என் பேரன்பிற்குரிய, என் உயிரினும் மேலான சொந்தங்களே, நண்பர்களே!வணக்கம்.1971ல் தொடங்கி இன்று வரை கடந்த ஐம்பது ஆண்டுகளாக என் வாழ்க்கையை சம்பு முனி வழி வந்த அக்னி குலத்திற்காக முழுமையாக அர்ப்பணித்ததில் மிகந்த மன நிறைவு கொள்கிறேன். இன்னும் வருகிற நாட்களில் சமுதாய சமூக நீதி மற்றும் தமிழக நலனுக்காக என் வாழ்க்கையை அர்ப்பணிப்பேன்.

என் வாழ்வு முழுமையாக சமூக செயல்பாடுகளில் ஈடுபடுகின்ற போது நான் கடந்து வந்த பாதை முட்புதர்கள் நிறைந்த பாதையாக இருந்தது. இருந்த போதிலும் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று நிர்ணயித்த இலக்குகளை சமூகத்தின் நலனுக்காக இன வளமைக்காக அறுதியிட்டு அறிவாயுதம் ஏந்தி உழைத்து வெற்றி அடைந்ததில் உள்ளம் பொங்கும் உவகை கொள்கிறேன்.

இந்த ஐம்பது வருட வாழ்க்கைப் பாதையில் நான் சந்தித்தது ஏராளமானவை. என் சமூகப் பணி ஈடுபாட்டை தூண்டிய இனப் பெரியோர்கள், அவர்களுடனான என்னுடைய வாழ்க்கை மற்றும் போராட்ட அனுபவங்கள், வரலாறு தந்த படிப்பினைகள், இனத் தேவைகளை அறுதியிட்டு இலக்குகளை நிர்ணயித்தல், அந்த இலக்குகளை அடையும் செயல் திட்டத்தை வகுத்து அதன்படி செயல்படுத்துதல் அறிவாயுதம் ஏந்திய போராட்டத்தின் மூலம் நிர்ணயித்த அனைத்து இலக்குகளையும் அடைந்தது என பல நிகழ்வுகளை நான் திரும்பி பார்க்கிறேன்.

இந்த பாதையில் என்னுடன் பயணித்து காலம் பிரித்து போட்ட எனது உறவுகள், என் போன்றோர் உணர்வுகளைத் தாங்கி இன விடுதலைக்காக தங்கள் இன்னுயிரையும் ஈந்த தியாக போராளிகள் அறிவாயுத போராட்டத்தில் என் உடன் நின்ற ஆகச் சிறந்த சட்ட வல்லுனர்கள், ஆக்கம் கொடுத்த இனிய உள்ளங்கள், இந்த பெரும் சமூக உரிமைக்கு உரிய அங்கீகாரம் கொடுத்த வணக்கத்திற்குரிய முதல்வர்கள், அமைச்சர்கள், நீதி அரசர்கள்  மற்றும் அரசியல், சமூக இனத் தலைவர்கள், என் சமுதாய பணிக்கு மனமார ஆதரவும் உறுதுணையும் நல்கிட்ட என் தனி உறவுகள் என அனைவரையும் உள்ளம் உவகை பொங்க நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன்.

இந்த போராட்ட வாழ்க்கையில் கொண்ட கொள்கை மாறாமல் இலக்கை துல்லியமாக அடைய நான் கடக்கவேண்டிய துயரங்கள் வார்த்தை அர்த்தங்களுக்குள் அடக்கமுடியாதவை. சமூக நீதிக்கான போராட்டங்கள் எங்குமே நீளமானதும், அகலமானதும், ஆழமானதுமாகும். குறிப்பாக இந்த மாபெரும் இனத்தின் சிறப்பு தனித்துவங்கள் இங்கே மறைக்கப்பட்டுள்ளன. மறுக்கப்பட்டுள்ளன. மறக்கப்பட்டுள்ளன. இவற்றை அடைய முட்புதர்களை, தடைக் கற்களை, கொடிய மனித விலங்குகளையும் பல ஆண்டுகள் எதிர் கொண்டு பயணிக்க வேண்டியுள்ளது. ஏராளமான தனிப்பட்ட பொருட் செலவையும் தாண்டி இலக்கு ஒன்றையே முழுமையாக கண்கொள்ள வேண்டிய நிலையில் போராட்டம் தொடர்கிறது.

இன்னும் இந்த இன உரிமைக்கான எமது போராட்டத்தை கொச்சை செய்து நீர்த்துப் போக, அனைத்து முயற்சிகளையும் செய்த எதிரிகள், புல்லுருவிகளாக மாறிய சமூக துரோகிகள், இன நலனை அழிக்க துணியும் கோடாரிகாம்புகள், இன உரிமை போராட்டத்தை வியாபாரமாக்கி இன மக்களை மாக்களாக மாற்றத் துடிக்கும் இன துரோக அரசியல் வியாபாரிகள், மூட முரட்டுத்தனத்தால் செயல் வீரர்களை முடக்கிப் போட்ட சுயநல போலிகள் என பலரையும் கடக்க வேண்டியிருக்கிறது.

கடந்த ஐம்பது ஆண்டு கால சமூகப் பணியில் சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வன்னியர் பொதுச் சொத்துக்ளுக்கான நல வாரியம் அமைக்க நீதிமன்ற தீர்ப்பை பெற்று அதற்கான சட்டத்தை தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பெற்று மாண்புமிகு. குடியரசு தலைவரின் அங்கீகாரத்தோடு செயல்படுத்த இயன்றது குறித்து மிகுந்த மன மகிழ்வு கொள்கிறேன். இந்த அரும் சாதனை மூலமாக நம் இன வள்ளல்களின் சமூக நல கனவுகள் நிறைவேறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதனைத் தொடர்ந்து நீண்ட சட்டப் போராட்டம் நடத்தி, நீதிமன்ற ஆணையைப் பெற்று சட்டமன்றம் நிறைவேற்றி தந்த 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அடுத்த மிகப்பெரும் சாதனை. வன்னியர்களுக்கான நலவாரியத்தை அமைக்கக் கோரி அனைத்து முயற்சிகளையும் எடுத்து அது வெற்றி பெறும் தருவாயில் தற்போது இருக்கிறது.

இந்த மூன்று சாதனைகளும் அடைந்த பின்பு எனது ஐம்பதாவது ஆண்டு சமூகப் பணி பயணத்தில் அடுத்ததாக நம் இனத்துக்கான அறிவு களஞ்சியத்தை உருவாக்க வேண்டும் என்ற நீண்ட கால கனவின் வெளிப்பாடாக இதோ இந்த இணைய தளம் உருவாகி இருக்கிறது. இந்த இணைய தளம் க்ஷத்திரிய வன்னிய இன வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், சமூக வாழ்வியல் மற்றும் நமது முன்னோர்களின் வரலாறுகளை பதிவு செய்யும். மேலும் தற்கால வன்னிய சமூக மக்களின் தனித்துவங்களை எடுத்து ஆவணப்படுத்துவதோடு சமூக உறவுகளை வளர்த்தெடுக்கவும் அறிவார்ந்த தலைமுறைகளை உருவாக்கவும், ஆதாரமாக திகழும். இந்த இணைய தளம் ஆலமரமாக அகன்று, உயர்ந்து, ஆழமாக சமூகத்தை ஆவணப்படுத்தும். இந்த இணைய தளம் தவிர, வன்னியர் குரல் என்ற மாத இதழும், வன்னியர் குரல் என்ற யூ டியூப் தளமும் துவக்கப்படுகிறது. இந்த மூன்று ஊடகங்கள் மூலமாக இந்த சமுதாயத்தின் அறிவார்ந்த முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை முன்னெடுக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் சமூக கடமையாகும்.

இந்த மூன்று ஊடகங்களையும் உருவாக்க உதவிய அனைவருக்கும் எனது நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இனம் சார்ந்த தகவல்களை மற்றும் ஆவணங்களை திரட்டும் பணியிலும் மற்றும் சமுதாய தலைவர்களை சந்தித்தபோதும் உடனிருந்த மிக நீண்ட பத்திரிகை துறை அனுபவம் கொண்டவரும், என்னோடு பயணித்து கொண்டிருக்கும் நண்பர் திரு. பொ. தங்கபாண்டியன் அவர்களுக்கு நன்றி.

இந்த ஆக்கத்தில் என்னுடைய பணித் தலைமையில் முக்கிய பங்கெடுத்தவர்கள்:

 

கருத்துருவாக்கம்

படைப்பாக்க தலைமை     :     டாக்டர் C.X. இளங்கோ,

வடிவமைப்பு தலைமை    :     திரு. K.A. ஆரோக்கிய ராஜ்,

அச்சமைப்பு தலைமை     :     திரு. பாரதி,

தொழில் நுட்ப தலைமை   :     திரு ராஜேஷ்

 

இந்த தள ஆக்கத்திற்காக முழு முயற்சிகளை மேற்கொண்டு ஆர்வமாக செயல்பட்ட நமது கூட்டமைப்பின் ஊடகச் செயலர் திரு. M.D.K. சாந்தகுமார் அவர்கள்.

புதுவை மாநில வன்னியர் சமூக தகவல்களை தந்து உதவியவர்கள் திரு. பூங்காவனம், திரு. வேணு மற்றும் திரு. K. சிவஞானம் அவர்கள்.

இந்த இணையதள வடிவமைப்பு பணியின் போது உடனிருந்து அரும் உதவிகள் செய்தவர்கள் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த திரு. கே. ராம்குமார் மற்றும் திரு. கே. வெங்கடேசன் அவர்கள்.

இந்த தள உருவாக்கத்திற்கு தகவல்களை தந்து உதவிய திரு. மகேந்திர வர்மன் அவர்களுக்கும் எனது நன்றி.

மேற்கண்ட அனைவருக்கும் இன்னும் ஏனையோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

என் அன்புக்குரிய சொந்தங்களே… இதோ, இந்த இணையத் தளம் உங்களுக்கான, வன்னிய சமூகத்திற்கான சொத்தாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இந்த சொத்தை பேணி பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு உங்கள் ஒவ்வொருவரிடமும் உள்ளது. இந்த பணியில் உங்களை பல்வேறு முறைகளில் இணைத்துக் கொள்ள முடியும். இந்த தளத்தை நம் சமூக மக்களுக்கும், ஏனையோருக்கும் அறிமுகப்படுத்துங்கள். நம் இன  மூத்தவர்கள் மூலமாக இனத்தை குறித்த வரலாறு, கலாச்சாரம், ஆன்மீகம், வாழ்வியல் குறித்த தகவல்களை, தரவுகளை நீங்கள் பெற்று எங்களுக்கு தந்து உதவலாம். மேலும் நீங்கள் உங்கள் பகுதிக்கான இணைய தளம், வன்னியர் குரல் மாத இதழ் மற்றும் யூ டியூப் தள நிருபராக செயல் படலாம். உங்கள் மேலான ஈடுபாடுகளையும், ஆதரவினையையும் வேண்டி விரும்பி கேட்டுக் கொண்டு வாழ்த்துக்களுடன் விடைபெறுகிறேன்.

என்றும் அன்புடன் சமுதாயப் பணியில்,

சி.என்.இராமமூர்த்தி

Menu