வன்னியருக்கும், அன்னியருக்கும் தகராறு!

 

மகா சங்கத்தின் வேலைகளும், ஜில்லா சங்கங்களின் வேலைகளும் மளமளவென்று வளர்ந்து மிக வேகமாகவும், சிறப்புடனும் நடந்து வரும் போது பல அசம்பாவிதங்களும் கோர்ட்டு வழக்குகளும் நடக்கத் தொடங்கி விட்டன. நம்முடைய முன்னேற்றத்தை விரும்பாத பலர், நம் தலைவர்கள் மீதும் அவர்கள் எழுதி வெளியிட்ட புத்தகங்கள் மீதும் வீண் வழக்குகள் தொடுக்கலாயினர். உதாரணமாக:-

1912ம் ஆண்டில் சேலம் சப் டிவிஷனல் மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஓர் வழக்கு நடைபெற்றது.

 

சு. அர்த்தநாரீச வர்மா மீது வழக்கு

 

(கேஸ்நெ.சி.சி 184/1912) இவ்வழக்கில் சேந்தமங்கலம் வெங்கட்ராம ஆசாரி வாதியாவார். பிரதிவாதி சு. அர்த்த நாரீச வர்மா அவர்களாகும். வழக்கிற்கு காரணம் யாதெனில்:- ச. அர்த்த நாரீச வர்மா அவர்களை அப்போது எழுதி வெளியிட்ட ’வன்னிய வம்ச பிரகாசிகை’ எனும் புத்தகத்தில் ஆசாரிமார்களை அவதூறாக தாக்கி எழுதினார் என்பதே.

இக்கேஸ் பல மாதங்கள் சேலத்தில் நடைபெற்று முடிவில் தள்ளப்பட்டு விட்டன. ஆயினும் வாதி விடவில்லை. 1913ல் இவ்வழக்கை மேல் கோர்ட்டிற்கு கொண்டு சென்றார். (ரிவிஷன் நெ.ஆர்.பி. 14/1913) க்ஷ வழக்கை விசாரணை செய்த ஜட்ஜ் அவர்களும் வர்மா அவர்கள் எழுதிய புத்தகத்தில் அவதூறு ஒன்றும் கிடையாது என்று கூறி, கீழ் கோர்ட்டு தீர்ப்பை ஆதரித்து வழக்கை தள்ளிவிட்டார். ஆக இந்த இரு கோர்ட்டிலும் சு. அர்த்தநாரீச வர்மா அவர்களுக்கே வெற்றி ஏற்பட்டது.

. சுப்பிரமணிய நாயகர் மீதும் வழக்கு

 

மேலே கண்டுள்ள வழக்கைப் போன்றே 1919லும் சென்னையில் ஓர் வழக்கு நடைபெற்றது. வன்னிகுல மித்திரன் பத்திராதிபர் திரு ஆ. சுப்பிரமணிய நாயகர், தம் பத்திரிகையில் எழுதியதை ஆட்சேபித்து பொன்னுசாமி முதலியார் என்பவர் சென்னை பிரதம மாகாண மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். (கேஸ் நெ.சி.சி. 13196/1919) இவ்வழக்கும் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இரு சாராரும்  போட்டி போட்டுக் கொண்டு வழக்காடினர். முடிவில் கேஸ் தள்ளப்பட்டது. நம் குலப் பெரியார் ஆ. சுப்பிரமணிய நாயர், இவ்வழக்கில் அமோக வெற்றி பெற்றார்.

 

 

  • ••• •

 

வன்னியர் கீழ் ஜாதியா

 

மேலே கண்டுள்ள தலைப்பை  கண்டு வீரமிக்க வன்னிய மக்கள் ஆத்திரப்படலாம். எழுதப் புகுந்த நம்மையே ஏசலாம். தூற்றலாம். வன்னியர் கீழ் ஜாதியினரென்று யார் சொன்னது? கொண்டு வா அவனை. புத்தி புகட்டுகிறோம். தொலைத்து கட்டுகிறோம். என்றெல்லாம் பலர் மிக கோபாவேசத்தோடு மீசையை முறுக்கி இன்று பேசலாம் ஏசுபவர் மீது புலி போல் பாயலாம். இதற்காக நாம் பெருமை படுகிறோம். சமீப காலமாக இந்த வீர உணர்ச்சி நம் மக்களிடையே ஏற்பட்டு கொழுந்து விட்டு எரிவதற்காக நாம் அனைவரும் மகிழ்ச்சி  அடைய வேண்டியது தான்.

