@Copyright – C.N.Ramamurthy M.Com, B.L. Founder President, Vanniyar Kootamaippu.

e-Book Publication – E-edition Version – 1 – 2021

Publisher:

Kshatriyas Documentary

For Contacts:

Kshatriyas Documentary

# 7, First Main Road,

Kamdar Nagar, Nungambakkam,

Chennai – 600 034

Email – info@vanniyarkootamaippu.com

+91 9941311788

URL: www.vanniyarkootamaippu.com

 

 

இனத்தின் சாதனையாளர்

குலசேகரனார்!

 

 

எளிமையும், நேர்மையும், தன்னலமில்லா பொது வாழ்வும் மங்கிப் போய்விட்ட மந்தமான அரசியல் சூழல், பொருளாதாரம் என்ற ஒன்றையே ஆதாரமாக வைத்து அனைத்து சக்திகளும் இயங்கி வரும் இக்கால கட்டத்தில் நமது வன்னிய இனத்தில் மேற்சொன்னதுக்கும் மேலான தகுதிகளை கொண்ட ஒருவர் இன்றளவும் நமது சமூகத்தில் நம்முடன் வாழ்ந்து வருகிறார் என்பதை நம் மக்களுக்கு, குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு, நாளைய உலகின் வழிகாட்டிகளான நமது இளைய சமுதாயத்திற்கு எடுத்துச் சொல்ல வேண்டிய பொறுப்பும், கடமையும் நமக்கு இருக்கிறது என்பது என் உயர்வான எண்ணம்.

 

நம்முடன் வாழும் அந்த சமுதாய பெரியவரை நம்மின மக்களுக்கு நினைவூட்டி நம் போராட்டங்களுக்கும், அதிகார பகிர்வை எட்டிப்பிடிப்பது எப்படி என்பதற்கும் உரிய படிப்பினைகளை பெரியவரின் வரலாற்றிலிருந்து படித்துக் கொள்வதற்காகவே இச்சிறப்பு கட்டுரை. இதோ, பெரியவர் இரா. குலசேகரனாரின் வாழ்க்கை புத்தகம் திறக்கிறது.

 

பழம் பெருமை வாய்ந்த தொண்டை நாட்டில் அரசியலும், ஆன்மிகமும் செழித்து வளர்ந்து புகழ் வாய்ந்த நகரங்கள் காஞ்சிபுரம். ஸ்ரீபெரும்புதூர் ஆகியவை ஆகும். காஞ்சியில் சைவ சமயத்தை பரப்புவதில் இன்றளவும் புகழ் பெற்று விளங்க காஞ்சியில் சங்கரர், அதே போல் வைணவத்திற்கு இன்றளவும் பெயர் சொல்லி விளங்க ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர்.

 

ராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூரில் வேளாண் தொழிலில் சிறந்து விளங்கிய ராஜகோபால நாயகர் – விசாலாட்சி அம்மாள் தம்பதிகளுக்கு இரண்டாவது மகனாக 17.11.1931 அன்று பிறந்தார் நம் இனத்தின் எழுச்சிக்காகவே உழைத்து தொண்டாற்றி வரும் இரா. குலசேகரனார்.

 

 

 

இளமையிலே படிப்பிலே முனைப்பும், பண்பிலே நிறைவும், உழைப்பில் ஊக்கமும் பெற்று பள்ளிப் பருவத்தில் சிறந்த மாணவனாகவும், வீட்டுக்கு நல்ல பிள்ளையாகவும் விளங்கினார். இவை ஒரு சேர அமைந்ததற்கு காரணம் பெரியவர் குலசேகரனுக்கு கிடைத்த மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகியவைதாம். தினமும் நால்வரையும் வழிபட்டு பணி தொடங்குவதை கர்ம சிரத்தையாக செய்து வந்தார்.

 

உரமும், திறமும், தரமும் ஒருங்கே அமையப் பெற்ற இவரால் பள்ளிப் படிப்பை தொடர முடியாத அளவுக்கு வறுமை விரட்டியது. குடும்ப நிலையும், சூழலும் பத்தாவது வகுப்போடு பள்ளிப் படிப்பை முடித்துக் கொள்ள சொன்னது.

 

 

சுதந்திர தாகம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்த உச்சகட்ட காலம் 1947-ல் தனது பத்தாவது வகுப்பு பள்ளிப் படிப்பை முடித்த குலசேகரனார், பல நூறு ஆண்டுகளாக வெள்ளையரிடம் அடிமையாக இருந்ததால் தேசத்தின் வறுமையையும், வெறுமையையும் கண்டு துடிதுடித்துப் போனார். மக்கள் இல்லாமையால் விரக்திக்கு தள்ளப்பட்ட நேரம், படிப்பு முடித்து வெளி வந்த சிறிது நாளில் இந்தியா சுதந்திரம் பெற்றது.

 

இந்தியா தனிப்பட்ட சில தலைவர்களின் பணக்காரர்களின் சொத்தாக மாறிவிடக்கூடாது என்பதில் உறுதி பூண்டிருந்த ராம் மனோகர் லோகியா போன்றவர்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு கொண்டிருந்தார்கள். இதில் லோகியா, ஜெயபிரகாஷ் நாராயண் போன்றோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே சோசலிஸ்ட் கட்சியில் உறுப்பினராக சேர்ந்து தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

 

கீழ்த்தட்டு மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த தன்னை பெரிதும் வருத்திக் கொண்ட குலசேகரனார், தான் ஏழ்மையில் உழன்றாலும், பொது வாழ்க்கையை நேர்மையாகவும் உயர்ந்த நெறிமுறைகளையும் கொண்டதாக பாதையை வகுத்துக் கொண்டு அதில் புடம் போட்ட தங்கமாய் ஜொலித்தார் என்றால் அது மிகையானதல்ல.

 

இளமைத் துடிப்பும், உறுதியான கொள்கைப் பிடிப்பும் எந்த நிலையிலும் தளராத மன உறுதியும் கொண்டவராக தொடக்க காலத்திலேயே வாழ்ந்ததால் தான் பிற்காலத்திலே ஒரு இயக்கம் கண்ட தலைவராக உருவானார். எளியவராகவும், பழகுவதற்கு இனியவராகவும், மக்களை மதித்து தொண்டர்களை அரவணைத்துச் செல்லும் உகந்த தோழராகவும், சுயநலம் இல்லாத, காணாத தூய பொது நலச் சேவை செய்பவராகவும் விளங்கியதால் அனைவரையும் எளிதில் கவர்ந்தார்.

 

 

சோசலிஸ்ட் கட்சியில் படிப்படியாக உயர்ந்து 1952-ல் ஸ்ரீபெரும்பதூர் தொகுதியின் செயலாளராக பொறுப்பேற்றார். இந்த காலகட்டத்தில் அவர் மக்களுக்காக பல போராட்டங்களை தலைமையேற்று நடத்தி பெரும் வெற்றி கண்டார்.

 

1948 முதல் 1958 வரை சுமார் பத்தாண்டு காலம் சோசலிஸ்ட் கொள்கை கோட்பாட்டின் வழி நடந்த குலசேகரனார், இக்காலகட்டத்தில் வரலாற்று சிறப்பு மிகு போராட்டங்கள், ஊர்வலங்கள், சிறைவாசங்கள் ஆகியவற்றில் பங்கேற்று அவருடைய வரலாற்றில் இடம் பெற்ற வீர அத்தியாயங்களாக அவற்றை  உருவாக்கி இடம் பெற செய்தார். பலரது அரசியல் வாழ்வுக்கு முன்னோடியாக திகழ்ந்தார்.

 

 

குலசேகரனாரின் நாட்டு நலன், சமுதாய நலன், பொது நலன் ஆகியவற்றிற்கு பல்வேறு பணிகளை உதாரணமாக கூறலாம். நாட்டு நலன் தழைத்தோங்கி இருந்த 1948  முதல் 1958 வரையிலான காலத்தில் எவ்வித கலப்புமில்லாமல் சுயம்புவாய் மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வந்தார். அதில் குறிப்பாக விவசாயத்தை தொழிலாக கருதும் மக்களே நாட்டில் அதிகம் என்பதால் விவசாய பிரச்சனைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து வந்தார்.

 

1953 ஆம் ஆண்டு இவர் நடத்திய செங்கை மாவட்ட விவசாயத் தொழிலாளர் மாநாடு தமிழகத்தில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. தொழிலாளர்கள் என்றாலே கம்யூனிஸ்டுகள் தான் என்ற எண்ணமே தமிழகம் முழுவதும் பரவி இருந்த காலம். அதை முறியடித்து கம்யூனிஸ்டுகள் அல்லாத விவசாய சங்கத்தினை நிறுவிய பெருமை பெரியவர் குலசேகரனாரையே சாரும்.

 

விவசாய சங்கத்தினை நிறுவியதோடு மட்டுமல்லாமல் அதன் மூலம் விவசாயத் தொழிலாளரின் உரிமைகள் பலவும் கிடைத்திட அரும்பாடு பட்டார். விவசாயத் தொழிலாளரின் உண்மையான பிரதிநிதித்துவ அமைப்பாக அனைத்திந்திய அளவில் சங்கம் ஒன்று ஏற்பட, தமது செயல் திறன் மூலம் அடிக்கல் நாட்டினார்.

 

 

அது 1954 ஆம் வருடம்.

 

செங்கற்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில் செய்யூர் பகுதியில் பரசநல்லூர் ஏரி ஒன்று உள்ளது. அதன் பாசனத்தை நம்பி அந்த ஏரியின் கீழ் அணைக்கட்டு கிராமம் உள்பட பன்னிரெண்டு கிராமங்கள் உள்ளன. இந்த 12 கிராமங்களிலும் விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் இல்லை.

 

பல்லவர் ஆட்சிக் காலத்தில் பாலாற்றில் கல்லணை கட்டப்பட்டு சுமார் 5 கி.மீ. தூரம் வாய்க்கால் வழியாக பரசநல்லூர் ஏரியை நிரப்பச் செய்து 12 கிராம விவசாய மக்களும் நல்ல முறையில் விவசாயம் செய்து வந்தனர்.

 

வாய்க்கால் செல்லும் வழியில் கங்காடு என்ற கிராமத்தில் ஒரு பெரிய மிராசுதார் வேதாசல முதலியார் என்பவர் இருந்தார். அவர் சுமார் நூறு ஏக்கர் நிலத்தில் டீசல் பம்ப் செட் பயன்படுத்தி ஏரி நீரை தனது நிலங்களுக்கு எடுத்ததால் மற்ற விவசாயிகளுக்க பெரும் பின்னடைவு ஏற்பட்டு வறுமைக்கு ஆளாகினர்.

 

 

12 கிராம மக்களும் ஒன்று திரண்டு இதற்கு ஒரே தீர்வு குலசேகரனார் அவர்களைச் சந்தித்து விவரத்தை சொல்லி போராடுவதுதான் என்று முடிவெடுத்தனர். அதன்படி மிராசுதாரரின் அடாவடி பற்றி முதலில் எழுத்து மூலம் உரியவர்களுக்கு புகார்களை அனுப்பினார் குலசேகரனார். புகார்கள் அனைத்தும் செல்லாக் காசுகளாயின.

 

அமைதியான கோரிக்கைகள் ஆட்சியாளர் முன் எடுபடாது. எனவே கிளர்ச்சியில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை என்று குலசேகரனார் கூறியதை ஆமோதித்தனர், 12 கிராம மக்களும். உடனடியாக ஜமீன்தாரின் அடாவடி போக்கை நிறுத்த வேண்டும் அல்லது தொகுதி விவசாயிகள் அனைவரும் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று தேதி குறித்து எச்சரிக்கை விடப்பட்டது.

 

அதற்கும் அசையாத ஜமீன்தாரின் அலட்சிய போக்கால், விவசாயிகள் இயந்திரங்களை அப்புறப்படுத்துவோம். வாய்க்கால் நீரை வழக்கம் போல் ஏரிக்குத் திருப்புவோம் என்ற முழக்கத்தோடு தலைவர் குலசேகரனாருடன் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். போலீசார் ஊர்வலத்தை தடுத்தனர். ஒரு கட்டத்தில் ஊர்வலத்தில் புகுந்து தாக்கத் தொடங்கினர். ஊர்வலப் பாதையெங்கும் குருதிக் காடாயிற்று. தலைவர் குலசேகரன் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

 

 

போராட்டத்தில் ஈடுபட்ட தலைவர் குலசேகரனாரை மதுராந்தகம் வெஞ்சிறையில் 45 நாட்கள் கடுங்காவலில் வைத்தார்கள். அப்போது அவருக்கு வயது 23. ஜெயிலிலிருந்து குலசேகரனாரை விடுவிக்க மாநில சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.விநாயகம் அவர்களது உதவியை நாடினர். அன்றைய முதல்வராக இருந்த காமராஜரின் அமைச்சரவையில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த மாணிக்கவேலு நாயகரிடம் விநாயகம் குலசேகரனாரின் சிறையிலடைப்பையும், போராட்ட காரணத்தையும் விளக்கி உதவிட வேண்டினார்.

 

மாணிக்க வேலனாரின் உதவியால் குலசேகரனாருக்கு ஜாமீன் கிட்டியது. சரியாக மூன்றாண்டுகள் கழித்து இந்த வழக்கை அரசாங்கம் திரும்பப் பெற்றது. இதன் மூலம் ஜமீன்தார் கொட்டம் அடங்கியது. ஆனால், குலசேகரனாரின் போராட்ட வாழ்வு மட்டும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

 

எந்த நேரமும் குடும்பத்தை மறந்து பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதால் ராஜகோபால் நாயகரும், விசாலாட்சி அம்மையாரும் தங்களது புதல்வனுக்கு ஒரு கால்கட்டு போட நினைத்தார்கள். மகனின் பொது வாழ்வுக்கு குந்தகமில்லாமல், அதே சமயம் குடும்பத்தை கோயிலாக மாற்றி சிறப்புற குடும்பம் நடத்தும் ஒரு பொறுப்புள்ள மருமகளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

 

 

 

மரபு வழிபட்ட பாரம்பரிய குடும்பத்தில் கட்டுப்பாடாக வளர்ந்த துர்க்கம்மாள் குலசேகரனுக்கு வாழ்க்கைத் துணைவியாக வந்தமைந்தார்கள். பெரியவர்கள் ஒப்புதலுடன் 1955 ஆம் ஆண்டு குலசேகரனாரின் திருமண வைபவம் நடந்தேறியது.

 

குலசேகரனார் விரும்பி இருந்தால் தமது இளம் மனைவியுடன் சந்தோஷமாக வாழ்வின் பொழுதை கழித்திருக்க முடியும். ஆனால்  அவர் அப்படி செய்யவில்லை. இல்லறத்தை சிற்றின்பமாகவும், பொதுநலத்தை பேரின்பமாகவும் ஏற்றுக் கொண்டு, தனது வாழ்க்கையை அரசியலுடன் தொடர்ந்து வந்தார். பாதிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்து காரியங்களை சாதித்து கொடுப்பதை தொடர்ந்து செய்து வந்தார்.

 

 

ஒரு சமயம் அரசியல் கைதியாக சென்னை மத்திய சிறையில் இருந்த போது திருமதி. துர்க்கம்மாள் தனது முதல் பெண் குழந்தையைப் பெற்றெடுத்துக் கொண்டு சிறையில் இருக்கும் கணவரிடம் காட்டுவதற்கு வந்தார். சிறையில் ஒரு பொதுநல இயக்கத்தின் தொண்டராக, தலைவராக இருந்தாலும் கூட குழந்தையின் கள்ளமிலா பொக்கை வாய் சிரிப்பைக் கண்டு உள்ளம் பூரித்துப் போனார் குலசேகரனார். தனது வாழ்க்கையில் இதுபோல் எண்ணிலடங்கா சிறை வாழ்க்கையை அனுபவித்தும் எதையும் தம்பட்டம் அடிக்காமல் அதை தனது கடமையென கருதிய தன்னலமற்ற தலைவர் அவர்.

 

சோசலிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர் ராம் மனோகர் லோகியா காலமான பிறகு அரசியலே வேண்டாம் என சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். எனினும் பிறர்க்கு உழைப்பதில் இன்பம் காணும் அவரால் பொது வாழ்க்கையை விட்டுவிட முடியவில்லை. 1958 முதல் 1960 வரையிலான கால கட்டங்களில் வறிய ஏழ்மையான நிலையில் இருந்த தொழிலாளர்களை ஒன்று திரட்டி அவர்களது உரிமைக்கு குரல் கொடுத்து அதில் வெற்றியும் பெற்றார்.

 

 

தமிழகத்தின் அரசியல் சூழல் திராவிட இயக்கத்தின் பால் மையம் கொண்டு இருந்த நேரம். தமிழகத்தின் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட பெரிய சமுதாயமான வன்னிய சமுதாயம், பொருளாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் வளர்ந்திராத நிலையை உணர்ந்த வேளை. ஏதோ ஒரு சிறு பொறி போல் பட்ட விஷயம் விசாலமான திட்டத்தை உருவாக்கியது.

 

அது 1961-ம் ஆண்டு ஜனநாயகத்தின் அனைத்து சலுகைகளையும் மற்றவர்கள் கூறு போட்டதை வன்னியர்கள் தட்டிக் கேட்க முடியாத நிலை, இயலாதவர்களாக, ஒற்றுமை இல்லாதவர்களாக இருந்த வன்னிய மக்களைத் தட்டி எழுப்பி ஒன்றுபடுத்தி  இந்த ஆண்டில்  தான் ‘வன்னியர் மன்றம்’ என்ற மாபெரும் எழுச்சிமிகு அமைப்பை உருவாக்கினார் குலசேகரனார்.

 

திசை மாறிப்போன படித்த வன்னிய இளைஞர்களை நேர்வழிக்கு திருப்பி சமுதாய பணியாற்றச் செய்து, சமுதாயத்தை தூக்கி நிறுத்தும் தூண்களாக்கி சாதனை புரிந்தார். அதன் பயனே இன்று நாடு வியக்கும் அளவிற்கு வன்னியர் சங்ககளின் பரிணாம வளர்ச்சியும் அதன் தொடர்பான அரசியல் இயக்கங்களும் எனலாம்.

 

1961 – வன்னியர் மன்றம் தொடங்கிய போதே ‘வன்னியன்’ வார இதழையும் ஆரம்பித்து சித்தாந்தத்தின் அடிப்படையில் போர்க்கொடி உயர்த்தி கோரிக்கைகளில் வெற்றி பெற சமுதாயத்திற்கு இதனையும் நல்ல முறையில் பயன்படுத்தினார்.

 

 

இதே ஆண்டிலேயே சோளிங்கநல்லூரில் தமிழ்நாடு வன்னிய மன்றத்தின் முதல் மாநாட்டை ஏற்படுத்தினார். தலைவர் குலசேகரனார் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டின் மூலம் வன்னிய மக்களிடத்தில் புதிய எழுச்சி ஏற்பட்டது. சோர்வோடும், பின்னடைவோடும் வாடிக் கிடந்த சமுதாய மக்கள் மத்தியில் இம்மாநாடு மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

 

அனைத்து மக்கள் நலனையும் கருத்தில் கொண்டு நாட்டிற்கே வழிகாட்டியாக அமைந்த விவசாய சங்கத்தினை நிறுவி நடத்திக் காட்டிய தலைவர் குலசேகரனார். சமுதாய நலனைக் காக்கவும், அவர்களின் பின்னடைவைப் போக்கவும் அதிக சிரத்தை காட்டியது இதன் மூலம் புலப்பட்டது. வன்னிய மக்கள் புத்துணர்வு பெற இம்மாநாடும் இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளும் வழி வகுத்தன.

 

 

 

1962-ல் உத்திரமேரூரில் அருகில் உள்ள பம்பையம்பட்டியில் மற்றொரு மாநாட்டினை நடத்தினார். இதுவும் வன்னிய மக்களின் எழுச்சிக்கு வழிவகுத்த சிறப்பான மாநாடாகும். இது போன்ற கிராமப்புறங்களை தேர்ந்தெடுத்து மாநாடுகளை நடத்துவது தலைவர் குலசேகரனாரின் சிறப்பம்சமாகும். மாநாடு நடத்திட நகர்ப்புறங்களில் எல்லா வசதிகளும் அமைந்திருக்க, அவற்றின் ஆரவாரங்களுக்கிடையே மாநாட்டின் ஆரவாரமும் கலந்துவிடும். அதனால் எந்தவித ஈர்ப்பும் மாநாட்டால் ஏற்படாது.

அதற்கு மாறாக கிராமப்புறச் சூழலில் மாநாடு என்பது, எந்த மக்களின் நன்மை கருதி மாநாடு நடைபெறுகின்றதோ அந்த மக்கள் பெரும்பாலும் கிராமங்களிலேயே அதிக அளவில் வாழ்ந்து வருவதால், கிராமப்புறங்களான அவர்களது வாழ்விடங்களிலேயே மாநாடுகள் நடத்துவது நல்லதென்று காரணம் சொன்னார் தலைவர் குலசேகரனார். உண்மையில் இத்தகு மாநாடுகள் மூலம் நல்ல பலன் கிடைத்தது என்றே சொல்லலாம்.

 

வன்னியர் மன்றத்தின் எழுச்சியும், வளர்ச்சியும் பலரை பயமுறுத்தியது. குலசேகரனார் இப்படி சமுதாயப் பணியாற்றிய காலத்தில் எத்தனையோ ஏச்சுக்கள், பேச்சுக்கள், மிரட்டல்கள் வந்தன. அவர் எதற்கும் துளியும் அஞ்சாது நின்றார். எதிரிகளிடம் கெஞ்சி நிற்கவில்லை. மாறாக எல்லாவற்றையும் விஞ்சி நின்றார்.

 

 

வடமாவட்டங்களில் மட்டும் வாழும் வன்னியர்கள் என்று அரசியலில் இளக்காரமாய் பேசிய காலமது. வன்னியர் மன்றம் தான் தென் மாவட்டத்திலும் தனது காலடியை பதிக்க வைத்தது. ‘தென் மாவட்டம் என் மாவட்டம்’ என்று உரிமை கொண்டாடும் அளவுக்கு திண்டுக்கல் பகுதியில் மிக பெரும்பான்மையாக வாழ்கின்ற கிறிஸ்துவ வன்னிய மக்களிடம் நெருக்கமாக பழகி அவர்களின் வாழ்வு உயர அரும்பாடு பட்டார்.

1880 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வன்னியர் குல சத்திரிய மகா சங்கத்துடன் வன்னிய கிறிஸ்துவ பெருமக்களுக்கு எந்தவிதமான உறவும் இருந்ததில்லை. பெரியவர் குலசேகரனார் தான் வன்னிய மன்றம் மூலம் வன்னிய கிறிஸ்தவர்களையும் ஒருங்கிணைத்து செயல்பட தொடங்கினார்.

 

திண்டுக்கல் பகுதியில் பெரும்பான்மையாக வாழும் கிறிஸ்துவ வன்னியர்கள் மத்தியில் ஏறத்தாழ எல்லா சிற்றூர் மற்றும் பேரூர்களுக்கும் நேரில் சென்ற குலசேகரனார் பொதுக் கூட்டங்கள் நடத்தி இன உணர்வினையும்  மத ஒற்றுமையையும் வலியுறுத்தி ஓரணியில் திரள செய்தார். இதற்காக புனித நடைபயணமும், சுமார் நூறு பொதுக் கூட்டங்களையும் நடத்திக் காட்டினார். எங்கு பார்த்தாலும் மேலே பச்சை, கீழே சிகப்பு மூன்று பங்கு அகலம் உள்ள மன்ற கொடிகள் தான்.

 

 

வன்னிய கிறிஸ்தவர்களும் இந்த மண்ணின் மைந்தர்களே. எங்களின் சொந்தபந்தங்களே என ரத்த பாசத்துடன் உணர்வு பொங்க அறை கூவல் விடுத்தவர், இந்து வன்னியர்களுக்கு கிடைக்கின்ற அனைத்து சலுகைகளும் கிறிஸ்துவ வன்னிய மக்களுக்கு கிடைத்தே ஆக வேண்டுமென்று வாய்ப்பு கிடைத்த மாநாடுகள், பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் அனைத்திலும் போர்க்குரல் எழுப்பினார். அன்றைய முதல்வர் பக்தவத்சலத்திடம் நமது வன்னிய சமுதாய காவலர் இராமசாமி படையாட்சி வாயிலாக கிறிஸ்துவ வன்னியர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை பட்டியலிட்டு நேரில் அறிக்கை ஒன்றை கொடுத்தார்.

 

1961-ம் ஆண்டில் சென்னை நுங்கம்பாக்கம் வன்னியர் சத்திரத்தில் சமுதாய காவலர் இராமசாமி படையாட்சியார் தலைமையில் உருவான தமிழ்நாடு வன்னியர் மன்றம் துவக்கிய மூன்று ஆண்டுகளில் அதை ஒரு பெரிய அரசியல் இயக்கமாய் வளரச் செய்தவர் குலசேகரனார் தான் என்பது மிகையல்ல. ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆயிரக்கணக்கில் இளைஞர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் என பல்வேறு தரப்பினரும் பங்கு பெற்றனர். குறிப்பாக அன்றைய வடஆற்காடு மாவட்டம் மன்றத்தின் வலிமை மிகுந்த கோட்டையாயிற்று.

இந்தக் காலகட்டத்தில் வன்னிய இளைஞர் மாநாடு வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில் வன்னியர் மத்தியில் இருந்த அனைத்து இயக்கங்களும் கலந்து கொண்டன. அனைத்து அமைப்புகளும் ஒற்றுமையாக செயல்பட அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்காக சென்னை இராயபுரத்தில் ராஜரத்தின நாயகருக்கு சொந்தமான கட்டிடத்தில் வன்னிய தலைவர்களும், வன்னிய அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்ட ஒரு சிறப்பு கூட்டம் நடைபெற்றது.

 

கூட்டத்தில் சங்கம் மட்டும் போதாது. கட்சி துவங்க வேண்டுமென்று கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. கட்சி வேண்டுமென்றும், கட்சி உருவானால் தான் வன்னியர்களுக்கு உபயோகமாக செயல்பட முடியுமென்றும் குலசேகரனார், ஜெயச்சந்திரன், கே.ஆர். சம்பந்தம், வழக்கறிஞர் மார்கபந்து, ராஜரத்தினம் நாயகர் ஆகியோருடன் படையாட்சியாரும் பேசினார்கள்.

 

வந்திருந்த அனைவருக்கும் வாக்கு சீட்டுக்கள் கொடுக்கப்பட்டு அவரவர் கருத்தை ஆமோதித்தும், எதிர்த்தும் தெரிவித்து வாக்கு பெட்டியில் போட சொன்னார்க்ள. மொத்த வாக்குகளில் கட்சி வேண்டும் என்று சுமார் 15 வாக்குகள் அதிகமாக இருந்ததால் கட்சி தொடங்க ஆயத்தமாயினர். முடிவில் இராமசாமி படையாட்சியார் ஆரம்பித்த உழைப்பாளர் கட்சி, மாணிக்க வேலு நாயகர் உண்டாக்கிய பொது நல கட்சி என்ற இரண்டையும் உள்ளடக்கி உழைப்பாளர் பொது நல கட்சி என பெயர் சூட்டப்பட்டது.

 

உழைப்பாளர் பொதுநலக் கட்சியில் முழு மூச்சாக குலசேகரனார் செயல்பட்டாலும், சென்னை வன்னியகுல சத்திரிய மகா சங்கத்தின் வெளியூர் செயலாளராகவும் பொறுப்பேற்றுக் கொண்டு செயல்பட்டார். கட்சி என்றும், சங்கம் என்றும் இரு பிரிவுகளாக பிரிந்த பின்னர் காஞ்சிபுரத்தில் வன்னியர் மாநாடு நடைபெற்றது. மன்றத்தில் இருந்த அனைவரும் கலந்து கொண்டனர். மாநாட்டில் வன்னியர் மன்றம் கலைக்கப்பட்டு உழைப்பாளர் கட்சியில் சேர்ந்து விட தீர்மானித்த தீர்மானத்தை பலர் வற்புறுத்தியும் கொண்டு வர முடியவில்லை. உழைப்பாளர் பொது நலக் கட்சியில் இருந்து குலசேகரனாரும், மார்கபந்துவும் வெளியேறினர்.

 

 

மார்கபந்து தலைவராகவும், குலசேகரனார் பொதுச் செயலாளராகவும் கொண்டு உழைப்பாளர் முன்னேற்ற கட்சி துவக்கப்பட்டது. தி.மு.க. அமைச்சரைவில் வீற்றிருந்த அன்பில் தர்மலிங்கம், மதுரை முத்து, வேழவேந்தன் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு நாடே அல்லோலகப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், எங்கள் சமுதாயத்திற்கு வேழவேந்தன் போன்றவர்கள் வேண்டாம் என்றும் சி.பி. அண்ணாமலை போன்றவர்களை அமைச்சராக வேண்டும் என்றும் பொதுநலத்துடன் அறைகூவல் விடுத்தார் குலசேகரனார். சி.பி. அண்ணாமலையும் அமைச்சரானார்.

 

இந்த சூழலில்தான் உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி உதயமானது. சிறிய கால இடைவெளியில் மக்களின் அபிமானம் பெற்ற புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். தி.மு.க.விலிருந்து வெளியேற்றப்பட்டதால் அண்ணா தி.மு.க.வை உருவாக்கி இருந்தார். கட்சி தொடங்கிய சில காலத்திலேயே திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் வந்தது தனது வேட்பாளரான மாயத்தேவரை வெற்றிப்பெறச் செய்து தீர வேண்டிய கட்டாயம்.

 

கோடம்பாக்கம் ரயில்வே பாலத்துக்கு அடியில் வைகை அச்சகத்தை நடத்திக் கொண்டு அருகே ஒரு வாடகை வீட்டில் குலசேகரனார் குடியிருந்த நேரம். அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளரான எம்.ஜி.ஆர். அவர்களிடமிருந்து உடனே வந்து தன்னை சந்திக்குமாறு தந்தி வந்து சேர, குலசேகரனார். எம்.ஜி.ஆர். சந்திப்பு நிகழ்ந்தது.

 

திண்டுக்கல் இடைத்தேர்தலில் களமிறங்கினார் குலசேகரனார். கடும் உழைப்பை தந்தார். பல ஆண்டுகளாக பழக்கமாகிப் போன தமது மக்கள் வசிக்கும் குக்கிராமங்கள் வரை நேரில் சென்று சந்தித்து மாயத்தேவருக்கு ஆதரவு திரட்டினார். மாயத்தேவர் எம்.பி. ஆனார். அ.தி.மு.க.வின் வெற்றி அகில இந்தியாவையும் அண்ணாந்து பார்க்க வைத்தது. தமிழகமோ நிமிர்ந்து எழுந்தது.

 

திண்டுக்கல் இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு பங்களித்த கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி, புரட்சி பார்வர்டு பிளாக், ராஜாஜி சுதந்திரா கட்சி, தமிழ்நாடு முஸ்லீம் லீக் ஆகியவற்றின் தலைவர்கள் சந்திப்பை ஏற்படுத்தினார் எம்.ஜி.ஆர்.

 

தேர்தலுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அவர்களின் ஆற்காடு முதலி தெரு அலுவலகத்தில் இருந்த ஏழு கட்சிகளும் கூட்டணி அமைப்பது குறித்து பேச கலந்தாய்வுக் கூட்டத்தை ஏற்பாடு செய்து இருந்தார் எம்.ஜி.ஆர். அக்கட்சியின் தலைவர்கள் அனைவரும் கூட்டத்திற்கு வருகை தந்தனர். நடைபெறவுள்ள கூட்டணி கட்சியினரின் கூட்டத்துக்கு யார் தலைமை ஏற்பது என ஆலோசனை நடத்தப்பட்டது. சிலரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது.

 

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திடீரென்று இக்கூட்டத்திற்கு இரா. குலசேகரன் அவர்களை தலைமை தாங்கிட நான் முன் மொழிகிறேன் எனக் கூறினார். பார்வர்ட் பிளாக் தலைவர் ஆண்டித்தேவர். அதனை வழிமொழிந்தார். உழைப்பாளர் முன்னேற்றக் கட்சியின் தலைவர் இரா. குலசேகரன் அவர்கள் தலைமையில் ஏழு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது. கூட்டணியும் உருவாக்கப்பட்டது. 1977-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக் கட்டிலில் அமரும் வரை நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டங்களுக்கும் குலசேகரனாரே தலைமை வகித்து வந்தார்.

 

1977-ல் நடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டு 200 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். இக்கட்சியின் சார்பில் அணைக்கட்டு தொகுதியில் வழக்கறிஞர் மார்கபந்துவும், பெரணமல்லூர் தொகுதியில் சந்திரனும் வெற்றி பெற்றனர். இருவரும் ஒரு கட்டத்தில் அ.தி.மு.க.விலேயே ஐக்கியமாகிப் போனார்கள். ஆனால், எம்.ஜி.ஆரின் அபிமானத்தை பயன்படுத்தி கிறிஸ்தவ வன்னியர்களையும் அரசின் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தார்.

 

தான் உருவாக்கி வளர்த்த உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி தனக்கு பயன்படா விட்டாலும், அது சிலருக்கு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு பயன்பட்டதே என்று ஆறுதல் கொண்டார். அக்கட்சியே தனக்கெதிராக செயல்பட்டதால் அதிலிருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. 1978-ல் விவசாயிகள் – தொழிலாளர்கள் கட்சியை துவக்கினார் குலசேகரனார்.

 

1979-ல் கட்டடத் தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக துவங்கப்பட்டது தான் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம். ஏறத்தாழ  பதினைந்து ஆண்டு காலம் பகல், இரவு பாராது தமிழகத்தின் பட்டி, தொட்டியெங்கும் பயணம் செய்து பாமர மக்களை ஒன்று சேர்த்து சங்கத்தை வளர்த்து ஆலமரம் போல் உருவாக்கினார் இதன் நிறுவனத் தலைவர் குலசேகரனார்.

 

 

இந்த உழைப்பு தான் பின்னாளில் இந்தியா முழுவதும் எதிரொலித்தது. அது கூலித் தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்புக்கான விடிவாய் விடிந்தது. தொழிலாளர் அமைப்போடு அரசியல் கட்சியும் இருந்ததால் தான் எதிர்காலத்திற்கு நல்லது என்று உணர்ந்து ‘விவசாயத் தொழிலாளர்’ என்று உணர்ந்து ‘விவசாயத் தொழிலாளர் கட்சி’ என்ற இயக்கத்தையும் உருவாக்கினார்.

 

கட்டிடத் தொழிலாளர்களுக்காக ஸ்ரீபெரும்புதூரில் ஐ.டி.ஐ. என்ற தொழிற்பயிற்சி நிறுவனத்தை அப்போதைய ஆந்திர மாநில தொழில் அமைச்சரைக் கொண்டு திறப்பு விழா செய்தார். கட்டிடத் தொழிலாளர் சங்கத்தின் வெற்றிகரமான செயல்பாடுகளுக்கு அமைப்பின் பொதுச் செயலாளராக இருந்த பொன். குமாரும் ஒரு காரணம்.

 

1976-ம் ஆண்டு வன்னிய மக்களுக்கு கல்வி, உத்தியோகத் துறைகளில் 20 சதவீத இடம் ஒதுக்கிட வேண்டி அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி அவர்களை சந்தித்து மகஜர் அளித்தார். இப்படி ஒரு தூதுக்குழு அமைத்து புதுடில்லி சென்று சந்தித்த முதல் இயக்கம் தமிழ்நாடு வன்னியர் மன்றம் என்பது பெருமைப் படத் தக்கதாகும்.

 

எம்.ஜி.ஆர். அவர்களோடு குலசேகரனார் நெருக்கமானவராக இருந்தாலும் கட்டுமானப் பணியாளர்களுக்கான அமைப்பை தொடங்கி அதற்காக கோரிக்கைளை வலியுறுத்திய போது அதனை உடனடியாக ஏற்றுக் கொள்ளக்கூடிய நிலையில் எம்.ஜி.ஆர். இல்லை. இது குலசேகரனாருக்கு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தியது. நண்பர் எம்.ஜி,ஆர். அவர்களா? தொழிலாளர் தோழர்களா? என்ற நிலை வந்த போது அவர் தொழிலாளர் பக்கமே நின்றார், வென்றார்.

 

1984-ல் கட்டிடத் தொழிலாளர்கள் மாநாட்டை பெரியார் திடலில் நடத்தி காட்டினார். எம்.ஜி.ஆரோடு தொடர்ந்து இணக்கமாக செல்ல முடியாத சூழலில் கட்டுமானத் தொழிலாளர்களுக்காக களம் அமைத்து போராடிய அந்த நேரத்தில் தங்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவளித்த தி.மு.க.வோடு கைகோர்க்க நேர்ந்தது. இந்நிலையில் தான் இந்த முதல் மாநாட்டிற்கு தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி அழைக்கப்பட்டார். தொழிலாளர்கள் கடல் போல் வந்து கலந்து கொண்டு மாநாட்டை சிறப்பித்து காட்டினார்கள்.

 

தமிழ்நாட்டில் மட்டும் கட்டுமானத் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தால் போதாது. இந்தியா முழுமையும் உள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரும்பிய தலைவர் குலசேகரனார். அதற்காக சுமார் நூறு முறையாவது டெல்லி சென்று தலைவர்களை சந்தித்தார்.

 

இந்த நிலையில் 1985-ல் இரண்டாவது மாநில மாநாட்டினை சென்னையில் ஏற்பாடு செய்து அதில் வாழப்பாடி இராமமூர்த்தி உள்ளிட்ட மாநில முன்னணி தலைவர்களோடு மத்திய தொழிலாளர் அமைச்சர் அஞ்சையா அவர்களையும் அழைத்து வந்து பங்கேற்க வைத்தார். அம்மாநாட்டின் அஞ்சையா அறிவித்த அறிவிப்புதான் இன்றைக்கு வந்துள்ள மத்திய கட்டுமானத் தொழிலாளர்களின் பாதுகாப்புச் சட்டமாகும்.

 

1984-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வோடு செயல்படாத சூழலில் சைதாப்பேட்டை தொகுதியின் வேட்பாளரும், தோழருமான சைதை துரைச்சாமி மூலம் ஆர்.எம்.வீ. அவர்கள் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி காண நேர்ந்தது, குலசேகரனாருக்கு. இத்தேர்தலில் எம்.ஜி.ஆர். இல்லாமலேயே அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்றது.

 

 

 

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. ‘ஜா’ அணி சார்பில் பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்ட குலசேகரனார் வெற்றி வாய்ப்பை இழந்தார். மீண்டும் அ.தி.மு.க.வோடு பயணப்பட்ட குலசேகரனாரின் அரசியல் பயணம் 1991-ல் அ.தி.மு.க.வுடன் தேர்தல் உடன்பாடுகண்டது. தொகுதி எதுவும் கிடைக்காத சூழலில் கிடைத்தால் பொன். குமார் தான் வேட்பாளர் என்று அறிவித்து இருந்தார்.

 

அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டணி ஏற்பட்டதில் தொகுதி கிடைக்காமல் போயிற்று. இருப்பினும் தொடர்ந்து அக்கட்சியை ஆதரித்து தேர்தல் வேலைகளை பார்த்தார். அ.தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தது. இந்த நல்ல வாய்ப்பை தலைவர் குலசேகரனார் பயன்படுத்தி வன்னிய சமுதாயத்திற்கு வரலாற்று சிறப்புமிக்க பல விஷயங்களை செய்தார். அதில் மிகவும் குறிப்பிடத்தக்க மூன்று விஷயங்களை காலத்தால் அழிக்க முடியாதவை.

 

குலசேகரனாரின் முயற்சியால் அன்றைய முதல்வர் புரட்சித்தலைவி அவர்கள் ஒத்துழைப்புடன் சமுதாயப் பெருந்தலைவர் இராமசாமி படையாட்சியாரின் பெயரை விழுப்புரம் மாவட்டத்திற்கு சூட்டியதும், முன்னாள் அமைச்சர் மாணிக்கவேலு நாயகருக்கு நூற்றாண்டு விழா கண்டதும் குறிப்பிடத்தக்கது. வன்னிய சமுதாயத்தில் ஒரு தலைவருக்கு அவரது நூற்றாண்டு விழா அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது என்றால் அது நம் மாணிக்க வேலனாருக்குத்தான் என்ற சிறப்பையும் பெற்றுத் தந்தார்.

 

இரண்டாவது வன்னிய கிறிஸ்துவர்களுக்கும், மிகப் பிற்படுத்தப்பட்டோருக்கான சலுகைகள் கிடைக்க உரிய அரசு ஆணையை பெற்றுத் தந்தது பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நிகழ்வாகும்.

 

பல்வேறு வகைகளில் போராடி வளர்த்த கட்டுமானத் தொழிலாளர்கள் இயக்கத்தின் பெரும் கோரிக்கையான கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் கோரிக்கை வைத்து வெற்றியும் பெற்றார். தமிழகத்தில் முதன்முதலாக வாரியம் உருவாக காரணமாக இருந்தவர் நமது குலசேகரனார் அவர்கள் தான் என்பது தமிழகம் மறந்துவிட்ட ஒன்று.

 

காலத்தின் கோலம் கொடூரமாக தொடர்வது இயற்கையான ஒன்றுதானே! தன்னால் வளர்ந்து ஆளாகிய பொன். குமாரிடமே தனது அமைப்பை கொடுத்துவிட்டு வெளியேற வேண்டிய துர்பாக்கியமான சூழ்நிலை குலசேகரனாருக்கு ஏற்பட்டது. சமுதாயத்தில் எந்த மனிதனுக்கும் நேராத ஒரு இழிநிலை தான் கட்டிக்காத்த அமைப்பை தன்னுடன் இருந்தவரே கைப்பற்றி செல்வத்தை தடுக்க இயலாத நிலை. தமிழ்நாடு கட்டிட தொழிலாளர் சங்கத்தை வளர்த்து அதனை பொன். குமாரிடம் ஒப்படைத்துவிட்டு வெளியேறினார்.

 

 

மிக குறுகிய காலத்திலேயே தமிழ்நாடு பத்திரம் எழுதுவோர் சங்கத்தின் தலைவரானார். அது மட்டுமல்ல இன்று இந்திய தேசிய கட்டடத் தொழிலாளர் பேரவையின் தலைவராக நம்மிடையே உலாவந்து கொண்டிருக்கிறார் பெரியவர் குலசேகரனார் அவர்கள்.

 

கட்டடத் தொழிலாளர் சங்கத்தின் பல்வேறுபட்ட அனுபவங்களைக் கொண்டு பல படிப்பினைகளை தெரிந்து கொண்ட குலசேகரனார், சென்னை கட்டட தொழிலாளர்கள் கூட்டுறவு கூலி ஒப்பந்தக்காரர்க்ள் சங்கம் என்ற அமைப்பை கூட்டுறவு சங்கப் பதிவுச் சட்டத்தின்படி பதிவு செய்து, கட்டட தொழிலாளர் சங்கத்தின் ஓர் அங்கமாக சேர்த்து, குடிசை மாற்று வாரியம், வீட்டு வசதி வாரியம், சென்னை மாநகராட்சி பொதுப்பணித்துறை  ஆகியவற்றில் கூலி ஒப்பந்தக்கார்களாக பதிவு செய்ய ஏற்பாடு செய்து சாதனை புரிந்தார்.

 

இப்படி நமது சமுதாயத்துக்கும், தமிழக மக்களுக்கும், பல்வேறுபட்ட தொழிலாளர்களுக்கும் பாடுபடுவதையே உயிர் மூச்சாக கொண்ட பிறவி உழைப்பாளி, சோர்வறியா தொண்டர், தன்னலம் கருதாத தலைவர் பெரியவர் குலசேகரனார்.

 

பத்திரிகை, விவசாயி, அரசியல், தொழிலாளர், பொதுநலம் என்று சமூகப் பணியில் தன்னலம் பாராமல் பாடுபட்ட அவர், குடும்பத் தலைவர் என்ற முறையில் குடும்ப பிரச்சினைகளில் அதிக ஈடுபாடு கொள்ளவில்லை. அவரின் வாழ்க்கைத் துணைவியார் தான் குடும்ப சூழ்நிலைகளை சமாளித்து, குடும்பத்தை நடத்தி வந்தார்.

 

கணவரின் பொதுத் தொண்டிற்கு தடை சொல்லாது அவரின் குறிப்பறிந்து நடக்கும் குணவதியாக விளங்கியவர் திருமதி. துர்க்காம்மாள். மேலும் தனது கணவரை நாடி வருபவர்களை அன்புடன் வரவேற்று பண்புடன் உபசரிப்பார்.

 

குலசேகரனாரின் எண்ணங்கள், செயல்கள், நடவடிக்கைகளின் பரிணாம வளர்ச்சிதான் இன்று வன்னியர் சங்கம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவையாக விஸ்வரூபமெடுத்து நிற்பதற்கு அடித்தளம் என்பதை இக்கட்டுரையை படித்தவர்கள் உணர்ந்து இருக்கலாம்.

 

இராமசாமி படையாட்சியார், மாணிக்கவேலருக்கு வன்னிய சமுதாயக் காவலராக தமிழக மக்களிடம் பெயர் பெற்று சரித்திரம் படைத்தவர் பெரியவர் குலசேகரனாரே. அவரின் 80வது பிறந்த நாள் விழாவான முத்து விழா கடந்த ஆண்டு சிறப்பாக நடந்தது. இன்னும் பெரிய அளவில் மிகப் பிரம்மாண்டமாக நடந்தேறியிருக்க வேண்டிய பொன்னான நிகழ்ச்சி நம்மவர்களின் ஒற்றுமையின்மையால் ஓரளவுக்குத்தான் சிறப்பாக நடைபெற்றது எனலாம்.

 

பெரியவர் குலசேகரனார் என்ற அந்த மாமனிதருக்கு நமது கௌரவமிக்க, வீரம் செறிந்த வணக்கத்தையும், ராயல் சல்யூட்டையும் உங்கள் சார்பாகவும், நமது வன்னியர் கூட்டமைப்பு சார்ப்பாகவும் இதய பூர்வமாய் சமர்ப்பிக்கிறேன்.

குலசேகரனாரின் நூற்றாண்டு

விழாவையும் காண்போம்!

அவரது லட்சியங்கள் ஈடேறத் துணை நிற்போம்!

நம் சொந்தபந்தங்களே! வாரீர்!

 

 

 

 

 

 

 

 

 

குலசேகரனார் பங்கேற்ற

முக்கிய மாநாடுகள்!

 

  1. சிங்காடிவாக்கம் மாநாடு
  2. மாத்தூர் மாநாடு
  3. சோளிங்கநல்லூர் மாநாடு
  4. பம்பையம்பட்டு மாநாடு
  5. வன்னிய இளைஞர்கள் மாநாடு
  6. ஆவடி மாநாடு
  7. மகா தேவி மங்கல மாநாடு
  8. செஞ்சி மாநாடு
  9. வேலூர் மாநாடு
  10. குடியேற்றம் மாநாடு
  11. வேலூர் மாநாடு
  12. உத்திரமேரூர் மாநாடு
  13. சென்னையில் வன்னியர் மாநாடு
  14. பிற்படுத்தப்பட்டோர் மாநாடு
  15. பிற்படுத்தப்பட்டோர் மாநாடு – 2
  16. கட்டத் தொழிலாளர் மாநாடு
  17. கட்டடத் தொழிலாளர் மாநாடு
  18. தேனாம்பேட்டை மாநாடு
  19. திருவண்ணாமலை கட்டடத் தொழிலாளர்கள் மாநாடு
  20. வடஆற்காடு மாவட்ட கட்டடத் தொழிலாளர்கள் மாநாடு – 2
  21. வாணியம்பாடி மாநாடு
  22. விவசாயத் தொழிலாளர் கட்சி மாநாடுகள்
  23. பிரதிநிதிகள் மாநாடு
  24. பத்திரம் எழுதுவோர் சங்க மாநாடு
  25. தஞ்சை மாவட்ட க.தொ. மாநாடு

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சி.என்.ஆர். பற்றி

குலசேகரனார் பேசுகிறார்!

 

தலைவர் சி.என்.ஆர். அவர்கள் வன்னியர் அமைப்பினைத் தோற்றுவித்து, தற்போது பல்வேறுபட்ட வன்னியர் அமைப்புகளை ஒருங்கிணைத்து ‘வன்னியர்களின் கூட்டமைப்பை’ உருவாக்கி செயல்பட்டு வருவதை நான் தூர இருந்தே உன்னிப்பாக கவனித்து வந்தேன்.

 

தலைவர் சி.என்.ஆர். அவர்களின் செயல்பாடுகளும், இலட்சியமும் தலைவர் படையாட்சியாரின் கொள்கைகளை அடியொற்றி இருப்பதை உணரத் துவங்கினேன். அதன் காரணமாக என்னுடைய தார்மீக ஆதரவை ‘வன்னியர்கள் கூட்டமைப்பு’க்கு வழங்கிட முற்பட்டேன்.

 

தலைவர் சி.என்.ஆர். அவர்கள் கடந்த காலங்களில் வன்னியர் தலைவர்கள் என்று நம்மால் ஏற்றுக் கொண்டவர்களின் செயல்பாடுகளில் நேரிட்ட தவறுகளை படிப்பினையாகக் கொண்டு, சுயமாக சிந்தித்து, சமூக மேம்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் தேவைப்படும் கொள்கைகளை நிர்ணயித்து ‘வன்னியர் கூட்டமைப்பை’ச் செயல்படுத்தி வருவதை உணர்ந்ததால் தான், 30 ஆண்டுகட்குப் பிறகு, என்னுடைய சமூகத் தொண்டினை மீண்டும் தொடர ஆர்பித்து, வன்னியர் கூட்டமைப்பின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முற்பட்டேன்.

 

தலைவர் படையாட்சியாருக்குப் பிறகு சமூகத் தலைவராக செயல்படக் கூடிய தகுதி தலைவர் சி.என்.ஆர். அவர்கட்கு மட்டுமே உள்ளது.

 

தலைவர் சி.என்.ஆர். அவர்களின் தலைமையில் தமிழகத்தில் உள்ள வன்னியர்கள் அனைவரும் கட்சி வித்தியாசம் பாராமல் ஒருங்கிணைத்து செயல்பட்டு ‘வன்னியர்கள் கூட்டமைப்பினை’ வலிவுமிக்க இயக்கமாக மாற்றிட நம் சமுதாய மக்கள் அனைவரும் பணிபுரியும்படி அன்புடன் வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.

 

 

 

 

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலருடன் குலசேகரனாருக்கு நெருங்கிய தொடர்புண்டு. பெருந்ததலைவர் காமராஜர், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இன்றைய முதல்வர் டாக்டர் கலைஞர், சி.பா. ஆதித்தனார் மற்றும் பிற இயக்கத் தலைவர்களுடனும் வட இந்திய தலைவர்கள் பலருடனும் தொடர்பில் இருந்து நட்பு பாராட்டியவர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தோழர் குலசேகரனார்

 

தொழிலாளர்கள் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவது கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் தலைவர்களும் தான். ஆனால் அவர்கள் மாத ஊதியம் பெறக்கூடிய பணி பாதுகாப்புள்ள தொழிலாளர்களுக்காக போராடுபவர்கள். ஆனால், குலசேகரனாரோ கூலிக்கு உத்தரவாதமோ, வேலைக்கு உத்தரவாதமோ, பணிக்கு பாதுகாப்போ இல்லாத நூறு சதவீத அமைப்புச் சாராத் தொழிலாளர்களுக்குப் போராடியவர் மட்டுமல்ல. அவர்களுக்கு வெற்றியையும் தேடி கொடுத்தவர்.

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நலவாரியங்களின் பிதாமகன்

 

1979 – 81-ல் குலசேகரனார் தலைமையில் நடைபெற்ற எழுச்சிகர இயக்கம் தான் தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர் சட்டத்தின் கீழ் கட்டுமான தொழிலாளர் நலவாரியத்தை அமைப்பதற்கான சாத்தியத்தை உருவாக்கியது. குறிப்பாக 1993-ல் 100 தாலுகாக்களில் நடைபெற்ற சாலை மறியல், அரசு கட்டுமானப் பணிகளில் வேலை நிறுத்தம் ஆகியவைதான் 1995-ல் கட்டட தொழிலாளர்களுக்கான நலவாரியம் அமைக்க காரணமானது. இந்த ஒன்றுதான் 1999-ல் உடல் உழைப்பு தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு நலவாரியம், 2000-ல் 12 தொழில் வாரியான நலவாரியம் என விரிவாகி தற்போது 26 நலவாரியங்கள் அமைக்கப்பட்டு உள்ளதற்கான ஆதாரமான அடித்தளம். இது குலசேகரனாரின் தலைமைக்கு கிடைத்த வெற்றி.

 

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குலசேகரனாரின் நான்காம் தூண்

 

பத்திரிகை நடத்துவதில் அலாதி பிரியமும், திட நம்பிக்கையும் உடையவர் பெரியவர் குலசேகரனார். அவர் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்திய பத்திரிகைகள்:

 

செங்கல்பட்டு ஜில்லா விவசாயி        –     மாத இதழ்

பாசன விவசாயி                  –     மாத இதழ்

வன்னியன்                              –     வார இதழ்

உரிமைப் போர்                          –     மாதமிருமுறை

மர்மம்                                   –     வார இதழ்

இனப்போர்                               –     நாளிதழ்

முழக்கம்                                –     நாளிதழ்

ஆவணம்                                –     மாத இதழ்

பத்திரப்பதிவு                            –     மாத இதழ்

 

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

குலசேகரனார் பங்கேற்ற போராட்டங்கள்

 

  1. பரசநல்லூர் விவசாயிகள் போராட்டம்
  2. நசரத்பேட்டை விவசாயிகள் போராட்டம்
  3. வேலைகொடு அல்லது சோறு போடு போராட்டம்
  4. ஈழத்தமிழருக்கு ஆதரவு போராட்டம்
  5. விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி சார்பில் தனி ஈழம் கோரி போராட்டம்

 

  1. கட்டத் தொழிலாளிகளின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முன் போராட்டம்

 

  1. கட்டடத் தொழிலாளர்கள் எம்.ஜி.ஆர். இல்லம் முன்பு நடத்திய போராட்டம்.

 

  1. பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு போராட்டம் – இரண்டு முறை

 

  1. பூவேலைத் தொழிலாளர் சங்கப் போராட்டம்

 

  1. கைத்தறி நெசவாளர் சங்கம்

 

  1. உயர்நீதி மன்ற நீதிபதி, பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தலைவர்கள் பதவி கோரி போராட்டம்.

 

  • ••

 

 

 

 

 

குலசேகரனாரை பற்றி

சி.என்.ஆர். அவர்களின் பதிவு!

 

தனது வாழ்நாளில் 60 ஆண்டு காலமாக பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெரியவர் குலசேகரனார் நடத்திய மாநாடுகளின் எண்ணிக்கை நூறைத் தாண்டும். அதே போல அவர் கலந்து கொண்ட போராட்டங்களும் நூறைத் தாண்டும். ஆனால், அவைகளை பதிவு செய்யாமல் விட்டுவிட்டார். அவற்றில் காலவெள்த்தில் காப்பாற்றி வைக்கப்பட்ட சில ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்டதன் தொகுப்பை வைத்து இக்கட்டுரையை எழுதி உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

 

 

* ••• *

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu