சிவகிரி ஜமீன்

வன்னிய பாளையக்காரர்களே!

 

சிவகிரி ஜமீன் சமீபகாலமாக செய்தித்தாள்களில் பரபரப்பாக பேசப்பட்ட விவகாரம் மட்டுமல்ல ஆச்சரியப்படுத்திய விஷயமும் கூட, காரணம் சுவிஸ் வங்கியில் போடப்பட்டதாக சொல்லப்படும் பணத்தின் மதிப்பும், அக்கால காலகட்டமும் தான். இத்தனை விஷயங்களையும் செய்தியாக சொன்ன பத்திரிக்கைகள் சிவகிரி ஜமீன் பாண்டிய மன்னர்கள் வழி வந்தவர்கள் என்றும் சொல்லியது. நமது கட்டுரைக்கான நோக்கமும், இந்த விளக்கமும் அதனை வழி மொழிய அல்ல, அதில் உள்ள உண்மையை உலகுக்கு உணர்த்தவே!

 

சிவகிரி ஜமீன் பற்றிய இக்கட்டுரையை இப்போது தான் நாம் எழுதுகிறோம் என்று இந்த வன்னியர் குரல் இதழை படிப்பவர்கள் நினைக்கக் கூடும். சொத்துக்கள் இருப்பதற்காகவோ, பாண்டிய மன்னர்கள் என்பதை மறுப்பதற்காகவோ, எழுதப்படும் கட்டுரையும் அல்ல.

 

‘வன்னியர் குரல்’ 2011 செப்டம்பர் இரண்டாம் ஆண்டு சிறப்பிதழில் நான் எழுதிய வன்னியர் வரலாறு என்ற பெருங்கட்டுரையை தொடர்ந்து நமது இதழை படிப்பவர்களின் நினைவுக்கு கொண்டு வருகிறேன். அதில் வன்னியர் வரலாறு என்பதை வன்னியர் புராணம் தொடங்கி, வன்னிய குல சத்திரிய  மகா சங்கம் வழி நடந்து, வன்னியர் சங்கம், மற்றும் வன்னியர் கூட்டமைப்பு வரையிலான நமது பாதையை வரலாறாக எழுதி இருந்தேன்.

 

அக்கட்டுரையில் வன்னிய மன்னர்கள் என்ற தலைப்பிலான  பகுதிக்கு அடுத்து வன்னிய பாளையக்காரர்கள் வரலாறு என்பதின் கீழ் பக்கம் 16-ல் தென்பகுதி வன்னிய பாளையக்காரர்கள் என்ற தலைப்பில் நான் எழுதி இடம் பெற்ற பகுதியை அப்படியே மறுபிரசுரம் செய்கிறேன்.

 

 

தென்பகுதி வன்னிய பாளையக்காரர்கள்

 

ஏழு வன்னியர் பாளையங்களில் பெரிய நிலப்பரப்புடையதும், அதிக வருவாயை ஈட்டியதும், ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதில் முன்னணியில் இருந்தும் சிவகிரி பாளையமாகும். தொடக்கத்தில் தென்மலை என்று அழைக்கப் பெற்ற பாளையமே பிறகு சிவகிரி என்று வழங்கப்பெற்றது.

 

சிவகிரி பாளையக்காரர்களின் மரபு வழிப்பட்டியல் கி.பி. 1816 ஜூலைத் திங்கள் 24-ம் நாள் அரசால் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் முதல் பாளையக்காரராக விஜயரங்க வன்னியனார் குறிப்பிடப்படுகிறார். இரண்டாம் பாளையக்காரராகச் சங்கர பாண்டிய வன்னியனாரும். மூன்றாம் பாளையக்காரராக பெரிய சங்கு வன்னியனாரும், நான்காவது வர குணராம வன்னியனாரும் காணப்படுகின்றனர்.

 

தென்மலையான சிவகிரியில் நான்காவதாக முடி சூடிய வரகுணராம வன்னியனார் சிறந்த முறையில் ஆட்சி புரிந்துள்ளார் என்பது அவரால் வெளியிடப் பெற்ற ஒரு செப்புப் பட்டயத்தாலும், அவர் மீது கடிகை முத்துப் புலவரால் பாடப் பெற்ற திக் விசயம் எனும் நூலாலும், புகழேந்தி புலவர் இயற்றிய சிவகிரி காதல் எனும் நூலாலும் அறிந்து கொள்ளலாம்.

 

கடிகை முத்துப் புலவரின் திக் விஜயம் எனும் நூலில் உள்ள பாடல்கள் மூலம் வன்னிய வரகுண பாண்டியனின் தந்தை சங்கு சின்னத் தம்பி என்றும் இவனின் பாட்டனார் சங்கர பாண்டியன் என்று உணரமுடிகிறது. இவ்வரகுணபாண்டியரும், இவரது சந்ததியாரும் வன்னிய குல சத்திரியர் ஆவர். இதற்கு ஜி.எஸ்.எஸ். நல்லசிவம் எழுதிய ‘சிவகிரி வரலாறு’ என்ற நூல் மற்றொரு ஆதாரமாக விளங்குகிறது. வரகுண ராமன் புகழ் பாடும் ‘சிவகிரி காதல்’ எனும் நூலில்

 

‘வன்னிய குலதீப வரகுணராமப் பாண்டிய

மன்ன னெனத் தென்மணியில்

வாழ்வேந்தா வெச்சரிக்கை’ என்றும்

 

‘வன்னிய குலராச வரகுண ராமப் பாண்டிய

நன்னயவான் வாராமல் நங்கை

மயங்கிச் சோர்ந்தாள்’

 

என்றும் கூறப்படுகிற பாடல் வரிகளால் சிவகிரி வரகுண ராமப் பாண்டியனை வன்னியர் குலத்தின் ஒளிவிளக்கே என்றும் வன்னிய குல அரசன் என்றும் கூறுவதால் சிவகிரி பாளையக்காரர்கள் வன்னிய குல சத்திரியர் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது.

 

 

1767-ல் கேனல் கேம்ப்பெல் தலைமையில் வந்த ஐரோப்பியப் படை சிவகிரியைத் தாக்கி கோட்டையைத் தரை மட்டமாக்கி விட்டது. இருப்பினும் சிவகிரி படை சிவகிரிக்கு மேற்கே இயற்கையாக அமைந்திருந்த கோம்பை என்று வழங்கப்பட்ட சிறுமலைகளில் சென்று பதுங்கிக் கொண்டது.

 

1783-ல் ஆண்டில் மீண்டும் கேனல் ஃபுல்லர்ட்டன் தலைமையில் ஐரோப்பியப் படை முழு வேகத்துடன் சிவகிரிப் படையை எதிர் கொண்டது. ஐரோப்பியர்களின் பீரங்கித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சரண் அடைந்தாலும் ஐரோப்பியர்களுக்கு அடங்காமலேயே ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.

 

1792 முதல் 1799 முடிய பாளையக்காரராகவும், பின்னர் ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்ட சிவகிரி பாளையத்தின் முதல் ஜமீன்தாரர் ஆகவும், கி.பி. 1799 முதல் 1819 முடிய பாளையக்காரராகவும் வரகுணராம வன்னியனார் பொறுப்பேற்று அரசோச்சி இருக்கிறார். 1819-ல் வரகுணராம வன்னியனார் மரணமெய்த அவரது மகள் வீரம்மாள் நாச்சியார் ஜமீன் பொறுப்பை ஏற்று நடத்தி வந்துள்ளார்.

 

1827-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயல் காரணமாக ஜமீன் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவாய் முற்றிலும் சீரழிந்து போனதால் அரசு ஜமீனை தம் மேற்பார்வையில் கொண்டு வந்து வைத்துக் கொண்டது. பின்பு 1835-ம் ஆண்டு வீரம்மாள் செய்து கொண்ட உடன்படிக்கையின் படி ஜமீன் நிர்வாகம் மீண்டும் அரசியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

 

வீரம்மாளின் மரணத்திற்கு பிறகு 1844 வரை ஜமீன் நிர்வாகியாக அவரது கணவர் வரகுண ராம செந்தட்டிக்களை பாண்டிய சின்னத் தம்பியார் மேற்பார்வை செய்து சில காலத்திற்கு பின் உயிர் நீத்தார். அதன் பிறகு இவர்களது மகன் வரகுண ராம பாண்டிய சின்னத் தம்பியார் ஜமீன்தாராக விளங்கினார். இவரது காலத்திலும் ஜமீன் நிர்வாகம் சரிவர நடைபெறாததால் மீண்டும் அரசே ஏற்று  நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

 

இதற்கிடையில் வரகுண ராம ராமபாண்டிய சின்னத் தம்பியாருக்கும் அவரது உடன் பிறந்த தம்பிக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து தம்பியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

பின்பு 1872-ல் இவர் மீது நிர்வாகத் திறமையின்மையை சுட்டிக் காட்டி மகன் சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத் தம்பி யார் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.

 

இந்த நிலையில் வரகுணராம பாண்டியர் 1873-ல் இயற்கை எய்திட, அவரது மைந்தான் சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத் தம்பியார் பட்டமேற்றுள்ளார். 1873 முதல் 1896 முடிய ஆட்சி புரிந்த இவரது காலம் ஜமீனின் பொற்காலமாக கருதப்படுகிறது. இவர் 1896-ல் இறப்பெய்த இவரது மகன் குறைந்த வயதினராக இருந்ததால் அரசு ஜமீனின் ஆளுகையை ஏற்றுக் கொண்டது.

 

பின்பு 1910-இல் அரசாளும் வயது வந்தவுடன் இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார் ஜமீனாக பட்ட மேற்றிருக்கிறார். இவர் திருமணமாகாமலேயே 1914-ல் குற்றாலத்தில் மரணமடைந்தார். இவருக்கு பிறகு வரகுண ராம பாண்டிய சின்னத் தம்பியாரின் பேரன் செந்தட்டிக் காளை பாண்டிய சின்னத் தம்பியார், திருமணமாகாமலும், குழந்தைகள் ஏதுமில்லாமலும் ஆகிவிட்ட காரணத்தால் ஜமீனுக்கு உரிய வாரிசு தாம் தான் என்று உரிமை கோரினார்.

 

 

நீண்ட வழக்குகளுக்கு பிறகு செந்தட்டிக் காளை பாண்டிய சின்னத் தம்பியார் ஜமீன் சொத்துக்களை நிர்வாகித்து ஆட்சி செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. சிவகிரி ஜமீனாக பொறுப்பேற்ற இவரது காலம் 1934-ஆம் ஆண்டு முடிகிறது. அவருக்குப் பிறகு வரகுணராம பாண்டிய சின்னத்தம்பி வன்னியனார் சிவகிரி சமஸ்தான அதிபதியாக பட்டம் ஏற்றிருந்தார்.

 

1934-இல் பட்டம் ஏற்ற ஜமீன்தாரர் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் 1955-இல் மரணமடைய அவரது மகன்களில் ஒருவரான சிவகிரி இராஜா எனும் சங்கிலி வீரப்ப பாண்டியன் ஜமீனாக பதவி ஏற்றிருக்கிறார். இவர் வன்னியர் மரபில் பெண் எடுக்காமல், சிங்கம்பட்டி மறவர் ஜமீன் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.

 

இவருக்கு அடுத்து வி.எஸ். வரகுணராம பாண்டிய சின்னத்தம்பி வன்னியனார் ஜமீன் பொறுப்பேற்றார். இவரும் சேத்தூர் ஜமீன் மறவர் பெண்ணை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். இப்படி வாழையடி வாழையாக வந்த வன்னியர்கள் இன்றும் அக்கினி குல சத்திரிய வன்னியர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது நமக்கு பெருமை தரும் விஷயம் அல்லவா?

 

புகழோடு அரசாண்ட சிவகிரி வன்னியச் ஜமீன்தாரர்களின் உறவின் முறையினராக அழகாபுரி வன்னியச் ஜமீன்தாரர்கள் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் வரகுணராம ரெட்டைக்குடையார் ஆவார். இவருக்கு பிறகு கறுத்தத் தம்பி ரெட்டைக்குடையார் கறுத்தான் ரெட்டைக்குடையார், சீமை ஆண்டார், அவர் மகன் சிதம்பரம் ரெட்டைக்குடை வன்னியனார் என அடுத்தடுத்து ஆண்டு வந்தனர்.

 

இவர்கள் விஜய நகர அரசு மதுரையை ஆண்ட போது அவர்களுக்கு உறுதுணையாக விளங்கினார்கள். ரெட்டைக்குடையாரின் மகன் கந்தசாமி ரெட்டைக்குடையார். இவரையடுத்து குமாரசாமி ரெட்டைக் குடையார், சிதம்பர தாண்டவ ரெட்டைக்குடையார், வீரமார ரெட்டைக்குடையார் என நீண்ட பட்டியலில் ரெட்டைக்குடையார் முக்கியமானவர். பின் ஆண்டி ரெட்டைக்குடையார், சிதம்பர ரெட்டைக்குடையார் கட்டாரி ரெட்டைக்குடையார் என வரிசையாக வன்னிய குல சத்திரியர்கள் அளகாபுரி ஜமீனை அரசோச்சி வந்திருக்கிறார்கள்.

 

திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டிக்கு வடக்கே அமைந்த சிறு நகரமே ஏழாயிரம் பண்ணை ஆகும். பாண்டியர் ஆட்சிக் காலத்திலும் விஜய நகர பேரரசின் காலத்திலும் அவர்களும் உதவுபவர்களாக விளங்கியவர்கள் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள். அவர்களில் தென்னம்பை ஆண்டு கொண்டார் குறிப்பிடத்தக்கவர்.

 

இவருக்கு பிறகு குமாரசுவாமி ஆண்டு கொண்டார் குறிப்பிடத் தக்கவர். இவருக்கு பிறகு குமாரசுவாமி ஆண்டு கொண்டார், திருமலை ஆண்டு கொண்டார், வடமலை ஆண்டு கொண்டார், சிதம்பரம் ஆண்டு கொண்டார், சிவனுத்தம்பி ஆண்டு கொண்டார், சிவனணைஞ்சு ஆண்டு கொண்டார், அன்னதானம் சிதம்பர ஆண்டு கொண்டார், முத்துசுவாமி ஆண்டு கொண்டார், குலசேகர ஆண்டு கொண்டார் என்று வன்னிய ஜமீன்கள் புகழுடன் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.

 

 

சிவகிரி ஜமீனோடு பங்காளிகளாக வேப்பங்குளம்., தென்மலை ஜமீன்குளம், பெண் கொடுத்து, பெண் கொள்ளும் உறவு முறையினராக சமுசிகாபுரம், அளகாபுரி, ஆத்துப்பட்டி, ஏழாயிரம் பண்னை பாளையங்களும் விளங்கின.

 

இது கடந்த 2011-ம் ஆண்டு என்னால் எழுதப்பட்டது. நமக்கு கிடைத்த நூல்கள் மற்றும் ஆய்வு அறிக்கைகள் படி எழுதப்பட்ட கட்டுரையின் படி 1955-ல் சிவகிரி இராஜா  எனும் சங்கிலி வீரப்ப பாண்டியன் ஜமீனாக பதவி ஏற்க, அவர்தான் முதலில் சிங்கம்பட்டி மறவர் ஜமீன் பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார்.

 

இவருக்கு அடுத்து வந்தவரும் சேத்தூர் ஜமீன் மறவர் பெண்ணை காதலித்து திருமணம் செய்கிறார். இப்படியாய் மறவர் சமுதாயத்துடன் கலப்பு ஏற்பட்டதே தவிர வன்னியர்கள் தான் தொடர்ந்து ஜமீன்களாக இருந்து வந்துள்ளனர் என்பது ஆதாரப் பூர்வமாக நிரூபிக்கப்பட்டு இருக்கிறது.

 

சிவகிரி ஜமீனை ஆட்சி புரிந்தவர்கள் பாண்டிய மன்னர்கள் வழி வந்தவர்கள் என்பது பொருத்தமான செய்தியாக தோன்றவில்லை. பிற்காலப் பாண்டியர்களிடம் இருந்து விஜயநகரப் பேரரசு மதுரையை கைப்பற்றி இரண்டு நூற்றாண்டுகள் ஆட்சிபுரிந்த பின் சிவகிரி எனும் பாளையத்தை பாண்டியர்கள் ஆண்டதாக சொல்வது சரியான வரலாற்றுக் குறிப்பாக எடுபடவில்லை.

 

 

சிவகிரி ஜமீன் பாண்டிய மன்னர்கள் வழி வந்தவர்கள் என்றால் நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் சிவகிரி ஜமீனை ஆட்சி புரிந்தவர்கள் வன்னியர்கள் என்ற வரலாற்றை மறைப்பதற்காக பாண்டிய மன்னர்கள் என்று முலாம் பூசுவதை நாம் அனுமதிக்க முடியாது.

 

சிவகிரி பாளையக்காரர்களின் மரபு வழிப் பட்டியல் கி.பி. 1816-ல் பிரிட்டீஷ் அரசால் வெளியிடப்பட்டதும், இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

 

சிவகிரி ஜமீன் பற்றிய சொத்து வழக்குகள் நமக்கு முக்கியமல்ல. ஆனால் வழக்கு தொடுப்பவர்களும், வழக்காடுபவர்களும் சந்தடி சாக்கில் சிவகிரி ஜமீனை ஆட்சி செய்தவர்கள் பாண்டிய மன்னர்கள் என்று சொல்லி வன்னிய பானையக்காரர்களை இருட்டடிப்பு செய்ய முயற்சிப்பதை வன்னியர் கூட்டமைப்பு அனுமதிக்காது; அமைதி காக்காது என்பதை முக்கிய வேண்டுகோளாக வைக்கிறோம்.

 

 

 

சிவகிரி ஜமீன் சொத்தும், வழக்கும்!

 

சிவகிரி ராஜா என்ற அழைக்கப்பட்ட செந்தட்டிக்காளை பாண்டிய சின்னதம்பியார் கி.பி. 1975 வரை ஜமீன்தாராக இருந்து வந்தார்.

 

இவருக்கு வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் என்கிற தட்சிண பிரசாத், எஸ்.கே.என். ரவீந்திரநாத், எஸ்.கே. ஜெகநாதன் ஆகிய 3 மகன்களும், எஸ்.கே. மயில்வர்த்தினி என்ற மகளும் உள்ளனர்.

 

சிவகிரி ஜமீன் அரண்மனையில் வசித்து வந்த தட்சிண பிரசாத் கி.பி. 1992-ல் மரணம் அடைந்தார். இப்போது அங்கு அவரது மனைவி பாலகுமாரி நாச்சியாரும், அவரது வாரிசுகளும் இருந்து வருகின்றனர்.

 

சிவகிரி ராஜா தனது 2வது மகன் எஸ்.கே.என். ரவீந்திரநாத்திடம் கடைசி காலக்கட்டத்தில் இருந்து வந்தார். அப்போது மருமகள் பத்மினி ராணிக்கு ஒரு உயில் (விருப்ப பத்திரம்) எழுதி வைத்துள்ளார். இதன்படி சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான வாரிசுகள் சேர்த்த சொத்துக்களை திருப்பி ஒப்படைக்க கேட்டு பத்மினி ராணி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை எதிர்த்து மற்ற வாரிசுதாரர்களான பாலகுமாரி நாச்சியார், எஸ்.கே. ஜெகநாதன், எஸ்.கே. மயில்வர்த்தினி ஆகிய மூவரும் வழக்கு தொடர்ந்தனர்.

 

சுவிஸ் வங்கியில் சிவகிரி ஜமீன் பெயரில் மிகப்பெரிய தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதா? என்ற கேள்விக்கு வினா தேட வைத்தவரான என்.ஜெகநாதன் 2004-ல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதனை பரபரப்பிற்கும், ஆச்சரியத்திற்கும் காரணமான அந்த வழக்கில் என். ஜெகநாதன் என்ன வேண்டியிருந்தார்?

 

சிவகிரி ஜமீன்தாரர் வரகுணராம பாண்டிய சின்னதம்பியார் என்கிற தட்சிண பிரசாத் தன்னை வாரிசாக கூறி, ஜமீன் சொத்துக்களை நிர்வகிக்க உயில் எழுதி கொடுத்துள்ளதாகவும், அதனை செயல்படுத்த, நிர்வகிக்க உத்தரவு வழங்க கேட்டும் என்.ஜெகநாதன் வழக்கு தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு கடந்த 2044-ல். என். ஜெகநாதனுக்கு சிவகிரி ஜமீன் சொத்துக்களை நிர்வகிப்பதற்கான ‘லெட்டர் ஆப் அட்மினிஸ்டிரேசன்’ வழங்கி உத்தரவிட்டது.

 

இந்த விவரம் தெரிய வந்ததும், சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்களான பாலகுமாரி நாச்சியார், பத்மினி ராணி, செல்வராஜ். எஸ்.கே. ஜெகநாதன் ஆகியோர் ‘லெட்டர் ஆப் அட்மினிஸ்டிரேசன்’ வழக்கு தொடர்ந்தனர். இதில் 2008-ல், என்.ஜெகநாதனுக்கு அதிகாரம் வழங்கிய ‘லெட்டர் ஆப் அட்மினிஸ்டிரேசன்’ உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது.

 

அத்துடன் ‘லெட்டர் ஆப் அட்மினிஸ்டிரேசன்’ ஆணையை கோர்ட்டில் திருப்பி ஒப்படைக்கும் படி, என். ஜெகநாதனுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை ஐகோர்ட்டு ஆணை உத்தரவு திருப்பி ஒப்படைக்கப்படவில்லை.

 

உயிலை செயல்படுத்த கோரி 2004-ல் என். ஜெகநாதன் தாக்கல் செய்த மனுவை 2008-ல் டெஸ்டமென்டரி ஒரிஜினல் சூட் வழக்கு மனுவாக மாற்றி சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

 

 

இந்த வழக்கில், சிவகிரி ஜமீன் வாரிசுகள் அனைத்தும் தங்களை பிரதிவாதிகளாக சேர்க்க வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது.

 

இந்த சூழ்நிலையில், ‘லெட்டர் ஆப் அட்மினிஸ்டிரேசன்’ ஆணையை திருப்பி ஒப்படைக்காததால் என். ஜெகநாதனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டின் டிவிசன் பெஞ்ச் நீதியரசர்கள் பி. ஜோதிமணி, எம். துரைசாமி ஆகியோர் நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தனர்.

 

இந்த வழக்கு விசாரணையின் போது, வித்யா பட்வர்தான் என்ற பெண், சிவகிரி ஜமீனுக்கு சொந்தமான கணக்கிட முடியாத பெருந்தொகை சுவிஸ் நாட்டு வங்கியில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை மீட்டு வருவதற்கான அதிகாரத்தை 5 சதவீத கமிஷன் தொகை அடிப்படையில் தான் பெற்றிருப்பதாகவும் தெரிவித்தார்.

 

சுவிஸ் வங்கியில் சிவகிரி ஜமீனுக்கு சொத்து மற்றும் பெருந்தொகை உள்ளதா? என்ற கேள்விக்கு பதில் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன மத்திய, மாநில அரசுகள். அதிலே நமக்கான வன்னிய வாரிசுகளுக்கு பதிலும் கிடைக்கும் என்று காத்திருப்போம்!

 

 

  • ••

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu