சி. என். ஆர். எழுதும் ஓங்கி உயர்ந்து நிற்கும் வன்னியர் வரலாறு
உலகின் ஒப்பற்ற இனங்களில் உயர்ந்த இனமாம் வன்னிய இனத்தின் எனதினிய உயிர்த்துடிப்பான சொந்தங்களே!
ஆகஸ்ட் மாத வன்னியர் குரல் இதழில் நான் எழுதி இருந்த மனிதர்குல மாணிக்கம் கல்விக் கொடை வள்ளல் பி.டி.லீ. செங்கல்வராய நாயக்கரது சுயசரிதையை படித்த நமது சொந்தங்கள் பலர் நெகிழ்ச்சியுடன் என்னோடு உரையாடினார்கள். செங்கல்வராயரது கல்வி நிறுவனங்களை நிர்வகித்து வருபவர்களிடம் இருந்து மகிழ்ச்சிகரமான, தன்மானமிக்க பாராட்டுக்கள் வந்தன. நமது சமுதாயத்தின் உயர்ந்த மனிதர்கள் அனைவரும் இத்தனை நாள் இவற்றையெல்லாம் படிக்காமல் விட்டு விட்டோமே என்றும் நாயக்கர் அவர்களுக்கு எந்த விதமான மரியாதையையும் அரசு செய்யாவிட்டாலும் நாமாவது முன்னெடுத்து செய்திருக்கலாமே? என்று சிலர் ஆதங்கப்பட்டனர்.
வேப்பேரி மற்றும் ஊவேரியில் அமைந்துள்ள நாயக்கரின் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணாக்கர்கள் சிலரும் என்னுடன் கைபேசியில் தொடர்பு கொண்டு பல நல்ல விஷயங்களை எடுத்துச் சொல்லி எமக்கு உதாரண புருஷராக விளங்குகிறார் செங்கல்வராய நாயக்கர் என்று புகந்து உரிய நேரத்தில் அதை புத்தகமாக கொண்டு வந்ததற்காக உங்களை வாழ்த்துகிறோம் என்றும் சொல்லி என்னை உணர்ச்சிப் பெருக்கில் மூழ்க வைத்து விட்டார்கள்.
செங்கல்வராய நாயக்கர் போன்ற நமது முன்னோர்கள் அமைத்துச் சென்ற அடித்தளத்தின் மீது தான் நாம் நிற்கிறோம் என்பதை நமது சமுதாயம் உணர்வது எப்போதென்று எனக்கு விளங்கவில்லை. சுதந்திர இந்தியாவில் நமது சமுதாயத்திற்காக பாடுபட்டவர்களையே மதிக்காத நினைவு படுத்திக் கொள்ளாத நம்மவர்கள் அடிமை இந்தியாவில் நமக்காக, நம் சமுதாயத்திற்காக பாடுபட்டவர்களையா மதிக்கப் போகிறார்கள் என்று நான் ஆதங்கப்பட்டதுண்டு.
ஆனால் கல்வி வள்ளல் கண்டர், மனிதகுல மாணிக்கம் செங்கல்வராய நாயக்கர் ஆகியோரது சுயசரிதையை படித்த பின்பு நம் இன மக்கள் அவற்றை படித்து விட்டு என்னிடம் சிலாகித்து பேசுதை கேட்டு என் மனம் ஒரு பெருமித நிலைக்கு வந்துவிட்டது. உயர்வான வன்னிய சமூகத்தில் தான் நாம் பிறந்து இருக்கிறோம் என்ற தொலை நோக்கான பார்வை இப்போது எனக்கு கிடைத்து இருக்கிறது. நம் சமூகத்திற்காக அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காக பாடுபட்டு உழைத்து மறைந்துவிட்ட அந்த மாமனிதர்களின் வாழ்க்கையை தொடர்ந்து எழுத இது போன்ற சொந்தகளின் ஆறுதலான, மகிழ்ச்சிகரமான வார்த்தைகள் என்னை மேலும் உற்சாகமடைய வைத்துள்ளது.
இந்த இதழ் நமது வீரத்தியாகிகளுக்கான நினைவஞ்சலி சிறப்பிதழாக அமைந்தால் நல்லதாக இருக்குமென நினைத்தேன். ஏற்கெனவே உயிர் நீத்த அத்தியாகிகளின் தியாக வரலாற்றை எழுதி விட்டதால், இதுவரை யாரும் எழுதாத, எழுத முயற்சி செய்யாத ஒரு விஷயத்தை எழுதுவதென தீர்மானித்து களமிறங்கினேன். அடுக்கடுக்கான புத்தகங்கள், கணக்கில்லாத அளவுக்கு நண்பர்களிடமும், மூத்த சொந்தங்களிடமும் தொலைபேசியில் சிலவற்றிற்கு விடை தேடி முடித்து மனதுக்குள் ஏற்பட்ட ஒரு தீர்க்கமான முடிவால் எமது வன்னியர் சமுதாயத்தின் ஆதி முதல் இன்றைய கால வன்னியர் கூட்டமைப்பு வரையிலான நடந்தவற்றை தொகுத்து ஒரு வரலாற்றுக் கட்டுரையை எழுத துணிந்தேன். இதோ! அது இப்போது உங்கள் கண்முன் கட்டுரையாக காணக் கிடைக்கிறது. ஒரு புதிய முயற்சியாக இதை பரிசோதித்துப் பார்த்து எழுத முனைந்தேன். நிறைவாக இருந்தால் நம் சொந்தங்களுக்கு எடுத்துச் சொல்க; ஏதாவது தவறு இருந்தால் எனக்கு எடுத்துச் சொல்க!
சொந்தங்களே! இந்தியாவிலேயே குறிப்பாக தமிழகத்தில் உள்ள சாதி அமைப்பில் மூத்த இனமாய் ஓங்கி உயர்ந்து நிற்பது நமது வன்னிய சமுதாயமே என்பதில் இரு வேறு கருத்து இருக்க முடியாது. தமிழகத்தின் பெரும்பான்மையான முதல் சமூகமான வன்னிய இனத்தின் தோற்றத்தை, மன்னர்கள் காலத்தை பாளையக்காரர்கள் ஆண்டதை ஆங்கிலேயர் காலத்திலேயே இனத்திற்காக போராடி வென்ற வன்னிய மகா சங்கத்தை, சங்கத்தைத் தொடர்ந்து அரசியல் பாதையில் பயணித்த நமது முன்னோர்கள் வாழ்வியலை 1980-களில் தோன்றிய வன்னியர் சங்கத்தை, 1987-இல் களமாடிய வீரத்தியாகிகள் வரலாற்றை, வன்னிய சத்ரியர் சங்கத்தை, வன்னியர் கூட்டமைப்பை என வன்னியர் வரலாற்றை அன்றும் இன்றுமாக நடந்ததை தொகுத்து இக்கட்டுரையை எழுத முடிவெடுத்து அது புத்தகமாக உங்கள் முன் படைக்கப்பட்டிருக்கிறது.
வன்னியர் வரலாறு
வன்னியர் புராணம், வன்னியர் மகா சங்கம், வன்னியர் கூட்டமைப்பு என முக்கனியாய் நினைத்து சுவைத்து மகிழ்ந்திடும் வண்ணம் நமது வன்னியர் வரலாறு எளிமையாக நிறைவாக எடுத்தாளப்பட்டு இருக்கிறது. வரலாற்றில் சில பகுதிகள் படிக்க சுவாரஸ்யம் இல்லாதவைகளாக இருக்கலாம். ஆனால் இவையெல்லாம் நமது முன்னோர்களின் வாழ்க்கை நம் ஒவ்வொருவருடைய குடும்பத்தின் நான்கு தலைமுறைக்கு முந்திய தாத்தா, பாட்டிகளின் வாழ்க்கை வரலாறு என மனதில் நினைத்து முன்னோர்களுக்கு மரியாதை செய்யும் பொருட்டாக இதை படித்து உணர்வு பெறுக என்று உங்களை படிக்க அழைக்கிறேன்.
கடந்த ஜூன் மாத வன்னியர் குரல் இதழில் ‘வணங்க வேண்டிய வனனியர் புராணம்’ என்ற தலைப்பில் நமது சமுதாயத்தின் தோற்றத்தைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையை எழுதி இருந்தேன். இருந்தாலும் வன்னியர் வரலாற்றை முழுமையாக அறிந்து கொள்ள வேண்டி எழுதப்படும் இக்கட்டுரையில் மீண்டும் வன்னியர் புராணம் பற்றி குறிப்பிட வேண்டி இருக்கிறது.
புராணம், இலக்கியம், அரசர் காலம், பாளையக்காரர்கள் காலம், ஆங்கிலேயர் காலம், கடைசியாக சுதந்திர இந்தியாவில் நமது நிலை மற்றும் தற்போதைய நமது வன்னியர் கூட்டமைப்பு வரையிலான ஒரு தொகுப்பாக இக்கட்டுரை அமையப் பெற்றிருக்கிறது என்பதை மகிழ்வுடன் விளக்கி வன்னியர் வரலாற்றை தொடங்குகிறேன்.
மனிதக்கூட்டம் மனித சமூகமாக முதன்முதலில் தோன்றிய பகுதி ஆப்பிரிக்க நாடுகள் என்பது மானிடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்கள் கருத்தாகும். கடல் விழுங்கிய லெமூரியாக் கண்டத்தில் ஒரு பகுதியாகிய குமரிமுனையில் மனிதன் முதன்முதலாகத் தோன்றியதாகவும், அங்கு வாழ்ந்த மனித சமுதாயமே முதல் சமுதாயம் என்றும் நமது மானிடவியல் மற்றும் மொழியியல் அறிஞர்கள் கூறுவதும் உண்டு.
இதற்கு நமது அறிஞர் பெருமக்கள் வைக்கும் முதன்மையான சான்று தமிழ் மொழியும், சாதியும், சாதியின் உட்கட்டமைப்பும் தான். இந்தியாவில் ஆரியர் வருவதற்கு முன்பே தொழில் சார்ந்த சமுதாய குழுக்கள் மிகுதியாக இருந்தன. ஆரிய இனத்தில் பிறந்த மனு என்பவரால் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் (சொல்லப்படும்) இயற்றப்பட்ட மனுதர்ம சாத்திரத்தின் வழியே வர்ணாசிரமம் தன்னை நிலை நிறுத்திக் கொண்டது. இதுவே அன்று அரசோச்சியவர்களின் அரவணைப்பில் மரமாகி விரிந்து பரந்து கிளை பரப்பி இந்திய சமூகத்தை ஆட்டிப் படைத்தது. இந்து மதமாக தன்னை உருவாக்கிக் கொண்டது.
சாதியை சொன்ன மனுவால் சாதி பற்றிய சட்டத்தை இயற்ற முடியவில்லை. மனுவால் முடியாது என்பது மட்டுமல்ல. சாதி மனுவிற்கு நெடுநாட்களுக்கு முன்பே நின்று நிலவி வந்தது என்பது தான் உண்மை. சாதியை உயர்த்திப் பிடித்த மனு சாதியை தத்துவத் தன்மை கொண்டதாக ஆக்கி வைத்தான்.
ஆரியர்களான பார்ப்பனர்களுக்கு கீழ்ப்பட்ட எல்லா சாதியினருள் சிலவற்றுக்கு புராணங்கள் உண்டு. சிலவற்றுக்கு வரலாறுகள் உண்டு. இன்னும் சிலவற்றுக்கு அங்கொன்றும், இங்கொன்றுமாக தடயங்கள் இருக்கின்றன. சிலவற்றுக்கு செவி வழிச் செய்திகள் மட்டுமே உள்ளன. ஒடுக்கப்பட்ட குலங்களுக்கு எதுவொன்றும் இல்லாமல் காளியும், காடனும், மாடனும் ஆன குல தெய்வக் குறியீடுகளே உள்ளன.
வன்னியர் புராணம்
இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் சாதிகளின் தோற்றமும், வளர்ச்சியும், வீழ்ச்சியும் – எழுச்சியும் பற்றி தெரிந்து கொள்ள முயன்றால் அதற்கான ஆவணங்களை, தடயங்களை, சான்றுகளை, புராணங்களை, வரலாற்றுகளை, கதைகளை, செய்திகளை, செவி வழி வாயுரைகளை என அனைத்தையும் படித்துப் பார்க்க வேண்டி இருக்கிறது. அந்த தேடலில் தான் நமது குலத்திற்கான ஆதாரங்களை வேண்டி தேடுதல் பயணம் மேற்கொண்டு அதில் கிடைத்தவற்றையே தொகுத்து எழுதி உங்கள் கையில் தவழ விட்டிருக்கிறேன்.
நமது வன்னிய இனத்திற்கு பெருமை சேர்த்து, நம்மவர்க்கு ஆதார அடித்தளமாய் ஆரம்ப காலத்தில் விளங்கியது வன்னியர் புராணமே. தமிழில் புராண இலக்கியங்கள் சுமார் 12 ஆம் நூற்றாண்டுக்கு மேல் தான் தோன்றியதாக கருதப்படுகிறது. அதனால் புராணங்களே அந்த நூற்றாண்டுக்கு பின்பு தான் நடந்ததாக எடுத்துக் கொள்ள முடியுமா?
வடமொழியிலுள்ள புராணங்களைத் தமிழாக்கம் செய்த காலந்தான் பிற்பட்ட காலமே தவிர புராணக்கதை நடந்த காலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு என்பதே உண்மை. இவ்வாறே புராணங்களின் காலத்தை கணக்கிட வேண்டி உள்ளது.
புராணங்களுள் ஒன்றாகிய வன்னிய புராணமும் தமிழில் எழுதப்பட்டது. பிற்காலமே தவிர அது முன்பே வடமொழி ஆக்கினேய புராணத்தில் உள்ளதாக பெரும் அறிஞர்கள் சான்றோடு விளக்கி இருக்கிறார்கள். இதற்கு பலருடைய விளக்கமான ஆய்வுகள் இருக்கின்றன.
மச்ச புராணத்திலே அங்கிரஸன் கோத்திரத்தில் உதித்த அரசர்களின் சந்ததிகளைக் கூறும் இடத்தில் அக்கினி என்றும் பாண்டு என்னும் அரசர்களைப் பற்றி கூறப்படுகிறது. இப்பாண்டுவின் வம்சத்தவரே பாண்டியர் என்கின்றனர். இதனை வடமொழி இலக்கணம் வகுத்த பாணினி முனிவரும் உறுதி செய்கிறார்.
ஆக்கினேய புராணத்தின் 135வது அத்தியாயத்தில் பரத கண்டத்தை வடபெண்ணை முதல் குமரி இலங்கை தென்கோடி வரையில் ஆக்கினேய கண்டமென்றும், பெண்ணையிலிருந்து விந்திய பருவதம் வரையில் சௌர (சூரிய) கண்டமென்றும், விந்திய பருவதத்தினின்று இமய பர்வதம் வரையில் சௌமிய (சந்திர) கண்டமென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, ஆக்கினேய கண்டத்தில் சேர, சோழ, பாண்டியர்கள் மட்டுமே அரசர்கள் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.
வன்னி வம்சத்தைப் பற்றி கூறும் புராணங்கள் பிராபம், வாயவ்வியம், மகா சிவபுராணம், தேவி பாகவதம் முதலியன யாதியின் புத்திரனாகிய துருவ மகாராஜன் வம்சத்தைக் கூறும் போது அவ்வம்சம் வன்னி சம்பு பாண்டு என்னும் பெயர் கொண்ட சத்திரியர்களால் புகழ் பெற்றிருந்ததென்று கூறுகின்றன.
வன்னி என்னும் அரசன் அக்கினியில் தானாய் அவதரித்தானென்றும் அக்கினியிலிருந்து உதித்தானென்றும், இவனுடைய வம்சத்தோர் ஆக்கினேயர், ஆங்கிரஸர், சேர, சோழ, பாண்டியர், கௌண்பிரர், ஆண்டிரர் முதலிய பெயர்களால் அழைக்கப்பட்டிருக்கின்றனர். வன்னியின் வம்சத்தில் வந்தமையால் வன்னி குலத்தவரென்று அழைக்கப்பட்டனர். பொதுவாகவே வன்னி எனும் பெயர் அரசர்களுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன.
இப்படி புராண விஷயங்களை விளக்கிக் கொண்டே போனால் பெரும் தொடராகவே போய் முடியும். வன்னிய புராணத்தில் இரண்டு விதமான புராணங்கள் உள்ளன. அதாவது ஆக்கினேய புராணத்தை தவிர, வன்னியர் தோற்றம் பற்றி இரண்டும் இரண்டு விதமாக சொல்கின்றன. அவற்றை சுருக்கமாக பார்ப்போம்.
ஆசுரனாகிய சூரபத்மனின் தங்கையாகிய அஜோமுகி, துர்வாசருடன் இணைந்து வாதாவி, வில்வலன் என்ற இரு அரக்கர்களைப் பெற்றாள். அவர்கள் இருவரும் எட்டு மலை சேர்த்தது போன்ற உடலுடன் பலமான தோற்றத்துடன் விளங்கி பெரிய விலங்குகளையே விழுங்கி சாப்பிடும் அளவுக்கு பெரும் பசியுடன் வாழ்ந்து வந்தனர்.
இருவரும் பேசி வைத்து முனிவர்களை அழைத்து ஏமாற்றி அவர்களையே அடித்து பசித்து வந்த வேளையில் அகத்தியரால் வில்வலன் கதை முடிக்கப்பட்டது. இதனால் மனம் நொந்த வாதாவி சிவனை நோக்கி தவமிருந்து யாராலும் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான்.
சுக்ராச்சாரியார் மூலம் பெரும் அரக்கர் படையை பெற்றவன் தனக்கு நான்கு பிள்ளைகளையும், நான்கு சகோதரர்களையும் பெற்றான். இவன் மூவுலகையும் ஆட்டிப் படைத்ததால் தேவர்கள், முனிவர்கள் நாரதரிடம் முறையிட, நாரதர் சிவனிடம் எடுத்துரைத்தார். சிவன் நடப்பதை அறிந்து திருமாலிடம் வழி கேட்க கயிலையின் வலப்புறத்தில் சம்பு முனிவரைக் கொண்டு யாகம் செய்யச் செய்து சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றும் வியர்வையை விட்டால் அதில் தோன்றுபவன் அரக்கர்களை அழிப்பான் என்றார் திருமால்.
அவ்வாறே சம்பு முனிவர் யாகம் செய்ய சிவபெருமான் நெற்றிக்கண் வியர்வையை அதில் ஊற்ற, அதிலிருந்த ஒரு வீரன் குதிரையுடன் செங்கழு நீர் மாலையுடன் தோன்றினான். வன்னி அக்னி தீயிலிருந்து தோன்றியதால் வன்னியன் என்றும், உருத்திரன் அம்சமானதால் உருத்திர வன்னியன் என்றும் பெயரிடப் பட்டான். இப்படி வன்னியர் தோன்றிய வரலாறாக கூறப்படுகிறது.
பின் வன்னிய வீரன் இந்திரன் மகளை மணந்து அக்னியின் மூலம் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்து, வளர்த்து ஐவருமாக வாதாபியை அழிக்க கிளம்பி வெற்றியும் பெற்றனர். இது வன்னிய அரச குலம் தோன்றி வழி வழியாய் வந்த வரலாறு.
அடுத்ததாய் இரண்டாவது புராணத்தில் உள்ளதை பார்ப்போம். திருச்சியில் உள்ள திருவானைக்கா எனும் திருத்தலத்தில் சிவபெருமான் வெண்ணாவல் மரத்தின் அடியில் வீற்றிருக்கிறார். எனவே ஜம்புகேஸ்வரர் (ஜம்பு – நாவல்) என பெயர் பெற்றுள்ளார்.
இவ்வூரில் வாழ்ந்த முனிவரின் மகனுக்கு பெருந்தவத்தால் குழந்தை பிறக்க, அவனுக்கு சம்பு எனப் பெயரிட்டனர். பல கலைகளை கற்றுத் தேர்ந்த சம்பு, பெற்றோர் இசைவோடு ஆழ்ந்த தவத்தை மேற்கொண்டு சம்பு முனிவர் ஆனார்.
சம்பு முனிவரின் தவத்தை உணர்ந்து சிவனும், உமாதேவியும் நேரில் காட்சியளித்தனர். உமாதேவிக்கு பணிவிடை செய்த அசயத்தியை சம்பு முனிவருக்கு திருமணம் செய்து வைத்து உன் மரபு தழைக்க வேண்டும் என்ற வாழ்த்தையும் பெற்றனர்.
இதற்கிடையே தென் கடலின் இடையே வாதாவி, இனதாவி என்ற இரு அரக்கர்கள் பல கொடுமைகளை புரிந்து வந்தனர். தேவர்களின் கூக்குரலுக்கு செவி சாய்த்த சிவபெருமான், உமையம்மையிடம் நீ திருவானைக்கா சென்று சம்பு முனிவரைப் புத்திர காமேட்டி யாகம் செய்யச் சொல் என்றார். சம்பு முனிவர் யாகத்தினிடையே புலிக் கொடியின் கீழ் குதிரையின் மீது ஒரு வீரன் தோன்றினார்.
யாகத் தீயிலிருந்து உதித்ததால் ருத்திர வன்னியன் அவதரித்தான் என்ற அசரீரி எழுந்தது. சகல கலைகளையும் கற்ற ருத்திர, வன்னியன் இருவரை மணந்து கொண்டு, ஐந்து புதல்வர்களை பெற்றெடுத்தான். இவர்கள் வளர்ந்து திருமணமாகி போருக்குத் தயாராகினர். போரில் வாதாவி. இனதாவியை அழித்து தேவர்களையும் மற்றவர்களையும் காத்தனர் என்கிறது இரண்டாம் வரலாறு.
இரண்டு புராணங்களிலும் சில வேறுபாடுகள் இருப்பினும் சம்பு முனிவர் நடத்திய யாகத்தில் தோன்றியவர்கள் ‘வன்னியர்கள்’ என்பதும், வன்னி (அக்னி) யிலிருந்து தோன்றியதால் உருத்திரன் அம்சம் கொண்டு அரக்கர்களை அழித்து தேவர்களைக் காத்தனர் என்பதிலும் நிறைய ஒற்றுமை இருக்கிறது.
தமிழ் இலக்கியங்களில் வன்னியர்!
புராணங்களில் வன்னியர் தோற்றம் பற்றி அறிந்த நீங்கள், இலக்கியங்களில் வன்னியர் பற்றி சொல்லப்படுவதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். வன்னியர் வரலாற்றையும் பண்பாட்டையும் அறிய உதவும் ஓர் அரிய நூலாக ‘வன்னிய’ சிலை எழுபது என்ற நூல் குறிப்பிடப்படுகிறது. காரணம் இதனை படைத்தவர் கம்பர்.
‘கம்பர் சிலை எழுபது’ எனும் நூல் முதல் நூலாக விளங்க அதன் வழி நூலாக இந்த ‘வன்னியர் சிலை எழுபது’ என்னும் நூல் உருவாகியுள்ளது என்பது உண்மை.
முன்னோரு காலத்தில் வாழ்ந்து வந்தவராகிய சம்பு மாமுனிவர் செய்த மிகப் பெரிய யாகத்தில் பிறந்து வந்தவர்களாகிய சம்பு மாமுனிவரின் சந்ததியாரை பற்றிய வரலாறுகளையும், அவர் தம் சிறப்புகளையும் எடுத்துக் கூறுங்கள் என்று சான்றோர் பலரும் கம்பரைக் கேட்டார்களாம்.
நாம் இரண்டாம் புராணத்தில் சொல்லப்பட்டதாக எழுதி உள்ளதையே கம்பர் இதில் முழுவதுமாக குறிப்பிடுகிறார். இவற்றோடு உருவான வன்னியர் சிலை எழுபதில் மேலும் பல தகவல்கள் இடம் பெற்றுள்ளன.
கம்பர் பாடிய சிலையெழுபது மட்டுமல்ல, ஹரிவம்ஸம், சிவதருமோத்திரம், ஞானவா சிட்டம், கல்லாடம், கம்பராமாயணம், திருமந்திரம், முச்சங்க வரலாறு அகவற்பா, இறையனார், அகப்பொருள் பாயிரவுரை, நந்திக் கலம்பகம், கலித்தொகை, சிலப்பதிகாரம், பட்டிணப்பாலை, மணிமேகலை, குறுந்தொகை, பெரும்பாணாற்றுப்படை, கலிங்கத்துப்பரணி, கருணாகரத் தொண்ட வன்னியனார் சதகம் தொண்ட மண்டல சதகம் போன்ற பல்வேறு இலக்கிய நூல்களில் வன்னியர்களை குறிக்கும் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. பல்லவ, சாளுக்கிய மன்னர்கள் வன்னியர்களே என்பதையும் இவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
அவிக்கா தரங்கூர் புனிதர்மகிழ்ந்
தருள்வன் னியரை யாம்புகழச்
செவிக்கா ரமுத மெனக்கேட்டுச்
சிந்தை யுவந்து சீர்தூக்கிப்
புவிக்காயிரம் பொன் னிறை நீக்கிப்
பொற்றண் டிகைபூ ஷனைத்தோடும்
கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்ட வன்னியனே.
சிலையெழுதில் 68-வதாக வரும் இதில் கம்பர் பல்லவ மன்னனைக் கருணாகரத் தொண்ட வன்னியனே என்று குறிப்பிடுவதைக் காணலாம்.
கல்வெட்டுக்களில் வன்னியர்
செயங்கொண்டார் பல்லவ மன்னன் கருணாகரத் தொண்ட வன்னியனை ‘வேதம் கூறிய மரபில் வந்த குலதிலகன் என்றார். பல்லவர் வேதங்கூறும் ஆங்கிரஸரின் சந்ததி யார் என்பதை காஞ்சிக் கயிலாச நாதர் கல்வெட்டு காட்டுகிறது. இதில் அக்கினி புத்திரனான ஆங்கிரஸரின் சந்ததியாக பல்லவரைக் கூறியதால் வன்னியர் ஆங்கிரஸரின் வழியில் வந்தவர்கள் என்றும் சொல்லப்படுகிறது.
அங்கங்களின் சாரத்திலிருந்து பிறந்தவரானதால் ஆங்கிரஸரென அழைக்கப்பட்டதாக உபநிடதங்கள் கூறுகின்றன. அகத்தியர் சிவனுடைய அங்கமான அக்கினியின் சாரத்திலிருந்து பிறந்ததால் தான் திருமூலர் அங்கி அகத்தியனென்றும், அகத்தியன் மேல் பாலவனோடு வடபால் தவமுனிவன் எங்கும் விளங்கும் ஒளியெனவும் கூறினார். அதனால் மேற்கூறிய கைசாலநாதர் கல்வெட்டில் பிரம்மா என்பது பரபிரம்மம். பிரம்மாவின் புத்திரன், அக்கினி என்பது சம்பு அக்கினியின் புத்திரன் ஆங்கிரஸன் என்றது அகத்தியன் என்பதும் பொருத்தமானதேயாகும்.
திருக்கழுகுன்றத்திற்கு கிழக்கே எட்டு மைல் தூரத்தில் உள்ள மகாபலிபுரம் கடற்கரை ஓரத்தில் இருக்கும் கோயிலின் வடபக்க அடிவாரத்திலுள்ள சாஸனம், கி.பி. 670-க்கு மேல் அரசாண்ட பரமேஸ்வர பல்லவராயன் காலத்தில் காஞ்சி தாலுகா கூரம் கிராமத்தில் ஏற்பட்ட செப்பேடு, விரிஞ்சி புரத்திற்கு சமீபத்திலுள்ள பொய்கை என்னும் கிராமத்தில் பெருமாள் ஆலயத்தின் தென்னண்டை மதிலின் அடிவாரத்திலுள்ள சாஸனம், திருமலையில் வண்ணம் தீட்டிய குகைக்கு செல்லும் இடது பாரி சகத்தில் பதியப்பட்ட கல்வெட்டு சிவகஞ்சி சுரஹரீஸ்வரர் ஆலயத்தின் முன் மண்டபத்து மதிலிலுள்ள கல்வெட்டு, காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் அர்த்தமண்டபத்து மதில் கல்வெட்டு திருவாலங்காடு நடராஜர் ஆலய இரண்டாவது பிரகாரத்தின் கீழ் மதிலிலுள்ள கல்வெட்டு என கல்வெட்டுக்கள் மூலமாகவும், சாஸனங்கள் மூலமாகவும் வரிந்து பரந்து கிடக்கிறது வன்னிய மன்னர்கள் பற்றிய விவரங்கள்.
செப்பேடு, சிலாசாஸனம், கல்வெட்டுக்களில் மூவேந்தர் மாபினர்களாகிய வன்னிய அரசர்கள் அரசாண்டதற்கு ஆதாரங்கள் அணிவகுத்து நிற்கின்றன. பேரரசர்களாக விளங்கிய வன்னிய அரசர்கள் கால மாற்றத்தால் சிற்றரசர்களாகவும், ஜமீன்தார்களாகவும், மிராசுதாரர்களாகவும் குறுகி விட்டனர்.
வன்னிய மன்னர்கள்
பாண்டியர் மரபைச் சார்ந்த வன்னியர்கள் சிவகிரி, ஏழாயிரம் பண்ணை, அளகாபுரி ஜமீன்தார்களாகவும், அரச பரம்பரையினராக அரியலூர், ஊத்தங்கால் முதலிய ஊர்களிலும், சோழ மன்னர்களின் வழிகளில், பித்தர்புரம், நல்ல நாயகபுரம், கடலங்குடி முதலிய இடங்களிலும், பல்லவ பார்த்திபர்கள் உடையார் பாளையம், முகாசாபரூர் முதலிய நகரங்களிலும் ஜமீன்தாரர்களாக வாழ்ந்து வந்ததற்கான அடையாளங்கள் இன்றளவும் இருக்கின்றன.
ஆத்தி மாலை உடைய சோழனுக்கும், வேப்ப மாலை உடைய பாண்டியனுக்கும், பனை மாலை உடைய சேரனுக்கும், கற்றோர்க்கும் மற்றோர்க்கும் தொண்டை நாடாகிய பல்லவராஜ்ஜியம் பெரும் நிழலாக இருப்பதாக கம்பர் கூறுகிறார்.
சேர நாடு யானையால் சிறந்ததென்றும் சோழவளநாடு சோற்றால் சிறந்ததென்றும், பாண்டிய நாடு முத்துக்களால் சிறந்ததென்றும், தொண்டை நாடு அறிவுடைய மகான்களால் சிறந்ததென்றும் ஔவையார் கூறுகிறார். இவ்வளவு பெருமை பொருந்திய தொண்டை நாட்டில் பல்லவர்கள் ராஜ்ஜியம் சிறந்தோங்கி செழிப்புற்றிருந்தது.
சேர, சோழ, பாண்டிய, பல்லவ, சாளுக்கிய அரசுகளில் வன்னிய மன்னர்கள் சிறப்புற ஆட்சி செய்தமைக்கும் பல்வேறு சான்றுகள் இருக்கின்றன. இலங்கையிலும் வன்னியர்களின் வரலாறு கூறும் நூல்களும், செப்பேடுகளும், கல்வெட்டுகளும் பலவாறு வன்னியர்களின் தொன்மையை தொட்டுச் சொல்லுகின்றன. இதில் வையா பாடல் (கி.பி. 1500) கைலாய மாலை (கி.பி. 1590) யாழ்ப்பான வைபவ மாலை (கி.பி. 1765) ஆகியன வன்னிய அரசர்களைப் பற்றியும் வன்னியர்களைப் பற்றியும் விரிவாக எடுத்துரைக்கின்றன.
ஆ. முத்துத்தம்பி பிள்ளை அவர்கள் யாழ்ப்பாணச் சரித்திரம் என்ற வரலாற்று நூலை 1912-ல் எழுதியுள்ளார். வன்னியற் சிந்தனை என்ற நூலை முல்லை மணி சுப்பிரமணியன் என்பவர் எழுதியுள்ளார். இரண்டு நூல்களிலும் வன்னியர்கள் பற்றி ஏராளமான தகவல்களும் செய்திகளும் கிடைக்கின்றன.
இலங்கையில் இன்றளவும் சிங்கள மக்கள் புறாங் சுப்புவை விடுதலை வீரனாகக் கொண்டாடுகின்றனர். அதே அளவுக்கு தமிழ் மக்கள் சங்கிலி மன்னனையும், பண்டார வன்னியனையும் தேசிய வீரர்களாக மதித்துப் போற்றுவதிலிருந்தே அவர்களின் வீர தீர சிறப்புக்களை கலை நாம் அறிந்தும் உணர்ந்தும் தெரிந்து கொள்ளலாம்.
பண்டார வன்னியனை இலங்கை அரசு தேசிய வீரனாக 1982-ல் அங்கீகரித்துள்ளது. சிங்கள மக்கள் வன்னி பண்டார என இம்மா வீரனை அழைப்பதும் கண்கூடு பண்டார வன்னியன் இலங்கையின் ஒல்லாந்தர் ஆட்சிக் காலத்தின் (1658 – 1796) பிற்பகுதியிலும், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் (1796 – 1948) முற்பகுதியிலும் வாழ்ந்து வன்னிப் பிரதேசத்தில் அரசோச்சி உள்ளான்.
இலங்கையை வன்னிய மன்னர்கள் ஆண்டு வந்ததற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் வன்னியர்களே என்பதற்கும் பெரும் ஆதாரங்கள் இருக்கின்றன.
இனி தமிழக வரலாற்றுக்கே மறுபடியும் போவோம்.
பிரம்மாவிடம் அக்னி; அக்னியிடமிருந்து சந்திரன்; சந்திரனது குமாரன் புதன்; புதனுக்கு புரூரவனுக்கு ஆயு; நகுஷன், யாயாதி முதலியவர்கள் தோன்றி, அவ்வம்சத்தின் வழியே துர்வக வந்ததாகவும், துர்வசுவின் குமாரனே வன்னி எனவும், அச்சந்ததியில் வந்தவன் துஷ்யந்தன் எனவும், இந்த துஷ்யந்தனுக்கு கருத்தமனும், கருத்தமனுக்கு, ஆக்ரீடனும், ஆக்ரீடனது குமாரர்களே பாண்டியன், கேரளன், சோழன், கலிங்கன், எனவும் ஹரிவம்ஸம் 32வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது.
இதனால் வன்னி எனப்பட்ட மகாராஜாவின் வம்சத்துக்கிளைகளே சேர, சோழ, பாண்டியர்களென்பது புலனாகிறது. அவர்கள் அக்னி, சூரிய, சந்திரகுலமெனப் புராண இதிகாசங்கள் கூறிய போதிலும், இவர்களின் மூல புருஷர் வன்னியே என்பதால் அரசர்களின் பொதுப் பெயராக வன்னியர் என வழங்கி வருவதாக தெரிகிறது.
இதுமட்டுமல்ல பல்லவர்களது வம்சம் உருவானதற்கும் ஆதாரங்கள் உள்ளன. பல்லவ மன்னவர்களது தோற்றத்தை அம்மரபில் உதித்து காஞ்சிபுரத்தில் கி.பி. 550-ம் ஆண்டில் ஆட்சி புரிந்த இராஜசிம்மவர்மனால் கட்டப்பட்டுள்ள இராஜசிம்ம பல்லவேஸ்வரம் எனும் கைலாசநாதர் ஆலயத்தின் வெளிப்புறத்தில் வெட்டப்பட்டிருக்கும் சிலாசாஸனம் தேவநாகரி எழுத்தில் இருக்கிறது. அதை தமிழில் மொழி பெயர்த்து வருண் தரும்பணம் என்ற நூல் வெளியிடப்பட்டது. அதில் பின் வருமாறு உள்ளது.
பிரம்மாவிடமிருந்து தோன்றிய அக்னி குமாரனாகிய ஆங்கிரஸனும், இவரது குமாரனும், இந்திரனுக்கு மந்திரியும், தேவர்களுக்கு குருவுமாகிய பிரஹஸ்பதியும், இவருக்குப் புத்திரனான சமியும், இவரது புத்திரரும் திரிலோகங்களிலும் பூஜிக்கப்பட்டவரும் அதிபராக்கிரமத்தை உடையவருமான பரத் வாஜமுனிவ உதித்தார். இவரே பல்லவம்சத்தின் தோற்றத்திற்கு காரணமாவார்.
இவரிடமிருந்து துரோணர் உதித்தார். பின் துரோணரிடமிருந்து அரசர்களுடைய பராக்கிரமத்தையும், கர்வத்தையும் அடக்கிய அசுவர்த்தாமனும், அவனிலிருந்து உலகம் முழுவதையும் அரசாளக் கூடிய ஜெயசாலியாகவும், பராக்கிரமசாலியாகவும், அரசர்களுக்கு மூலபுருஷனாகவும் தோன்றி விளங்கியவன் பல்லவன். இதுவே நாளடைவில் பல்லவ வம்சமாக விருத்தி அடைந்து அரசாண்டது.
மேற்கூறியவற்றால் சத்திரியர்கள் ஆங்கிரசர், சம்பு, பரத்வாஜர் முதலிய மூலகர்த்தாக்களின் வழி வந்தவர்களென விளங்குகிறது. எனவே தான் வன்னியர்கள் மேற்சொன்ன மகரிஷிகளின் கோத்திரங்களை வழங்கி வருகின்றனர். தமிழகத்திலுள்ள வன்னியர்கள் சம்பு மகரிஷியின் கோத்திரத்தை வழங்கி வருவது கண்கூடு. ஒரு பிரிவினர் பரத்வாஜ கோத்திரத்தை வழங்கி வருவதும் உண்டு.
சம்புவராயர் வரலாறு
சோழப் பேரரசை தாங்கி நின்ற சிற்றரசுக் குடும்பங்களில் சம்புவராயர் குடும்பமும் ஒன்றாகும். அதிராசேந்திர சோழன் (கி. பி. 1070) காலம் முதல் மூன்றாம் இராச ராச சோழன் (1216 – 1257) காலம் வரையிலும் சோழர்களின் கீழ் அதிகாரிகளாகவும், படைத் தலைவனாகவும், நாடு காவல் செய்பவர்களாகவும், சிற்றரசர்களாகவும் விளங்கிய இவர்களின் ஆட்சிப்பகுதி பழைய வடார்க்காடு, தென்னார்க்காடு, செங்கை அண்ணா மாவட்டப் பகுதிகளை உள்ளடாக்கியதாகத் திகழ்ந்து இருக்கிறது.
சோழப் பேரரசின் வீழ்ச்சிக் காலத்தில் சேர்ந்த மங்கலத்திலிருந்து ஆண்ட காடவராயர் கோப் பெருஞ்சிங்கன் தன்னை ஒரு தன்னுரிமை பெற்ற அரசனாக அறிவித்துக் கொண்டார். அவரைப் போலவே முதன்முதலாக சம்புவராயர்களின் தன்னுரிமையுள்ள தனியாட்சியை நிறுவியவர் இராச கம்பீரச் சம்புரவராயர் (1236-1268) ஆவார்.
வடார்க்காடு மாவட்டம் போளூர் வட்டத்தில் உள்ள படவேடு என்ற இடமே இவருடைய தலைநகரமாகத் திகழ்ந்தது. ஆனால் காலம் மட்டுமே நீடித்தது. விசய கண்ட கோபாலனால் சிதைவுற்ற சம்புவராயர் அரசு பின்னர் இவரின் கீழும், பாண்டிய மன்னர்களின் கீழும் சிற்றரசர்களாக இருந்தது.
பாண்டியர்களின் கீழ் சிற்றரசர்களாக விளங்கியவர்களில் வீர சம்பன் சம்புவராயர். குலசேகர சம்புவராயர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழ்நாட்டின் மீது கி.பி. 1311, 1319, 1321 ஆகிய ஆண்டுகளில் டில்லி சுல்தான்களின் படையெடுப்பால் பாண்டிய மன்னர்கள் ஆட்சி நலிவுற்று, 1330-ல் மதுரையில் சுல்தான்களின் ஆட்சி ஏற்பட்டது.
இதனால் பெயரளவுக்கு பாண்டியர்களின் கீழ் சிற்றரசாக விளங்கிய வீரசம்பன் சம்புவராயர் தன் பெயரில் நாணயம் வெளியிட்டு தனது உரிமையை நிலை நாட்டிக் கொண்டார். இவரைத் தொடர்ந்து மீண்டும் சம்புவராயர்களின் தனியரசு உருவானது. இதை ஏகாம்பரநாதன் குலசேகர சம்புவராயரும் (1306 – 1330) இவரது மகன் வென்று மண் கொண்ட சம்புவராயரும் (1322 – 1339) ஏற்படுத்தினார்கள்.
வென்று மண் கொண்ட சம்புவராயர் ஆட்சியைத் தொடர்ந்து அவரது புதல்வர்கள் திருமல்லிநாதன் இராச நாராயணன் சம்புவராயர் (1337 – 1363) (முதலாம் இராச நாராயணன்) பொன்னின் தம்பிரான் இராச நாராயணன் சம்புவராயன் (1338 – 1363) (இரண்டாம் இராச நாராயணன்) ஆகியோரும் ஆட்சி புரிந்தார்கள்.
1363-இல் சம்புவராயர்களை விஜயநகர மன்னன் கம்பணன் என்பவர் தோற்கடித்து நாட்டைக் கைப்பற்றினார். போரில் இரண்டாம் இராச நாராயணன் கொல்லப்பட்டார். சம்புவராயர்களை தோற்கடித்த கம்பணன், நாட்டை மீண்டும் சம்புவராயர்களிடமே கொடுத்ததுடன், அவர்களுடன் திருமண உறவும் வைத்துக் கொண்டார். இதுசமயம் முதலாம் இராச நாராயணனும் இறந்துவிட, மூன்றாம் இராச நாராயணன் சம்புவராயர் ஆட்சி புரிந்தார். இவருடைய இறப்புடன் சம்புவராயர்களின் தனியாட்சி முடிவுக்கு வந்தது.
வன்னிய பாளையக்காரர்கள் வரலாறு
தமிழகத்தில் விஜயநகர பேரரசின் ஆட்சி முடிவுறும் தருவாயில் பாளையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பாளையங்கள் உருவாக்கப்பட்டு அதை பாளையக்காரர்களின் கையில் நிர்வகிக்கவும் கொடுக்கப்பட்டது. இப்பாளையக்காரர்களின் முக்கியப் பணி தங்கள் பேரரசுகளுக்கு நம்பிக்கையாக நடந்து கொள்வதோடு, அவர்களுக்கு தாம் ஈட்டும் நில வருவாயில் ஒரு பகுதியை வழங்குவதும், பேரரசுக்கு நெருக்கடியான கால கட்டத்தில் காவல் போர்ப்படை அளித்து உதவுவதும் பிரதானமாய் அமைந்தன.
அவ்வாறு தமிழகம் முழுவதும் ஏற்படுத்தப்பட்ட பாளையங்களில் சில பாளையங்கள் வலிமை மிகுந்தவையாக திகழ்ந்தன. தமிழ் நாட்டின் வட பகுதியில் உடையார் பாளையம், அரியலூர், முகாசாபரூர், பிச்சாவரம் ஆகிய இடங்களில் அமைந்தவைகளும், தென் பகுதியில் எட்டயாபுரம், புதுக்கோட்டை, பாஞ்சாலக்குறிச்சி, இராமநாதபுரம், சிவகிரி, அளகாபுரி, ஏழாயிரம் பண்ணை ஆகிய இடங்களில் அமைந்தவைகளும் குறிப்பிடத்தக்க வகையில் செயல்பட்டு புகழ் பெற்றவைகளாகும்.
சம்புவராயர்களின் அரசை வீழ்த்திய பிறகு, மதுரையை ஆண்ட சுல்தான்களின் ஆட்சியையும் வீழ்த்தியது. விஜயநகர பேரரசின் படை அதன் பிறகு தமது பிரதிநிதிகளை செஞ்சி, தஞ்சை, மதுரை ஆகிய இடங்களில் அமரச் செய்து தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது விஜயநகரப் பேரரசு.
தமிழகத்தின் வட பகுதியில் வன்னியர்கள் நிறைந்த இடங்களில் வன்னியர் பாளையக்காரர்களை அமர்த்தினார்கள். அவற்றில் உடையார் பாளையம், அரியலூர், திருவக்கரை, முகாசாபரூர் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். தென் பகுதியில் அந்த பாளையங்களில் வன்னியர்களைத் தலைவர்களாக நியமிக்கப் பெற்ற பாளையங்கள் தென்மலை, அளகாபுரி, ஏழாயிரம் பண்ணை, ஆத்திப்பட்டு, சமுசிகாபுரம், வேப்பங்குளம், பன்னீராயிரம் பண்ணை ஆகியவைகளாகும்.
தென்பகுதி வன்னிய பாளையக்காரர்கள்
இந்த ஏழு வன்னியர் பாளையங்களில் பெரிய நிலப்பரப்புடையதும் அதிக வருவாயை ஈட்டியதும், ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டதில் ‘முன்னணியில் இருந்ததுமான சிவகிரி பாளையமாகும். தொடக்கத்தில் தென்மலை, பிறகு சிவகிரி என்று வழங்கப் பெற்றது.
சிவகிரி பாளையக்காரர்கள் மரபு வழிப்பட்டியல் கி.பி. 1916 ஜூலைத் திங்கள் 24-ம் நாள் அரசால் வெளியிடப்பட்டது. அப்பட்டியலில் முதல் பாளையக்காரராக விஜயரங்க வன்னியனார் குறிப்பிடப்படுகிறார். இரண்டாம் பாளையக்காரராகச் சங்கர பாண்டிய வன்னியனாரும், மூன்றாம் பாளையக்காரராக பெரிய சங்கு வன்னியனாரும், நான்காவதாக வரகுணராம வன்னியனாரும் காணப்படுகின்றனர்.
தென்மலையான சிவகிரியில் நான்காவதாக முடிசூடிய வரகுணராம வன்னியனார் சிறந்த முறையில் ஆட்சி புரிந்துள்ளார் என்பது அவரால் வெளியிடப் பெற்ற ஒரு செப்புப் பட்டயத்தாலும், அவர் மீது கடிகை முத்துப் புலவரால் பாடப்பெற்ற திக்கு விசயம் எனும் நூலாகும். புகழேந்தி புலவர் இயற்றிய சிவகிரி காதல் எனும் நூலாலும் அறிந்து கொள்ளலாம்.
கடிசை முத்துப் புலவரின் திக்கு விஜயம் எனும் நூலில் உள்ள பாடல்கள் மூலம் வன்னிய வரகுண பாண்டியனின் தந்தை சங்கு சின்னத்தம்பி என்றும், இவனின் பாட்டனார் சங்கரபாண்டியன் என்றும் உணர முடிகிறது. இவ்வரகுணபாண்டியனரும், இவரது சந்ததியினரும் வன்னிய குல சத்திரியர் ஆவர். இதற்கு ஜி. எஸ். எஸ். நல்லசிவம் எழுதிய ‘சிவகிரி வரலாறு’ என்ற நூல் மற்றொரு ஆதாரமாக விளங்குகிறது.
வரகுண ராமன் புகழ்பாடும் ‘சிவகிரி காதல்’ எனும் நூலில்
“வன்னிய குலதீப வரகுணராமப் பாண்டிய
மன்ன னெனத் தென்மணியில்
வாழ்வேந்தா வெச்சரிக்கை” என்றும்
“வன்னிய குலராச வரகுண ராமப் பாண்டிய
நன்னயவான் வாராமல் நங்கை
மயங்கிச் சோர்ந்தாள்”
என்றும் கூறப்படுகிற பாடல் வரிகளால் சிவகிரி வரகுண ராமப் பாண்டியனை வன்னியர் குலத்தின் ஒளிவிக்கே என்றும், வன்னிய குல அரசன் என்றும் கூறுவதால் சிவகிரி பாளையக்காரர்கள் வன்னியகுல சத்திரியர் என்பது மெய்ப்படிக்கப் படுகிறது.
1767-ல் கேனல் கேம்ப்பெல் தலைமையில் வந்த ஐரோப்பியப் படை சிவகிரியைத் தாக்கி கோட்டையைத் தரை மட்டமாக்கி விட்டது. இருப்பினும் சிவகிரி கடை சிவகிரிக்கு மேற்கே இயற்கையாக அமைந்திருந்த கோம்பை என்று வழங்கப்பட்ட சிறுமலைகளில் சென்று பதுங்கிக் கொண்து.
1783-ம் ஆண்டில் மீண்டும் கேனல் ஃபுல் லர்ட்டன் தலைமையில் ஐரோப்பியப்படை முழு வேகத்துடன் சிவகிரிப் படையை எதிர் கொண்டது. ஐரோப்பியர்களின் பீரங்கித் தாக்குதலை சமாளிக்க முடியாமல் சரண் அடைந்தாலும் ஐரோப்பியர்களுக்கு அடங்காமலேயே ஆட்சி புரிந்து வந்துள்ளனர்.
1792 முதல் 1799 முடிய பாளையக்காரராகவும், பின்னர் ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட சிவகிரி பாளையத்தின் முதல் ஜமீன்தாரர் ஆகவும் கி.பி. 1799 முதல் 1819 முடிய ஒன்பதாம் பாளையக்காரராக வரகுணராம வன்னியனார் பொறுப்பேற்று அரசோச்சி இருக்கிறார். 1819-ல் வரகுணராம வன்னியனார் மரணமெய்ததும், அவரது மகள் வீரம்மாள் நாச்சியார் ஜமீன் பொறுப்பை ஏற்று நடத்தி வந்துள்ளார்.
1827-ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் புயல் காரணமாக ஜமீன் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவாய் முற்றிலும் சீரழிந்து போனதால் அரசு ஜமீனை தம் மேற்பார்வையில் கொண்டு வந்து வைத்துக் கொண்டது. பின்பு 1835-ம் ஆண்டு வீரம்மாள் செய்து கொண்ட உடன் படிக்கையின் படி ஜமீன் நிர்வாகம் மீண்டும் அரசியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
வீரம்மாளின் மரணத்திற்கு பிறகு 1844 வரை ஜமீனின் நிர்வாகியாக அவரது கணவர் வரகுணராம செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத் தம்பியார் மேற்பார்வை செய்து சில காலத்திற்கு பின் உயிர் நீத்தார். அதன் பிறகு இவர்களது மகன் வரகுண ராம பாண்டிய சின்னத் தம்பியார் ஜமீன் தாரராக விளங்கினார். இவரது காலத்திலும் ஜமீன் நிர்வாகம் சரி வர நடை பெறாததால் மீண்டும் அரசே ஏற்று நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதற்கிடையில் வரகுணராம ராம பாண்டிய சின்னத் தம்பியாருக்கும் அவரது உடன் பிறந்த தம்பிக்கும் சொத்து தகராறு ஏற்பட்டு நீதி மன்றத்தில் வழக்கு நடந்து தம்பியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்பு 1872-ல் இவர் மீது நிர்வாகத் திறமையின்மையை சுட்டிக்காட்டி மகன் சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத் தம்பியார் தன்னிடம் பொறுப்பை ஒப்படைக்க கோரி வழக்கு தொடர்ந்தார்.
இந்த நிலையில் வரகுணராம பாண்டியர் 1873-ல் இயற்கை எய்திட, அவது மைந்தன் சங்கிலி வீரப்ப பாண்டிய சின்னத் தம்பியார் பட்டமேற்றுள்ளார். 1873 முதல் 1896 முடிய ஆட்சி புரிந்த இவரது காலம் ஜமீனின் பொற்காலமாக கருதப்படுகிறது. இவர் 1896-ல் இறப்பெய்த மகன் குறைந்த வயதினராக இருந்ததால் அரசு ஜமீனின் ஆளுமையை ஏற்றுக் கொண்டது.
பின்பு 1910-ல் அரசாளும் வயது வந்தவுடன் இராமலிங்க வரகுணராம பாண்டிய சின்னத் தம்பி வன்னியனார் ஜமீனாக பட்ட மேற்றிருக்கிறார். இவர் திருமணமாகாமலேயே 1914-ல் குற்றாலத்தில் மரணமடைந்தார். இவருக்கு பிறகு வரகுண ராம பாண்டிய சின்னத் தம்பியாரின் பேரன் செந்தட்டிக் காளை பாண்டியன் சின்னத் தம்பியார், திருமணமாகாமலும், குழந்தைகள் ஏதுமில்லாமலும் ஆகி விட்ட காரணத்தால் ஜமீனுக்கு உரிய வாரிசு தாம் தான் என்று உரிமை கோரினார்.
நீண்ட வழக்குகளுக்கு பிறகு செந்தட்டிக்காளை பாண்டிய சின்னத் தம்பியார் ஜமீன் சொத்துக்களை நிர்வாகித்துத ஆட்சி செய்யுமாறு தீர்ப்பளிக்கப்பட்டது. சிவகிரி ஜமீனாக பொறுப்பேற்ற இவரது காலம் 1934-ஆம் ஆண்டு முடிகிறது. அவருக்குப் பிறகு வரகுண ராம பாண்டிய சின்னத்தம்பி வன்னியனார் சிவகிரி சமஸ்தான அதிபதியாக பட்டம் ஏற்றிருந்தார்.
1934-இல் பட்டம் ஏற்ற ஜமீன்தாரர் வரகுணராம பாண்டிய சின்னத்தம்பியார் 1955-இல் மரணமடைய அவரது மகன்களில் ஒருவரான சிவகிரி இராஜா எனும் சங்கிலி வீரப்ப பாண்டியன் ஜமீனாக பதவி ஏற்றிருக்கிறார். இவர் வன்னியர் மரபில் பெண் எடுக்காமல், சிங்கம் பட்டி மறவர் ஜமீன் பெண்ணை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். இவருக்கு அடுத்து வி. எஸ். வரகுண ராம பாண்டிய சின்னத்தம்பி வன்னியனார் ஜமீன் பொறுப்பேற்றார். இவரும் சேத்தூர் ஜமீன் மறவர் பெண்ணை காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். இப்படி வாழையடி வாழையாக வந்த வன்னியர்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பது நமக்கு பெருமை தரும் விஷயம் அல்லவா?
புகழோடு அரசாண்ட சிவகிரி வன்னியச் ஜமீன்தாரர்களின் உறவின் முறையினராக அளகாபுரி வன்னியச் ஜமீன்தாரர்கள் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள். இதில் மிகவும் குறிப்பிடத்தக்கவர் வரகுணராம ரெட்டைக்குடையார் ஆவார். இவருக்கு பிறகு கறுத்தத் தம்பி ரெட்டைக்குடையார் கறுத்தான் ரெட்டைக்குடையார், சீமை ஆண்டார். அவர் மகன் சிதம்பரம் ரெட்டைக்குடை வன்னியனார் என அடுத்ததடுத்த ஆண்டு வந்தனர்.
விஜய நகர அரசு மதுரையை ஆண்ட போது அவர்களுக்கு உறுதுணையாக விளங்கினார். ரெட்டைக்குடையாரின் மகன் கந்தசாமி ரெட்டைக்குடையார். இவரையடுத்து குமாரசாமி ரெட்டைக்குடையார். சிதம்பர தாண்டவ ரெட்டைக்குடையார், வீரமார ரெட்டைக்குடையார் என நீண்ட பட்டியலில் ரெட்டைக்குடையார் முக்கியமானவர். பின் ஆண்டி ரெட்டைக்குடையார், சிதம்பர ரெட்டைக்குடையார் கட்டாரி ரெட்டைக்குடையார் என வரிசையாக வன்னிய குல சத்திரியர்கள் அளகாபுரி ஜமீனை அரசோச்சி வந்திருக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டம் கோவில்பட்டிக்கு வடக்கே அமைந்த சிறு நகரமே ஏழாயிரம் பண்ணை ஆகும். பாண்டியர் ஆட்சிக் காலத்திலும், விஜய நகர பேரரசின் காலத்திலும் அவர்களுக்கு உதவுபவர்களாக விளங்கியவர்கள் ஏழாயிரம் பண்ணை பாளையக்காரர்கள். அவர்களின் தென்னம்பை ஆண்டு கொண்டார் குறிப்பிடத்தக்கவர். இவருக்கு பிறகு குமாரசுவாமி ஆண்டு கொண்டார். திருமலை ஆண்டு கொண்டார். வடமலை ஆண்டு கொண்டார். சிதம்பரம் ஆண்டு கொண்டார். சிவனுத்தம்பி ஆண்டு கொண்டார். சிவனைணஞ்சு ஆண்டு கொண்டார். அன்னதானம் சிதம்பர ஆண்டு கொண்டார். முத்துசுவாமி ஆண்டு கொண்டார். குலசேகர ஆண்டு கொண்டார் எனறு வன்னிய ஜமீன்கள் புகழுடன் ஆட்சி செய்து வந்திருக்கிறார்கள்.
சிவகிரி ஜமீனோடு பங்காளிகளாக வேப்பங்குளம், தென்மலை ஜமீன்களும், பெண் கொடுத்து, பெண் கொள்ளும் உறவு முறையினராக சமுசிஇராபுரம், அளகாபுரி, ஆத்துப்பட்டி, ஏழாயிரம் பண்னை பாளையங்களும் விளங்கின.
பிச்சாவரம் வன்னிய பாளையக்காரர்கள்
நமது வன்னிய சமூகம் வடபகுதியில் பாளையக்காரர்களாக இருந்ததில் வியப்பதற்கு எதுவுமில்லை என்பதால் தான் தென் பகுதியை ஆண்ட வன்னிய பாளைக்காரர்கள் முதலில் எழுதினேன். அப்பகுதிகளில் வெகு சிறப்பாக ஆட்சி செய்ததனால் தான் தொடர்ந்து அந்த பாளையத்தை அவர்களால் தக்க வைத்துக் கொள்ள முடிந்தது. இனி வடபகுதி வன்னிய பாளையக்காரக்களை பார்ப்போம்.
வடபகுதியில் பல பாளைங்கள் இருந்தாலும் அதில் மிகவும் சிறப்பு வாய்ந்ததும், வரலாற்றுச் சிறப்பு மிக்கதுமானது பிச்சாவரம் பாளையம். இவர்கள் சோழ வேந்தர் பரம்பரையின் மிச்சமாகவும், நமது முன்னோர்கள் சோழ அரசர்கள் என்பதற்கு சாட்சியாகவும் விளங்குபவர்கள்.
சைவர்களின் முதன்மை கோயிலும், சோழ வேந்தர்களின் குல தெய்வ கோயிலுமான தில்லை நடராச பெருமான் கோயிலில் அன்று சோழ வேந்தர்களுக்கு ‘திருமுடி’ சூடும் பொழுது எவ்விதமான மரபுகள் கடைப்பிடிக்கப் பட்டனவோ அதே மரபுகள் சென்ற இருபதாம் நூற்றாண்டிலும் பித்தர்புரம் ஜமீன்தாரர்களுக்கு கடைப்பிடிக்கப்பட்டன என்பதிலிருந்து சில உண்மைகள் தெரிந்து கொள்ளலாம்.
தில்லை வாழ் அந்தணர்களுள் ஒருவரான அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இந்திய மொழிப் புல முதன்மையர், தமிழியல் துறைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் அ. ஆனந்த நடராசன் அவர்கள், தேவார சங்கீத பூஷணம் க.சி.து. நாராயணசாமி அவர்கள் எழுதிய நூலின் அணிந்துரையில் “பித்தர்புரம் எனும் பிச்சாவரம் ஜமீன்தாரர்கள் சோழர்களின் தில்லைக் கோயில் மண்டகப்படியை மரபுரிமையுடன் ஏற்றுச் செய்து வருகின்றனர்” என்று எழுதி உள்ளார். இதன் மூலம் பித்தர்புரம் என்ற பிச்சாவரம் ஜமீன்தாரர்கள் சோழ வேந்தர் வழி வந்தவர்களே என்ற வரலாற்று உண்மை புலப்படுகிறது.
காஞ்சிபுரம் ஜமீன் (பின்பு உடையார் பாளையம்) பள்ளி கொண்ட ரங்கப்ப உடையார், விஜயநகர வேந்தர் வீர நரசிம்மராயர் (1505 – 1509) ஆட்சி புரிந்த காலத்தில் செஞ்சிக்கு அதிபதியான உதயகிரி ராமபத்திர நாயக்கருக்கு உதவியாக இருக்கும்படி ஆணையிடப்பட்டார்.
அவர் சிதம்பரத்துக்கு அருகிலுள்ள புவனகிரிக்குப் பக்கத்தில் அரசக்குடி என்னுமிடத்தில் இருந்து கொண்டு, தமக்கு புதிதாக அளிக்கப்பட்ட பகுதிகளான திட்டக்குடி, புவனகிரி, விருத்தாசலம், மன்னார்குடி, சிதம்பரம் ஆகிய இடங்களை ஆண்டு வந்த சிறு பாளைக்காரர்களை அடக்கி வெற்றி பெற்றார் என்று வரலாறு கூறுகிறது.
17-ம் நூற்றாண்டில் திட்டக்குடி, விருத்தாசலம், புவனகிரி, சிதம்பரம், மன்னார்குடி ஆகிய இடங்களில் இருந்த சிறு பாளையக்காரர்கள் மூலம் பொன் வருவாய் வந்ததாக உடையார் பாளையம் வரலாறு தெரிக்கிறது. கி.பி. 18-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ரங்கப்ப உடையாரின் மகனான யுவரங்கப்ப உடையாரின் காலத்திலும் திட்டக்குடி, விருத்தாசலம், சிதம்பரம் ஆகிய இடங்களிலிருந்து அரசு காவல் பணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. சிதம்பரம் என்பதால் அது பித்தர்புரம் ஜமீன் என்று தான் பொருள் தரும்.
கூடல் மாநகர் இருவாட்சிப் புலவரால் பாடப் பெற்ற ‘திருக்கை வளம்’ எனும் நூலில் விட்டலராய சோழன் மீது சந்தமாலை பாடிய பாடல் இருக்கிறது. இம்மன்னர் பித்தர்புரம் பாளையக்காரர்தான் என்பது அவ்வூரில் உள்ள அருள்மிகு குட்டியாண்டவர் கோயில் கருவறையில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டால் புலனாகிறது.
பிச்சாவரம் ஜமீன்தார் பற்றி சில செப்புப் பட்டயங்களும் குறிப்பிடுகின்றன. குறிப்பாக சேலம் மற்றும் வைத்திஸ்வரன் கோயில் செப்புப் பட்டயங்களில் ‘தொண்டை மண்டல சோழகனார்’ என்று பிச்சாவரம் ஜமீன்தாரர் குறிக்கப்படுகிறார்.
16-ஆம் நூற்றாண்டின் கடைசியில் முத்துத் தாண்டவர் பாடிய கீர்த்தனையில் சூர வீரப்ப பூபன் (பித்தர்புரம் பாளையக்கார மன்னன்) தில்லை நடராசர் ஆலயத்தின் திருச்சுற்று மதில்கள் அமைத்ததை தெளிவுபட எடுத்துரைக்கிறது. இந்த ‘சூரவீரப்ப’ என்ற சொல் தான் பின்னாளில் ‘சூரப்ப’ என்று மருவி வழங்கப்படுகிறது. இன்றளவும் பித்தர்புரம் என்ற பிச்சாவரம் வம்சத்தினர் ‘சூரப்ப சோழனார்’ என்று கூறுவதை காண முடிகிறது.
தில்லை நடராசர் ஆலயத்தில் கோபுரங்கள் எழுப்பியது முதலான அனைத்து திருப்பணிகளையும் இரணியவர்மன்தான் செய்தார் என்று 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுக்கு செப்புப் பட்டயங்கள் கூறுகின்றன. 18-ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்தே பிச்சாவரம் மன்னர்கள் தில்லை நடராசர் ஆலயத்தில் பஞ்சாக்கரப்படியில் அமர்ந்து முடி சூடிக்கொள்ளும் வழக்கம் இருந்து இருக்கிறது.
கி.பி. 1872-ல் ஜாதி சங்கிரகசாரம் எனும் நூல் பித்தர்புரம் ஜமீன்தாரர் கிராமபத்திர சூரப்ப சோழனார் எனவும், அவருக்கு பஞ்சாட்சரப்படி அபிஷேகமும், ஆயிரங்கால் மண்டபத்தில் முடிசூட்டு விழாவும் நிகழ்ந்ததாகவும் கூறுகிறது. மேலும் அந்நூலின் 214-ம் பக்கத்தில் இராமபத்திர சூரப்ப சோழனார் மகன் ஆண்டியப்ப சூரப்ப சோழனார் கி.பி. 1892 முடிய ஆட்சி புரிந்ததாக கூறுகிறது.
30.08.1908 ஆவணி மாதம் 15-ம் நாள் பித்தர்புரம் ஜமீன்தாரர் ஆண்டியப்பா சூரப்ப சோழனார் குமாரர் சாமி துரை சூரப்ப சோழனாருக்கு பட்டாபிஷேகம் நடைபெற இருப்பதை அறிவிக்க ‘பட்டாபிஷேகப் பிரகடனம்’ வெளியிடப் பெற்றிருக்கிறது.
1907-ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற வன்னியர் மகா சங்கத்தின் 19-ம் ஆண்டு விழாவிலும், 1911-ம் ஆண்டு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற சங்கத்தின் 22-ம் ஆண்டு விழாவிலும் சாமிதுரை சூரப்ப சோழனார் தலைமை தாங்கி சிறப்பு செய்து இருக்கிறார்.
1911-ல் பிச்சாவரம் பாளையத்தின் ஜமீன்தாராக தில்லைக் கண்ணு சூரப்ப சோழனாருக்கு முடி சூட்டப்படுகிறது. 05.11.1911-ல் ஸ்ரீசாமித்துரை சூரப்ப சோழனாராக தனது சகோதரர் தில்லைக் கண்ணு சூரப்ப சோழனாருக்கு சிதம்பரேசர் ஆலயத்தில் சங்காபிஷேகமும், பட்டாபிஷேகமும் நடைபெற்றிருக்கிறது. இதற்கான பட்டாபிஷேக பிரகடனத்தை சாமித்துரை சூரப்ப சோழனார் அரண்மனையிலிருந்து வெளியிட்டு இருக்கிறார்.
தில்லைக்கண்ணு சூரப்ப சோழனாருக்கு அடுத்து அவரது குமாரர் ஆண்டியப்ப சூரப்ப சோழனாருக்கு பட்டாபிஷேகம் நடத்தப்படுகிறது. இதற்கான பிரகடனத்தை ஆண்டியப்ப சூரப்ப சோழனாரின் பங்காளி சிதம்பரநாத சூரப்ப சோழனார் வெளியிட்டு இருக்கிறார்.
1943-ம் வருடம் ஆண்டியப்ப சூரப்ப சோழனாருக்கு திருமணம் நடக்கிறது. இதை 24.08.1943-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கை செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. திருமணத்திற்கு பாராட்டு தெரிவிக்க நடத்தப்பட்ட விழா பற்றி சுதேசமித்திரன் இதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.
ஆண்டியப்ப சூரப்ப சோழனாருக்கு பிறகு அவரது மூத்த மகன் சிதம்பரநாத சூரப்ப சோழனார் பட்டமேற்க, அதற்கான பிரகடனத்தை 1978-ல் அவரது பங்காளியான ரெத்தினசாமி சூரப்ப சோழனார் வெளியிட்டு இருக்கார். அதன் பின்பு இன்றைக்கு ஜமீனின் நிலைமை சொல்லிக் கொள்ளும்படியான நிலையில் இல்லை என்பதை வருத்தத்திற்குரிய விஷயமாக இங்கு பதிவு செய்கிறேன்.
வன்னியகுல சத்திரிய மகா சங்கம்
பாளையக்காரர்கள் ஆட்சி முடிவுற்று ஜமீன்தாரர்களாக ஆட்சி செய்யும் முறையை அதாவது ஆங்கிலேயருக்கு கட்டுப்பட்டு அவர்களுக்கு கப்பம் செலுத்தி ஆட்சி செய்த முறை வந்தது. ஆங்கிலேயரின் ஆட்சி முறை ஒட்டு மொத்த இந்தியாவுக்குமானதாக வந்தது. இக்காலகட்டத்தில்தான் கிழக்கிந்திய கம்பெனியாக வந்தவர்கள் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் அடிமை நாடாக இந்தியாவை முழுமையாக்கி நாடாள முற்பட்டார்கள்.
1800-களுக்கு பிறகு இந்திய தேசம் என்பது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் தான் என்றதாகவே இருந்தது. சென்னை மாகாணத்தில் ஆங்கிலேயரின் வால்பிடித்து அவர்களுக்கு தேவையானதை நிறைவேற்றிக் கொடுத்து காரியம் சாதித்துக் கொள்ளும் நபர்களாக மேல்தட்டுக் குடியினர் மட்டுமே அருகில் இருந்தார்கள். இவர்கள் சொல்வதே ஆங்கிலேயருக்கு வேதவாக்காக மாற, அதை பயன்படுத்தி நம்மை போன்ற பெரும்பான்மை சமூகத்திடமிருந்த நிலபுலன்களை பறித்து இவர்களது பெயருக்கு மாற்றிக் கொண்டனர்.
வன்னிய சமுதாயத்தை சேர்ந்த மக்கள் காலங்காலமாக விவசாயம் செய்த பெருங்குடி மக்கள் என்பதை நாடறியும். நிலபுலன்களோடு வாழ்ந்த அம்மக்கள் அந்நியர் ஆட்சியில் மேட்டுக்குடி இனத்தவரால் பெரும் பரிதாபத்துக்குரியவர்களாகப் பட்டார்கள். கிராமங்களை, நிலங்களை பெயர் மாற்றம் செய்து சூறையாடியனார்கள். நில உரிமைகளை இழந்து காணியாட்சிக்காரர்களாக இருந்தவர்கள் கல்வி அறிவின்மையால் சூழ்ச்சிக்கு இறையாகி, கொடுமைப்படுத்தப்பட்டு படியாட்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இதன் ஒரு பகுதியாக வன்னியர்களுக்கும், வேளாளர்களுக்கும் பலமுறை இனக்கலவரங்கள் நடைபெற்றன. அதுவும் குறிப்பாக 1844-ம் ஆண்டு முதல் வன்னியர்களுக்கும் வேளாளர் போன்ற மற்ற இனத்தாருக்கும் இடையில் பெரும் இனப் போராட்டங்கள் நடந்து வந்தன. இந்த இனச் சண்டை வழக்காகி மாறி நீதிமன்றம் சென்றது. வழக்கு நடைபெற்ற நீதிமன்றத்தில் வன்னியருக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது.
வன்னியருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கப் பெற்ற ஆண்டு 1860. இது முதலே வன்னிய சமுதாயத்திலே நிலச்சுவான்தார்களாகவும், ஓரளவு தொழில் செய்து பணக்காரர்களாக இருந்தவர்களும், ஆங்கிலேய அரசாங்கத்தில் உத்தியோகம் பார்த்துக் கொண்டிருந்த சிலரும் ஒன்று கூடி சமுதாயத்தையும், மக்களையும் பாதுகாக்க என்ன செய்வதென்று தீவிர ஆலோசனை நடத்தி இருக்கிறார்கள்.
வன்னியச் சமூகத்தின் மீது வரும் வீண் பழியையும், தாக்குதலையும் தடுத்துக் கொள்ள வன்னிய குல இன மக்கள ஒன்று சேர்த்து, ஓரணியில் கொண்டு வர என்னென்ன செய்திடலாமென்று வன்னிய சமுதாய பெரியோர்கள் ஒன்று கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில் 1871-ல் ஆங்கிலேய அரசு மக்கட்தொகை கணக்கெடுப்பை நடத்தியது.
மக்கட்தொகை கணக்கெடுப்பில் வன்னிய குல மக்களை சத்திரியர்கள் என்று பதிய வேண்டுமென கேட்க, நம்மை சூத்திரர்கள் என்று பொதுத் தலைப்பின் கீழ் பதிவு செய்து கணக்கிட்டார்கள். நமது சமுதாய பெரியவர்கள் பலமுறை எடுத்துச் சொல்லியும், மேல் சாதியினர் நம்மீது அடுக்கடுக்காய் தவறுகளைச் சொல்லி சூத்திரர்கள் என்றே ஆக்கி விட்டார்கள்.
நமது இன பெரியவர்கள் ஒன்று கூடி பலன் தராத நிலையில் அடுத்த பத்தாண்டுகளுக்குள் அதாவது 1881-ல் மீண்டும் மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இம்முறையும் மேல் சாதியினர் ஆங்கிலேய அதிகாரிகளிடம் தவறுதலாக எதையோ சொல்லி சூத்திரர் என்றே பதிவு செய்ய வைத்தனர்.
வன்னியகுல விளக்கம்
1871-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதே அதன் தொடர்பான பதிவேடுகளில் தங்களை சந்திரிய வகுப்பினராக வகைப்படுத்தி சேர்க்க வேண்டும் என்று கோரி வன்னிய சமூகப் பெரியோர்களால் அப்போதைய ஆங்கிலேய அரசுக்கு மனு ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், அந்த கோரிக்கையினை அரசு ஏற்காமல் பலவகை காரியங்களுக்குப் பயன்படும் வகையில் அனைத்து சாதிகள், வகுப்புகள் ஆகியவற்றின் அகர வரிசைப் பட்டியல் ஒன்றினைத் தயார் செய்து விரைவில் வெளியிடப்படும் என்று அரசு ஒரு ஆணையை வெளியிட்டது. இதன்படியும் அரசு எம்முயற்சியும் மேற்கொள்ளாமலே கணக்கெடுக்கப்பட்டது.
1881-ல் மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும் இந்த ஆணை நிறைவேற்றப்படவில்லை. போதிய ஆவணங்களுடன் ஒரு சரியான சமயத்தில் சரியான வழிமுறையில் நீதி கேட்டும் வன்னிய சமுதாயத்தின் வேண்டுகோள் நிராகரிக்கப்படும் என்ற சூழல் உருவானது. இந்த அச்சத்தை தவிர்ப்பதற்காக நமது சமுதாயத்தினர் ஒன்று கூடி வன்னிய குல வம்சத்தை விரிவாக எழுதி அரசிடம் கொடுக்க முடிவு செய்தனர்.
இதற்கான ஆலோசனையின் போது நம் சமுதாய அறிஞர் டி. ஐய்யாக்கண்ணு நாயகர் அவர்கள் வன்னிகுல விளக்கம் (Vannikula Vilakkam) என்ற புத்தகத்தை ஆங்கிலத்தில் எழுதி அரசுக்கு நாம் கொடுக்கும் கோரிக்கை மனுவுடன் இதனையும் இணைத்து கொடுக்கலாம் என்று கூற, அனைவரும் ஆமோதிக்க அவசரகதியில் புத்தகத்தை தயார் செய்தார் மாமேதை டி. ஐய்யாக்கண்ணு நாயகர் அவர்கள்.
ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அந்நூலுக்கு ஸ்ரீவி. சுப்ரமணிய பட்டாச்சாரியார், பிரம்ம ஸ்ரீவி. சுந்தரராம சாஸ்திரிகள், ஸ்ரீ ஜோதிட ராமச்சந்திர பட்டாச்சாரியார், பிரம்மஸ்ரீ எம். வேங்கட சுவாமி ஐயர், ஸ்ரீ மிர்திஞ்ஜய சாஸ்திரியார், ஈச்சம்பாடி ஸ்ரீனிவாசச் சாரியார், ஸ்ரீ கிருஷ்ண சாஸ்திரியார், பிரம்ம ஸ்ரீ சுப்பையர், பிரம்ம ஸ்ரீ வைத்திய நாத சாஸ்திரியார் மற்றும் எம். சேஷக்கிரி சாஸ்திரியார் ஆகிய புலவர் பெருமக்கள் சான்றுரைக்கு எழுதியது. புத்தகத்தின் மேன்மையையும், நம்பகத் தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியது.
மாமேதை டி. ஐய்யாக்கண்ணு நாயகர் அவர்கள் தன்னுடைய நூலில் எழுதிய முன்னுரையில் மக்கட்தொகை கணக்கெடுப்பின் போது நாம் அரசுக்கு சமர்ப்பிக்கும் விண்ணப்பத்தில் இதனையும் ஒரு இணைப்பாக அனுப்பி வைக்க வேண்டும் என்ற கருத்தினில் மேற்கொள்ளப்பட்டதுதான். இந்த புத்தக தயாரிப்பினை மிக விரைவில் முடிக்க வேண்டுமென்ற உந்துதலின் பேரில் இது மேற்கொள்ளப்பட்டதால், அதில் சில பிழைகள் ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கலாம். இந்தப் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு வெளியிடப்படும் போது சரியான வகைகளில் முறைப்படுத்தி விரிவு செய்து தெளிவான விளக்கங்களுடன் வெளியிட முயலப்படும்.
இந்தப் புத்தகத்தினை வெளியிடுவதில் திருமிகு. காட்டான்குளம் கோபால நாயகர் அவர்கள் தமது தளராத முயற்சியினாலும் பயன் கருதாத பணியினாலும் பொருளுதவியைப் பொறுத்தமட்டிலும் அன்று மற்றெல்லா வகைகளிலும் கூட தமது இனத்தவரின் முன்னேற்றத்துக்காக அவர் மேற்கொண்ட முயற்சி, அவர் காட்டிய ஆர்வம் அனைத்தும் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க பெருமை உடையதாகும்.
இந்தப் புத்தகத்திற்கான விவரங்களைத் தொகுக்கின்ற பணியினை எமக்குப் பல்லாற்றானும் உதவிய திருவாளர்கள் எஸ். சிங்கார வேலு நாயகர், சுப. அண்ணாசாமி நாயகர், கா. ஆறுமுக நாயகர் மற்றும் எமது மைத்துனர் திரு. வி.சி சுப்ரமணியப்பிள்ளை ஆகிய அனைவருக்கும் யான் நன்றி கடமைப்பாடுடையேன் என எழுதி உள்ளார் டி. ஐய்யாக்கண்ணு நாயகர்.
ஆங்கிலத்தில் எழுதப் பெற்ற இந்த அருமையான நூலினைச் சொற்சுவை, பொருட்சுவை அனைத்தும் நிரம்ப மிகச் சிறப்பாகத் தமிழில் மொழி பெயர்த்துத் தந்த டி.என். கோவிந்தசாமி அவர்களுக்கும், இதனை நூறாண்டுக்குப் பிறகு மறுபதிப்பு செய்த பெரியவர் அண்ணாசாமி நாயகரின் வாரிசு எஸ். சிவசங்கரன் அவர்களுக்கும் வன்னிய சமுதாயமே நன்றிக்கடன் பட்டுள்ளது.
பாசத்திற்குரிய சொந்தங்களே!
நமது வன்னிய சமுதாயத்தின் வரலாற்றை தொடர்ந்து எழுதும் போது வன்னி குல விளக்கம் எனும் நூலைப் பற்றி எதற்காக எழுத வேண்டும் என்ற கேள்வி உங்கள் மனதில் எழுவது இயற்கை. ஆங்கிலேயர்கள் வன்னி குல சத்திரியர் என நம்மை ஏற்க வைத்ததற்கு நமது முன்னோர்களின் கடும் முயற்சியும், உழைப்பும் ஒரு பக்கம் என்றால் இந்த வன்னி குல விளக்கம் எனும் நூலே இன்னொரு பக்கமாக அமைந்தது என்பது குறிப்பிடதக்கதாகும்.
அதிலும் குறிப்பாக மக்கட் தொகை கணக்கெடுப்பாளர் சாதி பற்றி கேட்ட 19 வகையான கேள்விகளுக்கு நம்மவர் வன்னிய குல விளக்கத்தில் கொடுத்த பதில்கள் அதிமுக்கியமானதாகும். அவற்றிலிருந்து நமது இனத்தின் பெருமையை புகழை, கலாச்சாரத்தை, பாரம்பரியத்தை உணர்ந்து தெரிந்து கொள்ளலாம். இது எவருக்கும், எந்த இனத்துக்கும் கிடைக்காது. நமக்கு கிடைத்த அரிய ஆவணங்களான பொக்கிஷமாகும். இனி அந்த கேள்வி – பதில் பகுதியை சற்று பார்ப்போம்.
- சாதியன் பெயரைப் பற்றிய தொன்மையானதும்,
தோராயமானதுமான வரலாறு
அக்கினி குலத்தவர் என்றும் வன்னியர் என்றும் இந்த வகுப்பினைச் சார்ந்தவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்தியாவின் ஆதிக்கால குடும்பங்கள் என்பதைப் பற்றி அறிஞர் ஆப்பர்ட் என்பவர் எழுதிய வரலாற்றில் வன்னியர் என்ற சொல் பொதுவாக நெருப்பு என்று பொருள்படும். அரசர்கள் தம் கைகளில் தீச்சக்கரம் அல்லது ஆக்னேயச் சக்கரத்தை ஏந்தியிருப்பதனால் இவ்வரசப் பதவியோடு தொடர்புடைய சொல்லாகும். ஆகவே தாங்கள் அரசப் பரம்பரை வழி வந்தவர்கள் என்றும், அதைக் குறிப்பிடுவதே இந்தச் சாதிப் பெயர் என்றும் வன்னியர்கள் உரிமை கொண்டாடுகிறார்கள். வடஇந்தியாவிலும் வன்னிய குல வகுப்பினர்கள் பெருமளவில் வசித்து வருதல் ஒரு குறிப்பிடத்தக்க உண்மையாகும். தென் இந்தியாவில் உள்ள வன்னியர்கள் ஆரியர் அல்லாத இராஜபுத்திர வம்சத்தினைச் சார்ந்தவர்களின் பிரதிநிதிகள் என ஏற்றுக் கொள்ளப்படலாம் என்கிறார்.
- சாதியின் மூலம் (கர்ண பரம்பரை மற்றும் தோராயமான கருத்து விவரம்)
இராஜஸ்தானின் ஆதிக்கால வரலாறும் பழங்கால அருங்கலைப் பொருட்களும் என்ற நூலின் ஆசிரியர் கர்னல் டோட் அக்கினிக் குலத்தவர் ஆதிக்கால வகுப்பைச் சார்ந்தவர்கள் என்று கூறி இருக்கிறார். அவ்வப்போது பரவி வரும் சமயக் குருமார்களினாலும் அல்லது அந்தக் காலச் சமுதாய மக்களின் செல்வாக்கை ஏற்படுத்திக் கொண்ட ஒரு பிரிவினாலும் இவர்களுக்கு ஒரு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கலாம். அம்மக்களின் போர்க்காலப் பாடல்களின் கருத்து பொருளாகக் கண்டெடுக்கப்பட்ட படைக் கலங்கள் மற்றும் ஆதிக்கால மக்களின் அஸ்திக் கலசங்கள் ஆகியவை ஆபூ மலையில் மதம் மாறியவர்களைப் போல வட இந்தியாவில் நாடோடிப் படை வீரராக இருந்தனர் என்றும் கூறி உள்ளார்.
- வன்னியர்களின் பரம்பரைத் தொழில் மற்றும் தற்போதைய தொழில் முறைகள்
சத்திரியர்களின் கடமைகள் வேதம் ஒதுதலும், யாகம் செய்தலும், தானம் வழங்குதாலும், உலகத்தைக் காப்பதும், கடைக்கலங்களினால் பயிற்சி பெறுவதும், போர் முறை பயிற்சிகளும் ஆகும். கால மாற்றத்தினால் வன்னியர்களின் தொழில் வளம் தற்போது பல வகைப்பட்டதாக மாறுபட்டு இருக்கிறது. அவர்களில் பலர் தமது சொந்த நிலங்களிலும், பிறர் நிலங்களிலும் வேளாண் தொழில்களை கவனித்து வருகின்றனர். மதிக்கத்தக்க பண்ணையாளர்களாகவும், நில உரிமையாளர்களாகவும், அரசு பணியிலும், இன்னும் சிலர் வியாபாரிகளாகவும், பல தொழில்களில் ஈடுபட்டுள்ளனர்.
- மற்ற வகுப்பினரோடு ஒப்பிட்ட நிலைமை
வன்னியர்கள் வைசியர்களுக்கும், சூத்திரர்களுக்கும் மேற்பட்ட நிலையிலும், பிராமணர்களுக்கு அடுத்த நிலையிலும் அந்தஸ்து வகித்து வந்தனர். தாம்பூலம் வழங்கப் பெறும் வரிசை முறையிலிருந்து இந்துக்களிடம் ஒருவரது சமுதாயம் சம்பந்தமான உயர்வு அல்லது தாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது.
- மதம்
அவர்களது முன்னோர்கள் மகாதேவனைச் சிவலிங்க உருவில் வணங்கும் மதக் கோட்பாடு உடையவர்கள். ஆனால் தற்போது கடைப்பிடிக்கும் மதம் சைவமும், சைவணவமும் ஆகும். காமாட்சி அம்மனையும் வழிபடுகிறார்கள்.
- பூணூல் அணிவது உண்டா? இல்லையா?
சத்திரியர் உபநயனம் செய்ய வேண்டுமென வேதங்களில் கூறப்பட்டுள்ளது. சிலர் தற்போதும் பூணூல் அணிகின்றனர். ஆயினும் திருமண காலங்களில் முதலில் செய்யப்படும் சடங்கு உபநயனம் ஆகும். மேலும் ஈமக்கிரியைகள் செய்கின்ற போதும், பெற்றோர்களுக்கு வருடாந்திர சிராப்தம் செய்யும் போதும் தவறாமல் பூணூல் அணிவிக்கப் படுகிறது. காலப் போக்கில் இதை அனுஷ்டிக்க முடியாதவர்கள் ஆனார்கள்.
- புரோகிதர்கள் அல்லது குருக்கள்
ஆதியில் விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும், சம்பு மகரிஷியும் குருக்களாக இருந்து வந்தனர். பின்னர் அவர்களது சந்ததியினர் குரு பரம்பரையாக இருந்து வந்தனர். சைவ, வைணவ பிரிவினருக்கு தனி குருமார்கள் இருந்தனர்.
- பிறப்பு சம்மந்தமான சடங்குகள்
மனிதனின் உடல், உயிர், ஆன்மா ஆகியவற்றினைத் தூய்மைப் படுத்துவற்காக அவன் தாயின் கருவில் தோன்றிய காலந்தொட்டு சடங்கள் அனுஷ்டிக்கப்படுகின்றன. கர்ப்பநானம், பும்ஸவினம், சீமந்தம், ஜாத கர்மம், நாம கர்ணம், நிஸ்க்ரமானம், அன்னப் பிரசானம் சூடகர்ணம், வித்தியாரம்பம் மற்றும் உபநயனம் ஆகியவை சடங்குகள் ஆகும்.
- திருமணச் சடங்குகள்
மிக அரிதாகவே மணமகன் வீட்டிலே திருமணம் செய்விக்கப்படும். மணமகள் வீட்டில் திருமணம் செய்யப்படாத போது பெண்ணின் தாய் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை. முகம்மதிய அரசு இங்கு வந்த பின் பிராந்தியப் பழக்க வழக்கங்களுக்கேற்ப பல மாற்றங்கள் ஏற்பட்டுவிட்டன.
- மரணம் மற்றும் ஈமக்கிரியைச் சடங்குகள்
உடலிலிருந்து உயிர் பிரிந்த பின் ஒரு பல்லக்கு அல்லது பாடை தயார் செய்யப்படும். பின் சவத்தை எடுத்து அதன் மீது வைப்பர். உறவினர்களும், நண்பர்களும் பின் தொடர அப்பல்லக்கு அல்லது பாடை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். பொதுவாக வன்னியர்கள் சடங்கினை பன்னிரெண்டாம் நாள் செய்வர். சமய முத்திரை பெற்றவர்கள் மோட்சலோகத்திற்கு அழைத்துச் செல்லும் ஹோமத்தீ பத்தாம் நாளில் மூட்டப்பட்டு சடங்குகள் செய்யப்படும்.
- திருமணம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு வயது
சத்திரிய மக்களிடையே காந்தர்வ மணம், இராக்கத மணம் (மணமகன், மணமகளை தடையை மீறி தூக்கிக் கொண்டு போய் திருமணம் செய்வது) என்னும் இருவகை திருமண முறைகள் வழக்கத்தில் இருந்து வந்தன. இத்தகைய திருமணம் தற்போது வழக்கத்தில் இல்லை. மணமகனின் பெற்றோர் மணமகளின் வீட்டிற்குச் சென்று கோத்திரம் முதலிய விவரங்கள் கேட்டறிந்து எல்லா அம்சங்களும் பொருந்தி இருந்தால் திருமணத்தை முடித்து வைப்பர்.
- விவாகரத்து
கணவன், மனைவியர் விவாகரத்து பெறுவதற்கான காரணங்களும் விவாகரத்து செய்யப் பெறும் முறை அது தொடர்பான சட்ட விவரங்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்த பின்னரே நடைபெறும். இந்த வழக்குகளில் பெண்ணின் தகப்பனார் அல்லது நெருங்கிய ஆண் உறவினர் யாரேனும் புகார் மனுவை அளிப்பார்கள்.
- விதவை மறுமணம்
வன்னியர்களிடையே விதவைகள் மறுமணம் நடைமுறையில் அனுஷ்டிக்கப்படுவது இல்லை.
- சாதிகளின் பொது பெயர்கள்
அவரவர்கள் மேற்கொண்டுள்ள தொழிலுக்கு ஏற்றபடி பெயர்கள் கொடுக்கப்பட்டிருப்பதால், அதிகாரம், வீரம், தலைமை அல்லது உயர்வு இவற்றைக் குறிக்கும் பெயர்களை வைத்துக் கொள்ள வன்னியல் அனுமதிக்கப்பட்டனர். இராயர், நாயகர், வர்மா, பூபதி, படையாட்சி, கண்டர், தந்திரியார், சாமர்த்தியார், அஞ்சாத சிங்கம், வாடிண்டையார், பண்டாரத்தார், பாலன், சம்பு, சேரர், சோழர், பாண்டியர், நாயனார், மழவர், உடையார், ரெட்டியார், செம்பியர், சம்புவராயர், கச்சிராயர் மற்றும் பலவாறு அழைக்கப்பட்டனர்.
- ஆடை அணிகலன்கள்
ஒரு சிறிய கால்சட்டை அதன்மேல் ஒரு துணி, உடம்பில் சட்டை, தலையில் தணிப் பாகை என ஆடவரின் அணிகளாகவும், சிறுமியர்க்கு சிறு சட்டை, பாவாடை, பெண்டிர்க்குப் புடவை, ரவிக்கை, நகைகள் ஆகியன மகளிரின் ஆடை அணிகளாகவும் விளங்கின.
- உணவு
பலவகைத் தானியங்களைச் சமைத்துண்பர். காய்கறியும், மாமிசமும் உட்கொள்வர்.
- மது அருந்து பழக்கம்
வன்னியர் மயக்கந்தரும் மதுவை அருந்தக் கூடாதென விலக்கப்பட்டுள்ளது. ஆயின் இது பின்பற்றப்படுவதில்லை.
- சாதியின் உட்பிரிவு பெயர்கள்
வன்னியர்களின் சூரிய குலம், சந்திர குலம், அக்கினி குலம் அல்லது உருத்திர வன்னியர், கிருஷ்ண வன்னியர், சம்பு வன்னியர், பிரம்ம வன்னியர், இந்திர வன்னியர் என பல உட்பிரிவுகள் உள்ளன.
- மேலே கூறாத சிறந்த பழக்க வழக்கங்கள்
வன்னிய குல சத்திரியர் அக்கினியிலிருந்து தோன்றியதற்கு அடையாளமாக திரௌபதி அல்லது அம்மன் திருவிழாக்களில் தலையில் நெருப்புச் சட்டி அல்லது நெருப்புக் கரகம் தூக்கி வரும் பழக்கம் வருந்து வருகிறது. திருப்போரூர் கோயிலில் இரும்பைக் காய்ச்சிய மழுவை அடிப்பதை வழக்கமாக வன்னியர்க்குப் பணிபுரியும் நடனமாது செய்து வருவாள். நெருப்பின் மீது நடந்து செல்லும் பழக்கம் வன்னியர்க்கு சிறப்பியல்பாகும்.
மக்கட் தொகை கணக்கெடுப்பாளர் கேட்ட கேள்விகளுக்கு நம் சமுதாய பெரியவர்கள் அளித்த இந்த பதில்கள் தான் கேட்ட ஆங்கிலேய அரசு நமக்கு வன்னிய குல சத்திரியர் என்று குறிப்பிடும் பெருமையை கொடுக்க வைத்தது என்பதை நமது சொந்தங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட கேள்வி பதில் பகுதியை நான் சுருக்கியே எழுதி உள்ளேன் என்பதை அறியவும் இப்படி விரிவான கேள்வி பதில் பகுதியையும் இணையாக வன்னிகுல விளக்கம் எனும் ஆங்கில நூலை கொடுத்தும், நமக்கு சாதகமான பதிலைப் பெற முடியவில்லை என்ன செய்வதென்று மீண்டும் கூடி விவாதித்தனர் சமுதாய பெரியோர்கள். அதற்கான விடை வன்னிய குல சத்திரிய மகா சங்கமாக உருவாகியது. சங்கம் கண்ட ஆங்கிலேய அரசு 1891-ல் வன்னியகுல சத்திரியர் என்று பதிவு செய்ய சொன்னாலும், அதற்கான ஆணையை 1929-ல் தான் வெளியிடப்பட்டது.
மகாசபையும், மகா சங்கமும்!
நாட்டுப்பற்றுள்ள நம் இந்தியர்கள் 1885-ம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை பம்பாயில் வங்க பாரிஸ்டர் பானர்ஜி தலைமையில் ஆரம்பித்தார்கள். நாட்டிலிருந்த பல்வேறு ஸ்தாபனங்களை ஒன்று கூடி காங்கிரஸை மத்திய ஸ்தாபனமாக அமைத்தன. இதனால் ஆங்கிலம் கற்ற இந்தியர்களுக்குள்ளே ஒரு பெரும் கிளர்ச்சி உண்டாயிற்று. நாடெங்கும் நல்லெண்ணங்கள் பரவி இந்தியர்கள் மேல் நாட்டவரைப் போல் உயர் நிலையை அடைய வேண்டுமென்ற முழக்கும் உண்டாயிற்று.
இராம மோகன்ராய், இராம கிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், பங்கிம் ஈஸ்வர சந்திர வித்யாசாகர், சுரேந்திரநாத் பானர்ஜி, பால கங்காதர திலகர், கோபால கிருஷ்ண கோகலே, வ.உ. சிதம்பரம் பிள்ளை, சுப்பிரமணிய பாரதியார் போன்ற அரும்பெரும் தலைவர்கள் நாட்டின் சுதந்திரத்திற்காக அரும்பாடுபட்டனர்.
அச்சமயத்தில் நம் குலத்தவரில் சிலர் நல்ல பதவிகளை அடைந்து, நல்ல நிலையில் இருந்ததால் இக்கிளர்ச்சி அவர்களையும் தூண்ட ஆரம்பித்தது. எல்லா நிலையிலும் உயர்வடையாமல் இருக்கும் ஏழைகளுக்கு நல்ல உணர்வை ஊட்டுவதற்கான சமயம் இதுவே என்று அவர்கள் தீர்மானித்தார்கள். குலத்தின் பழைய உயர்நிலைக்கு நமது சமுதாயம் தற்போது வர வேண்டுமானால் கல்வியையும், வீரத்தையும், செல்வத்தையும் மறந்து கிடக்கும் நம்மவர்களுக்கு பண்டைய உணர்ச்சியை அறிவுறுத்தவும் முடிவை எடுத்தார்கள்.
சென்னை மாகாண வன்னிய இன பெரியோர்கள் 05.02.1885-ந் தேதியன்று ஒன்று கூடி ஒரு மாநாடு போல் நடத்தி வன்னிய குல அபிமான சங்கம் என்ற ஒரு சாதிச் சங்கத்தை உருவாக்கினார்கள். இதுதான் இந்தியாவில் ஏற்படுத்தப்பட்ட முதன் முதலான சாதிச் சங்கம் என்ற பெருமையை பெற்றது. அதே சமயம் நாம் மேலே சொன்ன கருத்துக்ள் அடங்கிய மனு ஒன்றை கா. அண்ணாசாமி நாயகர் அவர்களால் நீலகிரியிலிருந்து கா. கோபால்சாமி நாயகருக்கு எழுதப்பட்டிருந்தது. அண்ணாசாமி நாயகர் அவர்களும், அவருடன் பிறந்து இக்குலத்திற்கு பல பணிகள் புரிந்த கா. ஆறுமுக நாயகர் அவர்களும் இக்காரியத்தில் ஈடுபட்டனர்.
மனுவாகிய கடிதத்தைப் பெற்ற கோபால் நாயகர் அவர்களும் தொடங்கும் வேலை சரிவர முடிய வேண்டுமானால் அதற்காக தனியாக ஒருவர் இருந்து உழைக்க வேண்டுமென்றும், அப்படி உழைத்தால் தான் மேற்கொண்ட பணி பழி சொல் எதுவுமின்றி முடியுமென்றும் தெரிவித்தார். அதற்காக அண்ணாசாமி நாயகரே சென்னைக்கு வந்து உழைப்பதாக இருந்தால் அதற்கான பொருளுதவியை செய்வதுடன், தானும் உறுதுணையாக இருந்து பாடுபடுவதாகவும் சொன்னார். இதன்படி 1887-ம் ஆண்டில் அண்ணாசாமி நாயகர் சென்னைக்கு வந்து சேர்ந்தார்.
சென்னையில் இருவரும் பெரு முயற்சிகள் செய்து, பலரையும் திரட்டி, அளவாலாவிப் பேசினர். அதில் மகாநாலடு சிவபாத நாயகர், மகாநாடு அரங்கநாத நாயகர், அத்திப்பாக்கம் வெங்கடாஜல நாயகர், ச. சிங்கார வேலு நாயகர், கா. அண்ணாசாமி நாயகர் ஆகிய ஐவர் கூடிய சபை ஒன்றை ஏற்படுத்தினார்கள். இதில் சென்னை மாகாணத்தில் ஏற்படுத்தப்பட்ட சங்கம் பற்றியும் விவாதித்தனர்.
அரசாங்கத்துடன் தொடர்பு கொண்டு கடந்த இருபது ஆண்டுகளாக மக்கட் தொகை கணக்கெடுப்பில் சத்திரியர் என பதிவு செய்திட போராடி வரும் நாமே சென்னையில் மாத்திரமல்ல, வன்னியர்கள் வாழும் ஊர்களிலெல்லாம் பரவும்படி ஒரு சங்கத்தை உருவாக்கலாமென்று எண்ணினார்கள். இதற்காக அடுத்தடுத்து ஐந்து கூட்டங்களை அரங்கநாத நாயகர் இல்லத்திலேயே நடத்தினர். கடைசியில் கீழ்கண்ட முடிவுகளை எடுத்தார்கள்.
சங்கத்தின் பெயர் ‘அக்கினி குல சத்திரிய மகா சங்கம்’ என்பதும் அதை நடத்துவோர் இவர்கள் தான் என்பதும், சங்கத்திலிருந்து ‘வன்னிய குலாபிமானி’ என்னும் பத்திரிகை ஒன்றை வெளியிட வேண்டுமென்றும் முடிவெடுத்தனர்.
மகாசங்கம் 05.03.1887-ல் தொடங்கப்பட்டு ஊர் ஊராகச் சென்று அதைப் பற்றி மக்களிடம் விளக்கிப் பேசி வளர்த்தெடுத்தனர் நாயகரும் அவர் தம் சங்கத்தாரும். இந்த நேரத்தில் இப்படி இரண்டு சங்கங்களாக பிரிந்து செயல்படுவது நல்லதல்ல என்பதை உணர்ந்த நமது சமுதாய பெரியவர்கள் இரண்டையும் இணைத்து வைக்க முயற்சி செய்தனர்.
நல்லோர் நினைப்பது நடந்தே தீருமென்று முயற்சி செய்தனர். வன்னியகுல அபிமான சங்கமும், அக்கினி சத்திரிய மகா சங்கமும் இணைக்கப்பட்டு ‘வன்னி குல சத்திரிய மகாசங்கம்’ என பெயரிடப்பட்டு செயல்பட ஆரம்பித்தது.
அதன்படி 1888-ம் ஆண்டு ஏப்ரல் 8-ஆம் நாளில் வன்னிய குல மாபெரும் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர். ராவ்சாயப் த. செல்லப்ப நாயகர் தலைமையின் கீழ் வன்னி குல சத்திரிய மகா சங்கக் கூட்டம் ஒன்று அப்போதுதான் முதன் முதலில் கூடியது. அன்றே சங்கமும் நிறுவப்பட்டது.
சங்கத் தலைவர், உபதலைவர் முதலான செயலாளர்கள் வரை ஏற்படுத்தப்பட்டு, 42 நபர்கள் கொண்ட உள்ளூர் கமிட்டி ஒன்று நியமிக்கப்பட்டது. இச்சங்கம் 04.08.1899-ல் கல்வியையும், தர்மத்தையும், சாஸ்திரத்தையும் மேற்கொள்ளும்படி 1860-ம் ஆண்டு 21-வது சட்டப்படி ரிஜிஸ்டர் ஆபிஸில் பதிவு செய்யப்பட்டது. பின்பு மாவட்டங்கள் தோறும் கிளைகள் தொடங்கப்பட்டன.
கோபால் நாயகர், மகா சங்க பிரதேச காரியதரிசியாக இருந்த கா. அண்ணாசாமி நாயகர் அவர்களைக் கொண்டு ‘வன்னிகுல விளக்கம்’ என்ற ஆராய்ச்சி நூலை எழுதி அவர் சொந்த செலவில் அச்சிட்டு வெளியிட்டார். சங்கத்தின் சார்பாக பல நூல்களை ஆதாரத்துடன் எழுதி வெளியிட்டனர். அதை மகா சங்க உள்ளூர் காரியதரிசியாய் இருந்தவரும், அரசு கல்விச் சாலை மேற்பார்வையாளருமான ஐய்யாக்கண்ணு நாயகர் அவர்களைக் கொண்டு தமிழில் இருந்து ஆங்கிலத்தில் எழுதும்படி செய்து அதையும் தமது சொந்த செலவில் அச்சிட்டு எல்லா கலெக்டர்களுக்கும், அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்கும் அனுப்பி நமது மரபை வன்னி குல சத்திரியர் என்பதை நிலை நாட்டினார் கோபால் நாயகர்.
அன்று முதல் பத்திரங்களிலெல்லாம் நமது சாதி பெயரை வன்னி குல சத்திரியர் என்று எழுதத் தொடங்கினார்கள். மேலும் நாயகர் அவர்கள் சிலை எழுபது திருக்கை வளம் முதலிய நூல்களுக்கு என் காலத்திலேயே உரை எழுதி அச்சிட்டுக் கொள்ளும்படியும், கோபால் நாயகர் எத்தனை நாட்களுக்கு இருப்பாரென்பது என்ன நிச்சயம் என்றும் அண்ணாசாமி நாயகர் அவர்களிடம் தெரிவித்தாரென்றால், அவரை நமது 2½ கோடி வன்னிய மக்களும் தெய்வமாக அல்லவா பூஜிக்க வேண்டும்.
கோபால் நாயகர் இருந்த வரையில் ஆறு ஆண்டுகளாக மகா சங்கம் நடக்கும். காலங்களெல்லாம் அவர் வீட்டு திருமணம் போல் நடத்தி வந்திருக்கிறார். அக்காலத்தில் பெருந்தனக்காரரான ஆற்காடு தனக்கோட்டி முதலியார் பேசும் போது கோபால் நாயகர் காலம் வரையில் தான் சங்கம் நடக்கும் என்று சொல்ல, அப்படியா நினைக்கீறீர்கள் எத்தனையோ கோபால் நாயகர்கள் தோன்றி சங்கத்தை நடத்தப் போகிறார்கள் என்றாராம். கோபால் நாயகர் கூறியது பொன் மொழி அல்லவா? இன்றளவும் நம் மக்களுக்கு சங்கம் தானே உறுதுணையாக இருக்கிறது.
தாம் பிறந்த குலமாகிய வன்னிய குல சமுதாயத்திற்கு பல்வேறு வகையில் உழைத்து. செல்வத்தையும் தந்து எம்மக்களை சீர் தூக்கிப் பார்த்து சங்கத்தின் மூலம் இணைக்க வைத்ததை நினைத்த நம் வன்னிய குல முன்னோர்கள் 1894-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி சென்னையில் நடந்த வன்னிய குல சந்திரிய மகாசங்க 6-வது ஆண்டு விழாவில் ‘வன்னி குலோத்தாரணர்’ எனும் பட்டத்தை சூட்டி மாலை மரியாதை செய்து மகிழ்ந்து கௌரவித்தார்கள்.
1896-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் வெள்ளிக்கிழமை அன்று வன்னி குலோத்தாரணர் ஸ்ரீமான் கா. கோபால் நாயகர் இறைவனடி சேர்ந்தார். மகாசங்கம் தொடர்ந்து ஏறுநடை போட அவரது புதல்வர் கா. கோபலபத்திர நாயகர் தயாராக வந்தார். தன் தந்தையின் செயலாக்கத்தை முழுமையாக முடிவு செய்ய எண்ணி, சங்க யாத்திரையை காசி, இராமேஸ்வரம் யாத்திரையாகக் கருதி இரவு பகல் பாராது வன்னிகுல மித்திரன் ஆசிரியர் ஆ. சுப்ரமணிய நாயகர், முனுசாமி நாயகர், வெங்கடாஜலம் நாயகர் மற்றும் நம் சமுதாயத்தினருடன் சேர்ந்து வன்னிய மக்கள் வாழ்ந்த பகுதிகளுக்கெல்லாம் சளைக்காமல் பிரயாணம் செய்து சங்கத்தை வளர்த்தார். மகா சங்கத்தின் ஆண்டு விழாவை வருடந்தோறும் சிறப்பாக நடத்தியதுடன், கல்விச் சாலையையும் அமைத்தார். இவரது தகப்பனார் கா. கோபால் நாயகர் ராயபுரம், மைலாப்பூர் ஆகிய இரண்டு இடங்களில் கல்விச் சாலையை அமைத்து இருந்தார்.
பலபத்திர நாயகரின் குலத் தொண்டை பார்த்த நம் குல பெரியோர்கள் 22-வது ஆண்டு விழாவில் ‘பல்லவ குலசேகரர்’ எனும் பட்டத்தை வழங்கி கௌரவித்தார்கள். அந்த விழாவின் போதே சங்கத்தின் வெள்ளி விழா வேலையில் இறங்கினார் பலபத்திர நாயகர். அவருக்கு தோள் கொடுத்து உதவி பெரும் புண்ணியம் சேர்த்தார் நன்செய் இடையாற்றின் கந்தசாமி கண்டர் அவர்கள்.
சென்னையில் விழா நடத்த முடியாத சூழல் ஏற்பட்டதும், உடனே தனது ஊரில் நடத்தலாமென சொல்லி வெகு விமரிசையாக மகா சங்க வெள்ளி விழாவை நடத்திக் காட்டினார் கண்டர். 1913-ம் ஆண்டு ஊரார் வியக்கும் வண்ணம் மகா சங்கத்தின் வெள்ளி விழாவை நடத்தியதோடு, சங்கத்திற்கென கட்டிடம் வாங்க முப்பதாயிரம் ரூபாய் பணத்தை தர வேண்டுமென்று உயிலும் எழுதி வைத்தார் கண்டர்.
நன்செய் இடையாற்றில் வெள்ளி விழாவை நடத்தி வைத்த பல்லவகுல சேகரர் கா. கோ. பலபத்திர நாயகர் சேலத்தில் மகா சங்க கூட்டத்தைக் கூட்ட முயற்சி செய்து வரும் வேளையில் 1915-ம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி மண்ணுலகை விட்டு மறைந்தார். வன்னிய உலகமே துக்கத்தில் ஆழ்ந்தது.
அதன் பிறகு சங்கத்தின் நடவடிக்கைகள் தொடர்ந்தாலும் ஏறுமுகமாக அமையவில்லை என்பது தான் உண்மை. ஆனாலும் அரசாங்கத்திற்கு முன்னோர் வைத்த வேண்டுகோளில் தடுமாற்றம் வருமா என்ன? மிகச் சரியாக 1929-ம் ஆண்டு ஜூன் மாதம் பள்ளி அல்லது வன்னிய குல சத்திரியர்கள் என்றும் தெலுங்கு பேசும் மாவட்டங்களில் இருப்போர் அக்னி குல சத்திரியர்கள் என்றும் அழைக்கப்படுவதாக அரசு ஆணையை பிறப்பித்தது.
யார் கண்பட்டதோ தெரியவில்லை. இச்சமயத்தில் மகா சங்கத்தின் நடவடிக்கைகளில் பங்கெடுக்காமல் வன்னிய குல சத்திரிய மாகாண சங்கம் என்று சங்கத்தை ஆரம்பித்து செயல் பட்டார்கள் ஒரு பிரிவினர். சுமார் பத்து ஆண்டுகள் நீடித்த இப்பிரச்சனையை மகா சங்கத்தின் 50-வது ஆண்டு தங்க விழா முற்றுப்புள்ளி வைத்தது. வரவேற்பு சங்க தலைவரான இராயபுரம் இராஜூ நாயகர் அவர்களின் பெரு முயற்சியார் இது சாத்தியமானது.
சென்ற பத்து ஆண்டுகளாக மகாசங்கம் என்றும் மாகாண சங்கம் என்றும் பிரிந்திருந்தவை ஒற்றுமைப் படுத்தப்பட்டு 1939 ஜூன் 4-ந் தேதி முதல் பழைய மகா சங்கத்தையே நடத்துவதென இருசாராரும் முடிவெடுத்து அறிவித்து செயல்பட்டனர்.
இரு சங்கத்தாரும் இணைந்து நடத்திய தங்க விழா 1940-ம் ஆண்டு மே மாதம் சிறப்பாக நடைபெற்றது. 1938-ல் நடை பெற்றிருக்க வேண்டிய இவ்விழா சங்கத்தினரின் இணைப்பால் தாமதமாக நடந்து முடிந்தது. இதற்காக சென்னை வன்னிகுல சத்திரிய மகா சங்க தங்க விழா அறிக்கை பத்திரம் வெளியிடப்பட்டது. 1888 முதல் நடந்த சங்கத்தினை பற்றி ஒரளவு தெரிந்து கொள்ள அந்த பத்திரம் மிகவும் பொக்கிஷமானதாகும்.
அதன்பிறகு 1957-ம் ஆண்டு தான் இதே போன்றதொறு அறிக்கைப் பத்திரிம் 69-வது ஆண்டு விழா சமயத்தில் வெளியிடப்பட்டது. 1947 முதல் 1957 வரையிலான கால கட்டத்தில் நடந்த சங்க நடவடிக்கைகளின் தொகுப்பாக இப்பத்திரம் வெளியிடப்பட்டது. 1940-க்கும் 47-க்குமான இடைப்பட்ட காலத்தில் நடந்தவை ஆவணங்களாக கிடைக்கப் பெறவில்லை.
சுதந்திர இந்தியாவும், வன்னியர்களும்!
இந்திய சுதந்திரப் போராட்டம் தேசமெங்கும் எதிரொலித்த நிலையில் தமிழகத்திலும் போராட்டம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. தமிழ்நாட்டில் கண்ணியமுடன் வாழ்ந்த வன்னியப் பெரியோர்களும், இளைஞர்களும், தாய்மார்களும் காங்கிரஸில் சேர்ந்து உழைத்துச் செந்நீர் சிந்தி, கண்ணீர் புகை, தடியடி, துப்பாக்கிச் சூடு, தூக்கு மேடை, சிறைத் தண்டனை என்பவை அனைத்தையும் ஏற்று குடும்பம் குடும்பமாக பங்கேற்று களத்தில் போராடினார்கள்.
1907-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் வழக்கறிஞர் தொழில் நடத்தச் சென்ற மகாத்மா காந்தியடிகள், அங்கு இந்தியர்களுக்கு நடந்த கொடுமை தாளாமல் சத்தியாகிரகப் போராட்டத்தை துவக்கினார். காந்தியடிகள் பெயரை உலகமே அறியாத அக்காலத்திலேயே காந்தியடிகள் பெயரை உலகறிய முழு முதல் காரணமாக இருந்தவர் தென் ஆற்காட்டைச் சேர்ந்த வள்ளியம்மை என்ற வீர வன்னியத் தாய் ஆவார்.
அதுமட்டுமல்ல அங்கு நடந்த சத்தியாகிரகப் போரில் அல்லும் பகலும் உழைத்து இறுதியில் ஆப்பிரிக்க அரசின் துப்பாக்கிக் குண்டினை மார்பில் ஏற்ற மாவீரர் நாகப்ப படையாட்சி ஆவார். காந்தியடிகள் தமிழகத்திற்கு முதன்முதலாக வந்த போது மாயவரம் தாலுகாவிலுள்ள கீழப் பெரும் பள்ளம் கிராமத்திற்குச் சென்று நாகப்ப படையாட்சியின் பெற்றோரைக் கண்டு நன்றியும், ஆறுதலும் சொல்லி, அவர்கள் வீட்டில் தங்கி உணவு உட்கொண்டு சென்றார் என்பது நம் வன்னிய சமூகம் மட்டுமல்ல, தேச ஆர்வலர்களும் நெஞ்சில் நிறுத்த வேண்டிய சம்பவமாகும்.
ஏறக்குறைய 1920-களிலேயே காங்கிரஸ் உரிமைப் போராட்டத்திலே சொற்பொழிவாற்றி, கணவனிலிருந்து கைக்குழந்தை வரை அனைவரையும் சுதந்திரப் போராட்ட களத்திலே இறக்கி விடியலுக்கு விடையாக நின்றவர் வீர வன்னியத் தாய் அஞ்சலை அம்மையாராவார். நிறைமாத கர்ப்பிணியாய் இவர் சிறையில் பட்டபாடு சுதந்திர வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
காங்கிரஸ் இயக்கித்திற்காக உழைத்துக் கையில் காசில்லாமல் நெளியும் வறுமையிலும், நெஞ்சம் தளராமல் ஆங்கிலேயரை எதிர்த்து போராடி அடிமைத் தலையை வேரறுப்பேன் என பெரிய முதலாளியோடு போட்டியிட்டு மக்கள் பலத்தால், உண்மை உழைப்பால் வெற்றி பெற்றவர் வீர வன்னியர் கேத்தாண்டம் பட்டி பொன்னுச்சாமி கண்டர்.
சுதந்திர போராட்ட வரலாற்றில் வன்னியர்களின் பங்கை எழுத நினைத்தால் அது தனி வரலாறாகி விடும். உதாரணத்திற்கு ஒன்று. 1930 முதல் 1945 வரையில் தமிழ்நாட்டில் காங்கிரசில் சேர்ந்து உழைத்துச் சிறை சென்றவர்கள் 5760 தொண்டர்கள் ஆவார்கள். அவர்களில் வன்னியர்கள் 1300 தேச தொண்டர்கள் என்றால் நம்மவரின் பங்கு காங்கிரஸிற்கு ஆணிவேர் அல்லவா?
காங்கிரஸில் அரும் பாடுபட்டு உழைத்தும் நம்மை ஏமாற்றியது ஒரு கூட்டம். 1937-ல் காங்கிரஸ் மாகாண அரசியலை ஏற்படுத்தி சட்டசபைக்கும், மேல் சபைக்கும் 280 பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது ஆற்காடு தங்கவேல் நாயகர், கள்ளிப்பட்டு கிருஷ்ணசாமி நாயகர், பூண்டியாங்குப்பம் இராமச்சந்திர படையாட்சி ஆகிய மூன்று வன்னியர்கள் மட்டுமே தான் தேர்ந்தெடுத்தனர்.
1945-ல் இந்திய சட்டசபைக்கு ஏழு பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட போது வன்னியரை கை கழுவினர். 1946-ல் சட்டசபைக்கும், மேல்சபைக்கும் ஏழு இடங்களை வன்னியர்கள் கைப்பற்றினார்கள். அதன் பிறகு நடந்த பஞ்சாயத்து தேர்தல்களில் நமது சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தனிப்பட்ட முறையில் வெற்றி பெற்று சாதனை படைக்க அதுவே வன்னியர்களின் ‘சங்கம்’ என்ற ஆதாரத்தை நீர்த்துப் போக வைத்தது.
இராமசாமி படையாட்சியார்
அன்றைய தென் ஆற்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் 1918-ம் ஆண்டு சிவ சிதம்பர படையாட்சி தம்பதியர்க்கு மகனாக பிறந்தார் இராமசாமி படையாட்சியார். படையாட்சியாரின் சமுதாயத் தொண்டு அவரது 24-ம் வயதிலே கடலூர் முனிசிபல் உறுப்பினராக்கியது. பொது நலத்தொண்டில் பெரும் புகழ் சேர்ந்ததால் அடுத்த நான்கு வருடத்துக்குள் தனது 28-வது வயதில் கடலூர் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு விடுதலை அடைவதற்கு முன்பாக நமது வன்னிய சமுதாயத்தில் இந்த இளம் வயதில் இவ்வளவு பெரிய பதவியை பெற்றவர்கள் யாருமில்லை.
இந்நிலையில் இராமசாமி படையாட்சியாரும், மாணிக்கவேல் நாயகரும் இணைந்து வன்னிய குல சத்திரிய அரசியல் சங்கம் ஒன்றை தொடங்கினர். இச்சங்கத்தினர் 1946-ல் கல்கத்தாவில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் பெரும்பான்மையான வன்னியர்களில் ஜனத்தொகைக்கு ஏற்ப எம்.எல்.ஏ. சீட் ஒதுக்கிட வேண்டினர்.
சங்கத்தாரின் கோரிக்கையை காங்கிரஸ் மறுக்க, வன்னியர்கள் தனியாக தேர்தலை சந்தித்து தோல்வியை தழுவினர். இதனால் கொதித்துப் போன வன்னிய தலைவர்கள் காங்கிரஸின் நயவஞ்சக போக்கை எடுத்துக் காட்டி கடுமையாக பிரச்சாரம் செய்தனர். அதன் பயனாக 1949-ல் நடைபெற்ற ஜில்லா போர்டு தேர்தலில் சங்கத்தினர் தனியாக நின்று போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியின் விளைவால் ஒன்றாக இருந்த அரசியல் சங்கத்தினர், இரண்டு அரசியல் கட்சியாக பிரிந்தனர். இராமசாமி படையாட்சியார் தலைமையில் சேலம் சுப்பிரமணியம் ஏ. கோவிந்தசாமி ஆகியோர் சேர்ந்து உழைப்பாளர் கட்சியை தோற்றுவித்தனர். 1952-ல் நடைபெற்ற நாட்டின் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட உழைப்பாளர் கட்சி 19 சட்டமன்ற உறுப்பினர்களையும் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று அரசியல் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
மாணிக்கவேல் நாயகர் ‘காமன்வீல்’ பார்ட்டி (பொது நலக்கட்சி) என்ற பெயரில் கட்சியை துவங்கி தேர்தலில் போட்டியிட்டு ஆறு சட்டமன்ற உறுப்பினர்களையும், மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் பெற்று ராஜாஜியின் வேண்டுகோளால் காங்கிரஸில் இணைந்து அமைச்சராகவும் ஆனார்.
சமுதாய பெருந்தலைவரான படையாட்சியார் தனியே நின்று சட்டமன்றத்தில் சங்க நாதம் எழுப்பினார். அரசு அதிர்ந்தது. அந்த வேளையில் நாடே ஒரு திருப்புமுனையை சந்தித்தது. ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தால் நாடு கொந்தளிக்க, குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராஜர் நின்று வெற்றி பெற்றார். அவருடைய வெற்றிக்கு காமராஜர் முதல் அமைச்சராகி படையாட்சியாரை மந்திரிசபையில் சேர, வன்னியருக்கு 20 சதவீத இலவச கல்வி தருவதாக இருந்ததால் சேருவதாக சொல்ல, காமராஜரும் ஆமோதித்து அதனை செய்து காட்டினார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த 20 சதவீதமே பின்னர் இட ஒதுக்கீட்டுக்கான கோரிக்கைக்கு முதல் படியாக அமைந்தது. இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும், இரண்டு முறை மேல்சபை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1975-ல் வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு கோரி மறியல் போராட்டம் நடத்தினார். இதன் தொடர்ச்சியே 1980-ல் வன்னியர் சங்கம் உருவானது.
இரண்டுமுறை (1980 – 84) பாராளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய படையாட்சியார் வாழ்நாள் முழுவதும் தன்னை பொது வாழ்க்கையில் ஈடுபடுத்திக் கொண்டார்.
இதேபோல் அக்கால கட்டத்தில் சமுதாயத் தொண்டு செய்து புகழ் பெற்றவர் ஐயா மாணிக்கவேல் நாயகர் ஆவார். காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் வன்னிய சமுதாயத்திற்கான உழைப்பில் எவ்வித மாறுபாடும் கொள்ளாதவர். வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு தேவையென்று பல கூட்டங்களிலும், அறிக்கைகளிலும் உரக்கச் சொன்னவர். இவரது சமுதாயத் தொண்டும் வன்னிய சமுதாயத்திற்கு மகத்தானது.
இராமசாமி படையாட்சியாருடன் துணையாக நின்று உழைப்பாளர் பொது நல கட்சியை தொடர்ந்து நடத்தி வந்தவர் யூ.எஸ். இராமமூர்த்தி என்ற தவத்திரு வன்னிய அடிகளார் ஆவார். அடிகளாரின் சமுதாயத் தொண்டு தான் இன்றிருக்கும் தலைமுறையின் முன்னோர்களை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல. இக்கட்டுரையை எழுதும் நான் உட்பட அந்த நேரத்தில் சமுதாயப் பணிக்கு ஈர்க்கப்பட்டவர்களில் பலர் இதில் இடம் பெற்றனர்.
வன்னியர் சங்கம்
மகா சங்கத்தின் செயல்பாடுகளை அரசியல் கட்சிகள் உள் வாங்கிக் கொண்டதின் விளைவு வன்னிய சமுதாயம். அதன் தலைவர்களுக்கு பின் அணி வகுத்தது. அதிலும் இராமசாமி படையாட்சியாரைத் தவிர வேறு யாரும் மக்களிடம் செல்வாக்கு பெற முடியவில்லை. படையாட்சியாருக்கு பிறகு எழுச்சிமிக்க தலைமை இல்லாததால் நமது சமுதாயத்தினர் அரசியல் கட்சிகள் பின்னால் திரண்டனர். வன்னியர் பலர் பல பெயர்களைக் கொண்ட அமைப்புகளை நடத்தி வந்தனர்.
வன்னியர் நடந்தும் சாதி அமைப்புகள் சிதறிக் கிடப்பது குறித்து கருத்து கேட்டு பேசி, அவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்தது. உழைப்பாளர் பொது நலக் கட்சியை சேர்ந்த வன்னிய அடிகளார், வன்னியர் நற்பணி மன்றத்தின் சேலம் புலவர் வைத்தியலிங்கம், வன்னியர் பேரவைத் தலைவர் மணிவர்மா, வன்னிய மன்றத் தலைவர் குலசேகரனார், உழைப்பாளர் முன்னேற்ற கட்சியின் தலைவர் மார்க்க பந்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கூட்டமைப்பின் ராயப்பா, பாண்டிச்சேரி வன்னியர் சங்கத் தலைவர் கவிஞர் மணிமாறன் என மொத்தம் 28 அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஒருங்கிணைத்தனர்.
எல்லா அமைப்பின் செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து வன்னியர் சங்கமாக செயல்படுவதென்று முடிவு செய்யப்பட்டது. வன்னியர் சங்கம் என பெரியடப்பட்டு, அதன் பொதுச் செயலாளராக வன்னிய அடிகளார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதைக்கு தலைவராக யாரையும் நியமிக்காமல் சிறிது காலத்திற்கு பிறகு கோபால் நாயகரை தலைவராக நியமித்தார்கள்.
இக்கால கட்டத்தில் தான் தீவிர தி.க. விசுவாசியாக இருந்த இராமதாஸ் என்பரை தேடிப் பிடித்து அழைத்து வந்தார் வன்னிய அடிகளார். இதில் இராமதாசும், ஏ.கே. நடராசனும் நிரந்தர அழைப்பாளர்களாக இருந்தார்களே தவிர, எந்த பொறுப்பும் வகிக்கவில்லை. 1983 வரை அடங்கி இருந்த இராமதாஸ் வன்னிய சமுதாய மக்களின் எழுச்சியைப் பார்த்து ஆடிப்போன அரசியல் கட்சிகளின் கைப்பாவை ஆனார்.
வேலூரிலும், சென்னையிலும் மாநில மாநாடுகளை நடத்தி அடிகளார், மாவட்டந்தோறும் வன்னியர் சங்க மாநாடுகளை நடத்திக் காட்டினார். அப்போது தான் தமிழகத்திற்கு தேர்தல் வந்தது. வன்னியர் சங்கம் தேர்தலில் ஈடுபட வேண்டுமென்பது அடிகளாரின் கருத்து. தேர்தலில் ஈடுபடக் கூடாது என்ற இராமதாஸ் அடிகளாருக்கு எதிராக போட்டி வேட்பாளர்களை களத்தில் இறக்கினார். தேர்தலில் அடிகளாரின் அணி தோல்வியுற, இராமதாஸின் அணியோ கேவலமாக தோல்வியை சந்தித்தது.
தேர்தலில் நின்றது தவறென உணர்ந்து, வன்னியர்களிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்தார் அடிகளார். இனி எந்த சூழலிலும் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று சபதம் செய்தார் அடிகளார். இது இராமராசுக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. கூட இருந்தே கருங்காலியான இராமதாஸ் அரசியல்வாதிகளை கெஞ்சினால் மிஞ்சுவது. மிஞ்சினால் கெஞ்சுவது என்ற பாணிக்கு ஏற்றவாறு சமுதாயத்தையும் பின்னாளில் மாற்றி அமைத்தார்.
இதற்கு பிறகு அடிகளாரின் முழு வேகமும் சமுதாயப் பணியாக அமைந்தது. 1985-ல் சேலத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க பொதுக்குழு முடிவின் படி வன்னிய சமூகத்தினருக்கு கல்வி வேலை வாய்ப்பில் 20 சதவீத தனி ஒதுக்கீடு தர வேண்டி மறியல் போராட்டம் நடத்துவதென அறை கூவல் விடுத்தார் வன்னிய அடிகளார்.
30.09.1985-ல் ஆரம்பித்த மறியல் போராட்டத்தை 01.11.1985 வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்திக் காட்டினார் அடிகளார். இதனால் சேலம் சிறையில் 15 நாட்கள் வைக்கப்பட்டார். 12.01.1986-ல் மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்தி இரண்டாம் கட்ட தொடர் மறியல் போராட்டம் நடத்துவதென்றும், உள்ளாட்சி தேர்தல், அம்பா சங்கர் கமிஷன், மாநாடு நடத்துதல் என்றும் பல திட்டங்களை அறிவித்தார் அடிகளார்.
வன்னிய மக்களுக்கு அப்போது தான் இட ஒதுக்கீடு உண்மை முழுமையாக தெரிய வர, மறியல் போராட்டம் சூடு பிடித்தது. மறியல் போராட்டத்தின் வெற்றி, ரயில் நிறுத்த மறியல் போராட்டம் என்றும் அதின் வெற்றி ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டம் என்றும் உருவெடுத்தது.
வன்னியர் சங்கத்தின் இளைஞர் அணி செயலாளரான நான் இதற்காக சென்னைக்கு மாறு வேடத்தில் சென்று ரயில் நிறுத்த மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டேன். ஒரு வார சாலை மறியல் போராட்டத்தின் போது வாழப்பாடியில் நான் மறியல் செய்ய போலீசாரால் கைது செய்யப் பட்டேன்.
ஒரு வார கால தொடர் சாலை மறியல் போராட்டம் பழைய தென்னார்க்காடு மாவட்டத்தில் தீயாய் கொழுந்து விட்டு பரவியது. களத்தில் 25 உயிர்களை துப்பாக்கிக் குண்டுக்கு பலியாக கொடுத்தோம். கலவர பூமியான எமது போராட்ட களத்தை பார்க்க ஹெலிகாப்டரில் வந்து போக முடிந்தது ஆட்சியாளர்களால். தமிழகம் உறைந்து போனது இந்திய தேசம் ஆச்சரியத்தில் அண்ணாந்து பார்த்தது.
ஒரு இனத்துக்காக அந்த சாதி மக்கள் உயிரைக் கொடுத்து இட ஒதுக்கீடு கேட்டார்கள் என்ற வரலாற்று பெருமையை இந்தியாவுக்கு தந்ததே நமது வன்னிய சமுதாயம் தான். போராட்ட களத்துக்காக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்த நான் வாழப்பாடியில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டேன். என்னோடு கைதானவர்கள் 61 பேர். இராமதாஸ் கைதானது 15 பேருடன். அதுமட்டுமல்ல அரசியல்வாதிகளின் கைப்பாவையாக உருமாறியதும் இப்போது தான். ஆனால் போலிகளுக்கு மவுசு அதிகம் அல்லவா?
உயிர்பலியான போராட்ட களத்திற்கு பின்பு வன்னியர் சங்கம் இரண்டாக உடைந்தது. 1989 தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றது. 1990-ல் வன்னியர்களுடன் மற்ற 108 சாதிகளை இணைத்து பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்து மாற்றி மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலுக்கு கொண்டு வந்தார் முதல்வர் கருணாநிதி. அதற்கான ஒப்பந்தத்தில் முதல்வர் கருணாநிதியும், வன்னியர் சங்க பொதுச் செயலாளரான நானும் கையெழுத்திட்டோம். உயிர்ப்பலியான எம்மக்களுக்கு நிவாரண உதவியையும் அவரிடமே கேட்டுப் பெற்று வாங்கிக் கொடுத்தேன்.
மேலும் கடந்த ஆட்சியின் போது தடுப்புக் காவல் சட்டத்தின் படி கைது செய்யப்பட்ட ஐந்து வன்னிய இளைஞர்களை விடுவிக்குமாறு கேட்டதையும், உளமாற செய்து கொடுத்தார் முதல்வர். அப்போது குண்டர் சட்டத்தில் கைதானவர்களையும் விடுவிக்குமாறு கேட்டதற்கு, என்னிடம் நிச்சயம் செய்வதாக வாக்களித்து, பின்னர் அதற்கான ஆணையையும் பிறப்பித்தார். வன்னியர் சமூக பொதுச் செயலாளராக நான் மேற்கொண்ட இச்சம்பவம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இதற்காக அடிகளார் தலைமையில் பாராட்டு விழாவும், நன்றி அறிவிப்பு மாநாடும் நடந்தது.
தொடர்ந்து சமுதாயப் பணியாற்றிய அடிகளார் வன்னியர் சங்க காப்பகம் தொடங்கினார். அதில் நானும் காப்பாளராக இருந்தேன். அடிகளாரின் சமுதாயப் பணிக்கு நமது சமுதாய நல விரும்பி வாழப்பாடி இராமமூர்த்தி அவர்கள் பெரிதும் உதவினர். அதனால் எங்கள் மூவரையும் இணைத்து என்னை அழிக்க மும்மூர்த்திகள் சதி செய்வதாக இராமதாஸ் திட்டினார். யு.எஸ். இராமமூர்த்தி என்ற வன்னிய அடிகளார், வாழப்பாடி இராமமூர்த்தி, சி.என். இராமமூர்த்தியாகிய என்னையும் சேர்த்து மும்மூர்த்தியாக்கினார் இராமதாஸ்.
2000-மாவது ஆண்டில் சென்னையில் கடற்கரையில் மிகப்பெரிய அளவிலான வன்னியர் சங்க மாநாட்டை நடத்திக் காட்டினோம். அடிகளார், வாழப்பாடியாருடன், நானும் இணைந்து நடத்திய அம்மாநாடு இழந்த பெருமையை வன்னிய சமுதாயத்திற்கு மீட்டுக் கொடுத்தது. அதுவே 2001 தேர்தலுக்கு வித்திட்டது. மூவருமே 2001-ல் அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வெற்றி பெறச் செய்தோம். அதன் பின் ஒவ்வொருவராக இயற்கை எய்திட நான் சக தோழர்களுடன் தொடர்ந்து சங்கத்திற்காக பயணம் செய்து வந்தேன்.
தனி ஒதுக்கீடும், வன்னியர் கூட்டமைப்பும்
வன்னிய அடிகளாரும், வாழப்பாடியாரும் மறைந்து போன பின்பு 2005-ம் ஆண்டு வன்னிய சத்திரியர் சங்கத்தை உருவாக்கி தொடர்ந்து சமுதாய பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. வன்னிய சமுதாயத்துக்கு மத்திய அரசின் வேலை வாய்ப்பில் இரண்டு சதவீதமும், மாநில அரசு கல்வி வேலை வாய்ப்பில் 20 சதவீதமும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்று பல போராட்டங்களையும், ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியது வன்னியர் சத்ரியர் சங்கம்.
அரசியல் நோக்கம் எங்களுக்கு இரண்டாம் பட்சம் தான். முதலில் சமுதாய மக்களுக்கான உரிமைகளை பெற்றுத் தருவது தான் முக்கியமென்று செயல்பட்ட வன்னிய சத்ரியர் சங்கம். வன்னிய இன மக்களுக்காக தனி நல வாரியம் அமைக்க வேண்டுமென்றும் கோரிக்கை வைத்து ஆட்சியாளர்களை வியப்படைய வைத்தது.
வன்னிய சமுதாயத்தினரின் சொத்துக்கள் பல உயில்கள் மூலம் அறக்கட்டளைகளின் பெயரில் மொத்தம் 20 ஆயிரம் கோடிக்கு மேல் உள்ளன. அதை மீட்டு வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் அமைத்திட வேண்டுமென்றும் வன்னியர் நிகர் நிலை பல்கலைக் கழகம் வேண்டுமென்றும் தொடர்ந்து போராட்டங்களை வகுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற பாடுபட்டது வன்னியச் சத்ரியர் சங்கம்.
காலத்தின் சூழல் மாறுபடுவதை போல் வன்னிய சத்ரியர் சங்கம், மற்ற 23 வன்னிய அமைப்புகளுடன் கலந்து பேசி கடந்த 2009-ல் வன்னியர் கூட்டமைப்பாக உருமாற்றம் அடைந்தது. சமுதாயப் பணிகளை செய்வதில் சளைக்காத எனது தொடர் போராட்டம் கடந்த 1980-ம் ஆண்டு தொடங்கியது. அது இப்போது வன்னியர் கூட்டமைப்பாக மாறி இருக்கிறது.
வன்னியர் கூட்டமைப்பின் சார்பாக கல்வி, வேலைவாய்ப்புகளில் மத்தியில் இரண்டு சதவீதமும், மாநிலத்தில் இருபது சதவீதமும் வேண்டி போராடி வந்த வேளையில், வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு என்ற எனது நீண்ட கால போராட்டத்தை செயலாக்க எண்ணி அப்போதைய முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
1989-ம் ஆண்டு தனி ஒரு சமுதாயத்திற்கு தனியாக இட ஒதுக்கீடு வழங்க முடியாதென்று முழங்கிய முதல்வர் கருணாநிதி, 2006-ல் ஆட்சிக்கு வந்த பின்பு தாழ்த்தப்பட்டப்பட்டோர் பிரிவில் உள்ள 18 சதவீத இடத்தில் அருந்ததியர்களுக்கு (SCA) என தனி ஒதுக்கீடாக உள் ஒதுக்கீடாக மூன்று சதவீதமும், பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 30 சதவீதத்தில் (NAY) என்று இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவீதமும் தனி ஒதுக்கீடாக உள் ஒதுக்கீடு செய்தார் முதல்வர் கருணாநிதி. அதே போன்று காலங்காலமாக புறக்கணிக்கப்பட்டு வரும் வன்னிய சமுதாயத்தினருக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ள 20 சதவீதத்தில் (MBCV) என்று 15 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வன்னியர் கூட்டமைப்பு தமிழகத்திலேயே முதன்முதலாக இக்கோரிக்கையை முன் வைத்து ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், கருத்தரங்குகள் என போராட்ட களங்களை அறிவித்து வெற்றிகரமாக நடத்தியும் காட்டியது.
இது குறித்து 20.11.2009 மற்றும் 03.05.2010 ஆகிய தேதிகளில் தமிழக முதல்வருக்கும், தலைமை செயலாளருக்கும் மனு கொடுத்தேன். எந்த விதமான பதிலும் இல்லாததால் இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுத்து மனுவை பரிசீலனை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டுமென சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தோம்.
வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நான் தொடுத்திருக்கும் இந்த வழக்கிற்கு பதில் சொல்ல வாய்தா மேல் வாய்தா வாங்கியது முந்தைய திமுக அரசு. இப்போது ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கும் மாண்புமிகு முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் நமது கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து நிச்சயம் நிறைவேற்றுவாரென்று நம் சமுதாயமே எதிர் பார்த்து காத்திருக்கிறது.
வன்னியர் புராணத்தின் படி சம்பு மகரிஷி யாகத்தில் பிறந்த உத்திர வன்னியனே வன்னிய அரசர்களுக்கும், நம் வம்சத்தினருக்கும் முதலாமவர். எனவே பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் பிறக்கும் நாளை ‘வன்னியர் அவதரித்த நாள்’ என அறிவித்து வருடந்தோறும் அதற்கு விழா எடுக்கின்றோம்.
நம் சமுதாயத்திற்காக உயிர் நீத்த வீரத்தியாகிகளின் களப்பலியான செப்டம்பர் 17 முதல் 23 வரையிலான ஒரு வார காலத்தை வன்னியர் புரட்சி நாளாக அறிவித்து வருடந்தோறும் அந்த நாட்கள் ஒன்றில் வீரத் தியாகிகளுக்கு வீர வணக்கமும், நினைவஞ்சலி கூட்டமான விழாவினையும் தவறாமல் வன்னியர் கூட்டமைப்பு நடத்துகிறது.
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தபட உள்ளதை அறிந்து அன்றிலிருந்து இன்று வரை தமிழகம் முழுவதும் உள்ள வன்னிய குல மக்கள் வாழும் பகுதிகளில் நம் சமுதாய மக்கள் அவரவர் வாழும் பகுதிகளில் பயன்படுத்தப்படும் பட்டப் பெயர்களை பயன்படுத்தாமல் சாதிவாரியாக கணக்கெடுக்க வரும் கணக்கெடுப்பாளரிடம் நம் சமுதாய மக்கள் அனைவரும் வன்னிய குல சத்திரியர் என்ற ஒரே பெயரை சாதியாக பயன்படுத்தி பதிவு செய்யுமாறு அழைப்பு விடுத்து பணியாற்றி வருகிறது வன்னியர் கூட்டமைப்பு.
அதே போல் வன்னியர் பொதுச் சொத்து நல வாரியம் ஒழுங்கான முறையில் செயல்பட்டு அதிகாரமிக்க அமைப்பாக அதை உருவாக்க வேண்டுமென்றும் வன்னியர் கூட்டமைப்பு முதல்வரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறது. நிச்சயம் இதிலெல்லாம் வெற்றி காண்பது உறுதி.
வன்னியர் வரலாறு இப்படியாக புராணத்தில் ஆரம்பித்து கூட்டமைப்பில் வந்து தொடர்ந்து கொண்டு இருக்கிறது. எந்த நோக்கித்திற்காக நமது சமுதாய முன்னோர்கள் வன்னிய குல சத்திரிய மகா சங்கத்தை ஆரம்பித்தார்களோ அதற்கு பங்கம் வராமல் இன்றளவும் என்னால் இயன்ற வரை 1980 முதல் இச்சமுதாய நலனின் எதிர்காலத்தை மட்டுமே சிந்தித்து தொடர்ந்து செயலாற்றி வருகிறேன்.
சங்கம் வைத்து சாதித்ததை விட அரசியல்வாதிகளின் அடிமையாகி அவர்களின் ஏவலாளியாக மாறி சாதித்து தங்களை வளர்த்துக் கொண்டதற்கு சாதித்தது தான் அதிகம். அதனாலேயே சமுதாய வளர்ச்சி என்பது தனி மனிதர்களின் வளர்ச்சியும், அதன் துதி பாடிகளின் வளர்ச்சியும் மட்டுமே என்றாகி விட்டது.
தினம் ஒரு அறிக்கை, வாரம் ஒரு முறை பேட்டி, மாதம் ஒரு முறை கூட்டணி என்று தில்லாலங்கடி ஆட்டம் போடும் இராமதாசின் வேடத்தை வன்னிய சமுதாயம் புரிந்து கொண்டது. இச்சமுதாயத்திற்கு விடிவு காலம் பிறந்து விட்டதையே காட்டுகிறது. இனியும் நயவஞ்சகர்களின் வாய் வார்த்தையிலும், வேடத்திலும் மயங்காமல் உறுதியாய் நின்று உண்மையான சமூக எழுச்சியை உருவாக்க வன்னியர் கூட்டமைப்புக்கு வாருங்கள் சொந்தங்களே என உரிமையோடும், அன்போடும் அழைக்கிறேன்.
நம்மவர்களின் அனேகர் பேர் பல அரசியல் கட்சிகளில் சேர்ந்து உழைத்து வருகிறார்கள். ஆனால் கண்ட பலன் என்ன? சமூகத்திற்கு தீமை தான் ஏற்படுகிறது. அரசியல் கட்சிகளில் சேர்ந்துள்ளவர்கள் யாவரும் அவரவர் கடமையை சிறிதேனும் நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்து தினமும் ஒரு மணி நேரம் நம் சமுதாயப் பணிக்கு ஒதுக்குங்கள்.
படை திரட்டிய சமுதாயம் தயாராகி விட்டது. அன்னியனை விரட்டிய சம்பு குலம் அடிமையாகி விட்டது. அது மட்டுமல்ல தான் யார் என்பதையே அடியோடு மறந்து மாற்றார் பின் நிழலாய் அண்டி நிற்கிறது. இவர்கள் உறக்கத்திலிருந்து எழுப்பி அவர்களுடைய வரலாறுகளை, முன்னோர்களை ஆதாரங்களுடன் எடுத்துரைத்து உணர்ச்சி பெருக்கெடுக்கச் செய்து சமுதாயத்தில் அரசியல், பொருளாதார, சமூக உரிமைகளை அடைய புரட்சிக்கு தயார் செய்ய வேண்டியது வன்னியர் கூட்டமைப்பின் கடமையெனக் கருதி உங்களையெல்லாம் வாஞ்சையோடு அழைக்கிறேன் சொந்தங்களே!
வாலிப சிங்கங்களே சிந்தியுங்கள்! சிந்தனைக்கு சிறிது நேரம் செலவிடுங்கள். அரியாசனத்தில் அமர்ந்து அரசு நடத்திய வன்னியத்தாயின் கழுத்தை அழகுறச் செய்த முத்துமாலை அறுந்து, உடைந்து, சிதறுண்டு இருப்பினும், தூள் தூளாக்கப்பட்டு இருப்பினும், அந்த முத்துக்களை வன்னிய மக்களை ஒன்று சேர்த்து அது முறுக்கேற்றி ஒற்றுமையாகக் கோர்த்து மறுபடியும் அப்புகழ் வாய்ந்த மாலையை அன்னையின் மேனியை அழகு பெற அலங்கரிக்க வைப்பது நம் போன்றவர்களின் கடமையல்லவா?
வீர வன்னியனே! விழித்தெழு! உன்னுடைய கடமையைச் செய். சிந்தித்து செய். செய்வதென திருந்தச் செய். வரும் விதி வழியில் தங்காது. நமக்கான லட்சியத்தை அடைய நாம் ஒன்று பட வேண்டியது அவசர அவசியம். வாருங்கள் வன்னிய சொந்தங்களே! ஒன்றாய் நின்று, அணி அணியாய் சென்று, லட்சியத்தை வென்று சாதிப்போம்! சாதனை படைப்போம்! வாரீர்! வாரீர்!
- ••




