@Copyright – C.N.Ramamurthy M.Com, B.L. Founder President, Vanniyar Kootamaippu.

e-Book Publication – E-edition Version – 1 – 2021

Publisher:

Kshatriyas Documentary

For Contacts:

Kshatriyas Documentary

# 7, First Main Road,

Kamdar Nagar, Nungambakkam,

Chennai – 600 034

Email – info@vanniyarkootamaippu.com

+91 9941311788

URL: www.vanniyarkootamaippu.com

 

 

கல்வி வள்ளல்

சங்கர் கந்தசாமிக் கண்டர்

 

சி.என்.ஆர்.

(நிறுவனத் தலைவர்)

 

பெருமைக்குரிய இனத்தின் சொந்தங்களே!

 

கடந்த சில மாதங்களில் நம் இனத்திற்காக பாடுபட்ட அரும்பெரும் தலைவர்களின் அதாவது இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தேர்தல் உருவான தியாகத் தலைவர்களின் வீரவரலாற்றை பாராட்டியிருந்த பாசத்திற்கு ஈடு இணை என் வாழ்வில் இதுவரை நான் பெறாத பேறு.

 

 

 

கடந்த ஜூன் மாத இதழில் வணங்க வேண்டிய ‘வன்னிய புராணம்’ பற்றி எழுதி இருந்தேன். வன்னியர் குரல் இதழில் அதனை படித்து பலரும் எனக்கு தொலைபேசி மூலம் பாராட்டி பெரும் ஊக்கமளித்து வாழ்த்தியதை நன்றியோடு நினைவு கொள்கிறேன்.

 

சரி! இந்த இதழுக்கு என்ன செய்வதென்று எனது புத்தக அறையை திறந்து பலவாறான புத்தகங்களை எடுத்துப் பார்த்து ஒவ்வொன்றாக பார்த்து, சிலவற்றை மேலோட்டமாக படித்து நினைவுப்படுத்தி கொண்டிருந்த வேளையில் ‘வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம்’ சார்பாக நான் மேற்கொண்ட போராட்ட ஆவணங்கள் அதில் கிடைத்தது.

 

பல ஆண்டு காலமாக பல்வேறு விதமான போராட்ட களங்களை அமைத்து இன்று வரை அதற்காக கடும் உழைப்பை காட்டி வரும் எனக்கு அது சம்பந்தமாக நம் இன மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய நல்லதொரு காலகட்டம் இது தான் என எனக்கு தோன்றியது.

 

நம் சொந்தங்களே! பொதுச் சொத்து நல வாரியத்தை கேட்பதற்கும் அதற்காக போராடுவதற்கும் வன்னிய இனத்திற்கு பெரும் உரிமை கனத்த ஆதாரத்துடன் இருக்கிறதென்பதை முதலில் உணர்ந்து தெரிந்து கொள்ளுங்கள். அதை சுருக்கமாக சொல்கிறேன்.

 

ஆங்கிலேயர் காலம் தொட்டு நமது இனத்தினை சேர்ந்தவர்கள் உழைத்து சம்பாதித்த சொத்துக்களை தங்கள் குடும்பத்திற்கு குறைவாக பயன்படுத்தி பொதுக் காரியங்களுக்கு மிகுதியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.

 

அவ்வாறு பொது நல நோக்கத்தோடு செயல்பட்ட அவர்கள் அக்காலத்திலேயே அறக்கட்டளைகளை நிறுவி பணத்தை சேர்த்து நம் இனத்தினருக்கு கல்வி கிடைக்க வேண்டியும், எதிர்கால சந்ததியினருக்கு உதவும் நோக்கத்தோடும் சுமார் 170க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளை நிறுவி திறம்பட நடத்தி இருக்கின்றனர்.

 

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு எடுத்த கணக்கின் படி தமிழகத்தில் குறிப்பாக வன்னிய இனத்தினை சேர்ந்த பெருந்தகையாளர்கள் சுமார் 170க்கும் மேற்பட்ட அறக்கட்டளைகளை நடத்தி வந்ததை ஆவணமாக எடுத்து கணக்கு காட்டினர். இதன் நிகர சொத்து மதிப்பு சுமார் மூன்று லட்சம் கோடி என்பதை நம் சொந்தங்கள் நினைவு கொள்வார்களாக!

 

 

இதற்கு ஒரேயொரு உதாரணத்தை சொல்கிறேன். கடந்த திமுக ஆட்சியின் போது நாட்டிய மங்கை பத்மா சுப்பிரமணியத்திற்கு நாட்டிய சாலை அமைப்பதற்காக பெரும் புகழ்மிக்க கோடிக் கணக்கான மதிப்பு பெறும் கிழக்கு கடற்கரை சாலையில் சுமார் 5 ஏக்கர் நிலத்தை தந்தார். அந்த நிலம் நமது இனத்தைச் சார்ந்த ஆளவந்தர் அவர்களின் டிரஸ்ட்டிலிருந்து எடுத்து கொடுக்கப்பட்டதாகும். இது அப்போதே அரசு ஆணையாக வெளியாகி உள்ளது.

 

நம்மின மக்கள் அரும்பாடுபட்டு உழைத்தது. சம்பாதித்த சொத்துக்கள் இன்று அரசாங்கத்தின் பெயரில் பல மோசடிப் பேர் வழிகள் அனுபவிக்கும் நிலையிலேயே உள்ளது இதை ஒன்று சேர்த்து நம இன மக்களின் அறக்கட்டளைகளை இணைத்து வன்னியர் பொதுச் சொத்து நலவாரியம் அமைக்க வேண்டும் என்பதே நமது போராட்டம்; விருப்பம். இது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம்.

 

இந்த ஆவணங்களை படித்துக் கொண்டிருந்த போது தான் நம் இனத்தினர் பெரும் பணக்காரர்கள் அன்று கல்விக்காக தங்களையே தியாகம் செய்த ஈர வரலாறு என் மனக்கண்முன் நிழலாடியது. 1800-களில் கல்விக்காக அறக்கட்டளைகளை நிறுவி அதன் மூலம் பள்ளி, கல்லூரி நிலையங்களை நிறுவிய அந்த மாமனிதர்களை போற்றி அவர்களில் குறிப்பிட்டவர்களையாவது நினைவு கொண்டு எழுதினால் நம் இனத்தின் எதிர்கால சந்ததியினருக்கு உதவிகரமாக இருக்குமே என்று எண்ணினேன்.

 

அதன் முதல் கட்டமாக பலர் வரிசைப்படுத்தப்பட்டிருந்தாலும் பல அரிய தகவல்கள் அடங்கிய சேர நாட்டு கல்வி வள்ளல் சம்பு குல சேகரர் சங்கர கந்த சாமிக் கண்டர் வரலாறு எனும் புத்தகத்தை தேடி எடுத்தேன். இந்த இதழ் முதல் நம் இனத்தினர் மட்டுமல்ல மக்கள் அனைவரும் கல்வி பெற வேண்டுமென்ற நல்லெண்ணத்தில் அக்காலத்திலேயே கல்விச் சாலைகளை நிறுவி அப்பெருமகன்கள் வாழ்ந்த திசை நோக்கி வணங்கி இக்கட்டுரையை தொடங்குகிறேன். மிகப்பெரிதான, அரிதான புத்தகமாக உருவாக்கித் தந்த புத்தகத்தின் ஆசிரியர் கவிஞர் திரு. காவிரிநாடன் அவர்களுக்கும் அவரது புதல்வர் அண்ணல் வெளியீட்டின் பதிப்பாளர் திரு. ஆறு அண்ணல் அவர்களுக்கும் நமது நெஞ்சம் நெகிழ்ந்த நன்றிகள். இதோ! சங்கர கந்தசாமிக் கண்டர் அவர்களின் சுருக்கமான வாழ்வியல் கட்டுரையாக விரிகிறது.

 

தமிழ்நாட்டில் மிகப்பெரும்பான்மையாய் வாழ்கின்ற குலமாகிய சம்பு மகா முனிவரின் கோத்திரத்தில் உதித்தவர்களே வன்னியர்கள். அப்பெருங்குலத்தில் உதித்த மகா மனிதரே சங்கர கந்தசாமிக் கண்டர்.

 

கண்டர் அவர்களின் மூதாதையர்களின் வையாபுரிக் கண்டர் மரபினர் வரிசையைப் பட்டியலிடும் போது சங்கரரிலிருந்தே தொடங்க வேண்டியுள்ளது. சங்கரருக்கு முந்திய மரபினர் பெயர்கள் நமக்கு தெரியவில்லை. அந்த நாளில் அவருடைய வாழ்ந்த உறவினர்களோ அல்லது நண்பர்களோ அவ்வழித்தோன்றல்களை பதிவு செய்திருந்தால் தவிர நமக்கு வேறு ஆதாரம் இல்லை.

 

ஆயினும் கண்டரின் தந்தையார் சங்கர கண்டர், அவருடைய தந்தையாரோ அல்லது அவருடைய பாட்டனாரோ மாகாளி அல்லது மாகாளி கண்டர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தனர்.

 

பிரிக்கப்படாத ஒரே மாவட்டமாக இருந்த போது சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் ஆகிய நான்கையும் உள்ளடக்கியதாக இருந்தது சேலம் மாவட்டம். சேலம் பன்னெடுங்காலமாக வரலாற்றுச் சிறப்புகளை பெற்றிருந்த பெருமை மிகு மண்…

 

மூவேந்தர்களில் மூத்தகுடியாவும் மூத்த மண்ணாகவும் விளங்கிய சேரன் வந்து தங்கிய இடம் சேலமானதாக வரலாறு. சோழன் தங்கிய இடம் உத்தம சோழ புரமாகவும், பாண்டியன் தங்கிய இடம் வீரபாண்டியானாதாகவும் சொல்வதுண்டு. சேர்வராயன் மலைத் தொடர்கள் முதல் கொல்லிமலைத் தொடர்கள் முதல் தன்னகத்தே ஏராளமான மலைகளைப் பெற்றிருக்கும் மலைவளம் மலிந்தது சேலம் மாவட்டம்.

 

நாமக்கல் மாவட்டத்தில் மணி முத்தா நதியென்றும், திருமணி முத்தாறு என்றும் பாய்ந்து வரும் மலை நதி காவிரியாற்றின் வடகரையில் கூடும் இடம் கூடுதுறை. நதியின் மேல்புறத்தில் நன்செய் இடையாறு என்ற நாநிலம் இருந்தது. நன்செய் இடையாறு என்று நவிலும் போதே நாவினில் நீர் சுரக்கும். நன்செய் இடையாறுக்கு சங்க இலக்கியச் சான்றுகளும், கல்வெட்டுக்களும் நிறையவே உள்ளன.

 

இவ்வூரில் கோட்டை ஒன்று இருந்துள்ளது. வேலூரிலிருந்து நன்செய் இடையாற்றுக்கு நுழையும் போதே கோட்டை மேட்டைத் தொட்டு விட்டுத்தான் உள்ளே செல்ல வேண்டும். கோட்டைக் கொத்தளம் அன்றிருந்தால் தான் அவ்விடம் எயில் வாயிலாக விளங்கி இருந்தது.

 

 

சோழர் ஆட்சியில் இப்பகுதி வடகரை இராசாச்சிரய வளநாடு என்றும், திருஎயில் வாயில் என்ற பெயல் இராசேந்திர சிம்ம சதுர்வேதி மங்கலம் என்று மாற்றப்பட்டதாம் சதுர்வேதி மங்கலங்கள் வற்றாத வளம் வாய்ந்த ஆற்றங்கரைகளில் அமைக்கப்பட்டன. திருமணி முத்தாறு நெடுகிலும் சேலம், வீரபாண்டி, சமுத்திரம், பருத்திப் பள்ளி, இருப்பள்ளி, இடையாறு, பாய்ச்சல், நத்தமேடு ஆகிய ஊர்கள் அவ்வாறு அமைக்கப்பட்ட சதுர்வேதி மங்கலங்களே ஆகும்.

 

இடையாற்றில் நான்கு வேதங்களைக் கற்றறிந்த சதுர்வேதியர்கள் இருந்ததைப் போலவே ஆற்றங்கரைகளை ஒட்டிய இரு கரையோர ஊர்களான பாண்டமங்கலம், வெங்கரை, வேலூர், மோகனூர் போன்ற ஊர்களிலும், அக்ரஹாரங்கள், மாடமாளிகையுடன் விளங்கியிருந்தன.

 

வேலூரிலிருந்து இடையாற்றுக்கு வரும் வழி ஒன்றுள்ளது. வயல் வெளிகளாக உள்ள பாதை; அதன் இடைப்பட்ட இடத்தில் வாஞ்சிப் பாளையத்தம்மன் கோயில் ஒன்று இன்றும் உள்ளது. இந்த வாஞ்சிதான் அன்றைய வஞ்சியாக இருக்க வேண்டும்.

 

கருவூரிலும் வஞ்சி என்ற ஊர் இருந்திருக்கிறது. நாமக்கல் வட்டம் அந்நாளில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இடம் பெற்றிருந்தது. நாமக்கல்லையும், கரூரையும் பிளந்து கொண்டு செல்வது காவிரியாறு.

 

சேலம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றிய ஆங்கிலேயரான லீபான் என்பார் சேலம் மானுபல் என்ற நூலில் நன்செய் இடையாற்றைப் பற்றி புகழ்ந்துரைத்துள்ளார்.

 

‘இது நாமக்கல் வட்டத்தின் பூங்கா’ சேலம் மாவட்டத்தின் எல்-டோ-ராடோ உண்மையான இங்கேதான் பாலைவனம் ரோஜாப் பூவாய் மலர்கிறது என்றிருக்கிறார்.

 

சொந்தங்களே! கண்டர் பற்றி சொல்வதற்கு முன் அவரின் ஊரைப் பற்றி இவ்வளவு தேவையா? என நினைத்து விடாதீர்கள். தமிழகத்தில் இன்றைக்கு சொல்லப்படும் பல ஊர்கள் உருவானதே 1800களுக்கு பிறகுதான். அதுவும் 1900களுக்குப் பிறகுதான் அப்படியிருக்க 1800களுக்கு முன் இருந்த ஒரு ஊரை முழுதாக தெரிந்து கொள்ள இவ்வளவு விஷயம் தேவையானது என்பதால் இதை எழுத முனைந்தேன்.

 

ஆங்கிலேயர் இந்தியாவில் காலூன்றிய பிறகு 1708ல் சென்னை, பம்பாய், வங்க மாநிலங்களின் அமைப்புகள் தோற்று விக்கப்பட்டன. ஆண்ட்ரூகோகன் முதல் சர் ஆரச்சி பால்ட்நை என்பவர் வரை பலர் சென்னை ஆளுநராக அமர்ந்து சென்னை மாநிலத்தை ஆட்சி புரிந்துள்ளனர்.

 

ஆளுநர்கள் ஆட்சி புரிந்த நேரத்தில் மாநிலத்தில் உள்ள மாவட்டங்களுக்கு ஆட்சிச் தலைவர்களை அமர்த்தினர். மாவட்டங்களுக்கு ஆட்சித் தலைவர்கள் நியமிக்கப்பட்ட போது தான் அம்மாவட்டங்களில் உள்ள ஊர்களுக்கு ஊராட்சி அலுவலர்கள் (கிராம முன்சீப்) அமர்த்தப்பட்டனர்.

 

நன்செய் இடையாற்றில் கண்டரின் பெரியப்பாவாகிய வையாபுரி கண்டர் அவ்வூரின் ஊராட்சி அலுவலராகப் பணிபுரிந்திருக்கிறார். ஒருவர் ஊராட்சி அலுவலராகப் பணிபுரியக் குறைந்தளவு எழுத்தறிவும், எண்ணறிவும் பெற்றவராக இருந்திருக்க வேண்டும். அந்தத் தகுதிகள் இருந்ததால் சங்கர கண்டரின் தமையனாராகிய வையாபுரிக் கண்டர் அப்பதவியை வகித்திருந்தார்.

 

இடையாற்றில் கண்டரின் மூதாதையர்களின் நுழைவுக்கு முன்பே இருந்த படையாட்சிகளை விட சங்கர கண்டரின் குடும்பம் ஊராட்சி அலுவலராகவும், இருபது ஏக்கர் நிலங்களுக்கு உரிமையாளராகவும் இருக்கும் வண்ணம் அக்குடும்பம் உழைப்பைச் சிந்தியிருக்கிறது.

 

 

வையாபுரிக் கண்டரின் குடும்பம் பற்றிய விவரங்கள் இல்லை என்கிற போதிலும் சங்கர கண்டரின் குடும்பக் கிளைகள் உறுதுணை புரிகின்றன. உழைப்புத் தேனீயாக விளங்கிய சங்கர கண்டருக்கு உரிய வயதில் திருமணம் நிகழ்கிறது. திருமதி வீராயி அம்மாள் அன்புத் துணைவியாக அமைகிறார்.

 

புனித தம்பதியினர் இவர்களுக்கு புண்ணிய புதல்வனாக இப்புவிக்கு புகழ்மிகு கண்டர் அவர்கள் 23.05.1880-ம் நாளன்று அவதரித்தார். ஆண்டுதோறும் மே திங்கள் பிறந்து 23-ம் நாள் மலரும் போதெல்லாம் நாமக்கல் வட்டாரத்தார் மட்டுமின்றி நாநிலம் முழுவதுமுள்ள படைக் குல மக்கள் எல்லாம் நன்றியுடன் போற்றிப் புகழ்பாடும் தினமாக விளங்கியது.

 

கண்டரின் பாசமிகு இளவல் முத்து வீரக் கண்டர் 1891-ம் ஆண்டு பிறந்தார். பாசமிகு தங்கையாக செல்வி முத்தம்மாள் 1898-ம் ஆண்டு பிறந்தார். இவர் 05-06-1916-ம் ஆண்டு பரிமளக் கண்டரை மணக்கிறார். சங்கர கண்டர் – வீராயி அம்மாள் தம்பதியினருக்கு மூன்று முத்தான வாரிசுகள்.

 

ஊராட்சி அலுவலர் பணியை பார்த்துக் கொண்டிருந்த வையாபுரிக் கண்டர், தன் தம்பியாகிய சங்கர கண்டரிடம் ஒப்படைத்தார். சங்கர கண்டரும் அப்பணியை ஏற்றுத் திறம்பட திறமைகளை வெளிப்படுத்தினார். அந்த சமயத்தில் திண்ணைப் பள்ளியில் படித்து தொடக்கக் கல்வியாகிய எழுத்தையும், எண்ணையும் நம் கண்டர் கசடறக் கற்று வந்தார். அக்கல்வியுடன் தந்தையாரின் ஊராட்சி அலுவல் பணிகளையும் பயிற்சி மாணவனைப் போல் பயின்றார்.

 

கந்தசாமிக் கண்டரின் உலகியல் ஞானத்தைக் கண்டு வியந்த தந்தை சங்கர கவுண்டர் தாம் வகித்து வந்த ஊராட்சி அலுவலர் பதவியை மகன் கந்தசாமிக்கு கண்டரிடம் வழங்கினார். எடுத்த காரியங்களில் எப்படியும் வெற்றிகளைப் பார்த்து விடுவதென்ற குறிக்கோளை உடைய அவர், தந்தையாரிடமிருந்து ஏற்றுக் கொண்ட ஊராட்சி அலுவலர் பணியிலும் இளமையிலேயே வெற்றித் தடம் பதித்தார்.

 

 

சங்கர கண்டரின் துணைவியார் வீராயி அம்மாளின் உடன் பிறப்பு கருப்ப கண்டர். இவரும் நன்செய் இடையாற்றின் குறிப்பிடத்தக்க நிலக்கிழாராக விளங்கினார். இவர் கந்தசாமிக் கண்டருக்கு உரிமை கொண்டாடக் கூடிய தாய்மாமன். அவர் பெற்றெடுத்த மகள் குப்பாயம்மாள். நன்செய் மண்ணுக்குரிய இளமையும் பொன்னி நதிபாயும் வளமையும் பெற்று மிளிர்ந்த குப்பாயம்மாளை வாழ்க்கைத் துணையாகக் கரம் பிடித்தார் கந்தசாமிக் கண்டர்.

 

கண்டரின் இளவல் முத்து வீரக் கண்டர் அண்ணனைப் போலவே திண்ணைப் பள்ளியிலேயே படித்து வளர்ந்தார். தன் தாயார் வீராயி அம்மாளின் முகத்தோற்றம் அவரிடம் இருந்தது. தன் தமையனின் ஆற்றல்களையும், நல்லோரும் வல்லோரும் போற்றுகின்ற காட்சிகளையும் கண்டு முத்து வீரக்கண்டர் கந்தசாமிக் கண்டர் மீது அளவற்ற பாசத்தை வளர்த்து வந்தார். அண்ணனின் உழைப்புக்கும், உரிய மதிப்புக்கும் உடன் தோள் கொடுப்பவராக இருந்தார்.

 

கந்தசாமிக் கண்டர் பண்ணையத்திலும், விரிந்து பரந்த வீட்டிலும் ஏராளமான  பணியாளர்கள் பணிபுரிந்து வந்தார்கள். அப்பணியாளர்களில் ஒரு குடும்பம் இடையாற்றுக்கு மிக அருகிலிருந்த பாலப்பட்டியிலிருந்து வந்து பணியாற்றியது. அக்குடும்பத்தில் ஓர் இளமங்கையும் இருந்தாள். செக்கச் சிவந்த மேனியுடன் இளமை பூரித்து நின்ற அந்தப் பெண்ணின் விழிகளில் முத்து வீரன் பதிவாகி விட்டார். அப்பெண்ணும் அவர் நெஞ்சத்தில் அழிக்க முடியாத ஓவியமாகி விட்டாள்.

 

தூய செந்நெறிப் பற்றும், குலப்பற்றும், துறவு நிலை மனப்பக்குவம் பெற்றிருந்த முத்து வீரன் காதல் உணர்வுகளைக் பின்னுக்கு தள்ளிவிட்டார். தன் தமையன் புகழிலும் தன் குடும்பப் புகழிலும் ஒரு சிறு கறையும் பட்டுவிடாமல் இருக்க தன் காதல் உணர்வுகளை உதறி வீசினார். முத்துவீரனின் போக்குகள் கொஞ்சமாக வெளியே தெரிய வந்தாலும், பெரிதுபடுத்தி விடாத அளவுக்கு கண்ணுங் கருத்துமாக காத்து வந்தார்.

 

இளமை உணர்வுகளை, நெஞ்சுக்குள் போட்டுப் புதைத்துக் கொண்ட முத்துவீரன் தன் 32-ம் வயதில் 26.01.1923-ம் ஆண்டு இப்பூவுலகை விட்டுச் சென்றார். வெறுத்துப் போன அந்த ஏழைப்பெண் யாரையும் மணக்காமலும், யாருக்கும் சுமையில்லாமலும் வாழ்ந்திருந்தாள். ஏழ்மை இளமையை தோற்கடித்தாலும் வாழ்க்கையை துறந்து விடாத அளவுக்கு வைராக்கியம் பெற்றிருந்தது.

 

அந்தப் பெண் வேறு யாருமல்ல. அவர் தான் பாலப்பட்டி இரா. கந்தசாமியின் உடன் பிறப்பு. அதனாலோ, என்னவோ முனைவர், பேராசிரியர் பா.ரா. கந்தசாமி அவர்களை, காலஞ்சென்ற அருள்மிகு பரிமளக் கண்டர் கந்தசாமிக் கண்டர் கல்வி நிலையங்களில் ஆசிரியப் பணிகளைத் தொடர்ந்தளித்தும், கல்லூரியில் துணை முதல்வர் பதவி வரை அளித்தும், உறவும், குலமும் அறுபடாமல் பார்த்து உதவி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

கண்டர் அவர்களின் செல்வச் சிறப்புமிகு தங்கை முத்தம்மாளின் திருமணம் ஊரே வியக்கும் வண்ணம் நடந்தேறியது. நன்செய் இடையாற்றில் நிலக்கிழார் ஆகவும், கண்டரின் உறவுக்காரராகவும் விளங்கிய முத்துச்சாமி கண்டரின் திருமகள் பரிமள கண்டரை 05.06.1916-ல் திருமணம் செய்து கொண்டார்.

 

குறைந்தளவு கல்வியும், நிறைந்த உலகறிவும் பெற்றிருந்த பரிமளக் கண்டர், கந்தசாமிக் கண்டரின் கனவுகளை மேலெடுத்து வளர்த்தவர். இவருக்கு மரபுச் செல்வம் இல்லை. எனினும் குலத்தைச் சார்ந்தவர் மேலோங்கிட கல்விப்பணியில் கருத்தூன்றிக் கடும் பணியாற்றியவர். கண்டர் பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, ஓய்வில்லாமல் உழைத்து வந்ததால், தாம் பார்த்து வந்த ஊராள்வோர் பணியைப் பரிமள கண்டரிடம் ஒப்படைத்தார்.

 

கண்டரின் இல்லம் எப்படி இருந்தது தெரியுமா? நன்செய் இடையாற்றுக்குள் நுழையும் முன்பே இராசவாய்க்கால் குறுக்கிட்டு பாயும். அதைக் கடந்து மேலே சென்றதும் கோட்டை மேடு. நடுவூரைச் சற்றுத் தள்ளி மையத்திலிருக்கும் மகா மாரியம்மன் கோயில் – கிழக்கே ஓலைப்பாளையம், பாலப்பட்டிச் செல்லும் ஊராட்சி நெடும்பாதையில் எயிலை நாதர் ஆலயம், தெற்கு நோக்கிப் போகும் காவிரியாற்றுப் பாதை, தென்கிழக்கை நோக்கிய தெருக்கள்.

 

அதுதான் கண்டர் வாழும் தெரு. அத்தெருவில் ஒரு விரிந்த பாறைக்களம்  இருக்கிறது. அந்தக் களத்து மேட்டுப் பக்கம் கண்டரின் பெரிய – விரிந்த – அகலமான இல்லம் பிரம்மாண்டமாய் நின்று விளங்குகிறது.

 

‘நான் குடியிருக்கும் வீட்டை தேசாந்திரிகள் தங்கி அன்னபானாதிகள் செய்து கொண்டு தங்கும்படி செய்ய வேண்டும். அதற்கு அடுத்தாற் போல் வடபுறமிருக்கும் ஒரு கொட்டகையை வீட்டுடன் சேர்த்து ஏழைகள் தங்குவதற்கும் மற்ற பொது உபயோகத்திற்கும் வைத்துக் கொள்ள வேண்டும். மீதியிருக்கும் காலி நிலங்களையும் காடிகாணா, கக்கூஸ் மற்ற கடைகள் கிணறு ஜாகா பூராவும்’ – இவ்வாறு தம் உயிலில் குறிப்பிட்டுள்ள கீர்த்திமிகுந்த இல்லத்தில் கண்டர் வாழ்ந்து வந்தார்.

 

அந்நாளில் அந்த இல்லம் அரசாங்கத்தின் தலைமைப் பதவியிலிருந்து கடை நிலை பணியாற்றுகின்றவர் வரை வந்தமர்ந்து, இளைப்பாறி, அறுசுவை உணவுகளை உண்டுக் களித்துச் செல்கின்ற விருந்தோம்பல் வீடாகத் திகழ்ந்தது.

 

பரமத்தி வேலூரை ஒரு ஆற்றுத் துறைமுகம் உள்ள ஊர் என்றழைக்கலாம். பழைய திருச்சி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஊடாடி ஓடிபாயும் காவிரி ஆற்றின் இரு கரையோரங்களில் வளங்கொழிக்கும் ஊர்கள் அதிகம். அவற்றில் மக்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் போக பரிசல் துறைகளைப் பயன்படுத்தினார்கள்.

 

ஈரோடு, பள்ளிப்பாளையம், பாகூர், சோளசிராமணி, ஊஞ்சலூர், கொடுமுடி, வெங்கரை, நொய்யல், மறவாபாளையம், புகழூர், வேலூர், தோட்டக்குறிச்சி, நன்செய் இடையாறு, கிழக்கு தவுட்டுப் பாளையம், களிமேடு, வாங்கல், மோகனூர் என நீண்டு செல்லும் பரிசல் துறைகள் உள்ள ஊர்களில் வேலூர் மிக முக்கியமான மையமாகத் திகழ்ந்தது.

 

வேலூரில் பண்டைய நாளில் கோட்டை இருந்தது. ஹைதரலி, திப்பு சுல்தான் போன்றவர்கள் பிடியில் இருந்த வேலூரில் ஒரு பகுதி சுல்தான் பேட்டையாகவும் மாறியிருந்த காலம் உண்டு.

 

சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் சோழநாடாகிய தஞ்சைப் பகுதியிலிருந்து குடியேறிய குடும்பம் ஒன்று வேலூரில் புகழ் பெற்று விளங்கியது. அக்குடும்பத்தில் ஒருவர் மாரிமுத்துக் கண்டர். அவருடைய தம்பிக்கும் இதே பெயர் என்பதால், இவர் பெரிய மாரிமுத்துக் கண்டர் என அழைக்கப் பெற்றார்.

 

 

 

ஒரே குலத்தவராகவும், பக்கத்து ஊர்க்காராகவும், ஆளுமையில் ஒரே தன்மைமிக்கவராகவும் விளங்கிய மாரிமுத்துக் கண்டரும், கந்தசாமி கண்டரும் நெருங்கிய குடும்பத்தாராகவும் அன்பில் தோய்ந்த நப்பினராகவும் இருந்தார்கள். வேலூர் வரும் போதெல்லாம் கண்டர் மாரிமுத்துக் கண்டர் வீட்டுக்கு வராமல் இருக்க மாட்டார். மாரிமுத்துக் கண்டரும் அவ்வாறே இடையாறு சென்றால் கண்டரைப் பார்க்காமல் திரும்ப மாட்டார்.

 

தமிழகத்தில் பல்வேறு குலத்தாரும் தங்கள் குலத்தின் மேன்மைக்காக மடங்களை நிறுவியிருந்தார்கள். வன்னிய குல சத்திரியராகிய படையாட்சிகள் மிகுதியாக வாழ்கின்ற பகுதிகளில் மடங்களை ஏற்படுத்தினார்கள். பவானி ஆற்று முகத்தோரம் உள்ள அந்தியூர் பிரம்ம வன்னிய குல மடத்திற்கு கந்தசாமிக் கண்டரும், பெரிய மாரிமுத்துக் கண்டரும் வருடந்தோறும் சென்று மடத்திற்கு வேண்டிய பொருட்களை வழங்கித் திரும்புவார்கள்.

 

பல்வேறு பணி நெருக்கடிகளின் காரணமாக இடையாற்று கந்தசாமிக் கண்டரும் வேலூர் மாரிமுத்து கண்டரும் பவானி மடத்துக்கு இரு வருடங்களாக செல்ல முடியாத நிலையில் ஒரு செய்தியைக் கேள்விப்பட்டு இருவரும் பவானி நோக்கி விரைந்தார்கள். மடாலயம் நிர்வாகத் திறமையின்மையால் மடம் ஏலம் விடப்பட்டு ஒரு சாய்பு கைக்கு போகும் நிலை ஏற்பட்டிருந்தது.

 

இரு கண்டர்களும் பல நாட்கள் தங்கி சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொண்டு மடத்தை மீட்டனர். இரு கண்டரும் சேர்ந்து மாபெரும் சமூக மடத்து அவல நிலைக்கு விரைந்து நடவடிக்கை எடுத்து மானமீட்பு செய்துள்ள தொண்டு நம் இன மக்களுக்கு புதியதொரு வரலாறாய் அமைந்து போனது.

 

அந்நாளில் உயர்நிலைப் பள்ளிகள் என்பது வட்டத்துக்கு ஒன்று கூட இல்லாத நிலையில் நாமக்கல், கரூர், ஈரோடு பகுதிகளில் மட்டும் தென்பட்டன. நாமக்கல் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்று படித்து வர, கண்டரின் ஊர்ப் பகுதியிலிருந்து சாலை வசதியோ, வண்டி வாகன வசதியோ கிடையாது. இதனால் பள்ளிக்கு நடந்து செல்பவர்களும், கட்டை வண்டிகளில் செல்பவர்களும் அதிகம்.

 

கோச் வண்டி வைத்திருத்த சீமான் கண்டர் சில வேளைகளில் வண்டியில் இடம் இருந்தால் மாணவர்களை ஏறிக் கொள்ளச் சொல்லி, அழைத்துச் செல்வார். வண்டியில் வரும் மாணவர்களிடம் ‘ஏம்பா, நாமக்கல்லில் தங்கிப் படிக்கவும், அங்கேயே சாப்பிட்டுக் கொள்ளவும் வசதி செஞ்சுக் கொடுத்தாப் படிப்பீர்களா…?’ என கண்டர் கேட்க, அப்படிப்பட்ட வாய்ப்பு எங்களுக்கு எங்கே கிடைக்கப் போகிறது என பெருமூச்சு விட்டு சென்றனர் மாணவர்கள்.

 

அதுவே ஏழை மாணவர்களுக்காக ஒரு இலவச உறைவிட உணவு விடுதியாக நாமக்கலில் எழுந்து நின்றது. அவ்விடுதிக்கு 40 ஏக்கர் நிலம் பதிவு செய்தார். 1918-ல் தொடங்கி 1922-க்குள் லட்ச ரூபாய் செலவிட்டு விடுதியை எழுப்பினார். சென்னை மாநில ஆங்கிலேயர் ஆட்சியின் அமைச்சராக இருந்த சர். ஏ.பி. பத்ரோ என்பவரைக் கொண்டு விடுதியை திறக்கச் செய்தார். இந்த அரிய பணி கண்டரின் முதல் முயற்சியும் முதல் சாதனையுமாகும்.

 

பரமத்தி வேலூரில் 1904-ம் ஆண்டு முதல் இந்து லோயர் செகண்டரி ஸ்கூல் நடந்து வந்தது. பள்ளியை நடத்தி வந்த ஏ.எம்.வி. குழந்தைவேல் செட்டியாரைத் தலைவராக் கொண்ட நிர்வாகக் குழு, தொடர்ந்து பள்ளியை நடத்த முடியாத சமயத்தில் நன்செய் இடையாற்றுக் கல்வி வள்ளலிடம் 12.09.1924-ல் ஒப்படைத்தார். இதற்கு பெருந்துணையாகவும், தூண்டுதலாகவும் இருந்தவர் பெரிய மாரிமுத்துக் கண்டர்.

 

12.09.1924-ல் அப்பள்ளியைக் கண்டர் வாங்கிய போது, பழைய நிர்வாகம் அவரிடம் கொடுக்க இருந்த ரூபாய் 2000/-த்தை அவர்களிடமே திருப்பி அளித்து, அறச்செயல்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் சொல்லிவிட்டார். இந்த நன்முயற்சியால் வட்டார மக்களின் நெஞ்சில் கண்டர் கல்லெழுத்தாக பதிய ஆரம்பித்தார். பரமத்தி வேலூரில் கண்டரின் பெயரில் தொடக்கப்பள்ளி உதயமாயிற்று.

 

கோவை மாவட்டம் – பவானியிலிருந்து காலிங்கராயன் வாய்க்கால் அமைக்கும் பணிகள் நடந்து கொண்டிருந்த நேரம் காலிங்கராயன் வாய்க்கால் பாய்ச்சலுக்குள்ள பகுதியில் நிலம் வாங்கி குடியேறத் திட்டமிட்டனர் நாமக்கல் வட்டம் இரட்டணையில் வாழ்ந்து வந்த ஏமராஜ கண்டர் என்ற விவசாய குடும்பத்தினர்.

 

 

 

இத்திட்டத்திற்கு நன்செய் இடையாற்று வள்ளல் கந்தசாமிக் கண்டரிடம் உறவினர் என்ற அடிப்படையில் உதவியை எதிர்நோக்க. குலப்பற்று மிகுந்த கண்டரும் உதவிட முன் வந்தார். சேலம் மாவட்ட ஆட்சியர் ஆங்கிலேய துரையும், அவரின் துணைவியாரும் அப்போது சேலம் அம்மா பேட்டைக்கு வந்திருந்தனர்.

 

அம்மா பேட்டை வீதியில் மிகப்பெரிய பந்தலையும் மேடையும் அமைத்து ஆட்சியர் தம்பதியரை வரவேற்று ஆட்சியரின் துணைவியாருக்கு நூறு சவரன் தங்கச் சரட்டை அணிவித்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்தார். உள்ளம் பூரித்திருந்த மாவட்ட ஆட்சியரிடம் கோவை மாவட்ட ஆட்சியர்க்கு ஒரு பரிந்துரை கடிதத்தை எதிர்பார்த்த கண்டருக்கு பரிந்துரை கடிதமும் கிடைத்தது,

 

கோவை மாவட்ட ஆட்சியரும், ஆங்கிலேயர்தான். கண்டருடன் சென்றிருந்த ஏமராஜ கண்டர் ஆங்கிலேய ஆட்சியரிடம் அம்மடலை கொடுக்க, அதனை ஏற்ற அவரும் ஒரு செண்டு கால் ரூபா வீதம் 300 ஏக்கர் நிலத்தைக் கொடுக்க பிறப்பித்தார். அச்சமயத்தை பயன்படுத்தி தம் உறவினர் சின்னக் கண்டருக்கும் நிலம் அளிக்குமாறு வேண்ட காடாக, மேடாக, பள்ளமாக கிடந்த நிலங்களை பெற்று சீர்படுத்தினார்.

 

தம்மைச் சார்ந்த 80 வீட்டு பங்காளிகளுக்கு ஒரு செண்டு ஒரு ரூபா வீதம் விற்றுப் பத்திரப் பதிவும் செய்தார். கொடுமுடி நகரம் இன்றும் முதல் வட்டம் சின்னாக் கண்டனூராகவும். இரண்டாம் வட்டம் ஏமராஜ கண்டனூராகவும் பெயர் சாற்றிக் கொண்டிருக்கிறது.

 

 

கண்டரின் வன்னிய குல சத்திரிய சங்கத்திற்கான ஈடுபாட்டிற்கு நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். இருப்பினும் குறிப்பாக அதற்கு தூண்டு கோலாக இருந்த சென்னை தொழிலதிபர் கா.கோ. பலபத்திர நாயகரைப் பற்றி இங்கு சொல்வது நல்லது. வன்னிய சத்திரிய மகா சங்கத்தை தோற்றுவித்த கா. கோபால நாயகரின் அருந்தவப் புதல்வர்தான் பலபத்திர நாயகர்.

 

சென்னை நாயகருக்கும், நன்செய் இடையாற்று கண்டருக்கும் வயதில் சுமார் ஐந்து ஆண்டுகள் அதிகம். நாயகர் தன் தந்தையாரின் அடிச்சுவட்டில் தொழில் அதிபராக நடக்க, கண்டரும் தன் தந்தையாரின் கிராம ஊராட்சி அலுவலராக, வேளாண்மைப் பணியாளராக, நிலக்கிழாராக உலா வந்தார்.

 

நாயகருக்கு வன்னிய குல சத்திரிய மகா சங்கம் 1910-ல் வடார்க்காடு மாவட்டம் ஆற்காட்டில் நடந்த 22-ம் ஆண்டு விழாவில் பல்லவ குல சேகரர் என்ற மிக உயர்ந்த பட்டத்தை சூட்டி மகிழ்ந்தது. அதே போல் கண்டருக்கு 1913-ல் நன்செய் இடையாற்றில் நடந்த 25-ம் ஆண்டு வெள்ளி விழாவில் சம்புகுலசேகரர் என்று மிக உயர்ந்த பட்டத்தை சூட்டி மகா சங்கம் பெருமை சேர்த்தது.

 

கண்டர், நாயகருடன் நெருங்கிய குடும்ப உறவு வைத்திருந்தார். சென்னைக்கு வரும் போதெல்லாம் நாயகர் இல்ல மாளிகையில் தங்கினார். நாயகர் பெற்றெடுத்த செல்வங்களை வாரி அணைத்து, கொஞ்சி விளையாடி மகிழ்ந்தார்.

 

நாயகர் நோயுற்றதை அறிந்து துடித்துப் போய் சென்னைக்கு பறந்து வந்தார். பாயும் படுக்கையாயிருக்கும் பலபத்திரரைக் கண்டு ஓவென அலறிய கண்டர், உயிர் பிரியும் வரை கூடவே இருந்தார். இருவரது நட்பும் எழுத்தில் வடிக்க இயலாத அளவுக்கு சிறப்பும் உயர்வும் வாய்ந்தது.

 

1914-ல் முதல் உலகப் போர் தொடங்கியது. சென்னை மாநகரில் எம்டன் குண்டு வீச்சு. மக்கள் சென்னையை விட்டு நகர, நாயகரின் குடும்பம் நன்செய் இடையாற்றில் கண்டரின் விருந்தோம்பலில் திளைத்தது. 1942-ல் இரண்டாம் உலகக் போர் வெடித்தது. ஜப்பானிய விமானங்கள் சென்னையை தாக்க, மக்கள் ஓட, நாயகரின் குடும்பம் நன்செய் இடையாற்றில் முகாமிட்டது.

 

பலபத்திர நாயகருக்கும், கண்டருக்குமான உறவும், நட்பும் இருவரது மரணத்துக்கு பின்பும் வாழ்வாங்கு தொடர்ந்தது தான் அற்புதம். பலபத்திரரின் மறைவுக்குப் பிறகு அவரது புதல்வர் சி.பி. உலகநாத நாயகரின் திருமணம் 1922-ல் சென்னையில் நடந்தது. இத்திருமணத்தில் கண்டர் காட்டிய அன்பும், அக்கறையும் அளவிடற்கரியது.

 

1949-ல் கண்டர் உயர்நிலைப்பள்ளியின் வெள்ளி விழா சேலம் மாவட்டத்தில் விழிகளை எல்லாம் ஒரே நோக்கில் பார்வையிட கண்டரின் மைத்துனர் பரிமள கண்டர், நாயகரின் குடும்பத்தினர் விழாவில் பங்கேற்க வேண்டி பேராவா கொண்டார். விழாவின் முதல் நிகழ்வான கொடியேற்றும் சிறப்பை நாயகரின் அருந்தவப் புதல்வர் சி.பி. உலகநாதர் நாயகருக்கு நல்கி, அவரை மக்கள் நிறைந்த கண்டர் உயர்நிலைப்பள்ளி விளையாட்டுத் திடலில் திக்குமுக்காடச் செய்தார்.

 

திரு. கண்டர் பெயர் பெறும் பாக்கியம் செய்த இந்த உயர்நிலைப் பள்ளியில் கலைமகள் இன்ப நிருத்தம் செய்யும் கவின் கொடியை உயர்த்துகிறேன். வெள்ளைக் கலையுடுத்தி, வெள்ளைப் பணியணிந்து, வெண்கமலத்தில் விளங்கும் ஸ்ரீகலாதேவி, தன் விஜய விலாசத்தை இக்கொடியிலிருந்தே மெய்ப்பிப்பாளாக! அவளது கண்ணருளால் இப்பள்ளி காலேஜாகி பல்லாயிரம் மக்களுக்கு மென்மேலும் பயன்தருவதாக என்று வாழ்த்தினார் நாயகரின் புதல்வர் சி.பி. உலகநாதர் நாயகர். அது நட்பின் கொடி உயர்ந்து பறந்த நேரமும் கூட.

 

கண்டருக்கு 1924-ம் ஆண்டுக்குச் சற்று இறுதியில் அவருடைய காலில் பனிவெடியால் புரையோட்டத்துக்குள் சிக்கிக் கொண்டார். காலில் பனிவெடியால் ஏற்பட்ட தோலை பேனாக் கத்தியைக் கொண்டு அவர் கீறும் போது அஜாக்கிரதையால் கத்திப்பட்டு காலில் புண்ணாகியது. அதை குணமாக்க வெளிநாடு, உள்நாடு போன்ற சிறந்த மருத்துவர்களையும் கொண்டு முயற்சி செய்தும் நோயை வெல்ல முடியாமல் 30.04.1925-ல் தனது 45-வது வயதில் புகழ் உடம்பு எய்தி அப்பகுதி மக்களின் நெஞ்சத்தில் நிறைந்து கலந்தார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அன்பான சொந்தங்களே! கந்தசாமிக் கண்டரின் கடும் உழைப்பும், தன்னலம் கருதாத பொது நல நோக்கும், மாசு குறையாத குலப்பற்றும், ஈகையும், இரக்கமும், தோழமையுடன் நுண்ணிய உயர் அறிவும், ஞானமும் நம் குலம் காக்க வந்த மாமணிகளில் இவரிடம் ஒருங்கே அமைந்தது என்றால் அது மிகையல்ல.

 

நாமக்கல்லில் அன்றே சுமார் இரு நூறு வருடங்களுக்கு முன்பே உண்டு உறைவிடப் பள்ளியை ஆரம்பித்த பெரும் சிந்தனையாளர். செங்கல்வராய நாயகரின் கல்வி வள்ளல் தன்மை கண்டருக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது உண்மை. நாயகரின் உயர்ந்த நோக்கம் கண்டரை கல்விப் பணியில் திளைக்க வைத்தது.

