வன்னியர்
அல்லது
தமிழ்நாட்டு க்ஷத்ரியர்
ஓர் ஆராய்ச்சித் தமிழ் நூல்
ஆசிரியர்
ராஜரிஷி, சு. அர்த்த நாரீச வர்மா,
‘க்ஷத்ரியன்’ பத்திராதிபர்
பிரசுரிப்போர்,
பொ.குப்புசாமி கண்டர்
திருவருணை தாலுக்கா
அக்நிகுல க்ஷத்ரிய சங்க ஸ்தாபகர்,
வன்னிகுல க்ஷத்ரியர் வீதி,
திருவண்ணாமலை.
சர்வதாரி ஆண்டு கார்த்திகைத் திங்கள்.
முன்னுரை
ஜாதி மதங்களைப் போற்றாத இக்காலத்தில் ஓர் ஜாதியைக் குறித்து நூல் எழுதுவதை பலரும் விரும்பார்கள். கற்று முற்போக்கடைந்த மரபார்கட்கும் அரசியலில் தலையிட்ட அறிஞர்கட்கும் அஃது வேண்டற்பாலதன்று தான். ஆனால் கல்வியின்றி பிற்போக்கிலுள்ள மரபார்கட்கு ஜாதி மதம் முதலியவைகளைப் பற்றிய நூல்களும் சரிதங்களும் பத்திரிகைகளும் அவசியமே.
இச்சிறு நூலில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சளுக்கிய மரபார்களது சந்ததியார்களாய் தமிழகத்தில் அரை கோடி மதிப்புள்ள பெரு பிரிவினர்களாய் வன்னியர் என்னும் பொதுப் பெயருடன் வாழும் தமிழ்நாட்டு க்ஷத்ரிய மரபார்களின் வரலாற்றைப் பற்றியே சுருதி, யுக்தி, அனுபவப் பிரமாணங்களைக் கொண்டு வினா விடை ரூபமாய் எழுதப்பட்டிருக்கின்றது. இதை வாசிப்பவர்கள் ‘ஜாதி சங்கிரகசாரம்’. ‘வருண தருப்பணம்’, ‘வன்னி வம்சப்பிரகாசிகை’ முதலிய நூல்களை படிப்பதால் உண்டாகும் பயனை அடைவார்கள் என்பது திண்ணம். ஆதலால் வன்னியர்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இதுவாகும்.
திருவண்ணாமலை வன்னிகுல க்ஷத்ரியர் வீதி பொ. குப்புச்சாமி கண்டர் அவர்களிடம் பெற்றுக் கொள்ளலாம்.
ராஜரிஷி சு. அர்த்தநாரீச வர்மா.
‘க்ஷத்ரியன்’ பத்திராதிபர்
திருவருணை,
07.12.48
- ••
வன்னியர்
அல்லது
தமிழ்நாட்டு க்ஷத்ரியர்
காப்பு
தென்னந் தமிழகத்தை செங்கோல் செலுத்தியின்று
வன்னிய ரானார் வரலாறு – தன்னையே
செந்தமிழிற் கத்தியமாய்ச் செப்ப விழைகுவாம்
தந்திமுக வேழச் சரண்.
அத்தியாயம் 1
அவதாரிகை : – இவ்வத்தியாயத்தில் தமிழகத்துத வன்னியரென வழக்கப்படுவோர் பொதுவாய்த் தமிழ் நாட்டு க்ஷத்ரிய ரென்றும் சிறப்பாய் சேர, சோழ, பாண்டியர்களின் சந்ததிகளென்றும் சொல்லப்படுகிறது.
வினா : – காப்புக்கவியின் கருத்தென்ன?
விடை : – முடிவேந்தர்களாய் முன்னாளில் செந்தமிழக முழுவதும் செங்கோல் செலுத்தி யாண்டவர்களும் தற்போது வன்னியரென்னும் குழூஊப் பெயருடன் வாழ்பவருமாகிய ஓர் மரபான் சரிதமுரைக்க கடவுளை போற்றிய வாறாகும்.
வினா : – வன்னியர் யென்பதின் பொருளென்ன?
விடை : – இங்கு முற்றரசு நீங்கி சிற்றரசராய் வாழ்பவர் என்பதாகும். அச்சொல்லுக்கே வேறு இடங்களில் வேறு பொருளும் உண்டு.
வினா : – முற்றரசு சிற்றரசு என்பதில் அவர்களின் பதவிகளே விளக்கப்படுகின்றன. மரபு விளக்கப்படவில்லையே!
விடை : – தலைப்பில் சொல்லியபடி அவர்கள் தமிழ்நாட்டு க்ஷத்ரியராவர்.
வினா : – தமிழ்நாடு என்றதால் வேறு நாட்டு க்ஷத்ரியர்களும் உண்டோ?
விடை : – ஒவ்வொரு நாட்டிலும் நான்கு வருணங்கள் உண்டு. அதனால் அந்தந்த நாட்டு க்ஷத்ரியர்களும் உண்டு.
வினா : – நான்கு வருணங்கள் எவை?
விடை : – தமிழ்நாட்டில் அந்தனர், அரசர், வணிகர், வேளாளர் என்பவைகளாகும். இச்சொற்களே பிரம்ம, க்ஷத்ரிய, வைசிய, சூத்திரரென வடமொழியில் வழங்கப்படும்
வினா : – மேற்சொன்னவைகளில் சத்ரியா பதம் காணப்படவில்லையே!
விடை : – க்ஷத்ரிய பதம் வடமொழி. அதற்கு நேர் தமிழ்ப்பதம் அரசர் என்பதாம்.
வினா : – அந்த சாதி தமிழகத்தில் எதுயென விளக்க வேண்டும்?
விடை : – வன்னியரென வழங்கப்படுபவரே அச்சாதியாராகும்.
வினா : – வன்னியர் வேறு, க்ஷத்ரியர் வேறு என்று சொல்லப்படுகிறதே?
விடை : – சொல்பவர்கள் சரித்திரம் தெரியாதவர்கள்.
வினா : – வன்னியரே சத்ரியாயென்பதற்கு ஆதாரமுண்டா?
விடை : – விசேஷமாய் உண்டு.
வினா : – என்ன ஆதாரங் காட்டுகிறீர்?
விடை : – ஆதாரங்கள் மூன்று வகையையும் அனுபவத்துடன் காட்டுவோம்.
வினா : – அம்மூன்று வகை யாவை?
விடை : – காட்சி, அனுமானம், ஆகமம்யென்பவைகளாம். இவைகளை வட நூலார் சுருதி, யுக்தி, அனுபவமென்பர்.
வினா : – சுருதிப்பிரமாணம், அதாவது நூல் அளவைகள்யெவை?
விடை : – அவை கணக்கற்றவை, செந்தமிழ் நாட்டுச் சங்க இலக்கியங்களாகிய ஐம்பெருங்காப்பியங்கள், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதிணெண் கீழ்க்கணக்கு முதலிய சங்கமருவிய நூல்களும், வேறு பல காவியங்களும் கல்வெட்டுக்களும் மலிந்துள்ளன.
வினா : – மேற்படி அளவைகளில் வன்னியரென்னுஞ் சொல் காணப்படவில்லையே?
விடை : – உண்மைதான். ஆனால் முடியரசர் சிற்றரசர் முதலிய பேர்களெங்கும் உண்டு.
வினா : – முடியரசரே வன்னியரெனயெப்படி நம்புவது?
விடை : – சிற்றரசர்யென்னுஞ் சொல்லிற்கு இழுக்கு யாதுமில்லை. ஆனால் முடியரசரே பதவி துறந்து சிற்றரசராகக் கூடும். முடியரசன் சிற்றரசனானாலும் சாதி மாறாது. பதவியில் தான் மாற்றம்.
வினா : – சேர, சோழ, பாண்டியர்களல்லவா தமிழகத்து முடியரசர்கள்?
விடை : – ஆம். அதிலணுவளவும் ஐயமில்லை.
வினா : – அவர்கட்கும் உங்கட்கும் என்ன சம்பந்தம்?
விடை : – அப்புண்ணிய வேந்தர்களின் சந்ததியார்களே நாங்கள்.
வினா : – தாங்களே அச்சந்ததியார்களென சாணார் முதலிய பல சாதியார்கள் சொல்லுகின்றார்களே! அதனால் உங்கள் கொள்கை மிகைப்படக் கூறலென்னும் இலக்கணக் குற்றத்தை ஏற்காதா?
விடை : – கேள்வி முறையில்லாத இக்காலத்தில் யாரும்யெதையுஞ் சொல்லலாம். தாங்களே விண்ணுலகினின்று இறங்கியவர்களென்றும் பேசலாம். ஆதாரம் வேண்டாமா?
வினா : – ஆதாரமற்ற அளவுக்கு அவர்கள் யெப்படி சபையில் முன்னேறுவார்கள். ஏதாவது அவர்களுக்கும் இருக்கும்!
விடை : – ஆதாரங்கள் காட்டினால் ஒப்புக் கொள்ள வேண்டியதே. ஆனால் தங்களை சேர, சோழ, பாண்டிய மரபாரெனச் சொல்லிக் கொள்வோர்கள் இதுவரை நம்பத் தகுந்த ஆதார மெதையுங் காட்டவில்லை.
வினா : – உங்களுக்கு நம்பத்தகுந்த ஆதாரங்களுண்டா?
விடை : – முந்தியே சொல்லி விட்டோம். ஏராளமாயுண்டு.
வினா : – இவ்விஷயம் உங்கள் மரபார்க்கும் மற்ற மரபார்களுக்கும் வழக்கு நேர்ந்து தீர்ப்புகள் சொல்லப்பட்டுள்ளதா? சர்க்கார் தீர்ப்பில்லாமல் போனாலும் வாத சபைகளிற் உங்கள் வாதம் வெற்றி பெற்றுள்ளதா?
விடை : – வேண்டிய மட்டுமுண்டு. அவைகளை விரிக்கிற் பெருகும்.
வினா : – இந்நூல் எழுதப் புகுந்ததற்கு முதற்சொன்ன மூன்று அளவைகளையும் உலகம் நம்பும்படி சுருக்கமாய்ச் சொல்வீர்களா?
விடை : – சந்தோஷமாய்ச் சொல்லுவோம்.
வினா : – முதலில் சுருதிப் பிரமாணங்களில் இரண்டொன்று சொல்லுங்கள்?
விடை : – திவாகரம், நிகண்டு முதலிய நூல்களிலும் மற்றும் பல தமிழிலக்கியங்களிலும் அம்மூவேந்தர்களே முடிவேந்தரென சொல்லப்பட்டிருப்பது போதாதா? பழைய இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் இத்தமிழ்நாடு அம்மூவேந்தர்கட்கே சொந்த மென்னும் பொருளில் ‘வண்புகழ் மூவர் தண் பொழில் வரைப்பு’ என்னும் ஆதாரம் ஒன்றே யெங்கள் வாதத்திற்கு போதிய சான்றாகும்.
வினா : – சரி. யுக்திப் பிரமாணம் எவை?
விடை : – எங்கள் மரபில் வழங்கும் பட்டப்பெயர்களே நாங்கள் அரசர் குலம் யென்பதற்கு போதியவை.
வினா : – கடைசியாக அனுபவ பிரமாணத்தைச் சொல்லுங்கள்!
விடை : – அந்தப் பிரமாணமும் யெங்கட்கு அதிகமுண்டு. எங்கள் குலத்தார்க்கு ஆதி முதல் இதுவரை சிதம்பரத்தில் செய்யப்படும் பட்டாபிஷேகமே காட்சியளவைகளில் முந்தியது. இதைத் தவிர எங்கள் குலத்தார்க்கு ஆங்காங்கு ஆலயங்களில் செய்யப்படும் மரியாதைகளும் உற்சவங்களும் இன்னும் பலவும் அனுபவ ஆதாரங்களாகும்.
வினா : – இம்மூன்று ஆதாரங்கள் மற்ற மரபாருக்கில்லையோ?
விடை : – இருப்பதாய் காணோம். மேலும் சாதி வரிசைகளில் அம்மரபார்களின் பெயர்கள் வேறிடங்களிற் காணப்படுகின்றன. அதனாலும் அவர்களை அரசமரபாரென ஒத்துக் கொள்வதற்கில்லை.
வினா : – வேறிடங்களென்பதை விளக்குக.
விடை : – கொஞ்சம் விரிவாய்ச் சொன்னால் தான் விளங்கும். பிரதான சாதிகள் நான்கு. அவைகளிற் கலப்புடைய அநுலோம சாதிகள் நாற்பது. பிரதி லோம சாதிகள் ஆறு. அந்தராள சங்கர சாதிகள் பதினாலு. இவைகளில் தங்களை அரச வகுப்பென்று சொல்லிக் கொள்பவர்ள் பெயர்கள் பிரதான நான்கு சாதிகளிலில்லாமல் அவை கலந்த கலப்பு சாதிகளில் காணப்படுவதொன்றே அவர்கள் அரசர் குலமல்ல யென்பதற்குப் போதிய சான்றாகும்.
வினா : – இப்படி சொல்லி விட்டதால் நீங்கள் தான் அரசர் குல மல்லது க்ஷத்ரியகுல மென்பதை யெப்படி யேற்றுக் கொள்வது. இதற்கு விரிவான விசாரணை வேண்டாமா?
விடை : – வேண்டுந்தான். அதனை அடுத்த அத்தியாங்களில் விளக்குவோம்.
- ••
அத்தியாயம் 2
அவதாரிகை : – (இவ்வத்தியாயத்தில் முன் அத்தியாயத்திற் கூறியபடி வன்னியர்கள் தமிழரசு சந்ததியார்களென்பதற்கு நூல் ஆதாரங்கள் காட்டப்படுகின்றன)
வினா : – முன் அத்தியாத்திற் குறித்தபடி வன்னியர்கள் தமிழ் மன்னர் சந்ததியா ரென்பதற்கு போதிய சுருதிப் பிரமாணங்கள் யாவை?
விடை : – வரிசையாய்ச் சொல்வோம். 1. மகாபாரதம் துரௌபதை மாலையிட்டச் சருக்கத்தில் இவன் சல்லியன் என்று தொடங்கும் பாட்டின் இறுதி அடியில் ‘இவன் செந்தழலோன் மரபாகி ஈரேழுலகும் புகழ்சேரன்’ என்ற அடியில் பொருள் அக்நிகுல மென்பதைக் காட்டுகின்றது. 2. மகாபாரதம் ராசசூய யாகச் சருக்கத்தில் ‘பரிதியும் மதியும் வன்னியு முதலாம் பல்வகைச் குலத்து முற்பவித்த நரபதி குழாம்’ எனும் தர்மபுத்திரர் வாக்கினாலும் ’சூரன் குலத்தோர் குபேரன் குலத்தோர் சுடர் பாவகப்பேரன் குலத்தோர் முதலோரிருந்தார்கள் பெயர் பெற்ற பேர்’ – எனும் சிசுபாலன் வாக்கினாலும் தமிழரசர்களின் முக்குலம் விளக்கப்படுகிறது. இவைகளாலும் சேர மரபார் அக்நி குல மென்பதும் தமிழரசர்களில் ஒரு பிரிவாரென்பதும் விளங்கும்.
வினா : – மேற்காட்டிய உதாரணங்களால் வன்னியர்கள் சேரவரச சந்ததியார்களென்றும் அக்நி குலத்தவர்களென்றும் நிரூபிக்கப்பட்டது. ஆனால், சோழ, பாண்டிய மரபார்களும் இவர்களே யென்பது மிகைப்படக் கூறல் யென்னுங் குற்றத்தைச் சாராதா?
விடை : – தற்போது வன்னிய ரென்னும் பொதுப்பெயர் அக்நி குலத்தவ ரென்னும் அர்த்தத்தில் வழங்கப்படவில்லை. முடியரசு நீங்கி சிற்றரசாய் பதவியில் சிறுத்தவர்களென்னும் அர்த்தத்திலேயே வன்னியர் சொல் வழங்கப்படுகின்றது. உண்மையில் முக்குலத்தரசர் சந்ததியார் இவர்களே யாவர்.
வினா : – சேரர் குலத்தை மட்டும் அக்நி குலமென்று ஆதாரங் காட்டினீர். மற்ற சோழ, பாண்டியகளின் குலமென்ன?
விடை : – சோழர்கள் சூரிய குலமென்றும், பாண்டியர்கள் சந்திர குலமென்றும் சங்க நூல்கள் பேசுகின்றன.
வினா : – இரண்டொரு உதாரணங்கள் சொல்லும் பார்ப்போம்.
விடை : – ஐம்பெருங்காப்பியங்களி லொன்றாகிய சிலப்பதிகாரத்திலும், மணிமேகலையிலும் பல இடங்களில் சோழர்களை ‘செங்கதிர்ச் செல்வன் றிருக்குல’ மெனவும், பாண்டியர்களை ‘திங்கட் செல்வன்றிருக்குல’ மெனவும் விளக்கப்பட்டிருக்கிறது. சிலப்பதிகாரம் மங்கல வாழ்த்துக் காதையில் ‘ஞாயிறு போற்றுதும்’ யென்னும் பாடலிலும் ‘பூம்புகார் போற்றுதும்’ என்னும் பாட்டிலும் சோழச் சக்ரவாத்தியாகிய ‘திருமாவளவன்’ குலம் சொல்லப்பட்டிருக்கிறது. இவ்வாறே அந்நூலில் பாண்டியர்களது மதிக்குலமும் போற்றப்படுகின்றது.
வினா : – வேறு ஆதாரங்கள் புலவர்கள் வாக்கால் அவர்களின் குலங்களை நிரூபிக்க உளவா?
விடை : – பல உள, செயங்கொண்டார், ஒட்டக் கூத்தர், புகழேந்தி. பொய்யாமொழிப் புலவர், ஔவைப் பிராட்டியார் முதலியோர் கவிகளிலும் சோழ, பாண்டிய குலங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. பொய்யா மொழிப் புலவரது பாடலொன்றை கவனியுங்கள்.
‘குழற் காலரவிந்தங் கூம்பக் குமுதமுகைய விழ
நிழற்கான மதியமன்றோ நின்றிருக்குலம் நீயவ
அழற் காலவிர்சடை மீதேயிருந்தும் அவ்வந்தின்றன்வண்ணன்
கழற்கால் வணங்குதியோ வணங்கா முடிக்கை தவனே.’
மேற்படி கவியில் பாண்டியரது குலம் சந்திர குலமென அழகாய் வருணிக்கப்பட்டிருக்கின்றது. கலிங்கத்துபரணியில் அவதாரப் பிரிவில் ‘திங்களினிளங்குழவி செம்மலிவனென்றும் செய்ய பரிதிக் குழவியைய னிவனென்றும்’ என்னும் அடிகளினாலும் சூரிய, சந்திர குலங்கள் சொல்லப்படுகின்றன.
இச்சிறு நூல் மேலும் ஆதாரங்களைக் காட்ட இடந்தராததால் சேர, சோழ, பாண்டியர்கள் முக்குலத்தரசர்களென்பதற்குச் சுருக்கமாய் மேற்சொன்ன ஆதாரங்களே போதுமானவை.
வினா : – அம்முக்குலத்துச் சந்ததியார்கள் வன்னியர்களே யென்பதற்கு மேற்படி ஆதாரங்கள் போதுமானவை யாயில்லையே?
விடை : – பொதுவாய் வன்னியர்கள் தமிழ் நாட்டரச வகுப்பா ரென்பதற்கு மேற்படி ஆதாரங்கள் போதும். ஆனால் முக்குலமும் அவர்களுடைய தென்பதற்கு நீர் ஆக்ஷேபஞ் சொல்லக்கூடும். யாம் முன் கூறியபடி வன்னியச் சொல் குலப் பெயராயில்லாமல் பதவிப் பெயராய் ஏற்பட்டதே இதற்குக் காரணமாகும்.
வினா : – ஏன் குலப்பெயராய்க் கொள்ளக் கூடாது?
விடை : – சாதிகளை குறிக்கும் நூல்களின் அட்டவணையில் வன்னியச் சொல் காணப்படவில்லை. ஆதலால் அச்சொல் பதவிப் பெயரே யன்றி குலப்பெயராகாது.
வினா : – குலப்பெயராய்க் கொள்வதற்கு வன்னியர் சொல்லுக்கு ஏற்ற கருத்தில்லையா?
விடை : – இல்லை. அரசர் க்ஷத்ரிய ரெனும் சொற்களே குலத்தைச் சுட்டும் பெயர்கள். ஆதலால் தான் இந்நூலின் தலைப்பில் வன்னியர் அல்லது தமிழ்நாட்டு க்ஷத்ரியர் யெனக் குறிப்பிட்டோம்.
வினா : – இனி ஜாதியரங்கங்களில் நீங்கள் வன்னியர் சொல்லை விடுத்து அரசரென்னும் சொல்லையே உபயோகிக்கலாமே?
விடை : – அப்படியும் உபயோகித்து வருகின்றோம். சங்கங்களுக்கு பெயர் வைத்தும், நூல்கள் எழுதியும் வழக்கத்தில் கொண்டு வந்திருக்கின்றோம்.
வினா : – வன்னியச் சொல் ஏன் இப்படி ஜாதிப் பெயராய் வழங்கப்படலாயிற்று?
விடை : – சாஸ்திரமும், சரித்திரமுமறியா சிலரது பிரசாரமே இதற்குக் காரணம். அதனால் வழக்கில் வந்த இப்பெயரை மாற்றுவது சிரமமாயிருக்கிறது.
வினா : – வன்னியச் சொல் வேறு சில வகுப்பார்களின் ஜாதிப் பெயராய் வழங்குவதை நீர் அறிவீரா?
விடை : – வேட்டுவர், மறவர் முதலிய மரபார்களுக்கு அச்சொல் ஜாதிப் பெயராய் வழங்கப்படுகின்றது. அங்கு அச்சொல்லுக்கு கொடுந்தொழில் புரிவோரென்னும் அர்த்தமே விளங்கும். வன்னியர் பதத்திற்கு அவ்வித அர்த்தமும் உண்டு.
வினா : – வன்னியர் சொல்லின் பெருமையைக் காட்ட ஏதாவது ஆதாராங்களுண்டா?
விடை : – பாண்டிய நாட்டின் ஒரு பாகத்திற்கு வன்னி நாடு என்று பெயர். அந்நாட்டை ஆள்வோர்க்கு வன்னியரென்றே பெயர் வழங்கப்படுகின்றது. சேர நாட்டை ஆள்வோர் சேரர்களென்றும், சோழ நாட்டை யாள்வோர் சோழர்களென்றும், பாண்டிய நாட்டை யாள்வோர் பாண்டியர்களென்றும் நாட்டின் பெயரால் அரசர்கள் போற்றப்படுவது போல் வன்னி நாட்டை யாள்வோர் வன்னியரெனப் போற்றப்படுகின்றனர். அந்நாட்டில் அக்குலத்தி லுதித்த மாடு மேய்க்குஞ் சிறுவன் முதல் மரபையாளும் அரசன் வரை வன்னிய சாமிகளென்றே வழங்கப்படுகின்றனர். இதுவே வன்னிய சொல்லின் பெருமைக்கு உதாரணம்.
வினா : – இதுவரை நீங்கள் சொல்லி வந்த நியாயங்களால் வன்னியர் சொல் மூன்று விதங்களில் உபயோகப்படுவதை அறிந்தோம். அவைகளில் ஒன்று அக்நி குல மென்பதும், மற்றொன்று குறுநில மன்னரென்பதும், பின்னொன்று கொடுந் தொழிலாளர்களென்பதும், கடையொன்று அப்பெயருள்ள நாட்டையாள்வோர் ரென்பதும் ஏற்படுகின்றதல்லவா? இந்நான்கில் நீங்கள் எதைக் கொள்ளுகின்றீர்கள்? எதைத் தள்ளுகின்றீர்கள்?
விடை : – வடமொழியாகி வன்னி அல்லது அக்நி குலத்தவர்களென்பதை யெங்கள் குலத்தில் ஓர் பிரிவாக ஒப்புக் கொள்ளுகின்றோம். அது போல் வன்னி நாட்டு அரசர்களையும் எங்களில் ஓர் பிரிவாகவே ஏற்கின்றோம். முற்றரசு நீங்கி சிற்றரசர் யென்னும் தாத்பரியத்தில் குல முழுவதையும் ஒப்படைக்கிறோம். ஆனால் கொடுந் தொழிலாளர் யென்னும் தாத்பரியத்தில் எங்கள் குலத்தைக் கொள்ள மாட்டோம்.
வினா : – அதையும் ஒப்புக் கொள்வதால் நேரும் அபாய மென்ன? ஓர் சொல்லுக்குள்ள நான்கு பொருள்களில் மூன்றைக் கொண்டு ஒன்றைத் தள்ளுவானேன்?
விடை : – அத்தொழில் புரிவோர் வனத்தில் வசிக்கும் வேடர் முதலியவர்களாகும். அவர்களோ தமிழ்நாட்டு ஐந்திணைப் பகுதிகளில் புறத்திணைகளாகிய குறிஞ்சி, பாலைகளில் வசித்துக் கொலையில் ஜீவிப்பவர்கள். நாங்களோ அகத்திணையிலுள்ள பிரதான ஜாதிகள் நான்கில் இரண்டாவதாய் உலகத்தை ஆள்வதற்கென கடவுளால் படைக்கப்பட்டவர்கள். அதனால் அரசர் அல்லது க்ஷத்ரியர் எனும் குலப்பெயரே எங்களுக்குரியது.
வினா : – வன்னியர் சொல் பதவிப் பெயரென்பதற்கும் குலப்பெயரல்ல வென்பதற்கும் வேறு ஆதாரங்களுண்டா?
விடை : – பல உண்டு. கல்லாடம், – ‘நாற்படை வன்னிய ராக்கிய பெருமான்’ ஞானவாசிட்டம், ஐந்தவர்கதை – ‘சிந்தை செய்வார் நல்குரவு தீர உயர் வன்னியராவோம். அந்த நிலை சற்றாதலினால் அதிக நிலை மன்னவராவோம்.’
ராமாயணம் உத்தரகாண்டம் –
‘படி மன்னிவாழும் பல வன்னியர் மண்டலீகர், முடி மன்னரெனல்லாம் முறை முறை வந்தேவல் கேட்க’ மேற்படி கவிகளில் வன்னியர் சொல் பதவிகளையே குறிக்கின்றது. இதற்கு மேல் கம்ப நாட்டாழ்வார் கருணாகரத் தொண்டைமான் மீது பாடிய ‘செம்பொற்சிலை யெழுபது’ என்னும் நூல் முழுவதும் அரச வகுப்பாராய் குறுநிலமாளும் வன்னியர்களையே புகழ்ந்து எழுதுகின்றது. அந்நூலின் இறுதியில் மகாகவி கம்பர் கருணாகரத் தொண்டைமானால் பரிசு பெற்ற விதங்களைச் சொல்லும் கவி அடியில் வருமாறு: –
‘அவிக்காதரங்கூர் புலவர் மகிழ்ந்தருள் வன்னியரை
யாம்பாடச்
செவிக்காரமுதமெனக் கேட்டு சிந்தையுவந்து சீர்தூக்கிப்
புவிக்காயிரம் பொன்னிறைநீக்கிப் பொற்றண்டிகை
பூடணத்தோடு
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான் கருணாகரத் தொண்ட
வன்னியனே’
வினா: – சிலையெழுபது என்னும் நூல் சிலர் பிரமாணமல்லவெனச் சொல்லுகிறார்களே!
விடை : – ஏன்? தமிழ் பிரபந்தகளில் ஒன்றாக அது அகராதி முதலிய நூல்களில் கையாளப்பட்டு வருவதால் பிரமாணம் உடையதே.
வினா : – அதை கம்பர் பாடவில்லை யென்று சிலர் ஆட்சேபிக்கிறார்களே!
விடை : – கம்பர் காலமறியாதவர்கள் ஆட்சேபிக்கலாம். கம்பரது காலமும் கருணாகரத் தொண்டைமான் காலமும் இரண்டாங் குலோத்துங்கச் சோழன் காலமேயாகும்.
வினா : – சிலை யெழுபது கவிகட்கும் கம்பர் கவிகட்கும் வித்தியாசம் உண்டு யென்பதற்கு யென்ன பதில்?
விடை : – அதற்கு பதிலே வேண்டாம். ஒரே புலவர் எளிய உயர் நடையிலும் கவிகளியற்றலாம். உதாரணமாக பட்டினத்தடிகள் பாடிய பிரபந்தங்களைப் பார்க்கலாம். அவைகளில் எளிய நடைப்பாடல்களும் உயர் நடைப் பாடல்களும் இருப்பதை யாரும் மறுக்கார். ஒளவை முதலிய சங்கப்புலவர்களும் அவ்வாறே இருவித நடைகளில் கவிகள் இயற்றி இருக்கின்றனர்.
வினா : – சிலை யெழுபதில் முடியரசர் சிறப்புகளும் அவர்களது குடை, கொடி, சிம்மாசனம் முதலிய அங்கங்களும் இருக்கின்றனவே! சிற்றரசர்களுக்கு அவைகள் இல்லையே?
விடை : – அரசர் யென்ற ஜாதிக்குரிய சிறப்புகள் அதில் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனால் சிற்றரசர்களை புகழ்வதில் விரோதமாகாது. ஓர் குலத்தில் பிறந்தவன் அவன் முன்னோர்களுடைய சிறப்புகளையுடையவனெனப் பாடுதல் கவி மரபு.
இதுவரை ஆகமப் பிரமாணங்கள் காட்டப்பட்டன.
- ••
அத்தியாயம் 3
அவதாரிகை : – (இவ்வத்தியாத்தில் அனுமான (யுக்தி) பிரமாணங்களைக் கொண்டு வன்னியர்கள் அரச மரபாரென்பது விவரிக்கப்படுகின்றது.)
வினா : – சுருதிப் பிரமாணங் கேட்கப்பட்டது. இனி யுக்திப் பிரமாணங்களை தாங்கள் வரிசையாய் சொல்லலாம்.
விடை : – அவர்களுக்கு வழங்கும் பட்டப் பெயர்களும் அவர்கள் வாழும் மன்னவேடு முதலிய கிராமங்களும் மற்றுஞ் சிலவும் அவர்கள் அரசர் குல மென்பதற்குப் போதுமானவை.
வினா : – மன்னவேடு கிராமங்களென்றால் என்ன?
விடை : – அரசருடைய பந்துக்களும் மரபார்களும் வசிக்க பரிக்கப்பட்ட கிராமங்களாம். அக்கிராமங்களின் நிலத்திற்கு சர்க்கார் தீர்வை மிகக் குறைவு.
வினா : – அது ஏன்?
விடை : – அக்கிராமத்துக் குடிகளாகிய படையாட்சிகள் படையாளர்களாய் போரிலிறங்குவதும் உயிர் விடுவதும் அதனால் தேச சேவையும், ராஜ மதிப்பும் பெற்றவர்களாதலால் அவர்களுக்குத் தீர்வை குறைவு.
வினா : – மன்னவேடு கிராமங்கள் தற்போதுண்டா?
விடை : – ஏராளமாயுண்டு. அவைகளில் வன்னியர்களே வசிக்கின்றார்கள்.
வினா : – இப்படி வேறு ஜாதிகட்கும் சலுகை காட்டப்படுவதுண்டா?
விடை : – பார்ப்பார் வசிக்கும் கிராமங்கள் அகரம் எனப்பட்டு சலுகை காட்டப்பட்டிருக்கின்றன.
வினா : – பட்டப்பெயர்களை ஒவ்வொன்றாய்ச் சொல்லுங்கள்!
விடை : – பள்ளி – இப்பெயர் தற்போது ஜாதிப் பெயராய் தவறாய் வழங்கப்படுகின்றது.
வினா : – பள்ளி யென்னுஞ் சொல்லுக்குப் பொருளென்ன?
விடை : – பாலிப்பவன், அதாவது காவலன் என்பதே பொருள். காவலன் – தமிழ்மொழி அதற்கு நேர் வடமொழிப்பதம் க்ஷத்ரியன் என்பதாம். இவ்விருபதங்களும் உலகைக் காக்கும் அரசர்களையே குறிக்கும்.
வினா : – இதற்கு ஆதாரம் உண்டா?
விடை : – அதிகமாயில்லை. அடியிற்கண்டவைகளை மட்டும் சொல்லுவோம்.
மலைநாட்டிற் பள்ளியென மன்னவனை இன்றும்
தலையால் வணங்கியே சாற்றும் – நிலையதுதான்
பள்ளிவாள் வேட்டை படைவாசல் கேகமெனும்
வெள்ளை மொழியால் வெளி.
இதன்பொருள் மலையாள நாட்டில் அரசனை பள்ளியெனச் சொல்லுவர். பள்ளிவாள், பள்ளி வேட்டை, பள்ளிப்படை, பள்ளிவாசல், பள்ளிக் கிரகம் என்பவைகளிலுள்ள பள்ளிச் சொற்களுக்கு அரசன் யென்பதை பொருள். இவைகளைத் தவிர பள்ளியடக்கமுக்கு யென்னுஞ் சொல் அங்கு வழங்கி வருகிறது. அரசர்களில் இறந்தவர்களை அடக்கஞ் செய்யும் மயானத்திற்கு யேற்பட்ட சொல்லதுவாகும்.
மாணிக்க வாசகர் திருவாசகம் ‘அன்னைப் பத்திலுள்ள’ பள்ளிக்குப் பாயத்தார் என்னுஞ் சொற்களுக்கு அரச உடையென்பது பொருள். பட்டினத்தார் ஞானத்திலுள்ள ‘வேண்டுந் திர வியமும்’ என்னுங்கவியில் பள்ளியெலாம் ஆண்ட திரை நாடும் யெனக் குறிப்பிட்டிருக்கிறார். இது மிகவும் கவனிக்கத்தக்கது. காஞ்சீபுரத்திலுள்ள கோபுரம் பள்ளி கோபுர மெனப்படும். அது இன்று வரையும் வன்னியர் வசமே உள்ளது. ஆங்கில சரித்திரக்காரரான ஆப்பர்ட்துரை பள்ளிகளை பல்லவ அரசர்களென்று சொல்லியிருக்கிறார். இத்தகைய பிரமாணங்களைக் கொண்டு வன்னியர்களின் பட்டப்பெயராகிய பள்ளிச் சொல்லு அரசர் யென்னும் பொருளில் ஏற்பட்டதென்பதை நிரூபித்தாயிற்று.
வினா : – வேறு ஒன்றைச் சொல்லுக!
விடை : – படையாட்சிச் சொல். இதுவும் வன்னியர்களின் பட்டப்பெயரே. படை – அதாவது சேனைகளை, ஆட்சி – ஆள்பவன் என்பது திரண்ட பொருள். இச்சொல்லைச் சிலர் படைத்தலைவன் என உரை கூறி மாறுபடுகிறார்கள். படையை யாள்பவரென்பதால் படைகளுக்குச் சம்பளங் கொடுத்து காக்கும் சொந்தமுடைய அரசர்களே யாவர்; அவ்விதமே சம்பளம் வாங்கும் படைத்தலைவர்கள் சொந்தமாக மாட்டார்கள்.
வினா : – அடுத்தப் பட்டப்பெயர் எது?
விடை : – நாயகர் என்பதாம். இச்சொல் வட சொல். தலைவர்கள் என்பது பொருள். வன்னியர்கள் அரசர்களாதலால் இச்சொல் அவர்களுக்கு காஞ்சி, புதுவை, சென்னை முதலிய இடங்களில் பட்டப்பெயராய் வழங்குகிறது.
வினா : – இன்னும் எத்தனை பட்டப்பெயர்கள் உள்ளன.
விடை : – இச்சொற்றொடரை கவனியுங்கள்.
- ••
பட்டப்பெயர் மஞ்சரி
சோழர் படையாட்சி தொண்டைமான் காலக்க
தோழர் உடையார் துரைகள் நயினார்கள்
அஞ்சாத சிங்கத்தார் அண்ணலங்கார் தேவர்
தஞ்சைராயர் மழவர் சம்புராயர் சமுஷ்டியார்
ஞானியார் நாயகர் நாயனார் கௌண்டர்கள்
பொறையர்கள் பூபதிகள் புலிக்குத்தியார் கண்டர்
வாணதரையர் வணங்கா முடியார்கள்
ராஜாளி ராஜா ராவுத்த மிண்டனார்
நீலகங்கரையர் நிதிசேர் பண்டாரத்தார்
இரட்டைக் குடையார் ஏழாயிரம் பண்ணை
ஆண்டு கொண்ட தேவர் அழகேச மன்னரோடு
காளிங்க ராயர் கடந்தையார் வீரமிண்டர்
பல்லவ ராயர் பரமேஸ்வர வன்னியனார்
வில்லவர் சேதி ராயர் வீரமிண்டர்
முனையரையர் முதன்மையார் கச்சியராயர்.
பிறவும், இவை போன்ற பட்டங்கள் எண்ணிலடங்காதாம். இவைகளில் பொறையர், சோழனார், பாண்டியனார் என்றும் பட்டங்கள் நேராய் முக்குலத்தரசர்களின் சந்ததிகளையே குறிக்கும். மற்றவைகளோ சிற்றரசர் பட்டங்களாகும். தொண்டைமான் பட்டம் சோழர்களின் ஓர் பிரிவினரைக் குறிக்கும். மழவர் பட்டம் சேரர்களின் பிரிவாரைக் குறிக்கும். சம்புராயர் பட்டமோ பல்லவ அரசர்களின் ஓர் பிரிவைக் குறிக்கும். மற்றும் பல பட்டங்கள் யுத்தத்தில் சேவை செய்யும் வீரர்களைக் குறிப்பவை. முனையரையரென்பவர்கள் தூசிப் படையில் நிற்பவர்கள். நீலகங்கரையர் ஊதா சட்டையணிந்த ஓர் படைப்பிரிவினர். இவர்கள் மிகவும் கோபமுள்ளவர்களாய் தென்னாற்காடு ஜில்லாவில் வசிக்கின்றனர். காளிங்கராயர் யென்பது வண்டை நகராளர்கள். இப்படியே யெண்ணிறந்த பட்டங்கள் வன்னியர்கள் அரசமரபாரென்பதற்கு ஆதாரமாயுள்ளன. நயினார் பட்டம் நாயனாரென்னுஞ் சொல்லின் மரூஊ. இது நேரே அரசர்களைக் குறிக்குஞ்சொல். நாம் எழுதி வரும் ‘படையாட்சி பட்டப்பெயர் மஞ்சரி’ யெனும் புத்தகத்தில் இப்பட்டங்களின் பெருமைகளை விரிவாய்க் காணலாம்.
வினா : – இப்பட்டங்களிற் சில வேறுமரபார்களும் காணப்படுகின்றதேன்!
விடை : – அவைகள் அவர்கட்கு குலப்பட்டங்களல்ல. அரசர்களால் கொடுக்கப்பட்ட பட்டங்களாம். இவ்வித பட்டங்கள் படையில் வீரங்காட்டிய ஊழியர்கட்கும், கொடையில் பெருமைபட்ட தர்மவான்களுக்கும் அக்காலத்து அரசர்களால் கொடுக்கப்பட்டவை.
வினா : – இதற்கு ஆதாரமுண்டோ?
விடை : – பெரிய புராணம் பாடிய சேக்கிழாருக்கு அனபாயச் சோழன் ‘அனபாயச் சோழப் பல்லவன்’ யென்ற பட்டத்தைக் கொடுத்தார். இக்கால சர்க்கார்கள் ராவ்பகதூர், திவான் பகதூர் முதலிய பட்டங்களை கொடுப்பது போல் அக்காலத்து அரசர்களும் கொடுத்தார்களென்பதற்குச் சந்தேகமென்ன?
வினா : – தற்போது நீங்கள் வெகுகாலமாய் வழங்கி வந்த கவுண்டர் பெயருக்கு பதிலாய் கண்டர் என்னும் சொல்லை உபயோகிப்பது ஏன்?
விடை : – கண்டர் யென்னுஞ் சொல் சோழ குலத்தார்களின் பரியாய நாமங்களில் ஒன்று. அதையேன் நாங்கள் உபயோகிக்கக்கூடாது. கவுண்டர் யென்னுஞ்சொல் கிராமத் தலைவர்களெனப் பொருள்படும். பல மரபார்களுக்கும் அது பொதுப் பெயராயிருப்பதால் எங்கள் மரபை குறிப்பாய் சுட்டவே நாங்கள் கண்டர்யென அழைக்கப்படுகின்றோம்.
இதுவரை சொல்லி வந்த ஆதாரங்களால் வன்னியர்கள் அரசமரபா ரென்பதை யுக்தி வழியில் நிரூபிக்கப்பட்டது. இனி அனுபவ ஆதாரங்களை ஆராய்வோம்.
- ••
அத்தியாயம் 4
அவதாரிகை : – (இவ்வத்தியாயத்தில் வன்னியர்கட்கு பரம்பரையிலேற்பட்ட அரசர் குல பழக்க வழக்கங்கள் காட்டப்படுகின்றன.)
வினா : – இதுவரை வன்னியர்கள் தமிழரசச் சந்ததியார்களென்பதற்கு சுருதி, யுக்திப் பிரமாணங்கள் கேட்கப்பட்டன. அனுபவப் பிரமாணத்தையும் அறிய விரும்புகிறேன்.
விடை : – யாம் முந்தி தெரிவித்தபடி இம்மரபார்களுக்கு சிதம்பரத்தில் பட்டாபிஷேகப் பாத்தியம் இருப்பதொன்றே இவர்கள் அரசமரபாரென்பதற்கும் இவர்கள் முன்னோர்கள் முடிவேந்தர்களென்பதற்கும் போதிய ஆதாரமாகும். மற்றும் பல ஆதாரங்களுமுண்டு.
வினா : – பட்டாபிஷேகப் பாத்தியதையை விரிவாய் விளக்குக.
விடை : – சிதம்பரத்தை யடுத்து பிச்சவரம் யென வழங்கும் பித்தர் புரஜமீன் சந்ததியார்களே இப்பெருமைக்குடையவர்கள். அவர்கள் பரம்பரையார்களே ஆதிகால முதல் இந்நாள் வரை தமிழகத்தில் யாருக்குமில்லாத இந்த ஒப்பந்த பெருமையை ஏற்கின்றார்கள்.
வினா : – இப்பரம்பரையார் சரித்திரத்தை விரிவாய் விளக்குக.
விடை : – வடவேங்கடம், தென் குமரிக்கிடையிலுள்ள நம் செந்தமிழ் நாட்டின் குண புலமாகிய சோழ மண்டலத்தைத் தொன்று தொட்டு சக்ரவர்த்திகளாய் அரசு செய்த சோழ பரம்பரையில் வந்தவர்களே இவர்கள்.
வினா : – இப்பரம்பரை அரசர்களின் நாமங்களை தெரிந்த வரையிற் சொல்லுங்கள்.
விடை : – மனுச்சோழர், கோச் செங்கட்சோழர், சிபிச்சோழர் முசுகுந்தச் சோழர் முதலியோர் சரித்திர காலத்து முற்பட்டவர்கள். சரித்திர காலத்திற்குப் பின் திருமாவளவ னென்னும் சோழன் கரிகாற் பெருவளத்தான் இப்பட்டாபிஷேகப் பரம்பரையில் முதல்வனாகின்றான். அவனுக்குப்பின் ஆதித்தன், பராந்தகன், ராஜ ராஜன், ராஜேந்திரன், குலோத்துங்கன் முதலிய சக்ரவர்த்திகளின் பெயர்கள் தமிழ்ச் சங்க நூல்களில் காணப்படுகின்றன. கலிங்க மெறிந்த விக்கிரமச் சோழன், குலோத்துங்கன் புதல்வனாகும். அவனது குமாரன் இரண்டாம் குலோத்துங்கன். இவ்வரசனுக்குப் பின் தற்போது கடைசியாயுள்ளவர் ஆண்டியப்ப சூரப்பச் சோழனார். இவரது பெரிய தந்தை சாமிதுரை சூரப்பச் சோழனாருக்கு சிதம்பரத்தில் கீலக வருடத்தில் பட்டாபிஷேக வைபவம் நடைபெற்றது. குருவாரத்தன்று இப்புண்ணிய புருஷருக்கு நடராஜர் சந்நிதிக்கெதிரிலுள்ள பஞ்சாக்ஷரப் படியில் சங்காபிஷேகம், ஆயிரங்கால் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகிய அரியணையில் மகுடாபிஷேகமும், தில்லை வாழந்தணர்களால் நடைபெற்றது. இவ்வரி காட்சியை தில்லை மாநகரிலுள்ள யெல்லாமரபார்களும் கண்டுகளித்தனர். அந்தணர் முதல் பல மரபார்கள் இவருக்குக் கப்ப மரியாதை செலுத்தினர். எங்கள் தமிழ் நாட்டரசர் இவரேயெனப் போற்றினர். இவ்வரிய பட்டச்சூட்டு விழாவைப் பற்றி பத்திரிகைகளெல்லாம் பத்தி பத்தியாக யெழுதின. அதே பட்டாபிஷேகக் கோலத்துடன் இப்பிரபு திருவண்ணாமலையில் நடைபெற்ற வடாற்காடு ஜில்லா வன்னிகுல க்ஷத்ரிய சங்க வெள்ளி விழாவில் தலைமை வகித்தக் காட்சியும் பவனிக்காட்சியும் மிகவும் மாட்சியுடையதாயிருந்தன.
வினா : – ஆண்டியப்ப சூரப்பச் சோழனார் அவர்கட்கும் உங்கள் மரபுக்கும் என்ன சம்பந்தம்?
விடை: – அவர் எங்கள் உறவினர். எங்கள் குலத்திற் கொள்ளக் கொடுக்கும் வழக்கமுடையவர். வன்னி குலத் தலைவர் அட்டவணையில் முதன்மை பெற்றவர். இதிலும் சந்தேகமுண்டோ!
வினா : – சரி. இப்பட்டாபிஷேகப் பாத்தியம் வேறு யெவர்க்கு மில்லையா?
விடை : – எங்குமில்லை. யெவர்க்குமில்லை. தற்போது பண்டை முடியரசர் சந்ததியில் பல சிற்றரசர்கள் திருவாங்கூர் முதலிய இடங்களில் இன்று மிருக்கின்றனர். அவர்களில் எவருக்கும் இவ்வித பாத்தியமில்லை. சோழ வம்ஸத்தாருக்கே இவ்வித ஏக போக உரிமை. ஓர் காலத்தில் சோழ நாட்டை வென்ற கூற்றுவ நாயனார் தமக்கு முடிசூட்டவேண்டுமென்று வற்புறுத்த தில்லை வாழந்தணர்கள் மறுத்து விட்டதாய் பெரிய புராணம் பேசுகிறது. நமது ஆண்டியப்ப சூரப்பச் சோழனார் குலோத்துங்கனுடைய வழி வழி மரபினரென்பதை சிதம்பரம் தென்மாட வீதியிலுள்ள அவர்களது சொந்த மாளிகையாகிய குலோத்துங்கன் மாளிகை இன்றும் வேற்றவர் கையிலிருக்கிறது. தில்லை நகரில் நடைபெறும் தில்லை மாகாளி விழாவும் இன்று வரை இவர்களால் நடைபெற்று வருகின்றது. வருடந்தோறும் ஆனித்திங்களிலும் மார்கழித் திங்களிலும் அம்பலவாணருக்கு நடைபெறும் பிரம்மோற்சவத்தின் பத்து நாட்களிலும் கோயிலுனுட் பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருக்கும் குலோத்துங்கன் உருவத்திற்கு இம்மரபார்களால் ஆராதனை நடைபெற்று வருகிறது. இதைச் சோழ மண்டபக் கட்டளையெனச் சொல்லுகின்றனர். இவைகளெல்லாம் நாங்கள் சோழர் சந்ததியா ரென்பதற்கு காட்சிப் பிரமாணங்களாம்.
வினா : – வேறு ஏதாவதுண்டா?
விடை : – அநேக ஆலயங்களில் எங்களுக்கு ராஜ மரியாதைகளும், உற்சவங்களும் இன்னும் நடைபெறுகின்றன.
வினா : – சரி பாண்டியர் மரபிற்கும் உங்களுக்கும் உள்ள அனுபவ சம்பந்தத்தைச் சுருக்கமாய்ச் சொல்லுக.
விடை : – பாண்டிய மரபார்கள் தற்போது சிவகிரி ஏழாயிரம் பண்ணை அளகாபுரி முதலிய இடங்களில் அரண்மனையுடன் வசித்து வருகின்றனர். இவர்களுக்கும் எங்களுக்கும் நெருங்கி சம்பந்த முண்டு. இவர்கள் எங்களது சங்கக் கூட்டங்களிலும் தலைமை வகிக்கின்றனர். வன்னியராய ரெனவே வழங்கப்படுகின்றனர். இச்சிற்றரசர்கள் மற்ற மரபார்களால் வன்னிய சுவாமிகள் யெனப் போற்றப்படுகின்றனர். இவர்கள் வன்னி நாட்டின் அரசர்கள், அளகாபுரி அரசராகிய கட்டாரி பாண்டியர், சேலம், கொடுமுடி சங்கங்களில் தலைமை வகித்தார். ‘வரகுணராம அளகேந்திரதாலிக்கு வேலி கட்டாரி பாண்டிய இரட்டைக் குடையார்’ யென்பது இவரது பட்டப்பெயர். இவ்வம்சத்தார் ராமநாதபுரம் ஜில்லா அளகாபுரியில் இன்னும் வசிக்கின்றனர். சிவகிரி ஜமீன்தாரர்கள் வாண்டையாரென்னும் பட்டமுடையவர்கள். கடிகை முத்துப் புலவர் பாடிய திக் விஜயம் இங்கு குறிப்பிடத்தக்கது. இதைத் தவிர சிவகிரி காதலென்னும் ஓர் பிரபந்தமும் உண்டு. இவர்களது சமஸ்தானம் மிகவும் பெரியது. ஏழாயிரம் பண்ணை ஓர் சிறிய சமஸ்தானம். அது தற்போது எங்கள் மரபிற்குச் சொந்தமாயில்லை. சிதம்பர பாண்டிய ஆண்டு கொண்டாரென்பது அம்மரபாரின் பட்டப்பெயர். பூர்வத்தில் அவருக்கு திருநெல்வேலி ஜில்லாவில் 64 கிராமங்கள் சொந்தமாயிருந்தன. ஊமை துரையென வழங்கப்படும் பாஞ்சாலக்குறிச்சி ஜமீன்தாருக்கும் ஈஸ்ட் இந்தியா கம்பெனியாருக்கும் நடந்த கலகத்தில் ஆண்டு கொண்டார் சிறை பிடிக்கப்பட்டு தெலுங்கு நாட்டில் பந்தோபஸ்திலிருந்து பிறகு மீண்டு வந்தனர். அவர் சந்ததியார்களே தற்போதுள்ளவர்கள். இவர்களுக்கு தற்போது ராஜ்யமில்லை. கவர்ன்மெண்டார் கொடுத்த பென்ஷனும் நின்று விட்டது. இவர்கள் சிவகிரியின் சம்பந்திகள். எட்டியாபுரத்தின் உதவி பெற்று வாழ்கின்றார்கள். ஏழை எட்டுக்காக்கு மென்பது அங்கு வழங்கும் ஓர் பழமொழி.
பாண்டிய வம்சத்தில் பிறந்து நைடதம் முதலிய அரிய பெரிய தமிழ்க் காவியங்கள் பாடி தமிழன்னையின் தவப்புதல்வர்களாயிருந்த அதி வீர ராம பாண்டியர், குலசேகர பாண்டியர், வரகுண ராம பாண்டியர், வரதுங்கராம பாண்டியர்கள் சிவகிரி வம்ஸத்தின் தந்தையராவர். இன்னும் அங்குள்ள ஓர் கோயிலில் அதிவீரராம பாண்டிய ராஜர் திருஉருவம் உண்டு. அவருக்கு சிவகிரி வன்னியர்கள் இன்று வரையும் வருஷாப் தீகமாகிய சிரார்த்தம் செய்து வருகின்ற ரென்பது கண் கூடு. சிவகிரி சரிதம் விஸ்தாரமாயுள்ளது. அது ஓர் தனிப்புத்தகமாக பின்னால் வெளியிடப்படும்.
வினா : – சேரர்கட்கும் உங்களுக்கும் சம்பந்தமென்ன?
விடை : – தற்போது மலையாளத்தில் திருவாங்கூர், கொச்சி முதலிய சமஸ்தானங்களில் அரசு புரிவோர் சேர வம்சத்து அரசர்களாவர். தேசம், பாஷை வேற்றுமையால் எங்கட்கும் அவர்கட்கும் நெருங்கிய உறவில்லை. ஆனால் அவர்களில் ஓர் பிரிவார் தஞ்சை ஜில்லாவில் திருத்துறைப்பூண்டி தாலுக்காவில் பொறையர் யென்னும் பட்டப்பெயருடன் தற்போது ஏராளமாயிருக்கின்றனர். பொறையர் யென்னும் பட்டமோ சங்க காலத்து சேரக் சக்ரவர்த்திகளின் உயர்ந்த பட்டமாகும். அப்பட்டத்துடன் விளங்கும் பொறையர் கூட்டமும் வன்னிய ரென்னும் ஜாதிப் பெயருடனே அங்கு வசிப்பது வெளிப்படை. மேலும் சேர அரசர்கட்கே பள்ளி அரசர் யென்னும் பட்டமுண்டு. இன்னும் அவ்வம்ஸத்தில் மற்றொரு பிரிவாகிய மழவர்கள் அரியலூரில் இருக்கின்றனர். இவர்கள் தமிழரசர் சேனையில் குதிரைப்படை செலுத்தும் வாலிப வீர்ர்கள், அரியலூர் ஜமீன்தாரருக்கு ‘விஜய் ஒப்பிலா மானங்காத்த மழவராயர்’ என்பது பட்டம். இவர்கள் வம்ஸமும் சோழர்கள் வம்ஸமும் தற்போதும் உறவினர்களாயிருக்கிறார்கள்.
வினா : – இதுவரை சேர, சோழ, பாண்டிய வம்ஸத்தார்கள் வன்னிய வகுப்பைச் சேர்ந்தவர்களென்று விளக்கியாயிற்று. மற்றுமுள்ள வேறு ஜமீன்களைப் பற்றிய சரித்திரமிருந்தால் அவைகளையும் சொல்லும்.
விடை : – பரூர் ஜமீன்தாருக்கு வீரசேகர கச்சிராய ரென்னும் பட்டம் உண்டு. கடலங்குடி ஜமீன்தாரருக்கு வணங்காமுடியா ரென்னும் பட்டமுண்டு. ஊற்றங்காலி லுள்ளவர்களுக்கு பரமேஸ்வர வன்னியனா ரென்னும் பட்டமுண்டு. மாயவரத்தில் அஞ்சாத சிங்கத்தார் என்னும் பட்டத்துடன் ஓர் பிரிவாரிருக்கின்றனர். இவர்களும் பழைய சிற்றரசர் பரம்பரையே. கும்பகோணத்தில் வாணதரையர் பெயர் வாணாதுரை யென மருவி வழங்கப்படுகின்றது. அப்பெயரால் ஒரு ஹைஸ்கூலும், அந்நகரிலுண்டு. வாணதரையயென்னும் இப்பெயர் பிரஹலாதன், மகாபலி வம்சத்தில் வந்த வாணன் என்னும் அசுரனுடைய மரபின் பெயராகும். சாமி மலையில் வீரமிண்டர்கள் பெயர் கேட்கப்படுகின்றது. இவர்களெல்லாம் தற்போது ராஜ்யமில்லாத பழைய சிற்றரசர்களே யாவர். பல்லவர்கள், சளுக்கியவர்கள் என்பவர்களைப் பற்றி அடுத்த அத்தியாயத்தில் ஆராய்வோம்.
- ••
அத்தியாயம் 5
அவதாரிகை : – (ஐந்து வம்ஸத்தார்களடங்கிய வன்னிய சமூகத்தில் தமிழரசர்களின் பிரிவுகள் மூன்றையும் சொல்லியாய் விட்டது. இவ்வத்தியாயத்தில் வடபுல அரசர்களாகிய பல்லவர், சளுக்கியரென்னும் இவ்விரு மரபார்கட்கும் வன்னியருக்கும் என்ன சம்பந்த மென்பதைப் பற்றி விவரிக்கப்படும்.)
வினா : – முந்திய அத்தியாயங்களில் பல்லவர்கள் விஷயமாய் பிரஸ்தாபிக்கப்பட்டது. ஆப்பர்ட் துரை ‘பல்லவர்களே இக்கால பள்ளிகள்’ என சரித்திரம் எழுதியதாய்ச் சொன்னீர்கள். காஞ்சியிலுள்ள பல்லவ கோபுரத்திற்குப் பள்ளி கோபுரமென பேர் இருப்பதாயும் சொன்னீர்கள். இப்பல்லவர்கள் யார்? இவர்கள் தமிழர்களா அல்லது வேறு நாட்டார்களா? தமிழரசர்கட்கும் இவர்கட்கும் யென்ன சம்பந்தம் என்பதை தெரிந்து கொள்ள விருப்பம். தயவு செய்வீர்களாக.
விடை : – சரி. விஷயம் விசாரிக்கப்பட வேண்டியது தான்; இப்பல்லவர்கள் தமிழ் நாட்டவர்களல்ல, வடக்கேயிருந்து தெற்கே படையெடுத்து தமிழ் நாட்டரசர்களை வென்று இரண்டாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை நம் செந்தமிழகத்தை ஆட்சி செய்தவர்கள்.
வினா : – வடக்கே எங்கேயிருந்து வந்தார்களென்பது தெரிய வேண்டும்.
விடை : – ஆரியர்களாகிய இவர்கள் தற்போது ஆப்கானிஸ்தானமென வழங்கும் காந்தார தேசத்தினின்றும் வந்ததாக சிலர் சரித்திரம் எழுதுகிறார்கள். வேறு சிலர் கெங்கை பாயும் பண்ணாட்டிலிருந்து வந்ததாகச் சொல்லுகின்றனர். எப்படியும் இவர்கள் வடநாட்டவரேயன்றி தமிழர்களல்ல. இப்பல்லவர்கள் சரித்திரத்தை நன்கு ஆராய்ந்து புதுச்சேரியிலிருந்த டூப்ரேதுரையவர்கள் பிரஞ்சு லிபியில் விவரமாக எழுதியிருப்பதை மதுரை செந்தமிழ் பத்திரிகை மொழி பெயர்த்துள்ளது.
வினா : – இவ்வம்ஸத்திற்கு மூலபுருடர் யார்?
விடை : – பாரத்வாஜர், துரோணர், அஸ்வத்தாமர் இவர்கள் மூல புருஷர்கள்.
வினா : – அந்தணர்களாகிய இவர்களால் ஓர் க்ஷத்ரியமரபு எப்படி உற்பத்தி யாயிற்று?
விடை : – அஸ்வத்தாமா என்னும் பாரத வீரன் பாரத யுத்தம் முடிந்த பின் ஓர் வனத்தில் தவஞ்செய்து கொண்டிருக்கையில் மதனிகை என்னும் ஒரு தேவகன்னிகை அவரைச் சேர்ந்து மயக்கி பெற்றப் பிள்ளையே பல்லவன். அவன் பெயராலேயே அம்மரபு வழங்கப்படுகின்றது.
வினா : – பல்லவன் எனும் பெயர் ஏற்படக் காரணமென்ன? அது இடுகுறிப் பெயரா? காரணப் பெயரா?
விடை : – இடுகுறிப் பெயரல்ல. காரணப் பெயர்தான். அப்பெயர் அவனது வம்ஸத்தாருக்கு காரண இடுகுறியாய் வழங்கப்படுகின்றது?
வினா : – அப்பெயருக்குக் காரணமென்ன?
விடை : – பிறந்த குழந்தையை அத்தேவகன்னிகை மரங்களின் இளந்தளிர்களின் மீது கிடத்திச் சென்றமையால் அப்பெயர் ஏற்பட்டது. பல்லவர் என்னும் வடமொழிப் பெயருக்கு பாரதக் கோயில்களில் போத்தராஜா யென்ற விக்ரஹம் இருப்பதைக் காணலாம். பிராம்மணனுக்குப் பிறந்த அப்பல்லவ புத்திரனை இங்கே கோயிற் பூசாரிகள் ஓர் அரக்கனைப் போல் கோர உருவத்துடன் சிலை செய்து பழிக்கு ஆளாய் விட்டார்கள். உலகை புரக்கும் எண்ணத்துடன் இப்புருஷன் உற்பத்தி செய்யப்பட்டமையால் இவனும் இவனது மரபும் க்ஷத்ரிய மரபாய்விட்டது.
வினா : – இச்சரிதத்திற்கு ஆதாரமுண்டா?
விடை : – காஞ்சீபுரத்தில் பரமேஸ்வர விண்ணகரமென்று வழங்கும் கைலாச நாதர் கோயிலிலுள்ள கல்வெட்டுகளில் வல்லவ பரம்பரை அழகான வடமொழி சுலோகங்களால் வரையப்பட்டிருக்கின்றது. அதுவே இவர்கள் வம்சாவளிக்கு முக்கிய ஆதாரம். மேலும் இவர்கள் தங்களை பாரத்வாஜ கோத்திரமென்று சொல்லிக் கொள்வதும் இவ்வரலாற்றுக்கேற்ற முக்கிய ஆதாரமாகும்.
வினா : – பல்லவர்கட்கும் வன்னியர்கட்கும் என்ன சம்பந்தம்?
விடை : – இவர்கள் தமிழ்நாட்டை வென்று காஞ்சீபுரத்தையும் மகாபலிபுரத்தையும் தலைநகராயும் கடற்றுறை பட்டினமாயும் செய்து கொண்டு ஆட்சி புரிகையில் தமிழரசர்களுடன் கொள்ளக் கொடுக்க சம்பந்தம் ஏற்பட்டு விட்டது. தற்போது வன்னிய சமூகத்தில் பல்லவராயர், சம்புராயர் என்னும் நாமங்களுடன் பல பேர்கள் கலந்திருக்கக் காண்கிறோம்.
வினா : – இப்பல்லவ அரசர்களில் சரித்திரக் கீர்த்திப் பெற்ற அரசர்கள் யார்?
விடை : – நந்திவர்மன், மஹேந்திர வர்மன் முதலானோர் மிகவும் கீர்த்தி வாய்ந்தவர்கள். பல்லவ அரசர்கள் காலத்தில் தமிழகத்தில் அநேக நீர் நிலைகளும் கற்குடை கோயில்களும் ஏற்பட்டு இன்றும் அவர்கள் புகழ் போல அழியாமலிருப்பதைக் காணலாம். மகாபலிபுரத்தில் ஒரே கருங்கல்லால் நிர்மாணிக்கப்பட்ட ஐந்து பாண்டவ ரதங்கள் அழகிய காட்சிக்குரியவை. இப்பல்லவ சிற்பங்களை உலகிலுள்ள பல நாட்டார்களும் யாத்திரையாய் வந்து கண்டு களித்து போகின்றனர். தற்போதுள்ள உடையார் பாளையம் ஜமீன்தார் இவ்வம்ஸத்தாராவர். இவர்களுக்கும் பிச்சவரம், அரியலூர் இவைகளிலுள்ள தமிழரச பரம்பரைக்கும் நெருங்கி சம்பந்தம் உண்டு. நேற்று பட்டாபிஷேகம் செய்து கொண்ட ஆண்டியப்ப சூரப்பச் சோழனார் அவர்களும் உடையார் பாளையம் மாப்பிள்ளையே!
வினா : – சரி! சம்புவராயர்கள் யார்?
விடை : – பல்லவ வம்ஸத்தின் ஓர் பிரிவினராவர். இச்சம்புவராய வம்ஸம் வடாற்காடு, செங்கற்பட்டு ஜில்லாக்களை சுமார் 200 வருட காலம் அரசாட்சி செய்த தென்பது சரித்திர பிரசித்தம்.
இவர்களது ராஜ்யத்திற்கு படைவீட்டு ராஜ்ய மென்று பெயர். ஆரணிக்கு சமீபத்தில் தற்போது அழிந்து கிடக்கும் படை வீடு நகரமே இவர்களது பிரதான நகர். இவர்களது குல தெய்வம் படை வீட்டம்மன் என வழங்கும் ரேணுகா தேவியாகும். அழிந்து போன அந்நகரிலுள்ள இத்தேவியின் ஆலயம் ஆடி வெள்ளிக்கிழமைகளில் ஆயிரக் கணக்கானவர்களால் போற்றப்படுகின்றது. அவ்வம்ஸத்தைச் சேர்ந்த ஓர் மகா நாட்டானும் அங்குண்டு.
வினா : – இவ்வம்ஸத்தில் சிற்றரசாகவோ, பாளையப் பட்டாகவோ யாராவது இருக்கின்றார்களா?
விடை : – கடைசி அரசனாகிய வீரசம்பு என்பவன் பட்டமிழந்து காஞ்சீபுரம் போய்ச் சேர்ந்து வன்னியர்களுக்கே மகாநாட்டானாய் விளங்கினான். அவனது மரபார் மிகவும் ஏழைகளாய் இன்னும் காஞ்சியில் வசிக்கின்றனர். ஏழைகளானாலும் ஏகாம்பரர் கோயிலில் ராஜமரியாதைகள் இல்லாமலில்லை. தற்போது தமிழ்நாட்டில் வீரதெய்வங்களாக விளங்கும் காந்தவராயன், சேந்தவாயன், பல்லவராயன், பாவாடைராயன் முதலியவர்களும் இவ்வம்ஸத்தார்களே என ஊகிக்க இடமுண்டு. வன்னியர்களுக்கு தற்போதும் காஞ்சீபுரம் மகா நாடாகவும் சொர்ண காமாக்ஷியம்மன் குலதெய்வமாகவும் விளங்குவதற்கு இச்சம்புராயர்களே காரணமாவர்.
வினா : – சளுக்கியர்களைப் பற்றிய சரித்திரத்தையும் சொல்லுங்கள்.
விடை : – சளுக்கியவர்கள் சந்திர வம்ஸத்தவர்கள். இவர்கள் மேலைச்சளுக்கியர் கீழைச்சளுக்கியர் யென இரு பிரிவுகள் உண்டு. பம்பாய் ராஜதானியிலுள்ள வாதாபி நகரத்தை ராஜதானி யாக்கிக் கொண்டு ஆண்டவர்கள் மேலைச் சளுக்கியர்கள். கீழைச் சளுக்கியர்களை சோழகர்கள் ஜெயித்து அவர்களில் ஓர் அரசனை சிறை செய்து தங்கள் அரண்மனையில் வைத்து தங்கள் குலப்பெண்ணை அவ்வரசனுக்குத் திருமணம் செய்து சம்பந்தம் செய்து கொண்டார்கள். இவ்வாறு இரு தலைமுறைகள் சம்பந்தம் நேர்ந்தபின் பிறந்த பிள்ளையே முதலாவது குலோத்துங்கன். சோழ வம்ஸத்தில் சரியான வாரிசுகளில்லாத போது சளுக்கிய குலத்துப் பிள்ளையாகிய இக்குலோத்துங்கனை சோழர் குலப் பெருமாட்டிகள் தத்து புத்திரனாக ஸ்வீகாரம் செய்து கொண்டனர். அதனால் இவனை அடியிற் கண்ட கலிங்கத்துப் பரணி பாடலில் உபய குலோற்பவன் என பரணி பாடிய ஜெயங்கொண்டார் புகழ்ந்து பேசுகின்றார். அப்பாடல் வருமாறு: –
‘திங்களி னிளங்குழவி செம்மலிவனென்றும்
செய்ய பரிதிக் குழவி ஐயனிவ னென்றும்
தங்களின் மகிழ்ந்திரு குலத்தவர்கள் சாற்ற’
என்னும் அடிகளால் சந்திர வம்ஸ சளுக்கியர்களுக்கும், சூரிய வம்ஸ சோழர்களுக்கும் சம்பந்தம் ஏற்பட்டதை அறியலாம். தற்போதுள்ள ஆண்டியப்ப சூரப்பச் சோழனார் இவ்வம்ஸத்து பிள்ளையே யாவர்.
வினா : – சளுக்கியர்களைப் பற்றி இன்னும் ஏதாவது சரித்திரமுண்டா?
விடை : – தென்னாட்டில் செஞ்சி நகரையும் திருவருணை யையும் ஆக்ஷி செய்த வீர வசந்த வல்லாளராயன் என்னுஞ் சிற்றரசன் சரித்திரம் புராண பிரசித்தமாயும் ஜனப் பிரசத்தமாயும் இந்நாளில் வழங்குகின்றதை அறியாதவர்களில்லை.
வினா : – புராணப் பிரசித்தமென்ன?
விடை : – சிவனடியார்கள் கேட்டதை எல்லாங் கொடுக்கும் விரதம் பூண்டு தன் மனையாளையே கொடுத்து அண்ணாமலை யண்ணலை குழந்தையாகப் பெற்று இந்நாள் வரையும் அக்கடவுளே தனக்கு கடைக்கருமம் செய்யும் பெரும் பேற்றை அவ்வரசன் ஏற்றது உலகப் பிரசித்தம்.
வினா : – அவ்வரலாறு யாது?
விடை : – வட புலத்து ஓட்டிர நாட்டில் நடந்த போரில் உயிர் துறந்த அவ்வரசனுக்காக இவ்விழா அருணை நகரில் நடைபெறுகின்றது. தைப்பூசத்தன்று திருவருணைக் கடவுள் ஈசான்ய மண்டபத்தில் இன்பக் காட்சியை அனுபவித்துக் கொண்டிருக்கையில் அரசன் இறந்த செய்தி கிடைக்கின்றது. உடனே கேளிக்கைகளைத் துறந்து சிவபெருமான் கோயிலுக்குப் போகிறன்றார். அடுத்த மாசிமதி மக நக்ஷத்திரத்தில் அண்ணாமலைக்கு 3 மைல் தூரத்திலுள்ள பள்ளி கொண்டாடப்பட்டு கௌதம நதியில் பெருங்கூட்டத்தின் மத்தியில் கடைக்கரும சடங்குகள் நடைபெறுகின்றன. மறுதினம் ஆலயத்தில் முறையாக முடிசூட்டு விழாவும் நடைபெறுகின்றது. அண்ணாமலையைச் சுற்றியுள்ள வன்னிய பெருமக்களாலும், புதுவை இராமசாமி நாயகரவர்கள் சென்னையில் இதற்குபகாரமா ஏற்படுத்தியுள்ள தர்ம சொத்து வருவாயிலிருந்தும் இவ்விரு விழாக்களும் முற்றுப் பெருகின்றன. திருவருணை ஆலய கோபுரங்களில் ஓர் கோபுரத்திற்கு வல்லாளன் கோபுர மென்று பெயர். அக்கோபுரத்திலுள்ள அவ்வரசனுடைய உருவச்சிலை மேற்படி விழாக்களில் பூஜிக்கப்படுகிறது.
வினா : – இச்சளுக்கியர்கள் யார்? இவர்கள் சரிதமென்ன?
விடை : – விந்திய மலையின் சிகரங்களிலொன்றாகிய அபூபருவதத்தில் உலகை ஆக்ஷி செலுத்த வேண்டி முனிவர்கள் தொடங்கிய யாகாக்கினியில் ஐந்து வீரர்கள் உதித்தனர். அவர்களில் ஒருவனாகிய சலூகன் மரபாரே இச்சளுக்கியர்கள்.
வினா : – இதுவரை சொல்லிய ஆதாரங்களைத் தவிர வேறு ஏதேனும் உண்டா?
விடை : – இதுவரை சொல்லிய வந்தவைகளும் சொல்லாதவைகளுமடங்கிய ஓர் உரைப்பாசுரம் அடியிற் தரப்படுகின்றது. அதில் எங்கள் குலத்திற்குரிய முழு பெருமைகளும் காட்டப்பட்டிருகின்றன. அப்பாசுரம் வருமாறு.
குலச்சிறப்பு
‘நீளும் பெருமை நிகழ் தமிழ்நாட்டில்
ஆளும் மரபில் அரசர்கள் குலத்தில்
சேர, சோழ, பாண்டிய, பல்லவ,
சளுக்கியரென்னும் ஐம்பெருங்குடியில்
நாம் அவனியிற் தோன்றினோம்;
உலகையும் உயிரையும் ஒருங்கே காத்தோம்;
ஆவைப் போற்றினோம்; அந்தணர் புரந்தோம்;
கோவியன் முறையைக் குறையாது நிறைத்தோம்;
வேள்வியாற்றி விண்ணும் பாலித்தோம்;
தேவர்கள் புலவரைத் தினமும் அணைத்தோம்;
கற்புக்கரசி கண்ணகி கோயிலை நற்புகழ் தோன்ற நானிலமமைத்தோம்.
அந்தாதி யுலாவை அரன்மேல்பாடி
காத்திரத்துடனே கயிலைக்கேகி ஆண்டவன் திருமுன் அரங்கேறப் பெற்றோம்;
திருவார் அரங்கனை மருகனாயடைந்தோம்.
பசுவின் கன்றிற்காய்ப் பாலனைக் கொன்றோம்;
ஓர் புறவிற்காய்ச் சீரை புகுந்தோம்;
எண்ணருமாலயப் புண்ணியமியற்றினோம்;
இந்திரன் பயத்தையும் முந்தியொழித்தோம்;
விண்ணகத் திந்திரவிடங்கர் தம்மை
மண்ணகத்திறக்கிய மான்மியம் பெற்றோம்;
விண்டோய் மேருவைச் செண்டாலடித்துப் பணியச் செய்தோம்.
பாதையும் பெற்றோம்;
காவிரியிருமருங்கும் கரையைச் கண்டோம்;
ஐவகை மன்றம்பெற்றரசாட்சி செய்தோம்;
சிதம்பரக் கோயில் சிற்சபைப்படியில்
பட்டாபிஷேக பாக்கியம் கொண்டோம்;
சிற்சபை பொற்சபை செம்பொனால் வேய்ந்தோம்;
திருமுறை கண்ட செய்தியும் நமதே;
திருத்தொண்டர்புராணந் தெரிந்தும் நாமே;
ஓர் பழியஞ்சி உயிரை விட்டதுடன்
சீர்பெறுநகரைச் செந்தழற்காக்கினோம்;
எம்மையாளும் இறைவனா மீசனும்
அம்மையாகும் அங்கயற் கண்ணியும்,
உக்கிரப்பேர் பெறு செக்கர்மேனிச்
சினவேற்குமரனும் வந்தசீர்மரபெனும்
மான்மியம் பெற்றோம்;
தமிழ்ச் சங்க மூன்றினுந்
தலைமை வகித்தோம்.
கொற்கைப் பேர்மிகப்
பொற்கையும் பெற்றோம்.
வில்லைக் கயலை வெல்புலிக் கொடியை
மேருவிற்றீட்டினோம். வீரத்தை நாட்டினோம்;
அண்ணாமலைவாழ் அடிகளார் தம்மைப்
புண்ணியப் புதல்வராய்ப்
பொருந்தப் பெற்றோம்.
கருமாந்தவினை தனைக்
கடவுளே செய்யும் உரிமையை
நாளதும் உளதாய் மகிழ்வோம்;
இன்னணம் நமது
முன்னோர் பெருமை
எண்ணத்தொலையாது;
ஏடிடங்கொள்ளாது;
புண்ணியரவர்கள் கண்ணிய வழியிற்
பொருந்திய நமது திருந்திய வாழ்வை
இக்கால் நினைக்கிற் றுக்கமே பெருகும்.’
ஆக சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சளுக்கிய ரென்னும் ஐந்து ராஜ வம்ஸங்கள் ஒன்று சேர்ந்து தற்போது வன்னிய ரென்னும் பொதுப் பெயரால் வழங்கப்படுவது இதுவரை நடந்த கேள்வி உத்திரங்களால் உறுதியாயிற்று.
- ••
அத்தியாயம் 6
அவதாரிகை : (இவ்வத்தியாயத்தில் சக்ரவர்த்திகளாகவும், முடியரசர்களாகவும் சிற்றரசர்களாகவும் அரசு புரிந்த தமிழ்நாட்டு க்ஷத்ரிய மரபார் தற்போது மிகவும் வறுமையடைந்து இழிந்து காண்பதற்கு காரணங்கள் காட்டப்படுகின்றன.)
வினா : – உயர்ந்த ராஜா பதவியிலிருந்த இவ்வன்னிய மரபார் தற்போது க்ஷீணதிசையில் காணப்படுவது ஏன்?
விடை : – இவர்களது ஒற்றுமைக் குறைவும், அதனால் நிகழ்ந்த வேற்றரசர் படையெழுச்சியுமே காரணம்.
வினா : – இதற்கு சரித்திர ஆதாரமுண்டா?
விடை : – உண்டு. தமிழ்நாட்டில் அன்னியர் பிரவேசிக்காத பெருமைக்கு உலை வைத்தவர்களும் ஆந்திரர்களை இங்கு தருவித்தவர்களும் இரு தமிழரசர்களே யாவர். மதுரை சிற்றரசனாகிய சந்திர சேகர பாண்டியனுக்கும், தஞ்சை வீர சோழனுக்கும் ஏற்பட்ட பகை காரணமாய் ஆந்திரர்களாகிய விஜயநகரத்தரசர்கள் தமிழகத்தின் மேல் படையெடுத்து மதுரையையும் தஞ்சையையும் கைப்பற்றி ஆந்திர ராஜ்யத்தின் ஏகாதி பத்தியத்தை ஸ்தாபித்தார்கள். அது முதல் இந்நாட்டில் தெலுங்கர்கள் குடியேறினார்கள். அதனால் தமிழர்களின் அரசுரிமை, செல்வ நிலைமை, குலக்கடமை இவைகள் குறைந்தன. படையிற் பயிலும் படையாட்சிகளான வன்னியர்கள் போர்த் தொழிலை மறந்து ஏர்த் தொழிலிலிறங்கினர்; ஜமீன்தாரர்களாகவும் மாறினார்கள். போதாக் குறைக்கு இந்நாட்டில் நிகழ்ந்த வலங்கை இடங்கை கைச் சண்டையில் தலையிட்டு பரம ஏழைகளாய் தற்போது பரிதவிக்கின்றனர்.
வினா : – அக்கட்சி சண்டையின் வரலாறு என்ன?
விடை : – சில ஜாதிகளுக்குள்ளேற்பட்ட சச்சரவே இக்கலகத்திற்குக்கு காரணம்.
வினா : – சச்சரவிற்கு மூலமென்ன?
விடை : – ஜனநாயக சமத்துவமில்லாத அக்காலத்தில் சிலர் உயர்ந்த உரிமைகளையும் மற்றுஞ் சிலர் தாழ்ந்த உரிமைகளையும் சட்டபூர்வமாய் அனுபவித்து வந்தனர். சட்டமும் ஆக்ஷியுமற்ற அராஜக காலத்தில் தாழ்ந்த உரிமை பெற்ற கம்மியர் முதலிய சில ஜாதியார்கள் உயர்ந்த உரிமையைப் பெற ஆரம்பித்ததாலேயே இந்த ஜாதிக்கலகம் ஏற்பட்டது.
வினா : – இதிற் சம்பந்தப்பட்டவர்கள் யார்?
விடை : – வேளார், வடுகர் முதலிய சில ஜாதியார்கள் ஒன்று சேர்ந்து தங்களை வலங்கையாரென்று வைத்துக் கொண்டு கம்மியர் முதலிய சில ஜாதியார்களை எதிர்த்து அழிக்கத் தலைப்பட்டனர். கம்மியர் முதலிய 9 ஜாதியார்கள் தங்களை இடங்கையாரென்று சொல்லிக் கொண்டு வலங்கையாரை எதிர்த்தனர்.
வினா : – வன்னியர் எக்கக்ஷியைச் சேர்ந்தவர்ள்?
விடை : – வன்னியர்களும், பார்ப்பார்களும் கக்ஷிகளில் கலக்காமல், நடுநிலைமை வகித்தனர். ஆனால் பலமுள்ள வலங்கை வகுப்பார்கள் இடங்கையார்களை அழிக்க ஆரம்பித்த காலத்தில் அவர்களது வேண்டுகோட்கிணங்கி வீரமும் ஆண்மையுமுள்ள வன்னியர்கள் வலங்கையார்களை அடக்கி இடங்கையார்களை நடைபெற்றது. பல தடவைகளில் வலங்கையார்கள் வன்னியர்களால் படுகொலையடைந்தனர். அநேக கேஸ்கள் கோர்ட்டுகளுக்கேறி இருகட்சிகளும் தீர்ப்புப் பெற்ற தஸ்தாவேஜுகளை சென்னை மியூசியத்தில் இன்னுங் காணலாம். பிறகு பிரிட்டிஷ் சட்டத்தால் இக்கலகம் ஓய்ந்த பின் வலங்கை இடங்கைகளைச் சேர்ந்த யாவரும் ஒன்று கூற வன்னியர்களை அடக்க ஆரம்பித்தனர். அதனால் இவர்களது சொத்துரிமை, ஆண்மை இவைகள் நாளுக்கு நாள் குறைந்து தற்போதுள்ள நிலைமைக்கு இறங்கி நிற்கின்றனர்.
வினா : – நடுநிலைமை வகித்த இவர்கள் ஒரு கக்ஷியிலிறங்கி இப்பெரிய பாதகத்திற்கு ஏன் ஆளாயினர்?
விடை : – காலில் விழுந்து வேண்டினால் போதும். உடனே இவர்கள் கிளம்பி எதிரிகளை அழிப்பதே வழக்கம். சிதம்பரத்தில் 19-ம் நூற்றாண்டினிடையில் நடைபெற்ற கைக் கலகத்தில் சிதம்பரச் சோழர் சம்பந்தப்பட்டு அரசாங்க விரோதியாய், தமக்கு வருட வாரியாய் கிடைத்த ராஜ வம்ஸ பென்ஷனாக பிரிட்டிஷ் சர்க்காரால் கிடைத்து வந்த ரூ. 7000-த்தையும் இழந்தனர். மதிப்பையுங் குறைத்துக் கொண்டனர். வலங்கையார் பகையையும் பெற்றனர். மரபின் தலைவர் அடைந்த கதியையே மரபும் அடைந்தது. இதைப் பற்றிய சரித்திரம் விரிந்ததாகும். இன்னும் மூலை முடுக்குகளில் இக்கட்சியுணர்ச்சி இருந்தே வருகின்றது. இவைகளெல்லா வற்றிற்குங்காரணம் கல்வியறிவும் பெரியோர் நேசமும் இல்லாத வன்னிகுலத்தவர்களுக்கு இருந்த அதிகாரமே காரணமாகும். இவ்வதிகாரமே ஜன விரோதத்தையுண்டு பண்ணி இந்நிலைக்கு இவர்களை இறக்கிவிட்டது.
வினா : – வலங்கை, இடங்கை யென்ற பெயர் எதனால் ஏற்பட்டது?
விடை : – வேளாளர், கம்மியர் ஆகிய இவர்களது வழக்குகளை விசாரித்த ஓர் பல்லவச் சிற்றரனது வலது கைப்பக்கத்தில் நின்றவர்கள் வலங்கையாரென்றும் இடங்கைப் பக்கமாக நின்றவர்கள் இடங்கை யாரென்றும் அழைக்கப்பட்டனர்.
வினா : – வேளாளருக்கும் கம்மியருக்கும் ஏன் வழக்கு நேர்ந்தது?
விடை : – பரம்பரை விவசாய வகுப்பினராகிய வேளாளருக்கு உதவி செய்யும் குடிகள் 18 வகுப்பார்கள். அவர்களில் கம்மாளர் ஐந்து பிரிவுகளும் அடங்கியுள்ளன. அராஜக காலத்தில் சிற்ப அறிவும் உலக மதிப்புமுள்ள கம்மியர்கள் தங்கள் எஜமானர்களாகிய வேளாளர் கட்டளைகளுக்கு மீறியதால் வழக்கு நேர்ந்தது.
- ••• •