மாண்புமிகு புரட்சித் தலைவி

ஜெ. ஜெயலலிதாவின்

தனி உள் ஒதுக்கீட்டு அரசாணை!

 

வீரமிக்க இனமான சொந்தங்களே!

வன்னியர் கூட்டமைப்பின் முத்தான மூன்று கோரிக்கைகளில் முதன்மையானது தான் வன்னியருக்கு தனி உள் ஒதுக்கீடு கோரிக்கையை வென்றெடுக்கும் சிறப்பான தருணத்தை உருவாக்கி இருக்கிறார் நம் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இந்த வெற்றிச் செய்தியை தமிழ்ப் புத்தாண்டு பரிசாக சித்திரைத் திங்களில் முத்திரை பதிக்கும் வண்ணம் உயரிய அரசாணையை உத்தரவாக வெளியிடு வன்னியகுலத்தினர் நெஞ்சமெல்லாம் தஞ்சம் கொண்டு உயர்ந்த ஆட்சி பீடத்தை அலங்கரித்து இருக்கிறார்.

வன்னியர் கூட்டமைப்பின் சார்பாக நடத்தப்பட்ட போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தொடுக்கப்பட்ட அறிக்கைகள் கணக்கிலடங்காதது. இப்போராட்டத்தின் தொடக்கத்தின் நம்மவர்கள் பலர் அறிந்தும், சிலர் அறியாமலும் இருக்கலாம். ஆனால் பிற சமூகத்தினர் நாம் ஏதோ இல்லாததை கேட்பதாகவும் அல்லது நமக்கே எல்லாமும் கிடைக்க வேண்டுமென நினைத்து செயல்படுவதாகவும் சொல்கிறார்கள்; பிறரிடம் கருத்தும் கூறுகிறார்கள். எனவே அவர்களுக்கு விளக்கமளிக்க வேண்டியது நமது கடமையாகும்.

தமிழ்நாட்டில் வன்னிய சமுதாயம் மிகப் பெரும்பான்மையான சமூகம் என்பதை அரசு ஆவணங்கள் மூலம் அனைவரும் அறிந்து கொண்டது உண்மை. ‘நேஷனல் புக் டிரஸ்ட் இந்தியா வெளியிட்டுள்ள சுதந்திர போராட்டம்’ என்ற நூலை தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் அடிப்படையில் அதிகபலம் வாய்ந்தவர்களாக இருப்பவர்கள் வன்னியர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டீஷ் அரசு 1871-ல் எடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மக்கள் தொகையில் வன்னியர்கள் 39.5 லட்சம் மக்கள் இருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. 22-12-1946 நாளிட்ட திராவிட நாடு  இதழில் வன்னிய சமுதாயத்தின் மக்கள் தொகை 63 லட்சம் என்று அப்போதைக்கு எழுதப்பட்ட கட்டுரையில் பேரறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

02.06.2010 –  தினமணி நாளேட்டில் 110 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய பகுதிகளில் வன்னியர்கள் மிகுதியாக வாழும் வடதமிழகம் எனக் குறிப்பிட்டுள்ளது. இணைய தளம் ஒன்றில் தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் 25 முதல் 30 சதவீதம் வரை வன்னியர் சமுதாயத்தவர் உள்ளனர் என்றெல்லாம் வன்னியர் சமுதாயத்தின் மக்கள் தொகை குறித்து தகவல்கள் பரவி கிடக்கின்றன.

இத்தகைய சமுதாயத்தின் மக்கள் எப்படிப்பட்ட வாழ்க்கையை நடத்தி இந்த நாட்டு பிரஜைகளாக வாழ்கிறார்கள். என்பதை மனசாட்சி உள்ளோர் அனைவரும் நினைத்துப் பார்த்து உண்மையை பதிவு செய்ய வேண்டுகிறேன்.

தமிழகத்தில் வாழும் மக்கள் மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் சென்று வாழ்க்கையை நடத்துகின்றனர். தொழில் நிமித்தமாக, உயர்நிலையை அடைவதற்காக என்று ஏதாவதொரு வகையில் சொந்த மண்ணை விட்டு பிரிகின்றனர். தமிழ் சமூகத்தில் சொந்த மண்ணை விட்டுப் பிரியாத ஒரே இனம் வன்னிய இனம். சென்னை தொடங்கி திருச்சி வரை, சென்னை தொடங்கி கோவை வரை வன்னியர்கள் வாழ்ந்த இடங்களை விட்டு எதற்காகவும் வெளியே வருவதில்லை. விவசாயத்தை பிரதானமாகவும், கூலி வேலையை பிழைப்புக்காகவும் செய்த இந்த ஏழை இனம் தனது உயர்வுக்காகபட்ட பாட்டை அறிஞர் பெருமக்களின் அறிவு சார் சிந்தனைக்கு படையலிட்டு தொடங்குகிறேன்.

பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து காங்கிரஸ் பேரியியக்கம் தோன்றுவதற்கு முன்பே சென்னை மாகாணத்தில் சங்கத்தை தோற்றுவித்தவர்கள் வன்னியர்கள். சென்னை மாகாணத்தில் தமிழகப் பகுதிகளில் வாழ்ந்த வன்னியர்கள் என இருவகையினராக வாழ்ந்து வந்தார்கள்.

தமிழக பகுதிகளில் வாழ்ந்த வன்னிய குல பெருமக்கள் தங்களுக்கான உரிமைகளை கேட்டுப் போராடும் விதமாக 1844-ம் ஆண்டு இரண்டு பிரிவினருக்கு இடையேயான மோதலில் நீதிமன்றம் சென்றனர். அந்த வழக்கில் வன்னியர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. 1860 ஆம் ஆண்டு தீர்ப்பு வந்தவுடன் வன்னிய சமுதாயத்தின் நிலச்சுவான்தார்கள், தொழில் செய்து பணக்காரர்களாக இருந்தவர்கள், அரசாங்க உத்தியோகஸ்தர்கள் என பலரும் ஒன்று கூடி வன்னிய சமுதாயத்தையும், மக்களையும் காத்துக் கொள்வதற்கு திட்டம் வகுக்க ஆராய்ந்தனர்.

அப்போது மக்கட் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுவதை  அறிந்து சூத்திரர்கள் என்று பொதுவாய் பதிவு செய்வதை எதிர்த்து சத்திரியர்கள் என பதிவு செய்ய வேண்டினர். ஆனால் ஆங்கிலேயரை சுற்றியிருந்த மேல் சாதியினரின் தூண்டு கோலால் நம் மக்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மீண்டும் 1881-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப் போவதாக அறிவிப்பு வந்தது. வழக்கம் போல் மேல்சாதியினரின் துணையால் சூத்திரர்கள் என்றே பதிவு செய்தனர்.

இதனால் 1891-ல் எடுக்கப் போகும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் சூத்திரர்கள் பட்டியலில் இருந்து வன்னியர்களை நீக்கி சத்திரியர்களாக பதிவு செய்ய வேண்டி கடுமையான போராட்டம் நடத்தினார்கள். 1887-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வன்னியர்கள் சத்திரியர்கள் தான் என்பதை நிரூபிக்க வன்னியகுலம் பற்றி விளக்கமாக ஒரு புத்தகம் எழுத முடிவெடுத்து ஒன்று கூடினார்கள் சமுதாய பெரியோர்கள். நம் சமுதாய அறிஞர் டி. ஐய்யாக்கண்ணு நாயகர் அவர்கள் வன்னிகுல விளக்கம் என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி வன்னியர்கள் சத்திரியர்கள் என்பதற்கான சான்றுகளை இணைத்துக் கொடுத்தனர்.

பெரும் அறிஞர் பெருமக்களின் சான்றுரையுடன் அமைந்த வன்னியகுல விளக்கம் ஆங்கிலேயருக்கு ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் உரிய ஆணை கிடைக்கப் பெறாததால் சென்னை மாகாண வன்னிய பெரியோர்கள் ஒன்று கூடி  வன்னியகுல அபிமான சங்கத்தை தோற்றுவித்தார்கள். இந்தியாவில் உருவான முதல் சாதிச் சங்கம் என்ற பெருமையையும் பெற்றது.

ஆங்கிலேய அரசுக்கு மனு கொடுத்து போராடிய கோபால் நாயகர் சமுதாய பெரியோர்களுடன் ஒரு மாநாடு போல் கூட்டம் போட்டு அக்னி குல சத்திரிய மகாசங்கம் ஒன்றை உருவாக்கினார். தமிழகம் முழுவதும் வன்னியர்கள் வாழும் ஊரெல்லாம் சங்கம் இருக்கும் படி செய்ய உறுதி பூண்டு, அதற்காக வன்னிய குலாபிமானி எனும் பத்திரிகையையும் நடத்த முடிவெடுத்தனர்.

இரண்டு சங்களையும் ஒன்றிணைத்து வைக்க முயன்ற பெரியோர்களின் முயற்சியால் 1888-ம் ஆண்டு ஏப்ரல் 8 ஆம் நாளில் வன்னிகுல சத்திரிய மகாசங்கம் தோற்றுவிக்கப்பட்டது. இவர்களது கடும் முயற்சியால் வன்னியகுல பெருமக்கள் ஒன்றிணைந்து போராடியது ஆங்கிலேய அரசுக்கு பெரும் சங்கடத்தை உருவாக்கியது. இதனால் 1891-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது வன்னியர்கள் வன்னியகுல சத்திரியர் என பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

வன்னிய சமுதாய மக்களின் தொடர் முயற்சியால் 1929-ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளி அல்லது வன்னியர்கள் என்பவர்கள் வன்னிய குல சத்திரியர்கள் என்றும் தெலுங்கும் பேசும் மாவட்டங்களில் இருப்பவர்கள் அக்னிகுல சத்திரியர்கள் என்றும் அழைக்கப்படுவதாக அரசு ஆணையை பிறப்பித்தது. இதன் மூலம் சூத்திரர் பட்டியலில் இருந்த வன்னியர் தம் மீதான கறையை துடைத்தெடுத்தனர். இப்படி ஆண்டாண்டு காலமாக போராடியே நமது உரிமையை நிலைநாட்டி இருக்கிறோம்.

சுதந்திரத்துக்கான வேள்வியில் வன்னியர்களும் அளப்பரிய சாதனைகளை செய்தனர். இருப்பினும், 1937-ல் காங்கிரஸ் மாகாண அரசியலை ஏற்படுத்தி சட்டசபைக்கு, மேல் சபைக்கும் 280 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது மூன்று வன்னியர்களை மட்டுமே தேர்ந்தெடுத்தனர். 1945-ல் இந்திய சட்டசபைக்கு ஏழு பேரை தேர்ந்தெடுத்த போது வன்னியரை கை கழுவினர்.

இதனால் கொதித்துப் போன வன்னிய சமுதாய தலைவர்கள் 1946-ல் சட்டசபைக்கும், மேல் சபைக்கும் நடந்த தேர்தலில் தனித்து ஏழு இடங்களில் வெற்றி பெற்றனர். இதனையொட்டி நடந்த பஞ்சாயத்து தேர்தல்களிலும் தனிப்பட்ட முறையில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இதுவே சங்கம் முனை மழுங்கி அரசியல் கடலில் கரைவதற்கு காரணமாக அமைந்தது.

1946-ல் நடந்த பஞ்சாயத்து தேர்தலில் கடலூர் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார். தென்ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவரும், வட ஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மாணிக்க வேல் நாயகரும் இணைந்து வன்னியகுல சத்திரிய அரசியல் சங்கம் ஒன்றை தொடங்கினர். 1946-ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் மகாநாட்டில் வன்னியர் ஜனத்தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ. சீட் ஒதுக்கிட வேண்டினர்.

காங்கிரஸ் கொடுக்க மறுத்தவுடன் தனியாக நின்று தேர்தலை சந்தித்து தோல்வியை தழுவினர். காங்கிரசின் நயவஞ்சகத்தை தமது மக்களிடம் எடுத்து சொல்ல, 1949-ல் நடைபெற்ற ஜில்லா போர்டு தேர்தலில் தனியாக போட்டியிட்டு பெரும் வெற்றியை பெற்றனர். இதன் விளைவால் இரண்டு அரசியல் கட்சிகளாக பிரிந்தனர் இருபெரும் தலைவர்களும்.

நாடு சந்தித்த முதல் பொதுத் தேர்தலில் உழைப்பாளர் கட்சி சார்பில் 19 சட்டமன்ற உறுப்பினர்களையும், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் வெற்றி பெறச் செய்து தமிழக அரசியல் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தினார் படையாட்சியார். ஐயா மாணிக்கவேலரும் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களையும், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் பொது நலக்கட்சி சார்பில் வெற்றி பெற வைத்தார்.

மாணிக்க வேலர் ராஜாஜியின் வேண்டுகோளால் காங்கிரசில் இணைந்து அமைச்சரானார். குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜிக்கு பதில் காமராஜர் முதல்வரானார். அவருடைய வேண்டுகோளால் படையாட்சியாரும் காங்கிரசில் சேர, வன்னியர்களுக்கு இருபது சதவீத இலவசக் கல்வி தர வேண்டுமென்ற கோரிக்கைக்கு உத்தரவாதம் பெற்று இணைந்தார்.

வரலாற்று சிறப்புமிக்க படையாட்சியாரின் 20 சதவீதி இலவசக் கல்வி கோரிக்கையே பின்னர் 20 சதவீத இட ஒதுக்கீடு கோரிக்கையாகவும், மதிய உணவு திட்டத்திற்கான அடித்தளமாகவும் அமைந்தது. இரு பெரும் தலைவர்களும் இட ஒதுக்கீட்டிற்காக பாடுபட்டாலும் படையாட்சியாரின் பணியே இன்றளவும் உயர்ந்து அவரை சமுதாய பெருந்தலைவர் என போற்ற வைத்து இருக்கிறது.

படையாட்சியாருடன் அரசியல் பணிகளில் உறுதுணையாக இருந்தவர் வன்னிய அடிகளார். பல்வேறு அரசியல் மாற்றங்களுக்கு பின் உழைப்பாளர் பொது நலக்கட்சி உருவாக்கப்பட்டது. இருவரும் இணைந்து பணியாற்றினாலும் ஒரு கட்டத்தில் படையாட்சியார் காங்கிரசில் மீண்டும் இணைய, வன்னிய அடிகளார் 1977-ல் உழைப்பாளர் பொது நலக்கட்சிக்கு தலைவரானார்.

1980-ல் திண்டிவனத்தில் வன்னிய அமைப்புகளை நடத்தி வந்த பலரையும் ஒன்றிணைத்து வன்னியர் சங்கத்தை உருவாக்கினார் அடிகளார். 28 அமைப்பைச் சார்ந்தவர்கள் அடங்கிய வன்னியர் சங்கத்திற்கு அடிகளார் குறிப்பாக நான் உட்பட அனைவரும் அடிகளாரின் வன்னியர் சங்கத்தால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள் பொதுச் செயலாளராக சிறப்பாக செயல்பட்டார். இக்கால கட்டம் தான் இன்றிருக்கும் சமுதாய தலைவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டவர் அப்போது திராவிடர் கழக விசுவாசியாக இருந்த டாக்டர் இராமதாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

1984 முதல் தீவிர சமுதாய பணியாற்றிய அடிகளார், 1985-ல் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்குழுவில் உயர்கல்வியிலும், உத்தியோகத்திளிலும் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு  தர வேண்டி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். மறியல் போராட்டம், இரண்டு கட்டத்தையும் தாண்டி மூன்றாவது கட்டத்துக்கு வந்தது. அதில் தான் நாடு அதிர்ந்தது.

1987 செப்டம்பரில் நடந்த மறியல் போராட்டத்தில் 25 உயிர்களை களப்பலியாக்கி இறுதியில் 20 சதவீத இட ஒதுக்கீடு பெற்றோம். அதிலும் 108 சாதிகளை இணைத்து கெடுத்தார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. அதை எதிர்த்தும் குரல் கொடுத்தோம். ஆனால் பா.ம.க. என்ற அரசியல் சதுரங்கம் வன்னியர்களை மீண்டும் பதவி ஆசை குழிக்குள் விழச்செய்தது.

நான் கட்சி ரீதியான அமைப்பில் பங்கெடுக்காமல் சமுதாய பணியாற்ற முடிவெடுத்து வெளியேறினேன். வன்னிய அடிகளாரும், வாழப்பாடியாரும் எனக்கு தோள் கொடுத்து உதவ 2001 வரை அவர்களுடன் இணைந்து சமுதாயப் பணியாற்றிய போதும் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையே பிரதானமாக அமைந்தது. அதன் பின் வன்னியர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இன்றளவும் தனி இட ஒதுக்கீடுக்காக பலவாறான போராட்டங்களை சந்தித்தோம்.

இறுதியில் 2009-ல் அப்போதைய முதல்வராக இருந்த கருணாநிதியிடம் வன்னியருக்கு தனி உள் ஒதுக்கீடு கேட்டு பலமுறை கடிதம் எழுதி நினைவுப்படுத்தினோம். எதற்கும் அசைந்து கொடுக்காததால், 2010 ஜூன் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி வழக்கு தொடுத்தேன். 2011-ல் திமுக ஆட்சி முடியும் வரை வாய்தா வாங்கியே வழக்கை இழுத்தடித்தனர்.

நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டதை அறிந்த, அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த நமது டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் விருப்பத்தின் பேரில் 2010 ஆகஸ்ட்  மாதம் அவரை நேரில் சந்தித்து விளக்கமளித்தேன். அ.இ.அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் உங்களது தனி உள் ஒதுக்கீடு கோரிக்கை கனிவுடன் பரிசீலிக்கப்பட்டு உரிய முறையில் நிறைவேற்றப் படுமன்று வாக்குறுதி அளித்தார் மாண்புமிகு அம்மா அவர்கள்.

2010 செப்டம்பர் மாதம் சென்னை வந்த அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் ஆணைய கமிஷனர் திரு. ராவ் அவர்களை நேரில் சந்தித்து, வன்னியருக்கான தனி உள் ஒதுக்கீடு சம்பந்தமாக விளக்கி மனு ஒன்றை அளித்து வந்தோம். அப்போது 2009-ம் ஆடு பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர் மாண்புமிகு நீதியரசர் ஜனார்த்தனம் அவர்களுக்கு அனுப்பிய மனுவின் நகல் வழங்கப்பட்டு, விளக்கமும் அளிக்கப்பட்டது.

அதன்பிறகு அ.இ.அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களின் ஒவ்வொரு அரசியல் நகர்வுக்கும் முழு மனதோடு ஆதரவளித்து தேர்தல் களப்பணியாற்றினோம். வன்னிய குல பெருமக்களை சந்தித்து ஆட்சி மாற்றமே நம் இனத்துக்காக விடியல் என்று கூறி வாக்களிக்க வேண்டினோம்.

2011 மே 13-ந் தேதி இந்திய தேசம் மட்டுமல்ல அகில உலகமும் கண்களை விரித்து பார்த்து புரட்சித் தலைவியின் விண்ணை முட்டும் வெற்றிக்கு ஆச்சரியப்பட்டது. பதவியேற்ற நாள் முதல் மாநிலத்தின் வளர்ச்சிக்காக தன்னையே அர்ப்பணித்து ஓயாது உழைக்கும் அந்த மாதரசி, மாதர்குல மாணிக்கம் தமிழக முதல்வர் அவர்களுக்கு கடிதம் எழுதும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் தனி ஒதுக்கீட்டை நினைவுப் படுத்திக் கொண்டே இருந்தோம். மாத இதழிலும் தனி இட ஒதுக்கீடு  உட்பட வன்னியர் கூட்டமைப்பின் முத்தான மூன்று கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டி நினைவூட்டலை தொடர்ந்து பிரசுரித்து வந்தோம்.

சட்டமன்ற தேர்தலில் மட்டுமல்ல உள்ளாட்சி தேர்தல், திருச்சி தொகுதி இடைத்தேர்தல்,  சங்கரன் கோவில் தொகுதி இடைத்தேர்தல் என தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க.வுக்கு ஆதரவு அளித்தோம். அதுமட்டுமல்ல அம்மா அவர்கள் ஆட்சி ரீதியாக எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் ஆதரவு அளித்து உறுதுணையாக  நின்றோம்.

இவை அனைத்துக்கும் கடந்த மார்ச் மாதம் 21-ந் தேதி ஒரு மாபெரும் அரசாணையின் மூலம் தான் சொன்ன சொல்லை எப்பாடுபட்டேனும் காத்து நிற்பவர் என்பதை உலகுக்கு மீண்டும் நிரூபித்து இருக்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்தில் நடக்கும் (w.p. No. 14025 of 2010) நமது வழக்கிற்கு பதிலளிக்கும் விதமாகவும் அமைந்திருக்கிறது அந்த உத்தரவு.

வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள 20 சதவீதத்தில் 15 சதவீத தனி உள் ஒதுக்கீடு கேட்டும் கோரிக்கையை ஏற்கும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையோருக்கான நலத்துறை அதனை மத்திய அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் கருத்துரு வேண்டி ஒலு அரசாணையை வெளியிட்டு அனுப்பி உள்ளார். நமது தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் கனிவான  பரிந்துரையால் தான் நலத்துறையினர் இந்த ஆணையை வெளியிட்டுள்ளனர் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

ஏற்கனவே வன்னியர் பொதுச் சொத்து வாரியத்திற்கான வழக்கிலும் சென்னை உயர்நீதிமன்ற அமர்வு அரசின் உரிய ஆலோசனையின் பெயரில் உரித்தான ஆணையை பிறப்பிக்கலாமென வழங்கப்பட்ட தீர்ப்பும் மாண்புமிகு அம்மா அவர்களின் கருணைப் பார்வையால் இப்பொழுது செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

தற்போது தனி உள் ஒதுக்கீடு விவகாரமும் மத்திய அரசின் ஆணையத்திற்கு போனாலும் முறையாக மாநில அரசு அரசாணை வழங்கி விட்டதால் இனி மத்திய அரசும் வழங்க வேண்டிய நிலையே ஏற்படும். இதை தவிர்ப்பதற்கு எந்த வித நியாயமான காரணங்களும் இல்லாதது நமக்கு பெரும் நிம்மதி பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் வன்னியர்களின் நெஞ்சில் பாலை வார்க்கப்போகும் உத்தரவுக்காக நாம் அனு தினமும் ஆண்டவனை வேண்டி நிற்போம்.

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயங்களில் முதல் சமூகமான வன்னிய குலத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் என்றென்றும் ஆதரவாகவே இருந்துள்ளார்கள். நமது சமுதாய பெருந்தலைவர் இராமசாமி படையாட்சியார் பெயரில் மாவட்டம், ஐயா மாணிக்க வேலனாருக்கு அரசு சார்பில் நூற்றாண்டு விழா நடத்தியது, தவத்திரு வன்னிய அடிகளாருக்கு ஆதரவளித்தது என்ற நிகழ்வுகளின் தொடர்ச்சியாய் தனி உள் ஒதுக்கீடு ஆணையும் திகழ்கின்றது.

வன்னியர்களுக்கான முன்னேற்றத்திற்காக நமது அறப் போராட்டமும், நீதிப்போராட்டமும் இனி மெருகுடன் ஆர்ப்பாட்டமாய் அரங்கேறும். நமது அறமும், நீதியுமும் வெல்லும். அதற்கு வன்னியகுல பெருமக்கள் ஒன்று சேர்ந்து தமிழக முதல்வரின் பின்னால் அணி திரண்டு உற்ற உறுதுணையாக விளங்க வேண்டுமென்று குல பெருமக்களை கேட்டுக் கொள்கிறேன்.

நமது போராட்டங்களும் அதில் வெற்றியும் இனியும் தொடரும். அதற்கு வன்னிய குல பெரு மக்கள் கட்சி பாகுபாடு பார்க்காமல் வன்னியர் கூட்டமைப்பில் கரம் கோர்த்து உரத்த குரல் எழுப்ப ஒன்றிணைந்து வருமாறு அன்போடு, உரிமையோடு அழைக்கிறேன்.

வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது வன்னியகுலமாக இருக்கட்டும்.

Menu