 

நம் இனத்தின் மேன்மைக்காக தங்களது உழைப்பால் விளைந்த சொத்துக்களையெல்லாம் பொதுப் பயன்பாட்டுக்கு அளித்த உத்தமப் பெருந்தகையாளர்கள் நம்மவர்கள் என்பதை நினைக்கும் போது கண்கள் பனிக்கிறது; நெஞ்சம் கனக்கிறது. எண்ணம் தித்திக்கிறது. அந்த உத்தமப் பெருந்தகையாளர்களின் வழி நடந்து நம் எதிர்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்காக இனமானம் காத்து நிற்போம். வாரீர்! வாரீர்! என வன்னியர் கூட்டமைப்பு சார்பில் அழைப்பு விடுத்து நிறைவு செய்கிறேன். வாழ்க கண்டரின் புகழ்! உயர்க வன்னியர் குரல்!

 

 

கந்தசாமிக் கண்டர் அறநிலைய கல்வி நிறுவனங்கள்

 

  1. கந்தசாமிக் கண்டர் கல்லூரி, வேலூர்.

 

  1. கந்தசாமிக் கண்டர் சுயநிதிக் கல்லூரி, வேலூர்.

 

  1. கந்தசாமிக் கண்டர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேலூர்.

 

  1. மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர்.

 

  1. கந்தசாமிக் கண்டர் மெட்ரிக்குலேஷன் பள்ளி, நாமக்கல்.

 

  1. கந்தசாமிக் கண்டர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி, வேலூர்.

 

  1. கந்தசாமிக் கண்டர் நடுநிலைப் பள்ளி, நன்செய் இடையார்.

 

  1. கந்தசாமிக் கண்டர் துவக்கப்பள்ளி. வேலூர்.

 

  1. கந்தசாமிக் கண்டர் நர்ஸரி பள்ளி, கபிலர்மலை.

 

  1. மக்கள் கல்வி நிறுவனம், நாமக்கல் மாவட்டம்.

 

  1. கந்தசாமிக் கண்டர் மாணவர் இல்லம், சென்னை.

 

  1. கந்தசாமிக் கண்டர் மாணவர் இல்லம், சேலம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

மூதறிஞர் இராஜாஜியின் மூதுரை

 

தமிழ்நாட்டில் முதல் முதலாக மதுவிலக்கை சேலம் மாவட்டத்தில் அமல்படுத்தியவர் இராஜாஜி. அவருடன் கண்டர் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். அவ்வுயர்ந்த நட்பால் கண்டரின் வெள்ளி விழா மலருக்கு மூதறிஞர் இராஜாஜி அனுப்பிய மடல் இது.

 

என்னுடைய ஏழை ஜில்லாவைச் சேர்ந்த ஒரு கனவான், தன் பெருஞ்சொத்தை ஏழை மக்களுக்குப் பயன்படும்படியாக தருமத்துக்கு எழுதி வைத்து பெரும் புகழ் சம்பாதித்தார். அதை நினைத்து, ஜில்லாவைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டும். சில நாட்களுக்கு முன் சென்னை முதலமைச்சரின் தலைமையில் அந்த தருமத்தின் வெள்ளி விழா கொண்டாடப்பட்டது. பொதுவாக சேலம் ஜில்லாவாசிகளும், சிறப்பாகக் கண்டர் அவர்களுடைய குலமாகிய வன்னியகுல சத்திரியர்களும், கந்தசாமிக் கண்டர் அவர்களின் பெருஞ்செயலைப் பாராட்டி, அவருடைய புகழில் தாமும் பங்கு பெறும் பாக்கியத்தை அடைந்திருக்கிறார்கள். சேலம் ஜில்லாவைச் சேர்ந்த காவேரிக் கரையிலும், நன்செய் இடையாற்றிரும் எனக்கு அதிக உரிமை உண்டு. என் சொந்த ஊரைப் போலவே இந்த காவேரிக்கரை கிராமங்களை நான் கருதி வருகிறேன். என்னுடைய வக்கீல் தொழில் இந்த காவேரிக் கரையிலிருந்து தான் பெரும் ஊற்றுப் பெற்று வந்தது. கண்டர் அவர்களின் தருமமானது நன்றாகக் காக்கப்பட்டு நடைபெற வேண்டும்; இன்னும் பல்லாண்டுகள் ஓங்கி வளர்ந்து பொது மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்பது என் கோரிக்கை. கண்டர் அவர்கள் வெகுகாலத்துக்கு முன்னரே காட்டிய வழியும், தாராள நோக்கமும், தரும ஞானமும் நம்மனோரனைவருக்கும் ஊக்கம் தரும் உதாரணமாக இருக்க வேண்டும்.

 

சி. இராஜகோபாலாச்சாரி.

கண்டரின் வெள்ளி விழா மலருக்கு மூதறிஞர் அனுப்பிய மடல்.

 

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்.’ என்று வடலூர் வள்ளல் பெருமான் கூறியதை மெய்ப்பித்தார் கண்டர். அரிசிச் சோறு அன்றாட உணவாக புழக்கத்தில் இல்லாத அக்கால கட்டத்தில் சற்றேறக்குறைய நூறாண்டுகளுக்கு முன் ஏழை குழந்தைக்குப் பால் ஊற்றவும், அன்னம் அளிக்கவும் உயில் எழுதி வைத்தார் மாமனிதர் கண்டர். சொந்தங்களே! இன்றளவும் அது நடைபெற்று வரும் சத்தியமான காட்சியை காணீர்!

 

 

 

கந்தசாமிக் கண்டர் அறநிலையம் அறப்பணிகள்

 

  1. வேலூர் விநாயகர் கோவில்
  2. தினசரி காலை பூஜை
  3. வினாயகர் சதுர்த்தி கட்டளை (ஆவணி மாதம்)
  4. நவராத்திரி கட்டளை (புரட்டாசி மாதம்)
  5. தைப்பூசம் (தை மாதம்)

 

  1. நாமக்கல் வினாயகர் கோவில்
  2. தினசரி கால பூஜை

 

  1. நன்செய் இடையாறு ஸ்ரீ மாரியம்மன் கோவில்
  2. தினசரி 2-ம் காலம் மற்றும் உச்சி கால பூஜை
  3. பிரதி வெள்ளிக் கிழமை நந்தா விளக்கு
  4. மாரியம்மன் பண்டிகை தண்ணீர் பந்தல் (பங்குனி மாதம்)

 

  1. திருவேலீஸ்வரர் கோவில் நன்செய் இடையார்
  2. தினசரி நந்தா விளக்கு
  3. தினசரி கால பூஜை

 

  1. கபிலர் மலை ஸ்ரீமுருகன் கோவில்
  2. நவராத்திரி கட்டளை 4ம் நாள் புரட்டாசி மாதம்
  3. தைப்பூசம் 4ம் நாள் கட்டளை தைப்பூசம்

 

  1. சிதம்பரம் ஸ்ரீதில்லையம்மன் கோவில்
  2. தினசரி ஒரு காலம் பூஜை
  3. நடராஜர் – பாவாடை

 

  1. ஓலப்பாளையம் சமாதி
  2. பிரதி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை பூஜை
  3. குரு பூஜை – கார்த்திகை மாதம்

 

  1. திதி
  2. கந்தசாமிக் கண்டர் – சித்திரை மாதம் – அன்னதானம் 100 ஏழைகள்
  3. தாயார் வீராயி அம்மாள் – பங்குனி மாதம் – அன்னதானம் 100 ஏழைகள்
  4. மனைவி குப்பாயி அம்மாள் – சித்திரை மாதம் – அன்னதானம் 100 ஏழைகள்
  5. தகப்பனார் சங்கர கண்டர் – பங்குனி மாதம் – அன்னதானம் 100 ஏழைகள்
  6. சகோதரர் முத்து வீரன் கண்டர் – தை மாதம் – அன்னதானம் 100 ஏழைகள்

 

  1. நன்செய் இடையார் பால் தர்மம்
  2. ஏழை குழந்தைகளுக்கு தினசரி இலவச பால்

 

  1. நன்செய் இடையார் வாசக சாலை
  2. தினசரி செய்தித்தாள்

 

  1. மாணவ – மாணவியர் இலவச தங்கும் விடுதி, வேலூர், சேலம் மற்றும் சென்னை.

 

  1. பஜனை மடம்
  2. நவராத்திரி கட்டளை –      புரட்டாசி மாதம்
  3. தனுர்மாத பூஜை               –      மார்கழி மாதம்
  4. பிரதி திங்கள் மற்றும் சனிக்கிழமை பூஜை
  5. வினாயகர் சதுர்த்தி பூஜை –      ஆவணி மாதம்
  6. மாணிக்க வாசகர் குரு பூஜை –      ஆவணி மாதம்
  7. திருஞான சம்பந்தர் குரு பூஜை – சித்திரை மாதம்
  8. அப்பர் குரு பூஜை –      வைகாசி மாதம்
  9. சுந்தரமூர்த்தி குரு பூஜை –      ஆவணி மாதம்
  10. கோகுலாஷ்டமி –      ஆவணி மாதம்
  11. அன்னாபிஷேகம் –      ஐப்பசி மாதம்
  12. தினசரி விளக்கு தீபம்

 


வீரமிக்க வீராயி அம்மாள்

 

சுற்றிச் சுழன்று பணியாற்றிக் கொண்டிருந்த கண்டரின் வாழ்வு சட்டென பறிக்கப்பட்டது. அவரின் மூச்சு அடங்கிப் போனாலும், அவரின் தீரா வேட்கைகளாகிய திட்டங்கள் முடங்கிப் போய்விட வில்லை. அவரின் கனவுகளை நனவுகளாக்கும் செயல் திறன்கள் அவரைப் பெற்றெடுத்த தாயிடமே இருந்தன.

 

கைம்பெண்ணாகித் தவிக்கும் வீராயி அம்மாள்: அவ்வம்மையின் மருமகள் கைம்பெண் குப்பாயி அம்மாள் ஆகிய இருவரும் கண்டரின் உயில் சாசனத்தில் கூறப்பட்டுள்ளவற்றை நிறைவேற்றுவதில் எவ்விதச் சுணக்கத்திற்கும் இடம் கொடுக்க வில்லை. அருமை மகனின் இறப்புக்கு பின் பங்காளிகள் கண்டரின் சொத்துக்களுக்கு முற்றுகையிட்டனர். நீதித்துறைக்கு போவதும், காவல்துறையை வரவழைப்பதும், சொத்துக்களை அரசே எடுத்துக் கொள்ளத் தூண்டுவதுமாக கலகம் செய்தனர். எல்லாவற்றையும் நானே பார்த்துக் கொள்கிறேன் என வீரமுழக்கம் செய்தார் வீராயி அம்மாள்.

 

புத்திர சோகத்தில் மூழ்கியிருந்த தாயார் வீராயிம்மாள் புத்திரருக்குப் பிறகு தமது கடமையை எப்படி செய்யப் போகிறாரோ? என கவலைப்பட்டனர் கண்டரின் அனுதாபிகள். தன் மகனின் நீங்கா நிலைபெற்ற உயில் சாசனக் கோட்பாட்டைச் செயல் படுத்த முனைந்து, தம் தந்தையார் கருப்ப கண்டரையும், தன் மருமகனார் பரிமள கண்டரையும் அரவணைத்துக் கொண்டு உயர்நிலைப் பள்ளியை தோற்றுவிக்கும் பணிக்கு கால்கோள் நாட்டினர்.

 

ஆதரவாளர்களுக்கும், எதிரிகளுக்கும் தன்னுடைய இந்த ஒரே ஒரு செயலால் வீரமிக்க வீராயி அம்மாளின்  செயல் திறன் எப்படிப்பட்டது என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினார். தென்னிந்தியாவில் இம்மாதிரி பொது நலமான பெரும் காரியங்களில் ஈடுபட்ட பெண்களில் இவரும் ஒருவராவார். அச்சமயம் அவரின் கண்களிலிருந்து கன்றையிழந்த பசுவைப் போல் தண்ணீர்த் துளிகள் காணப்பட்ட போதிலும் அத்தாயின் தீரமொழிகள் யாவரையும் கவரச் செய்தன என்று அக்காலத்தில் வெளி வந்த நாளிதழ் சுதேசமித்திரன் புகழாரம் சூட்டியது.

 

அந்த வீரத்தாய்க்கு நம் இனத்தின் சார்பாக வீரவணக்கம் செலுத்துவோம். அவர் மட்டும் இல்லையேல் நம் இனத்தவரின் பல கோடி சொத்துக்கள் அரசாங்கத்துக்கு போனது போல் போய்ச் சேர்ந்து சூறையாடப்பட்ட இருக்கும்.

 

 

 

 

கண்டரின் கனவை நனவாக்கிய பெருந்தகையும், பெருந்தலைவரும்

 

சங்கர கந்தசாமிக் கண்டருக்கு பின்னர் அவர் உயில் சாசனப்பட்டி பரிமள கண்டர் தம் பொது வாழ்க்கைப் பணிகளைத் தொடங்கி சீரும் சிறப்புமாக நடத்திக் காட்டினார். சைவப் பழமாகவும், அருளைத் தேடுபவராகவும், கண்டர் விட்டுச் சென்ற கல்வி என்னும் சிறு கன்றை ஆலமரமாக வளர்த்தெடுப்பவராகவும் திகழ்ந்தார். கண்டரின் கனவை நனவாக்குவதையே லட்சியமாக கொண்டு தன் இறுதி மூச்சு அடங்கும் வரை தொண்டு செய்த உயர்ந்த உள்ளத்துக்கு சொந்தக்காரர் பரிமள கண்டர்.

 

புரவலர் பரிமளக் கண்டரைத் தொடர்ந்து வரும் வாழையடி வாழையாக தனது தாயாரின் ஒன்றுவிட்ட சகோதரர் இரத்தின சபாபதி அவர்களை பள்ளிப் பொறுப்புக்கு நியமித்தார் பரிமளக் கண்டர். இரண்டாம் உலகப் போரின் போது இந்திய இராணுவத்தில் சேர்ந்து தனது தாய் நாட்டிற்காக பர்மா எல்லையில் போராடி அதன் அடையாளமாக உடம்பில் இன்றும் வீரத்தழும்புகளை பதக்கங்களாக பெற்றவர்.

 

பட்டப்படிப்பினையும், ஆசிரியர் பயிற்சியையும் பெற்றதால் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து பின் நிர்வாகத்தின் தாளாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். நெ.து. சுந்தர வடிவேல் அவர்களின் அன்புக்கு பாத்திரமானவர் என்பதால் அவரது ஆசியுடன் 1962-ல் கல்லூரியையும் தொடங்கினார். பெருந்தலைவர் இரத்தினசபாபதி அவர்கள் தாளாளராகவும் இருந்து நடுநிலைப்பள்ளியாக துவங்கப்பட்ட கல்விப் பணி இன்று பல்வேறு துறைகளைக் கொண்ட கல்லூரிக் கல்வி வரை உயர்ந்து நின்று தன்னகத்தே 12 கல்வி நிலையங்களையும் கொண்டு விருட்சமாக வளர்ந்தோங்கி நிற்கிறது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu