வன்னியர் குலக் கொடி

 

[கொடியிலுள்ள பச்சை, வெள்ளை சிகப்பு

நிறங்களைப் பற்றியும்,

வில், புலி, மீன் சின்னங்களை

குறித்தும் விளக்கம் காண்க. – .செ..]

 

 

பச்சை நிறத்தின் தத்துவமென்ன?

உழவு தொழிலைப் பற்றி

திருவள்ளுவர் என்ன கூறுகிறார்?

 

உழுதுண்டு வாழ்வோரே வாழ்வர் மற்றவறெல்லாம் தொழுதுண்டு அவர் பின் செல்லுபவர் என்றார் திருவள்ளுவர். உழவு தொழிலை செய்து உபகாரம் செய்பவர்கள் தான் மனிதர்கள். மற்றவதெல்லாம் அவர்களுக்குப் பின் அடங்கியவர்கள் என்று உழவையும், உழவு தொழிலை நடத்துபவரையும் மனிதரில் உயர்ந்த மனிதராக்கி இவர்கள் தான் மனித வம்சத்தின் ஜீவ நாடி என்று பட்டயம் அளித்து சென்றுள்ளார் தமிழ் மறைவாணர், உலகத்திற்கே வழிகாட்டியான திருவள்ளுவர்.

 

ஔவை பாட்டி சொன்னதென்ன?

 

மன்னனை வாழ்த்தி மகிழச் செய்து, அதன் பயனால் வெகுமதி பெறச் சென்ற தமிழ் மூதாட்டியார் ஔவை கூடியுள்ள சபையோரையும் வாழ்த்தாமல், பரிசு கொடுக்கப் போகும் மன்னனையும் புகழ்ந்து பேசாமல் மற்றும் அரச அவைக்கே பிரதானமான மந்திரி படைத்தலைவர் யாவரையும் போற்றிப் பாடாமல் ஏழை உழவன் இரண்டு காளை மாட்டுடன், காலையும் மாலையும் சதா கஷ்டப்பட்டு வேலை செய்யும் வரப்பையே மனதில் எண்ணி, வரப்புயர என்றே துணிந்து பாடினார். வரப்புயர்ந்தாலு நீருயரும், நீருயர்ந்தால் நெல்லுயரும், நெல்லுயர்ந்தால் கோவுயரும், கோவுயர்ந்தால் கோல் உயரும். கோல் உயர்ந்தால் குடி உயரும், குடி உயர்ந்தால் அரசு உயரும். என்று அரச சபையிலே விளக்கம் கூறி, எல்லா உயர்வுகளுக்கும் விவசாயத்தையே மேலாகக் காட்டி வரப்புயரேல் நாடு அழியும் என்று எச்சரிக்கையும் கொடுத்து பாடி சென்றிருக்கிறார். பெண்ணினத்தை பேணிக் காத்த பெருந்தகையான ஔவை.

 

பாரதியார் பாடியதென்ன?

 

உழவிற்கும் தொழிற்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்று உழவு தொழிலுக்கு பெரு மதிப்பு கொடுத்து அதனையும், அதனை செய்வோரையும் நாட்டு மக்கள் வணங்காமல் அதனுடைய உழவும், அத்தொழிலையும் செய்யாமல் அதனுடைய பலனை அனுபவித்துக் கொண்டு சுகமாக உண்டு களித்து மகிழ்கின்றவர்களை எதிர்க்க வேண்டுமென்றும் பாடம் கற்பித்து மறைந்தார் வரகவி சுப்பிரமணிய பாரதியார்.

 

காந்தி அடிகள் கூறியதென்ன?

 

இந்தியாவின் கலைச் செல்வம், கருணைச் செல்வம் 7 லட்சம் கிராமங்களே. நம் நாட்டின் அழியாத எல்லா செல்வங்களும் அக்குக்கிராமங்களில் தான் மறைந்து கிடக்கின்றன அதை வளர்த்தாலன்றி நாட்டில் முன்னேற்றத்தைக் காணவே முடியாது என்று தீர்க்க தரிசனத்துடன் கூறிச் சென்றார். உலகம் போற்றும் உத்தமர் கரம் சந்திர மோகன்தாஸ் காந்தி அடிகள்.

 

இதற்கு முன் தோன்றி மறைந்த பல அறிஞர்கள் நாடு செழிக்கவும் பொன்னும் முத்தும் மற்றும் பலவகை செல்வங்களும், நாட்டில் பூத்து குலுங்கிட வேண்டுமானால் நீர் வேண்டும். நிலம் வேண்டும். இரண்டையும் ஒன்று சேர்த்து உழுதுண்டு வாழ வேண்டும் என்று விவசாயத்திற்கே முதன்மை கொடுத்து அனைவரும் பாடிச் சென்றுள்ளார்கள்.

 

அரசியல் கட்சிகள் என்ன கூறுகின்றன?

 

இப்பொழுதுள்ள அரசியல் கட்சிகள் கூட, நாட்டிலே 100க்கு 80 சதவிகிதம் கிராமங்களில் வாழும் விவசாய குடிமக்களின் முன்னேற்றத்தில் கருணை காட்டி, அவர்களையும் அவர்களுடைய அன்றாட தொழிலாகிய விவசாயத்தையும், முன்னேற்றத்திற்கு கொண்டு வரப் போகிறாம் என்று பிரச்சாரம் செய்து கிராமங்களிடையே செல்வாக்குப் பெற, நேசனலிசம், சோஷலிசம், கம்யூனிசம், மற்றும் என்ன என்ன இசம்களை எல்லாமோ சொல்லி, நிலத்தை சீர்திருத்தப் போகிறோம். நிலங்களை பகிர்ந்துக் கொடுக்கப் போகிறோம். தற்போது இருக்கும் விவசாய முறையை சீர்திருத்தம் செய்யப் போகிறோம் என்றெல்லாம் கூறி, பலபல திட்டங்களை அப்போதுக்கப் போது வெளியிட்டு வருகின்றனர்.

 

அரசாங்கம் யார் உதவியால் நடக்கிறது?

 

மேலும், நமது நாட்டு அரசாங்கம் கூட கிராம விவசாய மக்கள் அளிக்கும் நில வரியிலும் பொருள் விற்பனைக்கு அளிக்கும் விற்பனை வரியிலும் தான் நடத்தப்படுகின்றன. பெருவாரியாக விவசாயத்தை நம்பி வாழும் சகல விவசாயிகளாலும் அளிக்கப்படும் இந்த முக்கிய வரிகள் சென்னை அரசாங்க கஜானாவில் வந்து குவியா விட்டால் அரசாங்க இயந்திரம் சரி வர நடைபெறாது என்பது முற்றிலும் உண்மை.

 

எனவே ஒவ்வொரு நாடும் சுபீட்சமாகவும் சுகமாகவும், பசி, பட்டினி, பஞ்சம், பிணி, மூப்பு, துன்பதும் ஒன்றும் அணுகாமல் சுகமுடன் வாழ வேண்டுமானால் ஔவை பாட்டியார் கூறிய மாதிரி வரப்புயர்ந்தால் தான் மக்கள் வளமுடன் வாழ முடியும். எனவே வரப்புயர விவசாயத்தை பெருக்க நாம் வழி வகுக்க வேண்டும். நாம் சுபிட்சமாகவும் பசுமையாகவும் இருக்க அனைவரும் பாடுபட வேண்டும்.

 

 

 

 

வன்னியன் எங்கு வாழ்கிறான்?

எப்படி வாழ்கிறான்?

யாருக்கு உதவுகிறான்?

 

நமது சமூகத்திலுள்ள பெரும்பான்மையான வன்னிய மக்கள் கிராமங்களில் தான் வாழ்ந்து வருகின்றனர். நாட்டிற்கே முதுகெலும்பான விவசாயத்தை நம்பி, அதனிடையே தனது ஆவியை அர்ப்பணித்து உழுது, ஆனால் உண்ணாமல் வாழ்க்கையை நடத்துக்கின்றனர். தான் தொழில் புரியும் உழவு தொழிலில் தனக்குப் போதிய பலன் கிட்டாவிட்டாலும், நாட்டின் சுபீட்சத்திற்காக தனது நலனை விட்டுக் கொடுத்து சகலருக்கும் உதவி, காத்து ரட்சிக்கின்றனர்.

மேலும் தானும், தன்னுடைய சந்ததிகளும் என்ன நிலைமையில் இருக்கின்றோம். என்ன நிலைக்கு பின்னால் செல்வோம் என்ற கவலையே இல்லாமல் விவசாயம் பெருக வேண்டும். மக்கள் உண்டு வாழ வேண்டும். நாடு பசுமையாக என்றும் இருக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளைக் கொண்டே அன்றும், இன்றும் சதா உழைத்து வருகின்றனர். ஆகவே நாடு செழிக்க, புல், பூண்டு தழைக்க பயிர் பச்சையை வளர்க்கவே இம்மக்கள் ஒரே குறிக்கோளோடு சேவை செய்து வருவதால் இவர்கள் தான் நாட்டினில் பசுமையை உண்டாக்குகின்றனர்.

 

நாட்டிலே பயிரை வளர்த்து பசுமையை உண்டாக்க இவர்கள் உறுதி பூண்டிருப்பதால் தான் இம்மக்கள் பிறந்த சமுதாயத்தின் கொடியை பசுமை நிறைந்த பச்சை நிறத்தில் சித்தரித்திருக்கிறோம். ஒரு வன்னிய விவசாயி காலையில் எழுந்திருந்து உழைக்கச் சென்று பின் மாலை வீடு திரும்பும் வரையில் அவன் தனது வயலிலும், ஓடையிலும், ஏரியிலும், மேட்டிலும், அடர்ந்த காட்டிலும், எத்திக்கில் பார்க்கினும் பசுமையையே காண்கிறான். தான் வாழும் சிறு குடிசையை சுற்றியுள்ள வெளிப் பாகங்களிலும், பச்சைப் பசேலென்று இருக்கும் பசுமை நிறத்தைத்தான் என்றும் எப்பொழுதும் எந்த நேரத்திலும் சதா கண்டு வருகிறான்.

 

எனவே ஏழை விவசாயி தான் உழைப்பதும் பச்சை. பிறருக்கு உண்ண கொடுப்பதும் பச்சை. அவன் வாழும் இடமெங்கும் பச்சை. மற்றும் நாடு, நகரம் அதிலிருக்கும் ஏனைய மக்கள் அனைவரும் சுகமுடன் பசுமையாக வாழ வேண்டும் என்று அவனால் எண்ணப்படும் நற்கருத்தும் பச்சை.

 

இப்படிபட்ட நல்ல நோக்கத்துடன் தான் சென்ற கால பெரியவர்கள் பாடிச் சென்ற கருத்துடனேயே மனித சமுதாயத்திற்கே தொண்டு செய்து நாட்டிலே பசுமையை உண்டாக்க சுய நலமின்றி பொது நலத்திற்கே சேவை செய்து வருகின்றான்.

 

 

வன்னியன் பிறரை வாழ வைப்பவனே அன்றி,

தாழ வைப்பவனல்ல!

 

இப்படிப்பட்ட ஜீவகாருண்ய தன்மைக்கே ஒவ்வொரு விவசாயியும் பாடுபடுவதினாலும், தான் நலிந்தாலும் மற்றவர்களாவது செழிப்புடன் பசுமையாக இருக்க வேண்டுமென்ற நற்கருத்தினாலும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு விவசாயியும் பாடுபட்டு வருவதினாலும், மேலும் அவ்விவசாய வர்க்கத்திலே வன்னிய சமூகம் 100க்கு 90 விழுக்காடு கலந்திருப்பதாலும் தான், வன்னிய மக்களின் குலக்கொடியை அவர்களது விவசாயத்தின் அடிப்படை நோக்கத்தில் அடங்கிய தத்துவத்தைக் கொண்டே பச்சை நிறத்தில் ஏற்படுத்தி இருக்கின்றோம்.

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

கொடியில் உள்ள சிகப்பு நிறமும்.

வில், புலி, மீன் சின்னமும்

எதைக் குறிக்கிறது?

 

இப்போது கொடியில் வில், புலி, மீன் சின்னம் சிகப்பு நிறத்தில் இருப்பதை கவனிப்போம்:-

 

இந்த சின்னங்கள் தமிழ் மூவேந்தர்களுடையது. வில் சேரனுக்கும், புலி சோழனுக்கும், பாண்டியனுக்கு மீனும் சின்னங்களாக அன்று அமைக்கப்பட்டு இருந்தது. இந்த மூன்று பேருடைய கொடியிலும் இச்சின்னங்கள் தான் தனித்தனியாக பொறிக்கப்பட்டிருந்தன. அதாவது:-

 

          சேரன்             ‘வில் கொடி’

     சோழன்           ‘புலி கொடி’

     பாண்டியன்       ‘மீன் கொடி’

 

என இவர்களை தங்கள் தங்கள் நாட்டிற்கு தனித்தனியாக கொடிகளை அமைத்து அரசு புரிந்தனர்.

 

இமயத்தில் கொடி அமைத்து

மானத்தை கார்த்தனர்!

 

வட நாட்டிலுள்ள ஆரிய மன்னர்களான கனக விசய அரசர்கள் நம் தமிழ் மொழியையும், தமிழ் நாட்டையும் இகழ்ந்து கூறினர் என்பதற்காக சேர நாட்டு மன்னன் செங்குட்டுவன் வடநாட்டின் மீது படையெடுத்து அவர்களை போரில் வென்று இமயத்தில் வில் கொடியை நாட்டி, கனக, விஜயர்களை சிறைப் பிடித்து அவர்கள் தலை மேல் கல் சுமக்க வைத்து தன்னாடு வந்து கண்ணகிக்கு குமரி முனையில் சிலை அமைத்தான் என்று தமிழ்க் காவியங்கள் கூறுகின்றன.

 

இது போன்றே பாண்டியநாட்டு மன்னன் நெடுஞ்செழியனும், சோழ நாட்டு மன்னன் கரிகாலனும், வடநாட்டு மீது படையெடுத்து அங்குள்ள மன்னர்களை எல்லாம் வென்று இருவரும் இமயத்தில் தனித்தனியாக புலிக்கொடியையும், மீனக் கொடியையும் நாட்டி பறக்க விட்டு வந்திருப்பதாக சரித்திரம் கூறுகின்றது.

 

தமிழ் அரசர்கள் இரத்தத்தை சிந்தி

கொடியை அமைத்தனர்!

 

ஆகவே மேலே கண்ட மூவேந்தர்களும் தங்கள் தங்கள் சின்னம் பொறித்த கொடிகளை இரத்தத்தைச் சிந்தி இமயத்தில் நாட்டிய காரணத்தினாலும், தங்கள் நாட்டு மீது வேற்று நாட்டு அரசர்கள் படை எடுத்த போதெல்லாம் இரத்தத்தை சிந்தி கொடியை தாழவிடாது கார்த்து வளர்த்த பெருமையாலும், அம்மன்னர்களுடைய சின்னங்களான வில், புலி, மீன் சின்னங்களை ஒன்றாக சேர்த்து நாம் இரத்த நிறத்திலேயே அதாவது சிகப்பு நிறத்திலேயே அமைக்க வேண்டிய முக்கியத்துவம் ஏற்பட்டது.

 

மூவேந்தர்களின் சின்னம்

யாருக்கு சொந்தம்

 

வன்னியர் ஆண்ட பரம்பரையில் வந்தவர்கள், தமிழ் மன்னர்களின் பின் சந்ததிகள் என்ற காரணத்திற்காகவே நாம் அம்மன்னர்களின் சின்னங்களை அதாவது:- வில், புலி, மீன் முத்திரை நமக்குத்தான் உரித்தானது. முதல் உரிமை எங்களுக்குத் தான் உண்டு என்று பெருமையுடன் கூறிக்கொண்டு அதே சின்னம் பொறித்த கொடியை நம் குல மகாநாட்டில் ஏற்றி வைக்கிறோம். ஆனால் மற்றும் சில சமூகத்தினர் கூட அந்த சின்னம் பொறித்த கொடியை ஏற்றுக்கின்றனர். இதில் அவர்கள் தாங்கள் தமிழர் என்று கூறிக் கொண்டு தமிழ் மன்னர்களின் சின்னம் கொண்ட தமிழ்க் கொடியை தமிழர் கூடும் மகாநாடுகளில் பொதுக் கூட்டங்களில்  மற்றும் பல விழாக்களில் ஏற்றி வைக்கிறோம் என்று சொல்லுகின்றனர்.

 

ஆனால் நாமோ தமிழர் என்று தமிழ் மன்னர்களின் சின்னத்தை பலர் உரிமைக் கொண்டாடினாலும் நாங்கள் (வன்னியர்கள்) அந்த மன்னர்களின் பரம்பரையினர் அம்மன்னர்கள் எங்களது வம்சத்தினர், சமூகத்தினர் அம் முடிமன்னர்கள் எங்கள் உற்றார், உறவினர் என்று முதல் உரிமைக் கொண்டாடி வில், புலி, மீன் சின்னம் முதலில் எங்களது குலச் சின்னமேயாகும். பிறகு தான் அது மற்றவர்களுக்கு உரியது. ஆகவே இந்நாட்டில் பறக்கும் தமிழ்க் கொடியை நாங்கள் முதலில் எங்களது குலக்கொடியாக மதித்து, போற்றி, துதித்து வணங்கிய பிறகு தான் அதை மற்றவர்களுடைய (தமிழர்களுடைய) கொடி என்று நாம் சொல்வோம்  என்று கூறுகிறோம்.

 

ஆகவே இன்று வடக்கே திருவேங்கடத்திலிருந்து தெற்கே கன்னியாகுமரி முனை வரையில் பறக்கும் வில், புலி, மீன் சின்னம் பொறித்த தமிழ்க் கொடி முதலில் வன்னியருக்குத்தான் உரியது. பிறகு தான் மற்றவர்களுக்கு சொந்தம் என்பதை நாம் தலை நிமிர்ந்து அஞ்சாமல் கூறுகிறோம்.

 

 

தமிழாசிரியர் மகாநாட்டில்

என்ன நடந்தது

 

இன்று நாட்டிலே உள்ள பல அரசியல் கட்சிகள் தங்களுக்கு பற்பல விதமான கொடிகள வைத்துக் கொண்டிருந்தாலும் அவர்கள் தமிழர் என்று கூறிக் கொண்ட ஒன்றாக கூடி பேசுங் காலத்திலும், நேரத்திலும் வில், புலி, மீன் சின்னம் பொறித்த இந்த தமிழ்க் கொடியின் கீழ்தான் ஒன்று கூடுகிறார்கள். அப்போது இவர்கள் பேசுவதையும் நாம் கேட்டிருக்கிறோம். அதாவது:-

 

சேரனுடைய உரித்தான ‘வில்‘ சின்னமும், சோழனுடைய ‘புலி’யும், பாண்டியனுடைய ‘மீன்’ சின்னமும் தமிழ்நாட்டிற்கும், அந்த நாட்டில் வாழம் எல்லா தமிழர்களுக்கும் தானே சொந்தம். இச்சின்னங்கள் பொறித்த கொடி தமிழ்க் கொடி அல்லவா. ஆகவே இத்தமிழ்நாட்டின் கொடியை வன்னிய சமூகத்தினர் தங்களது குலக்கொடி என்று கூறி அதை நடைமுறையிலும் கொண்டு வந்து அவர்களது மகாநாடுகளிலும் கூட்டங்களிலும் பறக்கவிட்டு உரிமை கொண்டாடுகிறார்களே? இது எப்படி நியாயம்? முறை? என்று பலர் பேசுகின்றனர்.

 

நாட்டை ஆண்டது யார்

க்ஷத்திரியரா அல்லது

 

இதற்கு பதில் கொடுக்கும் முறையில் அவர்களிலேயே மற்றும் பலர் …… ஆமாம், ஏன் உரிமை கொண்டாட மாட்டாகள்? அவர்கள் க்ஷத்திரியர்கள் என்று கூறுகிறார்கள். இவை அரசாங்கத்திலும் பதிவாகி இருக்கிறது. வருணாசிரம தர்மப்படி இந்த நாட்டை க்ஷத்திரியர்கள் தானே ஆண்டிருக்கிறார்கள்? இதைக் கொண்டு தான் அவர்கள் நாங்கள் தான் இந்த நாட்டு மன்னர்களின் சந்ததிகள், அவர்களுடைய சின்னம், உடமை, உரிமை எல்லாம் எங்களுக்குத்தான் சொந்தம் என்கிறார்கள். இதில் என்ன தவறு? இந்த தமிழ்நாட்டில் அவர்களைத் தவிர க்ஷத்திரியர்கள் என்று வேறு யார் இருக்கிறார்கள்? கூறுங்களேன்? நாமோ தமிழ் ஆசிரியர்கள். இந்த நாட்டு சரித்திரத்தை நன்கு கரைத்து குடித்தவர்கள். இப்படி இருக்க அவர்களது (வன்னியரது) கோரிக்கையை நாம் எப்படி மறுத்து தப்பு என்று கூற முடியும்? என்று பேசி இருப்பதோடு மட்டுமல்லாமல்.

 

தமிழ்க் கொடியை இன்று

உயர்த்தி பிடிப்பவர்கள் யார்

 

மேலும் அவர்கள் பேசும் போது மறத்தமிழன் – சைவத் தமிழன் என்று வீராப்புடன் சொல்லுபவர்கள் எல்லாம் தமிழ்க் கொடியை கீழே போட்டு விட்டு தங்களது சுயநலத்திற்காக வேறு எந்தெந்த கொடியையோ கையில் பிடித்துக் கொண்டு பதுங்கிக் கிடக்கும் இந்த நேரத்தில் வன்னியராவது இக்கொடியை தூக்கி நிறுத்தி இக்கொடி எங்கள் குலக் கொடி என்று ஒவ்வொரு கிராம பட்டி, தொட்டிகளில் எல்லாம் பறக்க விட்டு வருகின்றார்களே, தமிழன் மானத்தையும், தமிழ்நாட்டின் மானத்தையும் காப்பாற்றி தமிழ்க் கொடி ஓங்கிப் பறக்குது பார்? என்று பாடுபட்டு வருகிறார்களே, அதற்காகவது நாம் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும். இதை விடுத்து அக்கொடி அவர்களுக்கு எப்படி சொந்தம்? அவர்கள் என்ன தமிழ் மன்னர்களின் மரபினரா? என்றெல்லாம் பேசுவது வீண் விதண்டா வாதமே ஆகும் என்று பேசியும் இருக்கின்றனர்.

 

நிற்க இன்று தமிழரசு கழகம் என்று ஒரு கழகம் இந்த நாட்டில் நடைபெற்று வருவதை அன்பர்கள் அறிந்ததே. இந்த கழகத்திற்கு தலைவர் திரு. மா. கிராமணியாகும். இவர்களுக்கு வில், புலி, மீன் சின்னம் பொறித்த தமிழ் கொடிதான் கட்சிக் கொடி. இவர்கள் நம்மிடம் இது விஷயமாக வாதம் நடத்தியும் இருக்கிறார்கள். நாம் நம்முடைய நிலையை விளக்கியும் கூறி இருக்கிறோம். பொதுவாக நாம் வில், புலி, மீன் சின்னத்தை  நமது குலக் கொடியில் அமைத்திருப்பதை இவர்களும் முதலில் ஏற்க மறுத்த போதிலும் இப்போது ஏற்கத் தான் செய்கிறார்கள்.

 

தமிழரசு கழகத் தலைவர்

என்ன கூறுகிறார்

 

குறிப்பாக 20-08-55 தேதியில் சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற வடக்கெல்லை போராட்ட ஆதரவு கூட்டத்தில் திரு. மா.பொ. சிவஞானம் அவர்கள் தலைமை தாங்கி நமது குல பிரமுகரான திரு. கே வினாயகம் எம்.எல்.ஏ. அவர்களைக் குறித்து பேசும் போது ஆண்ட பரம்பரையில் வந்தவர் வினாயகம் என்று குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.

 

கல்கிஆசிரியர் என்ன எழுதினார்?

 

முதலில் இதை ஏற்க மறுத்த இவர்கள் இப்போது உண்மையை உணர்ந்தோ அல்லது நமது பலத்தை அறிந்தோ இன்று நம்மை மேல்கண்டவாறு புகழ்ந்து காலஞ் சென்ற கல்கி ஆசிரியர் திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூட, திரு. மாணிக்க வேலு பதவி ஏற்ற போது ஆதரித்து வன்னியர்களைப் பற்றி தனது பத்திரிகையில் எழுதும் போது, வன்னியர்கள் ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆண்டவர்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

 

இவ்வளவையும் நாம் எதற்காக விளக்குகிறோம் என்றால் வன்னிய சமூகத்தை தவிர்த்த மற்ற தமிழர்கள் நம் சமூகத்தின் மீது எவ்வளவு தூரம் கண்காணிப்பு வைத்து இருக்கிறார்கள் என்பதை குறிப்பிடவே மேலே கண்டுள்ள விஷயங்களை நாம் விளக்கி கூறுகிறோம்.

அன்று காவி நிறம்!

சின்னம் அக்னி குண்டம்!

 

சுமார்  10 ஆண்டுகளுக்கு முன்பாக நம்முடைய குலக்கொடியை அக்னி குண்டம் பொறித்த சின்னத்தல் தான் அமைத்து, அதையே நமது சங்கத்தினர் (சுமார் 60 வருடமாக) பெரிதும் உபயோகித்து வந்தனர். நமது குலப் பெரியார் சு. அர்த்த நாரீச வர்மா அவர்கள் தான். நாம் தமிழ் மன்னர்களின் பரம்பரை ஆனதால், அம்மன்னர்களின் சின்னம், நமது கொடியில் இருக்க வேண்டும் என்று கோரினார். இதை ஆமோதித்தே 1946-ல் சென்னை மவுண்ட் ரோட் அடுத்த நரசிங்கபுரம் தெருவில் உள்ள பிரபல சித்திரக் கலைஞர் திரு. நாகப்பா அவர்கள் இல்லத்தில் கூடிய சென்னை மாகாண வன்னி குல க்ஷத்திரிய அரசியல் சங்கத்தின் காரியக் கமிட்டியினர் தான். தமிழ் மன்னர்களின் சின்னமான வில், புலி, மீன் ஆகியவைகளை நம் குலக்கொடியில் அமைக்கலாம் என தீர்மானித்தனர்.

 

இன்று, பச்சைநிறம்!

சின்னம், வில், புலி, மீன்!

 

இதை ஒட்டித்தான் இன்று தமிழ் நாட்டில் நடக்கும் எல்லா விதமான வன்னியர் மகாநாடுகள் சங்கத் திறப்பு விழாக்கள் திருமணங்கள் ஆகிய அனைத்திலும் இன்று நம் குலக்கொடி பச்சை நிறத்தில் வில், புலி, மீன் சின்னத்துடன் ஓங்கி பறக்கின்றன.

 

  • ••

 

கொடியில் உள்ள வெள்ளை நிறம்

எதைக் காட்டுகிறது?

 

மற்றும் வன்னியர் குலக் கொடியில் வெள்ளை நிறம் இருப்பதை அன்பர்கள் காணலாம். அந்த வெள்ளை நிறமானது எதைக் குறிக்கின்றது என்பதை ஆராய்வோம்.

 

வெள்ளை நிறத்தை வெண்மை என்பார் பெரியவர் பலர் தூய்மை என்பர். இதை அனுசரித்தே பல அறிஞர்களும், பல மகான்களும் தங்களது சின்னத்தையும், அடையாளத்தையும் குறிப்பதற்கு இந்த வெண்மையான வெள்ளை நிறத்தைத் தான் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுத்தும் இருக்கின்றனர். உதாரணமாக:-

 

 

அருட்பெருஞ்சோதி, வள்ளலாரின்

கொள்கை யாது?

 

அருட்பெரும் சோதி தனிப்பெருங் கருணையான இராமலிங்க அடிகள் கூட, தன்னுடைய கொள்கையை விளக்கும் கொடியை, தூய வெள்ளை நிறத்தில் தான் அமைத்தார்.

 

முகமது நபியின் நோக்கம் என்ன

 

மெக்காவில் பிறந்து மெதினாவில் வாழ்ந்து அரேபிய நாடு பூராவும் ஏன்? இந்தியா, இந்தோனேஷியா, மலாயா, பர்மா போன்ற தூர கிழக்கு நாடுகளில் எல்லாம் தனது மதத்தை பரப்பிய முகமது நபிகள் நாயகம் கூட தனது மதக் கொடியை வெள்ளை நிறத்தில் தான் அமைத்துக் கொடுத்தார்.

 

 

புத்தர் பிரான் கருத்தென்ன

 

இன்று அகில உலகம் எங்கும் சரிபாதி மக்கள் வழிபடும் புத்தமதக் கொள்கையும், அதனுடைய கொடியும், முதல்முதலில் கௌதம புத்தரான சித்தார்த்தனரால் வெண்மை நிறத்தில் தான் அமைக்கப்பட்டன.

 

ஏசுநாதரின் கொள்கை என்ன

 

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு. உதைத்த காலுக்கு முத்தம் கொடு. என்ற அருமையான பொன் மொழிகளை உலகத்திற்கு ஈந்து மக்கள் வாழ, மக்களுக்காக சிலுவையில் அறையப்பட்ட ஏசு கிருஸ்துவும் தமது கூட்டத்தினரின் கொடியை வெள்ளை நிறத்தில் தான் அமைத்து தொண்டாற்றினார்.

 

இன்று சமாதானம் கோருபவர்களின் சின்னம் என்ன

 

இவை அனைத்தும் உலகத்தை திருத்திய உத்தமர்களின் சரித்திரத்தை படித்தால் நன்கு காணலாம். இது போலவே தமிழ் வேந்தர்களும் அல்லது பிற வேந்தர்களும், ஒருவருக்குள் ஒருவர் போர் மூண்டு, அலுத்து, சலித்து சமாதானம் காண விரும்பும் போது வெள்ளை நிறத்தைத் தான் அன்றும், இன்றும் உபயோகப் படுத்தி உள்ளனர். இதை அனுசரித்தே இன்று உலகத்தில் போர் மூளக் கூடாது. மூண்டால் மக்கள் அவதிப் படுவர். ஆகவே சமாதானம் வேண்டும். சச்சரவு வேண்டாம் என்று உலக சமாதானத்தை விரும்பும் நாடுகளும், மக்களும் வெள்ளை நிறத்தில் தான் கொடியை அமைத்து அதில் வெண் புறாவை சின்னமாக தீட்டியுள்ளனர்.

 

மகாத்மா காந்தி எந்த நிறத்தை

தேர்ந்தெடுத்தார்

 

மற்றும், உலகத்தில் ஓர் ஜோதியாக தோன்றி உற்றாரை மறந்து சுற்றத்தாரை துறந்து தான் பிறந்த நாட்டிற்கும், நம் நாட்டு மக்களுக்கும் சுமார் அரை நூற்றாண்டு காலம் இடைவிடாது உழைத்து, இந்நாட்டிற்கு விடுதலை வாங்கி கொடுத்துச் சென்ற உத்தமர் காந்திஜி அமைத்ததோடு நிற்காமல், தன்னை பின்பற்றும் சீடர்களை தூய வெண்மை நிறம் கொண்ட கதராடையில் தான் காட்சி அளிக்க வேண்டுமென்று கூறிச் சென்றார் என்றால், வெள்ளை நிறம் எவ்வளவு முக்கியத்துவம் கொண்டது என்பதை நாம் மேலும் விளக்கத் தேவையில்லை.

 

வன்னியர்கள் அப்பாவிகள்!

உள்ளம் தூய்மையானவர்கள்!

வெள்ளை மனது படைத்தவர்கள்!

 

மேலும் வெள்ளை நிறத்தை தூய்மை என்று நாம் சொல்வதினால் வன்னிய மக்கள் உண்மையிலேயே தூய உள்ளம் படைத்தவர்கள் என்றே சொல்லலாம். அம்மக்களுக்கு நிச்சயமாக கபடு சூதே தெரியாது. யாரையும் எளிதில் நம்பி விடுவார்கள். வெளுத்ததெல்லாம் பால், கருத்ததெல்லாம் தண்ணீர் என்பதே அவர்கள் கொண்ட எண்ணமாகும். இப்போக்கை கிராமங்களில் இன்றும் பார்க்கலாம். இம்மக்களுக்கு எடுத்ததற்கெல்லாம் மூக்கின் மேல் கோபம் வந்து, சண்டை போடுவார்களே தவிர, இதனால் யாரையும் கெடுக்க மாட்டார்கள். எந்த நபரையும் நசுக்கி அவர்களை அழித்து விடமாட்டார்கள்.

 

இவர்கள் பிறருக்கு இடம் கொடுத்து  உபசரித்து உணவளித்து ஆதரிப்பார்களே தவிர, இவர்கள் ஒருவரையும் கெடுக்கவே மாட்டார்கள். ஆனால் இவர்கள் தான் பிறரை நம்பி கெட்டுப் போவார்கள்.

 

வன்னியர்கள் இப்படிப்பட்ட உண்மை மனப்போக்கைக் கொண்டு எல்லோரையும் எப்போதுமே நம்பி மோசம் போவதினால் தான் இவர்களுடைய உள்ளம் கள்ளமற்றது. கபடமற்றது. மாசு மருவற்றது என்றும் இன்னும் சொல்லப் போனால் தூய்மையான வெள்ளை மனது படைத்தவர்கள் என்ற முடிவிற்கு நாம் வந்து தான், இவர்களது பரிசுத்த உள்ளத்தை எடுத்துக் காட்டவே, இவர்களுடைய குலக்கொடியில் அதே வெள்ளை நிறத்தை அமைத்துள்ளோம். அதாவது:- இவர்களது எண்ணமும் தூய்மை. உள்ளமும் தூய்மை. இருதயமும் தூய்மை. அதோடு கூட இவர்களது குலக்கொடியும் தூய்மையானது. இதைக் குறிக்கவே வன்னியர் குலக்கொடியில் வெள்ளை நிறம் தீட்டப்பட்டுள்ளது.

 

 

  • ••• •

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu