வன்னிய இனத்தின்

இரண்டாம் புரட்சியின் பிதாமகன்

தவத்திரு வன்னிய அடிகளார்

 

சி.என்.ஆர்

(நிறுவனத் தலைவர்)

 

இனத்தின் சொந்தங்களே!

 

நமது  வன்னியர் குரல் இதழில் சமுதாயத்துக்கா உழைத்த தியாக தலைவர்களின் தீரத்தையும், தன்னலமில்லாத உழைப்பையும், அயராத சேவையையும் நம் மக்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு அவர்களின் வாழ்க்கை சரிதத்தை இயன்றளவு தேடிக் கண்டுபிடித்து உங்கள் முன் படைத்து வருகிறேன்.

 

அதில் இனத்தில் சாதனையாளர் பெரியவர் இரா. குலசேகரனார், அகிலம் புகழும் அய்யா மாணிக்க வேலர், இனத்தின் முதல் தலைவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் என முப்பெரும் தலைவர்களின் சிறப்புமிகு வரலாற்றை சுருக்கமாகவும், ஒரளவு முழுமையாகவும் அறியும் பொருட்டு எழுதி இருந்தேன்.

 

நமது வன்னியர் கூட்டமைப்பின் முகப்பை அலங்கரிக்கும் முப்பெருந்தலைவர்களில் சமுதாய பெருந்தலைவர் படையாட்சியார், வாழப்பாடி இராமமூர்த்தியார், வன்னிய அடிகளார் என்று இடம் பெற்றிருப்பர். இதில் படையாட்சியாரின் வரலாற்றை கடந்த இதழில் பிரசுரித்து இருந்தோம். அதற்கு நமது சமுதாய மக்கள் அளித்த மாபெரும் வரவேற்பை நினைத்து நெஞ்சு கனக்கிறது; நெகிழ்கிறது; மகிழ்கிறது.

 

 

இதோ! நமது சமுதாயம் தழைக்க, வன்னிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் உரிமைகளை மீட்டெக்க தன் வாழ்நாளை அர்ப்பணித்தவர். வன்னிய சமுதாயத்திற்காக, சமுதாய மேன்மைக்காக, அடித்தட்டு மக்களுக்கும் அதிகாரம் கிடைக்க தனது அரசு வேலையையே ராஜினாமா செய்துவிட்டு களப்பணியாற்றிய சமுதாய காவலர். ஆன்மீக துறவி, அமைதியின் சொரூபம், செயலில் புயலின் வேகம் என வாழ்ந்து காட்டிய வன்னிய அடிகளார் பற்றி சரிதத்தை இந்த இதழில் எழுதுகிறேன். ஏனைய மூன்று தலைவர்களை படித்து அறிந்து, தெளிந்து, எழுதுவதற்கு நிறைய புத்தங்கள், ஆவணங்கள் என ஆதாரங்களும், அவர்களை அறிந்த அறிஞர் பெருமக்களும் நிறைய உதவினர். பெரியவர் குலசேகரனார் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டு நமக்கெல்லாம் வழிகாட்டியாக திகழ்கிறார். அதனால் அவரை அறிந்து எழுதுவது சுலபமானதாக இருந்தது.

 

அய்யா மாணிக்கவேலருக்கும், பெருந்தலைவர் படையாட்சியாருக்கும் அவர்களுடைய அரசியல் பணிகள், பதவிகள்,, புத்தகங்கள், உடனிருந்தோர் என விரிந்து பரந்த களம் அவர்களை பற்றி எழுத உதவியது. ஆனால் இவற்றிலிருந்து முற்றிலும் வேறானதாக அமைந்தது வன்னிய அடிகளாரின் சரிதம் தான்.

 

 

எந்தவிதமான ஆதாரங்களும் அடிப்படைகளும் தேடினாலும் கிடைக்காத நிலையில் அவரது புதல்வர் திரு. சித்தர்த்தன் நயினார் அவர்களுடைய உதவியாலும், நமது வன்னியர் கூட்டமைப்பின் முதன்மை செயலாளர் விவேகானந்தனின் தேடுதல் முயற்சியினாலும் கிடைத்து பெறப்பட்ட தகவல்களையும் வைத்து அவரோடு களப்பணியாற்றியவன் என்ற முறையில் எனது நினைவுச் சிறகுகளிலிருந்தும் தொகுத்து எடுத்து பெருமைமிகு தவத்திரு வன்னிய அடிகளார்  அவர்களைப் பற்றி எழுதி உள்ளேன். சுமார் 50 ஆண்டு காலமாக வன்னியர் சங்கம் மற்றும் அரசியல் ஈடுபாடுடைய அடிகளாரை பற்றி எவ்விதமான நூலும் இதுவரை வெளிவராதது வேதனையான விஷயம். தவத்திரு வன்னிய அடிகளார் நிறுவிய வன்னியர் சங்கம் தான் இரண்டாம் புரட்சியான இட ஒதுக்கீடுக்காக நாம் நடத்திய தொடர் சாலை மறியல் போராட்டத்திற்கு வித்திட்டது. அதன் பயன் தான் இன்று நாமும் நமது சந்ததியினரும் அனுபவித்து வரும் மிகவும் பிறபடுத்தப்பட்டோருக்கான இருபது சதவீத இட ஒதுக்கீடு என்பதை அனைவரும் உணர்ந்து அப்பெரியவரை அனுதினமும் நினைவு கொள்ள வேண்டுமென்று அறை கூவல் விடுக்கிறேன்.

 

வன்னியர் சங்கத்தின் தலைவராக தவத்திரு வன்னிய அடிகளார் பணியாற்றிய போது அச்சங்கத்தின் காப்பாளராக நான் பொறுப்பேற்று செயல்பட்ட காலத்தை என் வாழ்நாளில் பொற்காலமாக கருதுகிறேன். தவத்திரு அடிகளாரின் துறவறம் ஆன்மீகத்தின் ஆச்சர்யம். அடியாரின் அடியொற்றி நடக்க இதோ அவரது சுயசரிதம் தொடங்குகிறது. படித்து பின்பற்றி அவரை நினைவு கூறி அன்னாரின் ஆட்சி பெற வேண்டுகிறேன்.

 

 

தஞ்சை மாவட்டத்தில் பூம்புகாரை அடுத்த சீர்காழிக்கு அருகில் உள்ள அன்னப்பன் பேட்டை தான் தவத்திரு. அடிகளார் பிறந்த புண்ணிய பூமியாகும். 1929-ல் பிறந்த அடிகளாரின் இயற்பெயர் இராமமூர்த்தி.

 

அன்னப்பன்பேட்டையை சேர்ந்த பொன்னம்பல நயினார் என்பவர் உடையார் பாளையம் ஜமீனில் பிரதான மந்திரியாக இருந்து வந்துள்ளார். இவருக்கு வாரிசு இல்லாததால் தனது சொந்த ஊரான அன்னப்பன் பேட்டையில் உள்ள ஆதி மூல நயினார் என்ற தம் உறவினரை சுவீகார புதல்வராக ஏற்றுக் கொண்டார். இதனால் நயினாரின் புதல்வர் சாமிதுரை நயினாருக்கும் ஸ்வீகார பந்தம் தொடர அவரது வாரிசு இவரது புதல்வருக்கும் வந்தது.

 

சாமிதுரை நயினாரின் புதல்வர் தான் நமது தவத்திரு வன்னிய அடிகளார். ஸ்வீகாரத்தின் உறவால் குடும்பம் ஜெயங்கொண்டத்திற்கு வர அதுவே இவர்களது பூர்வீகமானது. அடிகளாரின் தாயார் பெயர் கண்ணம்மாள். இவருடன் உடன் பிறந்தவர்கள் மொத்தம் ஏழு பேர். இதில் இவருடன் சேர்த்து ஐவர் ஆண்கள், மூவர் பெண்கள்.

 

 

சாமிதுரை நயினார் காலம் வரையில் உடையார்பாளையம் ஜமீனில் அரண்மனையின் உயரிய பொறுப்பில் இருந்து வந்துள்ளார். மன்னர் மானியம் வந்த பின்னர் பழைய பாரம்பரியப் பெயர் மட்டுமே தொடர்ந்து வந்தது.

 

தனபால், தேவாமிர்தம் அம்மாள் குஞ்சம்மாள் (எ) குஞ்சாயி அம்மாள், செல்லதுரை, கிருஷ்ணமூர்த்தி, கோவிந்த ராஜூ, U.S. இராமமூர்த்தி, ராஜகிரி ஆகிய எட்டு பேர்  கொண்ட குடும்ப உறுப்பினர்களில் U.S. இராமமூர்த்தி தான் நமது தவத்திரு வன்னிய அடிகளார்.

 

உடையார்பாளையம் அரசு ஆரம்ப பள்ளியில் ஆரம்ப கல்வியையும், எஸ்.எஸ்.எல்.சி. படிப்பை அரியலூர் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார் அடிகளார். படிப்பை முடித்தவுடன் வீட்டில் சொல்லிக்கொள்ளாமல் ராயல் இந்தியன் ஏர்போர்ஸில் சேர்ந்து 1945 – 1946 ஆகிய இரண்டு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார். அவரது தந்தையாரின் அழைப்பை ஏற்று ஊருக்கு வந்து விட்டார் அடிகளார்.

 

 

அதன் பின் அழகப்பா பல்கலைகழகத்தில் உடற்கல்வி ஆசிரியர் பயிற்சி படிப்பை படித்து முடித்தார். 1950-ல் ஜெயங்கொண்டம் பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக பணியில் சேர்ந்தார் அடிகளார். 1951-ல் நாகனஞ்சேரியை சேர்ந்த தனது உடன் பிறந்த மூத்த சகோதரியின் மகள் வைரம் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

 

உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றிய போது ஜெயங்கொண்டத்தில் வன்னிய மாணவர்களின் கஷ்டங்களை பார்த்து கண்ணீர் வடித்து தானே அதற்கு பரிகாரமாக வன்னிய மாணவர்களுக்கான விடுதி ஒன்றை தன் சொந்த பொறுப்பில் நடத்தினார். இது தான் அடிகளாரின் சமுதாயப்பணிக்கு முதல் படியாய் அமைந்தது.

 

அந்த சமயம் நாடு சுதந்திரம் பெற்றபின் முதல் பொதுத்தேர்தல் வந்தது. 1952-ல் கே.ஆர். விஸ்வநாதன் என்பவர் உழைப்பாளர் கட்சியில் ஜெயங்கொண்டம் தொகுதியில் போட்டியிட்டார். வன்னிய மக்களின் பெருந்தலைவராக கருதப்பட்ட படையாட்சியாரின் உழைப்பாளர் கட்சியின் சார்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டதால் அடிகளாரும் தேர்தல் களத்தில் பணியாற்றினார்.

 

 

அடிகளார் சொந்தமாக நடத்திய மாணவர் விடுதி உழைப்பாளர் கட்சி அலுவலகமாகவும் செயல்பட்டது. தேர்தல் நடந்தது. கடும் உழைப்பை தந்தார் அடிகளார். இறுதியில் உழைப்பாளர் கட்சியின் வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றார். இதுதான் அடிகளாருக்கு முதல் அரசியல் படியாய் திகழ்ந்தது.

 

உடற்பயிற்சி ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே மேற்படிப்பையும் படித்து முடித்தார். அதன் பயனாய் 1956-ல் உடற்பயிற்சி இயக்குனராக பதவி உயர்வு பெற்று குளித்தலைக்கு இடம் பெயர்ந்தார். பின் அங்கிருந்து லால்குடிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

 

1959-ல் ஏ.சி.சி. அதிகாரியாகவும், 1960-ல் என்.சி.சி.யில் ஏர்போர்ஸ் அதிகாரியாகவும், ஜெயங்கொண்டம், லால்குடி, அரிமளம், குளித்தலை மீண்டும் ஜெயங்கொண்டம் என்று பணியில் அமர்ந்து திறம்படி செயல்பட்டார்.

 

 

சமுதாய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டே வந்த அடிகளாருக்கு 1961-ல் வன்னிய சிந்தனை மேலோங்கியது. சமுதாய புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் இராமசாமி படையாட்சியார் மீது அளவிலா அன்பும், அதீத பற்றும் கொண்டிருந்த அடிகளார் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவரை அழைத்து வந்து கூட்டம் நடத்துவது வாடிக்கையாகி விட்டது. படையாட்சியாரின் நேரடித் தொடர்பு அடிகளாரை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

 

1952 பொதுத்தேர்தலின் போதும் அதன் பின்பும் என்ன நடந்தது என்பதை பற்றி அடிகளாரே சொல்கிறார் கேளுங்கள். 1952ல் நடைபெற இருந்த முதல் தேர்தலில் வன்னியர்களில் இரண்டு பேருக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பளிக்க முன் வந்தது காங்கிரஸ். இது காங்கிரசிலிருந்த வன்னிய பிரமுகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.

 

இராமசாமி படையாட்சியார், மாணிக்கவேல் நாயகர், சேலம் சுந்தரராஜன் ஆகியோர் உள்ளடங்கிய ஆறு பேர் கொண்ட குழு. டெல்லிக்கு சென்று அகில இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தை சந்தித்து தேர்தலில் வன்னியர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து வாதாடினார்கள்.

 

 

இந்திய காங்கிரஸ் கட்சி இவர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த படையாட்சியாரும், மாணிக்க வேல் நாயகரும் சென்னைக்கு வந்தவுடன் முதல் வேலையாக உழைப்பாளர் கட்சியையும், பொதுநலக்கட்சியையும் ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டனர்.

 

முதலில் இருவரும் இணைந்து தான் கட்சி தொடங்குவதாக இருந்தது. வன்னியரின் சாபமோ, என்னமோ குழுவாக சென்றவர்கள் திரும்பி வந்து ஆளுக்கொரு கட்சியை ஆரம்பித்தனர். இத்தனைக்கு பிறகும் காங்கிரஸ் வெறும் மூன்றே தொகுதிகளில் மட்டுமே வன்னியர்க்கு போட்டியிட வாய்ப்பளித்தது.

 

நம்மவர்களுக்கு முன் அனுபவம் இல்லை என்று சொல்லமுடியாது… 1948 அல்லது 1949 உள்ளாட்சி தேர்தல் நடந்தது… அப்போது கட்சி சார்பில் யாரும் போட்டியிடவில்லை என்றாலும், சாமிக்கண்ணு படையாட்சி வன்னியர் சங்கத்தின் சார்பில் போட்டியிட்டு தென்னார்க்காடு ஜில்லா போர்டு பிரசிடென்டாக வெற்றி பெற்றார்… கடலூர் முனிசிபல் சேர்மனாக இராமசாமி படையாட்சியார் வெற்றி பெற்றிருந்தார்.

 

 

இந்த அனுபவம் தேர்தலுக்கு கை கொடுத்தது. தேர்தல் நடந்து முடிந்தது. மூன்றே மூன்று இடங்கள் அளித்து முக்கிய வன்னியர் தலைவர்களுக்கெல்லாம் வாய்ப்பளிக்காமல் போனதால் நமது மக்கள் காங்கிரஸ் மீது கடுங்கோபத்தில இருந்தார்கள்.

 

தென்னார்க்காடு மாவட்டத்தில் 13 எம்.எல்.ஏக்களும். 3 எம்.பிக்களும் திருச்சி மாவட்டத்தில் 5 எம்.எல்.ஏக்களும் ஒரு எம்.பியும் இடைத்தேர்தலில் ஒரு எம்.எல்.ஏவும் பெற்று உழைப்பாளர் கட்சி வென்றது…

 

வடஆற்காட்டில் ஆறு எம்.எல்.ஏ. மூன்று எம்.பி. தர்மபுரி பெண்ணாகரம் ஒரு எம்.எல்.ஏ. என பொதுக்கட்சி வெற்றி வெற்றது. இருகட்சிகளும் சேர்ந்து 26 எம்.எல்.ஏக்களையும் ஏழு எம்.பி.களையும் பெற்று சென்னை மாகாணத்தை ஆச்சரியப்படுத்தினர்.

 

பெரும்பான்மையான வன்னிய இனத்தவர்கள் அரசியலில் செல்வாக்கு பெறக்கூடாது என்ற சிலரின் சுயநலத்துக்கு நம் மக்கள் நல்ல பாடம் புகட்டினார். அளவு கடந்து ஒரு சமூகத்தை ஒரங்கட்டினால் இப்படித்தான் நடக்கும் என்பதை நிரூபித்தார்கள். வன்னிய மக்கள் என்று அகம் மகிழ பேசி இருக்கிறார் நம் அடிகளார்.

 

இந்த எழுச்சி ஒட்டு மொத்த சமுதாயத்தின் எழுச்சி. நான் வாழும் காலத்தில் கண்ட வன்னிய சமூகத்தின் முதலாம் எழுச்சி இது என்று குறிப்பிட்டார். இதற்கு இராமசாமி படையாட்சியார் தான் காரணம் என்றும் சொல்லி இருக்கிறார் அடிகளார்.

 

 

கட்சியில் தீவிரமாக செயல்பட வேண்டுமென்று பலமுறை வேண்டுகோள் வைத்தார் படையாட்சியார். இதற்குள் படையாட்சியார் காங்கிரசிலிருந்து விலகி சுதந்திர கட்சிக்கு போய் மீண்டும் காங்கிரசில் சேர இருந்த நேரம். உழைப்பாளர் கட்சியையும் பொது நல கட்சியையும் இணைத்து உழைப்பாளர் பொது நல கட்சி தோற்றுவிக்கப்பட்டது.

 

1952 தேர்தலில் காங்கிரசை இராமசாமி படையாட்சியார் தோற்கடித்ததற்காக காமராசர் பழி வாங்கப்பட்டார். காங்கிரசில் சேர்த்து மந்திரியாக்கிய படையாட்சியாரை 1957 தேர்தலில் பயன்படுத்தி தேர்தலில் வெற்றி பெற்ற பின்பு மந்திரியாக்க மறுத்து பழி வாங்கினார் காமராசர்.

 

அதாவது இராமசாமி படையாட்சியாரை அழித்ததன் மூலம் வன்னிய எழுச்சியே அழிக்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு காரியங்கள் பல நடந்தன. இதனால் வெறுப்புற்ற படையாட்சியார் காங்கிரசை விட்டு வெளியேறி சுதந்திரா கட்சியில் சேர்ந்தார்.

 

 

அதிலிருந்து விலகி 1965 மே 1ந் தேதி உழைப்பாளர் பொது நலக்கட்சியை உருவாக்கிய படையாட்சியார் அதற்கு தலைவரானார் என்று சொல்கிறார் அடிகளார். 1967, 1971 ஆகிய தேர்தல்களில் உழைப்பாளர் பொதுநலக்கட்சி தோல்வியை தழுவியது… ஒரு முறை மக்களின் நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படும் தலைவர்களை மக்கள் மீண்டும் ஏற்பது கடினம் என்ற படிப்பினையானது அக்கட்சியின் தோல்வி. இதனால் மனம் வெதும்பி விரக்தி ஆனதாக அடிகளார் குறிப்பிட்டுள்ளார்.

