ஆண்ட பரம்பரை

 

(நமது சொந்த ஆராய்ச்சி)

 

(கி.பி. 2-வது நூற்றாண்டிலிருந்து,

கி.பி. 20-வது நூற்றாண்டு வரை

ஆராயப்பட்டது. – வ.செ.ச.)

 

உயிர் கார்த்து, உடமை கார்த்து,

நாட்டைக் கார்த்த நம்மினத்தார்

இன்றுள்ள நிலமை என்ன?

 

இன்று சீரழிந்து வறுமையில் வாடும் நமது குலமான வன்னிகுல சத்திரிய சமூகம், அன்று தமிழ் நாட்டை பல பிரிவுகளாக பிரித்து ஆட்சி செய்து வந்த சமூகத்தினர் என்பதும், நாட்டை காக்கும் பணியில், பேரணியில் ஓரணியாக நின்று, படையேற்று உடமை  காத்து நாட்டை உயிர்க் கொடுத்து கார்த்து, படையை ஆட்சி செய்தவர் நம் வம்சத்தினர் என்பதும், வேறு பல சகோதர சமூகத்தினரில் கூட அனேகம் பேர், தான் யார்? தம்முடைய குலமென்ன? அதனுடைய சென்ற கால சரித்திர வரலாறு என்ன? என்பதை எல்லாம் அறிந்துக் கொள்ளாமலே, நமக்கென்ன யாருக்கு வந்த விருந்தோ என்று, கண்மூடி மவுனிகளாக இன்னும் இருந்தது வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் ஏழைகளும், கல்வி கேள்விகளில் தாழ்ந்து மிகவும் வறுமையிலும், அறியாமையிலும் இருக்கக்கூடியவர்களே அதிகம் எனக்கூறலாம். ஆனால் கற்றறிந்தவர்களோ அல்லது பெரும் செல்வம் படைத்தவர்களும் கூட, தனது முன்னிலையை அறிந்து, அந்நிலைக்கு இல்லாமல் போயினும், ஓரளவு மக்களை முன்னேற்றமடைய செய்ய முன் வராமல் தானுண்டு, தன்னுடைய பணமுண்டு. அதைக் கார்க்க தனக்கு கடமையுண்டு என்று சுயநல அடிப்படையிலேயே நடந்துக் கொண்டு வருகின்றனர். அன்று மண்ணுயிரை தன்னுயிர் போல் பாவித்து பணியாற்றிய நமது வன்னிகுல சமூகம், இன்று இன்னிலையிலே போய்க் கொண்டிருப்பதைக் காண நாம் மிகமிக வருந்துவதோடு  நம் முன்னோர்களின் வரலாற்றுச் சுவடிகளையும், இன்று நாட்டிலே காணப்படும் அதன் சின்னங்களையும் தயவு செய்து கூர்ந்து காணும்படி கேட்டுக் கொள்ளுகிறோம்.

 

வன்னிய சமூகம்

நாடாண்ட பரம்பரைதான்!

 

தமிழ்நாட்டில் வீரமும், ரோஷமும் கொண்ட வன்னிய சமூகம் நாடாண்ட பரம்பரை என்றும், தமிழ்நாட்டின் முடிமன்னர்களாகிய சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்களின் சந்ததிகள் என்றும், கால தேச வர்த்த மானத்தினாலும், மேலும் வன்னிகுல சத்திரியர்கள் அடிமை மனப்பான்மையின்றி கோழைத்தனத்தை விடுத்ததும், யாருக்கும் அடி பணிந்து வாழமாட்டோம் என்ற குலச் சிறப்பை மெய்பித்து நடந்து கொண்டிருப்பதாலும் பலரால் சூதினால் ஏய்க்கப்பட்டு மற்றும் சிலரால் பேடித்தனமான வாதினால் ஏமாற்றப்பட்டு, நாட்டை விட்டு காட்டிற்கு துரத்தி அடிக்கப்பட்டதாலும், இன்றைய சூழ்நிலையில் வன்னியர்கள் வலிவுகுன்றி, மதிப்பிழந்து, மானமிழந்து கட்டுப்பாடின்றி எடுப்பார் கைப்பிள்ளை போல் இன்று வாழ்கின்றனர்.

 

நம்மக்கள் இன்றுள்ள தாழ்வான நிலையைக் கண்டு, நாமோ அல்லது பிறரோ யாரும் மதிப்பிட்டு விட கூடாது. இம்மக்களின் சமுதாயம் இன்று கட்டுப்பாடின்றி அவிழ்த்து விடப்பட்ட நெல்லிக்காய் மூட்டைப் போல் இன்று சிதறி இருந்தாலும், இவர்கள் இன்று கல்வி, கேள்விகளில் தாழ்ந்தும், அரசியல் அறிவியல், விஞ்ஞான தொழில் துறையில் பொது உலக அனுபவ விஷயங்களில் கடையராக இருந்தாலும், இம்மக்களுடைய முன்னோர்கள் சென்ற நாட்களில் சிறந்தும், வீரத்தில் மிக பெருமை படக்கூடிய அளவு மிகுந்தும், அரசியல் அனுபவத் துறைகளில், மிகமிக போற்றத்தக்க முறையில் மணிமுடி தரித்து, மன்னாதி மன்னர்களாய், எந்நாட்டு மன்னரும் இத்தமிழ்நாட்டு மன்னரை போற்றிப் புகழ்ந்து, வணங்கி செல்லுமளவு, வாழ்ந்திருக்கின்றனர். இத்தமிழ்நாட்டை வளமுடன் அரசு செலுத்தியும் இருக்கின்றனர். இதற்கு சான்றுகள் பல கீழே தருகிறோம்.

 

தமிழ்நாட்டு மன்னர்களைப் பற்றி

சரித்திரம் கூறுவதென்ன?

 

இத்தமிழ்நாட்டை மூன்று வேந்தர்கள் மட்டும் தான், ஆட்சி செய்திருப்பதாக பொதுவாக கூறப்படுகின்றன. இது மிக தவறு! இத்தமிழ்நாட்டை 5 வம்சத்தினர்கள் ஆண்டிருப்பதாக சரித்திரத்தில் தெரிய வருகிறது. சேர, சோழ, பாண்டிய, பல்லவ, களப்பிரியர் என்று சொல்லும் 5 வம்சத்தினர், இத்தமிழ்நாட்டை பாகம் பாகமாக பிரித்து, அரசு செலுத்தி இருக்கின்றனர். சிற்சில சமயங்களில், சில அரசர்களின் போர்த் திறனால், எல்லைக் கோடுகள் மாறி மாறி இருக்கலாம். சில காலங்களில் ஒரே பிரிவினர் தமிழ்நாடு பூராவையும் ஆட்சி செய்தும் இருக்கலாம். ஆனால் இத்தமிழ்நாட்டை 5 பிரிவினர்கள் ஆண்டிருப்பது என்பது மட்டும் உண்மை. இந்த ஐவரில் களப்பிரியர் என்று சொல்லும் வம்சத்திரைப் பற்றி சென்ற கால சரித்திரம் அவ்வளவாக கூறப்படவில்லை. நமது ஆராய்ச்சிக்கும் அவர்களைப் பற்றி போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. ஆகவே மற்ற நான்கு அரச வம்சத்தினரைப் பற்றியும், அவர்களுக்கும் வன்னியர்களுக்கும் உள்ள உறவைப் பற்றியும் சற்று ஆராய்வோம்.

