சென்னை அரசாங்கமும்

வன்னியரை இழிவு படுத்தியது!

 

இச்சமயத்தில் சென்னை கவர்ன்மெண்டார் 1870-ம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் ஜனக் கணிதயை எடுத்து வெளியிட்டனர். அப்போது அக்கணக்கில் ஒவ்வொரு ஜாதியாருடைய ஜாதி பழக்க வழக்கங்களை குறிப்பிட்டு ஒவ்வொரு சமூகத்தினுடைய ஏற்றத் தாழ்வுகளையும் எழுதி இருந்தனர்.

 

அரசாங்கத்தின் க்ஷ குடி மதிப்பு கணக்கில் க்ஷத்திரிய மரபினராகிய வன்னியரை, சூத்திர வகுப்பில் சேர்த்து அதுவும் 9வது ஜாதியாரென்று எழுதி, பகிரங்கப்படுத்தி இருந்தனர். மேலும் இவ்வகுப்பினருக்கு ‘பள்ளி’ என்ற பெயரை கொடுத்து பிரசுரம் செய்திருந்தனர். அதோடு கூட இப்பள்ளிகளைப் பற்றி மிகவும் விரும்பத் தகாத முறையிலும் அப்புத்தகத்தில் கண்டிருந்தது.

 

எரிகின்ற கொள்ளியில்

எண்ணை வார்த்தது போல்!

 

ஏற்கனவே பல இடங்களில் நடைபெற்ற

1819வது வருடத்தின் முள்ளிப்பள்ளம் வழக்கு

1844வது வருடத்தின்  வன்னியர் – வேளாளர் தகராறு

1860வது வருடத்தின்  செங்கற்பட்டு கோர்ட் வழக்கு

 

ஆகியவைகளினால் மனம் புண்பட்டு மிகவும் உணர்ச்சியும் மனவேதனையும் கொண்டிருந்த நம் வகுப்பினருக்கு கவர்மண்டாரின் 1870வது வருட குடி மதிப்பு கணக்கில் வெளி வந்த மேலே கண்ட விஷயங்கள், மிகவும் ஆத்திரத்தை கிளப்பி விட்டன. நம்மவர்கள் பெரும்பாலோர் கொதிப்படைந்தனர். சென்னை கவர்ன்மெண்ட்டின் அறிக்கையை மிகவும் வன்மையாக கண்டிக்கத் தலைப்பட்டனர். அரசாங்கம் இதை வாபஸ் பெற வேண்டும். அல்லது வன்னியரைப் பற்றி எழுதியுள்ள ‘இழிவு பெயரை’ உடனே மாற்றி அமைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர். ஏற்கனவே பல வகுப்பினரின் செய்கையால் மனம் புண்பட்டுப் போயிருந்த நம் குலத்தவர்களின் உள்ளத்தில் எரிகிற கொள்ளியில் எண்ணையை வார்த்தது போல் ஆகிவிட்டது. சென்னை கவர்ன்மெண்டாரின் இச்செய்கை.

 

பள்ளிஎன்ற பெயர் வேண்டாம்!

வன்னியகுல க்ஷத்திரியர்

என்ற பெயரே எங்களுக்கு வேண்டும்!!

 

நம்மை பிற சமூகத்தவர்கள் தான் ஏசுகிறார்கள். அவமானப் படுத்துகிறார்கள். அரசாங்கம் கூடவா நம்மை இழிவுப் படுத்த வேண்டும் என்று நம் குலத் தலைவர்கள் யோசிக்கலாயினர். நம்மை கெடுக்க யாரோ சதி செய்கின்றனர். ஆகவே தான் சென்னை அரசாங்கமும் இப்படி நடந்து விட்டிருக்கிறது. இதை நாம் எதிர்க்க வேண்டும். வன்னியரைப் பற்றி இழிவாக வந்துள்ள சென்னை கவர்ன்மெண்டின் குடி மதிப்பு கணக்கை நாம் புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம் நம் குலத்தில் மிக முக்கியஸ்தர்களாக இருந்த கணவான்களுக்கு ஏற்படலாயின். அதோடு கூட நம்மை க்ஷ குடி மதிப்பில் ‘பள்ளி’ என்று வரையப்பட்டுள்ளது. இதை மாற்றி ‘வன்னிகுல க்ஷத்திரியர்’ என்று பொறிக்க வேண்டும் என்று முடிவு செய்து இதற்கான வேலையில் அனைவரும் மிகத் தீவிரமாக இறங்கலாயினர்.

இந்த நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களிடத்தில் உணர்ச்சியும், கட்டுப்பாடும் மேலும் மேலும் அதிகமாக ஏற்படலாயின.

 

ஜாதி சங்கிரகசாரம்

தான் வன்னியரைப் பற்றி

ஆராய்ந்து எழுதப்பட்ட முதல் புத்தகம்

 

1872-ம் ஆண்டில் தென்னாற்காடு ஜில்லா திண்டிவனம் தாலுக்கா மயிலம் அடுத்த குண்ணம் கிராமத்தைச் சார்ந்த திரு. முனிசாமி பிள்ளை என்பவர் வன்னியரைப் பற்றிய பல சரித்திரங்களை ஆராயத் தொடங்கினார். முடிவில் வன்னியர் கீழ் ஜாதியல்ல. க்ஷத்திரியர்கள் என்று நிரூபிக்கும் வகையில் ‘சாதி சங்கிரகசாரம்’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இப்புத்தகத்தில் வெளி வந்த செய்திகள் எல்லாம், வன்னியர் க்ஷத்திரியர்கள் என்று பல சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டிருந்தன.

 

இதை அரசாங்கத்தாரும் மற்ற ஆகம வேத சாஸ்திர பண்டிதர்களும் தெளிவுடன் ஒப்புக் கொள்ளக் கூடிய அளவு இருந்தன. இதோடு கூட அக்காலத்திய நம்குல தலைவர்கள் இதோடு நிற்கவில்லை. எங்கும் கூட்டங்கள் நடத்தி மிகவும் கிளர்ச்சி செய்தனர்.

 

அரசாங்கம் தனது ரிப்போர்ட்டில் வெளியிட்டதை வாபஸ் வாங்க வேண்டுமென்று கூக்குரலிட்டனர். மகஜர் அனுப்பினர். தூதுகள் பல சென்றனர்.

 

அரசாங்கம் பணிந்தது!

வன்னியர் பாதி வெற்றி கண்டனர்!

 

இத்தருணத்தில் 1880வது ஆண்டும் வந்தது. 10 வருடத்திற்கு ஒரு முறை  எடுக்கப்படும் ஐன கணிதியை (சென்சஸ்) சென்னை அரசாங்கம் மறுபடியும் எடுத்து வெளியிட்டது. ஆனால் 1880வது ஆண்டு ஜனக் கணக்கில் வன்னியரைப் பற்றி கேவலமாக எழுதப்படவில்லை. அதற்கு பதிலாக ‘பள்ளி’ என்று குறிப்பிடும் இடங்களில் எல்லாம் ‘வன்னிகுல க்ஷத்திரியர்கள்’ என்று சேர்த்து வெளியிட்டிருந்தனர். அதாவது ‘பள்ளி’ அல்லது ‘வன்னிகுல க்ஷத்திரியர்’ என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் பள்ளிகள் 9வது சூத்திர ஜாதியை சேர்ந்தவர்கள் என்று முன் கணக்கில் (1870ல்) குறிப்பிட்டிருந்ததைப் போல், இக்கணக்கில் குறிப்பிடப்பட வில்லை. இவை வன்னியர் செய்த கிளர்ச்சியின் பயனாய் ஏற்பட்ட ஓரளவு வெற்றி என்று சொல்லலாம்.

 

ஆனால் நம் முன்னோர்கள் இதோடு திருப்தி அடையவில்லை. அரசாங்கத்தின் கெஜட்டிலிருந்து அந்த ‘பள்ளி’ என்ற பெயரையே எடுத்து விட வேலை செய்தனர். இதோடு கூட வேறு ஒரு எண்ணமும் நம் தலைவர்களிடையே அன்று ஏற்படலாயிற்று. அதாவது:-

நமக்கு நம் குலத்தின் பெயரால்

ஓர் சங்கம் வேண்டும்!

அதன் கீழ் நாம் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்!

 

நம் குலத்தவர் மீது அரசாங்கமோ அல்லது மற்ற வகுப்பினரோ சாற்றும் குற்றங்களையும், பொல்லாப்புகளையும் நாம் இதுவரையில் பல பிரிவுகளாக இருந்து தான் எதிர்த்து வருகிறோம். இனிமேலும் நாம் அப்படி செய்யக்கூடாது. நம் ஜாதியின் பெயரால் ஓர் குலச் சங்கத்தை ஏற்படுத்த வேண்டும். இச்சங்கத்தில் எல்லா ஜில்லா வன்னியர்களும் ஒன்று சேர வேண்டும். இச்சங்கத்தைக் கொண்டு தான் இனிமேல் நம்முடைய போராட்டத்தையும் மற்றும் எது ஒன்றையும் நடத்த வேண்டும் என்று அனைவரும் ஏகமனதாக முடிவு செய்தனர்.

 

இதன் காரணமாக பல பெரியோர்கள் பல ஊர்களுக்கு சென்று பிரச்சாரம் செய்தனர். சங்கம் எதற்காக வேண்டும்? என்பதைப் பற்றி நம்மக்களிடையே விளக்கினர். இப்பிரச்சாரம் தமிழ்நாடு பூராவிலும் உள்ள வன்னியர்களிடையே மிகவும் வேகமாக பரவிற்று. தென் ஆற்காடு ஜில்லா பரங்கிப்பேட்டை வி. குருசாமி ராயர் அவர்கள், இதற்கான முழு நேர வேலைகளில் இறங்கி மிகவும் முயற்சியுடனும் முன்னின்று உழைத்து வேலை செய்யலானார்.

 

  • ••

 

 

 

சென்னை இராயபுரத்தில் நடந்த கலவரம்!

வன்னியர் மானம் கோர்ட்டேறியது!

 

1924வது ஆண்டிலும் சென்னையில் ஓர் வழக்கு நடைபெற்றுள்ளது. ஆனால் இவ்வழக்கை நடைபெற்ற போது சென்னையிலுள்ள வன்னியர்களையும் மற்ற ஜில்லாக்களிலுள்ள நம் சமூகத்தவரையும் ஓர் தாக்கு தாக்கி விட்டது. காரணம்? இவ்வழக்கில் வன்னியருடைய மானம், கப்பலேறும் நிலையில் இருந்தபடியால் அனேக வன்னிய கனவான்கள் இவ்வழக்கில் தீவிர சம்மந்தம் கொண்டு உதவலாயினர். இவ்விசித்திர வழக்கின் விவரத்தை கீழே விவரிக்கிறோம். அதாவது:-

1924ல் ‘நாடார் குல மித்திரன்’ என்று ஒரு பத்திரிகை நடைபெற்று வந்தது. அப்பத்திரிகைக்கு ஆசிரியர், உரிமையாளர் முறையே சங்கரலிங்க நாடார், முத்து நாடார் என்பவர்களாகும். அவர்களது பத்திரிகையில் வன்னியர்களைப் பற்றி ஓர் கட்டுரை வெளி வந்தது. அக்கட்டுரை வன்னிய ஜாதியையும், குறிப்பாக வன்னியப் பெண்களையும் இழிவு படுத்தி எழுதப்பட்டிருந்தது. அதாவது:- ஓர் வன்னியப் பெண்ணிற்கு பல பேர் புருஷர்கள் இருப்பார்கள் என்றும் இப்புருஷர்கள் அனைவரும் இதை மனம் ஒப்பி ஏற்று அதன்படி அப்பெண்ணை அவர்கள் ஒவ்வொருவரும் மனைவியாக அனுபவிப்பார்கள் என்றும் இது அவர்களுடைய ஜாதிய வழக்கம் என்றும், இன்னும் என்னென்னமோ (எழுத தகாதவைகள்) கேவலமாக அக்கட்டுரையில் எழுதி இருந்தார்கள்.

 

வன்னியருக்கும், நாடாருக்கும் மோதல்

 

இதை வன்னியர்கள் பலமாக ஆட்சேபித்து வாபஸ் வாங்க வேண்டுமென்று பலத்த கிளர்ச்சி செய்தனர். இதை அப்பத்திரிகை நிர்வாகிகள் ஏற்கவில்லை. உங்கள் ஜாதியில் இன்றும் நடப்பதை தான் எழுதினோம் என்று கிண்டல் செய்யவும் முற்பட்டனர். (இதை பெருவாரியான நாடார்கள் ஏற்கவில்லை. இப்படி எழுதினவர்களை கண்டிக்கவும் செய்தனர்.) இதன் மீது வன்னியர்களுக்கும், இவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

 

சென்னை கோர்ட்டில் விசித்திர வழக்கு

 

வடசென்னையைச் சார்ந்த திரு. ஆ. முனிசாமி நாயகர் என்பவரும் மற்றும் 5 பெரியவர்களும் ஒன்று சேர்ந்து ’நாடார் குல மித்திரன்’ பத்திரிகை நிர்வாகிகளான இருவர் மீதும் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கு சென்னை ஜார்ஜ் டவுன் போலீஸ் கோர்ட்டில் நடந்தது. (கேஸ் நெ. 36888/1924) பிரதி வாதிகளான க்ஷ நாடார் இருவரும் தாம் எழுதியதை நிரூபிக்க இராயபுரத்திலும், வண்ணாரபேட்டை துவரை களத்தில் வேலை செய்யும் சில வன்னிய ஆண், பெண்களை சாட்சிகளாக கொண்டு வந்து சாட்சியம் கூற வைத்தனர். சாட்சியம் கூற வந்த அப்பாவிகளான அவ்வன்னிய ஆண், பெண்கள் பத்திரிகையில் வெளி வந்துள்ளது உண்மை என்றும் அதன்படி தான் நாங்கள் நடந்துக் கொள்ளுவது என்றும் வெட்கமில்லாமல் சாட்சியம் கூறினர்.

 

அப்பாவி வன்னியர்களின்

விபரீத சாட்சியம்

 

பாவம் அவர்கள் என் செய்வார்கள்? தங்கள் எஜமானர்கள் சொல்லியபடி சொல்லலாயினர். ஆனால் இதை நம் குல மக்கள் ஏற்கவே இல்லை. பலமாக எதிர்த்து எதிர் வாதம் செய்தனர். தங்களுடைய முன்னோர்கள் நல்ல நிலைமையில் இருந்துள்ளார்கள் என்றும், இதற்கு சாட்சியங்கள் இருக்கிறதென்றும், இப்போது கூட (1924ல்) வன்னியர்கள் சென்னை அரசாங்கத்தில் சில உயர்ந்த பதவிகளில் இருக்கிறார்கள் என்றும் மற்றும் பல பேர் செல்வச் சீமான்களாக சென்னையிலும், வெளியூரிலும் வாழ்கின்றனர் என்றும் எதிரிகள் எங்கள் ஜாதியை இழிவு படுத்த வேண்டுமென்ற கெட்ட நோக்கம் கொண்டே பத்திரிகையில் இப்படி எழுதி, அதற்கு சாட்சியாக எங்கள் வகுப்பைச் சார்ந்த சில அப்பாவிகளையே கொண்டு வந்து பொய் சாட்சியம் கூற வைத்திருக்கிறார்கள் என்றும் இதை கோர்ட்டார் ஏற்க கூடாது என்றும், பலமாக வழக்காடினர். அரசாங்கத்திற்கும் கடிதம் மேல் கடிதம் எழுதினர்.

 

இச்சமயத்தில் வடசென்னையில் வன்னியர் சார்பாக பாக்சர் சோடாகார துரைசாமி நாயகர் வகையராவுக்கும், நாடார்களுக்கும் பல அசம்பாவிதமான மோதல்கள் ஏற்படக் கூடுமென்று அரசாங்கம் அஞ்சி இராயபுரத்திலும், வண்ணாரப்பேட்டையிலும் பலமான போலீஸ் காவல் போடப்பட்டது.

 

நெஞ்சு திருக்கிடும் இந்த விசித்திர கேசும், சென்னையில் பல மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இக்கேஸ் நடைபெறும் ஒவ்வொரு தினத்தன்றும் சென்னையில் உள்ள வன்னியர்கள் ஆயிரக்கணக்கில் கோர்ட்டைச் சுற்றி குழுமி இருப்பர். எதிரிகள் கோர்ட்டிலிருந்து வெளியில் போவதாக இருந்தாலும் அல்லது கோர்ட்டிற்கு வர வேண்டியதாக இருந்தாலும் பலத்த போலீஸ் காவலுடன் தான் வர, போக நேர்ந்ததென்றால் அப்போது நம் வகுப்பினர் கொண்டிருந்த கோபமும், ரோஷமும், ஆத்திரமும் எவ்வகையில் இருந்திருக்கும் என்பதை வாசகர்கள் ஊகித்துக் கொள்ளலாம்

 

இரு சாராருடைய வாதத்தையும் கேட்ட பிறகு கோர்ட்டார் கீழ்கண்ட தீர்ப்பை அளித்தனர், அதாவது.

 

எதிரிகளுக்கு ரூ. 201 அபராதம்

 

….பிரதிவாதிகள் கூறிய சமாதானத்தை கோர்ட்டார் ஏற்பதிற்கில்லை என்றும், பிரதிவாதிகளின் சாட்சியம் எப்படி இருந்தாலும் அதைக் கொண்டே ஒரு வகுப்பினர் இப்படித்தான் நடந்துக் கொள்ளுவார்கள் என்று கருத முடியாதென்றும் வன்னிய ஜாதியில் ஒருவர் தவறாக நடந்திருந்தாலும் அதைக் கொண்டே அந்த ஜாதியின் பூரா மக்களின் நடத்தையும் அப்படியே இருக்குமென்று சொல்லுவதும், எழுதுவதும் மிகவும் மடத்தனமென்றும், வன்னியரில் இன்றும் கூட, பல பேர் நல்ல அந்தஸ்த்தில் இருக்கிறார்கள் என்றும், உதாரணம் வேண்டுமென்றால் அவ்வகுப்பைச் சார்ந்த திருமலை பிள்ளை சென்னை கார்ப்பரேஷனில் மேயராக இருந்திருக்கிறார் என்றும், எனவே பிரதிவாதிகள் வன்னிய ஜாதியினரை வேண்டுமென்றே கேவலமாக எழுதி இருக்கின்றனர் என்றும், எனவே பிரதிவாதிகளான ‘நாடார் குல மித்திரன்’ நிர்வாகிகளுக்கு ரூ. 201 அபராதம் விதிக்கிறேன் என்று தீர்ப்பு அளித்தனர்.

 

 

  • ••• •

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu