ஆண்ட பரம்பரை! ஆண்டிப் பரம்பரையாக!! ஏன் மாறியது? எப்படி மாறியது??
இந்த சோகக் கதையை நாம் ஆராய்ந்து எழுதப் புகுமுன், சென்ற கால இந்திய தேச சரித்திரத்தையும் நம் தமிழ்நாட்டு சரித்திரத்தையும் நாம் சற்று கவனத்தில் கொண்டு வர வேண்டியதாக இருக்கின்றது. தமிழ் நாட்டில் தமிழ் மன்னர்கள் ஆட்சி செய்திருந்தது போல் தமிழ்நாட்டிற்கு வடக்கே அனேக வம்ச பரம்பரையைக் கொண்ட அரசர்கள் ஆட்சி செய்திருந்தார்கள். உதாரணமாக மவுரியைர், குப்தர், ஹர்சர், ராஜபுத்திரர், கூர்ஜார், ராஷ்டிரகூடர், மராட்டியர், பாஞ்சாலர், மொகலாயர், ராயர்கள் மற்றும் இது போன்ற அனேக எண்ணற்ற அரசர்கள் இந்த பரத கண்டத்தை பல கூறுகளாக பிரித்து ஆட்சி செய்து வந்துள்ளனர். ஆனால் இவர்களிடையே எப்போதும் ஒற்றுமை இருந்ததே இல்லை. இந்து மன்னர்களுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதும், கொல்லுவதும் போன்ற அடாத செயல்களில் ஒவ்வொரு வரும் இறங்கி வலிமை மிக்கோர் ஆட்சிக்கு வரத் தலைப்பட்டனர்.
வட இந்தியாவின் மீது ஆப்கானிய மொகலாயர்கள் படையெடுப்பு
இவ்வரிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்த இந்தியாவின் வடமேற்கே உள்ள, ஆப்கானிஸ்தான் தேசத்து மொகலாய மன்னர்கள் சமயம் பார்த்து இந்த பரத கண்டத்தின் மீது படையெடுத்து வந்து வெற்றி கண்டு, நாலா வட்டத்தில் வட இந்தியா எங்கும் தங்கள் சாம்ராஜ்யத்தை நிலை நாட்டிக் கொண்டனர்.
இந்த படை எடுப்பு மெல்ல மெல்ல தெற்கு நோக்கியும் நகரலாயிற்று. இதனால் மராட்டியம், கர்னாடகம், ஆந்திரம் எல்லாம் மொகலாயர் வசம் சிக்கலாயிற்று. ஏனைய தேசங்களை அடிமைப்படுத்தி தனது காலடியில் கொண்டு வந்த மொகலாயர்கள் வட இந்தியாவில் டில்லியை தலைமையாகக் கொண்டு ஆட்சியை நடத்தினதோடு கூட, தென்னிந்தியாவைச் சார்ந்த மைசூரிலும், தனது பிரதிநிதியை நியமித்து இதுவரையில் தாங்கள் பிடித்த தேசங்களை நிர்வாகம் செய்யவும் மேலும் தெற்கிலுள்ள தமிழ்நாட்டின் நிலப்பரப்பை பிடிக்கவும் திட்டமிடலாயினர். இது விஷயத்தில் இவர்களுடைய எண்ணமும் ஓரளவு நிறைவேறலாயிற்று. காரணம்:- அச்சமயத்தில் தொண்டை நாட்டில் வலிமைமிக்கதொரு ஆட்சி நடைபெறவில்லை.
தமிழ்நாட்டில், ராயர், மராட்டியர் மொகலாயர் படையெடுப்பு!
தொண்டை நாட்டில் பல்லவ வம்சத்தின் பராக்கிரம மிக்க மன்னர்கள் முன்னமேயே காலமாகி விட்டபடியாலும் மகேந்திர வர்மன், நரசிம்ம வர்மன் போன்ற இராஜ தந்திரத்தில் சிறந்த அறிவாளிகள் அப்போது தொண்டை நாட்டில் ஆட்சி செய்யாததினாலும் பல்லவ சாம்ராஜ்யம் அப்போது இடிந்து சுக்கு நூறாக வீழ்ந்து விட்டது. இந்த சாம்ராஜ்யத்தின் கடைசி மன்னனாக இருந்தவன் அபராசித வர்மன் என்பவன். (இந்த அரசன் தான் திருத்தணி கோயிலை கட்டியவன்) இவனுக்கு பின்பு வந்த அரசர்களும் வலிமை குன்றி ஒற்றுமை குன்றி இருந்தபடியால் மாமல்லன் (நரேந்திர வர்மன்) ஸ்தாபித்த பல்லவ சாம்ராஜ்யம் பல வேற்று நாட்டு அரசர்களிடம் கைமாறி கைமாறி முறையே சாளுக்கிய வம்சத்தினிடமும் ராயர் பரம்பரையிடமும் மற்றும் மராட்டியரிடமும் முடிவில் மொகலாயர்களிடம் அடிமைப்பட்டு விட்டது.
இத்தருணத்தில் தொண்டை நாட்டை ஆண்டு இருந்த பல்லவர்களின் வம்ச பரம்பரையினர் எதிரி நாட்டு அரசர்களின் தாக்குதலினால் அல்லல்பட்டு நாலா வட்டத்திலும் சிதறி ஓடினர். எதிரிப் படைகள் எட்டிப்பாரா இடங்களில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொண்டு அந்தந்த ஊர்களில் தங்களுடைய இராஜ்யங்களை அமைத்துக் கொண்டனர்.
ஆனால் இந்த இராஜ்யங்கள் எல்லாம் குறுகிய அளவிலும் சின்னஞ் சிறியதாகவும் அமைத்து விட்டபடியால் பிற்காலப் பல்லவர்கள் முன் போல் பெருத்த பேரரசர்கள் என்ற நிலையில் இருக்க முடியாமல் போய்விட்டது. மேலும் இவர்கள் அமைத்த சின்னஞ்சிறு ராஜ்யங்களும் சங்கிலிக் கோர்த்த அமைப்பு அளவில் ஒன்றை ஒன்று சேர்ந்தார்ப் போல் இல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் பரவலாய் இருந்தபடியால் இவர்களுக்குள் தொடர்பும் ஒற்றுமையும் கூட ஏற்பட வழியில்லாமல் போய்விட்டது.
பல்லவ பேரரசு குலைந்து சிற்றரசாக மாறிய விதம்!
இத்தமிழ் நாட்டை ஒரே குடையின் கீழ் அரசாண்ட பல்லவ அரசு பரம்பரையினராகிய வன்னியர்களின் பேரரசு குலைந்து இத்தருணத்தில் தான் சிற்றரசுகளாக மாறி ஆட்சி செய்ய தலைப்பட்டன. இது கூட நீண்ட நாள் நிலைத்திருக்கவில்லை.
ஆந்திர நாட்டு அரசரான கிருஷ்ண தேவராயர் காலத்திலும் மராட்டியர் படையெடுத்து தஞ்சையை ஆண்ட சரபோஜி ராவ் அவர்கள் காலத்திலும் பின்பு ஆற்காடு நவாப் தர்பார் ஏற்று ஆட்சி செய்த காலத்திலும் வன்னியர்களின் ராஜ்யம் சின்னஞ்சிறு ராச்யங்களாக இருந்தாலும் சுதந்திரமாக அரசாட்சி நடந்து வந்ததானது, மேலே கண்ட 3 பேரரசர்களின் தாக்குதலினால் உடைந்து விட்டன. பல வன்னிய சிற்றரசர்கள் அடங்கி அடிமைப்பட்டு கப்பம் கட்ட கவலைப்பட்டு விட்டனர்.
காலம் செல்லச் செல்ல இவர்கள் ஸ்தாபித்த சிறு சிறு ராச்யங்களும், அடிக்கடி அழிந்தும், எழுந்தும், ஒழிந்தும் போயின. பல குற்றியிரும் குலை உயிருமாக இருந்து வரத் தலைப்பட்டன.
வன்னிய சிற்றரசர்களும் அன்று அடிமை ஆட்சியே செய்ய நேர்ந்தது!
இத்தருணத்தில் தான் வன்னியர்களுக்கு பிடித்தது சனியன். யாருக்கும் அஞ்சாது வாளேந்தி வாழ்ந்து வந்த வன்னிய அரசர்கள் அன்று தங்களது மேல் அரசனுக்கு கட்டுப்பட்டு அடிமையாக வாழத் தலைப்பட்டனர். தங்களது சிற்றரசில் எது ஒன்று நடந்தாலும் தனது மேல் அரசனுடைய சொற்படி கேட்டுத்தான் நடத்த வேண்டி இருந்தது.
இல்லையெனில் தனது மேல் அரசனுடைய படை எப்போதும் தமது சிறிய நாட்டின் மீது பாய் தயாராக இருந்தபடியால் வன்னிய சிற்றரசரும் அவர்களுடைய குடிமக்களும் அன்னிய அரசனுக்கும் அடிமை பட நேர்ந்து விட்டது. அந்தோ பரிதாபம். முடி மன்னர்களாய் இருந்து ஆட்சி செய்து வந்த வன்னிய இனம் அடிமைத்தளை எனும் இரும்பு பிடியில் எப்படியோ சிக்கி அவதிப்படும் நிலைக்கு வந்து விட்டது.
இதை விரும்பாத அனேக வன்னிய வீரர்கள் அந்தந்த இராச்யங்களை விட்டு கண் காணாத இடங்களுக்கு தங்கள் தங்கள் குடும்பங்களுடன் ஓடி மறைந்து வாழத் தலைப்பட்டனர். இந்த எண்ணிக்கை பெரு வாரியாகவும் வளர தலைப்பட்டது. நாட்டை விட்டு காட்டிற்கு சென்ற வன்னிய குடும்பங்கள் அவ்விடத்திலேயே தங்கி வாழவும் தலைப்பட்டு விட்டனர்.
முடிவில் நாடாண்ட பரம்பரை காடேகி அங்கு காட்டு மிருகங்களைப் போல் ஒளிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. பரிதாபம்! பரிதாபம்!! இதை நினைத்தாலே மனம் மிகவும் சஞ்சலப்படுகின்றது. உள்ளமும் மிக துடியாய் துடிக்கின்றது. என்னே கால வித்தியாசம்.
மாமல்லபுரத்தின் மாற்றுப்பெயர்கள்
- மகாபலிபுரம்
- ஏழு கோயில் பட்டிணம்
- திருக்கடன் மல்லை.
அன்றும், இன்றும்
அன்று, மாமல்லன் (நரசிம்ம வர்மன்) இங்கு 7 கோயில்களை கட்டினான். இடையில் 5 கோயில்கள் கடலில் மூழ்கி விட்டன. இன்று 2 கோயில்கள் தான் இங்கு காட்சி தருகின்றன.
வட இந்தியாவிலும், தமிழ்நாட்டின் மீதும் படையெடுப்பு நடந்த காலம்
கிரேக்கர் (அலெக்ஸாண்டர்) கி.மு. 322
முகலாயர் (கஜனி + கோரி) கி.பி. 11வது நூற்றாண்டு
போர்ச்சுகீசியர் (வாஸ்கோடகாமா) கி.பி.1498
டச்சுக்காரர் கி.பி.1520
ஆங்கிலேயர் (அர்கின்ஸ்) கி.பி.1608
பிரெஞ்சுக்காரர் கி.பி.1664
சென்னை போர்ட் செயிண்ட் ஜார்ஜ் கோட்டை
கட்டியது (கட்டினவர் தாமஸ்டே) கி.பி.1639
சென்னை மைலாப்பூர் சாந்தோம் சர்ச்சு
கட்டியது கி.பி.1522
விஜய நகரத்து மன்னர் மதுரையை பிடித்தது கி.பி.1370
மராட்டியரிடம் தஞ்சை அடிமை பட்டது கி.பி.1674
மராட்டியர் தமிழ்நாட்டில் ஆட்சி செய்தது கி.பி.1761 வரை
ஈஸ்ட் இந்தியா கம்பெனியார் தமிழ்நாட்டில்
முதன்முதலில் கைப்பற்றிய நகரம் ஆற்காடு
பிடித்தவர் – ராபர்ட் கிளைவ் கி.பி.1750