  • ••

தொண்டை நாட்டு (பல்லவ நாடு) மன்னர்கள்?

தொண்டை நாடு என்பது பல்லவநாடு என்பதே யாகும். இது தமிழ்நாட்டில் தென்னாற்காடு, வட ஆற்காடு, செங்கற்பட்டு, சென்னை, சித்தூர், நெல்லூர் முதலிய முழு ஜில்லாக்களும், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சை ஜில்லாவில் சில பாகங்களும் சேர்ந்தது தான் தொண்டை நாடென்றும் அல்லது தொண்டை மண்டலம் என்றும் வழங்கப்பட்டு வந்தன. இப்பெரிய நிலப்பரப்பைக் கொண்ட தொண்டை வளநாட்டை பல்லவர்கள் அரசாண்டு வந்திருக்கின்றனர். தமிழ்நாடு, வடநாடு, இவைகள் மட்டுமின்றி உலகிலுள்ள மேல் நாடு, கீழ் நாடுகளிலும் ஆட்சி செய்த அரசர்கள் பல்லவர்கள் ஆட்சி செய்த நீண்ட அளவு தொடர்ந்து ஆட்சி செய்யவில்லை. பல்லவர்கள் சுமார் ஒரு ஆயிரம் ஆண்டு வரை தனது ஆட்சியை தொண்டை மண்டலத்தில் செலுத்தி  இருக்கின்றனர். சிற்சில சமயங்களில் இத்தமிழ்நாடு பூராவையும் வடமேற்கே கிருஷ்ணா நதி (ஐதராபாத்) வரைக்கும் வடகிழக்கே விசாகப்பட்டணம் வரைக்கும் கூடி பல்லவர்கள் தனது ஆட்சியை விஸ்தரித்து அரசாண்டிருக்கின்றனர். இதுபோன்று உலகில் எந்த சாம்ராஜ்யங்களும் நீண்ட வருடமும் அதிக நிலபரப்பையும் ஆண்டிருக்கவில்லை. இந்தியாவில் தோன்றிய சந்திர குப்த சாம்ராஜ்யம், சாளுக்கிய சாம்ராஜ்யங்களோடு, அசோக சாம்ராஜ்யம், முகலாய சாம்ராஜ்யம் இவைகள் கூட ஒரு ஆயிரம் வருடம் வரை தனது சாம்ராஜ்யத்தை நீடித்து நடைபெறச் செய்யவே இல்லை. முகலாய சாம்ராஜ்யம் சுமார் 700 வருடம் வரை தான். தனது சாம்ராஜ்யத்தை நடத்தி வந்திருக்கின்றது. இது உலகிலேயே நீண்ட காலம் ஆட்சி செய்ததில் பல்லவ சாம்ராஜ்யத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவதாகத் தான் வருகின்றது. இவை இந்திய சரித்திரம் கூறும் உண்மை.

 

இவ் உலகில் சுமார் ஓராயிரம் வருடம் வரை

தொடர்ந்து ஆட்சி செய்தவர்கள்

பல்லவர்கள்அன்றி வேறு யாருமில்லை!

 

உலகின் கண் உள்ள வேறு பல மேல் நாட்டு, கீழ் நாட்டில் தோன்றிய பல சாம்ராஜ்யங்களை எடுத்துக் கொண்டாலும் கூட பிரிட்டிஷ், பிரான்ஸ், டச்சு, ஸ்பெயின், ஜெர்மனி முதலிய சாம்ராஜ்யங்களை நடத்திச் சென்றவர்களும், ஓராயிரம் வருடம் ஒரே குடும்பத்தினர் ஆட்சியை நடத்தி அரசு புரிந்தது கிடையாது. எந்த நாட்டிற்கும் எந்த அரச வம்சத்தினருக்கும் இல்லாத சாம்ராஜ்ய பெருமை பல்லவர்களுக்கும் அவர்கள் நடத்திய சாம்ராஜ்யத்திற்குத் தான் உண்டு.

 

பல்லவர்கள் யார்? தமிழரா, ஆந்திரரா?

அல்லது வெளி நாட்டாரா?

தமிழ்நாட்டிற்கு பெருமை அடையக்கூடிய அளவு புகழை நிலைநாட்டி விட்டுச் சென்ற அப்பல்லவர்கள் யார்? என்று சற்று ஆராய்வோம். இப்பல்லவர்களைப் பற்றி நாட்டினர் சிலாகித்துப் பேசியும், அவர்கள் அழியாத செல்வமாக விடப்பட்டுச் சென்ற மகாபலிபுரம் போன்ற கோயில்களையும் மற்றும் கல்வெட்டுக்களையும் பார்த்துச் செல்லவும் பல தேசத்து வெளி நிபுணர்கள் இந்தியா வந்து புகழ்ந்து கூறினும் இப்புகழுக்கெல்லாம் மூலகாரணமான அப்பல்லவர்களைப் பற்றி சரியாக அறிந்துக் கொள்ள முடியாமல் சரித்திரப் பேராசிரியர்கள் திண்டாடுகின்றனர். பற்பலர் பலபல வீதம் பேசியும், எழுதியும் இருக்கின்றனர். ஒரு சில ஆராய்ச்சியாளர்கள் பல்லவர்கள் வெளி தேசத்திலிருந்து வந்தவர்கள் என்றும் மற்றும் சிலர் இலங்கையிலிருந்து வந்தவர்கள் என்றும் மற்றும் சில அறிஞர்கள் ஆப்பிரிக்க தேசத்திலிருந்து படையெடுத்து வந்தவர்கள் என்றும், புராண அன்பர்கள் அசுவத்தாமன் என்பவருக்கு பிறந்தவர்கள் தான் பல்லவர்கள் என்றும் பலவிதமாக ஆராய்ச்சியில் கூறி இருக்கின்றனர் மற்றும் சில ஆராய்ச்சியாளர்கள் பல்லவர்கள் தமிழ்நாட்டினர் தான் என்று கூறுகின்றனர். பல்லவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க இப்படி ஆராய்ச்சியாளர்கள் மிகவும் அவதிபட்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆராய்ச்சியாளரும் தனது ஆராய்ச்சி தான் முடிந்த முடிவு என்று சொல்ல பயப்படுகின்றனர். இந்த ஆராய்ச்சியில் தமிழர், இந்தியர் மட்டுமின்றி மேல் நாட்டு ஆங்கிலேயர் ஜெர்மனியர்கள் கூட ஆராய்ச்சி செய்து பல்லவர்கள் யார்? அவர் உள் நாட்டினாரா? அல்லது வெளியில் இருந்து வந்தவர்களா? என்பதை சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்று கைவிட்டு விட்டு உலக வரலாறு ஆச்சரியத்தில் பல்லவர்களை இரண்டாவதாக சேர்த்து விட்டனர். அதாவது 1. பசிபிக் மகா சமுத்திரத்தின் ஆழத்தை கண்டுபிடிக்க முடியாது.  2. பல்லவர் யார் என்பதைக் கண்டுபிடிக்க முடியாது என்று முடியாது லிஸ்டில் சேர்த்து விட்டனர்.

 

பல்லவர்களுக்கும், வன்னியர்களும்

சம்பந்தம் என்ன?

சரித்திரத்தில் ஆதாரம் உண்டா? உண்டு!

இப்படிப்பட்ட அதிசய பிறவிகளான பல்லவர்களை நாம் வன்னியர் என்றும் நாம் அவர்களுடைய வழி வந்தவர்கள் என்றும் சொல்லுகின்றோம். இது வாசகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம். இதைப் போக்க கீழே சில விஷயங்களையும் தருகிறோம்:-

 

மலையைக் குடைந்தது,

கற்கோயில்களை கட்டியது

பல்லவர்களே

 

பல்லவர்கள் யார் என்பதை கண்டுபிடிப்பதில் பற் பலவித மாறுபட்ட கருத்துக்கள் சரித்திர ஆராய்ச்சியாளர்களிடையே இருந்தாலும் தமிழ்நாட்டில் கற்கோயில்களை முதலில் பல்லவர்க்ள் கட்டினர் என்பதை மட்டும் யாரும் மறுக்கவில்லை. அரச மரத்தடியில் மண்ணினாலும் களி மண்ணினாலும் கட்டப்பட்டு வந்த வழக்கத்தை ஒழித்து கற்கோயில்களை முதல் முதலில் தமிழ்நாட்டில் கட்டினது பல்லவர்கள் தான் என்றும், ஒரு மலையை குடைந்து அதை ஒரு கோயிலாக நிர்மானித்து சென்றது பல்லவர்கள் தான் என்றும் இதையே பின்னால் வந்த இடைக்கால சேர, சோழ, பாண்டி மன்னர்கள் பின்பற்றினர் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கூறவும் செய்கின்றனர். இப்படிப்பட்ட கோயில்களை இன்று அரசாங்கத்தினர் இந்து மத பரிபாலன போர்டின் மூலம் நிர்வாகம் செய்து வருகின்றனர். சமீப காலத்தில் இந்த போர்டின் தலைவராக இருந்து பணியாற்றிய பெரியார் கோவ கிழார் அவர்கள் பல்லவர்களைப் பற்றி கீழ் வருமாறு கூறுகின்றார்:-

 

பல்லவர்கள் யார் என்று இப்போது பல சர்ச்சைகள் நடைபெறுகின்றன. சிலர் பல்லவர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்கின்றனர் மற்றும் சிலர் பல்லவர்கள் தமிழரே அல்லர் என்றும் கூறுகின்றனர். இதைப் பற்றி நானும் சிறிது ஆராய்ந்தேன். எனது உத்தியோக மேற்பார்வையின் கீழ் பல ஆயிரம் கோயில்கள் இருந்த வருகின்றன. அதில் பல்லவர்கள் கட்டிய கோயில்களும் பல உண்டு. பல்லவர்கள் கட்டிய கோயில்களின் தற்கால நிர்வாகம் (டிரஸ்டிகள்) யாரிடத்திலிருந்தாலும் அக்கோயில்களின் முதல் மரியாதையை அரசகுலத்தினர் என்று உரிமை பாராட்டும் வன்னியர்கள் தான் பெறுகின்றனர். எனவே வன்னியர்கள் இத்தமிழ்நாட்டு பழங்குடிகளாதலால் பல்லவர்கள் தமிழர்கள் தான் என்று கூறுகிறேன் என்று எழுதி இருக்கின்றார். இதில் ஒரு விசேஷம் என்னவென்றால் ஒரு தமிழ் ஆராய்ச்சியாளர் பல்லவர்களைப் பற்றி ஆராய்ந்து பல்லவர்கள் தமிழர்களல்லர் என்று எழுதி தான் எழுதும் புத்தகத்திற்கு மதிப்புரை வேண்டும் என்று அவரை கேட்டதற்கு தான் நாம் மேலே சொன்ன கருத்துரையை கோவை கிழார் நேர்மாறாக எழுதி இருக்கின்றார்.

கோவை கிழார் ஒரு தமிழறிஞர். அதிலும் ஆங்கில பட்டதாரி. கோயில் மேற்பார்வையிடும் அரசாங்க தலைமை உத்தியோகத்திலிருந்து கல்வெட்டுக்களையும் நடைமுறை பழக்க வழக்கங்களையும் செவ்வனே ஆராய்ந்தவர். அவர் கூறுகின்றார் வன்னியர் மூதாதைகள் தான் பல்லவர்கள் என்று வரவேற்கின்றோம்.

 

தமிழ்ச் சங்கம் மறைந்த பிறகு,

பிற்கால தமிழ்நாட்டின் சரித்திரம் என்ன?

 

 

தமிழ்நாட்டில் எக்காரணத்தினாலே தமிழ்ச் சங்கம் மறைந்த பிறகு தமிழ் நாட்டின் சரித்திரத்தை சரிவர அறிந்துக் கொள்ள முடியவில்லை. கி.பி. 2-ம் நூற்றாண்டிற்குப் பின் தான் தமிழ்நாட்டின் வரலாறு ஒருவாறு ஆரம்பமாகின்றன. அச்சமயத்தில் தான் பல்லவர்கள் தமிழ்நாட்டில் காஞ்சியைத் தலைநகராக கொண்டு ஆட்சி செய்திருக்கின்றனர். அந்த நேரத்தில் சிம்ம விஷ்ணு வர்மன் என்ற பல்லவன் ஆட்சியில் இருந்திருக்கின்றான். இந்த அரசனுடைய தகப்பன் பெயர் கூட தெரியவில்லை. ஆதலால் தான் பல்லவர் யார் என்பது சரிவர கண்டுபிடிக்க முடியவில்லை. தமிழ்நாட்டு சரித்திரத்தின் இடை நடுவே உள்ள சுமார் ஏழு ஆயிரம் வருட வரலாறு தென்படவில்லை. கிருஸ்து பிறப்பதற்கு முன்னிருந்த ஒன்பது ஆயிரம் வருட தொல்காப்பிய காலத்திற்கும் கி.பி. 2-ம் நூற்றாண்டுக்கும் நடுவில் உள்ள சரித்திரம் எங்கு போயிற்று? என்ன ஆயிற்று? என்பது விளங்கவில்லை. ஆகவே கிருஸ்து பிறந்த 2-வது நூற்றாண்டில் தமிழ்நாட்டு சரித்திர வரலாறு கிடைக்கின்றது. அதுவும் பல்லவர் காலத்திலிருந்து தான் தமிழ்நாட்டு பிற்கால வரலாறு தொடர்கின்றது.

 

புத்த மதமும், பல்லவ மன்னர்களும்?

 

காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு அரசு செய்த பல்லவ பரம்பரையின் முதல் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு வர்மன் தனது வாழ்நாள் பூராவும் புத்த மதத்தினனாக இருந்திருக்கின்றான். புத்த சகாப்தம் இந்திய நாட்டில் ஏற்பட்டு பல நாடுகளில் பரவிய போது இத்தமிழ்நாட்டிலும் அம்மதம் பரவ முனைந்திருக்கிறது. இதில் முதன்மையாக நின்று வேலை செய்தவன் சிம்ம விஷ்ணு வர்மன் ஆகும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மன்னர்கள் அல்லது தலைவர்கள் அம்மதத்தை நாட்டில் பரப்ப பாடுபட்ட போது அத்தலைவர்களின் பெயரினாலேயே கால அளவை நிர்ணயித்து தலைமுறைக்கு (பாலி பாஷையில்) சகாப்தம் என பெயரிட்டு அழைத்திருக்கின்றனர். உதாரணமாக புத்த சகாப்தம், அசோக சகாப்தம், மௌரிய சகாப்தம், குப்த சகாப்தம் என்றெல்லாம் அம்மதத்திற்கு பாடுபட்ட அரசர்களின் பெயரினாலே சகாப்தங்களை (தலைமுறை) நிர்ணயித்திருக்கின்றனர். இது போன்றே தென்னாட்டில் புத்த மதத்தில் விஷ்ணு என்று ஒரு பெயர் அடிபடுகின்றது. தென்னாட்டில் விஷ்ணு என்ற பெயருள்ள புத்த மதத்தை தழுவிய மன்னன் சிம்ம விஷ்ணு வர்மனைத் தவிர வேறு எவருமில்லாததால்  விஷ்ணு சகாப்தம் என்றழைக்கப்பட்டது. முதல் பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு வர்மனைத் தான் குறிப்பிடும் என்று திடமாக நம்புகிறோம். மேலும் வன்னிய சமூகத்தில் பிறந்த சிலர் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள் இன்றும் சென்னையில் பலர் இருக்கின்றனர். நாம் இவர்களை அணுகி உங்கள் முன்னோர்கள் எந்த காலத்தில் புத்த மதத்தை தழுவினர்? உங்களுடைய சகாப்தத்தின் பெயர் என்ன, என்று கேட்டால் தங்கள் சகாப்தம் விஷ்ணு சகாப்தம் என்றும் அந்த சகாப்தத்தில் (தலைமுறையில்) தங்களது முன்னோர்கள் பௌத்தர்களாக மாறிவிட்டனர் என்றும் கூறுகின்றனர். இதனால் என்ன விளங்குகின்றதென்றால் ஒரு கட்சியில் இருக்கும் ஒரு தலைவனை அத்தலைவனுடைய சமூக மக்களே ஆதரிப்பது போல் புத்த மதத்திலும் இப்படிப்பட்ட சமூகப் பற்று கொண்டு நடைபெற்றிருக்கின்றது என்று நாம் திடமாக நம்பவும் இடம் இருக்கின்றது.

 

பல்லவ மன்னர்களும்,

சைவ மத வளர்ச்சயும்?

 

மேலும் சிம்ம விஷ்ணு வர்மனின் மகன் மகேந்திர வர்ம பல்லவன் ஆட்சியிலும் அன்னவருடைய குமாரன் நரசிம்ம வர்மன் ஆட்சியிலும் சைவ மதம் மிகச் சிறந்து விளங்கி இருந்திருக்கின்றது. முதலில் புத்த மதத்தை பின் பற்றி வந்த மகேந்திர வர்மனை அப்பர் சுவாமிகள் தான் சைவ மதஸ்தனாக மாற்றினார் என்று சரித்திரம் கூறுகிறது. பின்னவரான நரசிம்ம வர்மனுடைய ஆட்சியில் படைக்கு சேனைத் தலைவனாக இருந்து பல்லவ சாம்ராஜ்யத்திற்கே பெரும் புகழை தேடிக் கொடுத்த போர் வீரம் பரஞ்சோதி. சைவ மதத்தை போற்றி சிறு தொண்ட நாயனராக மாறி 64 நாயன்மார்களில் ஒருவறாக விளங்கவும் செய்கின்றார். சைவ மதத்தை பின்பற்றும் இன்றுள்ள வன்னியர்கள் 1. சேரமான் பெருமாள் நாயனார், 2. வல்லாள மகாராசன் இவர்களை சைவ சமயத்தில் போற்றி புகழ்வதைப் போல். 3. சிறு தொண்டனையும் தலைவனாக ஏற்று கொண்டாடவும் செய்கின்றனர். படையாட்சி மரபில் வந்த சிறு தொண்டனை படையாட்சிமார்கள் போற்றி புகழ்வதும் கொண்டாடுவதும் எதனால்? சமூக பற்று அல்லவா!

 

 

 

பல்லவர்களுக்கு உள்ள பட்டமும்

வன்னியருக்குள்ள பட்டமும், பெயரும்?

 

வன்னியர்கள் பல்லவ மன்னர்கள் பின் சந்ததிகள் என்பதற்கு இன்றும் சான்று காணலாம். அன்று வேத மோதிய அந்தணர்களுக்கு சர்மா என்ற பட்டப் பெயர் இருந்திருக்கின்றது. இது போன்றே பல்லவ சாம்ராஜ்யத்தை ஆட்சி செய்த ஒவ்வொரு மன்னர்களுக்கும் வர்மா என்ற பட்டப்பெயர் வழங்கி இருக்கின்றது. இன்றைய தினம் கொச்சி திருவாங்கூரை ஆட்சி செய்யும் அரசர்களுக்கும், வர்மா என்று தான் பட்டப்பெயர் வழங்கி வருகின்றது. இவ்வித பட்டப்பெயர் இப்பொழுது வேறு எந்த சமூகத்தினருக்கும் கிடையாது. ஆனால் வன்னிய சமூகத்திற்கு மட்டும் வர்மா என்ற பட்டப்பெயர் கொடுத்து அழைக்கப்படுகின்றது. இதற்கு சான்றாக நமது குலகவி அர்த்தநாரீச வர்மா அவர்களே சான்றாகலாம். எனவே அன்று இருந்த  பல்லவர்களின் பட்டப்பெயர்களை இன்று நம் சமூகமே ஏற்று நடைமுறையில் அழைக்கப்பட்டு வருவதால் வன்னிய சமூகம் பல்லவர்களின் பின் சந்ததிகள் என்றும், பல்லவர்கள் ஓராயிரம் ஆண்டு ஆட்சி செய்து வந்திருப்பதால், அவர் வழி வந்த நாம் அரச பரம்பரையினர் என்று உரிமை பாராட்டுவதும், முற்றிலும் பொருந்தும் என்றே கூறுகிறோம். இப்பல்லவர்களின் கடைசி பரம்பரை தான் உடையார் பாளையம் குறுநில மன்னர்கள். இப்பரம்பரையின் கடைசி குறுநில மன்னரின் பெயர் ராஜஸ்ரீ கச்சி சின்ன நல்லப்ப காளாக்க தோள உடையார். இவருடைய தம்பியின் பெயர் ராஜஸ்ரீ சின்ன துரை காளாக்க தோள உடையார்.

 

இன்று நீண்ட உறக்கத்திலும், கட்டுப்பாடு தளர்ந்ததும் இருக்கக்கூடிய இச்சமூகத்தை பாராண்ட தமிழ் மன்னர்களின் சந்ததி என்று கூறுகின்றீரே? இதற்காக வேண்டிய ஆதாரங்களை சமயத்திலும், சரித்திரத்திலும் எடுத்துக் காட்டிருக்கின்றீரே? இதற்கான கல்வெட்டு சாசனங்கள் ஏதாவது இருக்கின்றதா? என்று வாசகர்களோ அல்லது வேறு அன்பர்களோ நம்மை கேட்கலாம். இதற்கும் சான்றுகள் ஒன்றள்ள. பல இருக்கின்றன. இதனுடைய விளக்கம் 113-ம் பக்கத்தில் வெளியாகி இருப்பதை வாசகர்கள் நன்கு காணலாம்.

 

திருப்பதி கோயிலை கட்டினது யார்?

ஓர் சோழ மன்னன்!

 

இன்று தமிழ்நாட்டிற்கு வடக்கெல்லையாக இருப்பது திருப்பதியே ஆகும். திருமலை என்ற பெயர் மாறி திருப்பதி என்று தமிழும், சமஸ்கிருதமும் சேர்ந்து வழங்கும் அத்திருப்பதி மலை மீது கோயிலையும், திருப்பதிக்கு வடக்கே பாயும் வட பெண்ணை ஆற்றையும் கட்டினவனும், வெட்டினவனும் ஓர் சோழ மன்னன் ஆகும். அந்த சோழ மன்னனின் முழுப்பெயர் கருணாகர தொண்டைமான் வன்னியன்.

 

காலம் மாறியது!

சண்டாளர்கள் சதி செய்தனர்!

வன்னிய சமூகம் அரசை இழந்து விட்டது!

 

மேலே நாம் கூறிய அனைத்தும் நம்முடைய சொந்த கருத்தல்ல. பல ஆராய்ச்சிகளின் மூலம் கண்டறிந்தே நாம் கூறுகின்றோம். நாம் கூறுகின்றோம். நாம் ஆராயப் புகுந்த எத்துறையிலும் சந்தேகத்திற்கு இடமில்லாதவாறு ஒரு முறைக்கு பண்முறை ஆராய்ந்தே இவைகளை வெளியிடுகிறோம். சமயமாயினும் சரி. அல்லது சரித்திரம் இதிகாச புராணங்களா சிலாசாசணம் ஆயினும் சரி.

 

எதைக் கொண்டு ஆராய்ந்து பார்த்தாலும் வன்னிய சமூகம் நாடாண்ட சமூகம் என்றும், இன்றுள்ள வன்னிய மக்கள் தமிழ் மன்னர்களின் பின் சந்ததிகள் என்றும், தெள்ளத்தெளிய நன்கு தெரிய வருகின்றது. இப்படிப்பட்ட வீரமிக்க பரம்பரையில்  வந்த இப்போதுள்ள மக்கள், முன்பிருந்த நிலையில் இன்றிருக்கவில்லை. மிகவும் மோசமான நிலைமையில் தான் இருந்து வருகின்றனர். இது இவர்களுடைய தப்பல்ல. பல கால தேச வர்த்தமானங்கள் இவர்களை இப்படிப்பட்ட கீழ்நிலைக்கு இழுத்து செல்லப்பட்டு விட்டது. வாயிருதும் இம்மக்கள் ஊமைகளாக மாறிவிட்டனர்.

 

வலிமை இருந்தும் கோழைகளாக செய்யப்பட்டு விட்டனர். வீரம் இருந்தும் உணர்ச்சி அற்றவராக்கப்பட்டனர். இன்று இவர்களுடைய வீரமும், தீரமும், பண்பும் பூத்திட்ட நெருப்பைப் போல் அணல் குன்றி மங்கி விடப்பட்டிருக்கின்றன. இதை நீக்கி வேலை செய்ய வேண்டியது தான் வன்னியராகப் பிறந்த நமது முக்கியக் கடமை.

 

  • ••

பல்லவர் செதுக்கிய குகை கோயில்கள்?

 

  1. மகேந்திரவாடி வடாற்காடு           ஜில்லா
  2. பல்லவபுரம் (பல்லாவரம்) செங்கற்பட்டு            ,,
  3. மாமல்லபுரம் (மகாபலிபுரம்) செங்கற்பட்டு            ,,
  4. திருக்கழுக்குன்றம் செங்கற்பட்டு            ,,
  5. வல்லம் செங்கற்பட்டு            ,,
  6. மாமண்டூர் வடாற்காடு             ,,
  7. ,தளவானூர் தென்னாற்காடு          ,,
  8. மண்டபப்பட்டு புதுச்சேரி              ,,
  9. மேலைச்சேரி தென்னாற்காடு          ,,
  10. திருச்சிராப்பள்ளி திருச்சி    ,,
  11. குன்ராண்டார் கோவில் தஞ்சை    ,,
  12. குடுமியா மலை தஞ்சை    ,,
  13. நாரத்த மலை புதுக்கோட்டை    ,,
  14. சித்தன்ன மலை புதுக்கோட்டை    ,,
  15. சீயமங்கலம் வடாற்காடு    ,,
  16. சிங்கவரம்

(சிங்க பெருமாள் கோயில்) செங்கற்பட்டு            ,,

  1. நாமக்கல் சேலம்    ,,
  2. பழியிலி ஈச்சுரம் புதுக்கோட்டை    ,,
  • ••

 

பல்லவர்களுடைய வம்ச பரம்பரையை

குறிக்கும் காலம் என்ன?

 

பல்லவர்கள் ஆட்சி செய்ததை நான்கு பிரிவாக பிரிக்கலாம். விவரம் கீழ் வருமாறு:-

முற்காலப் பல்லவர்

                (கி.பி. 225 – 340)

 

இடைக்காலப் பல்லவர்

                (கி.பி. 340 – 575)

 

பிற்காலப் பல்லவர்

                (கி.பி. 575 – 900)

 

புதிய பல்லவர் மரபு

                (கி.பி. 900 – 1000)

 

 

  • ••

 

 

பல்லவர் ஆட்சிக் காலம்

 

 

  1. தொண்டை நாடு (கி.பி. 200 – 900)
  2. சோழ நாடு புகுந்த காலம் (கி.பி. 225 – 250)

சோழ நாட்டை ஆண்ட காலம்        (கி.பி. 225 – 575)

  1. பாண்டிய நாடு புகுந்த காலம் (கி.பி. 250 – 300)

பாண்டிய நாட்டை ஆண்ட காலம்     (கி.பி. 250 – 550)

  1. கி.பி. 850க்குப் பிறகு பல்லவர்கள் ஆட்சி இடையிடையே குன்றியும், ஓங்கியும், முடிவில் கி.பி. 10ஆம் நூற்றாண்டில் சிதைத்து விட்டன.

 

 

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

பல்லவ சாம்ராஜ்யத்தை

நிலை நாட்டிய வீர மன்னர்கள்?

 

பல்லவ அரசர்களில் பல பேர் இருப்பினும், கீழ் கண்டவர்கள் மிகவும் போர்த்திறன் படைத்தவர்கள். இவர்களுடைய வலிமையினால் தான் பல்லவ சாம்ராஜ்யம் ஏற்பட்டு சுமார் ஓராயிரம் வருடம் வரை நீடித்தது.

 

மகேந்திர வர்மன்               (கி.பி. 615 – 630)

நரசிம்ம வர்மன்                 (கி.பி. 630 – 660)

பரமேசுவர வர்மன்              (கி.பி. 670 – 685)

இராச சிம்மன்                  (கி.பி. 685 – 705)

இரண்டாம் நந்தி வர்மன்        (கி.பி. 710 – 775)

நந்தி வர்மன்                    (கி.பி. 775 – 825)

மூன்றாம் நந்தி வர்மன்         (கி.பி. 825 – 850)

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சோழ நாட்டு மன்னர்கள்?

 

சேர நாட்டை போன்றே, சோழ நாட்டிலும் அரசாண்ட பல அரசர்கள் வைஷ்ணவத்தையும், சைவத்தையும் பின்பற்றி ஆட்சி செய்திருக்கின்றனர். இவர்களிலே வைஷ்ணவத்தை திருமங்கை மன்னனும் சைவத்தை தழுவிய வல்லாளனும், வன்னிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று நாம் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. வைஷ்ணவ வன்னியர்கள் குலசேகரனுக்கு அடுத்தபடியாக திருமங்க ஆழ்வாரையே கொண்டாடுகின்றனர். சைவ சமயத்தை தழுவி, அதன் மீது அளவிலாத பக்தி கொண்ட சோழ மண்டலத்து மகுடாபதி வல்லாள மகாராசன், ஓர் வன்னியன் என்று ருசுபடுத்துவதற்கு, இன்றும் திருவண்ணாமலையில் சான்று காணலாம்! ஆண்டு தோறும் நடைபெறும் வல்லாள மகாராசன் ஈமக்கிரியை சடங்கு திருவண்ணாமலைக்கு அடுத்த பள்ளி கொண்டா பட்டு ஆற்றங்கரையில் பிரதி மாசி மகத்தன்று நடைபெறுகின்றது. வல்லாள மகாராசனுக்கு ஈமக்கிரியை செய்ய திருவண்ணாமலை ஆலயத்திலிருந்து அருணாசல ஈஸ்வரர் சென்று ஆற்றங்கரையிலே தனது தந்தையான வல்லாள மகாராசனுக்கு (ஈஸ்வரன்) பிள்ளை பாவத்தில் அமர்ந்து தர்ப்பனம் கொடுக்கிறார். அச்சமயத்தில் சம்மந்தப்பட்டு கிராமத்திலுள்ள வன்னிகுல மக்கள், சுவாமி அருணாசல ஈஸ்வரருக்கு சம்மந்தம் கட்டுகின்றார்கள். இவை இன்றும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு மாசி மகத்தன்றும் நடைபெறுகின்றன. இதனுடைய தாத்பர்யம் என்ன? சோழ தேசத்து மன்னன் வல்லாள மகாராசன் ஓர் வன்னியன். அவனுக்கு நடக்கும் ஈமக்கிரியை சடங்கில் சம்மந்தம் உரிமை பாராட்ட வன்னியருக்குத்தான் உரிமை இருக்கிறது என்பது அனைவருக்கும் நன்கு புலப்படுகிறதல்லவா? இந்த உரிமையை ஒழித்து விட வேண்டுமென்று சில வேறு சமூகத்தினர்கள் செய்த சூழ்ச்சிகள் எல்லாம் தடுக்கப்பட்டு இன்றும் இந்த உரிமையை வன்னிய சமூகத்தினர் விடாமல் செய்து வருகின்றனர்.

இந்த வள்ளாள மகாராசன் ஈமக்கிரியை சடங்கில் வன்னியரின் உரிமையை நிலை நாட்ட, சென்னை இராயபுரம் வள்ளல் மு. இராசு நாயகர் அவர்கள், புதுவை இராமசாமி நாயகர் தர்ம பண்டின் தொகையைக் கொண்டு பிரதி வருடமும் இச்சடங்கை முன்னின்று நடத்தி வருகின்றார். இவருடன் மற்றும் திருவண்ணாமலை தாலுக்கா வன்னியர்களும் உடனிருந்து ஒத்துழைத்து வருகின்றனர்.

சோழ நாட்டு மன்னர்களின் கடைசி

பரம்பரையின் பிச்சபுரம் ஜமீந்தார்!

மற்றுமொரு உதாரணமும் கூறுகிறோம். சோழ மன்னர்களின் கடைசி பரம்பரையாக இன்று இருப்பவர்கள் தஞ்சை ஜில்லாவிலே உள்ள பிச்சபுரம் குறுநில மன்னரே யாகும். அவர்களில் யாராவது இளவரசு பட்டமோ அல்லது குறுநில மன்னராகவோ செய்விக்கப்படும் போது அச்சடங்கு சிதம்பரம் கோயிலிலே தான் நடைபெறுகின்றன. அதிலும் சுவாமி நடராசா அவர்கள் அமரக்கூடிய பஞ்சாட்சரப் படியில் தான் பட்டம் தரிக்கும் குறுநில மன்னர் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்ளுகிறார்கள். இது மிகவும் ஆச்சரியப்படக் கூடிய விஷயம் தான். ராமலிங்க அடிகளையே விரலாட்டி அடித்த பார்ப்பனர்கள் இதற்கெல்லாம் இடம் கொடுப்பார்கள்? ஒரு சாதாரண மனிதனை அதிலும் ஒரு வன்னியனை சுவாமி நடராஜா அவர்கள் அமரக்கூடிய இடத்தில் உட்கார வைக்க பிரியப்படுவார்களா? என்று வாசகர்கள் ஆச்சரியப்படலாம். ஆனால் நாம் கூறுவது உண்மை. சுவாமி நடராசா அவர்களுக்கு எப்படி அபிஷேகம் செய்யப்படுகின்றதோ, அதைப் போன்றே இக்குறுநில மன்னருக்கும் செய்வித்து நாம் மேலே கூறியவாறு பட்டம் சூட்டுகின்றனர். இக்குறுநில மன்னர் பிச்சபுரம் அதிபதியாக சிதம்பரம் கோயிலில் ஆண்டவன் அமரக்கூடிய அதே பஞ்சாட்சரப்படியில் தான் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்கின்றார். சென்றகால சோழ தேசத்து மன்னர்களும் தான் கட்டிய பல கோயில்களில் சிதம்பரத்தை தான் தேர்ந்தெடுத்து இக்கோயிலின் பஞ்சாட்சரப்படியில் தான் அமர்ந்து பட்டம் சூட்டிக் கொள்வது வழக்கமாம். இதே உரிமையை பின்பற்றித்தான் சோழ மன்னர்களின் கடைசி பரம்பரையான தற்சமயம் பிச்சபுரம் குறுநில மன்னராக இருக்கும் ஆண்டியப்ப சூரப்ப சோழனார் அவர்கள் சமீபத்தில் சிதம்பரம் கோயிலில் மணிமுடி தரித்துக் கொண்டார். க்ஷ சோழனார் அவர்கள் வன்னிகுல க்ஷத்திரிய சமூகத்தை சார்ந்தவரானபடியால் வன்னிய சமூகம் மன்னர்களின் வம்சத்தினர் என்று கூறுகிறோம்.

  • ••

சேர நாட்டு மன்னர்கள்?

சேர தேசம் என்பது கேரளம் (மலையாளம்) என்று இப்பொழுது அழைக்கப்படுகின்றது. இந்நாடு ஒரு காலத்தில் தமிழ்நாடாகவே தோற்றமளித்து, தமிழ் மொழியே அங்கு பேசப்பட்டு வந்தது. தமிழுடன் சமஸ்கிருதத்தை பலவந்தமாக சேர்க்கப்பட்டு, சுமார் 650 ஆண்டுகளாகத் தான் மலையாளம் என்ற சேர்க்கை மொழி இன்று அங்கு கையாளப்பட்டு வருகிறது. கேரளம் அன்று தமிழ்நாடாகத் திகழ்ந்த போது, அந்நாட்டை பல மன்னர்கள் ஆண்டிருக்கின்றனர். அவர்களில் ஒருவர் குலசேகர மன்னன் மற்றொருவர் சேரமான் பெருமாள் நாயனார். இவர்களில் முந்தியவர் வைஷ்ணவர், பிந்தியவர் சைவர். அக்காலத்தில் சமயத்தின் பேரால் வாக்கு வாதமும், போராட்டமும் நடைபெற்று வந்தபடியால் வைணவத்தையும் சைவத்தையும் அதனதனை போற்றும் மன்னர்கள் ஆதரித்தனர் பிரியப்பட்ட சமயத்தை தழுவினர். இதன்படியே தனது குடும்பத்தாரையும், நாட்டு மக்களையும் தழுவும்படி கோரினர். மக்கள் அதன்படியே நடக்கவும் செய்தனர். அம்மக்களை அம்மன்னர்கள் சமயாச்சாரிகளாக தலைமை தாங்கி நடத்தவும் செய்தனர்.

அன்று, சமயப் போராட்டம்!

இன்று, கட்சிப் போராட்டம்! – ஆனால்

இரண்டிலும் எதைப் பார்க்கிறோம்?

இங்குதான் நாம் ஒரு முக்கிய விஷயத்தை தெரிவிக்கப் பிரியப்படுகின்றோம். இக்காலத்தில் பல அரசியல் கட்சிகள் இங்கு வேலை செய்கின்றன. அதில் அனேக மக்கள் சேர்ந்திருக்கின்றனர். அக்கட்சிகளை சில முக்கிய தலைவர்கள் தலைமை தாங்கி நடத்துகின்றனர். ஆனால் அக்கட்சியில் சேர்ந்திருக்கும் மக்கள், எப்படி தத்தமது சமூகத்தில் உதித்த தலைவர்களேயே அரசியல் கட்சிகளிலும் தலைவர்களாக தேர்ந்தெடுத்து, ஆதரித்து அவர் சொல்படி நடக்கன்றனறோ! இதுபோன்றே சமயப் போராட்டம் நடந்த அக்காலத்திலும், தத்தமது சமூகத்திலுதித்த சமயாச்சாரிகளையே தலைவராக ஏற்றும், போற்றிப் புகழ்ந்தும், அவர் வழி பின்பற்றியும், அக்காலத்து மக்களும் நடந்திருக்கின்றனர். உதாரணமாக:- வைஷ்ண வதத்தில் இராமானுஜரை பிராமணர்கள் போற்றிப் புகழ்ந்து, சிலாக்கியமாக பேசுகின்றனர். அவரைவிட ஆழ்வாராதிகளிலே சிறந்தவர் வேறு யாருமில்லை என்று ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். இவை அனைத்தும் எதைக் கொண்டு பேசுகின்றனர்? இராமானுஜரை விட அதிக பக்தி கொண்ட ஆழ்வாராதிகள் வைஷ்ணவத்தில் கிடையாதா? பலர் இருக்கின்றனர்.

அவரைவிட மேலான ஆழ்வாராதிகள் இல்லாமல் போனாலும், அவருக்கு ஈடாக இருக்கத் தான் செய்கின்றனர். இருந்திடினும் பிராமணர்கள் ஏன் இராமானுஜரை போற்றுகின்றனர்? எல்லாம் சமூகப் பற்று தான் காரணம்! இராமானுஜர் ஒரு பிராமணர்! என்ற காரணத்தினால் அவரை சிலாகித்துப் பேசுகின்றனர்! வைஷ்ணவ சமயத்தில் பிராமணர்கள் எல்லாம் இராமானுஜரையே தலைவனாக ஏற்று, பெரு மதிப்பு கொடுத்து ஆதரித்தனர். இது போன்றே சைவ சமயத்திலும் பிராமணர்கள், தனது குடிப்பிறந்த சங்கராச்சாரியாரையே போற்றி, உயர்வாக பேசி, அவர் காட்டிய வழியிலேயே சைவ பிராமணர்கள் இன்றும் நடந்து வருகின்றனர்.

 

வேளாளர்கள், சேக்கிழாரையும்

அரிஜனங்கள், நந்தனாரையும்

போற்றிப் புகழ்வதின் மர்மம் என்ன?

இது போன்றே வேளாளர்கள் வைஷ்ணவத்தில் பெரியாழ்வாரையும் சைவத்தில் சேக்கிழாரையும், தாழ்த்தப்பட்டவர்கள் வைஷ்ணவத்தில் திருப்பாணாழ்வாரையும், சைவத்தில் நந்தனாரையும், இதுபோன்றே பற்பல சமூகத்தினர்கள், தத்தமது குடிபிறந்த தலைவர்களையே சமயத்திலும் பின்பற்றி நடந்தது அவர்களைப் போற்றி வந்திருக்கின்றனர். இதன்படியேதான் வன்னிய சமூகத்தினரும் வைஷ்ணவத்தில் தமது குலத்தில் வந்த குலசேகர ஆழ்வாரையும், சைவத்தில் சேரமான் பெருமாள் நாயனாரையும் ஆதரித்து, அவர்களையே சமய தலைவர்களாக ஏற்று அவர்கள் காட்டி வழியே நடத்திருக்கின்றனர். எனவே சேரநாட்டை ஆட்சி கெய்த குலசேகரனும், சேரமான் பெருமாள் நாயனாரும், மன்னர் குலமாதலால் அக்குல மன்னரை ஆதரிக்கும் வன்னிய சமூகம் அரச பரம்பரை என்று நாம் திடமாக கூறுகிறோம். இதற்கு அத்தாட்சி தேவையெனில் நாடெங்கும் உள்ள வைஷ்ணவ வன்னியர்கள் இன்று தனது குடிபிறந்த குலசேகர மன்னன் பெயரால், ஸ்ரீமத் குலசேகர ஆழ்வார் பக்த ஜன சபை என்றும், குலசேகர ஆழ்வார் பக்தஜன சபை என்றும், குலசேகர சுவாமிகள் பஜனை மடம் என்றும் தனது சமூக பற்றினால் உரிமை பாராட்டி, தனது குலத்தலைவனையே சமயத்திலும் தலைவனாக ஏற்று, இன்றும் நடந்து வருகின்றனர். ஆழ்வார்களிலே பல பேர் இருக்க, அவர்கள் பெயரை மட்டும் வன்னியர்கள் போற்றி புகழ்வதேன்? சமயமாயினும், கட்சியாயினும் அல்லது வேறு எது வந்து தன் முன் நின்றாலும் சமூக கண் கொண்டு பார்த்தே எப்போதும் எல்லோரும் நடந்திருக்கின்றனர்.

  • ••

பாண்டிய நாட்டு மன்னர்கள்?

சேர நாட்டையும், சோழ நாட்டையும் தன் உள்ளடக்கிக் கொண்ட வைஷ்ணவ சமயம். எக்காரணத்தினாலோ பாண்டிய நாட்டில் பரவாமல் நின்று விட்டிருக்கின்றது. ஆகவே பாண்டிய நாட்டில் சைவ சமயமே சர்வ பரிபூரணமாக ஆட்சி செய்திருக்கின்றது. இச்சமயத்தை அந்நாட்டிலே பரப்பியவர் நக்கீரரே தலை சிறந்தவர் ஆகும். பாண்டியநாட்டு அரச அவையிலே படைத்தலைவனாக இருந்த ஒரு சேனாதிபதியினுடைய மகன் நக்கீரர் என்று தெரிய வருகின்றது.

 

ஆனால் நக்கீரர் ராஜ போகத்தை விடுத்து எதற்காக சமயாச்சாரியாக மாறினார் என்பது தான் நம்முடைய ஆராய்ச்சிக்கு எட்ட வில்லை. அவர் ஒரு ராஜ குடும்பத்தை சேர்ந்தவர் என்பது மட்டும் நன்கு தெரிகின்றது. அவருடைய வாழ்க்கையிலே ஒரு தாசி அவர் மீது காதல் கொள்ளுகிறாள். அதற்கிணங்கும்படி நக்கீரரிடம் மன்றாடுகிறாள். அச்சமயத்தில் ராஜபோகத்தில் வாழ்ந்த நீங்கள் ஏன் துறவு கொள்ளல் வேண்டும் என்று நக்கீரரை பார்த்து கேட்கிறாள். இதைக் கொண்டு நாம் நக்கீரரை கூர்ந்து ஆராய்ந்தால் அவர் ஓர் போர் வீரன் என்று விளங்குகின்றது. நக்கீரரிடம் போர்குணம் இருந்தபடியால் தான் நெற்றிக்கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே என்று நீதிக்காக ஆண்டவனையே எதிர்த்தார் போலும் சமயத்திற்காக நீதிக்கு போராடிய இவர் அரசயலில் நீதிக்காக உயிரை விட்ட பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் வழித்தோன்றலாகவே இருக்கலாம். மேலும் திருநெல்வேலி ஜில்லா சிவகிரி குறுநில மன்னர்கள் சைவத்தை அனுசரிக்கும் போது அச்சமய ஆச்சாரியரான நக்கீரையை வழிபடுகின்றனர்.

 

அந்த சிவகிரி குறுநில மன்னர்கள் தான் பாண்டியநாட்டு மன்னர்களின் கடைசி சந்ததிகளாகும். அக்குறுநில மன்னர்கள் தங்களை வன்னிகுல க்ஷத்திரியர் என்று சொல்லிக் கொள்ளுகிறார்கள்.

 

  • ••• •

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu