வன்னியகுல
முதல் பெண் வள்ளல்!
கடந்த அக்டோபர் மாத வன்னியர் குரல் இதழில் வன்னியகுல முதல் பெண் வள்ளல் என்ற தலைப்பில் திருமதி. சரஸ்வதி தனக்கோடி அம்மாள் அவர்களைப் பற்றி எழுதி இருந்தேன். சரஸ்வதி அம்மையாரின் தகப்பனார் வி.எஸ். இரங்கநாதன் பிள்ளை அவர்களையும், தனகோடி முதலியார் மற்றும் சரஸ்வதி அம்மாள் பற்றிய செய்திகளை படித்துவிட்டு அவர்களுடைய குடும்பத்தாரும், உறவினர்களும் அடைந்த அளவிலா ஆனந்தத்தை நமது குல சொந்தங்களும் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறேன்.
அன்றைய வடஆற்காடு மாவட்டம் முழுவதும் பெரும் புகழை ஈட்டிய சரஸ்வதி தனக்கோடி அம்மாள் குடும்பத்தின் மேன்மையை இன்றைய சமுதாயம் அறிந்து கொள்ளாமல் போய்விடுமோ என்ற கவலையில் இருந்த என்னை உற்சாகப்படுத்தி நல்ல முறையில் கட்டுரை வரவேண்டுமென்பதற்காக பல இடங்களுக்கு அலைய வைத்து பல தகவல்களை கேட்டுப் பெற்று இன்றைக்கு பெண் வள்ளலின் புகழை உலகெங்கும் வாழும் வன்னிய மக்களிடம் மட்டுமல்ல, உலகத் தமிழர்களிடம் கொண்டு போய் சேர்ப்போம்.
கடந்த இதழில் வள்ளல் குடும்பத்தின் தலைமகனான முதலாம் தனக்கோடி முதலியார், திருவண்ணாமலை ஆலயத்தின் பரம்பரை தர்மகர்த்தாவாக இருந்தார் என்று எழுதி இருந்தோம். அவர் இருந்தது மட்டுமல்ல. அப்படியே வாழ்ந்தார். மறைந்தார் என்பதை நினைவூட்டவும், சரஸ்வதி அம்மாளின் சில நினைவுகளையும் பதிவு செய்வது அவசியமெனக் கருதி மீண்டும் இந்த இதழில் பெண் வள்ளல் பற்றிய கட்டுரையை தொடர்கிறேன்.
முதலாம் தனக்கோடி முதலியார் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்திற்கு சுமார் 175 ஏக்கர் விளை நிலங்களை தானமாக அளித்துள்ளார். அந்த நிலத்தின் நடுவே ஏரி ஒன்று உள்ளது. 175 ஏக்கர் பரப்பளவு நிலங்கொண்ட இப்பகுதி ‘தளக்கோடிபுரம்’ என்றே இன்றும் அழைக்கப்படுகிறது.
இது திருவண்ணாமலையிலிருந்து வேலூர் செல்லும் பஸ் வழிப் பயணத்தில் வரும் நாயுடு மங்களம் பஸ் நிறுத்தத்தில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்நிலத்திலிருந்து விளையும் அரிசியில் தான் அண்ணாமலை யாருக்கு அனுதினமும் நைவேத்தியம் படைக்கப் படுகின்றது. தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக இந்நிலத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து கொடுத்திருக்கின்றனர் பக்தர்கள் சிலர். சமீப காலமாக ஆற்றுத் திருவிழா அன்று அண்ணாமலையார் இக்களத்துமேட்டில் எழுந்தருளி ‘அருளப்பாடு’ நிகழ்வும் நடந்தேறுகின்றது.
முதலாம் தனக்கோடி முதலியார் அண்ணாமலையார் கோயிலுக்கு வழங்கிய நிலங்களை பற்றி அண்ணாமலையார் ஏரி என்றும் அண்ணாமலையார் நிலங்கள் என்றும் பக்தியுடன் குறிப்பிடுவதை இன்றளவும் கண்டு கேட்டு வியப்படையலாம்.
முதலாம் தனக்கோடியாருக்கு நிலங்கள் தவிர்த்து திருவண்ணாமலையில் நிறைய சொத்துக்கள் இருந்தன. அதில் பெரிய தெருவில் இருந்த ஜோதி மந்திரம் என்ற மாளிகை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த ஜோதி மந்திர மாளிகையை பிற்காலத்தில் தனது அத்தை மகன்களுக்காக எழுதி வைத்து இருந்தார் முதலியார். அவருக்கு பின் இது கல்யாண மண்டபமாக மாற்றப்பட்டு பிறருடைய கைக்கும் சென்று விட்டது.
1927-ல் இந்த மாளிகையை வாங்கியவர்கள் அதற்கு ராமவிலாஸ் என்ற பெயரை வைத்தனர். சுமார் 80 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் கடந்த 2007-ம் ஆண்டு மாளிகையின் ஒரு பகுதியை இடித்து புது கட்டிடம் எழுப்பினார்கள். அதற்கு அவர்கள் வைத்த பெயர் தனக்கோடி விலாசம் என்பதாகும். அதில் தனக்கோடி கம்யூனிகேஷன்ஸ் என்றொரு கடையையும் நடத்துகிறார்கள்.
மாளிகையின் ஒரு பகுதியான தோட்டத்தில் ஒரு விருட்சம் இருக்கிறது. சுற்றிலும் மதில் அமைத்து தல விருட்சமாய் காப்பாற்றப்பட்டு வரும் இதனை மரக்கன்றாக நட்டவர் முதலாம் தனக்கோடி முதலியார். இன்றளவும் முதலியாரின் நினைவுகளை அழியாமல் பாதுகாத்து வருபவர் நம்மவரும் அல்ல. உறவினரும் அல்ல. ஒரேயொரு தொடர்பு அதுதான் சிவபக்தி. ஊரே மெச்சும் அந்த சிவபக்திக்கு ஒரு பின்புலம் உண்டு.
திருவண்ணாமலை கோயில் திருவிழா மற்றும் உற்சவ விழாக் காலங்களில் தனக்கோடி முதலியார் இந்த ஜோதி மந்திரம் மாளிகையில் தான் தங்குவது. வழக்கம். அப்படித்தான் 1902 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம், ஐந்தாம் நாள் உற்சவமான வெள்ளி விடை பெருவிழா நடந்து கொண்டிருந்தது. தமிழகத்தில் அந்த நாளில் மிகப்பெரிய தான ரிஷப வாகனத்தில் அண்ணாமலையார் வீதியுலா வந்தார்.
நகரின் முக்கிய பகுதிகள் வழியாக வந்த வீதியுலா சரியாக இரவு 11 மணியளவில் தர்மகர்த்தாவான முதலாம் தனக்கோடி முதலியாரின் மாளிகை முன் நின்று மண்டகப்படியும் முடிந்து சாமி புறப்பட்டது. ரிஷப வானத்தில் அமர்ந்திருந்த அண்ணாமலையாரை வைத்தகண் மாறாமல் பார்த்த வண்ணமே இருந்தார் முதலியார்.
அண்ணாமலையாரை கண் குளிரக் கண்ட மன நிலையில் உள்ளே வந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து இருக்கிறார். சாய்ந்து அயர்ந்திருந்த நிலையில் அப்படியே முதலியாரின் உயிர் பிரிந்து போனது. ஒரு சிவபக்தரின் உயிரை கவர்ந்து செல்ல எருமை வாகனத்தில் காலனை அனுப்பாமல், தானே ரிஷப வாகனத்தில் வந்து தமது சிவபக்தரின் பக்தியை மெச்சி முதலியாரை விண்ணுலகம் அழைத்துச் சென்ற அண்ணாமலையாரின் அற்புதத்தை என்னென்று சொல்வது.
முதலியார் செய்த தான தருமங்கள் அவர் மரணத்தின் மூலம் அநாசாயே மரணம் என்பதை நிரூபித்தன. எந்த ரிஷப வாகன வீதியுலா அன்று தன் இன்னுயிரை விண்ணுக்கு தந்தாரோ.
அந்த ஐந்தாம் நாள் உற்வசத்தின் உபயதாரர்களான நகரத்தார்களே இன்றும் அழியாமல் காத்து வரும் ஜோதி மந்திரம் மாளிகையின் சொந்தக்காரர்கள் என்பது தான் பெருமைப்பட வைக்கும் நிகழ்ச்சியாகும்.
ஒரு சிவபக்தருக்கு சிவனடியாருக்கு கொடுக்கும் மரியாதையைத்தான் அவர்கள் கடந்த மூன்று தலைமுறையாய் மறக்காமல் தங்கள் நெஞ்சங்களில் சுமந்து வருகின்றனர். பக்தியின் மார்க்கமாய் ஒன்றிணைந்து முதலியாருக்கு உயிர் மெய் கொடுத்து வாழும் அந்த நல்ல உள்ளங்களுக்கு நம் குல மக்கள் சார்பாக நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
வன்னிய குலத்தின் முதல் பெண் வள்ளல் சரஸ்வதி தனக்கோடி அம்மாள் அவர்களின் பெருமைமிகு கொடைத்தன்மையை கடந்த இதழில் பார்த்தோம். அவற்றில் விடுபட்டுப்போன பகுதிகளை மீண்டும் உங்கள் பார்வைக்கு வைத்து பதிவு செய்கிறேன்.
சென்னை எழும்புரிலுள்ள அரசு கவின் கலை கல்லூரிக்கு (Govt. Arts & Crafts College) நூற்றுக்கணக்கான அரிய நூல்களை விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டியூட் மூலமாக வாங்கி நன்கொடையாக கொடுத்துள்ளார். அதனால் கல்லூரியிலுள்ள நூலகத்தின் ஒரு பகுதியில் அது இன்றளவும் தனக்கோடி முதலியார் நூலகம் என்று பெயரிடப்பட்டு செயல்பட்டு வருகிறது.
சரஸ்வதி அம்மையார் ஆற்காடு வன்னிய சங்கத்திற்கு கொடையாக அளித்த ஆற்காடு மாளிகை என்பது அரண்மனையின் முன்பகுதி மட்டுமே. பின் பக்கத்தில் அரண்மனையின் பரந்து விரிந்த பகுதிகளை மனைகளாக பிரித்து அப்பகுதி மக்களுக்கு குறைந்த விலையில் கொடுத்துள்ளார்.
மேலும் கடைகள், பஜாரில் 39 கடைகள் ஆற்றோர தோப்புகள் என இருந்த நிலங்களையும் அவ்வாறே கொடுத்துள்ளார்.
முதலாம் தனக்கோடி முதலியாரின் சென்னை மாளிகை நுங்கம்பாக்கத்தில் இருந்தது. அதில் குதிரை கொட்டில், கோச்சு வண்டிகள் கொட்டகை, மாட்டுக் கொட்டகைகளுடன் கூடிய பெரிய மாளிகை இருந்தது.
இரண்டாம் தனக்கோடி முதலியார் காலத்திற்கு பின் சென்னை வன்னியர் சங்க பிரதிநிதிகள் வன்னியர்களுக்கென கல்லூரி கட்டுவதற்கு இந்த மாளிகையை நன்கொடையாக வேண்டி சரஸ்வதி அம்மாளை கேட்டுள்ளனர்.
சங்கத்தினரின் நோக்கம் உணர்ந்தவராய் மேற்கூறிய இடத்தை கல்லூரி அமைவதற்கான இடத்தை தானமாக தர ஒப்புக் கொண்டார் சரஸ்வதி அம்மாள். பின்னர் சங்கத்தினர் அத்திட்டத்தை கைவிட, அம்மையார் பலமுறை வேண்டியும் இப்போதைக்கு இல்லை என்ற முடிவால் அவ்விடத்தை விற்று இருக்கிறார்கள். நிலங்கள் தவிர பணமாக கொடுத்த கொடையின் பட்டியல் அதிகம்..
வடஆற்காடு மாவட்ட வேலூர் வன்னியர் சங்கங்கள் சார்பாக கடந்த 50 ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட நன்கொடை பட்டியல்களில் அம்மையார் பெயர் இல்லாத ஆண்டும், பட்டியலும் இல்லை.
சரஸ்வதி அம்மாளின் தந்தை வி.எஸ். இரங்கநாதன் பிள்ளை அவர்களின் சென்னை சொத்துப் பட்டியலும் அதில் அவர்கள் கொடையாக கொடுத்த நிலங்களின் பரப்பளவும், சரஸ்வதி தனக்கோட்டி அம்மையார் கொடுத்த நிலம் மற்றும் மாளிகைகளின் பரப்பளவும் இன்று கணக்கிட முடியாத கோடிகளுக்கான மதிப்புடையதாகும்.
உழைத்து சம்பாதித்த சொத்துக்களை அரசுக்கும், மக்களுக்கும் வாரிக் கொடுத்த அந்த மனித தெய்வங்களின் வள்ளல் தன்னையையும், மனித நேயத்தையும் உணர்ந்து உரிய மரியாதையை செய்திட நம் வன்னிய குல சொந்தங்கள் தயாராக வேண்டுமென்பதே இக்கட்டுரையின் நோக்கம்; என்னுடைய வேண்டுகோளும் கூட.
வள்ளல்களின் வாழ்க்கை சரித்திரத்தை பதிவு செய்து உலகம் முழுவதும் வாழும் தமிழர்களிடையே குறிப்பாக வன்னிய மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
வள்ளலின் சுவடுகளைத் தேடி!
நமது சமுதாயத்தில் தோன்றி கடும் உழைப்பால் உயர்ந்த இடத்தை அடைந்து, சம்பாதித்த சொத்துக்களை அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் அள்ளித் தந்த கொடை வள்ளல் மரியாதைக்குரிய அய்யா வி.எஸ். இரங்கநாதன் பிள்ளை அவர்களை நம் வன்னிய சமூகம் மறந்து போனது நியாயம் தானா? சென்னையின் இதயப் பகுதியாகவும், திரைக் கலைஞர்கள் வாழ்விடமாகவும் உள்ள கோடம்பாக்கத்தில் உள்ள ட்ரஸ்ட்புரம் நகரையே தானமாக தந்த நம் சமுதாய வள்ளலை அரசு மட்டுமல்ல, அப்பகுதியில் உள்ளவர்கள் கூடவா மறந்து போனார்கள்.
விதியே! விதியே! எம் வன்னிய சாதியை என் செய்ய நினைத்தாயோ? என்று தான் கேட்கத் தோன்றியது. வள்ளல் வாழும் அமைதியான இடமான ட்ரஸ்ட்புரம் விளையாட்டு மைதானத்திற்கு சென்று அவரது சமாதியை வணங்கி அங்கு ஒரு உறுதி எடுத்து திரும்பினேன்.
இந்த ஊரையே தானமாகக் கொடுத்து இங்கு அமைதியாய் குடி கொண்டுள்ளீர்கள். ஆனால் இப்பகுதி மக்களுக்கு மட்டுமல்ல அரசாங்கத்துக்கு கூட இந்த உண்மையும், உங்களையும் தெரியாமல் போனதே என கலங்கி நின்றேன்.
அரசுக்கு உணர வைப்போம். அதே போல் எம் மக்களை மட்டுமல்ல, சென்னை மக்களுக்கே இந்த உண்மையை உரக்கச் சொல்லி உங்கள் புகழ் பாட வைப்பது எனது கடமை என்று உறுதி கூறி வந்தேன். சொந்தங்களே! வாருங்கள். உங்கள் துணையோடு வள்ளல் வி.எஸ். இரங்கநாதன் பிள்ளை அவர்களின் புகழ் காக்க புறப்படுவோம்!
பெண் வள்ளல் பற்றி
குணதிலக் எழுதிய கவிதை
மீளாத்துயிலில் ஆழ்ந்திட்ட
தமிழகத்து பெண் வள்ளலே!
எங்களை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்ட
முதல் வன்னிய பெண் வள்ளலே!
துயிலப் போனது ‘கலைமகள்’ சரஸ்வதியா?
ஆம்! பல நூறு பேர் கல்வி பயில உதவிய
‘சரஸ்வதி’!
பல கல்விக் கூடங்களை கொடையாக
அளித்திட்ட ‘சரஸ்வதி’!
தான் பட்டம் பெறாவிடினும் மற்றவர் பட்டம்
பெற வழிவகுத்த ‘சரஸ்வதி’!
குடியிருந்த வீட்டையும் ‘சரஸ்வதி’!
களி நடனமிடும்
சிந்தாதிரிப் பேட்டை உயர் நிலை
பள்ளியாக்கிய ‘சரஸ்வதி’!
‘தனம்’ பல கோடி பெற்றவரை மணந்திட்ட
‘திருமதி. சரஸ்வதி தனக்கோடி’
‘லக்ஷ்மி கடாக்ஷம் நிரம்பப் பெற்ற
இந்த ‘சரஸ்வதி’!
ஏற்படுத்திய கல்வி அறக்கட்டளைகள் பல!
அளித்திட்ட உதவிகள் பல பல!
கொண்டவரை இழந்து ஆண்டுகள்
பல ஆயினும்
அவர் இட்ட ‘கல்வித் தொண்டினை
சிறப்புற தொடர்ந்து
செய்து முடித்திட்ட குடும்ப விளக்கு!
கோவிலுக்கு கொடை கொடுத்தோர்
பலருண்டு!
கல்விச் சாலைகளுக்கு கொடை கொடுத்தோர்
இவரைப் போல் எவருண்டு!
திருவண்ணாமலை கோவிலின்
‘பரம்பரை அறங்காவலர்’
என்ற பதவியுண்டு இவர்களுக்கு!
கொண்ட செல்வ மனைத்தும்
‘கல்விப் பணிக்கு
என்றே கொடையாக அளித்துவிட்ட
-களிப்பில் – களைப்பில் – கண்மூடிய
எங்கள் ‘கல்வித்தாய்’ – ‘சரஸ்வதி’யே
வாழ்க பல்லாண்டு!
நின் புகழ் வாழும் பல்லாண்டு!
வன்னிய குலம் போற்றும்
உம்மை பலகோடி ஆண்டு!
வேண்டுகோள்
செஞ்சி வன்னிய பாளையக்காரர்களுக்கு ‘முதன்மையர்’ – முதலியார் என்ற பட்டப்பெயர் இருந்திருப்பதால் இந்த வரலாறு நாயகர்கள் அவர்களின் வழித்தோன்றல்களாக இருக்கலாம். அதற்கான ஆதாரங்களை தேடிக் கொண்டிருக்கிறோம். இதனை படிக்கும் அன்பர்கள், பெரியோர்கள், வரலாற்று வல்லுனர்கள், தொல் பொருள் ஆராய்ச்சியாளர்கள், சொந்தங்கள் இவர்களைப் பற்றிய ஆதாரங்கள், செய்திகள், வதந்திகள் எதுவாயிருப்பினும் எங்களுக்கு தெரிவிக்குமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.
* ••• *