அகிலம் புகழும்
அய்யா மாணிக்கவேலர்
நூறு ஆண்டு!
அடேயப்பா! அவ்வளவு சாதாரணமானது அல்ல. ஒருவேளை மனிதனுக்கு சாத்தியப்பட்டிருந்தாலும் இந்தளவுக்கு தேக ஆரோக்கியத்துடனன் நூற்றாண்டை கடந்திருப்பார்களாக என்பது பெருத்த கேள்விக்குரியது.
மாணிக்கவேல் நாயகர்!
பெயருக்கேற்றார் போல மாணிக்கமாய் வாழ்ந்து மறைந்த வன்னியகுல சிங்கம், கொள்கை மாறா கோமகன். எடுத்த காரியத்தில் முனைப்புடன் செயல்பட்டு வெற்றியை சமுதாயத்திற்கு அளித்த நவீன சிற்பி. நூறுவயது குழந்தை. எவரும் போற்றும் தலைவன் நமது அய்யா மாணிக்கவேல் நாயகர் அவர்கள்.
வன்னிய சமுதாயத்தில் உயர்ந்த கல்விக்கும், அதன் பொருட்டு அதிகாரத்தில் அமர்வதற்கும் உரியவர்கள் இருக்கிறார்கள் என்பதை உலகுக்கு உணர்த்திய உத்தமர். சுதந்திர போராட்டம் நடைபெற்ற காலத்திலும் சுதந்திரம் பெற்ற பிறகும் தமிழக அரசியலிலும், சட்டமன்றத்திலும் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கியவர்.
அன்றைய தலைவர்கள் முதல் இன்றைய தலைவர்கள் வரை அவரை போற்றும் பாங்கு வியப்புக்குரியது. அவரின் வாழ்க்கை புத்தகம் விரிந்து பரந்தது. அதில் சில மணிகளை பொறுக்கி எடுத்து மணிமாலையாக சூட்ட முயற்சி செய்து இருக்கிறேன். பல புத்தகங்களை ஆழ்ந்து படித்தும், அவருக்கு நெருக்கமாக இருந்து இன்று பெரியவர்களாக திகழ்பவர்களையும் சந்தித்து திரட்டியதன் தொகுப்பே இந்த கட்டுரை. இதோ அய்யாவின் நூற்றாண்டு வாழ்க்கையில் நாம் தேர்ந்தெடுத்த தேன்துளிகளிலிருந்து கட்டுரை திறக்கிறது.
வடஆற்காடு மாவட்டம் ஆற்காட்டில் 1894ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 14ம் நாள் திருவாளர் எம். ஏகப்ப நாயகர் அவர்களுக்கும் திருமதி ஜானகி அம்மாள் தம்பதியருக்கு செல்வமகனாக மாணிக்க வேலர் தோன்றினார்.
ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். பள்ளி பருவத்தை ஆற்காட்டிலும் உயர்நிலைப்பள்ளியை சென்னையில் முத்தையால்பேட்டை உயர்நிலைப்பள்ளியிலும் திருவல்லிக்கேணி உயர்நிலைப்பள்ளி மற்றும் கிறிஸ்துவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியிலும் பயின்றார்.
சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பி.ஏ. பட்டப்படிப்பும், பின்னர் சென்னை சட்டக்கல்லூரியில் பி.எல். பட்டமும் பெற்றார். இவருடன் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன் சட்டக்கல்லூரியில் உடன் படித்த தோழர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காலம் வெள்ளையர் ஆண்டகாலம் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் குறிப்பாக மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தில் பிறந்த இவர் உரிய காலத்தில் பட்டப்படிப்பினை முடித்து ஒரு ஆற்றல் மிக்க வழக்கறிஞராக வேலூரிலும், சென்னையிலும் பணியாற்றினார்.
மனித நேயமும், பண்பும், அன்பும், நிறைந்த அய்யா மாணிக்கவேலர் வக்கீல் தொழிலில் மற்றவர் வியக்கும் வண்ணம் மென்மேலும் உயர்ந்து மற்றவர்களால் பாராட்டுதலுக்கு உரியவரானார்.
வக்கீல் தொழிலை ஏதோ பணம் சம்பாதிக்க வேண்டும் என்று கொள்ளாமல் நீதிக்காவும், நேர்மைக்காகவும் வாதிட்டு தொழிலில் முன்னேற்றம் கண்டார்.
வேலூரில் இருந்து பணியாற்றிய வேளையில் அவர் தன் இனத்திற்கும் பிற்படுத்தப்பட்ட தன் சமூகத்திற்கும் தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களின் மேம்பாட்டிற்காக பாடுபட்டார்.
தன் சமூகத்தினரை மட்டுமல்லாமல் பிற சமுதாயத்தினருக்கும் தொண்டு செய்து அவர்களின் நன்மதிப்பையும் பெற்றார். பொதுத் தொண்டு செய்து வாழ்க்கை தொண்டில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
தனது 27ம் வயதில் 1921ல் தன் மனைவி திருமதி குப்பம்மாளின் கரம் பிடித்தார். இல்வாழ்க்கை இனிதே தொடங்கியது. குழந்தை செல்வங்களை பெற்றார். 3 ஆண் பிள்ளைகள்.
மூத்தவர் ஸ்ரீதரன், இரண்டாவது சங்கரன். இவர் ஒரு பட்டதாரி. மூன்றாவது மகன் விசுவநாதன். இவர் பள்ளிப்பருவத்திலேயே அடையாற்றில் ஒரு படகு விபத்தில் இறந்தார். அய்யாவும், அம்மாவும் தம்பதிகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கினார்கள்.
கணவன், மனைவி கருத்தொற்றுமையுடன் இருவரும் ஒருவராக எண்ணத்தில் செயலாற்றலில் இனிதே வாழ்ந்து வந்தார்கள். மற்றவர்களை குறிப்பாக அய்யாவை பார்க்க வந்தவர்களை அம்மா அவர்கள் அய்யாவை விட ஒருபடி மேலேயே விருந்தோம்பல் செய்து உபசரிப்பார்.
1924ல் வடஆற்காடு மாவட்டத்தில் இருந்து எம்.எல்.சி. ஆனார்கள். 1928 முதல் 1930 வரை அமைச்சர் திரு.முத்தையாவுக்கு பாராளுமன்ற செயலாளராக இருந்தார். மீண்டும் 1930 முதல் 1937வரை வடஆற்காடு மாவட்டத்தில் எம்.எல்.சி.யாக ஆனார்.
பின்னர் வேலூரில் வக்கீலாக பணியாற்றினார்கள். 1952ல் காமன்வீல்த் கட்சியினைத் தோற்றுவித்து அந்த ஆண்டு பொதுத்தேர்தலில் மீண்டும் அரசியல் வாழ்வில் நுழைந்து தன்வசம் 3 எம்பிக்களையும் 6 எம்.எல்.ஏ.க்களையும் வைத்திருந்து அன்று இருந்த சென்னை இராஜதானியின் சட்டப்பேரவையில் நுழைந்தார். (இதில் தமிழகம் ஆந்திரா, கேரளத்தின் மலபார் மாவட்டம் உள்ளடக்கியது) 1952ல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக (சட்டசபையின்) தேர்ந்தெடுக்கப்பட்ட மூதறிஞர் திரு.சி.இராஜகோபாலாச்சாரி அவர்கள் அமைச்சரவை அமைப்பதில் போதிய மெஜாரிட்டி பலம் இல்லாததால் திரு. இராஜாஜி அவர்கள் அய்யாவின் ஆதரவை நாடியதால், அய்யா அவர்கள் தன் கட்சி பிரமுகர்களை கலந்தாலோசித்து மக்கள் நலம் நாட்டின் நலன் கருதி திரு. இராஜாஜியின் கரங்களை வலுப்படுத்தினார். அந்த அவையில் அமைச்சர் பதவி ஏற்றார்.
1956 வரை அமைச்சராக இருந்தபின் மற்றும் ஒருமுறை சட்டசபையில் தேர்தலில் நின்று வெற்றி பெற்று பெருந்தலைவர் காமராசர் அமைச்சரவையிலும் சேர்ந்தார். அப்போது பெருந்தலைவரின் விருப்பத்திற்கேற்ப தன் கட்சியை காங்கிரஸ் கட்சியில் இணைத்து தொடர்ந்து அமைச்சரானார்.
1952ல் இருது 1962ம் ஆண்டு வரை, அதாவது 10 ஆண்டுகளாக வருவாய்த்துறை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை போன்ற முக்கிய இலாக்காக்களின் அமைச்சர் பொறுப்பு வகித்து மக்களுக்கு நல்ல பல காரியங்களைச் செய்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த சமயம் அரிய பல நற்காரியங்களை மக்கள் நலன் கருத்தில் கொண்டு செய்தார். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை மற்றும் வேலூர் அரசு மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்தார்.
இன்று நாம் காணும் இவ்விரு மருத்துவமனைகளும் அய்யாவின் காலத்தில் விரிவாக்கப்பட்டதை நினைவு கூறுகின்றன. மேலும் வட ஆற்காடு மாவட்டத்தில் ஒரு க்ஷயரோக மருத்துவமனை உருவாக்கிய பெருமை அய்யாவை சேரும்.
பின்னர் திரு. காமராசர் அவர்கள் அய்யாவை டில்லியில் ராஜ்யசபாக்கு நியமனம் செய்தார். இரண்டு ஆண்டுகள் பணியாற்றிய பிறகு பதவியை ராஜினாமா செய்தார்.
பின்னர் அவர் சென்னை மேல் சபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1964 முதல் 1970 வரை ஆறு ஆண்டுகளாக பணிபுரிந்தார். இந்த 6 ஆண்டு காலத்தில் முற்பகுதி காங்கிரஸ் ஆட்சியும், பிற்பகுதி அதாவது 1967-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் பேரறிஞர் திரு. அண்ணாதுரை தலைமையில் திராவிட முன்னேற்ற கழகமும் ஆட்சி செய்து வந்தன.
அய்யா அவர்கள் 6 ஆண்டு காலம் மேல்சபை தலைவராக இருந்த சமயம் அனைவரின் பாராட்டுதல்களையும் பெரும் தலைவர்களின் பாராட்டையும் பெற்றார்.
குறிப்பாக முன்னாள் முதல்வர் டாக்டர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் தனது ராமாவரம் தோட்டத்திற்கு அழைத்து விருந்து கொடுத்து மாண்புமிகு தமிழ் மூதறிஞர் மாணிக்க வேலர் அவர்களை கௌரவித்தார்கள்.
1948ல் மகாத்மா காந்தி அவர்கள் சுட்டப்பட்டு இறந்த போது, தமிழ் மூதறிஞர் மாணிக்கவேலர் மூன்று மாதங்கள் வேலூர் தொரப்பட்டி சிறையில் அடைக்கப்பட்டார். அப்போது வடஆற்காடு இந்து மகாசபை தலைவராக இருந்து பணியாற்றி வந்த காரணத்தால் அய்யா கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு, கேரளம், ஆந்திரம், கர்நாடகம் உள்ளடக்கிய 375 உறுப்பினர்களை கொண்ட சென்னை இராஜதானிய சட்டப்பேரவையில் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் சிறப்புடன் பதில் அளித்து பலரது பாராட்டை பெற்றார்.
1968ல் அனுவிரத இயக்கத் தலைவர் ஆசார்ய துளசியடிகளாரின் தென்னக யாத்திரையின் போது அடிகளார் ஸ்ரீபெரும்பதூர் வந்த போது இவர் அங்கு நடந்த வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி வரவேற்றார்.
பின் பல தடவைகள் அடிகளாரைச் சந்தித்து அனுவிரத இயக்கத்தைப் பற்றியும் அனுவிரதங்களைப் பற்றியும் நன்கறிந்து ஆய்ந்து இவரும் இவர் மனைவியாரும் அனுவிரதங்களை ஏற்றனர்
அதன் பின்னும் இத்தம்பதியர் அடிக்கடி அடிகளாரை சந்தித்தனர். அடிகளார் ஊட்டி சென்ற போது ஊட்டிக்கும் இத்தம்பதியர் சென்றனர். அச்சந்திப்புகளின் போதும் அதன் பின்பும் அடிகளாரின் இயக்க சாது சாத்விகளும் சென்னை வந்த போது இவர் மனைவியார் வாழ்ந்தவரை அநேகமாக தம்பதியர் இருவரும் இணைந்தே வருவார்கள்.
அத்துடன் இவர் தன் மனைவியானதை காட்டி நான் அனுவிரதி. இவர்கள் தான் விசேட அனுவிரதி. ஏனெனில் நான் அசைவ உணவு நாட்டமில்லாதவன். ஆனால், இவர்களுக்கு விரதங்கள் ஏற்கும் முன்பு வரை அதில் அதிக நாட்டம் உண்டு என்பார்.
1971 முதல் தமிழ்நாடு அனுவிரதி சமிதியின் தலைவர் பொறுப்பை ஏற்றார். 19 வருட காலம் இவர் தலைவராகப் பணியாற்றினார். ஆனால் இவர் அக்காலம் முழுவதும் உண்மையிலேயே அனுவிரத சமிதியின் தொண்டனாகவேப் பணியாற்றினார்.
அனுவிரத இயக்க பிரச்சாரத்தின் போது இவரும் உடன் செல்வர். யாத்திரையின் போது மிகச் சாதாரண தொண்டனாகவே செயல்படுவது கண்டு அநேக தடவை பலர் வியப்புற்றதுண்டு.
நன்னெறி இயக்கங்களுக்குக் கூட இவ்வாறான தலைவர்கள் கிடைப்பது அரிது. கடைசி காலத்தில் நாட்டில் நன்னெறி குறைந்து வருவது பற்றி வருத்தப்பட்டு பேசி இருக்கிறார். அன்றைய நாட்களை விட இன்று அனுவிரத இயக்கம் தீவிரமாகச் செயல்பட வேண்டுமென விரும்பியவர்.
அன்னாரின் விருப்பத்தை நிறைவேற்றுவதே நம்முடைய கடமையாகும்.
இனி அய்யா அவர்களைப் பற்றி சமுதாயத்திலும் அவரிடமும் நன்கு அறிமுகமான சிலர் சொல்வதைக் கேட்போம்.
அய்யாவைப் பற்றி பழைய மாணவர்கள்!
நூற்றாண்டு கண்ட நம் சமுதாய பெரியார் அய்யா அவர்களுடன் தன்னுடைய மாணவப் பருவத்தில் இருந்தே பழகி வந்த வேலூர் வழக்கறிஞர் திரு. குமாரசாமி சொல்கிறார்.
அய்யா அவர்கள் அப்போது வேலூரில் வக்கீலாக இருந்தார். பிறகு பார்லிமெண்டரி செக்ரட்டரியாக ஆனார். 1952-ம் ஆண்டு பொதுத் தேர்தல் வந்த நேரம், களம்பூர் அண்ணாமலை செட்டியார் காங்கிரஸ் வேட்பாளராக நின்றார். அவரை எதிர்த்து அய்யா நின்றார்.
நான் களம்பூர் உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தேன். நான் ‘தாத்துகோலை பிடுங்க முடியாது, ஓர் ஓட்டுக்கோலை எடுத்திட முடியாது’ என்றேன். அவர்கள் நண்டு நாற்காலி ஏறாது என்றார்கள். அப்போது நாங்கள் ‘வன்னியர் ஓட்டு அந்நியர்க்கில்லை’ என்று முழங்கினோம்.
வன்னியர் அனைவரும் ஒருமுகமாக இருந்து வாக்களித்து நம் எம்.ஏ.எம். அய்யா அவர்களை ஜெயிக்க வைத்தார்கள். ராஜாஜி மந்திரி சபையில் சேரலாமா என்று கேட்டு தொகுதி ஆட்களுக்கு கடிதம் போட்டார். அனைவரும் சம்மதிக்க அய்யா மந்திரியானார்.
நான் 1953ல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கு அய்யா உதவினார். அவ்வப்போது அய்யாவை சந்தித்து அளவளாவுவேன். விவசாயிகள் பிரச்னையில் இருந்து கச்சாயத்து முறையை ஒழித்து ‘ஜமாபந்தி’ முறையை கொண்டு வந்தார்.
தாலுகா ஆபீசர், விவசாயி, மணியக்காரர் என்ற மூன்று பேர் கொண்ட அக்குழுவால் மணியக்காரர்கள் கொள்ளையடிப்பது குறைந்தது. குழந்தைகளுக்கு பால்வாடி மாதிரி திட்டம் கொண்டு வந்தார்.
அவருடைய எண்ணம் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு மெடர்னிடி சென்டர், நான்கு அல்லது ஐந்து கிராமங்களுக்கு சேர்ந்து ஒரு கிராமிய வைத்திய நிலையம் வைக்க வேண்டும் என்பதாக இருந்தது.
எங்கள் ஊர் அர்ஜூனாபுரத்திலும் சந்தவாசலிலும் கிராமிய வைத்திய நிலையங்களை நிறுவினார். எல்லாரிடமும் பழகுவார். அவர்களது குறைகளை கேட்பார். சட்டத்திற்கு புறம்பாக நடந்ததே கிடையாது. அது வேண்டியவராக இருந்தாலும் என்றார் அவர்.
அரசியல்வாதிகள் பார்வையில்…
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திரு. என்.ஆர்.எம். சாமி அவர்கள் அய்யாவைப் பற்றி பேசுகிறார்…
எனக்கு 1930-களிலிருந்து அறிமுகமானவர் நம் மாணிக்க வேலனார் அவர்கள். 1938 முதல் 1950 வரை சமுதாயப் பணிகளை செய்து வந்தோம். அதுவே எங்களின் பொது வாழ்வுக்கு அடித்தளம். நமது சமுதாயம் பெரிய சமுதாயம். நேர்மையானவர்கள் நாம் யார் எதைச் சொன்னாலும் நம்பி விடுவோம்.
காகா காலேல்கார் பின் தங்கியோர் கமிஷனில் நானும் ஒரு அங்கத்தினன். 1955-ல் நாங்கள் அறிக்கை தந்தோம். அதனை பாராளுமன்றத்தில் வைக்கவில்லை. இரண்டாம், மூன்றாம் அறிக்கைகளும் அவ்விதமே ஆயின. அதில் 1976-ல் வைக்கப்பட்ட மண்டல் கமிஷனும் அடக்கம். காகா காலேல்கார் கமிஷன் அறிக்கை பிரகாரம் தான் மிகவும் பின் தங்கிய இனம் என்று நம்மை கொண்டு வந்தார்கள்.
எம்.ஏ.எம். (அய்யா) அவர்கள் என்னை சந்தித்தார் என்றால் அது நேர்மையும் ஞாயமும் சம்பந்தப்பட்டதாகத் தான் இருக்கும். அவர் ஓர் அறிவாளி. கறை படாத கைகளுக்கு சொந்தக்காரர். அவர் தனது சமுதாயத்துக்கு என்று பாராபட்சம் காட்ட மாட்டார். வட ஆற்காடு மாவட்டத்தில் பல டிஸ்ட்ரிக் போர்ட் பள்ளிகளை திறந்து வைத்தார்.
அப்போதெல்லாம் வன்னியர் உத்தியோகத்திற்கோ, பதவிக்கோ வர இயலாது என்று சொல்லி ‘நண்டு நாற்காலி ஏறாது’ என்பார்கள். திரு. எம்.ஏ.எம். மந்திரி ஆனது வன்னியர் ஒவ்வாருவருக்கும் புத்துணர்வு பாய்ந்தது போல் ஆகியது.
நேர்முக உதவியாளர் பார்வையில்…
அய்யாவின் தனி உதவியாளர் திரு. கிருஷ்ணசாமி அவர்கள் கூறும் போது, அய்யா கோப்புகளை உடனுக்குடன் பார்த்துவிடுவார். சுயமாகவும் எழுதுவார். அவை ஆணித்தரமாகவும், சட்ட நுணுக்கத்துடனும் இருக்கும். கோட்டை அலுவலகம் இவர் கோப்புகளில் எழுதி அனுப்புவதை வயிற்றில் நெருப்பு கட்டிக் கொண்டு பார்க்கும். எதுவென்றாலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று ஒளிமறைவு இன்றி சொல்லி விடுவார்.
அலுவலகத்திற்குச் செல்வதாக இருந்தாலும் சட்டமன்றத்திற்கு செல்வதாக இருந்தாலும் மிகச் சரியான நேரத்தில் கிளம்பி சரியான நேரத்தில் சென்று அமர்ந்து விடுவார். ஒரு ராணுவ அதிகாரி கூட இவ்வளவு கறாராக பணியாற்றுவாரா என்பது சந்தேகமே!
ஒவ்வொரு நிமிடத்தையும் சரியாகப் பயன்படுத்துகிறவர். ஓர் உன்னத மனிதராவார். உயர்ந்த நிலையை அடைவர் என்பது நமது அய்யாவுக்காக சொல்லப்பட்ட ஒரு திருவாசகம் என்கிறார்.
சட்டமன்றத்தில் – அமைச்சராக!
சட்டசபையில் அய்யா மிக சாமர்த்தியமாகவும், நுட்பமாகவும் செயல்படுவார் என்பதை அவரது அருகிலிருந்து பார்த்த, கேட்ட உறுப்பினர்களின் கூற்றிலிருந்தும், சபைக் குறிப்புகளிலிருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஜமீன்தார் ஒழிப்புச் சட்டம் பற்றிப் பேசும்போது ‘நான் ஒரு நீதிபதி ஸ்தானத்தில் உள்ளேன். ‘ஓர் சட்டத்தினை ஆளும் போது – ஜட்ஜ் ஒரு சட்டத்தை Interpret பண்ணத்தான் முடியும். வேறொரு புதுச் சட்டத்தினை உண்டாக்க முடியாது’ என்றார்.
இலட்சத்தீவுகள் பற்றிய பிரச்னையில் அய்யா பேசும் போது, நானும் சட்ட அமைச்சரும் இலட்சத் தீவுக்குப் போக எத்தனித்துள்ளோம். ஒரு அதிகாரி வேண்டாமென்று தடுத்த போதும், இரண்டு அமைச்சர்களை – யாம் இழக்க விரும்பவில்லை என்று சொன்ன போதும்… அவர் இதை ஏன் சொல்கிறார் என்றால் அந்தப் பயணம் அபாயம் மிக்கது. அதனால் தான் இருந்தாலும் நீராவி படகுகள் இப்பொழுது உள்ளன. அதில் ஏறிப் போய் வரலாம். கனம் சீத்திராஹிப் அவர்கள் இலட்சத்தீவுக்கு எங்களுடன் வரலாம் – அவர் குறைகளை அங்கேயே வைத்துச் சொல்லலாம். இலட்சத்தீவுகள் எங்கள் மனக்கண் முன்னே காட்சி தருகின்றன என்றார்.
உச்ச வரம்பு பற்றி சொல்லும் போது ‘நிலத்திற்கு உச்ச வரம்பு கட்டினால், விவசாய வருமான வரி போட்டால், விவசாயிகளுடைய உற்சாகம் குறைகிறது. அதனால் உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்றெல்லாம் சொல்லப்பட்டது.
\\இதிலே ஒரு சிலர் சொல்லுகிறார்கள் ‘அதிகப்படியாக நிலம் வைத்துக் கொண்டிருப்பவர்கள், அதாவது 100, 200 ஏக்கர் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்லபடியாக சாகுபடி செய்யலாம் என்ற ஆர்வம் இருக்கிறது. நிறைய உற்பத்தி செய்து விற்றால் பணம் வருகிறது.’
பணம் வந்தால் சௌகரியமாக வாழ்க்கையை நடத்தலாம் என்ற உள்நோக்கம் இருக்கிறது. சாதாரணமாக 3, 4 ஏக்கர் வைத்திருப்பவர்களுக்கு அந்த உள்நோக்கம் இல்லை. சாப்பிடுவதற்கு வந்தால் போதும். திண்ணையில் படுத்துக் கொண்டு இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
உச்ச வரம்பு காட்டுவதில் தாமதம் என்று சொன்னார்கள். இருந்தாலும் அது ஊன்றிப் பார்த்துச் செய்தால் தான் நல்லது. ஆகவே உணவு நிலை பாதிக்கப்படாத முறையில் ஜாக்கிரதையாக செய்ய நாங்கள் எல்லா நடவடிக்கைகளும் எடுத்துக் கொண்டு வருகிறோம் என்றார்.
மேலவைத் தலைவர்
1964-ம் ஆண்டு ஏப்ரல் 4ந் தேதி மேலவைத் தலைவர் தேர்தலின் போது அய்யா அவர்கள் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அப்போதைய அவைத் தலைவரும், பின்னாளில் குடியாசுத் தலைவராகவும் விளங்கிய ஆர். வெங்கட்ராமன், நீங்கள் தான் இந்த அவையின் நீண்ட நாள் அனுபவம் கொண்டவர். சட்டசபை அனுபவமும் கொண்டவர்.
சுதந்திரம் வாங்கும் முன்னும் வாங்கிய பின்னும் இருந்த சட்டசபையில் அனுபவம் கொண்டவர். ராஜ்யசபை அங்கத்தினராகவும் பத்தாண்டு காலம் அமைச்சராகவும் பணிபுரிந்த மகத்தான தொண்டுக்குரியவர் நீங்கள் என்றார்.
டாக்டர் ஏ. லட்சுமணசாமி முதலியார். ‘தாங்கள் அமைச்சராய் இருந்த போது மேலவையில் நீண்ட நேரம் இருந்து எங்களை கவுரவிப்பீர்கள் மற்ற எல்லா அமைச்சர்களையும் விட ரெவின்யூ சட்டதிட்டங்கள் மிகவும் கடினமானவை. இருந்தாலும் நீங்கள் அவற்றை மிக அழகாக ஆளுமை செய்தீர்கள்’ என்றார்.
திரு. பக்தவச்சலம், நீங்கள் அமைச்சராக இருந்த போது மிக மிக விரும்பக் கூடியவராகவும், இனிமையானவராகவும் விளங்கினீர்கள் என்றார். திரு. எம்.ஏ. முத்தையா செட்டியார், உங்களை 1920 முதலே தெரியும்.
எப்போதுமே நீங்கள் பழமை பேணுபவர். நான் கீழ்ச்சபையில் 32 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். உங்களைத்தான் மேலவையின் சிறந்த தலைவராகப் பார்க்கிறேன்.
இப்படி பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தியவர் நமது அய்யா அவர்கள். நூற்றாண்டு கண்ட நம் சமுதாயத்தின் விடிவெள்ளி அய்யா மாணிக்கவேல் நாயகரின் சமுதாய பணியையும், அரசியல் பணியையும் இணைத்து புதிய சமுதாயத்தை உருவாக்குவோம்.
அவரின் தனிப்பட்ட வாழ்க்கை ஒவ்வொரு இளைஞனுக்கும் பாடமாக அமைந்திருக்கிறதென்பதை இக்கட்டுரையை படிக்கும் போது உணரலாம். நம் இனத்தின் பெருமையை, ஒற்றுமையை, அந்தஸ்தை, புகழை தரணியில் நிலை நிறுத்திய முதல் வன்னியன் என்ற பெருமையை பெற்ற நம் நாயகர் அவரிகளின் வழி நடப்போம்!
அவரது அயராத உழைப்பு, தன்னலமில்லாத தொண்டு, உயர்ந்த சிந்தனை, தூய்மையான பொது வாழ்வு, பேணிக்காத்த சுய ஒழுக்கம் போன்ற பல நல்லவைகளை நாம் முன்னுதாரணமாகக் கொண்டு அய்யாவின் புகழை பார் போற்றச் செய்வோம். நமக்கான உரிமைகளை அவர் வழியில் சென்று வென்றெடுப்போம்.
நமது சமுதாய பெரியார்களின் தொண்டால் நமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை உயர்நிலையை இன்னும் உயர்த்தி அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்வதே நமது நோக்கமும் லட்சியமும் ஆகும்.
நம் சொந்தங்களே! அதற்கு தங்களை தயாராக்கிக் கொள்ள வேண்டுகிறேன். வெற்றியின் நெருக்கத்தில் இருப்பதல்ல நமது நோக்கம். வெற்றியின் உச்சத்தில் அமர வேண்டியதே நமது நோக்கம். லட்சியம்.
வாழ்க. வன்னியர் ஒற்றுமை!
வளர்க. வன்னியர் கூட்டமைப்பு!
- ••
அறிஞர் அண்ணா பெற்ற ஆசி
அறிஞர் அண்ணா அவர்கள் மந்திரி சபை அமைத்து முதல்வராக ஆகும் சமயத்தில் அவர்கள் திருமிகு. எம்.ஏ. மாணிக்கவேலர் அவர்களைக் கண்டு ஆசி பெற்றார்.
- ••
நாயகரின் ஒரு நாள் டைரி…
காலை 6 மணி – மரக்கட்டிலில் வெறும் சமுக்காள விரிப்பில்
உறங்கி எழுவார்.
6.15லிருந்து – எனிமா எடுத்துக் கொள்வார்.
7.00 மணி – வானொலியைக் கேட்பார். அப்போது
இரண்டு அல்லது மூன்று தேக்கரண்டி தேன்.
9.00 மணி வரை – சிற்றுண்டி – ஒரே ஒரு இட்லி – அரை
டம்ளர் சாதாரண காபி – செய்தித்தாள் வாசிப்பு – தினத்தந்தி மற்றும் இந்து ஆங்கில இதழ்.
12.00 மணி பிற்பகல் – அரை டம்ளர் சற்று சூடான சாதாரண காபி.
சாதமற்ற சிற்றுண்டி – கீரை, காய்கறி, கேரட், தக்காளி அரை இட்லி மட்டும்.
பழவகையில் உலர்ந்த பேரிச்சை, உலர்ந்த திராட்சை விரும்பி உண்பார். ஆப்பிள், ஆரஞ்சு, வாழைப்பழம் போன்றவையும் எடுத்துக் கொள்வார்.
3.00 மணி பிற்பகல் – மேல்மாடியிலிருந்து கீழ்த்தளத்திற்குத்
தானே இறங்கி வருவார் – தேனீர் மற்றும் பிஸ்கட் துண்டுகள். அப்போது பேத்தியுடன் கொஞ்சி மகிழ்வார்.
4.00 மணி – பூங்கா செல்வார்.
5.00 மணி – வீட்டுக்குத் திரும்புவார்.
6.00 மணி – சில நாட்கள் டி.வி. பார்ப்பார். டி.வி.யில்
சிறுவர் நிகழ்ச்சிகள், விளையாட்டு நிகழ்ச்சிகள் விரும்பிப் பார்ப்பார். அதன் பிறகு மேல்மாடி சென்று விடுவார்.
7.00 மணி – சரியான ஓட்ஸ் கஞ்சி 1 டம்ளர் குடிப்பார்.
8.00 மணி – படுக்கைக்குச் சென்று விடுவார் –
குறட்டையில்லா அமைதித் தூக்கம் கொள்வார். இரவில் ஒருமுறை மட்டும் எழுந்து சிறுநீர் கழிப்பார்.
தமிழ் மூதறிஞர் மாண்புமிகு
மாணிக்க வேலனார் பொன்மொழிகள்…
மன அமைதிக்கு என்ன காரணம்?
‘அளவுடன் பிள்ளைப்பேறு
அளவான தேவைப்பாடு
அளவான பாசவுணர்வு’
வழுக்கிடும் வாழ்வு
‘யானைக்கும் அடி சறுக்கும்’
ஆகவே நிதானமாகச் செயல்படு.
மன அமைதிக்கு ஒரே வழிதான்
நம் பலத்திற்கு அப்பாற்பட்ட செய்கைகளை
எண்ணி வருத்தப்படக் கூடாது.
சின்னச் சின்ன ஆசைகள்
எனக்குப் பிடித்த மீசைகள்
இராஜ மீசை, படா மீசை, முறுக்கு மீசை,
முழு மீசை, சுடர் மீசை, அடர் மீசை,
மீசை மீது ஆசை.
கட்டுப்பாடுகள் தேவை!
மூச்சுக் கட்டுப்பாடு
மனக் கட்டுப்பாடு
விந்து கட்டுப்பாடு
தமிழ் மூதறிஞர் எம்.ஏ.எம்.மின் நூறு ஆண்டுகளின் இரகசியம்
பசும்பால்,
கனிந்த பழம்,
புளிப்பில்லாத இட்டிலி,
அளவான இனிப்புடன் கூடிய ரொட்டி,
சுத்தமான தேன்,
தற்போது நமது நிலை?
சில சிக்கலான நேரங்களில்
நான் மற்றவர்களை சிரிக்க வைத்துச் சமாளித்து விடுவேன்.
நயம்பட வாழ
- நாகரிகத்தோடு இரு
- சுமூகமாக பழகு
- பிறரை நேசி
- யாரையும் பகைக்காதே
உயர்ந்த நிலைக்கு வர
காலமும் கடமையும் கண், பொன் போன்றது
ஒவ்வொரு நிமிடத்தையும் சரியாக பயன்படுத்துகிறவர்
ஓர் உன்னதமான மனிதராவார்.
உயர்ந்த நிலையை அடைவர்.
தூக்கம் வரும்
வயதானால்,
அளவுடன் உழைப்பு இருந்தால்
உறக்கம் தானே வரும்.
நீண்ட நாள் வாழ!
அதிகம் உண்ணாதீர்கள்,
உண்ணாமலும் இருக்காதீர்கள்,
பசித்தபின் புசியுங்கள்.
ஒரு மனிதனை உயர்ந்தோன் ஆக்குவது எது?
- மனிதனின் மூளை, அறிவு
- ஒரு பெண்ணின் இதயம்
- ஒரு குழந்தையின் நளினம்.
தமிழ் மூதறிஞர் எம்.ஏ.எம். அய்யா என்றால்…
உழைப்பு, உறுதி, சுறுசுறுப்பு, நேர்மை, நேரம் தவறாமை,
காரணமான கோபமும், குணமும் உண்டு.
- ••
அய்யா எம்.ஏ.எம். அவர்களின்
பழக்க வழக்கங்கள்…
சடங்குகளை விரும்பாதவர்
கோயில்களுக்கு சென்று மனம் ஒன்றி தியானம் செய்வார். புரோகிதர், பூசாரி மூலம் அர்ச்சனை, வழிபாடு முதலியவற்றை அறவே செய்வதில்லை. தன் மூன்று பிள்ளைகளுக்கும் காது குத்தும் காதணி விழா நடத்தியதில்லை. இன்றும் 71 வயதைக் கடந்து கொண்டிருக்கும் தம் மகனார் சங்கரன் (இந்தியன் வங்கியில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்) அவர்களின் காதுகள் குத்தப்படவில்லை என்பதற்கு சான்றாக நிற்கிறார். தம் இல்ல நிகழ்ச்சிகளில் புரோகிதர் வைத்து நடத்தும் சடங்குகளை முற்றிலுமாக ஒதுக்கியவர்!
குடும்பம் பேணல்
தந்தை பெரியாரைப் போல பொதுத் தொண்டு, பொது வாழ்க்கை என்று ஒட்டியதால் தன் குடும்பம், தன் பிள்ளை, தன் சுற்றம் என்று நாயகர் அவர்கள் மனத்தைப் பாய்ச்சியதே இல்லை என்று அவர் மைந்தன் திரு. சங்கரன் அவர்கள் கூறுகின்றார்.
நீச்சல் வீரர்
டென்னிஸ், கால்பந்து இவரின் தீராத விளையாட்டு நீந்தி மகிழ்வதிலே நீச்சல் வீரர் இவர். தம் அருமைப் புதல்வர்கள் மூவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கப் பெரிதும் முயன்றார். நீச்சலைக் கற்றிடும் முயற்சியில்லாததால் மூன்றாவது மகனார் விசுவநாதன், படகில் சென்று மூழ்கி இறந்தார்! நீச்சலின் அருமையை உணர்ந்தால் வெள்ளத்தை எதிர்க்கலாம்!
நோயற்ற மனிதர்
இரத்த அழுத்தம், சர்க்கரை, இருமல், கைகால் நடுக்கம் இன்னும் எத்தனையோ நோய்கள் அவர் இறக்கும் வரை அணுகியதே இல்லை.
- ••
மாணிக்க வேலனாரின் காலடிச் சுவடுகள்!
1894 – வடாற்க்காடு மாவட்டத்திலுள்ள ஆற்க்காட்டில் தந்தை
ஏகப்ப நாயகருக்கும், தாயார் ஜானகி அம்மையார்க்கும் மகனாகப் பிறந்தார்.
1897 – மூன்று வயதாகும் போது, இராணிப்பேட்டை
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்து கொண்டிருந்த தம் தந்தையார் இறந்தார்.
1899 – ஐந்து வயதாகும் போது, தம் தாயார் இயற்கை
எய்தினார்.
1900 முதல்
1905 வரை – தம் தொடக்க கல்வியை ஆற்க்காட்டில் முடித்தார்.
1906 முதல் – தம் உயர்நிலைக்கல்வியை சென்னை –
திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளிலும்
1910 வரை – சென்னை முத்தியால் பேட்டை.
சென்னை – கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப்
பள்ளிலும் படித்தார்.
1911 முதல்
1914 வரை – சென்னை ஜார்ஜ் டவுன் கிறித்துவக் கல்லூரியில் பி.ஏ.
பட்டம் பெற்றார்.
1915 முதல்
1916 வரை – சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல். பட்டம்
பெற்றார்.
1917 – வட ஆர்க்காடு மாவட்டம் வேலூரில் வன்னிய குல
க்ஷத்திரிய மாவட்ட சங்கம் தொடங்குவதற்கு உறுதுணையாக இருந்தார்.
1918 – நீதிகட்சி தோன்றிய இவ்வாண்டில் அதனுடன் ஈடுபாடு
கொண்டார்
1921 – தம் அத்தை தனகோட்டி அன்னபூரணி அம்மாள்
அரக்கோணம் மேலபாக்கம் ஜமீன்தார் பரத்வாஜ முதலியார் குடும்பத்தில் மகளாகப் பிறந்த திருமதி. குப்பம்மாளைத் திருமணம் செய்து கொண்டார். (முதன்மையர் என்பதின் திரிபே முதலியார். அந்நாளில் வன்னியர்களும் தங்கள் பெயருக்குப் பின்னால் முதலியார் பட்டம் வைத்துக் கொண்டனர்.)
1924 – வடாற்காடு மாவட்டத்திலிருந்து எம்.எல்.சியாகத்
தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1925 – தந்தை பெரியார் தோற்றுவித்த சுயமரியாதை
இயக்கத்திற்காக குடியரசு பத்திரிகை தொடங்கப்பட்ட போது, இவர் வட ஆற்க்காடு – வேலூரில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார்.
1928 முதல்
1930 வரை – நான்கு தென் மாநிலங்களையும் (சென்னை, ஆந்திரம்,
கர்நாடகம், மலையாளம்) ஆண்டு கொண்டிருந்த நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகிய முத்தைய்யா முதலியாரிடம் பாராளுமன்றச் செயலாளராகப் பணியாற்றினார்.
1937 – இந்தித் திணிப்பை எதிர்த்து மிகப்பெரிய போராட்டம்
நடந்த அவ்வாண்டில் நடைபெற்ற தேர்தலில் தோல்வியினை அடைந்தார்.
1938 – வடாற்க்காடு மாவட்ட வன்னியர் சங்கத் தலைவராக
இருந்த நாட்ரம்பள்ளி சாமுண்டீ கவுண்டரால் ஏற்படுத்தப்பட்ட குழுவிற்கு தலைவராகப் பொறுப்பேற்றார்.
1948 – தேசத் தந்தை மகாத்மா காந்தியார் சுடப்பட்டு இறந்த
போது, வேலூரில் இந்து மகாசபைத் தலைவராக விளங்கிய இவரைக் கைது செய்து, தொரப்பாடி சிறையில் மூன்று மாதங்கள் அடைக்கப்பட்டிருந்தார்.
1951 – கான்ஸ்ட்டியூயண்ட் அசெம்பிளிக்குப் போட்டியிட்டு
தோற்றார்.
1952 – காமன்வீல் கட்சியைத் தோற்றுவித்து 3 எம்.பி.க்கள்
மற்றும் 6 எம்.எல்.ஏ.க்களை வெற்றிப் பெறச் செய்தார். இதே போல, தென்னார்க்காடு மாவட்டத்தில் புகழ்மிகு எஸ்.எஸ்.இராமசாமிப் படையாட்சியார், உழைப்பாளர் கட்சியினைத் தொடங்கி 9 சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிப் பெற செய்தார்.
இதே ஆண்டில் மூதறிஞர் அமைச்சரவையில்
வருவாய்த்துறை மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சரானார்.
1956 முதல்
1962 வரை – கல்விக்கண் திறந்த கர்ம வீரர் காமராசர்
அமைச்சரவையில் வருவாய்த்துறை மற்றும் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அரும்பணியாற்றினார்.
1962 – இவ்வாண்டு நடந்த பொதுத் தேர்தலில் நிற்காமல்
ஒதுங்கிக் கொண்டார்.
1962 முதல்
1964 வரை – இராஜ்யசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுப்
பணியாற்றினார். பின்னர் அப்பதவியை இராஜிநாமா செய்துவிட்டார்.
1964 முதல்
1970 வரை – சென்னை சட்டமன்ற மேலவைத் தலைவராக
வியத்தகு பணியாற்றினார்.
1965 – பாரத் சேவா சமாஜின் பிரதேசத் தலைவராக
இருந்துள்ளார்.
1970 – அனுவிரதக் கொள்கையில் இணைந்து தமிழகத்
தலைவராக இருந்தார். அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் இராமலிங்க கழகத்திலும் தம்மை இணைத்துக் கொண்டார்.
1993 – தமிழக முதலமைச்சர் மாண்புமிகு புரட்சித் தலைவி
ஜெ.ஜெயலலிதா அவர்களால் நூற்றாண்டு காணும் நாயகர்க்கு விழாவெடுத்து சிறப்பிக்கும் பெருமை பெற்றார்.