சி.என்.ஆர் தன் வாழ்வை இனத்திற்கு அர்ப்பணித்தார்

செப்டம்பர் – 23.

வன்னிய குல மக்களின் வாழ்வாதாரம் சிறந்து விளங்கி சமுதாயத்தல் உயர்ந்த இடத்தில் வாழ்ந்து காட்ட வேண்டுமென்பதற்காக 1987-ல் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு நடந்த ஒரு வார சாலை மறியல் போராட்டத்தின் முக்கியமான நாளாகும். செப்டம்பர் 17-ல் ஆரம்பித்த சாலை மறியல் போர் 23-ந் தேதி முடிவுற்றது. ஆனால் வன்னிய குல மக்கள் வடித்த கண்ணீரும், சிந்திய ரத்தமும், கொடுத்த உயிர்ப் பலியும் இன்னும் என் மனதில் ஆறாத்துயராய் படிந்து நிற்கிறது.

1980-களில் தொடங்கி சுமார் ஆறாண்டு காலம் தமிழகத்தில் வன்னியர் வாழுமிடம் எல்லாம் சென்று தங்கி அவர்களை வன்னியர் சங்கத்தில் உறுப்பினாராக்கி, சாலை மறியல் போராட்ட களத்திற்கு தயார் படுத்தியது வரையிலான நாட்கள் என் வாழ்நாளில் எந்தவொரு கணத்திலும் மறக்க முடியாத ஒன்று.

போராட்ட களத்திற்கு சென்று மறியல் செய்து கைதாகி சேலம் மத்திய சிறையில் நமது சங்கத்தினருடன் உள்ளே இருந்த போது கேட்ட செய்திகள் நெஞ்சில் குத்தீட்டிகளாக பாய்ந்தன. தினமும் இருவர், மூவர் என்று போராட்ட களத்தில் காவல் துறையினரால் சுடப்பட்டு மாண்டதாக வந்த செய்திகளால் கண்ணீர் வடித்தோம். அவர்களுடன், அவர்களது குடும்பத்தினருடன் பேசி இரக்கம் காட்டவோ, காயம்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்து கொடுக்கவோ வழியில்லாமல் இப்படி சிறையில் அடைக்கப்பட்டு விட்டோமே என்று கண்ணீர் விட்டு கதறி துடித்தேன்.

போராட்ட களத்தில் பலியான அத்தனை தியாகிகளின் குடும்பத்தினரையும் சிறையில் இருந்து வெளி வந்த பின்பு நேரடியாக சந்திப்பதென சிறைச்சாலையில் முடிவெடுத்தேன். சிறையிலிருந்து வெளி வந்து அந்த உத்தம தியாகிகளின் காலடிபட்ட அவர்களின் இல்லங்களுக்கு சென்று வணங்கி, அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொன்னேன். அதன் தொடர்ச்சியாக போராட்ட களத்தில் கைதானவர்களை விடுவிக்க பெரிய சட்டப் போராட்டமே நடைபெற்றது.

தேர்தல் வந்தது. தி.மு.க. ஆட்சி அமைந்தது. தனது தேர்தல் அறிக்கையிலேயே வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது சம்பந்தமாக உறுதிமொழி அளித்தது. வெற்றி பெற்ற பின்பு முதல்வர் கருணாநிதி அவர்களுடன் நடந்த பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைக்கு பின்னர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் ஒன்று உருவாக்கப்பட்டது.

அதில் வன்னியர் குல சத்திரியராகிய நம் சமுதாயத்துடன் முதல்வர் கருணாநிதி தான் சார்ந்த இசை வேளாளர் சமுதாயம் உட்பட 108 சாதிகளை இணைத்து ஏற்படுத்தப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் முதல்வர் என்ற முறையில் கருணாநிதி அவர்களும் வன்னியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையில் சி.என். இராமமூர்த்தியாகிய நானும் கையெழுத்திட்டோம்.

25 உயிர்களை களப்பலியாக்கி போராடியது நாம். எதுவுமே கேட்காமல், போராடாமல் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து கொண்டு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 107 சாதிகளை இணைத்து இன்று அது 115 சாதிகளாகி விட்டது. அதனால் நமக்கான கல்வி, வேலை வாய்ப்பு உரிமைகள் சமமாக கிடைக்கவில்லை என்பதை உணர்ந்தே மீண்டும் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கோரிக்கை எழுதப்பட்டது.

நான் மட்டுமல்ல. வன்னிய அமைப்பினர் பலரும் வேண்டுகோள் விடுத்து கோரிக்கையை எழுப்பிய வண்ணம் இருந்தனர். ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த கால போராட்டங்கள் நடந்த போது நாம் ஆட்சி அதிகாரத்தில் இல்லை. ஆனால், தனி இட ஒதுக்கீடு  கோரிக்கை எழுந்த போது சுமார் பத்தாண்டுகளுக்கும் மேலாக மத்தியிலே முக்கிய அமைச்சர்களாக கொலுவீற்றிருந்தனர். இன்று இட ஒதுக்கீடு கேட்கும் போலி வேஷதாரிகள், பாசமுள்ள மகன் கட்சியான பா.ம.க. மாநிலத்திலும், மத்தியிலும் ஆட்சியில் அங்கம் வகித்தும், ஆட்சியாளர்களுக்கு அருகில் இருந்தும் வந்தது. ஆனால் ஒரு நாள் கூட ஒரு முறை கூட இட ஒதுக்கீடு கோரிக்கையை கேட்கவும் இல்லை. கோரிக்கையாகக் கூட வைக்கவும் இல்லை.

இதை விட அயோக்கியத்தனம் நிறைந்த இராமதாசின் சமுதாய துரோகத்தை நம் மக்களுக்கு விளக்குவது எப்படி என்று எனக்கு புரியவில்லை. ஒரு கூத்தாடி குடும்பம் இந்த சமுதாயத்தை வீணடித்து, மழுங்கடித்து நம்மை ஏதுமற்ற ஏதிலிகளாக ஆக்கி விட்டார்களே என்ற கேள்விக் கனைகளோடு  மக்களை சந்தித்து தனியொரு மனிதனாக நம் சொந்தங்களோடு உறவாடி 15 ஆண்டுகளாகி விட்டது.

நான் எடுத்துக் கொண்ட சமுதாயப் பணியை சட்டக் கல்லூயில் படித்துக் கொண்டிருந்த 1980களில் இருந்து இன்றுவரை எந்த விதமான சமரசமும் இல்லாமல், மற்ற சமுதாயத்தினருடன் எந்த சச்சரவும் இன்றி தொடர்ந்து தொய்வின்றி பணியாற்றி வருகிறேன். அப்போது தான் 2006-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்று பெற்று ஆட்சிக்கு வந்திருந்தார். திமுகவின் தலைவர் முதல்வர் கருணாநிதி. அது சமயம் அருந்ததியர்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஆகிய மூன்று சமுதாயத்தினருக்கும் தனி உள் ஒதுக்கீடு வழங்கினார் முதல்வர் கருணாநிதி.

இதையே முன்னுதாரணமாக வைத்து வன்னியர் சமுதாயத்திற்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள இருபது சதவீதத்தில் 15 சதவீத தனி உள் ஒதுக்கீடு வழங்குமாறு பலமுறை கடிதம் எழுதி கோரிக்கை வைத்தேன் வன்னியர் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவராக தொடர்ந்து கேட்டு வந்த எனது கோரிக்கையை முதல்வர் கருணாநிதி பரிசீலனைகூட செய்யவில்லை. எந்த பதிலும் அரசிடமிருந்தோ, முதல்வரிடம் இருந்தோ வராததை காரணம் காட்டி உடனடியாக வன்னியருக்கு 15 சதவீத தனி உள் ஒதுக்கீடு  தரவேண்டி மாநில அரசுக்கு உத்தரவிடுமாறு கேட்டு சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தேன்

2009-ம் ஆண்டிலிருந்து பலமுறை உயர்நீதிமன்றத்தில் எனது மனு தள்ளுபடி  செய்யப்பட்டது. நம் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் கூட இது எதற்கு வேண்டாத வேலை, இதெல்லாம் சாத்தியமா? என்றெல்லாம் கேட்டார்கள். நம் சமுதாய வழக்கறிஞர்கள் கூட வாதாட முன் வராத நிலையில் எனது சட்டக் கல்லூரி தோழரும், சட்ட வல்லுனரும், மூத்த வழக்கறிஞருமான திரு. கே. அன்பரசன் அவர்களை சந்தித்து எனது வேண்டுகோளை வைத்தேன்.

ஆர்வமுடன் அனைத்தையும் கேட்ட அன்பரசன் உடனடியாக வழக்குக்கு தேவையானவற்றை கேட்டார். அன்பு நண்பர் கேட்டவற்றை கொடுத்துவிட்டு வந்தேன். ஒரு நாள் வரச்சொல்லி மனுவில் கையெழுத்திடுமாறு சொன்னார். அவர் கேட்ட அரசு ஆணைகளை வாங்க எனக்கு ஐந்து மாதங்கள் ஆகின. ஆனால், ஐந்தே நாளில் வழக்கு தொடுப்பதற்கான அனைத்தையும் தயார் செய்து நீதி மன்றத்தில் நமது தனி உள் ஒதுக்கீடு கோரிக்கையை வேண்டி மனு தாக்கல் செய்தார் தோழர் அன்பரசன்.

அப்போது இருந்த கருணாநிதியின் அரசு தனது ஆட்சியில் இறுதிக் காலம் வரை வாய்தா வாங்கிக் கொண்டே வந்ததே தவிர உருப்படியான பதில் எதுவும் தாக்கல் செய்யவில்லை. நம்மை தொடர்ந்து ஆதரித்து ஊக்குவித்து வந்த அஇஅதிமுகவின் பொதுச் செயலாளர் மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஆட்சிக்கு வந்த பின்பே தனி ஒதுக்கீடு சம்பந்தமாக ஒரு அரசு ஆணை அரசு சார்பில் வெளியிடப்பட்டது.

தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினருக்கான நல ஆணையத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அந்த ஆணையை மத்திய அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அனுப்பி பரிந்துரை செய்யுமாறு கேட்டு இருக்கிறது மாநில அரசு. அந்த ஆணையில் எனது உயர்நீதி மன்ற வழக்கு விவரத்தை தெரிவித்து உரிய பரிந்துரை அளிக்குமாறு கேட்டது எனது நெடிய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகக் கருதுகிறேன்.

1987-ல் நடந்த சாலை மறியல் போராட்டத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் உருவாக்கப்பட்டு 20 சதவீத இட ஒதுக்கீடு 108 சாதிகளுக்கு சேர்த்து ஒதுக்கப்பட்டது. அந்த புரட்சியின் தொடர் போராட்டமாக தனியொரு மனிதனாக காலமாற்றத்தின் சூழலுக்கேற்ப அறிவாயுதம் ஏந்நி நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி இன்று வன்னியருக்கு தனி உள் ஒதுக்கீடு கோரிக்கையை வென்றெடுத்து இதோ! தமிழகத்தின் மிகப் பெரும்பான்மை சமுதாயத்தின் முதல் சமூகமான வன்னிய சமுதாயத்திற்கு அர்ப்பணித்து இருக்கிறேன்.

25 வன்னிய குல வீரத் தியாகிகளின் நினைவஞ்சலி நாளில் வன்னியர் கூட்டமைப்பின் முத்தான மூன்று கோரிக்கைகளிலும் பெற்ற வெற்றியை அந்த தியாகிகளின் காலடியில் சமர்ப்பணம் செய்ததை என் வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன்.

தொடர் போராட்டமாக உருவெடுத்துவிட்ட எனது சமுதாயப் பணி தொடர என் உயிரனும் மேலான வன்னிய குல சொந்தங்களே! கத்தியின்றி, ரத்தமின்றி பெரிய யுத்தத்தை நடத்த பெரியோர்கள் தங்கள் ஆசியையும், தாய்மார்கள் தங்கள் மாசற்ற அன்பையும், இளைஞர்கள் உறுதியான, வீரமான களப்பணியாற்றும் பண்பையும் தந்திடுமாறு அன்புடக் கேட்கிறேன்.

உங்களின் வீரமான ஆதரவை அளித்து உத்வேகம் தருமாறு உரிமையுடனும், உண்மையுடனும் வேண்டும்.

அன்பு உறவினர்,

சி.என். இராமமூர்த்தி

         ஆசிரியர்

Menu