@Copyright – C.N.Ramamurthy M.Com, B.L. Founder President, Vanniyar Kootamaippu.

e-Book Publication – E-edition Version – 1 – 2021

Publisher:

Kshatriyas Documentary

For Contacts:

Kshatriyas Documentary

# 7, First Main Road,

Kamdar Nagar, Nungambakkam,

Chennai – 600 034

Email – info@vanniyarkootamaippu.com

+91 9941311788

URL: www.vanniyarkootamaippu.com

 

கடலூர் அஞ்சலை அம்மாள்

காந்தியார் அழைத்த தென்னாட்டு ஜான்சிராணி!

 

சி.என்.ஆர்.

(நிறுவனத் தலைவர்)

 

 

அன்பிற்குரிய சொந்தங்களே!

 

நமது வன்னியர் குரல் இதழில் வன்னிய சமுதாயத்தைச் சேர்ந்த முன்னோர்கள் சுதந்திரத்திற்கு முன்பும், சுதந்திரம் பெற்ற பின்பும் நாட்டுக்காக உழைத்து தியாக திருவிளக்குகளாக திகழ்ந்தவர்களைப் பற்றி விரிவான கட்டுரைகள் எழுதி வருவதை அறிவீர்கள்.

 

இதற்கு முன்பு கடந்த மார்ச் மாத வன்னியர் குரல் இதழில் காந்திய வழியில் வாழ்ந்த தியாகி கோவிந்தசாமி படையாட்சி என்ற தலைப்பில் அவரது வாழ்வியல் சரிதத்தை எழுதி பிரசுரித்து இருந்தோம். அன்றைய சென்னை மாகாணத்தில் தென்னாற்காடு மாவட்டம் சுதந்திர போராட்ட வேள்வித் தீயால் கணன்று கொண்டிருந்தது. அம்மாவட்டத்தின் கடலூர் பகுதி போராட்ட களத்திற்கு முதன்மையாய் நின்று தலைமை தாங்கிய சிறப்பு வாய்ந்ததாகும்.

 

இன்றைய கடலூர் மாவட்டமே வெள்ளைப் பரங்கியர் இப்பாரத தேசத்தை அடிமைப்படுத்திட வைக்க முதல் பாதையை அமைத்தது எனலாம். கி.பி, 1608 ஆம் ஆண்டு வங்கக் கடலின் மடியில் அமைந்துள்ள தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு அன்னிய நாட்டு கப்பல்கள் வந்து நின்றன.

 

அவற்றில் இருந்து டச்சுக்காரர்கள் வெளியேறி பாரத மண்ணில் காலடி எடுத்து வைத்தனர். இவர்களது காலடி சுவடுகள் கடற்கரை ஓரமாக கோட்டை கட்டி அமரவும் வைத்தது. அப்போது தென்னாற்காடு மாவட்டம் விஜயநகர பேரரசரின் ஆளுமையின் கீழ் இருந்து வந்தது.

 

விஜயநகர பேரரசு படைகளின் தொடர் தாக்குதல்களாலும், அடிக்கடி உருவாகிய நெருக்கடிகளாலும் டச்சுக்காரர்கள் அந்த கோட்டையை போர்ச்சுக்கீசியர்களிடம் தாரை வார்த்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் கோட்டையை டச்சுக்காரர்கள் போர்ச்சுக்கீசியர்களிடமிருந்து கைப்பற்றிக் கொண்டனர்.

 

 

1690-ம் ஆண்டு அதே கடலூரில் வியாபாரம் செய்வதற்காக வந்திருப்பதாகச் சொல்லி காலடி எடுத்த வைத்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியினர். அவர்கள் டச்சுக்காரர்களிடம் இருந்த கோட்டையை விலைக்கு வாங்கி விரிவு படுத்திக் கட்டி அதை புனித டேவிட் கோட்டை என்று பெயர் சூட்டினார்கள்.

 

புனித டேவிட் கோட்டை மீதும் செஞ்சி மன்னர் ஸ்வரூப்சிங் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தார். இந்த நேரத்தில் பாண்டிச்சேரியை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட பிரெஞ்சு கவர்னர் டியூப்ளேவின் தாக்குதலும் புனித டேவிட் கோட்டை மீது விழுந்தது. தொடர்ந்து நடந்த தாக்குதல்களால் புனித டேவிட் கோட்டை வலுவிழந்தது.

 

செய்வதறியாது திகைத்த கிழக்கிந்தியக் கம்பெனி தனது படைகளுடன் சென்னப்ப நாயக்கன் பட்டணத்துக்கு கிளம்பியது. அவர்கள் வந்து உருவாக்கிய இடமே இன்றைய சென்னையின் செயின் ஜார்ஜ் கோட்டை ஆகும். கடலூர் கடற்கரையிலிருந்து வெள்ளையர்களின் காலடி தடம் மறைந்த பின்பு 1987-ம் ஆண்டு முத்து படையாட்சிக்கும் அம்மாக்கண்ணுவுக்கும் புகழ்மிக்க மகளாக இதே கடலூர் முதுநகரில் பிறந்தார் நம் குல சிங்கம் அன்னையர் திலகம் அஞ்சலை அம்மாள்.

 

பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப்பட்டுப் போன இப்பூமியில் பரங்கியர்களை விரட்டியடிக்க பெண்கள் எழுச்சியோடு திரண்டு வராத கால கட்டத்தில் திண்ணைப் பள்ளிக் கூடத்தில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு விடுதலைப் போராட்ட களம் புகுந்தார் அஞ்சலை அம்மாள்.

 

வன்னிய சொந்தங்கள் மட்டுமல்ல. இக்கட்டுரையைப் படிக்கும் எவராவது ஒருவர் நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும், இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் ஈடுபட்டு தியாகிகளாக உருவானவர்கள், உருவாக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், இருந்தாலும் அதில் ஒருவர் கூட வன்னிய இனத்தைச் சேர்ந்தவர்களாக இல்லையே என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியான பதிலை தராமல் நழுவிக் கொண்டனர். இதோ! இந்திய தேசத்தின் தந்தை மகாத்மா காந்தியால் தென்னாட்டு ஜான்சிராணி என்று அழைக்கப்பட்ட பெருமையைக் கொண்ட கடலூர் அஞ்சலை அம்மாளின் வாழ்க்கை சரிதத்தை கொஞ்சம் புரட்டிப் பாருங்கள். புடம் போட்ட தங்கமாய் ஜொலிக்கும் அஞ்சலை அம்மாளின் தியாகத்தினை உங்கள் நெஞ்சத் தராசில் நிறுத்திப் பாருங்கள். அதன்பின்பு வன்னிய இன மக்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்திற்கு விடை தாருங்கள்.

 

சுதந்திரப் போராட்டத்தின் தாக்கம் அன்றைய சென்னை மாகாணம் முழுமையும் பரவிக் கிடந்த காலம். ஆண்கள் மட்டுமே களம் கண்டு வெள்ளையருக்கெதிராக போரிட்ட நேரம். குண்டும், குள்ளமுமான உருவம். சற்றே கருத்த உடல்வாகு. நிறைய மஞ்சள் பூசிய மங்களகரமான தோற்றம். நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு. லட்சுமிகரமான திருமுகம். நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையில் கருணையும்,  வீரமும் இரு சேர இருக்கும் மொத்தத்தில் பார்த்தவர் பரவசத்தோடும் கும்பிடத் தோன்றும் ஆன்மிக தோற்றம் உள்ளவர்.

 

இத்தனை லட்சணத்துடன் கடலூர் முதூநகர் சுண்ணாம்புக்காரத் தெருவிலுள்ள 38-ம் எண் கொண்ட இல்லத்தில் சாதாரண குடும்பத்தில பிறந்து விடுதலைப் போருக்காக ஏன் பெண்கள் அணிவகுக்கக் கூடாதென்ற கேள்வியுடன் களமிறங்கினார். தென்னாட்டு முதல் பெண் சுதந்திரப் போராட்ட வீராங்கனை கடலூர் அஞ்சலை அம்மாள்.

 

இளம் பெண்ணாக இருந்து சுதந்திரத்திற்காக நாமும் பங்காற்ற வேண்டுமே என்ற துடிப்போடு தந்தையிடம் கோரிக்கை வைத்தார் அஞ்சலை அம்மாள். மகளின் வீரத்தை பாராட்டிய தாய் தந்தையர் இருவரின் அரவணைப்பில் தன் வயதொத்த பெண்களுடன் கடலூரில் விடுதலைக்காக களம் ஆற்றினார். அஞ்சலை அம்மா இருப்பினும் உரிய பருவத்தில் திருமணம் முடித்துவிட எண்ணி கடலூர் அருகிலுள்ள சேத்தியா தோப்பு பக்கத்தில் உள்ள பெரிய நற்குணம் கிராமத்தைச் சேர்ந்த ராமு படையாட்சியின் மகன் முருகப்ப படையாட்சியை மாப்பிள்ளையாக  தேர்ந்தெடுத்தனர்.

 

 

 

செல்வந்தரான முருகப் படையாட்சி தினமும் குடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்ததால் சொந்த மாமன் மகளான அஞ்சலை அம்மாளை மகனுக்கு திருமணம் செய்து வைத்து இனி மகன் திருந்திவிடுவான் என்று நம்பினார் ராமு படையாட்சி. இதில் தான் அஞ்சலை அம்மாளின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.

 

கணவனை திருத்துவதற்கும், தனது விடுதலைப் போராட்ட ஆசைகளுக்கும் ஒரு சேர தீர்வு கண்டார் அஞ்சலை அம்மாள். அன்னிபெசன்ட் அம்மையாரால் தோற்றுவிக்கப்பட்ட ஹோம் ரூல் இயக்கம் வெளி உலகுக்கு தெரிவிக்கப்பட்ட சமயம் அன்னிபெசன்ட் அம்மையாரின் தனித்துவத்தால் கவரப்பட்டார் அஞ்சலை அம்மாள். அதே நேரம் நாட்டில் கருப்புச் சட்டம் என்ற ரவுல்ட் சட்டம் கொண்டு வரப்பட்டதால் நாடு கொந்தளித்துக் கொண்டிருந்தது.

 

அப்போது தான் உலகமே அதிரும் வண்ணம் பஞ்சாபில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடக்க, தேசமெங்கும் போராட்டம் திமிறி எழுந்து நடந்தது. அதே நேரம் காந்தியார் ஒத்துழையாமை இயக்கத்தை தொடங்க பாரினில் சுதந்திரத் தீயின் ஜூவாலை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இந்த சமயத்தில் கடலூருக்கு வருகை புரிந்தார் மகாத்மா காந்தி.

 

 

மதுவுடன் சூதாட்டமும் சேர்ந்து முருக படையாட்சியை ஆட்டு வித்த நேரத்தில் தனது ஊருக்கு வந்த காந்தி அடிகளின் பேச்சைக் கேட்க கணவர் முருகப் படையாட்சியை அழைத்துக் கொண்டு சென்றார் அஞ்சலை அம்மாள். கெடிலம் ஆற்றங்கரையில் உரையாற்றிய காந்தி அடிகள் மதுவினாலும், வெள்ளையர்களாலும் நம் தேசம் அழியும் சூழ்நிலையை அவரது மென்மையான பேச்சால் எடுத்துரைத்தார்.

 

காந்தியாரின் பேச்சைக் கேட்டு விட்டு வீட்டுக்கு வந்த முருகப் படையாட்சியின் மௌனம் அஞ்சலை அம்மாளுக்கு புதிதாக இருந்தது. திடீரென எழுந்த முருகப் படையாட்சி, காந்தியாரின் பேச்சால் தனது மனம் படாத பாடுபடுகிறது. என்று சொல்லியவர் இனி ஜென்மத்தில் மதுவைத் தொட மாட்டேன் என சத்தியம் செய்தார். உடனே நாம் இருவரும் சேர்ந்தே இனி சுதந்திரப் போராட்ட களத்திற்கு செல்வோம் என்றும் உறுதி அளித்தார்.

 

பிரிட்டீஷ் ஆட்சியில் நாடெங்கும் கள்ளுக்கடைகள் ஏராளமாக நடத்தப்பட்டன. அவர்கள் இங்கிருந்து நம் செல்வத்தை கொள்ளை அடித்துக் கொண்டு போவதற்காக நம்மை மதுவில் மூழ்க வைத்தனர். இதை உணர்ந்த அஞ்சலை அம்மாள் தனது கணவருடன் சேர்ந்து கள்ளுக்கடை முன்பு பெண்களை திரட்டிக் கொண்டு போய் போராட்டம் நடத்தினார்.

 

குடிப்பதையே தொழிலாக கொண்டவர்கள் அசிங்கமாக திட்டினாலும், பலர் திருந்தியும் வந்ததால் தினமும் போராட்டத்தை நடத்துவதில் முனைப்புடன் செயல்பட்டார் அஞ்சலை அம்மாள். இதனையொட்டி நவசக்தி நாளிதழ் அஞ்சலை அம்மாளின் பணியை பாராட்டி, கௌரவித்தது. கணவன், மனைவி இருவருமே சேர்ந்து போராட ஒவ்வொரு நாளும் பெண்களின் வருகை அதிகரித்தது.

 

இதை உணர்ந்த அஞ்சலை அம்மாள் தன்னுடன் வந்திருந்த பெண்களிடம் சுதந்திரத்திற்காக போராட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துச் சொல்லி அனைவரையும் சம்மதிக்க வைத்தார். இதனால் காந்தியாரின் ஒத்துழையாமை இயக்கமும், கிலாபத் இயக்கமும் கடலூரில் செயல்பட்ட வேகம் கண்டு ஆட்சியாளர்கள் கோபம் கொண்டனர். வெள்ளையர்கள் அடக்குமுறையை கையாண்டாளும் அஞ்சலை அம்மாளும், முருகப் படையாட்சியும் மனந்தளராமல் போராட்டத்தை தொடர்ந்து வந்த வேளையில் அழகான பெண் குழந்தையான அம்மா பொண்ணுவும் வளர்ந்து போராட்ட களத்திற்கு வந்தார்.

 

அது சமயம் மதுரையில் இருந்து ஒரு எதிர்ப்புக் குரல் கம்பீரமாக எதிரொலித்தது. 1857-ல் முதல் சுதந்திரப் புரட்சியை நாடு கண்ட போது எழுந்த கிளர்ச்சியை நாம் அறிவோம். அப்புரட்சிக்கு பின்பு நாட்டின் வடபகுதியில் தொடர்ந்து நடந்து வந்த கிளர்ச்சியை அடக்கச் சென்னை மாகாணத்தில் ராணுவ அதிகாரியாய் இருந்த நீல் துரையின் தலைமையின் கீழ் ஒரு படை பாதுகாப்பிற்காக சென்றது. கிளர்ச்சியை அடக்கி, பாதுகாப்பதற்கு பதிலாக செல்லும் வழியெங்கும் நீல் நடத்திய வெறியாட்டம் அடிமைப்பட்ட இந்தியாவில் அழிக்க முடியாத ரத்தச் சாட்சியாக நின்றது.

 

அன்னிய நாட்டு படையெடுப்புகளில் ஈடுபட்ட அலெக்சாண்டர், செங்கிஸ்கான், தைமூர் போன்றவர்கள் நடத்திய போர்க் கொலைகளை பின்னுக்கு தள்ளிவிட்டு நீல் செய்ததே மனிதாபிமானமற்ற கொலைகளில் முதன்மையானது என உலக வரலாற்று ஆசிரியர்கள் பின்பு கணித்து எழுதினார்கள்.

 

நீல் சென்ற வழியெங்கும் மக்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டார்கள். பலர் மரக்கிளைகளில் கட்டித் தொங்கவிடப் பட்டனர். சிலருக்கு கழுத்தில் சுருக்குப் போட்டு அவர்களை யானை மீது ஏற்றி, அந்த யானையை ஒரு மரத்தடியில் நிறுத்தி கழுத்தில் தொங்கும் கயிறுகளை மரக்கிளைகளில் கட்டிய பின் யானையை அப்புறப்படுத்துவார்கள். அப்போது அவர்கள் ஊஞ்சல் ஆடுவதைப் போன்ற நிலையில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கொள்வதை நீல் தலைமையில் சென்ற ராணுவத்தினர் பார்த்துக் களித்துக் கொண்டாடுவார்கள்.

 

 

சில கிராமங்களைச் சுற்றி இயந்திர பீரங்கிகளை நிறுத்தி அக்கிராம மக்கள் வெளியே வராதவாறு தடுத்து அப்படியே தீயிட்டு மக்களுடன் கிராமத்தையே சாம்பலாக்கினார்கள். 1857-ல் நடந்த முதல் புரட்சியின் கிளர்ச்சிக்கு ஆயிரக்கணக்கானவர்களை இப்படி நாம் இழந்தோம். சரியாக இரண்டே ஆண்டுகளில் லக்னோவில் நீல் கிளர்ச்சியாளர்களிடம் மாட்டிக் கொண்டான். எப்படி நம் மக்களை சித்ரவதை செய்தானோ அதே போல் நீல் சித்ரவதை செய்யப்பட்டு பீரங்கி முன் கட்டி வைத்து இயந்திரத்தை இயக்க, சின்னாபின்னமாக சிதறிப் போனான் நீல். மனித இனம் கண்டிராத மாபாதக செயல்களை செய்த நீல் என்ற அந்த கொடுங்கோலனுக்கு அவனை பாராட்டும் வண்ணம் சென்னையில் அவனுக்கு சிலை நிறுவி இருந்தார்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்தார்.

 

1927ஆகஸ்ட் 15-ல் சத்தியாகிரகத்தின் மூலம் கொடுங்கோலன் நீல் சிலையை அகற்றுவதென முடிவெடுத்து அதற்கு ஒரு இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அந்த இயக்கத்தை மதுரை சிதம்பர பாரதியும் திருநெல்வேலி எஸ்.என். சோமயாஜூலு மற்றும் சில மதுரை காங்கிரஸ்காரர்கள் தொடங்குவதற்கு காரணமாக இருந்தார்கள்.

 

டி.எஸ். சொக்கலிங்கத்தை ஆசிரியராகக் கொண்டு அப்போது நடந்த வந்த ‘தமிழ்நாடு’ பத்திரிக்கை அலுவலகத்திலிருந்து சத்தியாகிரகிகள் மவுண்ட் ரோட்டிலுள்ள சிலையை நோக்கி ஊர்வலமாக வந்தார்கள். அந்த சிலையை சுத்தியலை கொண்டு உடைப்பது என்பதுதான் முதல் திட்டமாக வைக்கப்பட்டிருந்தது.

 

அத்திட்டத்தின் படி ஊர்வலமாக வந்தவர்களில் ஜமதக்னி, கப்பராயலு, மதுரை முகமது காலிசு ஆகியோரால் நீல் சிலை சுத்தியலால் அடிக்கப்பட்டது. வெண்கலச் சிலை என்பதால் உடையவில்லை. உடனே மகாத்மா காந்தி இவ்வாறு செய்வது சத்தியா கிரகத்திற்கு எதிரானது என்பதால் இம்முறையை அனுமதிக்காமல் களிமண் உருண்டைகளைக் கொண்டு அடிக்க வேண்டுமென்று ஆலோசனை கூறினார்.

 

சிலை உடைப்பில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடக, கேரளப் பகுதிகளில் இருந்து பலர் பங்கெடுத்துக் கொண்டு சிறை சென்றனர். இதில் முருகப் படையாட்சியும் நிறைமாத கர்ப்பிணியான அஞ்சலை அம்மாளும், ஒன்பது வயதுடைய மகளுமான அம்மாக்கண்ணுவும் சிறைக்கு சென்றார்கள்.

 

சென்னை மாகாணத்தில் நடந்த சுதந்திரப் போராட்ட களத்தில் குடும்பமாக நின்று போராடி சிறை சென்ற பெருமை கடலூர் அஞ்சலை அம்மாள் அவர்கள் குடும்பத்தையே சாரும். இவர் பல பெண்களையும் போராட்டத்தில் ஈடுபட வைத்தார். பேறு காலம் நெருங்கியவுடன் ஆங்கிலேய அரசு அஞ்சலை அம்மாளை பரோலில் அனுப்பி வைத்தது. அங்கே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். சிறையில் இருந்த போது பிறந்ததால் ஜெயில் வீரன் என்று பெயர் வைக்கப்பட்டு பின்பு ஜெயவீரன் என்று அழைக்கப்பட்டார்.

 

தாயாரோடு சேர்ந்து நீல் சிலை அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டதால் அம்மா பொண்ணுவுக்கும் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, சென்னை சிறுமியர் இல்லத்தில் அடைக்கப்பட்டார்.

 

இச்சமயம் சைமன் கமிஷன் வெற்றிகரமாக புறக்கணிக்கப்பட வேண்டி இருந்ததால் தலைவர்களின் வேண்டுகோளுக்கிணங்க நீல் சிலை உடைப்பு போராட்டம் தொடர்வது நிறுத்தப்பட்டது. இந்த வேளையில் சிலை உடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் இருப்பவர்களைக் காண மகாத்மா காந்தி வந்தார்.

 

 

 

சிறையில் இருந்தவர்களிடம் உணர்ச்சிகரமான சந்திப்பை நிகழ்த்தினார் காந்தி. அனைவரையும் சந்தித்து முடித்த பின்பு சிறுமியர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அம்மாக்கண்ணுவை சந்தித்தார் காந்தி. அப்போது உடனிருந்த ராஜாஜி, அஞ்சலை அம்மாளின் மகள் தான் இந்த சிறுமி என்று அறிமுகப்படுத்த, மகிழ்ச்சியில் திளைத்துப் போனார் காந்தி. உடனே உரிய அனுபதி பெற்று தனது ஆசிரமமான வார்தாவிற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தன்னுடனே அழைத்துக் கொண்டு போய்விட்டார்.

 

வார்தாவில் அம்மாபொண்ணு என்ற பெயரை லீலாவதி என்று பெயர் மாற்றி தனது ஆசிரமத்திலேயே தங்க வைத்து படிக்க வைத்தார். அங்கேயே தமிழ் பாடங்களையும் நடத்தி, நர்ஸ் ஆவதற்கான படிப்பையும், பயிற்சியையும் கொடுத்து லீலாவதியை சென்னைக்கு அனுப்பி வைத்தார் காந்தி.

 

வாசக நெஞ்சங்களே! ஒரு கணம் உங்களோடு பேச விழைகிறேன். காந்தியார் அக்குடும்பத்தின் மீது காட்டிய அன்பும், அரவணைப்பும் எதனால்! அஞ்சலை அம்மாளின் குடும்பமே காட்டிய சுதந்திர தியாகத்திற்கு அல்லவா? இதுவே தென் மாவட்டங்கள் அல்லது மேற்கு மாவட்டங்ளில் உள்ள ஏதாவதொரு சாதியினரோடு இப்படி ஒரு தொடர்பு காந்தியாரோடு இருந்திருந்தால் இந்நேரம் எப்படியெல்லாம் பூச்சாண்டி காட்டி இருப்பார்கள்.

 

முதல்வர் பதவி வரை அக்கும்பத்திற்கு கிடைக்க வேண்டுமென போராட்டம் நடத்தி இருப்பார்கள். ஆனால் பாவப்பட்ட இந்த வன்னிய இனத்தில் மக்கள் செய்த தியாகத்திற்கு கடுகளவு கூட மரியாதையை இந்த நாடு தரவில்லை என்பதை ஈர உணர்வு உள்ளவர்கள் உணர்ந்து தெளிவு பெறுவார்களென்று நம்புகிறேன்.

 

பின்னர் 1937-ம் ஆண்டு காங்கிரஸ் சட்டசபையை அமைத்த போது சென்னை மாகாண முதல்வராக இராஜாஜி பதவி ஏற்றவுடன், அந்த நீல் சிலையை அகற்றி அருங்காட்சியகத்தில் வைக்குமாறு உத்தரவிட்டார். ஆங்கிலேயர்கள் இராஜாஜியின் இந்த நடவடிக்கையை பற்றி இங்கிலாந்து பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்கள். அது பற்றி இராஜாஜி ஆங்கிலேய அரசாங்கம் கேள்வி கேட்ட போது ‘அது இருக்க வேண்டிய இடத்தில் பத்திரமாக இருக்கிறது’ என்று பதில் அளித்தார். அது கடந்த கால வரலாறாக அமைந்தது.

 

சிறையில் இருந்து வெளியே வந்த அஞ்சலை அம்மாளுக்கு அடுத்த போராட்ட அழைப்பு காத்திருந்தது. பிரிட்டீஷ் அரசாங்கம் நம் மக்கள் மீது விதித்த வரிகளில் எல்லாம் உப்பு வரியே மிகவும் கொடுமையானது என்றார் காந்தி. தாம் நடத்தும் போராட்டங்கள் ஏழை மக்களுக்காகத் தான் என்னும் உண்மையை உலகறியச் செய்ய உப்புச் சத்தியாக்கிரகத்தை நடத்தினார் காந்தியடிகள்.

 

பிரிட்டீஷ் அரசாங்கம் போட்ட வரிகளிலெல்லாம் உப்பு வரியே மிகவும் அநீதியானது. ஏழைகளின் கண்ணோட்டத்துடன் இதை நான் கூறுகிறேன். இந்தியாவில் ஏழைகளிலும் ஏழைகளாக இருக்கிறார்களே. அவர்களுக்காகத் தான் விடுதலை இயக்கம் நடைபெறுகிறது என்று இந்திய வைஸ்ராய்க்கு கடிதம் எழுதினார் காந்தியடிகள்.

 

உப்புச் சத்தியாகிரகத்திற்காக காந்தியடிகள், அகமதாபாத் சபர்மதி ஆசிரமத்தில் இருந்து 241 மைல் தொலைவில் உள்ள கடற்கரை ஊரான தண்டியைத் தேர்ந்தெடுத்தார். 1930 மார்ச் 12-ந் தேதி தண்டி யாத்திரையை தொடங்கினார்.

 

மோதிலால் நேரு ராமாயணத்தில் ராமர் இலங்கையை நோக்கி சென்றதோடு ஒப்பிட்டார். காந்தியடிகளின் நண்பர் ஆண்ட்ரூஸ், இஸ்ரேலியர்களை மோசஸ் அழைத்துச் சென்றதோடு ஒப்பிட்டார். அமெரிக்க அறிஞர்கள், அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் ஒற்றுமையை பாதுகாக்க தென் மாநிலங்கக்கு ராணுவத்தை அனுப்பியதோடு ஒப்பிட்டனர்.

 

வழியெங்கும் மகானுக்குரிய வரவேற்புகள் அளிக்கப்பட, ஏப்ரல் 5-ந் தேதி தண்டியை வந்தடைந்தார் காந்தி. ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’யின் நினைவு நாளான ஏப்ரல் 6-ந் தேதி அன்று காந்தி கடலில் குளித்து உப்பை எடுத்தார். (இந்த உப்பு ரூ. 1600/-க்கு ஏலம் போனது) சம்பிரதாயப்படி உப்புச்சட்டம் மீறப்பட்டு விட்டது. ஆகையால் உப்பு காய்ச்ச விரும்புவோரெல்லாம் அவ்வாறு செய்யலாம் என்று அறிவித்தார் காந்தி. இந்த யாத்திரையில் தமிழர்களும் பங்கு பெற்றிருந்தனர்.

 

 

சென்னை மாகாணத்தில் 1930 ஏப்ரல் 13-ல் இராஜாஜி தலைமையில் திருச்சியில் இருந்து சத்தியா கிரகப்படை வேதாரண்யத்தை நோக்கி புறப்பட்டது. இப்படையில் அஞ்சலை அம்மாளின் குடும்பமே கலந்து கொண்டது. வருபவர்களுக்கு உணவளிக்கத் கூடாதென்று அரசு அடக்குமுறையை ஏவியது. ஆனால் மக்களின் உணர்வுக்கு முன் அவை தோற்றுப் போனது.

 

ஏப்ரல் 29-ல் வேதாரண்யம் வந்தவர்களும் அடக்குமுறையை மீறி வேதரத்தினம் என்பவர் தங்க இடம் அளித்ததோடு, கூட்டத்திற்கு தலைமையும் தாங்கினார். இதனால் இவருக்கு சர்தார் எனும் பெருமைமிகு பட்டம் தேடி வந்தது. வேதாரண்யம் கடலில் இராஜாஜியுடன் அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர் கடலில் உப்பை எடுக்க, அவர்களுக்கு ஆறு மாத சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.

 

கணவர் முருகப் படையாட்சி, மகன் ஜெயவீரன் ஆகியோரோடு சிறை வாழ்க்கையை வாழ்ந்தார் அஞ்சலை அம்மாள். இறுதியில் 1931 மார்ச் 5-ல் இந்திய வைஸ்ராய்க்கும், காந்தியடிகளுக்கும் இடையே ஏற்பட்ட காந்தி இர்வின் ஒப்பந்தம் காரணமாக உப்புச் சத்தியா கிரகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தமிழகத்தில் நடந்த உப்புச் சத்தியாகிரகம், தண்டி யாத்திரைக்கு அடுத்தபடியான பெருமையை பெற்றதற்காக மகாத்மா அகமகிழ்ந்து போனார். அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து யங் இந்தியாவில் கடிதம் எழுதினார்.

 

காங்கிரஸ் வளர்ச்சிக்காக அஞ்சலை அம்மாள் அரும்பாடு பட்டுள்ளார். கடலூரில் எப்போதும் அவரது இல்லத்தில் தொண்டர்கள் கூட்டம் நிரம்பி இருக்குமாம். வீட்டையே அடகு வைத்து கட்சிப் பணிக்கு செலவிட்டிருக்கிறார். அதிகமான கடன் காரணமாக வீடு ஏலத்திற்கு வந்த போது நல்ல உள்ளம் கொண்ட அவருடைய உறவினர்கள் வீட்டை மீட்டுத் தந்துள்ளனர்.

 

1933-ல் மறியல் போரில் ஈடுபட்டு மூன்று மாதம் சிறைத் தண்டனை பெற்றார். 1940-ல் தனி நபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு ஆறு மாதமும், 1941-ல் 18 மாதமும், 1943-ல் ஒன்பது மாதமும் கடுஞ்சிறை வாசம் பெற்று இருக்கிறார். சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, பெல்லாரி ஆகிய சிறைகளில் சுமார் ஐந்து வருட சிறை வாழ்க்கையை அனுபவித்தார் அஞ்சலை அம்மாள்.

 

உழவு மற்றும் நெசவு தொழில்களை முன்னோர்கள் செய்து வந்தாலும் அஞ்சலை அம்மாள் நெசவுத் தொழிலையே பிரதானமாக செய்து வந்துள்ளார். 1932-ம் ஆண்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்ட போது முருகப் படையாட்சி மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரது தொழில் நெசவு என்று சிறைப் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அஞ்சலை அம்மாளும், கணவர் முருகப் படையாட்சியும் சென்னை சைதாப்பேட்டையில் தறிநெசவு செய்து, நீண்ட நாள் கட்சிப் பணியாற்றி வந்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி நிதிக்காக கதர்த் துணிகளை சுமந்து கொண்டு தந்தை பெரியாரோடு சென்று சென்னை நகர வீதிகளில் விற்றுள்ளார்கள். கட்சி அறிவித்த அனைத்து போராட்டங்களிலும் கலந்து கொண்ட பெருமை அஞ்சலை அம்மாளுக்கு உண்டு.

 

1926-ம் ஆண்டு பிரிட்டீஷ் ஆட்சிக் காலத்தில் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946-ம் ஆண்டு கடலூர் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1950-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்த பின் நடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய அஞ்சலை அம்மாள் ஏழை எளிய மக்களின் மேம்பாட்டிற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுத்தார்.

 

எண்ணற்ற பெரும் பணிகளை செய்த அஞ்சலை அம்மாள் வாழ்நாள் முழுவதும் நாட்டுப்பற்று, மக்கள் பற்று என்பதிலேயே கண்ணும், கருத்துமாக பணியாற்றி வந்துள்ளார். ஒரு கையில் குழந்தையுடனும், மற்றொரு கையில் காங்கிரஸ் இயக்க கொடியுடனும் போராட்ட களத்துக்கு வந்த அஞ்சலை அம்மாளை ஆங்கிலேய அரசு கண்மூடித்தனமாக தாக்கியது. தாக்குதல் நடந்த போது பெற்ற குழந்தை கை நழுவியதே தவிர, கையில் இருந்த தேசக் கொடியை இறுதி வரை கைவிடவே இல்லை.

 

மனதில் காந்தியப் பற்றும், நெஞ்சில் நாட்டுப்பற்றும் கொண்டு வாழ்ந்த வீரத் தாயான தெய்வத்திருமகள் அஞ்சலை அம்மாள் 20.02.1961-ல் அமரத்துவம் எய்தினார். காந்தியடிகளின் மரணத்துக்கு பின்பு மிகவும் உடல் நலிவுற்று வாழ்ந்து வந்த அன்னையர் திலகம் அஞ்சலை அம்மாள் இறுதி மூச்சிலும் தேசத்தையும் தேசத் தந்தையையும் உச்சரித்தே இப்பூமியிலிருந்து விடை பெற்றார்.

 

 

சமுதாய பெருந்தலைவர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் தலைமையின் கீழ் நடந்த அஞ்சலை அம்மாளின் இறுதி ஊர்வலம் கடலூரிலிருந்து 45 மைல் அருகிலுள்ள சி.முட்லூரில் நிறைவடைந்து புனித உடல் அங்கு அடக்கம் செய்யப்பட்டது. பெரும் அரசியல் தலைவர்களும், சாதி, மதம், மொழி கடந்த நல்லோர்களின் ஜனத்திரளும் கலந்து கொண்டு கண்ணீர்த் துளிகளால் அஞ்சலை அம்மாளுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

 

அன்னையர் திலகம் அஞ்சலை அம்மாளின் வீரத் தியாகம் செறிந்த வாழ்வை தமிழக அரசு சமச்சீர் கல்வியின் மூலம் எட்டாம் வகுப்பு, இரண்டாம் பருவத்தில் பாடமாக வைத்து சிறப்பு செய்துள்ளது.

 

தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அன்னையர் திலகம் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு சிலையும், மணிமண்டபமும், அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்டவும் நடவடிக்கை எடுத்து அன்னைக்கு பெருமை சேர்ப்பார் என்று வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவராகிய நானும், பெருங்கொண்ட சமுதாயமான வன்னியர் சமுதாயமும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

 

இனி வன்னிய சமூக மக்கள் நம் குல வீரத்தாயான அஞ்சலை அம்மாளின் புகழுக்கு புகழ் சேர்க்கும் வண்ணம் அவரது நினைவை போற்றுவோம் என சபதமேற்க வேண்டும் என்று உரிமையுடன் வேண்டுகிறேன்.

 

அஞ்சலை அம்மாளின் புகழ் ஓங்கட்டும்!

 

தாயின் ஆசியால் தரணியை ஆள வன்னிய மக்கள் படை திரளட்டும்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

தென்னாட்டு ஜான்சிராணி!

 

1918-ம் ஆண்டு மகாத்மா காந்தி கடலூருக்கு வந்த போது, அவரை யாரும் சந்திக்கக்கூடாது என்று வெள்ளையர்கள் தடை உத்தரவு பிறப்பித்து இருந்தனர். வெள்ளையர்களின் தடையை மீறி மகாத்மாவை சந்திக்க முயன்றவர்களை அடித்து, உதைத்து சிறையில் தள்ளினார்கள். ஆனால் அஞ்சலை அம்மாள் துணிந்து சென்று அவரை சந்திக்கும் முடிவில் இருந்தார்.

 

வெள்ளையர்களிடம் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக பர்தா உடையை அணிந்து கொண்டு ரெயிலில் ஏறி காந்தியடிகளை சந்தித்து பேசினார். மகாத்மாவை முதுநகரின் பாரம்பரிய வண்டியான குதிரை வண்டியில் ஏற்றி சுண்ணாம்புக்காரத் தெருவில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். பின்னர் மகாத்மாவை ரெயில் நிலையத்துக்கு அழைத்துச் சென்று ரெயிலில் ஏற்றிய பின்னர் பர்தா உடைகளை களைந்து கைதானார்.

 

 

காந்தியார் அஞ்சலை அம்மாளை சந்தித்த போது மகளை ஆசிர்வதிக்க சொல்ல,  ஆசீர்வதித்து முத்தமிட்ட காந்தி அடுத்தாக ஒரு ஆண் குழந்தை பிறப்பான் என்றார். அப்படி பிறந்தால் நிச்சயம் உங்கள் பெயரையே அவனுக்கு பெயராக சூட்டுவேன் என்று பேசி திரும்பி வந்து கைதானார்.

 

அஞ்சலை அம்மாளின் தீரத்தையும், உறுதியையும் கண்ட மகாத்மா இவள்தான் தென்னாட்டு ஜான்சிராணி என்று வாயார வாழ்த்தி பெருமைமிகு பெயரை உச்சரித்து ஆசீர்வதித்து அனுப்பி உள்ளார். அதை உண்மையென்று போராட்டத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நிரூபித்துக் காட்டினார் அஞ்சலை அம்மாள்.

 

காந்தியடிகளுக்கு தெரிந்த தீரமும், தியாகமும் இன்றைய அரசுகளுக்கு மட்டுமல்ல சுதந்திரத்தைப் பற்றி வாய் கிழிய பேசிய காங்கிரசுக்கும் தெரியாமல் போனதுதான் வன்னிய சமூகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி, பெண் இனத்திற்கு கொடுக்கப்பட்ட சாபம்.

 

 

தமிழகத்தின் தன்னிகரற்ற முதல்வர் டாக்டர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அன்னையர் திலகம் அஞ்சலை அம்மாள் அவர்களுக்கு சிலையும், மணிமண்டபமும், அவர் வாழ்ந்த தெருவிற்கு அவரது பெயரை சூட்டவும் நடவடிக்கை எடுத்து அன்னைக்கு பெருமை சேர்ப்பார் என்று வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் நிறுவனத் தலைவராகிய நானும், பெருங்கொண்ட சமுதாயமான வன்னியர் சமுதாயமும் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தாயைப் போல பிள்ளை!

 

 

அஞ்சலை அம்மாள் தன்னுடை போராட்ட களத்திற்கு மட்டுமல்ல, சிறைச்சாலைக்கும் அனுப்பி வைத்த பெருமைக்குரிய மகள் லீலாவதியை காந்தியடிகள் வளர்த்து ஆளாக்கி அனுப்பியது ஒருபுறம். தமிழகம் வந்த பின்பு தாய் தந்தையரை காண அவ்வப்போது சிறைச்சாலைக்கு சென்று வருவது உண்டு. அப்போது ஜமதக்னியை சந்திப்பது வழக்கமானது. அதுவே நட்பாகி பின்பு காதலாகி, திருமணத்தில் முடிந்தது.

 

ஒரு போராளியை தேர்ந்தெடுத்து திருமணம் செய்ததன் மூலம் தாயைப் போல பிள்ளை என்றும்; புலிக்குப் பிறந்தது பூனையாகுமா? என்றும் ஊரார் பேசும் அளவுக்கு செயல்பட்டவர் லீலாவதி.

 

பன்மொழிப் புலவர் ஜமதக்னி செல்வந்தராக வாழ்ந்தவர். தொடக்க காலத்தில் தமிழக அளவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தீவிரமாக பணியாற்றியவர்களில் இவரும் ஒருவர். சிறையிலிருந்த காலத்தில் சிறைச் சாலையிலுள்ள சக தோழர்களுக்கு மார்க்சீய வகுப்பெடுத்தவர்.

 

காதலித்த ஜமதக்னியும், லீலாவதியும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தான் திருமணம் செய்து கொள்வதாக முடிவெடுத்து அவ்வாறே நடந்தும் கொண்டனர். திருமணத்தின் போது தாலிக்கு பதிலாக கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமான அரிவாள் – சுத்தியல் போட்ட தங்கத்தால் ஆன தாலியை அணிவித்தார் ஜமதக்னி. இவர்களின் மகள் சாந்தியின் கணவர் நாகநாதன் தமிழக அரசின் திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

மறைக்கப்பட்ட தியாகச் சுடர்கள்!

 

கடலூரில் உள்ள நகராட்சி பூங்காவில் தியாகிகள் நூற்றாண்டு நினைவு தூண் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் தியாகச் சுடர்களாக விளங்கிய தியாகிகள் பெயரை கல்வெட்டில் பொறிக்கப்பட்டு வைக்கப்பட்டது. 1919-ல் இருந்து பாரத தேச விடுதலைக்காக சிறை சென்றதும், காவல்துறையினரின் அடக்குமுறை சட்டத்தினால் தடியடி பட்டும், புளி மிளாரினால் அடிபட்டும் சிறையிலேயே உயிர் நீத்தவர்களும், தற்காலம் இருப்பவர்களும் என 27 பெயர்கள் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.

 

அதில் அஞ்சலை அம்மாள், முருகப் படையாட்சி, ஜெயவீரன், லீலாவதி ஆகிய நான்கு பெயர்களும் இடம் பெற்றுள்ளன. அண்மையில் பூங்காவை புதுப்பித்த நகராட்சி நிர்வாகம் அக்கல்வெட்டு முழுவதையும் அலுமினிய வண்ணம் பூசி பெயர்கள் தெரியாத அளவுக்கு செய்துள்ளனர். அதற்கு அருகில் பூங்காவை புதுப்பித்தவர்களின் பெயர்கள் பளபளப்பாக ஜொலிக்கின்றன.

 

இதையும் நாம் என்ன தமிழக முதல்வர் அவர்களிடமா கோரிக்கையாக வைக்க முடியும்? உள்ளூரில் உள்ள நகராட்சியை நிர்வகிப்பவர்களுக்கே அஞ்சலை அம்மாள் உள்ளிட்ட தியாகிகளின் மதிப்பு தெரியாத போது அதற்கு மேல் இருப்பவர்களை நொந்து என்ன பயன்?

 

திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தியாகி ஜெயவீரனுக்கு அரசு உதவுமா?

 

அஞ்சலை அம்மாளுக்கு காந்தி, ஜெயவீரன் என இரண்டு மகன்களும் லீலாவதி, கரும்பு, சரஸ்வதி, கல்யாணி ஆகிய நான்கு மகள்களும் உண்டு. இக்குடும்பத்தில் தற்போது ஜெயவீரன் மட்டுமே உள்ளார். அதிலும் தியாகிகள் பட்டியலில் இடம் பெற்ற ஜெயவீரன் கடலூரில் ஒரு ஓலைக்குடிசை வீட்டில் வாழ்ந்து வருகிறார். அஞ்சலை அம்மாள் வாழ்ந்த வீடு சிதைந்ததனால் வங்கியில் கடன் பெற்று கட்டடம் கட்டினோம். அதில் வரும் வாடகையை வைத்து கடனை அடைத்து வருகிறேன் என்கிறார் ஜெயவீரன்.

 

அஞ்சலையம்மாளே தியாகிகள் ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்ள மறுத்து, நாம் செய்த தியாகத்திற்கு கூலியா? அது அவமானம் என்று சொல்ல, ஜெயவீரனும் அப்போது வேண்டாமென மறுத்து விட்டார். ஆனால் வயதாகி விட்ட இன்றைய சூழலில் அதற்காக வருந்தி, தற்போது அரசிடம் வேண்டுகோள் வைக்க கொடுக்க முடியாதென மறுத்து விட்டது நிர்வாகம். 1930-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்திற்காக சிறையிலிருந்த போது பிறந்த ஜெயவீரனுக்கும், பெற்றெடுத்த அன்னைக்கு அரசு தந்த மரியாதை இதுதான்!

 

எதற்கோ தெரியுமா கற்பூர வாசனை என்பார்களே! அது இவர்களுக்கு தான் பொருந்தும்!

 

  • ••• •

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu