ரங்கநாதக் கவுண்டர்

  • தென்னாற்க்காடு மாவட்டம் விழுப்புரம் வட்டம், பார்ப்பனப்பட்டு எனும் கிராமத்தில் பிறந்தவர் ரங்கநாதக் கவுண்டர். 55 வயதான அவருக்கு அஞ்சலை என்ற மனைவியும், கிருஷ்ணவேணி, ஏழுமலை, சேகர், சின்னப் பொண்ணு, கங்கா, தர்மலிங்கம், பரமசிவன் ஆகிய பிள்ளைகளோடு வாழ்க்கையை நடத்தி வந்தார்.
  • ஊருக்கெல்லாம் உணவளிக்கும் உழவர் குடும்பத்தைச் சேர்ந்த அவருக்கு சொந்தமாக இருந்ததே இரண்டு ஏக்கர் புன்செய் நிலம் தான். வன்னிய இனத்தின் வாரிசுப் பெருமையைக் காக்க முடிந்த அவரால், பெருகி நின்ற வறுமையை விரட்ட முடியாத அளவுக்கு காலம் சுழற்றி அடித்து விரட்டியது.
  • ஒவ்வொரு நாளும் பொழுது புலர்கிறது. பொழுது மறைகிறது. அன்றும் அதே நிலை தான் ரங்கநாதக் கவுண்டருக்கு. 16.09.1987 அன்று இரவு மனைவி, குழந்தைகளுடன் இரவு உணவை முடித்து சிறிது நேரம் பேசி ஆசுவாசப்படுத்திக் கொண்டு உறங்கப் போனார். விடியும் பொழுது நல்ல பொழுதாக விடிய வேண்டுமென்று மனதில் வேண்டிக் கொண்டு படுத்து உறங்கினார்.
  • 17.09.1987 பொழுது விடிந்தது. வன்னிய இன மக்களை நேரில் சந்தித்து வரும் 17-ந் தேதி முதல் 23 வரை நாம் தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்த இருக்கிறோம் என்று வன்னிய தலைவர்கள் முழங்கி இருந்தார்கள் அல்லவா?
  • அவர்கள் நடத்தும் சாலைமறியல் போராட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என எண்ணி நம்மக்கள் இருந்தனர். ஆனால் நம் உறவினர்கள் நடத்திய சாலை மறியல் போராட்ட களத்தின் முன் நின்றனர். வழியை மறிக்க வேண்டாம் என அவர்கள் திமிறி பேச, நம்மவர்கள் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவித்த போராட்டமிது. அதனால் பாதையை விட முடியாதென பேச்சு நடக்கும் போதே அப்பாவிகளாக, நிராயுதபாணிகளாக நின்று போராடிக் கொண்டிருந்த அக்கிராம மக்களை உயிர் போகுமளவுக்கு தாக்கியும், அவர்களது ஓலைக் குடிசைகளைத் தீக்கிரையாக்கியும், வீட்டிலுள்ள பொருட்களை சூறையாடியும் சென்றனர்.
  • பார்ப்பனப்பட்டில் சாலை ஓரத்தில் குடிசை கட்டி வாழ்ந்த நாவிதல் வீட்டு மூதாட்டி தனது வீடும், பொருட்களும் பறிபோனதை வாயிலும், வயிற்றிலும் அடித்து மண்ணை அள்ளிப் போட்டு தூற்றி சபித்தார். கிராமமே சூறையாடப்பட்டு வெறிச் சோடியது.
  • ஊருக்கு வெளியில் ரணகளம் நடப்பதை அறிந்து அடுத்த படை வீரரைப் போல வீட்டிலிருந்து கம்பீரமாக வெளியே வந்தார் ரங்கநாதக் கவுண்டர். நெஞ்சு நிமிர்ந்து போராட்ட களத்துக்கு வந்த அவரை போலீஸ் இரக்கமின்றி துப்பாக்கியை பிரயோகித்து. துப்பாக்கி தோட்டாக்கள் தன்னை நோக்கி வருவதை அறிந்த ரங்கநாதக் கவுண்டர் சாவுக்கஞ்சாமல் தனது காலை எடுத்து வைக்க தோட்டாக்கள் அவரை சுட்டு வீழ்த்தின.
  • சரிந்தது ரங்கநாதக் கவுண்டரின் சரீரம் எழுந்து நின்றது வன்னிய இனத்தின் வீரம். துப்பாக்கியை பிரயோகித்த பரங்கியனே பரிதவித்துப் போனான் இவ்வளவு நெஞ்சுரமா என்று? குடும்பமே கதறி ஓடி வந்தது. போர்க்களம் போல் காட்சி அளித்த பார்ப்பனப்பட்டு கிராமம் அன்று தான் ரத்தக் குளியலை முதல் முதலாக பார்த்தது.
  • விடியலை பார்த்து நின்ற ரங்கநாதக் கவுண்டரின் குடும்பத்தை சில நிமிடங்களில் இருள் சூழ்ந்தது. என்னத்தடா கேட்டோம்! நாங்கள் அடிமை வாழ்வு வாழ்கிறோம். எங்களுக்கு கல்வி இல்லை. அதனால் வேலை வாய்ப்பில்லை. எனவே எங்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வேண்டும் என்றுதானே கேட்டோம். அதற்கு பதில் உயிர்ப்பலியா? சரி! பார்ப்பனப்பட்டோடு இது முடிந்தா போயிற்று! இல்லையே!

சித்தணி ஏழுமலை

  • சென்னை, விழுப்புரம் நெடுஞ்சாலை அன்று போர்க்களமாகவே மாறிப்போனாது. அதே பகுதிகளில் சித்தணி என்னும் ஊரில் தியாகி ஏழுமலை இராமகிருஷ்ணன் என்ற இனப்பற்றாளன் வாழ்ந்து வந்தார். குடியிருக்க இடமில்லாமல் ஒரு குடிசை போட வழியின்றி புறம் போக்கு இடத்தில் சிறு குடிசை போட்டு கூலி வேலைக்கு போய் வாழ்க்கையை நடத்தி வந்தார் ஏழுமலை. இவரின் அன்பு மனைவி அமிர்தம்மாள். கணவரின் ‘தியாகி’ பட்டத்தை மெச்சி கனிவோடு வாழ்ந்த அத்தம்பதியருக்கு அன்பு மகனாக பிறந்தார் சித்தணி ஏழுமலை.
  • கூலிக்கு போனால் தான் கஞ்சி என்கிற ஏழ்மையின் உச்சத்தில் வாழ்ந்தது தியாகியின் குடும்பம். பள்ளிப் படிப்பை படிக்க எங்கே போவது? யார் தருவது? விதியின் கொடிய பாதையில் வீழ்ந்த சாதாரண வன்னிய இளைஞனான கல்வி அறிவு இல்லாத, அரசியல் நாட்டம் சிறிதுமில்லாத கட்டிளங்காளை ஏழுமலை. காலச் சுழற்சியில் அஞ்சலாட்சி என்ற நங்கையை திருமணம் செய்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார் ஏழுமலை.
  • பிறந்த குழந்தைக்கு ஓராண்டு முடிகிறது. இரண்டாமாண்டு தொடங்க போகும் இன்முக வேளை. பிஞ்சு குழந்தையின் கள்ளமில்லா சிரிப்பில் தம்பதியர் ஏழ்மையை மறந்து லயித்துப் போய் இருந்த நேரம். தமது வறுமைக்கு படிப்பறிவு பெறாததே காரணம் என்பதை உணர்ந்த ஏழுமலைக்கு வன்னிய தலைவர்களின் பேச்சும் உரமூட்ட, 17.09.1987 அன்று விடிகாலை பிறந்த குழந்தையாவது நல்வாழ்வு வாழட்டும் என்று ஆசி வழங்கி அஞ்சலாட்சியை உச்சி மோந்து விடைபெற்றான் ஏழுமலை.
  • எத்தனைக் காலம் தான் நாங்கள் வாழ்விழந்து வாடிக் கொண்டிருப்பது என்று ஏக்கத்தோடு இருந்த ஏழுமலை, எழுச்சி கொண்டு எழுந்து வீடுர் அணை அருகே நம் சொந்தங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். 25 வயது கூட ஆகாத இளங்காளை வீறு கொண்டு எழுந்து மறியலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.
  • திடமுடன் நின்று கொண்டிருந்தான் ஏழுமலை. துளைத்தெடுத்தது துப்பாக்கியின் தோட்டாக்கள். சரிந்து விழுந்த சரீரத்தை எடுக்க போலீஸ் முற்பட்ட போது ’20 சதவீத இட ஒதுக்கீடு அடைந்தே தீருவோம்! வாழ்க வன்னியர்கள்’ என்று ஏழுமலை முணங்கியபடி உயிர் பிரிந்தது.

சித்தணி சேகர்

  • ஏழுமலையின் உயிர் துடித்துக் கொண்டிருக்கும் போதே அடுத்த உயிர் காவு வாங்கப்படுகிறது. ஏழுமலையுடன் களத்தில் போராடிய சித்தணி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்ற மாவீரனையும் சுட்டு வீழ்த்தினார்கள். சேகரும் மரணத்தை தழுவும் அந்த தருணத்தில் கூட “வாழ்க வன்னியர்” என்றும் “போராட்டம் வெற்றி அடையட்டும்” என்று கூறி மரணத்தைத் தழுவினார் சேகர்.

தியாகி ஓரத்தூர் ஜெகநாதன்

  • சாவை முத்தமிடுவோரைச் சர்வ சாதாரணமாய் பார்க்க முடியும். ஆனால் வீரனுக்கு அழகு களப்பலிக்கு தயாராக இருத்தல் அல்லவா? கொடுமைகள் செய்யச் செய்யப் புழுக்களும் புரட்சி செய்யுமே! இந்த வீர இலக்கணத்தின் நேரடி வாரிசுதான் நம் தியாகி ஓரத்தூர் ஜெகநாதன்.
  • வன்னியர் சங்கத்தில் ஈடுபட்டு தொண்டு செய்வதையே குறிக்கோளாக கொண்டவர் தியாகச் செம்மல் ஓரத்தூர் ஜெகநாதன். தென்னார்க்காடு மாவட்டத்தில் விழுப்புரம் வட்டத்தில் பெருமாள் கவுண்டருக்கும், கோகிலாம்பாளுக்கும் புத்திரனாய் பிறந்தார் ஜெகநாதன், சுந்தரி என்ற அக்காளும், நல்லதம்பி, மேகநாதன் ஆகிய இரு தம்பிகளும் ஜெகநாதனின் உடன்பிறந்தவர்கள்.
  • குடும்பத்தையே இனத்திற்காக பாடுபட வைத்த பெருமைக்குரியவர். தான் சந்திக்கும் அனைவரிடமும் சங்கத்தைப் பற்றியும், அதன் வளர்ச்சி பற்றியும் பேசாமல் ஒரு நாளும் போனதில்லை ஜெகநாதனுக்கு. இவரது குடும்பத்திற்கு ஏறத்தாழ இரண்டு ஏக்கர் புன்செய் நிலம் மட்டுமே உள்ள நிலையில் கஷ்டப்பட்டு படித்து ஆளானார்.
  • ஆலங்குப்பம் ஊரைச் சார்ந்த அமுதா என்ற பெண்ணை திருமணம் செய்து இல்லறம் நடத்தியவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது. முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலையில் மெஸன்ஞ்ராக ஆகப் பணிபுரிந்த ஜெகநாதன், வன்னியர் சங்கத்தின் கட்டளையை ஏற்று தொடர் சாலை மறியல் போராட்டம் பற்றி சுற்றியுள்ள பகுதிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார்.
  • பெண் குழந்தை பிறந்து ஆறு மாதமே ஆகி இருந்தது. பெற்ற மகளை எப்படியெல்லாம் பேணி வளர்க்க வேண்டும், பெரிய படிப்பெல்லாம் படிக்க வைக்க வேண்டும் என்றெல்லாம் இரவில் கண்ட கனவை விரைவில் நனவாக்க வேண்டுமென்று மனதில் நினைத்து படுத்து எழுந்தவருக்கு, தொடர் சாலை மறியல் போராட்டத்திற்கு செய்ய வேண்டிய இனப்பணியாற்ற அழைப்பு வந்தது. ஏற்கனவே செய்து வைத்த ஏற்பாடுகளை விளக்கிய ஜெகநாதன், திட்டமிட்டபடி 17.09.1987 அன்று பனையபுரத்தில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
  • பாப்பனம்பட்டில் ஆரம்பித்த தேசிய நெடுஞ்சாலை பகுதியின் துப்பாக்கி சூட்டின் சத்தம் பனையபுரத்துக்கும்  கேட்டது. அடுத்தடுத்து நடந்த துப்பாக்கிச் சூட்டில் வன்னிய இனப் போராட்ட வீரர் ஜெகநாதன் சுடப்பட்டு அங்கேயே வீரமரணம் அடைந்தார்.

முண்டியம்பாக்கம் சிங்கார வேலு

  • பொதுவுடைமைக் கருத்துக்களை நம் தாய்த் தமிழகத்துக்கு அள்ளித் தந்த தோழர் மா. சிங்காரவேலர் அவர்களின் பெயரை தன் பெயராகக் கொண்ட முண்டியம்பாக்கம் சிங்காரவேலு ஒரு ஆலை தொழிலாளி ஆவார்.
  • இரும்பும் எம்பெருமூச்சில் உருகிப் போகும் ஒரு நாளைக்கு! வருத்தும் எங்கள் எசமானர்கள் திருந்துவது எந்நாளைக்கு? என்ற ஏக்கப் பெருமூச்சும், எளிய வாழ்வையும் மேற்கொண்டிருந்தாலும் எப்பாடு பட்டாவது சங்கப்பணிகள் ஆற்றுவதில் சற்றும் சளைக்காதவர் நம் சொந்தம் சிங்காரவேலு!
  • தென்னாற்காடு மாவட்டம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியத்தில் முண்டியம் பாக்கம் என்றும் ஊரில் அங்கம்மாள் என்ற தனது தாயாரோடு வாழ்ந்து வந்தார் சிங்காரவேலு. உடன் பாசத்திற்குரிய அண்ணன் அரிகிருஷ்ணனும் இருந்தார். இணைபிரியா பந்தம் கொண்ட சகோதரர்கள் இருவரும். சங்கத்துக்காக வாழ்ந்து காட்டியவர்கள். இருப்பினும் மார்பைத் திறந்து காட்டி சுடப்பட்ட மாவீரன் மறத்தமிழன் சிங்கார வேலுவின் தியாகத்தால் இன்று நமது வணக்கத்திற்குரியவராக இருக்கிறார்.
  • நிலமற்ற ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவராதலால் வாழ்க்கைப் போராட்டத்தில் வாட்டமுற்றார் சிங்காரவேலு. வன்னியர் சங்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.
  • எளிய குடும்பத்தில் பிறந்த இவர் வள்ளியம்மாள் என்பரை மணந்தார். அவரோடு இல்வாழ்க்கை நடத்திய போது நாகவல்லி என்ற பெண் குழந்தை பிறந்தது. சிறிது காலத்திலேயே வள்ளியம்மாள் மரணத்தை தழுவ, நாகம்மா என்ற நங்கையை மறுமணம் செய்து கொண்டார் சிங்காரவேலு. சங்கர், சிவகுமார் ஆகிய இரு மகன்களும், யசோதை என்ற மகளும் நாகம்மாளுக்கு பிறந்தனர்.
  • யசோதைக்கு வயது இரண்டுக்குள் இருக்கும். வன்னியர் சங்கம் அறிவித்த சாலை மறியல் போராட்டத்திற்கு தங்கள் பகுதியில் நடந்த போராட்டமே சிறப்பானது என்ற பெயர் பெற வேண்டுமென்று கடுமையாக உழைத்தார் சிங்காரவேலு. அந்த நாளும் வந்தது. 17.09.1987 அன்று முதல் நாள் அழைத்த நம் அத்தனை உறவினரையும் உடன் அழைத்துக் கொண்டு களமிறங்கினார் சிங்காரவேலு.
  • சென்னை – பாண்டி – கும்பகோணம் – விழுப்புரம் சாலைகள் சந்திக்கும் பனையப்புரத்தில் 17.09.1987 அன்று வன்னியர் சங்கம் அறிவித்த தொடர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொள்ள இளமைத் துடிப்போடு வீரநடை போட்டு சென்றார். நம் சொந்தங்கள் கூட நின்ற சிறப்புமிக்க போராட்ட களம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம்.
  • ‘இன்னுயிரினும் இனமானமே பெரிது’ என்ற சிங்காரவேலுவின் மார்பில் அடுத்தடுத்து துப்பாக்கிச் தோட்டாக்கள் பாய்ந்தது. தன் சமுதாயம் மானத்துடன் வாழ தன் உயிரை காணிக்கையாக அளித்து கொள்கை குன்றாக உயர்ந்து நின்றார் சிங்காரவேலு. உடனிருந்தோர் சொன்ன அந்த ஆச்சரியமான வீரமான செய்தியைக் கேட்டு நாடே அதிசயித்தது. பத்திரிகைகள் பக்கம் பக்கமாக எழுதின.
  • என்ன செய்து பயன் என்ன? போன உயிர் வந்து விடுமா? யசோதையிடம் கேட்டால், ‘அப்பா! மெட்ராஸ் போயிருக்கார்’ என்று பதில் சொல்லும் அந்த பிஞ்சு மனம் நாளை வளர்ந்து நடந்ததை கேட்டால் அதன் மனதில் நஞ்சு கலக்குமா இல்லையா?

கயத்தூர் முனியன்

  • வாழ்வெல்லையைத் தொடுவதற்கு முன்னால் வரலாற்று எல்லையை எட்டிப் பிடித்தவர் சிலர் மட்டுமே உண்டு. ‘தோன்றிற் புகழோடு தோன்றுக’ எனும் வள்ளுவரின் வாய்மொழியை நிரூபித்துக் காட்ட இதோ, சமகால புகழ்வீரன் கயத்தூர் முனியன் களம் இறங்கி களப்பலியான சம்பவத்தை கேளீர்! நம் இன வாழ்வில் சோலை வனம் தோன்ற வேண்டுமென்பதற்காகப் போராடித் தன் உயிர் மூச்சைவிட்ட அந்த சரித்திர நாயகன் சாதித்த வீரஞ்செறிந்த நிகழ்வு இதுதான்.
  • தென்னாற்க்காடு மாவட்டம், விழுப்புரம் வட்டத்தில் கயத்தூர் எனும் ஊரில் பெருமாள் கவுண்டருக்கும், அங்கம்மாவிற்கும் புண்ணிய புத்திரனாய் வந்து பிறந்தார் முனியன். இவருக்கு மன்னாதன் என்ற அண்ணனும், சுப்பிரமணி, தேவநாதன் என்ற இரு தம்பிகளும் உடன் பிறந்தவர்கள்.
  • வேதவல்லி என்ற நங்கைக்கும் முனியனுக்கும் திருமண பந்தம் உருவானது. திருமண வேலைகள் இருந்த போது கூட சங்கப் பணிகளில் தொய்வில்லாமல் பார்த்துக் கொண்டார் முனியன். திருமணம் முடிந்து இல்லற தம்பதிகள் நல்லற வாழ்வை தொடங்கி இருந்த நேரம்.
  • ஒரு நாள் சாலை மறியல், ஒரு நாள் ரயில் நிறுத்த மறியல் என போராட்டங்கள் நடந்து முடிந்த வேளை ஒரு வார தொடர் சாலை மறியல் போராட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் கூட்டப்பட்டிருந்தது. அப்போது தான் முனியனுக்கு திருமணமாகியிருந்த  நேரம். மனைவியின் வற்புறுத்தலால் அவரது உறவினர் வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் நெருங்கிய சகாக்களிடம் தலைமைக்கு தகவல் தந்துவிடச் சொல்லி சென்றுவிட்டார்.
  • முனியன் வர இயலாததாலும், அப்போது தான் திருமணமாகி இருந்ததாலும் அப்பகுதியில் போராட்டம் பொறுப்பை வேறு ஒருவரிடம் ஒப்படைத்தது வன்னியர் சங்கம், ஊருக்கு திரும்பினார் முனியன். நடந்தவற்றைக் கேட்டு கொதித்துப் போன முனியன் சங்க நிர்வாகிகளிடம் கடுமையாக சண்டை போட்டார். நான் இருக்கும் இடத்தில் வேறு ஒருவர் தலைமையில் போராட்டம் நடத்தக் கூடாது என்ற முனியனின் துடிப்பை அறிந்து முனியனுக்கே  தலைமைப் பொறுப்பை தந்தனர் நிர்வாகிகள்.
  • 17.09.1987 அன்று காலை விடிந்தது. முனியனின் இல்லாள் இன்முகத்துடன் போராட்ட களத்துக்கு அனுப்பி வைத்தாள். அப்போது அவருக்கு தெரியாது, தனது கணவன் வீடு திரும்ப மாட்டானென்று! முனியன் வீட்டை விட்டு கிளம்பிய சிறிது நேரத்தில் பக்கத்திலிருக்கும் பாப்பனப்பட்டில் வன்னிய இன மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள் என்று கேள்விப்பட்ட முனியன் புழுவாய் துடித்துப் போனார். இச்செய்தி ஊருக்குள் பரவ நிறைமாத காப்பிணியான வேதவல்லி பதறிப் போய் கடவுளிடம் வேண்டுதல் நடத்தினார். கதறினார். வீட்டாரை போகச் சொல்லி பார்த்து வரச் சொன்னார்.
  • அப்போது பணையப்புரத்தில் மறத்தமிழன் சிங்காரவேலுவை சுட்டு வீழ்த்தினார்கள். நிறைமாதக் கர்ப்பிணியான வேதவல்லி கணவர் உயிர் பறிக்கப்பட்டதைக் கேட்டு பதைத்து போனார். பதறினார். கூக்குரலிட்டார். பெண் சாபம் பொல்லாதது என்பர். அப்படியானால் கர்ப்பிணி பெண்ணின் சாபம்…?
  • திருமணம் முடிந்த ஓராண்டுக்குள் கண்ணீர் வெள்ளத்தில் மிதக்கும் காலமும் வந்து விட்டதே என்று ஓங்காரமிட்டாள். தலைதெறிக்க ஓடினாள். பஞ்சமா பாதகர்கள் முனியனை வீழ்த்தி அந்த நங்கையை பரிதவிக்கவிட்டு போய் விட்டார்களே! அவர்கள் நாசமாக போக வேண்டுமென ஊரே சபித்தது.

தியாகி முத்து

  • இளம் வயதிலேயே தன் வீரசாகசங்களால் உலகப் புகழ்பெற்ற மாவீரன் அலெக்சாண்டரைப் போல் சாகசம் புரிந்து சரித்திரம் படைத்தவன் நம்மினக் கொழுந்து கயத்தூர் முத்து வரலாறு படைப்பதற்கு வயதொன்று முக்கியமன்று என்ற வாசகத்தின் மொத்த உருவம்தான் தியாகி முத்து குலமானம் காத்திட்ட வித்து. வன்னியப் பேரினத்தின் மாபெரும் சொத்து.
  • மணமாகாதா? நம் வாழ்வில் மகிழ்ச்சியும் பொங்காதா? என்று ஏக்கம் பிறக்கும் வசந்த வயதில் வன்னியரின் விலை மதிக்க முடியாத செல்வன் மாவீரன் முத்துவை இத்தனை சீக்கிரம் மாபாவிகள் கொலைக்களத்துக்கு அழைத்துச் செல்வார்கள் என்று நினைக்கவேயில்லை.
  • மறத்தமிழன் களத்தூர் முனியனின் ஊரான கயத்தூரில் நடேச கவுண்டருக்கும், பொக்கிலைக்கும் திருமகனானப் பிறந்தார் நம் குலத்தின் முத்து. சகோதரர்கள் இருவரும், சகோதரிகள் நான்கு பேரும் உடன் பிறந்தவர்கள். நிலமற்ற விவசாயக் கூலி வேலை செய்யும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த முத்து ஒரு கருப்பஞ்செத்தையால் போடப்பட்ட கூரை வீட்டில் வாழ்ந்து வந்தார்.
  • வறுமையை விரட்ட இயலாத முத்துவுக்கு, அதற்கு காரணம் இனத்தின் விழிப்புணர்வற்ற நிலையே என்றெண்ணி மனம் புழுங்கி இருந்த வேளையில் தான் சங்கம் அறிவித்த தொடர் சாலை மறியல் போராட்டம் வந்தது. திருமணமாகி ஓராண்டு முடிவடையாத நிலையில் முனியன் போராட்ட களம் காண செல்லும் போது நாம் மட்டும் சும்மா இருப்பதா? என்று பொங்கி எழுந்தார் முத்து.
  • 17.09.1987 அன்று பனையபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த நம் உறவினர்களின் போராட்ட குணத்தை ஒடுக்க, பட்டென்று பறந்து வந்த தோட்டா முத்துவை வரிசையாக பதம் பார்த்தது ‘வாழ்க வன்னியர்குலம்’ என்று முழங்கியவாறு தரையில் சரிந்து மாண்டார் முத்து. வன்னியர் குலம் காக்க தன் மூச்சை விட்ட முத்துவின் தியாகத்திற்கு நாம் என்ன கைமாறு செய்துவிட முடியும். இதோ! அடுத்த வீரன் கிளம்பி நிற்கிறான்.

கோலியனூர் கோவிந்தன்

  • விழுப்புரம் பகுதியில் அமைந்த கோலியனூர் ஊரில் ரங்கக் கவுண்டருக்கும், சின்னப்பொண்ணுக்கும் அருந்தவப்புதல்வனாய் பிறந்தார் கொள்கை மறவன் கோலியனூர் கோவிந்தன். இவரின் குடும்பம் விவசாயக் கூலி வேலையை தொழிலாகக் கொண்டது. நிலமற்ற ஏழையான கோவிந்தனுக்கு வாழ்க்கைப் போராட்டம் கொடூரமாக இருந்தாலும் உழைப்பதற்கு சளைத்ததே இல்லை.
  • கோவிந்தனுக்கும், ராணி என்பவருக்கும் திருமணமாகி ஷகிலா, ரேவதி என்ற இரு குழந்தைகளை பெற்றெடுத்தனர். போராட்டமான வாழ்க்கையில் தன் இனத்துக்காக ஒரு போராட்டம் என்றால் விட்டு விடுவாரா கோவிந்தன்.
  • ஒட்டு மொத்த இன வளர்ச்சியே தன் குடும்பத்தாரின் வளமைக்கு வழி வகுக்கும் என்பதை நன்கு அறிந்த கோவிந்தன்  சோற்றுத் துருத்தியா நான் சொரணை இன்றி வாழ்ந்திட! ஆற்றுப்புணலடா எனது ஆர்ப்பரிக்கும் உணர்வுகளுடன் போராட்டத்திற்கு தயாரானார் கோலியனூர் கோவிந்தன்.
  • இனமானம் காப்போம் என்பதை தன் குறிக்கோளாகக் கொண்ட கோவிந்தன் 17.09.1987 அன்று கும்பகோணம் – பாண்டி – விழுப்புரம் – சென்னை ஆகிய முக்கிய நகரங்களை இணைக்கும் கோலியனூரில் நம் சொந்தங்கள் புடைசூழ கோவிந்தனும், விநாயகமும், தாண்டவராயனும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  • துளியும் பதட்டமின்றி, ‘வாழ்க! வன்னியர் குலம்’  என்று சொல்லி துப்பாக்கி குண்டுகளை மார்பில் தாங்கி உயிர் துரந்தார் கோவிந்தன். சடலம் சரிந்தது! தன்மானம் எழுந்து நின்றது.

கோலியனூர் விநாயகம்

  • கோலியனூர் ஒன்றியம் மிளகாய் குப்பம் எனும் ஊரில் குள்ளக் கவுண்டருக்கும், பூரணி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார் கோலியனூர் விநாயகம். இவருக்கும் சோமசுந்தரம், கண்ணன் என்ற இரு அண்ணன்களும், அஞ்சலாட்சி, ஆரவல்லி என்ற அக்காள்களும் உடன் பிறந்தவர்கள்.
  • நமது வன்னிய இனத்திற்கு சமூக நீதி கிடைக்க சங்கத்தின் மூலமான இன எழுச்சியே ஏதுவானதாகும் என்று முழங்கி தீவிர செயல்பாடுகளை செய்து வந்தார்.
  • 17.09.1987 அன்று நடந்த தொடர் சாலை மறியலுக்கு தயாராகி களமிறங்கிய விநாயகத்தின் மீது தோட்டாவை பாய்ச்ச, துப்பாக்கி குண்டுகளுக்கு அஞ்சாது இமயம் போல் சாலையில் நின்று மரணத்தை தழுவினார் தீரன் கோலியனூர் விநாயகம்.
  • கோலியனூர் கோவிந்தன், விநாயகம் ஆகியோருடன் சேர்ந்து தொடர் சாலை மறியல் போராட்டம் நடத்திய விக்கிரவாண்டி ஒன்றியம், கயத்தூர் கிராமத்தைச் சார்ந்த தாண்டவராயனும் களத்தில் பலியானார்.

வேலு

  • கோலியனூர் கோவிந்தன், விநாயகம், தாண்டவராயன் ஆகிய மூவருடன் உடனிருந்து போராடிய கோலியனூர்  ஒன்றியம்  தொடர்ந்தனூர் பகுதியைச் சேர்ந்த வேலுவும் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானார். தமிழகத்திலே மட்டுமல்ல இந்தியாவில் ஏன் உலகிலேயே ஒரு சாதியினர் இட ஒதுக்கீடு கேட்டு போராடி அதில் இத்தனை பேர் செத்து மடிந்தனர் என்ற வரலாறு எங்கேயும் கிடையாது.

தேசிங்கு

  • தென்னாற்காடு மாவட்டம் பண்ருட்டி வட்டத்தைச் சேர்ந்த சிறு தொண்டமாதேவி எனும் ஊரில் துரைச்சாமி படையாட்சியாருக்கும் கருப்பாயி அம்மாளுக்கும் புத்திரனாய் இப்பூமியில் வந்து உதித்தார் தேசிங்கு. பெருமாள், ஆறுமுகம், உத்ரவேலு என்கிற மூன்று அண்ணன்களும், ராஜநாயகி என்கிற தங்கையுமாக அழகான குடும்பத்துடன் மகிழ்வுடன் வாழ்ந்து வந்தார் தேசிங்கு.
  • இவரது தந்தை துரைச்சாமி படையாட்சியார் பஞ்சாயத்து தலைவராக போட்டியிட்டதாலும், நிலத்தில் ஆழ்குழாய் நீர் வசதி முயற்சியை மேற்கொண்டதாலும் பெருத்த நஷ்டத்திற்கு ஆளானார். இரண்டு முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் குடும்ப வாழ்க்கை நடத்த போராட வேண்டி வந்தது.
  • தொடக்க கல்வியை பிறந்த ஊரான சிறு தொண்டமாதேவியில் பயின்ற தேசிங்கு, உயர்கல்வியை அருகிலுள்ள மருங்கூர் எனும் ஊரில் படிக்கத் தொடங்கினார். உயர் கல்விப் படிப்பின் போது குடும்பம் நொடிந்து போனதால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தேசிங்கு, கடும் முயற்சி செய்தும் குடும்ப சூழலால் மேல்நிலைக் கல்வித் தேர்வில் தோல்வியைத் தழுவினார். அதன் பின் குடும்பத்தையும் காப்பாற்றி தன் படிப்பையும் தொடர்ந்து முடித்தார்.
  • சக நண்பர்களுடன் கபடி விளையாடும் போது அவர்கள் தேசிங்கை அரக்கன் வருகிறான் என்று கூறி விளையாடுவார்கள் என்றால் தேசிங்கின் தோற்றமும், செயல்பாடும் எப்படி இருந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்துப் பாருங்கள்.
  • ஒரே மூச்சாக வன்னியர் சங்கத்தில் தங்கள் உணர்வை வெளிப்படுத்தி வந்தார். யார் சங்கம் வைத்தாலும் அவர் ஒரு வன்னியர் என்பதுதான் நமக்கு முக்கியம் என்றாராம்.
  • அதனால் சங்கத்தில் உறுப்பினாராகாமலேயே சமுதாய செயல்பாடுகளில் தீவிரம் காட்டியவர் தேசிங்கு. இந்த வேளையில் தான் வன்னியர் சங்கம் அறிவித்த ஒரு வார தொடர் சாலை மறியலுக்கான நேரம் வந்தது.
  • 18, 19.09.1987 ஆகிய இரு நாட்களிலும் தேசிங்கு இரவு நேரங்களில் சாலை ஓரங்களில் தடைகளை ஏற்படுத்தும் பணியில் துரிதமாக செயல்பட்டார். உற்ற நண்பர்கள் உதவியுடன் களப்பணியாற்றிய தேசிங்கு, 20, 21 ஆகிய இரு நாட்களிலும் எந்த வித வாகனங்களும் வந்து செல்லாமல் தடுக்க முந்திரித் தோப்பில் மறைந்து இருந்து போராட்டகளத்தை அணையாத தீபமாக எரியவிட்டு பாதுகாத்தார்.
  • 22.09.1987 அன்று வானொலியிலும், செய்தித்தாள்களிலும் போலீஸ் பாதுகாப்புடன் பண்ருட்டியில் இருந்து நெய்வேலிக்கு வாகனங்கள் செல்வதாக செய்தி வந்தது. இந்தச் செய்தியை அறிந்த சிறுதொண்டமாதேவி வன்னிய இன மக்கள் தங்கள் கிராமத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்திலுள்ள கும்பகோணம் சாலையில் உள்ள கொள்ளுக்காரன் குட்டை என்ற இடத்தில் அணி திரண்டனர்.
  • பாதுகாப்புடன் வந்த வாகனங்களைத் தடுத்த தேசிங்கும், அவரது சகாக்களும் ‘எங்கள் உயிரே போனாலும் வாகனங்களை விடமாட்டோம். எங்கள் தலைமையிடமிருந்து வாகனங்கள் செல்லலாம் என்று அறிவிப்பு வரும் வரை வாகனங்களை சாலையில் செல்ல அனுமதிக்க மாட்டோம்’ என்று வீர சபதம் செய்து போராட்ட களம் அமைத்தனர். சுமார் மூன்று மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. அடுத்த நடந்த துப்பாக்கி சூட்டினால் தேசிங்கின் உடலிலிருந்து உயிர் பிரியா விடை பெற்றது.
  • மிகச் சின்ன வயதிலேயே பேரும், புகழும் பெற்றான் செஞ்சிக் கோட்டையை ஆண்ட மன்னன் தேசிங்கு. அவனது பெயருக்கும் பெருமை சேர்த்து நம் இனத்திற்கும் பெரும் புகழையும் தந்து சென்றான் நம்குல விளக்கு மாவீரன் தேசிங்கு.

முனுசாமி கவுண்டர்

  • தென்னாற்க்காடு மாவட்டத்தில் மேல்மலையனூர் வட்டத்தில் கொழப்பலூர் எனும் சிற்றூரில் சுப்பராயக் கவுண்டர் மகனாகப் பிறந்தார் முனுசாமி கவுண்டர். காசி என்ற தம்பியுடன் உடன் பிறந்த முனுசாமி, தனக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் வேலை பார்த்துக் கொண்டே வன்னியர் சங்க வேலைகளில் ஈடுபாடு காட்டி வந்தார்.
  • இவருக்கும் – வாசுகி அம்மாளுக்கும் திருமணமாகி நல்லமுறையில் இல்லறம் நடத்தி வந்தார். இவர்களுக்கு ஏழுமலை, முருகன் என்ற இரு மகன்களும், வாசுகி, மல்லிகா என்ற இரு மகள்களும் வாரிசாக திகழ்ந்தனர். சங்கத்தின் மீதிருந்த அதீத நன்மதிப்பால் தொடர் சாலை மறியல் போராட்டக் களத்துக்கு தயாரானார் முனுசாமி கவுண்டர்.
  • ஊரில் தங்களது பகுதியைச் சுற்றி நடக்கும் துப்பாக்கி சூட்டை கேள்விப்பட்ட முனுசாமி குடும்பத்தினர் அவரை வெளியே செல்ல அனுமதிக்கவில்லை. அவர் குடும்பமும், ஊர்மக்களும் எவ்வளவோ தடுத்தும் கேளாத முனுசாமி கவுண்டர் சாலை மறியல் போராட்ட களத்துக்கு சென்றார். போராட்ட களம் புழுதி கிளப்பி ரணகளமாக இருந்த நேரம்.
  • ‘எது நேர்ந்தாலும் அதை நேருக்கு நேர் சந்திப்பேன்’ என்று சூளுரைத்த முனுசாமி கவுண்டர் மேல்மலையனூரில் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தார். அவரை கைது செய்து அடித்து, உதைத்து சென்னை சென்ட்ரல் ஜெயிலில் தள்ளினார்கள்.
  • சிறையில் பட்ட சித்ரவதையால் சாகடிக்கப்பட்ட முதல் தியாகி கொழப்பலூர் முனுசாமி கவுண்டர் தான். அவரின் கனவை நனவாக்க வேண்டுவது நமது கடமையல்லவா?

அண்ணாமலை கவுண்டர்

  • தென்னாற்காடு மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் ஒன்றியத்தில் உள்ள பேரங்கியூரில் பிறந்தவர் அண்ணாமலை கவுண்டர். நிலமற்ற கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்ததால்  கடும் உழைப்பை காட்டி வாழ்க்கையை நடத்தி வந்தார். ராதா அம்மாளோடு திருமணம் நடத்தி இல்லறம் அமைத்து வந்த அண்ணாமலை கவுண்டர் – சம்பத், கார்த்திக் ஆகிய இரு மகன்களையும், செல்வி என்ற மகளையும் வாரிசாக பெற்றெடுத்தார்.
  • ஆரம்ப காலத்தில் அதிமுகவில் ஈடுபாடு உடையவராக இருந்த அண்ணாமலை கவுண்டர், பின்னாளில்  வன்னியர் சங்கத்தில் இணைந்து படுதீவிரமாக பணியாற்றி வந்தார். பேரங்கியூர் மக்கள் தொடர் சாலை மறியல் போராட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று சபதம் பூண்டிருந்தனர். அதற்காக முழு மூச்சுடன் செயலாற்றி திட்டங்களை வகுத்து தயார் நிலையில் இருந்தனர்.
  • பேரங்கியூரில் நம்மின மக்கள் போராட்டத்துக்கு தயாராக இருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்ட காவல்துறையின் ஐ.ஜி. ஸ்ரீபால் அவர்கள் சமாதானம் பேச வந்தார். இறுதியில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. 60 வயது அண்ணாமலை கவுண்டர் மீது ஊரிலுள்ள மக்கள் முன்னாலேயே அடித்துக் கொல்லப்பட்டார் அண்ணாமலை கவுண்டர்.

மயில்சாமி

  • சேலம் மாவட்டம் மேச்சேரி ஒன்றியம் அமராத்தனூர் கிராமத்தில் பிறந்தவர் மயில்சாமி. கந்தசாமி அவர்களுக்கும், அழகம்மாளுக்கும் புதல்வனாய் பிறந்த மயில்சாமிக்கு அர்த்தனாரி என்ற சகோதரரும் உண்டு.
  • ஒரு வசந்த காலத்தில் வசந்தகுமாரி என்ற நங்கையை திருமணம் செய்து மதிவாணன், மகேஸ்வரன், மாதவன் என மூன்று புத்திரர்களை வாரிசாக பெற்றெடுத்தார் மயில்சாமி. அழகான மனைவி, அருமையான குழந்தைகள், அமைதியான வாழ்க்கை என உருண்டு கொண்டிருந்தது மயில்சாமி வாழ்க்கை. மேட்டூர் பக்கம் உள்ள குஞ்சாண்டியூரில் டி.ஸி.எம். மில்லில் காண்ட்ராக்டராக வேலை செய்து வந்தார்.
  • 17.09.1987 அன்று காலை விடிந்தது. மயில்சாமி பரபரத்து காணப்பட்டார். மூன்று மாதங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட போராட்டம் அல்லவா? முதல் நாளில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மயில்சாமி மறுநாள் 18-09-1987 அன்று இன உணர்வு மேலோங்க தன்னுடன் பணிபுரிந்த உறவினர்களுடன் சுமார் நூறு பேருடன் மேச்சேரி டூ மேட்டூர் செல்லும் சாலையில் சென்ற வாகனங்களை மறிக்க ஆயத்தப்பட்டு கிளம்பி போனார்.
  • மயில்சாமியும் மற்ற உறவினர்களும் சாலையில் அமர்ந்து மறியல் செய்த இடத்திற்கு வந்த போலீசார் களைந்து போகச் சொல்லி மிரட்டினார்கள். கூட்டத்தில் இருந்தவர்கள் கலைய மறுக்க துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக சொல்லி தடியடி நடத்த ஆரம்பித்தனர் போலீசார்.
  • மறுநாள் அதிகாலை அவருடன் மறியல் செய்தவர்கள் மயில்சாமியை தேடும் போது ஏதேச்சையாக கிணற்றையும் எட்டிப் பார்க்க அங்கே பிணமாக கிடந்தார் மாவீரன் மயில்சாமி. கிணற்றில் உடல் மிதப்பதை அறிந்த காவல்துறை,  டி.எஸ்.பி. மற்றும் போலீஸ் படையுடன் வந்து உடலை எடுத்து போஸ்ட்மார்டம் செய்து காவல்துறை வண்டியிலேயே கொண்டு சென்று உடலை அடக்கம் செய்து விட்டனர்.

இராமகிருஷ்ணன்

  • 17-09-1987 அன்று நடைபெற்ற ஒரு வார தொடர் சாலை மறியலில் ஈடுபட்டு கைதாகி சிறைக்கு சென்று அங்கு நடந்த கொடுமையால் பலியான தியாகிகளில் செங்கை மாவட்டம் மதுராந்தகம் வட்டத்தில் வெளியம்பாக்கம் என்னும் சிற்றூரில் பிறந்த இராமகிருஷ்ணனும் ஒருவர் ஆவார்.
  • சிறு விவசாயியாக வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த இராமகிருஷ்ணன் பால்வளம் அளிக்கும் மாடுகளுக்குரியோர்களின் சங்கத் தலைவராக இருந்தார். நான்கு சகோதரர்களுடன் பிறந்த இராமகிருஷ்ணன் வன்னியர் சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதில் தீவிரமாகவும் செயல்பட்டார்.
  • 25 வயதுடைய இவர் வெளியம்பாக்கத்தில் இருந்த வன்னியர் சங்க கிளையின் தலைவர் ஏழுமலை தலைமையில் தொடர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இராமகிருஷ்ணன் குழுவினர் சென்னை திண்டிவனம் நெடுஞ்சாலையில் தொழுப்பேடு என்னுமிடத்தில் போராட்ட களம் அமைந்திருந்த நிலையில், அங்கு வந்தது போலீஸ் படை. எவ்வித விசாரணையும் இன்றி கைது செய்து சிறையிலடைத்தார்கள்.
  • சிறைச் சாலையிலேயே உடல்நலம் பாதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். இராமகிருஷ்ணனின் உடல் தாக்குப்பிடிக்க முடியாமல் மரணத்தை தழுவியது.

குப்புச்சாமி

  • சேலம் மாவட்டம் சிவதாபுரம், மொரம்புக்காடு பகுதியை சார்ந்தவர் குப்புச்சாமி. இவரும் மனைவி ஆனந்தாயம்மாளும் ஆசைக்கொன்றும், ஆஸ்திக்கொன்றுமாக வாரிசுகளை பெற்றெடுத்தனர். நிலமற்ற ஏழை விவசாயக் கூலியான குப்புச்சாமி தினமும் வேலை செய்து திரும்பினால் தான் வயிற்றுக்கு சாப்பாடு.
  • விவரம் அறிந்த காலத்திலிருந்தே எந்த அரசியல் கட்சியிலோ அல்லது பிற அமைப்புகளுடனோ தொடர்புகள் இல்லாதவர். ஆரம்ப காலத்திலிருந்தே இனப்பற்றுமிக்கவராக செயல்பட்டவர். சங்கம் தொடங்கிய காலத்திலேயே சிறப்பாக பணியாற்றிய பெருமை குப்புச்சாமிக்கு உண்டு.
  • தொடர் சாலை மறியல் போராட்டத்திற்கு பல இளைஞர்களை ஒன்று திராட்டி சாலை மறியல் செய்து கைது செய்யப்பட்டு 21 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு போவதற்கு முன்பு எவ்வித நோயும் இல்லாமல் இருந்தவர். உள்ளே சென்ற பின்பு உடல் உபாதையால் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
  • சிறையில் இருந்து உடல் நலம் குன்றி வீடு திரும்பினார். சுமார் ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் உயிர் நீத்தார்.
  • மேலும் 17. கயத்தூர் கிராமத்தைச் சார்ந்த தாண்டவராயனும் 18. காஞ்சிபுரம் மாவட்டம், குழுவிமலை கிராமத்தை சேர்ந்த முனுசாமி நாயக்கர், 19. காஞ்சிபுரம் வட்டம், முசரவாக்கம் கிராமம் கோவிந்தராஜூ நாயக்கர்,  20. மொரப்பூர் ஒன்றியம், நத்தமேடு கிராமம் சுப்பிரமணி, 21. பரங்கிப்பேட்டை ஒன்றியம் வில்லியநல்லூர் கிராமம் இராஜேந்திரன்.
  • மேட்டூர் வட்டம், கட்டிநாயக்கன்பட்டி மாரியப்பன், 23. சேலம் ஐந்து ரோடு, தாயங்கரடு கிராமம் நட்ராஜ், 24. தொரப்பாடி சுப்பிரமணியம், 25. கண்ரக்கோட்டை ஜெயவேல் பத்தர் என மொத்தம் 25 வன்னிய குல வீரச்சிங்கங்களை இட ஒதுக்கீடு கேட்டதற்காக உயிர் தியாகம் இந்த வீரத்தியாகிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 17-ம் தேதி ‘புரட்சி நாள்’ என்று வீரவணக்கம் செலுத்தப்படுகிறது. அந்த தியாகிகளின் குடும்பங்களுக்கு நலதிட்ட உதவிகள் வன்னியர் கூட்டமைப்பின் சார்பாக கௌவரவிக்கப்படுகிறது.
Menu