அறம் வென்றது! நீதி கிடைத்தது!
சம்பு மகரிஷி கோத்திரத்தில் உதித்த உயர்வான சொந்தங்களே!
தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையான வன்னிய சமூகம் தன் குலம் தழைக்க நடத்திய அறப்போராட்டங்களையும், மறியல் போராட்டங்களையும் போல உலகில் வேறெந்த இனமும் நடத்தி இருக்கமுடியாது. இந்திய தேசத்தில் மதரீதியாக பெரும்பான்மையாக வாழும் இந்துக்களுக்கு கிடைக்கும் சலுகைகளும், உரிமைகளும், அதிகாரப் பகிர்வும் இன்றளவும் இனரீதியாக பெரும்பான்மையான வன்னியர்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை.
சுதந்திரம் பெறுவதற்கு முன்பும், பெற்ற பின்பும் சாதி ரீதியாக எழுச்சி பெற்று உரிமைகளை கேட்ட முதல் இனம் வன்னிய இனமே. அதுதான் அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்தினருக்கும் ஆத்திரத்தை உருவாக்கி விட்டது. நம்மை பிரித்து வைத்தும், உருவாகும் தலைவர்களை உருக்குலைய வைத்தும், பதவி ஆசைகளை காட்டியும் போராடிய இந்த இனத்தை ஒரு கூண்டுக்குள் அடிமையாக கிடக்கும் ஐந்தறிவு மிருகத்தைப் போல் பலிகடாவாக்கி விட்டார்கள்.
அரசியலில் அதிகாரத்தை பெறுவதற்கு இன்னும் காவடியாட்டம் போட்டும் உரிய பலன் கிடைக்கவில்லையே என்ற ஆதங்கம் இருந்தாலும், கிடைத்த அரசியல் வாய்ப்பை சுயநல குடும்ப குள்ள நரிக் கூட்டத்திடம் அடகு வைத்த வன்னியர்கள் அக்கும்பலுக்கு அடிமையாக நடப்பதை வாடிக்கையாக்கி விட்டதை நினைக்கும் போது வேதனையாகவும் இருக்கிறது.
வன்னியர் குரல் இதழ் தலையங்கத்தில் இது போன்று எழுதியது கிடையாதே என்று நீங்கள் நினைப்பது புரிகிறது. ஆம் சொந்தங்களே! நமக்கு உழைப்பதாக சத்தியம் செய்து நடித்து ஏமாற்றியவர்களை இன்னும் வாழ விட்டும், பேச விட்டும், இந்த சமூக மக்கள் வேடிக்கை பார்க்கிறார்களே என்று நெஞ்சு பதறுகிறது. அதன் வெளிப்பாடே இந்த முன்னோட்டம்.
இதோ! 2012 ஏப்ரல் மாத இதழாக தமிழ்ப் புத்தாண்டு சிறப்பிதழாக மலர்ந்திருக்கும் இந்த இதழ் காலத்தால் மறக்க இயலாத பொக்கிஷமாக உங்கள் கைகளில் தவழ்கிறது. வன்னிய குல கூட்டமைப்பின் உயிர் மூச்சான கொள்ளையுமான வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு விஷயத்தில் நம் தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் ஒப்பற்ற அரசாணையை வெளியிட்டு தனி ஒதுக்கீடு கிடைக்க முதல் அடிமை எடுத்து வைத்து சாதனை புரிந்து இருக்கிறார் என்ற தித்திப்பான செய்தியை சொந்தங்களாகிய உங்களுக்கு சமர்ப்பித்து மகிழ்கிறேன்.
தனி உள் ஒதுக்கீடு வழங்கப்பட்ட விவரமும் அதற்கான நம் முன்னெடுத்து நடத்தி அறப்போராட்டங்களும். நீதியைப் பெறுவதற்காக நடந்த சட்டப் போராட்டங்களும் விரிவாக விளக்கப்பட்டு ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறேன். நமது முன்னோர்களும், நான் வன்னியச் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து சமுதாயப் பணியாற்றியதில் தொடங்கி நடந்த மறியல் போராட்டங்களும் அந்தந்த கால கட்டத்தில் நடந்த நிகழ்வை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கின்றன.
அந்த அறப் போராட்டங்களிலும், மறியல் போராட்டங்களிலும் பங்கேற்று, படிப்பினையை பெற்ற அனுபவத்தோடு தான் வன்னியர் கூட்டமைப்பிற்கு தலைமை தாங்கி அறிவாயுதம் ஏந்திய சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தேன். வன்னியர்களின் இன்றைய தலையாய பிரச்சனை தனி ஒதுக்கீடும், பொதுச் சொத்து வாரியமும், நல வாரியமும் தான்.
அதற்கான களத்தில் போராட்ட வடிவத்தை மாற்றி சட்டப் போராட்டமாக்கினேன். விலைவில் அதனுடைய பலன்களை நம் குல மக்கள் அனுபவிக்கும் நேரம் வந்து விட்டது. நமது தொடர் போராட்டத்திற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மாபெரும் வெற்றியை தந்ததற்காக நாம் ஒற்றுமையாய் ஓரணியில் அவர் பின்னால் அணிவகுக்க வேண்டும்.
தனி உள் ஒதுக்கீடு அரசாணையை வெளியிட்டதால் மாநில அரசின் உள்ளக் கிடக்கை உள்ளங்கை நெல்லிக்கனியாய் விளங்கிவிட்டது. அதை மத்திய அரசின் ஆணையம் மறுக்குமா என்று யாரும் ஐயப்படத் தேவையில்லை. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருவது நமது கோரிக்கைக்கு வலு சேர்ப்பதாக அமையும்.
இந்த இதழில் தனி உள் ஒதுக்கீட்டுக்கான சிறப்புக் கட்டுரை தவிர்த்து பேராசிரியர் காமராஜ் அவர்களின் வெற்றி நிச்சயம் தொடரும், வழக்கம் போல் மாத பலன்களை அள்ளித் தரும் நமது சோதிடர் பாரதிரெங்கன் அவர்களின் தொடரும் சிறப்பானதாக இடம் பெற்றிருக்கிறது.
சொந்தங்களே! கடந்த மார்ச் இதழில் வன்னியர் அவதரித்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று நமது வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் ஈரோடு மாவட்டம் பவானியில் வன்னியர் எழுச்சி நாள் விழா நடைபெறப் போவதை எழுதி அழைப்பு விடுத்து இருந்தேன். விழா விந்திருந்த நம் சொந்தங்கள் அனைவருக்கும் எனது வீரவணக்கத்தை காணிக்கையாக்குகிறேன். இந்த இதழில் எழுச்சி நாள் விழா நிகழ்வுகள் சிறப்பாக சேர்க்கப்பட்டுள்ளன. நம் குல சொந்தங்களின் எழுச்சி மிக்க உற்சாகத்தால் விழா சிறப்புற நடந்தேறியது.
நமது விழாவுக்கு இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் வீரத்துறவி திரு. இராமகோபாலன் ஐயா அவர்கள் வருகை தந்து விழாவினை துவக்கி வைப்பதற்காக 5-ந் தேத காலை ஈரோட்டிற்கு வந்தார். அங்கு குளியலறையில் சிறு விபத்தாகி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சார்பாக இந்து முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. பி.எஸ். பிரசாத் அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார். வீரத்துறவியின் இயக்க முன்னோடிகள் நலம் விரும்பிகள், ஆதரவாளர்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.
நமது கூட்டமைப்பின் கோரிக்கையை நிறைவேற்றிய மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு வன்னியர் கூட்டமைப்பின் சார்பிலும், வன்னியகுல பெருமக்கள் சார்பிலும் சிரம் குவித்த வணக்கத்தினை சமர்ப்பணம் செய்கிறேன்.
நமது போராட்ட களத்தில் பலியாகிய 25 வன்னிய இட ஒதுக்கீடு தியாகிகளின் பாதங்களில் வன்னியர் தனி உள் ஒதுக்கீடு வெற்றியை அர்ப்பணிக்கிறேன். நமது வெற்றிக்கு தியாகிகளின் ஆன்மா வாழ்த்தொலி வழங்கட்டும். வீழ்ந்த வன்னிய சமூகம் மேம்படட்டும். படித்த மேதைகளாக பாரினில் பவனி வர ஒதுக்கீடு உயர்ந்த வழித் தடத்தை உருவாக்கித் தரட்டும். எதிர்கால சந்ததியினர் புகழுடன் வாழ்ந்து சிறக்க புதிய பாதையை அமைத்து தர நாம் சபதமேற்று உழைத்திட உங்கள் அனைவரையும் உரிமையுடன் அழைக்கும்.
அன்பு உறவினர்,
சி.என். இராமமூர்த்தி
ஆசிரியர்.