 

1974-ல் கட்சியை பலப்படுத்த வேண்டும் நீ வேலையை ராஜினாமா செய் என்று படையாட்சியார் சொல்ல, உடனே ராஜினாமா செய்து விட்டு அக்கட்சியின் பொதுச் செயலாளராக பொறுப்பை ஏற்றார் வன்னிய அடிகளார்.

 

இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்ட நேரம். 1975 ஆம் ஆண்டில் திட்டக்குடியில் மாநாடு நடத்தி தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து வட தமிழகத்தற்கு வன்னிய மாநிலம் என பெயரிட வேண்டுமென கோரிக்கை வைக்க அம்மாநாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி மாநாடு நடந்தது. லட்சக்கணக்கான வன்னியர்கள் திரண்ட மாபெரும் மாநாடு அது என பாராட்டப்பட்டது.

 

 

அதனால் அக்கட்சியினர் மீது வழக்கு போடப்பட்டது. தனி மாநிலம் கேட்பது தேச பிரிவினை அல்ல. தனி மாநிலம் கேட்பது அடிப்படை உரிமை எனக்கூறி நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதன் பிறகு இராமசாமி படையாட்சியாரை மீண்டும் காங்கிரசில் சேருமாறு கடும் நிர்ப்பந்தங்களை உருவாக்கினார்கள்; உருவாக்கப்பட்டது.

 

 

வேறு வழியின்றி படையாட்சியார் காங்கிரசில் சேர்ந்தார். வன்னிய அடிகளார் காங்கிரசில் சேர மறுத்து உழைப்பாளர் பொது நல கட்சியை தொடர்ந்து நடத்தி வந்தார். 1977-ல் அக்கட்சிக்கு தலைவரானார் அடிகளார்.

 

இதன் பிறகு இருமுறை இராமசாமி படையாட்சியார் காங்கிரசில் எம்.பி.யாக வெற்றி பெற்றார். ஆனால் காங்கிரசில் அவரால் அதற்கு மேல் செல்வாக்கு பெற முடியவில்லை.

 

சொந்தங்களே! இங்கு இரண்டு விஷயங்களை ஊன்றி கவனித்து பாருங்கள். ஒரு மாநிலத்துக்குள் தனி மாநிலம் கேட்பது என்ற கொள்கையை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நாம் தான் என்பதை நினைவில் கொள்வது அவசியம். அதே சமயம் காங்கிரஸ் கட்சி வன்னியர்களை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கறிவேப்பிலையாக பயன்படுத்தி தக்க சமயத்தில் கழுத்தறுத்து விடுவதையே தனது சுபாவமாக காட்டி இருக்கிறது. காலப்போக்கில் திமுகவும் இதையே கடைபிடித்தது என்பதும் மறுக்க இயலாத வரலாற்று உண்மைகளாக இருக்கின்றன.

 

1975-76 இந்திராகாந்தி பிறப்பித்த எமர்ஜென்ஸி காலத்தில் சேலத்தில் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த அடிகளார், தொய்வில்லாமல் வன்னியர் சமுதாய உழைப்பையும் செய்து வந்தார். அதில் குறிப்பிடத்தக்கது வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு வேண்டுமென்பதற்காக நடந்த போராட்டங்கள் ஆகும்.

 

1977ல் மத்தியில் ஜனதா கட்சி ஆட்சிப் பொறுப்பிலிருந்த சமயம். மொராஜி தேசாய் பிரதமராக இருந்த போது தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜனதா கட்சியில் கூட்டணி வைத்து ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உழைப்பாளர் பொது நலக்கட்சியின் சார்பில் நின்று வெற்றி வாய்ப்பை இழந்தார். காரணம் தமிழகத்தில் எம்.ஜி.ஆர். அலை வீசிய தேர்தல் சமயம் அது. 1979ல் வன்னிய மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வன்னியர் முழக்கம் என்கிற பத்திரிக்கையை ஆரம்பித்தார்.

 

அதன் பின்பு 1980ல் திண்டிவனத்தில் பல வன்னிய அமைப்புகளை அதன் தலைவர்களை ஒன்றினைத்து வன்னியர் சங்கம் உதயமானது. வன்னியர் சங்கங்கள் சிதறிக்கிடப்பது குறித்து கருத்து பரிமாறி அவற்றை ஒருங்கிணைத்து ஒரு அமைப்பை உருவாக்க முடிவெடுத்ததின் விளைவே வன்னியர் சங்கம்.

 

உழைப்பாளர் பொது நலக்கட்சியை சேர்ந்த அடிகளார். வன்னிய நற்பணி மன்றத்தை நடத்திய சேலம் புலவர் வைத்தியலிங்கம், தமிழ்நாடு வன்னியர் பேரவைத் தலைவர் மணிவர்மா, வன்னிய மன்றத் தலைவர் குலசேகரனார், உழைப்பாளர் முன்னேற்றக் கட்சித் தலைவர் மார்க்கபந்து, Backward Class League என்ற அமைப்பின் தமிழக அரசின் முன்னாள் செயலர் ராயப்பாவும், பாண்டிச்சேரி வன்னியர் சங்கத் தலைவர் கவிஞர் மணிமாறன் என மொத்தம் 28 அமைப்பை சேர்ந்தவர்கள் வந்திருந்தனர்.

 

 

எல்லா அமைப்பின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து வன்னியர் சங்கமாக செயல்படுவதென்று முடிவு எடுக்கப்பட்டது. அப்போது ஏற்படுத்தப்பட்ட வன்னியர் சங்கத்திற்கு அடிகளார் பொதுச் செயலாளரானார். அப்போதைக்கு தலைவராக யாரையும் நியமிக்காமல் சிறிது காலத்திற்கு பின்பு கோபால் நாயகரை தலைவராக நியமித்தார்கள். இக்காலகட்டத்தில் தான் தீவிர தி.க. விசுவாசியாக இருந்த இராமதாஸ் என்பரை தேடிப்பிடித்து அழைத்து வந்தார் அடிகளார். இதில் இராமதாசும் ஏ.கே. நடராசனும் நிரந்தர அழைப்பாளர்களாக இருந்தார்களே தவிர, எந்தப் பொறுப்பும் வகிக்கவில்லை. 1983 வரை அடிகளாருடன் அடங்கி இருந்த இராமதாஸ் அதன் பின் அரசியல் கட்சிகளின் கைப்பாவையானார்.

 

1981-ல் ஈரோட்டிலும், 1982 சேலத்திலும் மாவட்ட வன்னியர் சங்க மாநாடுகளை சிறப்புற நடத்தினார் வன்னிய அடிகளார். வேலூரிலும் சென்னையிலும் மாநில மாநாடுகளை நடத்தி காட்டினார். அது சமயம் 1984-ல் தேர்தல் வந்தது.

 

 

வன்னியர் சங்கம் தேர்தலில் ஈடுபட வேண்டும் என்பது அடிகளார் கருத்து. தேர்தலில் ஈடுபடக்கூடாது என்து இராமதாசின் கருத்து. இதனால் இருவரும் பிரிய நேரிட, 1984 தேர்தலில் அடிகளார் தலைமையில் வன்னியர் சங்கம் ஒரு அணியாக போட்டியிட்டது. தேர்தலில் நிற்கக் கூடாது என்ற இராமதாசும் ஒரு அணியை தேர்தலில் போட்டியிடச் செய்தார்.

 

அடிகளாரின் அணி 15,000, 20,000 என்று ஒட்டுகள் வாங்க, இராமசாசின் அணி 400, 500 என ஓட்டுக்கள் வாங்கியது. சில பேர் வற்புறுத்தியதால் தேர்தலில் நிற்க முடிவெடுத்தேன். அது தவறு என்பதை உணர்கிறேன். இதற்காக வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். இனி எந்த சூழ்நிலையிலும் தேர்தலில் என்றென்றும் நிற்க மாட்டோம் என சபதம் செய்தார் வன்னிய அடிகளார். சமுதாயப் பாதை வேறு, அரசியல் பாதை வேறு என தனி அடையாளம் கண்டார்.

 

அதுதான் இராமசாசுக்கு நல்லதாக போய்விட்டது. கூட இருந்தே கருங்காலியாகி விட்ட இராமதாசை அரசியல்வாதிகள் தூக்கி வைத்து அவர்கள் இஷ்டத்திற்கு ஆட்டி வைக்க இன்று அதே ஸ்டைலில் கோடீஸ்வர இராமதாசாக பவனி வருகிறார். இது தான் காலத்தின்  கோலம்.

 

1984க்கு பிறகு அடிகளாரின் முழுவேகமும் சமுதாயப் பணிதான். அதுமட்டுமல்ல. சமுதாயப் பணியோடு, கருங்காலி இராமதாசோடு போராடுவதும் பெரும் சலிப்பை ஏற்படுத்தி விட்டது அடிகளாருக்கு.

 

1984 மே மாதம் ஸ்ரீரங்கம் கோயில் அதிகாரி வெங்கடாசலம் மர்மமான முறையில் இறந்தார். அது தற்கொலை தான் என அரசும், கொலை தான் என வன்னிய தலைவர்களும் கருதி போராட்டம் வெடித்தது. இதற்காக நீதி விசாரணை கேட்டு வேலூரில் இருந்து சென்னைக்கு நீதி கேட்டு நெடும் பயணம் மேற்கொண்டார் அடிகளார்.  அதற்காக சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட அவர் கைது செய்யப்பட்டார்.

 

1985-ல் சேலத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்குழுவின் முடிவின்படி போராட்டம் பற்றிய விபரங்களை அறிவித்தார் அடிகளார். வன்னிய சமூகத்தினருக்கு உத்தியோகங்களிலும், உயர்கல்வி நிலையங்களிலும் 20 சதவீதம் தனி ஒதுக்கீடு தரவேண்டிய மறியல் போராட்டம் நடத்த அறை கூவல் விடுத்தார் அடிகளார்.

 

 

 

அதில் முதலாவதாக திருப்பத்தூர் துணை ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் வன்னிய அடிகளார் மறியல் செய்து போராட்டகளத்தை அமைத்து மக்கள் அனைவரையும் பங்கேற்க வைத்தார். இந்த தொடர் மறியல் நிகழ்ச்சியின் உச்சமே 1989ல் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்துக்கான அடிப்படை. 30.09.1985ல் ஆரம்பித்த மறியல் போராட்டம் 01.11.1985 வரை  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு முதல் கட்டம் முடிந்ததாக அறிவித்தார் வன்னிய அடிகளார். இதில் சேலம் சிறையில் 15 நாட்கள் அடைத்து வைக்கப்பட்டார் அடிகளார்.

 

12.01.1986ல் வன்னியர் சங்கத்தின் மாநில செயற்குழுக் (அவசர) கூட்டத்தை சேலம் எடப்பாடியில் நடத்தி இரண்டாம் கட்ட தொடர் மறியல் நடத்துவதெனவும், உள்ளாட்சி தேர்தலில் பங்களிப்பு, அம்பா சங்கர் அறிக்கையின் மீது வழக்கு போடுதல், மாநாடு நடத்துவது போன்றவற்றையும் முடிவெடுத்து அறிவித்தார் வன்னிய அடிகளார்.

 

அடிகளாரின் மறியல் போராட்டத்திற்கு கிடைத்த பெரும் வரவேற்பு சில கருங்காலிகளுக்கு எரிச்சலை ஏற்படுத்த அடிகளாரை பழிவாங்க சமயம் பார்த்து காத்திருந்தனர். இரண்டாம் கட்ட மறியலும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்த ஆடிப்போனது மாநில அரசு.

 

இங்கு தான் அரசியல் புகுந்தது. கருங்காலிகளை அரசியல்வாதிகள் ஊக்கப்படுத்தினர். அடிகளாருக்கோ வன்னிய மக்களும் தெய்வமும் தான் துணை. வன்னியருக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு கிடைக்கும் வரை போராடியே தீருவது. அதற்கு யார் துணையாக வந்தாலும், வராவிட்டாலும் சரி! நான் போராடியே தீருவேன் என்ற அடிகளார் மூன்றாம் கட்ட மறியலையும் அறிவித்து செயல்படுத்தினார்.

 

பெரும்பான்மை சமுதாயமான வன்னிய இன மக்களுக்கு அப்போது தான் இட ஒதுக்கீடு உண்மை தெரிந்தது. நமக்கு கிடைக்க வேண்டிய நீதியை இதுவரை கொடுக்காமல் விட்டவர்களை தண்டிப்பது, அரசியல் ரீதியாக பழி தீர்ப்பதென முடிவெடுத்தது மக்கள் கூட்டம். மக்களிடம் பற்றி எரிந்து கொண்டிருந்த இந்த நேரத்தை அரசுக்கெதிரான வன்முறை போராட்டமாக மாற்றியது. சுயநல கும்பல் ஒன்று. மறியல் போராட்டம் தொடர் மறியல் போராட்டம் என்று போராட்ட வடிவம் விஸ்வரூபமெடுத்தது.

 

ஏழு நாட்கள் நடந்த சாலை மறியல் போராட்டத்திற்கு பிறகு வன்னியர் சங்கம் இரண்டாக உடைந்தது. உணர்வுகளை தூண்டிவிட்டு அடுத்தவர் உயிரை மாய்க்கச் செய்து அதன் மூலம் தானும், தனது குடும்பமும் கொளுத்தி கும்மாளமிட வழிவகை செய்த ஒரு கும்பல் வன்னியர் சங்கத்தை உடைக்க முயற்சி செய்தது.

 

வன்னியர்கள் பெற்ற சாபம்! தமிழகமே அன்னாந்து பார்க்கும் வகையில் ஒரு இனத்துக்காக, சாதிக்காக உயிரைக் கூட மாய்த்து கொள்ளும் கூட்டம் ஒன்று இருக்கிறது. அது போராடி தனது உரிமைகளை வென்றெடுக்கிறது என்று கேள்விப்படுவதற்கு முன் போராட்டத்தை முன்னெடுத்த வன்னியர் சங்கம் இரண்டாக உடைந்தது.

 

வன்னிய அடிகளார் தலைமையில் உண்மையான வன்னியர் சங்கமும், இராமதாஸ் தலைமையில் ஒரு போலி வன்னியர் சங்கமும் உருவானது. உண்மையை விட போலிக்கு மதிப்பு அதிகம் அல்லவா? மவுசு அதிகம் அல்லவா? அதுதான் நமது சமுதாய பணியிலும் நடந்தது. மனம் நொந்து போனார் அடிகளார்.

 

 

இராமதாசின் பேச்சு செயல்களினால் வன்னியர்களுக்கு எதிராக மற்ற சமூகத்தவர்கள் செல்லும் வாய்ப்பு உள்ளது. கம்யூனல் ஜி.ஓ. வேண்டுமென்று பெரியாரும், படையாட்சியாரும் ஒரே மேடையில் கூட்டம் போட்டு பேசி அரசியல் சட்டத்தையே திருத்தச் செய்தார்கள். அது போல் போராட வேண்டுமே தவிர வன்முறையை பயன்படுத்தினால் வன்னிய சமூகம் தான் பாதிக்கப்படும். வன்னிய தலைவர்களையே தாக்கச் சொல்லும் இராமதாஸ் எப்படி வன்னிய இனத்திற்கு தலைவராக இருக்கமுடியும் என்று கேள்வி எழுப்பினார் அடிகளார்.

 

இதற்கு பிறகு இராமதாசின் நடவடிக்கைகளுக்கு பதில் சொல்வதற்கே காலம் போனது இருப்பினும் தளராமல் தனது சமுதாய பணிகளை மேற்கொண்டார். நாம் இயக்கிய சங்கத்தினை அடுத்த கட்ட அரசியலுக்கு இழுத்து வந்து சமுதாய மக்களை ஒருங்கிணைக்க வைத்த பெருமை மறைந்த தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தியாரையே சாரும்.

 

 

1989ல் நடந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 1990ல் தமிழக முதல்வர் கருணாநிதி வன்னியர்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மாற்றி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டு வந்தார். இதில் வன்னியர்களுடன் வன்னியரை போன்ற அடித்தட்டு மக்களை கொண்ட 108 சாதிகளையும் சேர்த்து 20 சதவீத ஒதுக்கீடு கொடுத்தார். அதில் வன்னியர் சங்கத்தின் சார்பில் நானும், முதல்வராக கருணாநிதியும் கையெழுத்திட்டோம். அதற்காக அடிகளார் தலைமையில் பாராட்டு விழாவும், நன்றி அறிவிப்பு மாநாடும் நடந்தது.

 

1991ல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு வாழப்பாடியாரும், அடிகளாரும் இணைந்து வன்னியர் சங்கம் மூலம் சமுதாயப் பணிகளை தீவிரமாக நடத்தி வந்தனர். 1992ல் அடிகளார் அயோத்தியா சென்ற கரசேவை குழுவிற்கு தலைமை வகித்து நடத்தி சென்றார். தொடர்ந்து சமுதாயப் பணிகளை ஆற்ற வந்த அடிகளார். வன்னியர் சங்க காப்பகம் ஒன்றை தொடங்கி இருந்தார். அதன் மூலம் வன்னிய குழந்தைகளுக்கு கல்வி, உயர்கல்வி படிப்புக்கானத் தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். நானும் அதில் அடிகளாருடன் வன்னியர் சங்க காப்பாளராக சமுதாய பணிபுரிந்து வந்தேன்.

 

இராமதாசின் வன்னியர் சங்கத்திற்கு 75 கிரிமினல் வழக்குகள் பதிவான அவரது மருமகன் காடுவெட்டி குரு தலைவரானதால் தளர்ந்து போனார் அடிகளார். படையாட்சியார், சா. சுப்பிரமணியன், அடிகளார் என்று தலைவர்களை கொண்டிருந்த வன்னியர் சங்கத்திற்கு இன்று அதன் போலி பெயர் கொண்ட அமைப்பிற்கு காடுவெட்டி குரு தலைவர் என்றால் யார் தான் பொறுப்பர்?

 

 

அடிகளாரின் சமுதாயப் பணிக்கு வாழப்பாடியாரின் ஆதரவு பெரும் உதவிகரமாக இருந்தது. வாழப்பாடியார் அடிகளாருடன் அதீத ஈடுபாடு காட்டியதால் அப்போது நடந்த பாராளுமன்ற தேர்தலில் அவரை பழி வாங்கினார் இராமதாஸ்.  ஒரே கூட்டணியில் இரண்டு பேரும் இருக்க, சேர்த்தே சீட்டும் ஒதுக்க சேலத்தில் வாழப்பாடியார் போட்டியிட்டார். அதில் இராமதாஸ் திமுகவினரை துணைக்கு வைத்துக் கொண்டு திட்டமிட்டு பழி வாங்கி தேர்தலில் வாழப்பாடியாரை தோல்வியடையச் செய்தார்.

 

இறுதியாக 2000ல் சென்னை கடற்கரையில் மிகப்பெரிய அளவிளலான வன்னியர் சங்க மாநாட்டை நடத்தி காட்டினோம். அடிகளார், வாழப்பாடியாருடன் நானும் இணைந்து நடத்திய அம்மாநாடு இழந்த வன்னியர் பெருமையை மீட்டெடுத்தது. அதுவே 2001 தேர்தலுக்கும் பயன்பட்டது. அடிகளாரும், வாழப்பாடியாரும் நானும் 2001ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. விற்கு தார்மீக ஆதரவை அளித்து வெற்றி பெற செய்தோம்…

 

வன்னிய சமுதாயத்தின் இரண்டாம் புரட்சிக்கு வித்திட்ட பிதாமகன் தவத்திரு வன்னிய அடிகளார் தனது கடும் உழைப்பை இச்சமுதாயத்திற்காக தந்தார் என்பதை விட ரத்தத்தை சிந்தினார் என்பதே பொருத்தமானது. 2001 தேர்தலில் புரட்சித்தலைவி அவர்களை அரியணையில் அமர்த்துவதற்காக காத்திருந்தாரோ என்னவோ சரியாக 30.06.2001ல்  வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் ஆசிரியர் குடியிருப்பில் பூமிக்கு தான் வந்த பணியை முடித்துவிட்ட திருப்தியில் நம்மிடமிருந்து விடை பெற்றார்.

 

தமிழக முதல்வர்களாக வீற்றிருந்த பலருடனும் நல்ல தொடர்பு வைத்து அதனை நாகரிகமான முறையில் பயன்படுத்தி அனைத்து தலைவர்களின் உயர்ந்த மதிப்பை பெற்றிருந்தார் அடிகளார்.

 

2000மாவது ஆண்டில் மே மாதம் 13, 14 தேதிகளில் வன்னியர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் ஏலகிரி மலையில் பயிற்சி முகாம் நடத்தி, கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் நான் பயிற்சி பெற்று நிறைவு நாளான்று உரையாற்றினேன்.

 

சி.என்.இராமமூர்த்தியின் விவேகமான ஆக்ரோசமான உரையை நான் கேட்டேன். எனக்கு அளவிலா மகிழ்ச்சி. அவர் எடுத்து வைத்த விவாதங்கள், தொடுத்து கொடுத்த சமூகத்திற்கான செயல்திட்டங்கள் என்னை ஆச்சரியப்பட வைத்து விட்டது. இதுநாள் வரை எனக்கு இது போன்று செயல்பட வேண்டும். இந்த திட்டமெல்லாம் நம் மக்களுக்கு தேவையென எனக்கு தெரியாமல் போயிற்றே என வருந்துகிறேன்.

 

இனி எஞ்சிய எனது வாழ்நாளை சி.என்.இராமூர்த்தி இந்த பயிற்சி முகாமில் பேசிய உன்னத திட்டங்களை செயல்படுத்துவதற்காக அர்ப்பணம் செய்வேன் என்றார் தவத்திரு அடிகளார். இதை விட வேறு பாக்கியம் எனக்கு என்ன இருக்கிறது. நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம் என்பார்கள். இனத்தின் சொந்தங்களே!  அடிகளாரின் லட்சிய தாகமான, தனி ஒதுக்கீடு பெறுவதற்கு உங்களை எல்லாம் வன்னியர் கூட்டமைப்பில் இணைந்து பணியாற்ற அழைக்கிறேன். வாருங்கள் சொந்தங்களே! ஒன்று படுவோம்! வென்றெடுப்போம்!

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

U.S இராமமூர்த்தி வன்னிய அடிகளார் ஆன சம்பவம்!

 

குடும்பம், குழந்தை ஆகிய பந்தங்களில் இருந்து பிரிந்து சமுதாயப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம், 1974-ல் படையாட்சியார் அரசியலில் முழுமையாக ஈடுபடுமாறு அடிகளாரை அழைத்த போதே அவருக்குள் ஏற்பட்டுவிட்டது.

 

அரசியலுக்குள் முழுமையாக நுழைந்ததிலிருந்தே, துளிர்விட்ட அந்த எண்ணம் 80களில் அடிகளாரை தீர ஆட்கொண்டு விட்டது. அதன் விளைவாக 1982-ல் சேலம் மாவட்டம் ஆத்தூர் பக்கத்தில் உள்ள தியாகனூரு  புத்தர் கோயிலில் சந்நியாசம் வாங்கினார் நமது அடிகளார்.

 

அதே 1982ல் சேலத்தில் அடிகளாரும் திருக்குறளார் முனிசாமியும் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் இனி இவரை வன்னிய அடிகளார் என்றே எல்லோரும் அழைக்க வேண்டுமென வேண்டுகோள் வைத்தார் திருக்குறளார்.

 

அது முதல் U.S. இராமமூர்த்தி வன்னிய அடிகளார் ஆனார். அந்த காலகட்டத்தில் சி.என்.இராமமூர்த்தியாகிய நான் சமுதாயப் பணிக்காக போராட்ட களங்களில் தீவிரமாக பங்கேற்றேன்.

 

  • ••

 

 

 

 

 

அடிகளாரின் குடும்பம்

 

வன்னிய அடிகளாரின் வாரிசுகள் மொத்தம் நான்கு பேர். இரா. சித்தார்த்தன் தற்போது சமுதாய பணியிலும் ஆன்மீக பணியிலும் ஈடுபட்டு வருகிறார். இவரது மனைவி ஜானகி வடகால் அரண்மனை வாரிசு ஆவார். இவர்களுக்கு ரம்யாதேவி, பாக்யலட்சுமி என இரு குழந்தைகள் உள்ளனர். இரண்டமாவர் கமலா. இவரது கணவர் பத்திரிகை துறையில் பணியாற்றுகிறார். அடுத்தவர் ராஜேஸ்வரி – ஆசிரியையாக பணிபுரிய, இவரது கணவர் பாண்டியன் அரியலூரில் சர்வேயராக பணிபுரிகிறார். பிரேமா என்ற மகள் ஆசிரியையாக பணிபுரிகிறார். இவரது கணவர் தங்கராஜூ அரசு வழக்கறிஞராக ஜெயங்கொண்டத்தில் பணிபுரிந்து வருகிறார்.

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அடிகளாரும், புரட்சித் தலைவியும்

 

உழைப்பாளர் பொதுநலக் கட்சியின் பொதுச் செயலாளர், வன்னியர் சங்க தலைவர் என்கிற பொறுப்புகளை சுமந்து பணியாற்றிய அடிகளார், தென்னிந்திய துறவிகள் சங்க அமைப்பாளராகவும் இருந்தார்.

 

1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்து துறவிகளோடு இங்கிருந்து கிளம்பி அயோத்யா சென்றார். அவர் தலைமையில் சென்ற குழு, அன்றைய முதல்வராக இருந்த டாக்டர் புரட்சித்தலைவி அவர்களை சந்தித்து அவரது பாராட்டையும், வாழ்த்தையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

டெல்லியில் நடைபெற்ற இந்து துறவிகள் மாநாட்டிலும், சேலத்தில் நடைபெற்ற இந்து துறவிகள் அமைப்பு மாநாட்டிலும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அடிகளார். நேபாள நாட்டின் காட்மாண்டுவில் நடைபெற்ற இந்துமத மாநாட்டில் கலந்து கொண்டும் உரையாற்றி இருக்கிறார்.

 

அடிகளாரின் ஆன்மீக பணியையும், சமுதாய பணியையும் பார்த்து வியந்து ஒழுக்க சீலரான தவத்திரு. வன்னிய அடிகளாரை அழைத்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து தொடர்ந்து களப்பணியாற்ற வேண்டினார் முதல்வர் புரட்சி தலைவி அம்மா அவர்கள். அத்தொகையினைப் பெற்று வன்னியர்களுக்காக ஒரு அறக்கட்டளையை நிறுவி அதன் மூலம் நமது மக்கள் கல்வியில் சிறக்க அதை அப்படியே அர்ப்பணித்தார்.

 

டெல்லியில் நடந்த காவிரி நதி நீர் பங்கீட்டுக்கான கூட்டம் டெல்லியில் நடந்தது. அதில் தமிழகத்தில் அனைத்துக் கட்சியினரும் கலந்து கொண்டனர். அதில் வன்னிய அடிகளாரும் கலந்து கொள்ள தனி சிறப்புமிக்க ஏற்பாடு செய்தார் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அவர்கள். அம்மாவுக்கும் அடிகளாருக்குமான இந்த உறவின் தொடர்ச்சியே இன்றைய நமது வன்னியர் கூட்டமைப்புக்கான அடித்தளம்.

 

அடிகளாரின் பாதயாத்திரையும், சாகும் வரை உண்ணாவிரதமும்!

 

ஸ்ரீரங்கத்தில் கோவில் அதிகாரியாக பணியாற்றி வெங்கடாசலம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது கொலையில் பல மர்மங்கள் அடங்கியுள்ளதால் ஒரு நீதிபதியை வைத்து விசாரணை செய்ய வேண்டுமென்று வன்னியர் சங்கம் வேண்டுகோள் விடுத்தது. அடிகளாரின் அறிவிப்பினை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சிகளும் இக்கோரிக்கையை வலியுறுத்தின.

 

வன்னியர் சங்க மாவட்ட மாநாடுகளில் தீர்மானம் போட்டும் பல பேரணிகள் நடத்தியும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை. வன்னிய அடிகளார் தலைமையில் கொலையான வெங்கடாசலத்தின் சொந்த ஊரான கட்டி நாயக்கன்பட்டியிலிருந்து 60 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரையாக வந்து சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் பலனில்லை.

 

இறுதியாக வேலூரில் நடை பெற்ற வன்னியர் சங்க மாநில மாநாட்டுத் தீர்மானத்தின் படி வேலூரிலிருந்து 20.04.1984 அன்று கிளம்பி சென்னை வரை பாதயாத்திரையாக நடந்து சென்று சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதத்தை உழைப்பாளர் சிலை முன் மேற்கொண்டார்கள் ஒருவர் பின் ஒருவராக உண்ணாவிரதமிருந்த அடிகளார் உட்பட அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்தது அரசு.

 

  • ••

 

 

 

 

அடிகளாரை தாக்கிய இராமதாஸ் கும்பல்

 

நாம் கடந்த இதழில் இனத்தின் முதல் தலைவரும், வன்னிய இனத்தின் முதல் புரட்சிக்கு வித்திட்டவருமான சமுதாய பெருந்தலைவர் இராமசாமி படையாட்சியாரை வன்னியர் எதிரியான இராமதாஸ் எந்த விதமான தீய, நாகரிகமற்ற காரியங்களை செய்ய சொன்னாரோ அதே கதி அடிகளாருக்கும் ஏற்படும்படி உத்தரவிட்டது அக்கும்பல்.

 

நாமக்கல் மாவட்டம், நாமகிரி பேட்டை ஒன்றியம், ஈஸ்வரமூர்த்தி பாளையம் அருகில் ஒன்டிக்கடை என்ற இடத்தில் வன்னியர் சங்க கொடியேற்றச் சென்ற வன்னிய அடிகளாரின் கார் மற்றும் மூன்று வாகனங்களை கல்லால் அடித்து நொறுக்கியது இராமதாசின் கும்பல். சம்பவம் நடந்த அன்று இராமதாஸ் அதே பகுதியில் அதாவது ஆத்தூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் கலந்து கொண்டார். நடந்த தாக்குதலில் அடிகளாருக்கு லேசான காயமும் உடனிருந்த ஆறு பேருக்கு படுகாயமும் ஏற்பட்டது. இச்சம்பவம் இராமதாசின் நேரடி தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாகவே கருதப்பட்டது.

 

அதே போன்று, விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகில் அடிகளார் கடலூரில் வன்னியர் சங்க நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு போகும் போது இராமதாசின் குண்டர் கும்பலால் தாக்கப்பட்டார். அடிகளாரின் காதில் அடிபட்டு காது கிழிந்து ஏழு தையல் போடப்பட்டது. சுமார் ஒரு மாத காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் அடிகளார்.

 

படையாட்சியாரும் அடிகளாரும் சேர்ந்து இராமதாசிற்கு தக்க தண்டனை தருவார்களென்று நம்மை போன்ற அவர்களது ஆதரவினரும், ஆன்மிகவாதிகளும் நம்புவது நிச்சயம் வீண்போகாது,. இனி இராமதாஸ் இருக்கும் இடமெல்லாம் தோல்விக் கூட்டணியாகவே அமையும், விரைவில் அரசியலில் இருந்து அசிங்கப்பட்டு அப்புறப்படுத்த படுவார் இராமதாஸ். அது காலத்தின் கட்டாயம்.

 

மறைந்தும் மறையாத அடிகளார்

 

வன்னிய அடிகளார் மறைந்த செய்தி கேட்டு சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டம் தொளசம்பட்டி என்ற ஊரில் வன்னியர் சங்க பிரமுகர் T.E. போத்தன் அவர்கள் தலைமையில் சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் முடியை மழித்து மொட்டை அடித்துக் கொண்டனர். வன்னியர் சிறப்பு சடங்குகளின் படி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியபடி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்திய அவர்கள் 16ம் நாள் கர்ம காரியம் செய்து ஊரில் உள்ளவர்களுக்கு அன்னதானம் செய்து இனத்திற்கு உழைத்த உத்தம அடிகளுக்கு நன்றிக்கடன் செலுத்தினார்கள்.

 

  • ••• •

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu