ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு வரலாறு உண்டு. இதிகாசமும், புராணம் என்று அனைத்தும் உண்டு. மதங்கள் ஏற்பட்ட போதே சாதிகளும் ஏற்பட்டுள்ளது. சாதி என்பது வாழ்க்கை நெறியே தவிர, வேறொன்றும் தவறான விஷயம் அல்ல என்பது உண்மையாகும். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பலதரப்பட்ட மக்கள் வாழ்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாழ்க்கை முறை, வரலாறு கொண்டு வாழ்ந்து வருகின்றனர்.

இந்து மதத்தில் பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்ர ஆகிய நான்கு வருணங்கள் அடிப்படையில், பல சாதிகளாக பரந்து விரிந்து இந்த சமுதாயம் உள்ளதை மனு நீதிமூலம் நாம் அறிவோம்.

தமிழகத்தில் சம்பு மகரிஷி கோத்திரம் கொண்ட வன்னிய குல ஷத்திரிய மக்களின் வாழ்க்கை முறை மற்றும் வரலாறு குறித்து சில தகவல் குறிப்புகளை பல்வேறு ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் சான்றுரைத்து எழுதிய புத்தகங்களின் மூலம் நம் சொந்தங்களாகிய உங்களுடன் பகிர்ந்து கொள்வதற்காகவே இக்கட்டுரை. இதில் பயன்படுத்தப்பட்ட பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களின் ஆசிரியர்களுக்கு என் தலை தாழ்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறேன்.

சரித்திர உண்மைகள்

1871-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தலைமை ஆணையாளர், தென்னிந்திய ஷத்திரியர்களின் அக்னி குல ஷத்திரியர்கள் அல்லது தமிழ்ப்பள்ளிகள் என்றழைக்கப்படுவார்கள். முற்காலத்தில் எகிப்திய Shepherd அரச வம்சத்தைச் சார்ந்தவர்கள் என்பதற்கு பதிவுகள் உள்ளது பற்றி குறிப்பிட்டுச் சென்றுள்ளார்.

1891-ல் திரு. அய்யாக்கண்ணு நாயக்கர் அவர்கள் எழுதிய ‘வன்னிய குல விளக்கம்’ என்ற நூலும், 1907-ல் வெளி வந்த ‘வருண குல தர்ப்பணம்’ என்ற நூலும் தென்னகத்து வன்னிய குல ஷத்திரியர்கள் பல்லவர்களின் வழித் தோன்றலே என்று சான்றுரைத்து வெளியிடப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவில், வைணவத்தைத் தழுவிய ஆழ்வார்களில், திருவாங்கூர் சமஸ்தான அரசரான குலசேகரர், பின்னாளில் ‘குலசேகராழ்வார்’ என்று அழைக்கப்பட்டவருமான இவர் வன்னிய குல ஷத்திரிய வம்சத்தைச் சார்ந்தவர் ஆவார்.

சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் .குல சேகர ஆழ்வாரின்’ பிறந்த நாள் ‘திருவிழாவாக’ ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்தது குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை கோமளீஸ்வரன் பேட்டை (புதுப்பேட்டை)யில் உள்ள குலசேகர பெருமாள் சபா இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஒவ்வொரு வருடமும் சீரும் சிறப்புமாக செய்து வருகின்றனர் என்பது பற்றி பல குறிப்புகள் உள்ளன.

வன்னிய குல ஷத்திரியர்கள் சைவத்தையும், வைணவத்தையும் தழுவி இருந்துள்ளனர். மயிலாப்பூர் சிவன் கோயிலில் முதல் மரியாதையும், விளக்கேற்றும் உரிமையும், பள்ளி என்றழைக்கப்படும் வன்னிய குல ஷத்திரியப் பெருமக்களுக்கே உரியது என்ற வழக்கம் இருந்தது. பிற்காலத்தில் அந்த வழக்கம் தடம் புரள, இப்பிரச்சனை சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மேற்கண்ட உரிமை நிலை நாட்டப்பட்டுள்ளது என்பது வன்னிய குல ஷத்திரியப் பெருமக்களுக்கு பாரம்பரிய பெருமை தரும் விஷயமாகும்.

பழம்பெரும் பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் முகப்பு கோபுரம் ‘பள்ளிக் கோபுரம்’ என்றழைக்கப்பட்டு, அதன் பராமரிப்பு மற்றும் அனைத்தும் வன்னியர் குல மக்களுக்கே உரியது என்றும் காலம் காலமாக இருந்து வந்துள்ளது.

கி.பி. 6-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்வேதவர்மன் என்ற பெயர் கொண்டவரும் ‘இரண்யவர்மன்’ என்ற புகழ் பெற்றவருமான பல்லவ மன்னன் தான், புகழ் பெற்ற சிதம்பரம் கோயிலைக் கட்டினான் என்பதற்கு வரலாற்றுச் சான்றுகளும், அவரின் வழித் தோன்றல்களுக்குத் தான், கோயில் திருவிழாவின் போது முதல் மரியாதையும் செய்யப்பட்டு வருகின்றது என்பது வன்னிய குல ஷத்திரிய பெருமக்களுக்கு பெருமை சேர்க்கும் விஷயமாகும்.

கி.பி. 642-ல் ‘வாதாபி கொண்டி நரசிங்க பொட்டராயன்’ மற்றும் ‘மாமல்லன்’ என்றழைக்கப்பட்ட முதலாம் மகேந்திர வர்மனின் புதல்வனுமான முதலாம் நரசிம்ம வர்ம பல்லவ மன்னன் புலிகேசியைத் தோற்கடித்து வாதாபியைக் கைப்பற்றியது பற்றிய குறிப்புகள் சிங்கள வம்சத்திலும், சிறு தொண்டரின் சீராப்புராணம் போன்றவற்றிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

புராண ஆதாரங்கள்

பதினெட்டு புராணங்களில் ‘வன்னிய புராணம்’ ஒன்று என்பதும், சம்பு மகரிஷியின் யாகத்திலிருந்து, வீர  வன்னியன் 32 அங்க அடையாளங்களுடன் வெண் குதிரையில் தோன்றி, பன்னிரண்டு முறை படையெடுத்து வாதாபி, மாஹி என்ற அரக்கர்களை அழித்ததாக இன்றும் வைத்தீஸ்வரன் கோயிலில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளின் மூலம் காணலாம்.

பாலாறு நதிக்கும், பெண்ணை நதிக்கும் இடையில் உள்ள காவேரி டெல்டாப் பகுதியில் தான் ‘வீர வன்னியன்’ அவதரித்தது மற்றும் இந்திரனின் மகளை மணந்து ருத்ர, பிராமண, கிருஷ்ண, சம்புவ, கை ஆகிய ஐந்து மகன்களைப் பெற்று வாழ்ந்தது ஆகியவற்றை ‘வீர வன்னிய புராணம்’ கூறுகின்றது.

வன்னிய குல ஷத்திரியர்கள் பிராமணர்களை விட உயர்ந்தவர்கள் என்று முற்காலத்தில் நிலைமை இருந்துள்ளது. பிராமணர்கள் பிறந்த பின்பு தான் பூணூல் அணிகின்றனர். ஆனால் வன்னிய குல ஷத்திரியர்களின் குல முன்னோர் ‘வீர வன்னியன்’, 32 அங்க அடையாளங்களில் பூணூலோடு பிறந்தவன் என்றும், வன்னியர்கள் மட்டுமே இரண்டு முறை பூணூல் அணிபவர்கள் என்னும் வழக்கமும் இருந்ததுள்ளதையும் புராண ஆதாரங்களுடன் விளக்குகின்றன.

வன்னியர்களின் அன்றைய மற்றும் இன்றைய நிலை

சைவத்தையும், வைணவத்தையும் தழுவியர்கவளாக இருந்தாலும், தங்கள் குல தெய்வங்களாக முத்தாலம்மன், மாரியம்மன், அய்யனார், முனீஸ்வரன், அங்காளம்மன் போன்ற தெய்வங்களையும் வணங்கி வந்துள்ளனர். ஆடு, கோழி போன்றவற்றை பலியிட்டு தங்களின் வாழ்விற்கு பாதுகாவல் தெய்வமாக வணங்கி வந்துள்ளனர்.

சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயில் என்ற ஊரில் அமைந்துள்ள பச்சையம்மன் கோயில் மற்றும் மன்னார் சாமி சிலைகள் முற்காலத்தில் வன்னியர்கள் மற்றும் பேரி செட்டியார்கள் மட்டுமே சென்று வழிபாடு செய்யும் இடமாக இருந்துள்ளது.

கிராம பஞ்சாயத்து முறையில் வன்னியக் கிராமங்களில் உள்ள தலைவன் ‘பெரியதனக்காரன்’ அல்லது ‘நாட்டாமைக்காரன்’  போன்ற பெயர்களில் அனைத்து குடும்ப விழா மற்றும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தலைமை வகித்து நடத்தியுள்ளனர்.

தென் ஆற்காடு, தஞ்சாவூர் மாவட்டங்களில் வன்னியர்களின் சமூக நிலைமை முற்காலத்தில் நல்ல நிலைமையில் இருந்துள்ளது. தென் ஆற்காடு மாவட்டத்தில் நிறைய திரௌபதி அம்மன் கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களின் பூசாரி வன்னிய குல ஷத்திரியராகவே இருப்பார். மகாபாரதம் படித்தல், தீ மிதித்தல் போன்றவை வன்னியப் பெருமக்களின் குலம் வளர்த்த திருவிழாக்களாக விளங்கின.

தென் ஆற்காடு மாவட்டத்தில் ‘குமளம் வன்னியர்கள்’ கோவில் பூசாரிகளாக இருந்துள்ளனர். பெருமாள் கோவில்களையும் நிர்வாகம் செய்து வந்துள்ளனர். பிறகு ‘குமளம் பிராமணர்கள்’ என்று பெயர் மாற்றம் செய்து கொண்டு இன்று ‘ராயர்கள்’ என்ற பட்டத்துடன் விளங்குகின்றார்கள்.

வன்னியர்களின் பட்டப் பெயர்களின்

1891-ல் சாதிவாரிக் கணக்கெடுப்பின் படி வன்னியர்கள் அக்னி குல வம்சத்தவர் என்றும், ருத்ர வன்னியன், கிருஷ்ண வன்னியன், சம்பு வன்னியன், பிரம்ம வன்னியன், இந்திர வன்னியன் ஆகிய வம்சத்தவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் உட்பிரிவுகளாக அகமுடையன், அக்னி, அரசு, ஷத்ரிய, நாகவதன், நத்தமன், ஓலை பாண்டமுத்து, பெருமாள் கோத்ரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளது.

வன்னிய குல ஷத்திரியர்களின் பட்டப்பெயர்கள் அதிகாரம், வீரம், உயர்நிலை என்ற அடிப்படையில் நாயகர், வர்மா, படையாச்சி, கண்டர், சேரா, சோழ, பாண்டிய, பயினார், உடையார், சம்புவராயர், ரெட்டி, கவுண்டன், காவந்தன், செம்பியன், சோழகனார் போன்ற பட்டப் பெயர்களைக் கொண்டு விளங்கி வந்திருக்கின்றனர்.

1901-ல் எடுக்கப்பட்ட சாதிவாரிக் கணக்கெடுப்பின்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் கள்ளங்கி என்ற ஊரில் ரெட்டி, கள்ளவேலி, கள்ளன் என்ற பட்டப் பெயர்களாலும், கோவை மாவட்டத்தில் கோட்டன் என்றப் பட்டப் பெயருடனும், சேலம் மாவட்டத்தில் இறப்புக்கு பிறகு சடங்கின் அடிப்படையில் அஞ்சு நாள் வன்னியர்கள் என்றும், பன்னேந்து நாள் வன்னியர்கள் என்று இரு பிரிவாக இருந்துள்ளனர்.

மேலும் சேலம் மாவட்டத்தில் காதில் அணியும் காதணி அடிப்படையிலும் ‘ஓலைப் பள்ளி’ என்றும் ’நாகவதம் பள்ளி’ என்றும் அழைக்கப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், நெற்றியில் நீள வாக்கில் பச்சைக் குத்திக் கொண்ட வன்னியர்கள் ‘தேன் வன்னியன்’ அல்லது ’வனப்பள்ளிகள்’ என்றும் அழைக்கப்பட்டனர்.

மற்ற சாதிகளில் உள்ளது போல, வன்னியர்களில் கீழ்நிலையில் உள்ளவர்கள் ’நோக்கன்’ என்று அழைக்கப்பட்டுள்ளனர். திருமணம் மற்றும் பிற நிகழ்வுகளில் இவர்கள் அன்பளிப்பு பெற்றுச் செல்வார்கள் என்று கூறப்படுகின்றது.

திருமண முறை

வன்னியர்களிடையே பெரும்பாலும் குழந்தைத் திருமணமே இருந்து வந்துள்ளது. ஆனால் வயதுக்கு வந்த பின்பே திருமண வாழ்க்கை நடைபெற்றுள்ளது.

நிச்சயதார்த்த நிகழ்வில், மணமகள் வீட்டிற்கு மணமகனின் கற்றத்தினாருடன், அந்த ஊர்த் தலைவரின் தலைமையில், இருவரின் தந்தையரும் அமர்ந்து வெற்றிலை, பாக்கு, பாரியம் அல்லது நகைகள், பால் (முலைப்பால் கூலி), தேங்காய் ஆகியவற்றை அளித்து பெண் கேட்பார்கள். முலைப்பால் கூலியை பெண்ணின் தாய்க்கு அளித்து கவுரவிப்பதும் உண்டு.

மணமகனின் தந்தையுடன் வரும் ஊர்த்தலைவரின் மூலமாக அளித்து ‘இந்த பணம் உன்னுடையது. இந்தப் பெண் எங்களுடையது’ என்று கூற, ‘இந்தப் பணம் என்னுடையது. இந்தப் பெண் உங்களுடையது’ என்று மூன்று முறை கூற, இந்த சீர்வரிசையை பெண்ணின் தாய்மாமன் தான் பெற்றுக் கொள்வார். தாய்மாமனின் அனுமதி இல்லாமல் இந்தத் திருமணம் நடைபெறாது.

திருமணம் பொதுவாக மூன்று நாட்கள் நடைபெறும். மணமகளை ஊர்வலமாக மணமகனின் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். திருமண மங்கலப் பானைகளை குயவர் குலப் பெண்கள் எடுத்து வருவார்கள். திருமணம் நடைபெறும் நாளின் காலையில் பந்தக்கால், விளக்கேற்றும் நிகழ்ச்சி, நலங்கு போன்றவை நடைபெறும், ஐந்து சுமங்கலிப் பெண்கள் தான் மேற்கண்டவற்றை செய்வர். தீய சக்திகள் அகல ஆரத்தி எடுப்பதும், ஒரு குழந்தை பெற்ற பெண்ணை வைத்து சமைத்த சாதத்தை சல்லடையில் வைத்து ஆரத்தி எடுத்தும், மணமக்களை காலையில் குளிக்க அனுப்புவதும் வழக்கமாகும்.

திருமண உடையணிந்து மணமேடையை மூன்று முறை சுற்றி வந்து, குடவிளக்கு, அலங்கார விளக்கு சூழ மணமக்கள் வந்து அமருவார்கள். மேளதாளம் முழங்க, அனைவரின் வாழ்த்துக்களையும் பெற்ற மங்கல நாணை, மணமகனின் சகோதரி காமாட்சி விளக்கு ஏந்தி நிற்க, மணமகள் கழுத்தில் மணமகன் தாலி கட்டுவார். பிறகு இடம் மாறி அமர்ந்து உட்கார, உறவினர்கள் மணமக்களுக்கு தங்கம், வெள்ளியிலான பட்டம் கட்டுவார்கள்.

பிறகு மூன்று முறை மணமேடையை சுற்றி வந்து அம்மிக்கல்லின் மீது மணமக்களின் இடது கால் வைத்து, அருத்ததியைப் பார்த்து கால் மெட்டி அணிவிப்பதும் வழக்கமாகும்.

அன்றைய திருமண நாளின் மாலையிலேயே கால் மெட்டியை அகற்றிவிட்டு, சாணிப் பிள்ளையார் செய்து உழுது விதை விதைத்து ‘சயனம்’ பார்க்கும் நிகழ்வு  நடைபெறும். மணமகளின் வீட்டிலேயே மணமக்கள் ஒரு வாரம் தங்கிருந்து, பிறகு மணமகனின் வீட்டிற்கு வரும் போது உப்பு, அரிசி கொண்ட பானையை முதலில் தொட்டு வணங்கி மணமகள் உள்ளே வர வேண்டும்.

கும்பகோணம் பகுதியில் உள்ள வன்னியர்களின் ஒரு வினோதமாமன பழக்கம் என்னவென்றால், மணமகளின் தாய் இந்த திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்தது.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பண்டமுத்துப் பள்ளி என்றழைக்கப்படும் வன்னியர்கள் குழந்தைகளுக்கு திருமணம் நிச்சயம் செய்யும் போது பெண் குழந்தைக்கு கோமியம் அளித்தும், வயதில் குறைந்த சிறுவனுக்கு நிச்சயிப்பதாக இருந்தால் இரண்டு – அரை அணா நாணயத்தை கரைத்து விழுங்குவதும், இவர்களை சேர்த்து வைக்கும் சடங்காக இருந்துள்ளது.

நள, தமயந்தி திருமணம் நடைபெற்றது போல பண்ருட்டி அருகே ‘சுயம்வரம்’ திருமணம் நடைபெற்றதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.

வன்னிய குல ஷத்திரிய பெருமக்களில் விதவை மறுமணம் உண்டு என்று கூறப்பட்டுள்ளது. விதவைகளை மறுமணம் செய்யும் போது மணமகன் அருகில் நிற்க, திருமணமான சுமங்கலிப் பெண்தான் தாலியை அணிவிப்பது வழக்கமாக இருந்துள்ளது. இது போன்று அணிவிக்கப்படும் தாலிக்கு ‘ஒரு வீட்டு தாலி’ என்று பெயராகும். ஏனெனில் இத்திருமணம் பலரின் முன்னிலையில் நடைபெறாமல் வீட்டிலேயே நடைபெறும் திருமணமாக இருந்துள்ளது.

இப்ப வன்னியகுல பெருமக்கள் காலங்காலமாக தங்களுக்கென தனியான சட்டதிட்டங்கள், கலாச்சாரமுறைகள், பண்பாடு ஆகியவற்றை மூச்சாகக் கொண்டு வாழ்ந்த உயர்ந்த சமூகம் என்பதை வரலாற்று ஆசிரியர்களின் நூல் ஆதாரங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வாழ்க வன்னியகுலம்!

வளர்க வன்னிய சமூகம்!

Menu