இன்று நாம் வன்னியர் என்கிறோம்!

ஆனால், அன்று நம்மைப் பள்ளிகள்!!

என்றே ஒதுக்கி வைத்தனர்!!!

 

ஆனால் இவ்வித உணர்ச்சியும் வன்னியன் என்ற தன்னம்பிக்கையும், நம்மிடையே ஏற்படவும் நாம் யாருக்கும் அடிமையல்ல. எவருக்கும் கீழ்ப்பட்டவரல்ல! என்ற திடமான எண்ணம் இன்று நம் மக்களிடையே ஏற்பட மூலகாரணமாக இருந்தவர்களை நாம் சற்று எண்ணிப் பார்க்கத்தான் வேண்டும். நமது பழங்கால தலைவர்கள் அன்று பல பேருடைய பேச்சுக்கும், ஏச்சுக்கும் ஆளாகி வன்னியரா, இழி ஜாதியினர் பள்ளிகாள எங்கள் வீதியில் வரவேக் கூடாது, படையாட்சியா அவர்கள் பூச்சிக்கள்! கவுண்டனா அவனுக்கு குடிக்க தண்ணீரே கொடுக்கக் கூடாது என்றெல்லாம் அன்று நம்மினத்தை வேறு பல சமூகத்தினர்கள் ஏசி, பேசி எழுதின காலத்தில் எல்லாம் நம் முன்னோர்கள் சுமார் 150 வருட காலமாக எதிரிகளுடன் போராடி, கோர்ட்டேறி, வாதித்து, வாழக்காடி, வெற்றி கண்டு நம்முடைய உரிமையை நம் மூதாதையர் அன்று பெற்றுத் தந்த பிறகு தான் நாம் இன்று வீரமாக பேசுகிறோம். தலை நிமிர்ந்து நடந்து செல்லுகிறோம். இல்லையெனில் நாம் இன்று கடையரிலும் கடையராக இருந்திருப்போம். அன்றிருந்த கயவர் கூட்டம்  மக்களைப் பழித்து வன்னியர் இழி ஜாதியினர் தொடப்படாதவர்கள் என இழித்துக் கூறி நம்மை மிகவும் கேவலமான நிலைக்கு கொண்டு வந்து இன்று நிறுத்தி விட்டிருப்பர்.

 

எனவே நம் முன்னோர்கள் அன்று இவைகளை எல்லாம் எதிர்த்து தடுத்து கோர்ட்டேறி வழக்காடி போராடின கதையை நாம் கீழே விவரிக்கப் போகிறோம்.

 

வலங்கைஇடங்கை தகராறு!

வன்னியர் மீது வழக்கு!

 

தென்னாற்காடு ஜில்லா, சிதம்பரம் அடுத்த புவனகிரி, துக்கடி கஸ்பா, முள்ளிப்பள்ளம் கிராமத்தில் இருக்கும் வாதிகளான (சேட ஜாதியினர்) சதாசிவ செட்டி மகன் இராமலிங்க செட்டி 1, பொச்சா வெங்கடாசல செட்டி, 2, அருணாசல செட்டி, ஆகியவர்களுக்கும் பிரதி வாதிகளாகிய (வன்னிகுல) கிருஷ்ணப் படையாட்சி 1, இலட்சுமணப் படையாட்சி, ஆகியவர்களுக்கும் தகராறு ஏற்பட்டு விருத்தாசலம் அதாலத்துக் கோர்ட்டில் ஓர் வழக்கு நடந்துள்ளது.

இவ்வழக்கில் குலாம் உசேன் சாயயு என்பவர் வாதிகளுக்காகவும், இராமகிருணய்யர் என்பவர் பிரதிவாதிகளுக்காகவும் வக்கீலாக இருந்து வாதாடியுள்ளனர்.

 

 

வழக்கின் விபரமாவது;-

 

06-07-1819 அன்று முள்ளிப்பள்ளம் கிராமத்தில் உள்ள உடையாரப்பன் சுவாமிக்கு ஓர் ஊர்வலம் நடந்தது. க்ஷ ஊர்வலத்தை பிரதிவாதிகளாகிய படையாட்சிகள் முன்னின்று நடத்தினர். அனேகமாக இத்திருவிழாவை வன்னியர் அனைவரும் ஒன்று சேர்ந்து நடத்துவது வழக்கம். வழக்கம் போல் நடந்த இவ்விழா  ஊர்வலத்தில் வன்னியரின் விருதுகளாகிய புலிக்கொடி, சிங்கக்கொடி, பஞ்சவர்ணக் கொடி, குடை, மற்றும் பலவற்றை பிடித்து சென்றுள்ளனர்.

 

க்ஷ ஊர்வலத்தில் பஞ்சவர்ணக் கொடியையும், குடையையும் வன்னியர் பிடித்து சென்றதை க்ஷ செட்டிமார்கள் எதிர்த்தனர். தகராறு மூளவே இவ்விஷயம் விருத்தசாலம் கோர்ட்டிற்கு சென்றது. 16-07-1819-ல் மேற்படி செட்டிமார்கள் வழக்கை (வழக்கு நெம்பர் நெ. 61) கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அவ்வழக்கில்:-

பஞ்ச வர்ணக் கொடியையும்,

பூச்சக்கரக் குடையையும், பள்ளிகள்

பிடித்துச் செல்ல அருகதை கிடையாது!

 

பள்ளிகளாகிய வன்னியர்கள், பஞ்ச வர்ணக்கொடியையும், குடையையும் சுவாமியின் ஊர்வலத்தில் பிடித்துச் சென்றுள்ளனர் என்றும், அப்படி அவர்கள் பிடித்துச் செல்ல அவர்களுக்கு அருகதை இல்லை என்றும், மேற்படி சின்னங்களைப் பிடித்துச் செல்ல எங்களுக்குத்தான் சொந்தம் உண்டென்றும் ஆகவே, பள்ளிகள் இத்தகாத செய்கையில் இறங்கி நடந்ததினால் வாதிகளாகிய எங்களுக்கு வன்னியர் ரூ. 700 நஷ்ட ஈடு அளிக்க வேண்டுமென்றும் கோர்ட்டார் இதை ஏற்க வேண்டுமென்றும் தமது பிராதில் கேட்டிருந்தனர்.

அப்போது இக்கேசை விசாரிக்கும் நிலையில் வில்லியம் பிரான்ஸ் துரை மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார். விசாரணையும் செய்தார். வாதிகள் பக்கம் 6 சாட்சிகளும் பிரதிவாதிகள் பக்கம் 11 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டன.

 

நாங்கள் க்ஷத்திரியர்கள்,

மன்னர் பரம்பரை!

எங்களுக்கு உரிமையுண்டு!

 

இவ்வழக்கில் பள்ளி எனப்படும் வன்னியர்கள் தாங்கள் க்ஷத்திரியர்கள் என்றும், எங்களுடைய முன்னோர்கள் முன்பு இந்நாட்டை ஆண்டவர்கள் என்றும், எங்கள் மரபினர் அன்று மன்னராக இருந்திருக்கிறபடியால், அவர்களுடைய சின்னங்களை நாங்கள் பிடித்துச் செல்ல உரிமை எங்களுக்கு இருக்கிறதென்றும் நாங்கள் கூறும் இவை அனைத்தும் எங்களுடைய குல புராணமான ஆக்னேய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறதென்றும் கூறி, மேற்படி புத்தகத்தையே கோர்ட்டில் தாக்கல் செய்தனர்.

 

வலங்கைஇடங்கை வழக்கில்

ஆக்னேய புராணம் சாட்சியமளித்தது!

 

மாட்சிமை தங்கிய பிரிட்டிஷ் மன்னர் கோர்ட்டில் ஆக்னேய புராணம் அலசி ஆராயப்பட்டது. கோர்ட்டு நீதிபதிக்கு தமிழ் சரியாக தெரியாதபடியால் ஒவ்வொன்றையும் படித்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து கூறப்பட்டது. இரு சார்பில் உள்ள வக்கீல்களும் தங்கள் தங்கள் கட்சியை எடுத்து வாதித்தனர்.

 

இந்நிலையில் இந்த வழக்கின் சாராம்சம் காட்டுத் தீ போல் தமிழ்நாடு எங்கும் பரவலாயிற்று. உறங்கி இருந்த வன்னியர் எல்லோரையும் இவ்வழக்கு ஓர் உலுக்கி உலுக்கி எழுப்பி விட்டது. வன்னியர் வாழும் இடங்களில் எல்லாம் இக்கேசின் (வலங்கை – இடங்கை தகராறு) பேச்சாகவே இருந்தது. வெளியூர் வன்னியர்களில் அனேகர் பேர் கேசை கவனிக்க விருத்தாசலம் கோர்ட்டிற்கே படையெடுத்து வந்து விட்டனர்.

 

இக்கேசில் வாதிகளாகிய செட்டிமார்கள் தங்களுடைய உரிமையை நிலை நிறுத்த வாய் மூலம் தான் சொன்னார்களேத் தவிர, எழுத்து மூலமாகவோ அல்லது புத்தக ரூபத்திலோ ருசுபிக்க முடியவில்லை.

 

இச்சமயத்தில் நீதிபதி அவர்கள் இரு தரத்தாருடைய பேச்சுக்களையும் கேட்டு முடிவில் கீழ்கண்டவாறு தீர்ப்புக் கூறினார். அதாவது:-

 

கோர்ட்டாரின் தீர்ப்பு?

செலவு தொகையுடன் வன்னியருக்கு வெற்றி!

 

நான் இக்கேசில் முடிந்த வரையில் கூர்ந்து கவனித்தேன். வாதிகள் தரப்பில் வெறும் வார்த்தையைக் கொண்டும், சாட்சிகளைக் கொண்டும் தான் தங்களுக்கு பஞ்ச வர்ணக் கொடியும், குடையையும் பிடிக்க உரிமை உண்டென்று கூறுகிறார்கள்.

 

ஆனால் பிரதிவாதிகளும் மேற்படி பஞ்ச வர்ணக் கொடியும், பூச்சக்கர குடையையும் பிடிக்க தங்களுக்கு தான் உரிமை உண்டென்று கூறி சாட்சியங்களையும் கொணர்ந்து வாதிட்டு இருக்கிறார்கள். மேலும் இதை நிரூபிக்க அவர்களது புராணத்தையும் இங்கு சாட்சியாக கொடுத்துள்ளார்கள்.

 

மேற்படி புராண புத்தகத்தில் உள்ள ருத்ர வன்னியர் அரசனுக்கு 18 கொடிகள் கொண்ட விருதுகள் இருந்ததாக க்ஷ புத்தகத்தில் குறிப்டப்பட்டுள்ளது.

 

அந்த 18 கொடிகளில் பஞ்ச வர்ணக் கொடியும், பூச்சக்கர குடையும் அடங்கி இருப்பதால் பள்ளிகள் எனப்படும் வன்னியர்களுக்கு மேற்படி கொடியையும், குடையையும் பிடிக்க உரிமை உண்டென்று கூறுகிறேன். மேலும் பிரதி வாதிகளுக்கு ஏற்பட்ட நஷ்டத்தையும் (ரூ. 283-11-0 வையும்) வாதிகள் பிரதி வாதிகளுக்கு செலுத்த வேண்டுமென்றும் இதன் மூலம் தீர்ப்பு கூறுகிறேன் என கூறினர்.

 

 

வலங்கைஇடங்கை வழக்கினால்

வன்னியர் ஒன்று திரண்டனர்!

 

 

இக்கேசின் மூலம் வன்னியருக்கு ஏற்பட்ட வெற்றியானது மற்ற ஜில்லா வன்னியரிடையே ஓர் விழிப்பை ஏற்படுத்தி விட்டதென்றே கூறலாம். இந்த காலத்தில் இருந்து தான் தமிழ்நாட்டில் பரவி இருந்த வன்னியர்களிடையே ஒற்றுமையும் கட்டுப்பாடும் ஏற்படவும், ஒரு இடத்திலிருந்து மற்றோர் இடத்தில் உள்ள வன்னியர்களுக்குள் ஒருவர்க்கொருவர் தொடர்பும் ஏற்பட வழி பிறக்கலாயிற்று.

 

சொல்லப் போனால் வன்னியர் வீர உணர்ச்சி கொண்டதும், தான் ஆண்ட பரம்பரையின் வம்சத்தினர் என்றும், கால வித்தியாசத்தினால் தான் நாம் இப்படி மாறி விட்டோம். எனவே நாம் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இக்காலத்தில் தான் உதிக்கலாயிற்று.

 

ஆண்ட பரம்பரையாக இருந்து கால வித்தியாசத்தினால் ஏழ்மையில் உரு மாறிப்போன வன்னியர்களை பள்ளிகள் என்றும், கீழ் ஜாதியினர் என்றும் எண்ணி, மதிக்காமல் அலட்சியப்படுத்தி வந்த வேறு பிற சமூகத்தினரும் விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பைக் கண்டு ஆச்சரியப்பட்டு போயினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு பலர் நம் மக்களைப் பார்த்து மதிக்கத் தலைப்பட்டனர். மற்றும் சிலர் மறுபடியும் பழி வாங்க காலத்தை எதிர்பார்த்து இருந்தனர்.

 

சொல்லப்போனால் 1819வது ஆண்டு வன்னியரின் பிற்கால சரித்திரத்திலேயே ஓர் முக்கிய ஆண்டு என கூறலாம்!

 

 

  • ••

 

தமிழ்நாட்டில் வன்னியருக்குள் வழங்கும்

பலவித பட்டப்பெயர்கள்

 

 

  1. அஞ்சா சிங்கம்
  2. அண்ணலங்கார்
  3. இரட்டியர்
  4. இராயர்
  5. இராவுத்தமிண்டர்
  6. இராஜா
  7. இராஜு
  8. இராஜாளியார்
  9. உடையார்
  10. கங்கண உடையார்
  11. கச்சிராயர்
  12. கடந்தையார்
  13. கடாரங்காத்தவர்
  14. கண்டர்
  15. கண்டியர்
  16. ரெட்டி
  17. கவுண்டர்
  18. கவுண்டீகர்
  19. காங்குடையார்
  20. காசிராயர்
  21. காவுண்டர்
  22. காளிங்கராயர்
  23. குலவென்றுடையார்
  24. சமஷ்டியார்
  25. சம்புவராயர்
  26. சாமந்தர்
  27. சாமர்த்தியர்
  28. சுவாமி
  29. செட்டியார்
  30. சேதுவராயர்
  31. சேரனார்
  32. சோழனார்
  33. தந்திரியார்
  34. துரை
  35. தென்னவராயர்
  36. தேவர்
  37. தொண்டனார்
  38. நயினார்
  39. நாட்டார்
  40. நாயகர்
  41. மேஸ்திரி
  42. நீலகங்கரையார்
  43. படையாட்சியார்
  44. பட்டவர்த்தி
  45. பண்டாரத்தார்
  46. பரமேஸ்வரனார்
  47. பல்லவர்
  48. பல்லவராயர்
  49. பாண்டியனார்
  50. புலிக்குத்தியார்
  51. பூபதி
  52. பொறையர்
  53. மருங்கிற்பிரியார்
  54. மழவர்
  55. மழவராயர்
  56. முதன்மையார்
  57. முனையதரையர்
  58. மூப்பனார்
  59. வணங்காமுடியர்
  60. வர்மா
  61. வர்மராயர்
  62. வன்னியனார்
  63. வாணதிரையர்
  64. வாளண்டையார்
  65. வீரமிண்டர்
  66. தொண்டமான்
  67. பிள்ளை
  68. சேர்வை

 

  • ••• •

வன்னியர்களுக்கும்கவரை

வகுப்பினருக்கும் ஏற்பட்ட வழக்கு?

 

மற்றுமொறு வழக்கின் விவரத்தை கீழே தருகிறோம்;-

 

1860-ல் ஆண்டில் செங்கற்பட்டில் வசித்த வந்த வன்னிய மரபில் உதித்த நயினியப்ப நாயகர் என்பவரின் குமாரருக்கு, திருமணம் நடைபெற்றது. அவ்வமயம் அத்திருமண ஊர்வலம் பல வீதிகளைச் சுற்றி வந்தது. அவ்வூர்வலத்தில் வன்னியர் தம் விருதுக் கொடிகளுடன் பட்டு, பன்னாங்கு கட்டிய பல்லக்குடன் கோணக் கொம்பு பிருதை ஊதிக் கொண்டு கவரை ஜாதியினர் வசிக்கும் வீதியில் வரும் போது தகராறு ஏற்பட்டது. தகராறுக்குள்ள காரணம் என்னவென்றால்?

 

பள்ளிப் புத்திரர்களோ?

அவர்கள் எங்கள் வீதியில் வரவேக் கூடாது!

 

பள்ளி புத்திரர்களாகி வன்னியர்கள் தனித்தோ, ஊர்வலமாகவோ கவரை வகுப்பினர் வசிக்கும் வீதிகளில் வருவதால் க்ஷ கவரைக்கு கவுரவக் குறைபு ஏற்படுகிறதென்பது கவரைகளுடைய வாதம். இதை வன்னியர்கள் ஏற்கவில்லை. பலமாக  ஆட்சேபித்து ஊர்வலத்தை மேலும் நடத்திச் சென்றனர். இதன் மீது இருசாராரும் கைகலப்பு ஏற்படவே, அச்சண்டையில் பல பேருக்கு பலமான காயங்கள் ஏற்பட்டுவிட்டன.

 

கவரை வகுப்பினர் அதை காரணமாக வைத்துக் கொண்டு செங்கற்பட்டில் மாஜிஸ்ட்ரேட் பவர் பெற்ற பேஷ்கார் கச்சேரியில் வழக்கு தொடர்ந்தனர். வன்னியர்களில் முதன்மையாக இருந்தவர்களான மாங்காடு சோலை முனியப்ப நாயகரும் மற்றும் பல வன்னியரும் சேர்ந்து கொங்கி நாராயண செட்டியையும் மற்றும் அவரைச் சார்ந்த கன்னிச் செட்டி, பச்சையப்ப செட்டி பலரையும் ஜோட்டினால் அடித்துவிட்டார்கள் என்பது கவரை வகுப்பினருடைய வாதம். இதன் காரணமாக பல சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடிவில் முனியப்ப நாயகர் வகையராவுக்கு ரூ. 45 அபராதம் விதிக்கப்பட்டன.

 

கீழ் கோர்ட்டில் வன்னியருக்குத் தோல்வி

மேல் கோர்ட்டில் வன்னியருக்கு வெற்றி!

 

வன்னியர்கள் இதை ஆட்சேபித்து மேல் கோர்ட்டிற்கு அப்பீல் செய்தார்கள். அவ்வமயம் செங்கற்பட்டு செஷன் கோர்ட்டில் கனம். புல்ட்டன் துரை அவர்கள், நீதிபதியாக இருந்து வழக்கை தீர விசாரித்து கீழ்கண்ட தீர்ப்பை அளித்தார். அதாவது :-

 

செருப்படி சம்பந்தப்பட்ட விஷயத்தில் போதிய சாட்சியம் இல்லாததால்  முனியப்ப நாயகர் வகையரா மீது கீழ் கோர்ட்டு விதித்த அபராதத்தை ரத்து செய்கிறேன். மேலும் ஒவ்வொரு கிராமம், நகரம், பட்டணங்களில் உள்ள வீதிகள் எல்லாம் இராஜாங்கத்திற்கு சொந்தமென்றும் இதில் யாரும் எந்தவிட கொடியுடனும் ஊர்வலமாக செல்லலாம் என்றும், இதை எவரும் ஆட்சேபிக்கக் கூடாது என்றும் கூறி, சம்பந்தப்பட்டவர்களை மேலும் எச்சரித்தார். நிற்க, இவ்வழக்கில் வன்னியர்களுக்கு ஏற்பட்ட கோர்ட்டு செலவையும் கவரை வகுப்பினர் கட்டிக் கொடுக்க வேண்டுமென்றும் தனது தீர்ப்பில் கூறினார்.

 

இதை கவரை வகுப்பினர்கள் ஆட்சேபித்து, சென்னையிலுள்ள சதர் அதாலத்து கோர்ட்டிற்கு அப்பீல் செய்தனர். பிரபல வக்கீலான பாரிஸ்டர் மெயின் துரை அவர்களை வைத்து வாதித்தனர். சென்னை கோர்ட்டிலும் வன்னியர் பக்கமாகவே வெற்றி ஏற்பட்டது.

 

செங்கற்பட்டு வழக்கின் மூலமாக

நாம் என்ன அறிகிறோம்?

 

இந்த நிகழ்ச்சியில் இருந்து நாம் என்ன புரிந்துக் கொள்ள வேண்டுமென்றால் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வன்னியர்களாகிய நம்மை வேறு எந்த வகுப்பினரும் வன்னியர் என்று மதித்ததே கிடையாது. பள்ளி என்றே அழைத்து வந்திருக்கின்றனர். மேலும் இப்பள்ளி வகுப்பினாராகிய நம்மை ஒரு சிலர் தாங்கள் வசிக்கும் வீதிகளில் நுழைய விட்டதே இல்லை. காரணம் அந்தக் காலத்தில் ஒரு சில வகுப்பினருக்கு நம்மை பற்றி தவறான எண்ணம் ஏற்பட்டிருந்தது. வன்னியர் அல்லது பள்ளிகள் கீழ் ஜாதியினர் என்றே அவர்கள் அகம்பாவத்துடன் எண்ணிக் கொண்டு இருந்தனர். இதை தெள்ளென எடுத்துக் காட்டும் செய்தி தான் மேலே கண்ட செங்கற்பட்டு வழக்காகும்.

 

இவ்வழக்கின் மூலமாக ஏற்பட்ட கிளர்ச்சியின் காரணமாகவும் ஆத்திரத்தின் காரணமாகவும் சென்னை, செங்கற்பட்டு, வட ஆற்காடு ஜில்லாக்களில்  வன்னியர்களிடையே ஓர் புரட்சியும், புத்துணர்ச்சியும் ஏற்படலாயிற்று. எங்கும் பல கூட்டங்கள் நடைபெறலாயின. சங்கங்கள் அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடையேயும் உதிக்கலாயின. வன்னியராகப் பிறந்த ஒவ்வொருவரும் ஒருவர்கொருவர் கூட்டுறவும், பாசமும் கொள்ளலாயினர். வன்னியரை இழித்து, பழித்து நிகழ்ச்சிகள் நடந்தால் அவைகளை எதிர்த்து நின்று போராட முற்பட்டனர். இது போன்ற நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும் அது தங்களுக்கு ஏற்பட்டதாகவே மற்ற பிரதேச வன்னியர்கள் எண்ணலாயினர்.

 

நாங்கள்வன்னியர்கள்

பள்ளிஎன்ற பெயர் தேவையில்லை!

 

பள்ளிகள் நுழையக்கூடாது என்று பிறர் தடுத்து வந்த பொது இடங்களில் எல்லாம் வன்னிய குலாபிமாணிகள் மீறி நுழைய முற்பட்டனர். இதனால் வந்த அனேக கஷ்ட நஷ்டங்களை மனமுவந்து ஏற்றுக் கொண்டு தங்கள் மீது உள்ள இழிவை ஒழிக்க, அனைவரும் வீரவேசத்துடன் ஓரணியாக நின்று எல்லாவிடத்திலும் போராடினர். வெற்றி பல கண்டனர். நிற்க, இது நேரத்தில் பள்ளி என்று நம்மை யார் அழைத்தாலும் அவர்கள் மீது நம்மவர்கள் பாயலாயினர். மேலும் பள்ளி என்ற பெயரை மாற்றி வன்னியர் என்ற பட்டத்தை அரசாங்கத்தில் பதிய வைக்க இச்சமயத்தில் முயற்சியும் எடுத்துக் கொண்டனர். இதனால் உறங்கிக் கிடந்த வன்னியரிடையே (2வதாக) இடைக்காலத்தில் ஓர் புத்துணர்ச்சி ஏற்படலாயிற்று.

 

  • ••• •

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu