஸ்கிருத மந்திரங்களை சொல்லி வன்னியர்களுக்கு உபநயனம் செய்து பூணூல் அணிவித்தார். சந்தியா வந்தனம் செய்யும் மந்திரங்களையும் கற்றுக் கொடுத்தார். புரோகிதராக இருந்து திருமணச் சடங்குகளை செய்து வைத்தார். வர்மா கடவுள் வாழ்த்து பாடும் போது கணபதி, சிவபெருமான், உமா தேவியார், முருகவேள், திருமால், இலட்சுமி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களை போற்றிப் பாடியே தொடங்குகிறார்.

 

வர்மா சங்க காவியம் இயற்றியது தான் நம் குலத்தவர்க்கு செய்த பெருந்தொண்டாகும். இப்புத்தகம் இல்லாவிட்டால் முன் முன்னோர் சங்கம் அமைத்து தமது இனத்தை வன்னியகுல சத்திரியர் என்று அரசாங்கத்தின் அங்கீகாரம் பெற்ற வரலாற்றை நாம் அறிந்திருக்க முடியாது. வர்மா இப்புத்தகத்தில் மகா சங்கம் தோன்றிய வரலாறும் அதன் ஆண்டு விழாக்கள் யார் யார் தலைமையில் எங்கெங்கு நடந்தன என்ற விவரத்தையும் சேர்த்து 1940-ல் நடந்த தங்க விழா வரை தொகுத்து எழுதி உள்ளார். வர்மாவின் சிறந்த நூலான சங்க காவியம் எழுதி பத்து வருடங்களுக்குப் பிறகு வேலூர் ஏ.எஸ். அருணாசலம் பிள்ளை அவர்கள் நூலை அச்சிட்டு வெளியிட்டார்கள்.

 

ராஜரிஷி வர்மா தனது இறுதி நாட்களில் வேலூரில் ஏ.எஸ். அருணாசலம் பிள்ளை வீட்டிலிருந்து வந்தார் என்பதை நம் வன்னியகுல சொந்தங்கள் வன்னியர் குரல் மூலம் அறிந்திருப்பீர்கள். அவ்வப்போது திருவண்ணாமலைக்கு போகும் வழியில் சீடர்கள் வீட்டிலும் தங்கிச் செல்வார். அதே போல் ஒருநாள் கேளூரில் உள்ள நாராயணசாமி நாயகர் வீட்டிற்கு சென்ற போது அங்கு நோய்வாய்ப்பட்டார். அங்கிருந்து திருவண்ணாமலையில் உள்ள முத்து ஆறுமுகம் மண்டியில் வைத்து இருந்தனர்.

 

அக்காலத் தமிழ் நடையைத் தாண்டி, தமக்கென செந்தமிழ் நடையை இதழில் புகுத்தியவர். இலக்கண இலக்கிய நயங்களுடன் இதழ்களை வளர்த்திட முடியும் என்பதை நிரூபித்தவர். தமிழை கசடறக் கற்று, கற்றபடி நின்று, அதற்குத் தக வாழ்ந்தவர். ‘குடிசெயல் என்னும் ஒருவர்க்கு தெய்வம் மடிதற்றுத் தான் முந்துறும்’ எனும் குறளுக்கு அணியாக விளங்கியவர்.

 

தான் தோன்றி இனத்தை தட்டி எழுப்பி, எழுச்சி மிக்க உலகை நோக்கிப் பயணிக்க முயற்சி எடுத்தவர்களில் முதன்மையானவர். தமிழை ஒரு பொன் செய்யும் கொல்லனைப் போல் செதுக்கியவர். செய்யுள், பாட்டு, கவிதை என எப்படி எழுதினாலும் யாப்புக்குள் நின்றபடி மெய் சிலிர்க்கப்படும் பைந்தமிழ்ப் பாத்தேனீ.

 

தெய்வபக்தி, தேசபக்தி, மக்கள் பக்தி என மூன்றிலும் மூழ்கிப் போய் தன் குடும்பத்தை தொலைத்துவிட்ட மொழித் துறவி! வாழ் நாளெல்லாம் எழுது கோல் ஏர் உழுது நல்ல விதைகளை தூவி அறிவுமிக்க சிந்தனையாளர்களாக மக்களை உருவாக்க ஒயாது உழைத்த தலைமகன் 07.12.1964-ல் அருணையில் ஈசனுடன் ஐக்கியமாகி வானுறையும் தெய்வமானார்.

 

ஆம் சொந்தங்களே! ஊருக்கெல்லாம் விளக்கேற்றி வைத்த நம் வன்னிய ஜோதி அண்ணாமலையில் அணைந்தது. எம் குல தலைமகனே, ராஜரிஷியே! உமது புகழ் பரவ எம் உதிரத்தை காணிக்கையாக்குவோம்! நான் சத்ரியன் என்று சொல் என சொன்னீரே கவிச்சிங்கமே! பாராண்ட வன்னிய குலம் நின் போன்ற தெய்வப் பிறவிகளால் மீண்டும் எழும்! அப்போது எழுந்து நிற்க போகும் உயர்ந்த கோட்டைகளும், ஆளும் வன்னிய தலைவர்களும் உங்கள் பெயரை முன் மொழிந்தே பீடத்தை அலங்கரிக்க அமர்வர்.

 

அரசுகள் உமது பெயரையும், புகழையும் இருட்டடிப்பு செய்வதையே வழக்கமாக்கி கொண்டன. இனி உம்மை சொன்னாலே அவர்கள் ஒளி பெற முடியுமென்ற நிலைக்கு உயர்த்துவோம். கவிச்சிங்கம் ராஜரிஷி அர்த்தநாரீச வர்மா அவர்களின் புகழ் ஒங்க வன்னியகுல சொந்தங்களே! வாருங்கள்! வந்து இணையுங்கள்! வன்னியர் கூட்டமைப்பு நிச்சயம் சாதிக்கும் உங்கள் ஆதரவோடு! வர்மாவின் ஆசியோடு!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாரதிக்கு வர்மா இயற்றிய இரங்கற்பா

 

பாரதியார் தேங்காய் பழம் கொடுத்து அன்பு செலுத்திய பார்த்தசாரதி கோயில் யானை மதம் பிடித்து வந்து அவரைத் தூக்கியெறிந்து காயப்படுத்தும்படி செய்தது. 11.09.1921 அன்று காலன் அவரது உடலையும், உயிரையும் வேறாக்கினான். மறுநாள் வர்மா காலனைப் பழித்து பாரதியாருக்கு இரங்கற்பா பாடினார். இது 14.9.1921 அன்று சுதேசமித்திரன் பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது.

 

கவிச்சிங்கம் வர்மா, பாரதி மீது எழுதிய இரங்கற்பா:

 

இடியோறு எதிர்ந்து படவர வென்னச்

செந்தமிழ் மாது நொந்து வருந்தவும்

இசைத்தமிழ் வாணர் அசையா தழுங்கவும்

நேற்று நின்னுடலுயிர் வேற்றுமை கண்ட

கூற்றுவ னென்னும் மாற்றலன் நின்னுயிர்

பருகின னன்றி யுருகின னின்றே

தமிழ்ச்சுவை யின்பஞ் சற்று மறியான்

அமிழ்தின் றேறல் அதுவென வறியான்

ஒப்பிலா பாரதி சுப்பர மணியநின்

நாட்டுப் பாட்டின் நலஞ்சிறி துணரான்

கண்ணன் பாட்டின் கருத்தைத் தேறான்

வீரச் சுவையதில் விளங்குவ துணர்கிலான்

நேர மின்னும் நெருங்கிலை யுண்டான்

நினைக்க நினைக்க நெட்டுயிர்ப் பெடுக்கும்

வினைவிளை காலம் வேறில்லை

பினையும் பிறப்பாய் பெறுவாய் பணியே!

 

  • ஆர்வலன்

சு. அர்த்தநாரீச வர்மா

 

 

 

 

இடிபோல் முழங்கும் ஆண் யாணை குணங்கெட்டு மதம் பிடித்து வர, செந்தமிழ் அன்னை மனம் நொந்து வருந்தவும் இசை பாடுவோரும் தமிழ்ப் புலவரும் காலசையாமல் மனம் வருந்தி யழியவும் நேற்று எமன் என்னும் பகைவன் உன் உடலையும் உயிரையும் பிரித்து வேறாக்கினான்.

 

அவன் உன் உயிரைக் குடித்தானே தவிர இரக்கப்பட்டவனல்லன்; உன் தமிழின் சுவையின் இன்பத்தைச் சிறிதும் அறியமாட்டான். அது அமிர்தத்தின் தெளிவென்று அவனுக்குத் தெரியாது.

 

இணையற்ற சுப்பிரமணிய பாரதி!

 

கூற்றுவன் நினது நாட்டுப்பாட்டின் நன்மையைச் சற்றும் உணரமாட்டான். கண்ணன் பாட்டின் கருத்தைத் தெரிந்து கொள்ளமாட்டான். அதிலுள்ள வீரச் சுவையை உணரமாட்டான். கண்ணன் பாட்டின் கருத்தைத் தெரிந்து கொள்ளமாட்டான். அதிலுள்ள வீரச் சுவையை உணரமாட்டான். நீ சாவதற்கு இன்னும் நேரம் வரவில்லை. அதற்குள் உன் உயிரையுண்டான். இதை நினைக்க நினைக்க மூச்சு திணறுகிறது.

 

ஊழ்வினை உருத்து வந்து உன் உயிரைக் குடிக்கும் காலம் இதை விட வேறில்லை. மீண்டும் பிறப்பாய் சுதந்திரப் போராட்டப் பணிபுரிவாய்.

 

 

 

 

 

 

 

 

 

ஒரு மகான் மறைந்தார்

-ராஜாஜி

 

வர்மாவின் பள்ளித் தோழர் ராஜாஜி அவரை ராஜரிஷி என்றே அழைக்கிறார். வர்மாவுக்கு வைர விழா சேலத்தில் நடந்த போது அவருக்கு காஷ்மீர்  சால்வையும், வாழ்த்தும் அனுப்பி வைத்தார். ராஜாஜி திருவண்ணாமலை நகர சபையின் மார்க்கெட்டை ராஜாஜி திறக்க வந்த போது கூட்டத்திலிருந்த வர்மாவை அழைத்து மேடை மேல் உட்கார வைத்து சிறப்பித்தார். அவர் வர்மா இறந்த போது எழுதுகிறார்.

 

என் மதிப்பிற்குரிய நண்பரும் சமூகப்பணித் தோழருமான சேலம் அர்த்த நாரீசுவர வர்மா அவர்கள் சென்ற 7-ந் தேதி திருவண்ணாமலை ஷேத்திரத்தில் மறைந்து விட்டதாக கடிதம் வந்தது. பகவான் அவர்கள் ஆன்மாவைத் தன் பொருளாக பக்கத்தில் வைத்து கொள்வானாக! அர்த்தநாரீசுவரவர்மா அவர்கள் தம் பெருஞ்செல்வத்தை தரும மார்க்கத்தில் மக்களை உயர்த்துவதற்காகச் செலவிட்டு மிகப்பெரும் பணி செய்து வந்தார். தாழ்ந்தவர்களை உயர்த்துவது சமூகச் சீர்திருத்தம் உயர்ந்தவர்களைத் தாழ்த்துவது சமூகப் பணியல்ல என்பதை நன்கு உணர்ந்த மகான் அடக்கத்தையும், தெய்வ பக்தியையும் சத்திய வாழ்க்கையையும் பெரிதாக மதித்த ஒருவர் மறைந்து விட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி

 

நம் வன்னியகுல தலைமகன் அர்த்தநாரீசவர்மா அவர்களின் வாழ்க்கையில் நடந்த இல்லறத்திற்கான குறிப்புகள் எதுவும் அவ்வளவாக இடம் பெறவில்லை. அவரது புகழ் எவ்வாறு மறைக்கப்பட்டு மறக்கடிக்கப் பட்டதோ அதே போல் அவரது இல்லற வாழ்வும் புதிராகவே அமைந்து போனது தான் விந்தையிலும் விந்தை.

 

வன்னிய ரிஷி என்றழைக்கப்படும் சுப்பிரமணிய நாயகரின் பேரனான காலஞ் சென்ற சு. துரைசாமி நாயகர் 01.06.1980-ல் வெளியிட்ட வன்னிகுல மித்ரன் 4-வது மலர் பக்கம் 5-ல் வர்மா அவர்கள் திருமணத்தை வெறுத்து பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார் என்று செய்தி சொல்லப்பட்டுள்ளது.

 

ஆனால் வர்மாவின் சங்க காவியம் நூலின் 33-ல் பக்கத்தில் ‘சங்கம்மதிப்பிழந்தாலும் விரும்பும் ராஜரிஷி அர்த்த நாரீச வர்மா தமிழ்நாடு முழுவதும் குலத்தொண்டு செய்தவர். அவர் ஆங்காங்கு வன்னியர் சங்கம் அமைக்கும் ஊர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பே மனைவியுடன் சென்று சங்கத்தின் புகழைப் பிரச்சாம் செய்வார்’ என்கிற பொருள் கொண்ட பாடல் இடம் பெற்றுள்ளதை பார்க்கும் போது வர்மா திருமணமானவர் என்று தெரிய வருகிறது.

 

மேலும் 1925 ஜனவரி 28 தேதியிட்ட க்ஷத்ரியன் இதழ் தலையங்கத்தில் தன்னை மனையரத்தான் என்றும் 1931 மே 9-ந் தேதி இதழின் தலையங்கத்தில் .இரு பிராணிகளாகிய எங்களுக்குப் பத்திரிக்கை நடந்தாலும் நடவாவிட்டாலும் ஏற்பட்ட அமைப்புக்கு அணுவளவும் இடம் நேரப் போவதில்லை’ என்றும் எழுதி இருப்பதை பார்க்கையில் வர்மா இல்லற வாழ்வை நடத்தியதற்கான சாயல் தென்படுகிறது.

 

இவை எல்லாவற்றையும் விட 1925 மே 2 க்ஷத்திரியனில் வெளியான ‘பச்சைக் கிளியும் பருந்தும்’ என்ற சோகம் ததும்பும் உணர்ச்சி மிக்க கட்டுரை தனது அன்பு மனைவி மறைந்த துக்கத்தில் வர்மா எழுதி இருக்கக் கூடுமென்று தோன்றுகிறது. சொந்தங்களே! இதோ! கதை வடிவிலான அந்தக் கட்டுரை…

 

 

 

பச்சைக்கிளியும், பருந்தும்…

 

  • ‘துன்பம்’ எழுதியது

 

தெய்வமே உனக்கடிமை! பனிரெண்டு வருடமாய் என்னுடனிருந்த கிளி, சனிக்கிழமை இரவு எப்படியோ பருந்து அடித்துக் கொண்டு போய்விட்டது. கிளியைப் பற்றி என்ன நினைக்கின்றீர்கள். தாய், தந்தையற்ற கிளி. நான் வீட்டில் இல்லாத சமயத்தில் எல்லோரையும் உபசரிக்கும் கிளி. தேசாபிமான கிளி. சூதுவாது இல்லாத கிளி. அதற்கு இரண்டு குஞ்சுகளும் உண்டு. குஞ்சுகள் இருப்பதையும் மறந்து பருந்து வேட்டையாடி விட்டது. தெய்வமே! உனக்குக் கண்ணிருந்தும் பார்த்துக் கொண்டிந்தனையோ! தர்மமா? நல்ல கிளி. எப்படி நான் அதை மீண்டும் அடைவது? உலகம் அழிகின்றது. அதில் நான் மடத்தனமாய் கிளியை வளர்த்தேன். எனக்குத் தெரிந்தும் பருந்து அவ்வளவு தைரியமாய்த் திருடிச் சென்றது. இதற்குக் காரணம் நான் அல்ல?

 

தெய்வமே! நீயன்றோ? நான் வெளியே போய் விட்டால் வீட்டைப் பத்திரமாகப் பாதுகாக்கும் கிளி. கூண்டை விட்டு கிளம்பிற்று. ஐயோ? அநியாயம்! அரிச்சந்திரன் போர் நாடிழந்தும், நகரிழந்தும், அடிமைப்பட்டும் போன காலத்தில் எவ்வளவு தைரியமாய் நின்றேனோ அவ்வளவு தைரியமாய் என்னுடன் நின்று சகல கஷ்ட நஷ்டங்களையும் அனுபவித்தக் கிளி. அது என்னைக் கண்டால் எவ்வளவு துக்கம் நேர்த்த போதும் சந்தோஷமாய்ப் பேசும் கிளி. நான் இரை வைக்கா விட்டாலும் கத்தாது. ஆனால் நன்றாகப் பேசும். அவ்விதக் கிளிதான் எப்படி மனம் விட்டு பறந்து போய் விட்டதோ? இல்லை! பருந்து கொண்டு போய் விட்டது. அது எனக்குத் தெரியும். தெய்வமே! உனக்கு அபயம். இது நியாயமா? என் வீட்டிற்கும் எனக்கும் பல விதத்தில் உதவி புரிந்த கிளி. அந்தக் கிளி இந்த விதமாய் போனது இறைவனே உனக்குத் தெரியுமே? தர்மத்திற்கு விரோதமாய் என் கிளியைக் கூண்டிலிருந்து கொண்டு போன பருந்துக்கு என்ன தண்டனை? நீயே கொடு! நளனைப் போல் எல்லாம் துறந்தேன். ஆனால் இதுவரை என் கிளியையும் குஞ்சுகளையும் விடவில்லை.

 

மறக்கவும் இல்லை. அப்படியிருக்க ஏனோ பருந்து அநியாயமாய் என்னை விட்டகன்றது. பூவுலகில் எல்லாம் நிற்பதில்லை. இருப்பினும் நல்ல கிளியை நடுத்தெருவில் விட யார்தான் சம்மதிப்பார்கள்? நீங்கள் சம்மதிப்பீர்களா? நான் செய்யும் வேலைக்கெல்லாம் உதவி புரிந்த கிளி. மந்திரியான கிளி. மகிமையுள்ள கிளி. சுதந்திரமான கிளி. ராஜகுலத்துக்கேற்ற கிளி.

 

இந்தக் கிளிதான் என்னை விட்டு 25.04.25-ல் ஒரே கொத்தாய்க் கொத்திக் கொண்டு போய் விட்டது. இதனால் எவ்வளவு நஷ்டம்? இராஜீய வேலை, தேசிய வேலை எல்லாம் அல்லாமல் ஜாதீயம், மதம், இவ்வளவு வேலை தொலைந்ததா? இருக்கட்டும். தைரியத்தை விடாமல் பார்க்கிறேன்.

 

வெண்ணைத் திரண்டு வருகையில் தாழி உடைந்தது. தெய்வமே! கிளியை எனக்குப் பருந்தினிடமிருந்து கொடுக்க முடியும். கூண்டும் குஞ்சுகளும் புலம்புகின்றது. பரிதாபம்! கடவுள் என்பது யார்? எல்லோர்க்கும் பொது இருந்தாற் போல் இருந்து இப்படிச் செய்வது தர்மத்திற்கு விரோதம்! கண்ணீல் கலங்க மனம் துடிக்க பருந்து கிளியைத் திருடிச் சென்றது. இது சத்தியத்திற்கு விரோதம்!

 

கிளி பேசுவதில் சாந்தமும், அமைதியும் உடையது. நான் துன்பப்பட்ட காலத்துக்கும் தைரியம் சொன்னது. அப்படி தைரியம் சொன்ன கிளி என்னைக் காணாமல் பறந்து விட்டது. குஞ்சுகள் கதறுகின்றன. இரை உண்ண மறுக்கின்றது. இனி என்ன செய்வது?

 

ஐயோ! ஆருயிர் தெய்வங்களே! உங்களுக்கு அபயம்! எனக்கொன்று மில்லை. நன்றாய் இரை தின்று விட்டு உறங்கப் போகும் சமயத்தில் கூண்டிலிருந்த கிளியைக் காணோம். இந்த மனம் மாறுமா? எப்படிப் பொறுக்கும். இந்தக் கிளியை வாங்க எவ்வளவோ கஷ்டப்பட்டு பல நண்பர்கள் சிபாரிசின் மேல் நான் வாங்கினேன். இப்படியிருக்க, இந்தக் கிளியைத் திடீரென கூண்டிலிருந்து கொண்டு போனதென்ன?

 

இந்தக் கிளிக்காக எத்தனையோ பேர் துக்கப்படுகிறார்கள். இதற்கு யார் ஜவாப் சொல்வது? கடவுளா? நானா? கடவுள் தான் ஜவாப் சொல்ல வேண்டும். எவ்வளவோ இடுக்கலான நிலையிலும் என்னை விட்டு நீங்காத கிளி மோசம் செய்து விட்டது. கிளியே உன் ஆத்மா சாந்தியடையட்டும்! ஆனால் என்னை நீ மறக்காதே! அது பாவம்!

 

எவ்வளவோ பொறுத்தேன். கஷ்டங்கள் கவலைகள் அனுபவித்தேன். உன்னைப் பிரிந்த துயர் எப்போதும் நீங்காது. நீதான் தெய்வம். நல்ல கிளி! சிவத்தின் பாக்கியம்! இறைவனே! என் கிளியை இனியாவது நல்ல வழியில் சேர்ப்பாய்! சாந்தி! சாந்தி! சாந்தி!

 

  • 1925 மே 2

 

25.04.25-ல் கிளி பறந்து விட்டதாக வர்மா கூறுகிறார். மேலும் 12 ஆண்டுகளாக அந்தக் கிளி தன்னுடன் வாழ்ந்து வந்ததாகவும் தெரிவிக்கிறார். இதிலிருந்து 1913-ல் வர்மாவிற்கு திருமணம் ஆகியிருக்க வேண்டும். இது முதல் திருமணமாய் இருக்க வேண்டும்.

 

1931-ல் மே 9 இரவில் இரு பிராணிகளாகிய எங்களுக்கு என்று வர்மா கூறுவதிலிருந்து அவருக்கு இரண்டாவது திருமணமும் நடந்திருக்க வேண்டும் என்று யூகிக்க முடிகிறது.

 

 

 

 

 

 

 

க்ஷத்ரியன் இதழ் தொகுப்பு

 

1923 முதல் 1951 வரையில் ராஜரிஷி வர்மா அவர்களால் திறம்பட நிர்வகிக்கப்பட்ட க்ஷத்ரியன் வார இதழ் பல்வேறு சிறப்புக்களை தன்னகத்தே தக்க வைத்துக் கொண்டது. இப்பத்திரிக்கையினை தொகுத்து 17 தொகுப்புகளாக வெளிக் கொண்டு வந்துள்ளார். ஆறு அண்ணல் அவர்கள் க்ஷத்ரியன் ஏன் வர வேண்டுமென்று வர்மா சொல்வதை மனங்குளிர படித்துப் பாருங்களேன்!

 

க்ஷத்ரியன் நான். இதுவரை வெளிவரத் தயங்கினேன். இனி தடையின்றி எனது ஜாதியார் சமூகத்தில் மட்டுமன்றி ஜாதீய தர்மங்களில் தலை சிறந்தொழுதும் சமஸ்த நண்பர்கள் சந்நிதானத்திலும் சஞ்சரிப்பேன்.

 

‘வீரனே நீ வெளிவருவதால் யாது பயன்? பத்திரிக்கைகள் பல பாரில் மலிந்து கிடக்கின்றன. தமிழகத்திலும் சந்து பொந்துகளிலெல்லாம் பத்திரிக்கைகள் கிளம்புகின்றன. சுதேசமித்திரன் முதலிய தினசரிப் பத்திரிக்கைகளும், நவசக்தி முதலிய வாரப் பத்திரிக்கைகளும் மலிந்து கிடக்கும் இக்காலத்தில் நினது வரவு பயனில்லா வரவேயாம்’

 

நண்பனே! நின் ஆட்சேபம் அவசியமே. ஆயினும் நமது நாட்டின் குடி மதிப்பை நீ நன்று மதித்தாயில்லை. கோடிக்கணக்கில் குடி வளமுடைய நமக்குப் பத்திரிக்கைச் செல்வம் குறைவேயன்றி நிறைவுள்ளதன்று. மேலும் அற நூல்களையே அஸ்திவாரமாயுடைய தெய்வீக மத மகிமை வாய்ந்த பாரத தேசத்தில்அதினும் நமது தமிழ்நாட்டில் சனாதன தர்மத்தைச் சங்கோசமின்றி சாற்றும் தமிழ்ப்பத்திரிக்கைகள் தரித்திர நிலைமையைச் சார்ந்துள்ளன. ஜாதி சம்பந்தமான பத்திரிக்கைகளும் சிலவே. க்ஷத்ரிய மரபுக்குரிய பத்திரிக்கையோ ஒன்று தான் உயிர்வைத் துலவுகின்றது. அதனால் நான் தோன்றுவதால் ஜய முண்டாகுமென்றே நம்புகின்றேன்.

 

‘வன்னியகுல மித்ரன் ஒருவனால் க்ஷத்ரிய சமூகம் தழைக்காதோ? சமூக முன்னேற்றம் நாடி அந்நண்பன் சதா உழைத்து வரவில்லையா? வீரனே! நீ வெளி வருவதால் விசேஷ பயன் யாதும் விளைந்து விடாதெனவே விளம்புவேன்’.

 

தோழனே! நீ சொல்லுவதில் உண்மையில்லை. தமிழ்நாட்டு க்ஷத்ரியர்கள் சங்கையில் முப்பது லட்சம் பேர், நமது கன்னித் தமிழ்நாட்டைக் காதலித்து வாழ்கின்றர். அந்நிய நாடு சென்றவர்களும் அநேகருண்டு. பழியையும் இழிவையும் எண்ணிப் பயந்து மறைந்து பட்டத்தை மாற்றி வாழும் பார்த்திவ மக்களும் உண்டு. வன்னியகுல மித்ரனோ ஒருவன். அவன் என்ன செய்வான்? ஆயிரத்தைஞ்நூறு வீடுகளில் மட்டும் நுழைவதாய் அறியப்படுகின்றது. மேலும் சங்க வீடுகளில் மட்டும் நுழையதாய் அறியப்படுகின்றது. மேலும் சங்க சமாச்சாரங்களைத் தவித்து சரித்திரம், ஒழுக்க முதலிய அங்கத்தினருடன் உலவ அவனால் முடியவில்லை. ஆதலால் எனது வருகை அவசியம் நற்பயனை நல்குமெனவே நம்புகிறேன்.

 

‘ஆர்வல! அரசர்க்குரிய அங்கங்கள் அனைத்தும் நின்பால் அமைந்துள்ளனவோ? நின்னால் குல முன்னேற்றம் நேருங்கொல்லோ? நிச்சயமாய் நம்பலாமா?

 

ஆம், அவசியம் நம்பலாம். தற்போது ஆறு வித அங்கத்தினரைக் கொண்டுள்ளேன். நாளடைவில் நல்லன்பர் பலர் என்னை நண்ணுவார்கள். உலகியல், ஒழுக்கம், சரித்திரம், சாசனம், கட்டுரை, காவியம் இவர்களே தற்போது என் வசமுள்ள அறுவர். சங்கம், சாஸ்திரமென்னும் இருவரையும் கூடத் தயார் செய்துள்ளேன். ஆதலின் எண்பேராயமும் ஐம்பெருங்குழுவும் எனக்குண்டு. எனது கடமையை ஒழுங்காய் ஆற்றுவேன்; மரபையாளுவேன்; முன்னேற்ற வழிகளில் முந்துவேன்; தன்னலங்கருதேன்; ஜாதி நலத்தையே நீதியில் மதிப்பேன்; இது நிச்சயம்.

 

‘க்ஷத்ரியனே! நினதுரை சாலவும் அழகுடையது. நீ நீடுழி வாழ்க! விதிவயத்தால், காலவயத்தால், கலங்கி நலங்கருதாது நலிவுற்ற நன்மரபு நினது முயற்சியால் மண்மரபேயாகுக, நினக்கு மங்கள முண்டாகுக. வந்தனம்.

 

 

 

 

 

 

 

 

  • ••• •

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu