திருக்குறள் ‘சாமி’

திருக்குறளார் வீ. முனிசாமி!

 

 

சி.என்.ஆர்

(நிறுவனத் தலைவர்)

 

உயர்வான சொந்தங்களே!

 

கடந்த இரண்டு மாத வன்னியர் குரல் நமது குலப் பெருமையை வானுயர வைத்த சுதந்திர போராட்ட தியாகி சர்தார் ஆதிகேசவலு நாயக்கர் அவர்களின் வாழ்வியல் சரித்திரத்தை படித்து அறிந்தோம். அன்பானவர்களே! இக்கட்டுரையை படித்துவிட்டு நம் சொந்தங்கள் பலர் இவ்வளவு சிறப்பும், தியாகமும் கொண்டவரா நம் சர்தார் என்று ஏற்கெனவே அவரை கேள்விப்பட்டவர்களும், இதுவரை அவரை அறியாதவர்களும் திரும்பத் திரும்ப கேட்டனர். இதை மற்றவர்கள் எடுத்துச் சொல்லவோ, பாராட்டவோ செய்யாததில் நமக்கு வருத்தம் இல்லை. ஆனால் காங்கிரஸ்காரர்கள் கூட ஏன் இப்படி நமது சர்தாரை புறக்கணித்தார்கள் என்று என்னிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு ஆதங்கப்பட்டார்கள். அவர்கள் அத்தனை பேருக்கும் எனது நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.

 

காரணம், இப்போதாவது அப்படியெல்லாம் கேள்வி கேட்பதற்கு உங்களை தயார்படுத்தியது இந்த வன்னியர் குரல் கட்டுரை அல்லவா? என் செய்வது! உங்கள் கேள்விகளில் ஆயிரம் நியாயங்கள் இருப்பது ஊருக்கு மட்டுமல்ல, உலகத்திற்கே தெரியும். ஆனால் சபிக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து விட்டோமே, பெருந்தலைவர் காமராஜரை விட அதிக நாள் சிறைவாசம் பெற்ற நமது சர்தாரை காங்கிரஸ்காரர்கள் மறந்தது ஆச்சரியம் தானே!

 

 

இருந்துவிட்டுப் போகட்டும். இனி நாமே அதை செய்து முடிப்போம். பெரும்பான்மை சமுதாயத்தினரில் முதல் சமூகமான வன்னிய சமுதாயமே! தியாக சீலர்களின் வழிகாட்டுதலோடு நம் குலப்பெருமையை பாரறியச் செய்ய பாராண்ட இனமே! ஒன்று திரண்டுவா! ஒற்றுமையாய் கிளம்பி வா! பிறகு நடப்பதை பார்! உனது பின்னால் ஊரும், உலகமும் நிற்கும். அதை வன்னியர் கூட்டமைப்பின் சார்பில் முன்னெடுத்துச் சென்று முழு வெற்பெற எனக்கு தோள் கொடுத்து உதவிட வாரீர் வன்னிய சொந்தங்களே என்று உறவோடு அழைக்கிறேன்.

 

வன்னியர் நம் சமூகத்தில் பிறந்து தமிழகத்திலேயே முதல் முதலில் உலகப் பொது மறையாம் திருக்குறளைப் பற்றி மட்டுமே பேசி தன் வாழ்நாளையே குறளுக்காக அர்ப்பணித்து வாழ்ந்த பெருந்தகையாளர் திருக்குறளார் வீ. முனிசாமி அவர்களின் பெருமையை உலகறியச் செய்யும் வகையில் இக்கட்டுரை வெளியாகிறது.

 

குறளாரைப் பற்றியும், அவரது வாழ்வியல் சாதனைகளை பற்றியும் எழுத வேண்டுமென நினைத்து களமிறங்கியவுடன் எனக்கு பேருதவி புரிந்தவர் அவரது குமாரர் வழக்கறிஞர் கோபிநாதன் அவர்கள். நான் இதற்கு முன்பு நமது குலத்தில் பிறந்து, வாழ்ந்து, உயர்ந்த பல பெரியோர்களைப் பற்றி எழுதி இருக்கிறேன். அதற்காக சம்பந்தப்பட்டவர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றேன். அதில் நிறை குறைகள் பலவற்றை அனுபவித்து இருக்கிறேன்.

 

முதல்முறையாக நிறை குறைகளை மீறி என்னை திக்குமுக்காட வைத்த முதல் சொந்தம் நமது குறளாரின் புதல்வர் வழக்கறிஞர் கோபிநாதன் அவர்கள் தான். தந்தையாரைப் பற்றி எழுதப் போகிறேன் என்றதும் போதும் போதும் என்கிற அளவுக்கு எனக்கு நூல்களையும், குறிப்பாக அரிய புகைப்படங்களையும் தந்துதவினார். அவருக்கு வன்னியர் குரல் சார்பாக உரிய நன்றியினை நவில்கிறேன்.

 

சொந்தங்களே! குறளாரின் வாழ்க்கையை அவர் சொல்லக் கேட்டால் எப்படி இருக்கும். எனக்கு கிடைத்த அந்த பாக்கியத்தை இதோ உங்கள் முன் படையலிடுகிறேன்! குறளாரின் முத்துவிழாவுக்காக “தொடரும்! என்னுடைய தொண்டுப் பயணம்” என்ற தலைப்பில் அவர் எழுதியதே அவரது வாழ்க்கை சரித்திரத்திற்கு முத்தாய்ப்பாகவும் முதன்மையானதாகவும் அமைந்துள்ளதை எண்ணி மகிழ்ந்து உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

 

 

தமிழ்ப் புலமை நிறைந்த பேரறிஞர்கள் மட்டும் அறிந்திருந்த குறட்பாக்களைப் பாமர மக்களும் உணர்ந்து கொள்ளுமாறு செய்ததில் ஒரளவுக்கு தொண்டாற்றிய மனநிறைவு எனக்கு உண்டு. ‘பாமர மக்களும் எளிமையாகக் குறட்பாக்களைப் புரிந்து கொள்ளுமாறு செய்த பெருமை தங்களுக்கு உண்டு’ என்று அன்பர்கள் கூறியபோதெல்லாம், அவ்வார்த்தைகளை முகமனாகக் கொள்ளாது, உண்மை என்றே ஏற்றுக் கொண்டு தான் பணியாற்றி வருகின்றேன் என்று தொடங்குகிறது திருக்குறளாரின் சரிதம்.

 

உயர்நிலைப் பள்ளியில் படிக்கின்ற பொழுதே 1330 குறட்பாக்களையும் மனப்பாடம் செய்து கொண்டேன். தமிழார்வம் வளர்ந்து வந்த அந்த நாட்களில், பேச்சாற்றல் பெற்று மாணவர்களிடையே பள்ளிக் கூடங்களில் வாய்ப்புக்கள் கிடைத்த போதெல்லாம் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தேன். உயர்நிலைப் பள்ளிப் படிப்பினையும் கல்லூரிப் படிப்பினையும் திருச்சிராப்பள்ளி அர்ச். சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் மேற்கொண்டேன். இலக்கிய மன்றங்களில் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெறுகின்ற வாய்ப்புகளை அதிகமாகப் பெற்றிருந்தேன். குறட்பாக்களை விளக்கம் செய்கின்ற பழக்கத்தினை 1935 ஆம் ஆண்டிலிருந்தே தொடர்ந்து செய்து வந்தேன். பொது மேடைகளிலும் பொது மக்களிடையிலும், திருக்குறள் சொற்பொழிவுகளை முதன்மையாகக் கொண்டு யாருமே பேசாதிருந்த காலம் அந்தக் காலம் என்பது மிகையாகாது.

 

அந்தக் காலத்தில் தான் எந்தெந்த முறையில் குறட்பாக்களை நகைச்சுவையாகவும், நயமாகவும், அன்றாட வாழ்க்கைக்குப் பொருத்தமாக இருக்குமாறும் சொல்ல வேண்டும் என்ற முயற்சியில் நான் ஈடுபட்டேன். நினைத்த நேரத்தில், நினைத்த குறட்பாக்கள் நினைவிற்கு வருமாறு பயிற்சி செய்து கொண்டேன். என்னுடைய திருக்குறள் தொண்டினை முதன் முதலாக, திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தான் தொடங்கினேன். திருச்சிக்கு அடுத்த பொன்மலையில் அக்காலத்தில் வாழ்ந்த தமிழறிஞர்கள் அடிக்கடி என்னை அழைத்துச் சென்று திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்துமாறு செய்தனர். இவ்வாறே திருச்சி மாநகரிலும் சுற்றுப்புறங்களிலும் குறட்பாக்களைப் பரப்பும் சீரிய தொண்டில் என்னை ஆட்படுத்திக் கொண்டேன்.

 

1940ஆம் ஆண்டில் சேலம் மாநகரத்திற்குப் போய்ச் சேர்ந்தேன். நீதிமன்றத்தில் சில ஆண்டுகள் பணிபுரிந்தேன். திருக்குறள் சொற்பொழிவு செய்யும் என் ஆற்றலைப் புரிந்து கொண்ட நண்பர்கள் பற்பல நிகழ்ச்சிகளை அமைத்துத் திருக்குறள் பேசுமாறு செய்தார்கள். முதன்முதலாக சேலம் பிரம ஞானசபைத் தொடர்பாக டாக்டர் தனக்கோடி நாயுடு அவர்கள் சொற்பொழிவு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தார். அந்த நிகழ்ச்சிக்கு ஜஸ்டிஸ் சுந்தரம் செட்டியார் தலைமை வகித்தார். அவர்கள் முடிவுரையில் என்னைப் பற்றிச் சொல்லிய புகழுரைகள் சேலம் மாவட்டத்தில் நான் இருக்க நேர்ந்த 3 ஆண்டுகளிலும் அரிய சேவை செய்வதற்குத் தொடக்கமாயிருந்தன என்பதைக் குறிப்பிட வேண்டும்.

 

சேலம் கல்லூரியில் அப்போது அ. இராமசாமி கவுண்டர் என்பவர் முதல்வராக இருந்தார். அவர் ஒரு சிறந்த மேதை. நல்ல பகுத்தறிவுவாதி. தமிழ், ஆங்கிலம், வடமொழி ஆகிய மூன்று மொழிகளிலும் சிறந்த புலமை பெற்றிருந்தார். நானும் அவரும் நண்பரானோம். அவர் கல்லூரியில் 10 நாட்களிலும் சிறந்த பேரறிஞர்கள், பொதுமக்கள் வந்திருந்து சிறப்பித்தார்கள். அப்போது முதுபெரும் புலவர்களாகிய திம்மப்பையர், நடேச உடையார் முதலிய பெரும் புலவர்கள் இருந்தார்கள். 10 நாட்கள் முடிந்ததும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்குமாறு முதல்வர் புலவர்களிடம் கூறினார். திம்மப்பையர் கூறியதாவது:

 

“இந்த இளைஞர் மிக மிகக்கடினமான குறட்பாக்களுக்கெல்லாம் எளிமையாக உரை சொல்லிவிட்டார். பற்பல தர்க்க வாதங்களுக்கு இடம் கொடுத்து வருகின்ற பல குறட்பாக்களுக்கு நயமாகவும், எளிமையாகவும் இவர் சொல்லிய முறை மிகவும் வியப்பாக இருந்தது.” இவ்வாறு அக்கல்லூரியின் பேராசிரியர் என்னைப் பாராட்டி 40 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்லிய வார்த்தைகளை நான் பணிவோடு ஏற்றுக் கொண்டேன். பின்னர் முதல்வர் திரு. இராமசாமி கவுண்டர் அவர்கள் என்னுடைய வேண்டுகோளை ஏற்று, கல்லூரியில் இடம் தந்து, திருக்குறள் வகுப்பு நடத்துவதற்குத் துணையாக இருந்தார். கிழமைதோறும் வகுப்பு நடத்திக் குறட்பாக்களுக்கு விளக்கம் செய்து வந்தேன். குறட்பாக்களில் நுட்பமான ஆழ்ந்த புலமை அந்த நாட்களில் எனக்கு இல்லையென்றாலும் போதிய அளவு விளக்கம் தரும் தகுதியைப் பெற்றிருந்தேன். அப்போது மாவட்டக் கலெக்டராக ஆர்.எம். சுந்தரம் என்பவர் இருந்தார். திருக்குறள் வகுப்பு நடத்துவதை அறிந்து அவர் மிகவும் பாராட்டினார்.

 

 

இன்றும் என்றும் மறக்க முடியாத தமிழ்ப் பேரறிஞரும் பல்கலை விற்பன்னருமான பா.வே. மாணிக்கவேல் நாயக்கருடைய மூத்த அண்ணார் பொன்னுச்சாமி நாயக்கர் என்பவர் ஆவார். அவர்கள் சேலத்துக்கு அடுத்த பாகல்பட்டி மிட்டாதாரர்; கம்பராமாயணம் முதலிய நூல்களில் மிகப் பெரும் புலமை பெற்றவர்கள்; அவர் சேலம் வருகின்ற போதெல்லாம் என்னுடன் அளவளாவி மகிழ்வார். அக்காலத்தில் கடல் போல் படித்த புலவர்களில் ஒருவர் ஆசிரியர் வரத நஞ்சைய பிள்ளை. அவரைச் சேலத்தில் சொற்பொழிவு நிகழ்த்த பலமுறை அழைப்பதுண்டு. அவரை ‘நடை அகராதி’ என்று பாராட்டிப் பேசுவர்.

 

அவர் சொற்பொழிவு நிகழ்த்துகின்ற போது, பல நேரங்களில் என்னை அருகில் உட்கார வைத்துக் கொள்வார். அவர் பேசிக்கொண்டு வரும் போது, தனக்கு நன்கு நினைவுக்கு வரவில்லையென்றால் திருக்குறளில் சில சீர்களை மட்டும் சொல்லி ‘அது எந்தக் குறட்பா?’ என்று கேட்பார். நான் உடனே அக்குறட்பாவினைச் சொல்லுவேன்.

 

 

திருக்குறள் வகுப்புக்களை நடத்திக் கொண்டு வந்த போதே, திருக்குறள் மாநாடு ஒன்று சேலத்தில் நடத்த வேண்டுமென்று நண்பர்களிடம் கலந்து பேசி, அவர்களின் துணைக் கொண்டு 1941 ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் திருக்குறள் மாநாட்டினை முன்நின்று நடத்தினேன். மாநாட்டிற்கு வந்திருந்த பேரறிஞர்களில் குறிப்பிடத்தக்கவர் பன்மொழிப் புலவர் ஞா. தேவநேயப் பாவாணர் ஆவார். திருச்சியில் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வந்தார். அவருக்கும் முதல்வர் இராமசாமிக் கவுண்டருக்கும் முதன்முதலாக நட்பும் தொடர்பும் ஏற்படுவதற்கு அந்த மாநாடு பெரிதும் துணையாக இருந்தது. பின்னர், பாவணர் அக்கல்லூரியில் பேராசிரியராக அமர்த்தப் பெற்றார். அதுவரை பெரும்புலவர் உலக ஊழியர். தமிழ் மறவர் புலவர் பொன்னம்பலவானர் முதலியோர் என்னுடைய சொற்பொழிவுகளைக் கேட்டு, ஆக்கமும், ஊக்கமும் தந்தனர். ‘திருக்குறளினைப் பாமர மக்களும், புரிந்து சுவைக்குமாறு செய்து குறப்பாக்களைப் பரவச் செய்யும் தங்கள் பணிகளை நான் மிகவும் பாராட்டுகின்றேன்’ என்று உலக ஊழியர் என்னிடமும் பல நண்பர்களிடமும் சொல்லி மகிழ்வார்.

 

புலவர் சாம்பசிவ ரெட்டியார் என்ற தமிழாசிரியர் ஒருவர் நாமக்கல்லில் பணிபுரிந்து, தமிழர் சமுதாயத்துக்காக மிகப்பெருத்த தொண்டாற்றி வந்தார். என்னை அவர் அழைத்துப் போய் பல நிறுவனங்களில் திருக்குறள் விரிவுரை நிகழ்த்தும் பணியினை மேற்கொள்ளும்படி செய்தார். முன்பு சேலம் மாவட்டத்திலிருந்து காவேரிப்பட்டணத்தில் ஓய்வு பெற்றுள்ள முதுபெரும் தமிழ்ப்புலவரான திரு. கே. இராமச்சந்திரனார் பல பள்ளிகளுக்கும் நிறுவனங்கட்கும் என்னை அழைத்துப் போவதுண்டு. இவ்வாறே தமிழ்நாட்டில் தமிழாசிரியர்கள் பலரும், தலைமையாசிரியர்களும், எண்ணிறந்த திருக்குறட் சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்கும், திருக்குறள் இன்பத்தினைப் பரப்புவதற்கும் காரணமாக இருந்தனர் என்று குறிப்பிட்டு அவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகமே என்றென்றும் மறக்கமுடியாத தமிழினத்தின் தலைவர்களில் ஒருவரான, உயர்திரு. சா.பன்னீர் செல்வம் அவர்கள் முதன்மையாக நின்று, திருவையாற்றில் தமிழ்ப் பெருங்கல்லூரியினை நிறுவனம் செய்தார். அப்பெருங்கல்லூரியில் முதன் முதலாகக் கற்றுத் தேர்ந்த தமிழ்ப் பெரும் புலவர்களில், வை. பொன்னம்பலனார், உலக ஊழியர், சி.இலக்குவனார் முதலியவர்களைக் குறிப்பிட்டுச் சொல்லுவதுண்டு. திருவையாற்றில் 1938 – 39 ஆம் ஆண்டுகளில் சில மாதங்கள் அங்கு தங்குகின்ற வாய்ப்பு எனக்கு இருந்தது. அப்பொழுது, உயர்திரு. பி.எஸ். சுப்பிரமணிய சாஸ்திரியார் திருவையாற்றுக் கல்லூரியில் முதல்வராக இருந்தார். அவர் சிறந்த மேதையாகவும் மும்மொழிப் புலவராகவும் திகழ்ந்தார்.

 

 

அப்போது தமிழ்க் கல்லூரியில் நான் திருக்குறள் தொடர் சொற்பொழிவு செய்தேன். எந்தெந்த சொல் எந்தெந்த குறட்பாக்களில் காணப்படுகிறதென்றும் உறுதியான மனப்பாடம் இருந்ததால் எப்படியெல்லாம் கவர்ச்சிகாரமாகச் சொல்லமுடியும் என்றும் பேசிக் காட்டினேன். மாணவர்களும் ஆசிரியர்களும் பெரிதும் பாராட்டினர். அந்த மாணவர்கள் எல்லாம் தமிழாசிரியர்களாகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்டார்கள். திருச்சி மாவட்டத்தில் இருந்த போது பற்பல உயர்நிலைப் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஏனைய நிறுவனங்களிலும் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்த போது, திருச்சி மைய நகரத்தில் நகர இளைஞர் மன்றம் (சிட்டி அமெச்சூர்ஸ்) ஒன்று பணியாற்றி வந்தது. அவர்கள் தொடர் சொற்பொழிவு ஏற்பாடு செய்து என்னைச் திருக்குறள் பேசுமாறு செய்தனர். அம்மன்றத்தினை நல்ல ஆதரவு தந்து வளர்த்து வந்தவர். முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் ஆவார். ‘பொது மக்களும் திருக்குறளினைச் சுவைக்க முடியும்’ என்ற பணியினை நான் மேற்கொண்டிருப்பதைக் கண்டு பலரும் பாராட்டி என்னை ஊக்குவித்தனர். அப்போதுதான் நான் கல்லூரியில் படிப்பை முடித்தேன்.

 

அரசியல் துறையிலும் சமுதாயத் துறையிலும் மிகச் சிறந்த  சொற்பொழிவாளர்கள் அக்காலத்தில் இருந்தனர் என்றாலும், திருக்குறள் கருத்துக்களைப் பொருத்தமாகவும், அன்றாட வாழ்க்கைக்கு ஏற்புடைத்தான குறட்பாக்களை உணர்த்துகின்ற தன்மையும் பழக்கமும் இல்லாதவர்கள் இருந்தார்கள். ஆனால், பாமர மக்களும் எளிமையாகப் புரிந்து கொள்ளுகின்ற முறைகளை வகுத்துக் காட்டிப் பணியாற்றினார்களில்லை. காலத்திற்கு ஏற்றவாறு, நகைச்சுவையுடன் நயம்பட உரைக்கும் பழக்கத்தினை, அவரவர்கள் மேற்கொண்டுள்ள பணிக்குப் பொருத்தமான குறட்பாக்களை நான் சொல்லி வந்தேனாகையால், பலரும் குறட்பாக்களைப் படிக்கின்ற ஆர்வமுடையவரானார்கள்.

 

திருச்சிராப்பள்ளியில் சிறந்த முறையில் பணியாற்றி வருகின்ற தமிழ்ச் சங்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு, தொடர்ந்து திருக்குறள் சொற்பொழிவுகள் நிகழ்த்தினேன். திருக்குறளில் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் உள்ள பத்துக் குறட்பாக்களையும் பத்து நாட்கள் பேசினேன். ஒரு குறட்பாவுக்கு விளக்கம் சொல்கின்ற போது பற்பல அரிய குறட்பாக்களைத் தொடர்புப் படுத்திக் காட்டினேன். மிகப் பெரிய பேராசியர்கள் 10 நாட்களும் வந்திருந்து சிறப்பித்தனர். கடைசி நாளில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், தமிழ்த் தந்தையுமான அமரர் திவான்பகதூர் டி.எம். நாராயணசாமிப் பிள்ளை அவர்கள் தலைமை வகித்து ‘முப்பால் வித்தகர்’ என்ற பட்டம் அளித்தும் பொற்கிழி அளித்தும் சிறப்பித்தனர்.

 

திருச்சி மாவட்டத்தில் பல அன்பர்கள் துணைக் கொண்டு திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தி மக்களிடையே குறள் மணம் கமழத் தொண்டாற்றிய போதும் சேலம் மாவட்டத்திலேயும் 3 ஆண்டுகள் அலுவல் காரணமாக நான் தங்கியிருந்த காலத்தில் திருக்குறளுக்குத் தொண்டாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றேன். சேலம் நகரில், அரிசிப்பாளையம், செவ்வாய்ப்பேட்டை, அம்மாப் பேட்டை முதலிய இடங்களில் முறையாகவே திருக்குறள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, திருக்குறளைப் பரப்பும் பணியினைச் செய்தேன். 1940 முதல் 1943 வரை இத்தொண்டினைச் செய்து வந்தேன்.

 

சேலம் குலசாமிப்பட்டியில், பெருந்தனவந்தரும், ஆன்மீகத்துறையில் பண்பு கொண்டவருமான நடேச பண்டாரம் என்ற பெரிய மனிதர், நல்ல பெரியவர்கள் பலரிடமும் தொடர்பு கொண்டும் இயன்றவரை பிறர்க்கு உதவி புரிந்தும் வாழ்ந்து வந்தார். என்னுடைய திருக்குறள் சேவையைப் பெரிதும் பாராட்டி வந்தார்.

 

அக்காலத்தில் பெரிதும் போற்றப்பெற்ற தவத்திரு. வி. புலனாந்த அடிகளார் (மயில்வானம் பிள்ளை) யாழ்ப்பாணத்துத் தமிழர், தமிழ்ப் பெரும்புலமையும் இசைப்புலமையும் பெற்றிருந்தார். தமிழ்நாட்டில் தமிழர்களிடையே இசை நுணுக்க ஆராய்ச்சிக்கு வித்திட்டவர். அவர் ஒருமுறை சேலம் வந்திருந்தார். அந்த ஆண்டு 1941 என்று நினைக்கிறேன். அப்பொழுது பெருந்தகை நடேச பண்டாரம் அவர்கள் இல்லத்தில் வரவேற்பும் விருந்து உபசரிப்பும் நடந்தன. அடிகளாரிடம் ஐயப்பாடுகளைக் கேட்டறியும் உரையாடல் நடந்தது. நான் பணிவுடன், திருக்குறளில் ‘துறவு’ என்ற அதிகாரத்தின் முதல் குறட்பாவுக்கு விளக்கம் தருமாறு கேட்டேன்.

 

‘யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்

அதனின் அதனின் இலன்.’

 

இக்குறட்பாவிற்கு அடிகளார், மிகத் தெளிவான முறையில், எளிய நடையில் எல்லாரும் வியக்குமாறு பொருள் கூறினார். மேலும் அவர் ‘நான் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பாலபண்டித பரீட்சை எழுதிய போது இக்குறட்பாவினைத்தான் முக்கிய வினாக்களில் ஒன்றாகக் கேட்டிருந்தார்கள்.’ என்று பழைய செய்தியையும் குறிப்பிட்டார்.

 

தருமபுரி ஆதீனம் தமிழ்த்துறைப் பகுதியிலிருந்து 1942 ஆம் ஆண்டு திருக்குறள் பதிப்பு பற்றி ரூபாய் 500 பரிசு அளிப்பதாக திருக்குறளில் தேர்வு நடத்தி அதில் மதிப்பெண்கள் முதன்மை பெறுபவர்க்கு முதல் பரிசு அளிப்பதாகக் குறிப்பிட்டிருந்தது. நண்பர்கள் என்னை அத்தேர்வு எழுதுமாறு தூண்டினர். ‘திருக்குறள் பரிசு பெற எழுதுகின்ற தேர்வுக்குத் தகுதி  – அரசினரால் நடத்தப்படும் வித்துவான் ‘பிரிலிமினரி’யில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்’ என்பதாகும். உடனே நண்பர்களின் விருப்பத்துக்கு இணங்கி 1943ல் மார்ச்சில் தேர்வுக்கு பணம் கட்டி, திருச்சியில் சென்று தேர்வு எழுதி வெற்றியும் பெற்றேன். உடனே தருமபுரி ஆதீனத்துக்குத் திருக்குறள் தேர்வுக்குரிய விதிமுறைகளைக் கேட்டு எழுதினேன். அவரிடமிருந்து வந்த பதில் திடுக்கிடச் செய்தது; திகைப்பையும் உண்டாக்கியது.

 

 

 

திருக்குறள் நூலில் வினாக்கள் கேட்பதுடன், சைவ சமயத்துக்குரிய சிறு சிறு நூல்களில் 20க்கு மேற்பட்ட நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவற்றிலும் வினாக்கள் கேட்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார்கள். அந்த நூல்களையெல்லாம் படித்து முடிப்பதற்கே பலகாலம் ஆகும். பெயர்தான் ‘திருக்குறள் பரிசு’ என்று குறிப்பிட்டிருந்ததே தவிர, படிக்க வேண்டிய நூல்கள் பல தரப்பட்டனவாக இருந்ததால், அந்தத் தேர்வினை எழுதாமல் நிறுத்திவிட்டேன்.

 

பின்னர், சேலத்தில் பணிபுரிந்த காலத்தில் அலுவலகத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு சென்னை சட்டக்கல்லூரியில் வந்து சேர்ந்தேன். அப்பொழுது புரசைவாக்கத்தில் தங்கினேன். வைக்கோல்காரத் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ஆதரித்துச் சிறப்பித்தனர். சட்டப் படிப்பினையும் திருக்குறள் வகுப்பினையும் ஒன்று சேரச் செயலாற்றி வந்தேன். தமிழறிஞர் அ.கி. பரந்தாமனார் அவர்களும், புலவர்கள் பலராமனார், நடேசனார், வடிவேலனார் முதலியவர்களும் மிகவும் ஆதரவும் ஊக்கமும் தந்து, திருக்குறளினைப் பரப்பி வரும் நற்பணியினைச் சிறப்பித்தார்கள். குறட்பாக்களை அட்டைகளில் எழுதி அவைகளை விளம்பரப்படுத்திக் கொண்டு தெருக்களிலெல்லாம் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டினையும் நண்பர்களுடன் செய்து கொண்டிருந்தேன். என்னுடைய சொற்பொழிவுகளைக் கேட்ட மக்கள், “எல்லோருமே திருக்குறளினை எளிமையாகப் படித்து புரிந்து கொள்ளலாம் போல் இருக்கின்றதே: இதுவரை மிக மிகக் கடினம் என்று எண்ணிக் கொண்டிருந்தோம்?“ என்று பேசிக் கொள்ள தொடங்கினர்.

 

திருக்குறள் வகுப்பின் நற்பயனாக திருக்குறள் மாநாடு ஒன்றினை நடத்த முடிவு செய்யப்பட்டது. சென்னையிலேயே முதன்முதலாக, அந்த முறையில் நாங்கள் நடத்திய மாநாடு தான் சிறப்புற்றிருந்தது என்று கூறலாம். பேராசிரியர்கள் ரா.பி. சேதுப்பிள்ளை, ஜி. சுப்பிரமணிய பிள்ளை, இராசாக் கண்ணனார் முதலானவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தார்கள். ‘இதுவரை விற்பனை ஆகாதிருந்த திருக்குறள் புத்தகங்கள் கொஞ்ச நாட்களாக விரைந்து விற்பனையாகின்றதே’ என்று கூறி மிகப் பெரிய புத்தக வெளியீட்டுக் கழகத்தினர் மகிழ்ந்தனர். அந்த அளவுக்கு திருக்குறள் பயிலும் ஆர்வம் வளர்ந்தது.

 

தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் வழக்கமாகச் சென்று திருக்குறள் தொண்டு செய்து கொண்டிருந்த எனக்கு, பம்பாய் செல்லும் வாய்ப்புகள் கிடைத்தது. இந்திய மொழிகள் பலவற்றிலும் மொழி பெயர்த்து விளம்பரம் செய்யக்கூடிய மிகப் பெரிய அலுவலகம் ஒன்றில், தமிழ்த்துறையில் வாய்ப்புக் கிடைத்ததைப் பெரிதாக மதித்து அப்பணியை ஏற்றுக் கொண்டேன். பம்பாய் வாழ் தமிழர்களிடையே திருக்குறள் பரப்புகின்ற பெரும் பணி கிடைத்தது என்பதே எனக்குப் பெரிய மகிழ்ச்சியாக இருந்தது. பம்பாய் வாழ் தமிழர்களிடையே திருக்குறள் பணியைச் சீரிய முறையில் சிறப்பாகச் செய்து வந்தேன். பம்பாய் நகரத்தைச் சார்ந்திருந்த தாராவி, மாதுங்கா, சையான் முதலிய இடங்களில் வாழ்ந்த தமிழர்களுடையிலும், நகரத்துக்குத் தொலை தூரத்திலுள்ள தமிழர்கள் வாழ் ஊர் மக்களிடையிலும் இடைவிடாமல் திருக்குறள் சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தேன். அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான மனத்துணிவு, ஊக்கம், முயற்சி, மனங்கலங்காமை போன்ற கருத்துக்கள் அமைந்த குறட்பாக்களைப் பெரிதும் விளக்கி வந்தேனாதலால் குறட்பாக்களை படிக்கும் ஆர்வம் மக்களிடையே விரைந்து வளர்வதாயிற்று.

 

உண்ணும் உணவுக்கு அவ்வப்போது தொட்டுக் கொள்ளும் ஊறுகாய் போல, திருக்குறள் அந்தக் காலத்தில் இருந்து வந்தது. புராண இதிகாச நூல்களைச் சோறு, குழம்பு போலவும் திருக்குறளினை ஊறுகாய் போலவும் வைத்துக் கொண்டிருந்தார்கள். இந்த எண்ணத்தினை மாற்றியமைக்க வேண்டும் என்பதையே என் வாழ்நாளில் அடிப்படை நோக்கமாகக் கொண்டேன். திருக்குறளைச் சோறாகவும் குழம்பாகவும் வைத்துக் கொண்டு புராண இதிகாசங்களை ஊறுகாயாக வைத்துக் கொள்வது தான் முறையான செயல் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்று முயற்சித்தேன். அம்முயற்சியில் ஓரளவு வெற்றி கிட்டியது என்று மனநிறைவு கொள்ளுகின்றேன்.

 

அரசுப் பணியிலிருந்து விடுபட்டு புதுக்கோட்டையில் தங்கியிருந்த காலத்தில் சுற்றுப்புற நிறுவனங்களிலும், பள்ளிக் கூடங்களிலும், திருக்குறள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி வந்தேன். குறட்பா மணம் அப்பகுதிகளில் கமழ ஆரம்பித்தது. அப்பொழுது அருமையான தமிழ்த் தொண்டு ஆற்றி வந்த ‘பொன்னி’ பத்திரிகையில் கட்டுரைகள் மூலமாகவும் குறட்பணி ஆற்றி வந்தேன். தென் ஆற்காடு மாவட்டத்தின் தலைநகரான கடலூரில் கூட்டுறவு முறையில் ‘திருக்குறள் அச்சகம்’ என்ற பெயரில் 1949 ஆம் ஆண்டில் தொடங்கப் பெற்று, அதனைப் பொறுப்பேற்று நடத்துகின்ற பணியை எனக்கு அளித்தனர். திருக்குறள் பரப்புகின்ற பணியினை, அந்தக் காலத்தில் தான் சேர்ந்தாற் போல கடலூரிலும், திருச்சியிலும் செய்து வந்தேன். சொற்பொழிவுகள் மூலம் குறள் பரப்பும் பணியினை ஆற்றி வந்த நான், சிறுசிறு புத்தங்கள் பற்பல வெளியிட்டும், ‘குறள் மலர்’ வார இதழை நடத்தியும், மக்களிடையே பெருத்த அளவில் திருக்குறள் பரவுமாறு செய்தேன்.  மிகக்குறைந்த விலையில் புத்தங்கள் வெளியிட்டு, பல ஆயிரக்கணக்கில் விற்பனை செய்கின்ற வாய்ப்பினைப் பெற்றேன். இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியும், தமிழ்ப் பாதுகாப்பு உணர்ச்சியும் தமிழர்களிடையே வேகமாக அக்காலத்தில் வளர்ந்து வந்தது. தமிழ்நாடு முழுதும், தமிழர்கள் எண்ணிறந்த மாநாடுகளை நடத்தினர். ஒவ்வொரு மாநாட்டிலும் ஆயிரக்கணக்காக என சிறு திருக்குறள் புத்தங்கள் விற்பனை ஆயின. பல்லாயிரக்கணக்கான மக்கள் எளிமையாகப் படித்துக் குறளார்வம் மிக்கவர்களாயினர். அப்புத்தகங்களின் பெயர் வருமாறு?

 

வள்ளுவனார் உள்ளம், திருக்குறள் மூலம் வள்ளுவர் காட்டிய வழி, அவள் சிரித்த சிரிப்பு, இன்பத்தோட்டம், ஏன் இந்த வாழ்வு, இன்பம் தரும் இன்பம், மானத்தை விற்காதே, இன்பம் இருக்கும் இடம், காதல் கள்வன், மயங்கிய நெஞ்சம், காதல் உழவன், திருக்குறள் காமத்துப்பால், வள்ளுவரைக் காணோம்.

 

இப்புத்தகங்கள் அனைத்தும் சேர்ந்தே ஐந்து ரூபாய்க்கு மேல் ஆகவில்லை. அதனால்தான் மக்கள் எளிமையாக வாங்கவும், திருக்குறள் பரவவும் எளிமையாக இருந்தது. இதுவல்லாமல் ‘திருக்குறளில் நகைச்சுவை’ ’அகமும், முகமும்’, ‘வள்ளுவர் வகுத்த வாழ்க்கைப் பாதை’, வள்ளுவர் வழிப்பயணம்’ என்பன போன்ற பல நூல்களையும் எழுதி வெளியிட்டேன்.

 

 

திருக்குறளினை மக்களிடையே பரப்ப வேண்டும் என்ற தொண்டினை மேற்கொண்டு அந்தப் பணியினை இயன்றவரை செய்து வந்ததனால், திருக்குறளைப் படிக்க வேண்டும் என்ற எண்ணம் மக்களிடையே உண்டாயிற்று. ஆதலால் தான் தமிழகத்தில் நிறைந்த புலமை பெற்ற தமிழறிஞர்கள் பலர் திருக்குறள் சம்பந்தமான நூல்களை எழுத ஆரம்பித்தனர். இவ்வாறு புலமை நிறைந்த தமிழறிஞர்களுக்கு, திருக்குறளில் நூல்கள் எழுத  வேண்டும் என்ற எண்ணம் உண்டானதற்குக் காரணம் மக்களிடையே திருக்குறள் படிக்கும் ஆர்வம் மிகுந்துள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொண்டமையே ஆகும்.

 

1935 ஆம் ஆண்டில் தொடங்கிய திருக்குறள் பரப்பும் பணியினைத் தொடர்ந்து செய்து வந்ததன் பயனாகத் தமிழ்ப் பெரும் புலவர்களின் திருக்குறள் ஆராய்ச்சி நூல்களைக் காலம் தாழ்த்தியாவது நம்மால் காண முடிந்தது.

 

திருச்சி ‘இம்பீரியல்’ அச்சுக் கூடத்தின் உரிமையாளரான அமரர் மாணிக்கம் பிள்ளை அவர்கள் தான் ‘குறள் மலர்’ பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டு வந்தார். அப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்து இயன்றவரை பணியாற்றி வந்தேன். தமிழ்நாட்டிலேயே திருக்குறளுக்கென்றே முதன்முதலாக வாரப்பத்திரிகை நடத்த பெற்றது என்றால், அது ’குறள் மலரே’ ஆகும். வாரந்தோறும் ஆயிரக்கணக்கில் அப்பத்திரிகை அச்சிடப் பெற்று, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாரந்தோறும் திருக்குறள் கற்கும் உணர்ச்சியினை அம்மலரின் வாயிலாகப் பெற்றனர். வாரந்தோறும் பல குறட்பாக்களுக்கு விளக்கவுரை எழுதி வந்தேன். முழுக்க முழுக்க அம்மலர், திருக்குறளைப் பரப்புவதற்கென்றே நடத்தப் பெற்றது.

 

மக்களுக்கு எளிமையாக திருக்குறளை விளங்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பற்பல கோணங்களில் குறட்பா கருத்துக்களை எழுதி வந்தேன். ‘வள்ளுவர் வழிப் பயணம்’ என்று தொடர்ச்சியாக நான் எழுதி வந்த கட்டுரைகள், கற்போருக்கெல்லாம் குறள் படிக்கும் ஆர்வத்தினை மிகுதியாக உண்டாக்கியது. பிற்காலத்தில் ‘வள்ளுவர் வழிப் பயணம்’ என்ற நூல் வெளி வந்து பலருக்கும் பெரிதும் பயன்பட்டது. ‘குறள்மலர்’ பத்திரிகை தமிழ்நாட்டில் தொண்டு செய்யாதிருந்தால், தமிழ் மக்களிடையே பெரும் பகுதி திருக்குறள் பரவியிருக்காது என்று கூறுதல் மிகையாகாது. ‘குறள்மலர்’ பத்திரிகையை படித்த காரணத்தினால் தான், பல அறிஞர்களும் திருக்குறளை எளிமையாகச் சொற்பொழிவாற்றும் பழக்கத்தினைப் பெற்றனர். இப்பொழுதும் தமிழறிஞர் பலர் குறள் மலர் பத்திரிகைகளின் தொகுப்பினைப் பாதுகாத்து வைத்துப் பயனடைந்து பெருமையடைகின்றனர்.

 

 

அக்காலத்தில் தமிழ்ப் பேரறிஞரான ஏ.சி. செட்டியார் அவர்கள் பன்முறை என்னை அழைத்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் திருக்குறள் சொற்பொழிவுகளை நிகழ்த்த ஏற்பாடு செய்திருந்தார். தொடர்ந்து அப்பல்கலைக்கழகத்தில் அழைக்கின்றார்கள். இரண்டு ஆண்டுகட்கு முன்னதாக, சிதம்பரம் நாவலர் உயர்நிலைப்பள்ளியில் பத்து நாட்கள் திருக்குறள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினேன்.  எல்லா நாட்களிலும் பேராசிரியர்களும் பொதுமக்களும் புலவர்களும் வந்திருந்து சிறப்பித்தனர். வட ஆற்க்காடு மாவட்டம் வேலூரில் ‘வசந்த கால விழா’ என்று அமரர் ஏ.எஸ்- அருணாசலம் பிள்ளை அவர்கள் நடத்துவது வழக்கம். அவர்கள் என்னை அழைத்து, திருக்குறள் தொடர் சொற்பொழிவு நிகழ்த்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

 

திருக்குறளையும் மக்கள் சுவைக்குமாறு தொடர்ந்து பேசமுடியும் என்ற ஆற்றலினைத் தங்களிடத்தில் தான் நான் கண்டேன் என்று வியந்து எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் ஊட்டியவர் புலவர் ஐயா நாயக்கர் அவர்கள் ஆவார். அவர் வட ஆர்க்காடு மாவட்டத் தமிழாசிரியர் கழகத் தலைவராக  இருந்தவர். அணியிலக்கணத்தில் சிறந்த மேதையாக அவர் விளங்கியமையால் ‘அணியிலக்கண ஐயா நாயக்கர்’ என்ற பட்டம் பெற்றார். வட ஆற்க்காடு மாவட்டத்தின் பல இடங்களிலும் யான் திருக்குறள் சொற்பொழிவு செய்வதற்கு அவரே காரணமாவார். ஆரணிக்கு அடுத்த களம்பூர் என்றும் ஊரில் தொடந்து திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தும்படி செய்தார். வேலூரில் இருக்கும் ஊரிஸ் கல்லூரியில் அக்காலத்தில் ‘யோக சுந்தரம்’ என்ற பேராசிரியர் பணிபுரிந்து வந்தார். அவர் காலம் முதல் இன்று வரை அக்கல்லூரிப் பேராசிரியர்கள் வாய்ப்பு நேரும் போதெல்லாம் சொற்பொழிவுக்கு என்னை அழைக்கத் தவறுவதில்லை.

 

மதுரைத் திருவள்ளுவர் கழகத்தினைத் தொடங்கியும் நடத்தியும் வருகின்ற புரவலர் கி. பழனியப்ப பிள்ளை அவர்கள் பல்லாண்டுகளாகவே, மதுரை நகரத்திலேயும் சுற்று வட்டாரங்களிலும் திருக்குறள் சொற்பொழிவு செய்வதற்கு எனக்கு மிகுந்த துணையாக இருந்து வருகிறார். அண்மையில் மதுரைப் பல்கலைக்கழகம், திருக்குறள் ஆராய்ச்சி சொற்பொழிவு நிகழ்த்த என்னை அழைத்திருந்தது; சென்றேன். துணைவேந்தர் உயர்திரு. வ.சுப. மாணிக்கம் அவர்கள் தலைமையில் சொற்பொழிவுகள் நிகழ்த்திப் பாராட்டுதலைப் பெற்றேன்.

 

பல்லாண்டுகளாகத் திருக்குறள் தொண்டாற்றிய எனக்கு 1951 ஆம் ஆண்டு குடந்தை மாநகரில் சிறப்பான முறையில் பட்டமளிப்பு விழா நடத்தப் பெற்றது. அவ்விழாக் குழுவிற்கு திருச்சி ஜில்லா போர்டு தலைவர் உயர்திரு.  இராஜா சிதம்பர செட்டியார் அவர்கள் தலைவராகவும், குடந்தை தஞ்சைமணி, எஸ்.கணபதி அவர்கள் செயலாளராகவும் இருந்தனர். குடந்தை நகரத்தில் பல முறை திருக்குறள் சொற்பொழிவுகள் நிகழ்வதற்கு இன்றியமையாத பணியாற்றியவர் எஸ். கணபதி ஆவார். அந்தப் பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிகள் காலை முதல் மாலை வரை நடைபெற்றது. எனக்கு பட்டம் அளித்த முதல் விழா அதுவே ஆகும்.

 

திருக்குறளார் பற்றிய பெருமைகளை எடுத்துச் சொல்லும் பொருட்டு அவரது வாழ்வியல் சரித்திரத்தை அவராலே சொல்லப்பட்டதை நாம் கட்டுரையாக வடித்து இருந்தோம். நீண்ட அவரது வாழ்க்கைப் பயணத்தை இந்த இதழிலும் தொடர்ந்து இருக்கிறேன். முத்து விழா மலருக்காக அவர் எழுதிய இந்த பயணக்கட்டுரைக்கு பின்பு ஓராண்டு வாழ்ந்த நம் திருக்குறளார் 04.01.1994-ல் இப்புவியை விட்டு மறைந்தார்.

 

வழக்கம் போல் திருக்குறளாரும் இத்தமிழ்நாட்டில் போற்றப்படவும் இல்லை. நினைவுக் கூறப்படவும் இல்லை. வன்னிய சமுதாயத்துக்கு ஏற்பட்ட இச்சாபக்கேடு என்றுதான் தீருமோ? சொந்தங்களே! இனியாவது நம் எதிர்கால சந்ததியினருக்கு நமது சமுதாய தியாகிகளையும், அறிவார்ந்த தலைவர்களையும், எழுத்துலக முன்னோடிகளையும் பற்றி அறிமுகம் செய்து நம் குலம் தழைக்க, தியாகங்களை மதித்துப் போற்றப் பழகுவோமென சபதம் மேற்கொள்ள உங்களையும் உரிமையோடு அழைக்கிறேன். இதோ குறளாரின் பயணம் மீண்டும் சிறகை விரித்து தொடர்கிறது.

 

உடையார் பாளையம் குறுநில மன்னர், (ஜமீன்தார்) பெருமைமிகு கச்சியுவரங்க காளாக்க தோழ உடையார் அவர்கள் அவ்விழாவிற்குத் தலைமை வகித்துச் சிறப்பித்தார். தமிழ்ப் பெரும் புலவர்களும் அறிஞர் பெருமக்களும் விழாவில் கலந்து கொண்டனர். அவர்களுள் டாக்டர் மா. இராசலிங்கனார், தமிழ்மணம் கி. இராசமாணிக்கனார், ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ். இராமசாமி சாஸ்திரியார் முதலியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள். குறுநில மன்னர் பட்டமளிக்கும் பட்டயத்தை எடுத்துக் கொடுக்க டாக்டர் மா.இராசமாணிக்கனார் தம்முடைய திருக்கரங்களினால் ‘திருக்குறளார்’ என்ற பட்டத்தினை உவகையோடு எனக்கு அளித்தார்.

 

1952 ஆம் ஆண்டில் நாடாளு மன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு நான் டெல்லிக்குச் சென்ற பொழுது குறள்மலர் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த இயலாமற் போயிற்று. தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காரணங்கள் பலவற்றுள்ளும், விரிந்து பரந்து கிடக்கின்ற ‘ஆசிரியர் உலகம்’ குறிப்பிடத்தக்கது.

 

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தாங்கள் நடத்தும் மாநாடுகளிலும் விழாக்களிலும் பெரும்பாலும் என்னை அழைத்துத் திருக்குறள் சொற்பொழிவாற்றுமாறு செய்துவந்தனர். அக்காலத்தில் ஆசிரிய சங்கங்களில் நல்ல பொறுப்பேற்றிருந்த திருவாளர்கள் இராமைய தேவர், வீரையன் முதலானோர் குறிப்பிடத் தக்கவர்கள் ஆவார்கள். சிறந்த தமிழ்ப் புலவர்களும் தமிழ் ஆசிரியர்களும் என்னை அழைத்து, தமிழகம் முழுதும் சொற்பொழிவு நிகழ்த்தும் வாய்ப்பினை உண்டாக்கித் தந்த காரணத்தினால் தான் தமிழ் மக்களிடையே திருக்குறளைப் பரப்புகின்ற நற்பணியினை என்னால் செய்ய முடிந்தது.

 

மனோன்மணியம் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை அவர்களார் தோற்றுவிக்கப்பட்ட தமிழ்ச் சங்கம் திருவனந்தபுரத்தில் நற்பணியாற்றி வருகின்றது. கேரளத்தில் வாழ்கின்ற தமிழன்பர்களின் அழைப்பினை ஏற்று, அந்தத் தமிழ்ச் சங்கத்தில், இனிய திருக்குறள் சொற்பொழிவுகளை  நிகழ்த்தி வந்தேன்.

 

திருச்சியில் கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே கவிதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்து வந்தது. இப்போது நடப்பவை போல, கவியரங்கம் அக்காலத்தில் நடைபெறுவதில்லை. ஒருமுறை தொடர்ச்சியாக பக்திச் சுவை நிரம்பிய நூறு விருத்தப் பாக்கள் முருகன் மீது பாடி முடித்தேன். அந்த நூலுக்கு ‘முருகன் முறையீடு’ என்று பெயர் வைத்தேன். அப்பொழுது திருச்சி அர்ச் சூசையப்பர் உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக இருந்த இரா. மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் என் கவிதைகளைப் படித்து மகிழ்ந்து என்னைப் பாராட்டி கவிதைகளை செப்பனிட்டுக் கொடுத்தார். ‘இந்தக் கவிதைகள் ஒரு நூல் வடிவில் வந்தால் சிறப்பாக இருக்கும்’  என்று கூறினார். என்னால் இயற்றப்பட்ட ‘முருகன் முறையீடு’ என்ற பாடல்களை, திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் பார்வைக்கு என் நண்பர்கள் தந்தனர். அவர் படித்துப்பார்த்து மிகவும் பாராட்டினார்.

 

’இந்த இளமையிலேயே கவிதை புனைவது நல்ல எதிர்காலத்தை உணர்த்துகிறது’ என்று நண்பர்களிடம் சொல்லிப் பாராட்டினார். அப்போது திருச்சி தென்னூரில் இராமன் செட்டியார் என்பார் கடை வைத்திருந்தார். அவரிடம் பொருளுதவி செய்யுமாறு தூண்டி, முருகன் முறையீடு’ என்ற நூல் அச்சிட்டு வெளியிடச் செய்தார். அந்த நூலுக்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள், அர்ச் சூசையப்பர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர், மு. நடேச முதலியார், தமிழ்ப் பெரும் புலவர் இரா. மீனாட்சி சுந்தரனார் ஆகியோர் அருமையான சாற்றுக் கவிதைகள் அளித்து நூலினைச் சிறப்பித்ததோடு, மாணவ நிலையில் இருந்த என்னை ஊக்குவித்தனர்.

 

அந்தச் சாற்றுக் கவிகள் பலவற்றுள்ளும், வெண்பா ஒன்றினை மட்டும் இங்குக் குறிப்பிடுகின்றேன். இது வாரியார் சுவாமிகள் பாடிய பாடல்களுள் ஒன்றாகும்.

 

“மறையா யிரமேத்தும் வள்ளல் முருகன்

முறையீட்டை அன்பாய் மொழிந்தான் பொறையார்

புகழ்வீரா சாமி புதல்வனருட் போதம்

திகழுமுனி சாமி நலம் சேர்ந்து”.

 

இப்பொழுதும் வாரியார்  சுவாமிகள் என்னுடைய திருக்குறள் தொண்டினைப் பாராட்டி வருகின்றார்கள். அவருடைய 75 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பல இடங்களில் அவரை நான் பாராட்டிப் பேசியதுண்டு. ஒருமுறை வேலூரில் பேசிக் கொண்டிருந்த பொழுது, வாரியார் சுவாமிகள் எனக்குப் பொன்னாடை போர்த்திப் பாராட்டினார்.

 

முன்னாள் அமைச்சர் பூவராகவன் அவர்களின் பல பெரியார்களின் துணையுடன் நடத்தி வந்த மன்றத்தின் சார்பில் பல்லாண்டுகளாகத் திருப்புகழுக்கும் திருக்குறளுக்கும் தொண்டாற்றியவர்களைப் பாராட்ட வேண்டும் என்ற கருத்தின்படி வாரியார் சுவாமிகளையும் என்னையும் அழைத்திருந்தார்.

 

அந்த விழா சென்னை இராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் சிறப்பாக நடந்தேறியது. பெருந்தலைவர் காமராஜர் எங்கள் இருவரையும் பாராட்டிப் பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கிச் சிறப்பித்தார். ‘நாள் தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பாராட்டி வருகின்ற இவர்களை நான் வந்து பாராட்டுவதில் என்ன புதுமை இருக்கிறது?’ என்று பெருந்தலைவர் கூறிய சொற்கள் இன்றும் என் நெஞ்சில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

 

தேவகோட்டையில் இருந்த திரு. சோம சுந்தரம் செட்டியார் என்பவர் திருக்குறளுக்கு அரிய சேவை செய்து வந்தார். அவ்வாறே காரைக்குடி குறள் கழகமும் திருக்குறள் பணியினைச் செம்மையாகச் செய்து வருகிறது. இந்த இடங்களில் எல்லாம் தொடக்க காலம் முதற்கொண்டே நான் திருக்குறள் சொற்பொழிவுகளை நிகழ்த்தி மிகுந்த ஆர்வத்தினை மக்களிடையே உண்டாக்கியுள்ளேன். கர்நாடக மாநிலத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் திருக்குறள் சொற்பொழிவினைக் கேட்கப் பலமுறை எழுதிக் கொண்டிருந்தனர். ஒருமுறை ‘சிமோக’ என்ற நகரத்திற்குச் சென்று, திருக்குறள் விரிவுரை நிகழ்த்தி அவர்கள் ஆர்வத்தினை நிறைவு செய்துள்ளேன். பெங்களூர்த் தமிழர்கள் பன்முறை எனது குறட்பா உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.

 

டில்லியில் ஐந்து ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராய் இருந்த காலத்தில் திருக்குறள் சிறப்பினைப் பன்முறை எடுத்துக் கூறும் வாய்ப்பினைப் பெற்றுருக்கிறேன். டில்லி மாநகரிலும் சுற்று வட்டாரங்களிலும் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்களிடையே இனிய குறட்பாக்களைப் பேசி ஆர்வத்தினைத் தூண்டுகின்ற வாய்ப்புக் கிடைத்தது.

 

நாடாளுமன்றத்தில் அப்பொழுது துணை சபாநாயகராக இருந்த அனந்தசயனம் அய்யங்கார் அவர்கள் பல இடங்களில் தமிழர்களிடையே திருக்குறள் சொற்பொழிவுகளை நிகழ்த்துகின்ற வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார்.

 

நாடாளுமன்றத்தில் நான் பேசுவதற்கு நல்ல ஊக்கமும், ஆர்வமும் கொடுத்தவர் அவர்களே ஆவார். 1952லிருந்து 1957 வரை நாடாளுமன்றத்தின் சேவை திருக்குறளுக்குச் செய்யும் சேவையாகவே இருந்ததென்று கூறலாம்.

 

 

 

சில ஆண்டுகளுக்கு முன்னதாக, டில்லி மாநகரத்தில் சிறப்பான ஒரு விழா எடுத்து குடியரசுத் தலைவர் அவர்கள் தலைமையில் திருவள்ளுவர் உருவச் சிலையினைத் திறந்து வைத்தார்கள். அந்த விழாவிற்கு முதல் காரணமாக இருந்தவர் மாண்புமிகு அமைச்சராக இருந்தவரும் சென்னை சட்டசபையில் சபாநாயகராக இருந்தவரும் ஆன உயர்திரு. க. இராசாராம் அவர்கள் ஆவார்.

 

அச்சமயம் மதிப்பிற்குரிய சி. சுப்பிரமணியம் அவர்கள் டெல்லியில் அமைச்சராக இருந்து திருவள்ளுவர் சிலை திறப்பதற்குத் துணை நின்றார்கள். அந்த மிகப்பெரிய விழாவுக்குப் பல பேரறிஞர்கள் அழைக்கப்பட்டிருந்தாலும், என்னை முக்கியமாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தி மாண்புமிகு க. இராசாராம் அவர்கள் அழைத்துச் சென்றார்கள். 20 ஆண்டுகளுக்கு முன்னதாக டில்லி மாநகரத்தில் இடைவிடாமல் தமிழர்களிடையே ஏற்படுத்திய திருக்குறள் ஆர்வம் பிற்காலத்தில் தலைநகரில் திருவள்ளுவர் சிலை அமைப்பதற்கு ஒரே காரணமாக அமைந்திருந்தது என்று கூறுவது மிகையாகாது.

 

நாடாளுமன்றத்தில் உறுப்பினராயிருக்கும் ஒருவரின் பெயர் பல பதிவு ஏடுகளிலும் காணப்படுவதாக இருக்கும். அவ்வாறு எழுதப்பட வேண்டிய இடங்களில் எல்லாம் என்னுடைய பெயரை திருக்குறளார் என்றே எழுதச் செய்தேன். அதனால் தமிழ் மொழியறியாத வடநாட்டவரும் திருக்குறளைத் தெரிந்து கொள்வதற்கு உரிய வாய்ப்பு உண்டானது என்றே கூற வேண்டும்.

 

நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு டில்லியிலிருந்து முதலில் ஒரு செய்தி கேட்பது வழக்கம். அதாவது ‘உங்கள் பெயரை எந்த வகையில் எழுதுதல் வேண்டும்’ என்று கேட்பார்கள். எல்லோரும் வழக்கமாகத் தங்கள் பெயரையும், வீட்டு முகவரியையும் எழுதி அனுப்புவார்கள். நான் என் பெயரை மட்டும் குறிப்பிடாமல், திருக்குறளார் என்பதையும் சேர்த்து எழுதி அனுப்பினேன். அதனால்தான் நாடாளுமன்ற பதிவேடுகளிலும் காசோலை கொடுக்கின்ற வாய்ப்புகளிலும் பல்வேறு காலங்களில் உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்டு எழுத வேண்டிய காலங்களிலும் திருக்குறளார் என்ற பெயரையே எழுதிக் கொண்டு வந்தார்கள். திருக்குறள் என்ற பெயரை தமிழறியாதவர்களும் நாவினால் சொல்லுகின்ற வாய்ப்புக் கிடைத்ததை ஒரு பெரிய மகிழ்ச்சியாகவே கருதினேன்.

 

டில்லியிலிருந்த போது சுவாமி சிவானந்தர் என்ற முனிவர் ரிஷிகேசத்தில் தவ வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். அவரது ஆசிரமத்தில் என்னைத் திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்துமாறு சொல்லிக் கேட்டு மகிழ்வார். பல முறை என்னுடைய சொற்பொழிவுக் கருத்துக்களைக் குறித்து காட்டி விமர்சனம் செய்து, எனக்கு ஊக்கம் அளித்தார். ஒரு நாள் ‘வேள்வி’ போன்று சீடர்களுடன் வழிபாடு நடத்தி எனக்கு ‘திருக்குறள் கேசரி’ என்ற சிறப்புப் பட்டத்தையும் அளித்தார்.

 

மதுரை மாநகரின் நற்பெயருனும் புகழுடனும் வாழ்ந்து வந்த பெரியார்களான தமிழர்களின் தலைவர்களான தமிழவேள் சர்.பி.டி. இராசன் அவர்களும் ஒருவராவார். தமிழ் மக்களின் உள்ளங்களில் என்றென்றும் நினைவில் நிறுத்தப்பட்டு இருப்பவர் அவர். மதுரைத் தமிழ்ச் சங்கத்தின் பொன் விழாவினைப் பத்து நாட்களுக்கு மேலாக காலை முதல் இரவு வரை அருமையாக நடத்தினார். அந்த ஆண்டு 1954 – 55 என்று நினைக்கின்றேன். பத்து நாட்களும் அவ்விழாவில் கலந்து சொற்பொழிவு ஆற்றும் வாய்ப்பினை எனக்கு அளித்தார்கள்.

 

நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நான் சொற்பொழிவாற்றியதோடு அல்லாமல் பற்பல நேரங்களிலும் என்னைப் பேசத் செய்து, கமழுகின்ற குறள் மணத்தில் மக்களை மகிழச் செய்தார்கள். பொன் விழா நிகழ்ச்சிகளில் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், டி.கே.எஸ். சகோதரர்கள் முதலிய பெருங்கலைஞர்களின் நாடகங்கள் நடக்கின்ற போதெல்லாம் இடைவேளைகளில் ஐயா பி.டி. இராசன் அவர்கள் என்னைப் பேசுமாறு ஆணையிட்டு மகிழ்வார்கள். பொன் விழா முடிந்த பிறகு தனியாக ஒரு நிகழ்ச்சி அமைத்து என்னைச் சிறப்பித்து தமிழகத்தின் சிகரமான புலவர் பெருமக்களில் ஒருவரான கார்மேகக் கோனார் அவர்களை வாழ்த்தச் செய்து, எனக்கு ‘வெள்ளித் தட்டு’ ஒன்றினைப் பரிசாக அளித்தார்கள்.

 

சேலம் மாநகரில் 1954ம் ஆண்டு என்னுடைய திருக்குறள் தொண்டினைப் பாராட்டு முகத்தான், நகரப் பெரியார்களில் ஒருவரும் இராவ்சாஹிப் பட்டம் பெற்றவரும், நகரமன்றத் தலைவரும், சென்னை சட்டசபை உறுப்பினரும் ஆகிய உயர்திரு. பி. இரத்தினசாமி பிள்ளை அவர்களும் சிறப்பான விழா ஒன்று நடத்தினார்கள். அதிகமான சுற்றுப் பயணம் செய்து, திருக்குறள் சொற்பொழிவு செய்த மாவட்டங்களில் சேலம் மாவட்டம் என்னைப் பொறுத்த வரையில் முதன்மையானதென்று கூறி மகிழ்கின்றேன்.

 

சேலத்தில் நடைபெற்ற அந்த விழாவுக்கு சர்.பி.டி. இராசன் அவர்கள் தலைமை வகித்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்  துணைவேந்தர் திவான் பகதூர் டி.எம். நாராயணசாமி பிள்ளை அவர்கள் ‘தமிழ் மறைக் காவலர்’  என்ற பட்டத்தினை எனக்கு அளித்துச் சிறப்பித்தார்கள். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், நாதசுவர சக்கரவர்த்தி காருகுறிச்சி அருணாசலம் முதலிய பெரும் கலைஞர்கள் வந்திருந்து விழாவினைச் சிறப்பித்தார்கள். தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் முதலிய பேரறிஞர்கள் வந்திருந்து பாராட்டுரை நிகழ்த்தினார்கள். விழாத் தலைவர் அவர்கள் எனக்குப் பொன்னாடை போர்த்திப் பெருமைப்படுத்தினார்கள்.

 

திருச்சியை அடுத்த பொன்மலையில் திருக்குறள் கழகம் என்ற பெயரில் நிறுவனம் அமைத்து, அமரர் ஆறுமுகனார் அவர்கள் தலைவராயிருந்து நடத்தி வந்தார். அருட்பாவின் நுணுகிய ஆராய்ச்சியாளர் வித்துவான் வீ. இளங்கண்ணனார் அக்கழகத்தின் செயலாளராயிருந்தார்.

 

அக்கழகத்தினர் அடிக்கடி என்னை அழைத்துச் சொற்பொழிவு நிகழ்த்தச் செய்து, திருக்குறளின் 133 அதிகாரங்களையும் தொடர்ந்து விளக்குகின்ற வாய்ப்பினைத் தந்து மக்களுக்குக் குறளார்வம் உண்டாகுமாறு செய்தார்கள். மிக அதிகமாகச் சொற்பொழிவாற்றிய இடம் பொன்மலை என்று கூறுவதில் நிறைந்த பொருள்  இருக்கின்றது. (எனக்குப் பொன்மலையில் தான் திருமணமும் நடந்தது) இவ்வாறு 133 அதிகாரங்கள் முடிந்த பிறகு தொகுப்பு நிகழ்ச்சியாக 10 நாட்கள் திருக்குறள் தொடர் சொற்பொழிவினைச் செய்தேன். அந்த விழா ஒரு மாநாடு போலக் காட்சியளித்தது.

 

இறுதி நாளில், யானையின் மீது திருக்குறள் சுவடி வைக்கப்பட்டு ‘உலகத் தமிழ்மறை’ என்ற கொடி ஏந்திய வண்ணம் ஒரு பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது. அவ்ஊர்வலத்தில், மிக பெரிய இரயில்வே அதிகாரிகளும் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டார்கள். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமையில் பாராட்டு விழா நடைப்பெற்றது. அவ்விழாவில் பேராசிரியர்களான அய்யம் பெருமாள் கோனார், ரம்போலா மாஸ்கரனேஸ், டாக்டர் இராசமாணிக்கனார் முதலானோர் பாராட்டுரை நிகழ்த்தினார்கள்; மதிப்பிற்குரிய தவத்திரு குன்றக்குடி அடிகளார் பொன்னாடை போர்த்தினார்கள்.

 

பல ஆண்டுகளாகத் திருக்குறள் தொண்டு செய்து வரும் கழகங்களாகவும், நான் அடிக்கடி சென்று பேசி வருகின்ற இடங்களாகவும் அமைந்துள்ள தென்காசி திருவள்ளுவர் கழகம், காரைக்குடி குறள் கழகம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், தேவகோட்டை திருக்குறள் கழகம் போன்ற கழகங்களின் வரிசையில் உடுமலைப் பேட்டை அரிமா சங்கத்திலும், அது போன்ற பிற மன்றங்களிலும், அந்த வட்டாரத்திலும் தொடர்ந்து திருக்குறள் சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு செய்து ஆசிரியப் பெருமக்கள், பொதுமக்களும் பயன்படுமாறு செய்த திருவாளர் செந்தில் ஆறுமுகம் அவர்கள் என்றென்றும் என் நினைவில் இருப்பவர் ஆவார்.

 

 

வட ஆற்க்காடு மாவட்டத்தினைச் சார்ந்த திருவண்ணாமலையில் வள்ளலார் சன்மார்க்க சங்கம் என்ற பெயரில் அருமையான நிறுவனம் நடைபெற்று வருகின்றது. அங்கே ஒரு முறை கோபுர வாயிலில் 10 நாட்கள் சொற்பொழிவினை நிகழ்த்தினேன். ஆசிரியப் பெருமக்களும் புலவர்களும் சிறப்பித்தார்கள். திருவாளர் ஸ்ரீராமுலு செட்டியார் அவர்களும் கலை நம்பி அவர்களும் அதை முன் நின்று நடத்தினார்கள்.

 

இறுதி நாளில் நகரத்தின் முக்கிய தெருக்களில் எல்லாம் பாராட்டு ஊர்வலம் நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியின் பெரும் பயனாக ஓராண்டு கழித்து, திருவண்ணாமலையில் மூன்று நாள் நிகழ்ச்சியாகத் திருக்குறள் மாநாடு ஒன்றினை நடத்த முடிந்தது. மிகப்பெரிய தமிழ் மேதைகள் அம்மாநாட்டில் கலந்து பேசினார்கள்.

 

உலக மகா கவிஞர்களில் ஒருவரான யோகி சுத்தானந்த பாரதியார், மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், அ. நடேச முதலியார் முதலானவர்கள் திருக்குறள் கருத்தினை எடுத்துக் கூறினார்கள். மூன்று நாட்களும் நான் திருக்குறள் பணியினைச் செய்து தருகின்ற வாய்ப்பினைப் பெற்று மகிழ்ந்தேன்.

 

இன்றும் என் உள்ளத்தில் பசுமையான நிகழ்ச்சி ஒன்று நினைவில் இருக்கின்றது. வட ஆற்க்காடு மாவட்டத்தில் செங்கம் என்ற நகரம் நல்ல தமிழறிஞர்களைப்  பெற்றிருப்பதாகும். அங்கு நான் பலமுறை சென்று பேசி வருவதுண்டு. பல ஆண்டுகளுக்கு முன்பாக திருக்குறள் மாநாடு ஒன்றை நண்பர்கள் நடத்தினார்கள். அந்த மாநாட்டில் பெரும் புலவர் நடேச முதலியார் போன்றவர்களும் என் போன்ற நண்பர்களும் கலந்து பேசிய உரைகளை விட அரிமா போன்று வீரமுழக்கம் செய்து வந்த அரசியல் தலைவர் பா. ஜீவானந்தம் அவர்கள் சிறப்புரை ஆற்றியதுதான் மிகவும் பெருமைக்குரியதாகும். ‘திருக்குறளாருக்கு மட்டும்தான் திருக்குறள் தெரியும் என்று நினைக்காதீர்கள்; எனக்கும் கொஞ்சம் தெரியும்’ என்று நகைச்சுவை போன்று அடக்கமாகப் பேசிய காட்சியை என்னால் மறக்க முடியாது. அவர் பிறகு தாம்பரத்தில் திருக்குறள் பெருவிழா ஒன்றினை அமைத்து என்னை அழைத்துப் பேசுமாறு பணித்தார்கள்.

 

ஒருமுறை கல்கத்தா சென்றிருந்த பொழுது அங்குள்ள பல சங்கங்கள் என்னுடைய திருக்குறள் சொற்பொழிவினைக் கேட்டுச் சிறப்பித்துப் பாராட்டின. அங்குள்ள தமிழ் அன்பர்கள் திருக்குறள் கற்கும் பேரார்வத்தில் இருந்ததைக் கண்டு நான் வியப்புற்று மகிழ்ந்தேன்.

 

திருக்குறள் தொண்டினை 1935ஆம் ஆண்டிலிருந்து செய்து கொண்டு வந்த எனக்கு பெருமைக்குரிய முன்னாள் கல்வியமைச்சர் அவினாசிலிங்கம் செட்டியார் தாம் பதவியில் இருந்த போது பள்ளிக்கூடங்களில் திருக்குறளைக் கட்டாய பாடமாக்கிய செய்தி மிகவும் மகிழ்ச்சியளித்தது. பேராசிரியர் சி, இலக்குவனார் அவர்கள் நாகர்கோயில் கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த போது, என்னை அழைத்துப் பலவிடங்களிலும் சொற்பொழிவு நிகழ்த்தச் செய்து, திருக்குறள் பரவுவதற்கு ஆற்றிய தொண்டினை என்னால் என்றுமே மறக்க முடியாது.

 

கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக வானொலி நிலையங்களில் திருக்குறளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தும் வாய்ப்பினைப் பெற்று வருகின்றேன். என்னுடைய திருக்குறள் தொண்டிற்கு வானொலி நிலையங்கள் துணையாக நிற்கின்றன என்பதைக் குறித்து மகிழ்ச்சிடைகின்றேன். திருவள்ளுவருக்கு இரண்டாயிரம் ஆண்டு நிறைவு விழா அடுத்த ஆண்டு வர இருக்கிறது. நாம் எப்படி நடத்தலாம்’ என்ற கருத்தினை ஒரு நாள் உயர்திரு எம்.எஸ். கோபால் கேட்டார். அவர் அப்பொழுது திருச்சி வானொலி நிலையத்தின் பெருமைமிகு இயக்குநராக இருந்தார்.

 

மக்களுக்குச் சேவை செய்வதே வாழ்க்கையின் குறிக்கோள் என்ற பெருநோக்கம் அவர் பால் ஊறியிருந்தது. அவர் பல வானொலி நிலையங்களில் இயக்குநராக வந்த பிறகுதான், அவ்விடங்களில் தமிழ் இலக்கியங்களுக்குப் புதுப் பொலிவு மிகுந்தது எனலாம். வெறும் பாட்டுக்களையே ஒலிபரப்புவது தான் வானொலி  நிலையத்தின் வேலை என்ற எண்ணத்தை மாற்றி மிகுதியாக இலக்கியங்களைச் சொற்பொழிவுகள் மூலமும், பட்டிமன்றங்கள், வழக்காடு மன்றங்கள், கவியரங்கங்கள் முதலியன மூலமாகவும் ஒலி பரப்பலாம் என்று நடத்திக் காட்டி, தமிழுக்கு ஏற்றம் தந்த பெருமை, உயர்திரு எம்.எஸ். கோபால் அவர்களையே சாரும் என்று கூறுதல் தகும்.

 

திருக்குறளினை வாரமொருமுறை ஒலிபரப்பி 52 வாரங்கள் அவ்வாறு முடிந்த பிறகு அடுத்த ஆண்டு திருவள்ளுவரின் ஈராயிரம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடுவது சிறப்பாக இருக்கும் என்று கூறினேன். ஆழ்ந்து சிந்தித்தபின் இயக்குநர் ஒத்துக் கொண்டார். தவத்திரு குன்றக்குடி அடிகளார், ஆறுமுக முதலியார், நடேச முதலியார் முதலானோர் வாரச் சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்கள். நானும் பல வாரங்கள் பேசுகின்ற வாய்ப்பினைப் பெற்றேன்.

 

திருவள்ளுவர் ஈராயிரம் ஆண்டு நிறைவு மதுரை மாநகரில் சிறப்பாக கொண்டாடப் பெற்றது. எனக்கு அவ்விழாவில் பெரும்பங்கினை ஏற்றுக் கொள்ளச் செய்தனர். வானொலியில் நடைபெற்ற ஓராண்டு சொற்பொழிவுகளை வள்ளுவர் உலகம் என்ற பெயரில் நூல் வடிவமாகக் கொண்டு வந்த பெருமையும் இயக்குநர் திரு. கோபால் அவர்களையே சாரும் திருமுறை மேலும் புதுவை வானொலியில் திருக்குறள் முழுதும் அமைகின்ற முறையில் ஆறு சொற்பொழிவுகளை நிகழ்த்துமாறு செய்ததும் நினைவில் நிற்கிறது…

 

அந்தச் சொற்பொழிவுகளையெல்லாம் பொதுமக்கள் கேட்டு மகிழ்ந்து மிக்கப் பயனடைந்ததாகப் புகழ்ந்தார்கள். கோவை வானொலி நிலையமும் என்னுடைய திருக்குறள் சொற்பொழிவுகளை மிக நல்ல முறையில் பதிவு செய்து ஒலிபரப்பி வருகிறது… நான் மேற்கொண்ட திருக்குறள் தொண்டுக்கு இத்தகைய வானொலி நிலையத்தினர் ஒத்துழைப்புத் தருவது போற்றத்தக்கது. சென்னை வானொலி நிலையமும் நல்ல முறையில் திருக்குறள் தொண்டு செய்து வருகிறது. புதுவை, நெல்லை, வானொலி நிலையத்தினரும் என்னுடைய திருக்குறள் தொண்டுகளைப் பாராட்டி, வாய்ப்பு நேரும் போதெல்லாம் என் சொற்பொழிவுகளை ஒலிபரப்பி வருகின்றார்கள்.

 

நாளிதழ்களும் வார இதழ்களும் அவ்வப்பொழுது என்னுடைய திருக்குறள் பேச்சுக்களை வெளியிட்டு ஊக்கந்தந்தன. அண்மைக்  காலத்தில் கல்கண்டு, ஆனந்த விகடன், குமுதம், சாவி, இதயம் பேசுகிறது, ஞானபூமி முதலிய இதழ்கள் எல்லாம் அவ்வப்பொழுது, என்னுடைய திருக்குறள் செய்திகளை வெளியிட்டு என் திருக்குறள் பணிக்குத் துணை புரிந்தன. ஒருமுறை குமுதம் என்னுடைய திருக்குறள் சேவையினைப் பாராட்ட வேண்டும் என்று கருதி ’45 ஆண்டுகளாக இவர் குரல் திருக்குறள்’ என்ற தலைப்பில் என் புகைப்படத்துடன் என் திருக்குறள் தொண்டினை பாராட்டிப் புகழ்ந்துள்ளது.

 

1981 ஆம் ஆண்டு மதுரை மாநகரில் நடைபெற்ற உலகத் தமிழ் மாநாட்டில் தமிழக முதல்வர், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்  எனக்குப் பெரிய பொறுப்பு ஒன்றினை அளித்திருந்தார்கள். விழா அமைக்கப்பட்டிருந்த நாட்களில் ஒருநாள் திருக்குறளுக்காகக் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் திருக்குறள் விழாவில் தலைமை ஏற்று நடத்தும் பணியினை என்னிடம் ஒப்படைத்திருந்தார்.

 

என்னுடைய தலைமையில் பேராசிரியர் பதின்மர்,  திருக்குறளைப் பற்றிச்  சிறப்பான விரிவுரைகள் நிகழ்த்தினார்கள். பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் பிறநாட்டு மக்களுமாகக் கூடி கேட்டு மகிழ்ந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. நானும் முன்னுரை முடிவுரை என்ற முறைகளில் ஒருமணி நேரம் நகைச்சுவையுடன் ஆழ்ந்த பல கருத்துக்களையும் பேசினேன்.

 

கேட்ட மக்கள் மகிழ்ச்சிக் கடலில் மிதந்தார்கள் என்று கூறுவது தற்பெருமை ஆகாது. இந்தப் பேச்சினை சென்னையிலிருந்து வெளிவரும் ‘சாவி’ என்ற வார இதழ் மிக உயர்வாக எழுதி என்னை ஊக்கப்படுத்தியது. மாநாட்டுப் பேச்சினை வானொலி நிலையங்களும், தொலைக்காட்சி நிலையமும் நல்ல முறையில் ஒலி – ஒளி பரப்பிச் சிறப்புச் செய்தன.

 

உலகத் தமிழ் மாநாட்டில் நான் பேசிய பேச்சினைக் கேட்ட அன்பர்கள். ‘பல ஆண்டுகளாக உங்கள் திருக்குறள் சொற்பொழிவுகளை நாங்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றோம். ஆனால் இன்று மாநாட்டில் பேசிய பேச்சினைப் போல், நீங்கள் எப்போதுமே  பேசியதில்லை. அவ்வளவு சிறப்பாகவும், உயர்வாகவும் இருந்தது’ என்று என்னிடம் வந்து கூறி எனக்கு மேலும் மேலும் திருக்குறள் ஆர்வம் எழும்படி ஊக்குவித்தனர்.

 

கடந்த நாற்பதாண்டு அனுபவத்தில் என்னை அடிக்கடி அழைத்து, திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்துமாறு செய்த நகரங்களில் திருவாரூரும் ஒன்று. ஒருமுறை திருவாரூரில் என்னுடைய சொற்பொழிவு முடிந்த பிறகு தமிழ்நாட்டின் தலைவர்களில் ஒருவராக மதிக்கப்பெறும் நண்பர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் நன்றியுரையில் அருமையாகப் பாராட்டிப் பேசியதைக் கேட்டு மக்கள் பெரிதும் மகிழ்ந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா என்ற பெருந்தலைவர் ஒருவர் இருந்தார். அவர் காந்தியவாதி, தமிழிலும் வடமொழியிலும் புலமை பெற்றவர். மிகப்பெரிய தேசபக்தர்.

 

மகாத்மா காந்தியடிகள் திருச்சிக்கு வந்திருந்த போது அவரும் வந்திருந்தார். நான் திருக்குறளில் பயிற்சி பெற்றுப் பேசுவதைக் கேட்டு அவர் மகிழ்ந்து எனக்கு மனவெழுச்சியினை உண்டாக்கினார்.

 

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் அவர்களுடன் அவருக்கு நெருங்கிய நட்பு உண்டு. செக்கிழுத்த செம்மல் வ.உ.சி. அவர்கள் தமிழ்ப் பெரும் மேதைகளுள் மேதையும் தலைவரும் ஆவார். அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது சுவாமி சகஜானந்தர், ‘வ.உ.சி. அவர்கள் காலையில் தோட்டத்துக்குப் பல் துலக்கச் செல்வார். அப்பொழுது கிணற்றினைச் சுற்றிக் கொண்டே எல்லாக் குறட்பாக்களையும் ஒப்பிப்பார்.’ இவ்வாறு என்னிடம் மனப்பாடச் சக்தியை இன்னும் அதிகமாக வளர்க்க வேண்டும் என்று அவர் குறிப்பால் உணர்த்தியது இன்று சொல்வது போலவே எனக்கு அது நினைவுறுத்திக் கொண்டிருக்கிறது.

 

உலக உத்தமர் மகாத்மா காந்தியடிகளார் முதற்கொண்டு பெருந்தலைவர் காமராஜர் வரையுள்ள மாபெரும் அரசியல் தலைவர்களும், தமிழ்நாட்டிலும் வடநாட்டிலும் உள்ள சமுதாயச் சீர்திருத்தத் தலைவர்களும் ஒரு மனதாகப் பாராட்டப்பெறும் உலகத் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் தந்தை பெரியார் ஈ.வே. இராமசாமி அவர்கள்.  தமிழகத்திற்கும், தமிழக சமுதாயத்திக்கும் அவர் செய்த தொண்டு ஈடு இணையற்றதாகும். 1924 ஆம் ஆண்டில் ஈரோட்டில் குடியரசு வார இதழைத் தொடங்கிய பொழுது ‘அப்பொருள் மெய்ப் பொருள் காண்பது அறிவு’ என்று முடிகின்ற இரண்டு குறட்பாக்களை முன்பக்கத்தில் அச்சிட்டு வந்தார்.

 

ஆதிகாலம் முதற்கொண்டே என்னுடைய சிறிய திருக்குறள் தொண்டுக்குத் தந்தை பெரியார் ஊக்கம் அளித்து வந்தார்கள். அன்று முதல் இன்று வரை, திராவிட இயக்க அன்பர்கள் முழு மூச்சாக திருக்குறள் தொண்டாற்றும் எனக்கு, ஒத்துழைப்புத் தந்து வருகின்றனர். 1948 ஆம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்கள் சென்னை இராயபுரத்தில் மிகப்பெரிய திருக்குறள் மாநாட்டினை நடத்தினார்கள்.

 

தமிழ் மாமுனிவர் திரு.வி. கல்யாணசுந்தரனார், கல்விக் கடல் சக்கரவர்த்தி நயினார், பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், மாண்புமிகு டாக்டர் நாவலர் நெடுஞ்செழியன் முதலிய பெரியார்கள் பங்கேற்று அம்மாநாட்டினைச் சிறப்பித்தனர்.

 

என்னை அழைத்து, சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்துமாறு பெரியார் ஆணையிட்டார். இயன்றவரை சிறப்பாகச் சொற்பொழிவாற்றினேன். திருக்குறளைப் பற்றிப் பேசும் போதெல்லாம் ‘கற்பு, மானம் முதலிய கருத்துக்களையெல்லாம் விமர்சனம் செய்து, வள்ளுவர் கருத்தினைப் பகுத்தறிவு கொண்டு ஆராய வேண்டும்’ என்று தந்தை பெரியார் அடிக்கடி கூறுவார்.

 

மக்களுடைய நல்வாழ்விற்காகவே வாழ்நாள் முழுதும் தியாகம் செய்த தந்தை பெரியார் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை குறிப்புக்களில் சிலவற்றை எடுத்து குறட்பாக்களுடன் ஒப்பிட்டு நூலொன்று எழுதி வெளிட்டேன். ‘வள்ளுவர் குறளும், ஈ.வே.ரா. வாழ்க்கையும்’ என்பது அந்நூலின் பெயராகும். கிட்டத்தட்ட  18 முறைகட்கு மேல் சிறை சென்ற அப்பெரியார் எவ்வளவு துன்பங்கள் அடைந்திருக்க வேண்டும் என்பதையும், யாருக்காக அத்துன்பங்களையெல்லாம் அடைந்தார் என்பதையும், பகுத்தறிவுடன் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்பதையும் விளக்குவதே அந்த நூலின் அடிப்படைக் கருத்தாகும்.

 

அந்த நூலில் பல குறட்பாக்களை விளக்கம் செய்து எழுதினேன். ஒரு காலத்தில் தமிழ் இலக்கிய உலகில் புரட்சிகரமான நன்மைகள் செய்த பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களும் முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களும் காஞ்சி பரவஸ்து, இராஜ கோபாலாச்சாரியார் அவர்களும், திருச்சி வித்வான் இரா. மீனாட்சி சுந்தரனார் அவர்களும் பெரியாரைப் பற்றி நான் எழுதிய அந்த நூலுக்குச் சிறந்த மதிப்புரைகள் தந்து என்னைச் சிறப்பித்தார்கள்.

 

உலகிலேயே சிறந்த நாகரிகமும் தொன்மையும் உடைய திராவிடப் பண்பாட்டினைத் திருக்குறளிலிருந்து எடுத்துக் காட்டிய ‘திருவள்ளுவரும் திராவிடக் கொள்கையும்’ என்ற நூலினை அந்தக் காலத்திலேயே எழுதி வெளியிட்டேன்.  அளவில் மிகச் சிறிய நூலாயினும் நூதனமான கருத்துக்களை விளக்கியதால் அந்நூல் மிகவும் பாராட்டப் பெற்றது.

 

 

ஒரு காலத்தில் தந்தை பெரியார் அவர்கள் உருசியா தேசம் சென்று வந்தார். வந்த பிறகு எப்போதும் போலச் சிறந்த பகுத்தறிவுச் சொற்பொழிவுகள் நிகழ்த்திக் கொண்டிருந்தார். அவருடைய சொற்பொழிவுகளை அடிக்கடி கேட்ட எனக்கு அன்பு, கருணை, இரக்கம், சமரசம், சமத்துவம், சன்மார்க்கம் என்று முழங்கிய வடலூர் வள்ளலார் நினைவுகள் என் உள்ளத்தில் தோன்றிக் கொண்டிருந்தன. வேறுபாடுகளைக் களைந்து, சமத்துவத்தைப் போதித்த வடலூர் வள்ளலார் கருத்துக்களுடன் தந்தை பெரியார் அவர்கள் மக்களிடையே வற்புறுத்திக் கொண்டு வந்த சமத்துவமும் பகுத்தறிவும் கொண்ட கருத்துக்களை விளக்கிச் சிறிய நூலொன்று எழுதினேன்.  இந்த நூல் பல ஆண்டுகட்கு முன்னரே வெளியிடப்பெற்றது. அந்த நூலுக்கு ‘வடலூரும், ஈரோடும்’ என்னும் பெயர் கொடுத்தேன்.  பொருத்தமான இடங்களில் குறட்பாக்களை இணைத்து அதில் விளக்கம் செய்துள்ளேன்.

 

அணியணியாய்க் கூற வேண்டிய செய்திகள் எத்தனையோ உண்டு என வாழ்நாளில் தொடர்ந்து செய்து வருகின்ற நற்பணி திருக்குறள் பரப்புகின்ற பணியேயாகும். மிகப்பெரிய அளவில் தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவினை தமிழக அரசு  நடத்திய போதெல்லாம் என்னை அழைத்துப் பேசத் செய்த நேரங்களில் குறட்பாப் பணியே, அப்பணியே என்ற முறையில் பேசினேன். பாரதியார் நூற்றாண்டு நிகழ்ச்சிகளிலும் தமிழக அரசினர் என் கடமையினை ஆற்றச் செய்து நான் மேற்கொண்டுள்ள வாழ்நாள் பணியான திருக்குறள் பரப்பும் தொண்டினைச் செய்ய வாய்ப்பளித்து வருவதும் மனநிறைவைத் தந்து எனக்கு  ஊக்கமூட்டுவதாகும்.

 

கோயமுத்தூரில் ஒருமுறை வியப்பான செய்தி ஒன்று நடந்தது. ‘பிரசிடெண்ட் ஹாலி’ல்  திருக்குறள் சொற்பொழிவு நிகழ்த்தினேன். கற்றோர் நிறைந்த கூட்டத்தில் நான் பேசி முடிந்ததும் தலைமை வகித்த பெரியவர் கூட்டத்தினரைப் பார்த்து ‘உங்களுக்கு ஏதேனும் ஐயப்பாடு இருந்தால் கேளுங்கள், திருக்குறளார் விடை சொல்லுவார்‘ என்றார். உடனே அக்கூட்டத்தில் கடைசியில் உட்கார்ந்திருந்த ஒருவர் ‘நான் ஒரு கேள்வி கேட்ட வேண்டும்’ என்று சொல்லிக் கொண்டே எழுந்து நின்றார். பெருவியப்புடன் எல்லோரும் அவரை உற்று நோக்கினர்.

 

கூட்டத்தில் சிறிய சலசலப்பும் கலகலப்பும் ஏற்பட்டது. ஏனெனில் எழுந்து நின்றவர் நம்நாட்டின் பெரிய விஞ்ஞானியாகிய ஜி.டி.நாயுடு ஆவார். நான் உடனே எழுந்து நின்று ‘தாங்கள் கேட்கலாம்’ என்று பணிவுடன் சொன்னேன். அவர் கேட்ட ஐயப்பாடு இதுதான்; ‘திருக்குறள் முழுதும் படித்தால் பைத்தியம் பிடிக்கும் என்கிறார்களே!’ உடனே நான் தாமதமில்லாமல், ‘படிக்க வேண்டிய முறையில் ஒழுங்காகப் படிக்கவில்லை என்றால் நீங்க சொன்ன மாதிரி நடந்தாலும் நடக்கலாம்’ என்றேன். அந்த விந்தைமிகு அறிஞர் பல்லாண்டுகளாக என்னிடம் அன்பு காட்டி வந்தார். என்னை ஊக்கப்படுத்தி வரும் மற்றொரு தொழில் மேதை – சிந்தனையாளர் – பொள்ளாச்சி வள்ளல் ந. மகாலிங்கம் அவர்களையும் மறக்க முடியாது.

 

இரண்டு ஆண்டுகட்கு முன்னதாக  ‘குறளியம்’ என்ற பத்திரிகை ஒன்றினை ஈரோட்டில் தொடங்கி வைத்தேன். வேலா இராசமாணிக்கம் அவர்கள் அந்த இதழுக்கு ஆசிரியராக இருந்து வெளியிட்டு வருகிறார். அந்த இதழில் நானும் எழுத வருகின்றேன். தமிழ்நாட்டில் நிறைந்த புகழ்பெற்ற திருக்குறள் அட்டாவதானியான திரு. பெ. இராமையா, திருக்குறள் அஷ்டாவதானம் செய்த பெரியார் அமரர் தி.ப. சுப்பிரமணியதாஸ் அவர்களும் நம்முடைய பாராட்டுக்குரியவர் ஆவர்.

 

1960 ஆம் ஆண்டில் மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகட்குச் சென்றிருந்தேன். 3 மாத காலம் சுற்றுப் பிரயாணம்  செய்தேன். அங்குள்ள தமிழ்ப் பெருமக்கள் அளவு கடந்த ஆர்வத்துடன் எனது திருக்குறள் விளக்கச் சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டினார்கள். பள்ளிக்கூடப் பிள்ளைகளுக்குப் பாடம் போதிக்கும் முறையில் அன்றாடம் வானொலியில் ஒலிபரப்புவதற்காக என்னுடைய திருக்குறள் பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்து வைத்துக் கொண்டார்கள்.

 

‘திருக்குறள் சம்பந்தமான வினாக்களையெல்லாம் எழுதி அனுப்பினால் அவைகட்கு எல்லாம் திருக்குறளார் அவர்கள் விடை சொல்லுவார்கள். உடனே வினாக்களை எழுதி அனுப்பவும்’ என்று வானொலியில் பொது மக்களுக்கு  அறிவிப்புச் செய்தார்கள். இந்தத் தேதியில் இந்த நேரத்தில் விடைகளைக் கேட்கலாம் என்று அறிவிப்புச் செய்தார்கள். குறித்த நாளில் குறிப்பிட்ட நேரத்தில் என்னை அழைத்தார்கள். நிலைய அதிகாரி ஒருவர், வந்த வினாக்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி என்னைக் கேட்க, ஒவ்வொன்றுக்கும் நான் விடை அளித்தேன். கோலாலம்பூர் வானொலி நிலையத்திலும் என்னுடைய பேச்சுக்களை ஒலிப்பதிவு செய்து கொண்டார்கள்.

 

ஈப்போ, கோலாலம்பூர், சிங்கப்பூர் முதலிய நகரங்களில் தொடர்ந்து 10 நாட்கள், 20 நாட்கள் என்று பேசும்படி அன்பர்கள் ஏற்பாடு செய்துவிட்டபடியால், வேறு பல ஊர்களினின்று வந்த அழைப்புக்களை ஏற்றுக் கொள்ள இயலாமல் போயிற்று. இருப்பினும் பினாங்கு, சிகாம், மலாக்கா, டெலிகான்சன் போன்ற இடங்கட்கும் சென்று சொற்பொழிவுகள் நிகழ்த்தி வந்தேன். ஈப்போ நகரில் இருந்த தமிழர் மகாசபையில் ‘குறள் நாவலர்’ என்ற பட்டத்தினை அளித்தனர். அப்பட்டத்தினைப் பெரிய தங்கப்பதக்கத்தில் பொறித்து அன்பளிப்புச் செய்தார்கள்.

 

அப்பொழுது சிங்கப்பூர் சட்டசபையில் சபாநாயகராயிருந்த திரு. கந்தசாமி அவர்கள் திருக்குறள் பணிபுரிய எனக்கு ஆதரவாக இருந்தார். சிங்கப்பூரில் அப்பொழுது கல்வி அமைச்சராக இருந்த திரு. இராசரத்தினம் அவர்களிடம் தமிழர்களின் சார்பில் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பெற்ற திருக்குறள் நூல் ஒன்றினை அரசு நூல் நிலையத்துக்கு அன்பளிப்புச் செய்தேன். மலேசியாவிலிருந்து புறப்படும் போது தமிழறிஞர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து தமிழ்த்துறையில் பெரும்பணி ஆற்றுவதற்காக அப்போது தான் மலேசியா வந்திருந்த அறிஞர் தனிநாயக அடிகளாரின் சீரிய தலைமையில் பாராட்டு விருந்து அளித்து என்னைச் சிறப்பித்தார்கள்.

 

‘இதுவரையில் மலாயா நாட்டிற்கு வந்திருந்த தமிழறிஞர் யாருக்குமே செய்யாத சிறப்பினைத் தங்களுக்குத் தான் செய்திருக்கிறோம்’ என்று வழியனுப்பிய மலேசியா அன்புப் பெரியார்களில் ஒருவர் ‘திருக்குறளார் பாராட்டு மலர்’ என்ற பெயரில் அச்சிடப்பட்ட புத்தகம் ஒன்றினை என்னிடம் கொடுத்தார். மிக அழகான முறையில் பல பெரியார்களின் பாராட்டுகள் அந்த மலரில் காணப்பட்டன. ஆயிரம் பிரதிகட்கு மேல் அச்சிட்டிருக்கின்றார்கள் என்று அறிந்தேன். திருக்குறள் சார்பில் எனக்கு அவர்கள் அளித்த பெருமைக்கு என்றும் நன்றியுடையேன்.

 

தென் ஆற்க்காடு மாவட்டத்தில் திண்டிவனம் நகரில் என்னைப் பாராட்டு தமிழகத்தின் பல  பெரியார்களின் நல்லுரைகளை வாங்கி மலர் ஒன்று வெளியிட்டார்கள். அந்த மலர் வெளியீட்டு விழா தமிழவேள் சர்.பி.டி. இராசன் அவர்கள் தலைமையில் 1955 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

 

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், சர்.பி.டி. இராசன், பேராசிரியர் ஏ.சி. செட்டியார், நகைச்சுவை அரசர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், நாடாளுமன்றச் சபாநாயகர் அனந்தசயனம் அய்யங்கார், டாக்டர் மு. வரதராசனார், பேராசிரியர் காமாட்சி குமாரசாமி அம்மையார், பேராசிரியர் டாக்டர் மெ. சுந்தரம் முதலியோரின் அரிய சொற்செல்வங்கள் எல்லாம் அப்பாராட்டு மலரில் இடம் பெற்றிருந்தன.

 

அக்காலத்திலிருந்தே பொதுமக்களுக்கும் திருக்குறள் கற்கும் எழுச்சி உண்டாக வேண்டுமென்று இயன்றவரை நாள் தோறும் இடைவிடாமல் பேசியும் எழுதியும் வந்ததன் பயனாகப் பாமர மக்களும் தமிழ்மறையின் இன்றியமையாத் தன்மையை உணர்ந்துவிட்ட  காரணத்தினால் இப்பொழுது பேருந்துகளில் எல்லாம் திருக்குறள் மணம் கமழுமாறு செய்தும் வள்ளுவர் கோட்டம் அமைத்தும் மகிழ்ச்சியும் மனநிறைவும் கொள்ளுகின்ற நிலையில் திருக்குறளால் மக்களிடையே முதன்மையான பெருமையும் சிறப்பும் எனக்கு இருப்பது கருதிப் பெருமைப்படுகின்றேன்.

 

என்னுடைய வாழ்நாளில் வேறு எப்பணியினையும் மேற்கொள்ளாது, திருக்குறள் கருத்துக்களைப் பரப்புவதையே வாழ்க்கையின் குறிக்கோளாகக் கொண்டு ஆற்றிய பணிகள் அனைத்தையும் விளக்கமாக எழுதப் புகுந்தால் அதுவே மிகப்பெரிய நூலாகும் என்று கருதி அவ்வாறு எழுதாமல் சுருங்கக் கூறியுள்ளேன் என்று முத்துவிழா மலரில் தனது வாழ்க்கைப் பயண சரித்திரத்தைப் பற்றி எழுதி உள்ளார்.

 

தமிழக அரசின் திருக்குறள் நெறிபரப்பு மையத்தின் இயக்குநராக இருந்த திருக்குறளார் 04.01.1994-ல் சென்னையில் காலமானார். முதல்வர் ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

 

அடுத்த நாள் (05.01.1994) விழுப்புரத்தில் அவரது உடல் அடக்கம் நடந்தது. இதில் விழுப்புரம் இராமசாமி படையாட்சியார், மாவட்ட ஆட்சித் தலைவர் கே. அசோக்வர்தன் ஷெட்டி, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ச. இராமதாஸ், முன்னாள் அமைச்சர் க. பொன்முடி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

 

திருக்குறளாருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அன்றைய தினம் விழுப்புரத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டன.

 

திருக்குறளுக்காக, திருக்குறளாகவே வாழ்ந்து மறைந்த ‘திருக்குறளார்’ வீ. முனிசாமிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவுருவச் சிலையும், விழுப்புரத்தில் நினைவுச் சின்னமும் அமைக்கப்பட வேண்டும். குறள் பேசும் அமைப்புகள் ‘குறளாரை’ப் பற்றியும் பேச வேண்டும்; அவருக்கு வள்ளுவர் கோட்டத்தில் ‘சிலை’ அமைத்தே தீரவேண்டுமென கோரிக்கை வைத்து அதில் வெற்றியும் பெறவேண்டும். அது ஒன்றே திருக்குறளாரின் அரும்பணிக்கு நாம் செய்திடும் சிறந்த கைமாறாக அமையும்.

 

வாருங்கள் வன்னியச் சொந்தங்களே! ஒன்று படுவோம். ஒன்றிணைந்து குறளாரின் புகழ் பாடுவோம்!

 

 

 

 

 

 

 

திருக்குறளாரின் தனிச் சிறப்புகள்

 

சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பேயே 1935ம் ஆண்டிலிருந்தே – திருக்குறள் பணியினைத் தொடங்கி யாரும் இதுவரை கண்டிராத முறையில், திருக்குறளைப் பட்டிதொட்டிகளெல்லாம் பாமர மக்களுக்கு எளிய முறையில் புரிந்து, அறிந்து பின்பற்றுமாறு செய்து வெற்றி கண்ட முதல் தொண்டர்.

 

எளிய மக்களும் இனிமையாகப் புரிந்து கொள்ளும் வண்ணம் மேடைகளில் நயமாகவும், கவர்ச்சியாகவும் அத்துடன் நகைச்சுவை கலந்தும் புதிய முறையில் குறட்பாக்களை விளக்கிக் கூறியவர். பொதுமக்களிடையே அவர்களுக்கு ஏற்றவாறு குறட்பாக்களைச் சொல்லுகின்ற பணியினை திருக்குறளாருக்கு முன்பு யாரும் செய்ய முயற்சிக்கவில்லை. அந்தச் சிறப்பான பணிக்கு மூலவர் திருக்குறளாரேயாவார்.

 

உலகப் பொதுமறையாகிய திருக்குறளில் அடங்கிய 1330 அரும்பெரும் குறட்பாக்களையும் மிகச் சிறந்தமுறையில் கருத்துரை, பொழிப்புரையுடன் விரிவாகவும் நுட்பமான விளக்கங்களோடும் 1200 பக்கங்களுக்கும்  அதிகம் கொண்ட இதுவரை வெளி வந்திராத முறையில் சிறந்த விளக்கம் கொடுத்து ஒரு நூலாக ‘உலகப் பொதுமறை திருக்குறள் உரை விளக்கம்’ என்ற நற்பெயரில் முன்னாள் தமிழக முதல்வர் பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் மாண்புமிகு எம்.ஜி. இராமச்சந்திரன் அவர்களால் பாராட்டப்பட்டு வெளியிடப்பட்டிருப்பது தனிப்பெருஞ்சிறப்பு. இதன் மூலம் அவரது ஐம்பது ஆண்டு காலத் திருக்குறள் ஆழமான, ஆராய்ச்சியின் பலனை தமிழ் மக்களுக்குப் பெரும் புதையலாகக் கொடுத்திருப்பதற்கு அன்னாருக்கு தமிழ் மக்கள் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

 

திருக்குறள் கடினமான நூல் என்றும், அது புரியாது என்றும் யாரும் நினைக்க வேண்டாம். திருக்குறளார் பேச்சைக் கேட்டால் தமிழில் தேர்ச்சி பெற்றிராதவர்கள் கூடத் திருக்குறளை எளிதில் புரிந்து கொண்டு இன்புற முடியும். அது மட்டுமன்று, புரிந்து கொள்கிறவர்கள் அதனுடன் நின்றுவிடாமல் திருக்குறளைத் தங்கள் அன்றாட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க விரும்பும் அளவுக்கு அதனை எளிதாக்கித் தெளிவு படுத்தி உள்ளத்தில் பதிய வைக்கும் தனித் திறமை படைத்தவர் திருக்குறளார்.

 

திருக்குறளாருக்கு நிகரான உவமை திருக்குறளாரேயாவர்.

 

ஒரு நூலுக்காக – அதாவது திருவள்ளுவரின் திருக்குறள் – ஆகிய ஒரே நூலுக்காக அரசு ஒரு நிர்வாகத் துறையையே அதாவது ‘திருக்குறள் நெறிபரப்பும் மையம்’ என்ற நிறுவனத்தையே ஏற்படுத்தக் காரணம் பெருமை திருக்குறளாரையே சாரும். உலகத்தில் வேறு எந்த நாட்டிலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அரசு ஒரு நூலின் நெறியைப் பரப்ப அரசுத் துறை ஒன்றை அமைத்து இயக்கி வருவது கிடையாது.

 

‘ஏ மனிதனே, சிரித்து மகிழ்வதோடு நின்று விடாமல் சிந்திக்கவும் மறக்க வேண்டாம்’ என்பது அவரது மந்திரச் சொற்கள்.

 

எல்லா மாவட்டங்களிலும் உள்ள பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் திருக்குறள் பற்றி எண்ணிலடங்கா சொற்பொழிவாற்றியவர் திருக்குறளார் ஒருவரே என்றால் மிகையாகாது.

 

வழக்கறிஞர் தொழிலுக்குப் படித்திருந்தும் கூட அந்தத் தொழிலை மேற்கொள்ளாமல் தமிழ்த் தொண்டு, திருக்குறள் தொண்டு ஆகியவற்றையே செய்து தனது வாழ்க்கையை முழுக்க முழுக்க திருக்குறளுக்கு அர்ப்பணித்த அறிஞர்.

 

மிகப் படித்த வித்துவான்கள், புலவர்கள், தமிழ் மேதைகள் கைகளில் மட்டுமே இருந்த திருக்குறளை அதிகம் படிக்க வாய்ப்பில்லாத பாமர மக்கள் முன்னே கொண்டு தருவதற்கு நகைச்சுவையுடன் புதுமுறையான பேச்சுடன் விளக்கம் தந்து வழிகாட்டினார்.

 

50 ஆண்டுகளுக்கு முன்னதாகவே பொது மேடைகளில் அன்றாட வாழ்க்கைக்குரிய குறட்பாக்களை திருக்குறளார் புதிய முறைகளில் கூறி வழிகாட்டிய பிறகுதான் மிகச் சிறந்த மேடைப் பிரசங்கிகளும், சீர்திருத்த மேதைகளும், தமிழ் அறிஞர்களும் பொது மேடைகளில் திருக்குறட்பாக்கள் மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்கினார்கள் என்பது வெளிப்படையான உண்மையாகும்.

 

1935ல் தொடங்கிய இவரது திருக்குறள் பரப்பும் பணி அழுத்தமாகவும், ஆழமாகவும் அதே நேரத்தில் அடுத்தடுத்து விரைவாகவும் செய்யப்பட்டதால், மக்களிடையே திருக்குறள் பற்றினை வேரூன்றச் செய்தது. அதனால்தான் மற்ற தமிழ் நூல்களைப் பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருந்த தமிழ்ப்புலமை பெற்ற சான்றோர்கள், பேராசிரியர்கள் எல்லோரும் திருக்குறள் சம்பந்தமாகவும் நூல்கள் எழுதி வெளியிட ஆரம்பித்தார்கள்.

 

இன்று தமிழ் மக்கள் உள்ளங்களில் எல்லாம் குறள் மணம் கமழச் செய்வதற்கு முதல் வித்திட்ட தொண்டர். திருக்குறள் விழிப்புணர்ச்சி விரைந்து வளரவும் வித்திட்ட வித்தகருமாவார்.

 

தனிச்சிறப்பு வாய்ந்த சொற்பொழிவுகளை நிகழ்த்தி அனைத்துத் துறைகளைச் சார்ந்த மக்களையும் பாமரர்களையும் முழு மனநிறைவு படுத்தியவர்.

 

கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் மற்றும் நிகழ்ச்சிகளிலும் குறளைப் பற்றிய பேச்சுகளைத் தனியாகப் பேசும் பழக்கத்திற்கு அடி கோலியவர்.

 

இமாலய மலையில் ரிஷிகேசத்தில் முனிவர் தவத்திரு. சிவானந்த மகான் அவர்களின் பக்தர்கள் பெருங்கூட்டத்துடன் இருந்த போது அந்த நிறுவனத்திற்கு அடிக்கடி சென்று ஐந்து ஆண்டுகளாக 1952 – 57ல் டெல்லி நாடாளுமன்றத்தில் இருந்த காலம் திருக்குறள் சொற்பொழிவு நடத்தி சிவானந்த சுவாமிகளின் மிகச் சிறந்த பாராட்டுதல்களைப் பெற்று சாதனை புரிந்தவர்.

 

தமிழ்மக்களிடையே திருக்குறள் பரவுவதற்கு ஆரம்பக் காலத்தில் 40க்கு மேற்பட்ட சிறுசிறு புத்தகங்களாக எழுதி வெளியிட்டு பாமரர்களுக்கும் ஏற்ற எளிய விலையில் விநியோகம் செய்தார்.

 

முதன்முதலில் திருக்குறளுக்கென்றே தனிப் பத்திரிகை அதாவது ‘குறள்மலர்’ என்ற மாதப் பத்திரிகையை நடத்திக் குறட்பாக்கள் மணம் கமழச் செய்த பெருமை திருக்குறளாரையே சேரும்.

 

 

1952 முதல் 1957 வரையில் டெல்லி பாராளுமன்ற அவையில் முதல்முதலாக திருக்குறள் மேற்கொள்கள் காட்டிப் பேசி தமிழ்மொழியின் சிறப்பை ஓங்கச் செய்தார்.

 

பாரத நாட்டின் வடக்கேயும் பல முக்கிய நகரங்களுக்குச் சென்று குறள் மணம் பரப்பும் பணியினைச் செய்தார்.

 

பல முறை கடல் கடந்து மலேசியா, சிங்கப்பூர், பினாங்கு, மலாக்கா, ஈபோ, டெலிகான்சன், சிகாமெட் போன்ற நாடுகளுக்குச் சென்று திருக்குறள் விளக்கத் தொண்டு செய்தார்.

 

சுமார் 50 ஆண்டுகளாக சென்னை, திருச்சி வானொலி மூலம் இனிய வானொலிப் பேச்சுக்கள் மூலம் திருக்குறள் பரப்பிய பெருமையும் திருக்குறளாரையே சாரும்.

 

1961ல் சிங்கப்பூர் கல்வி அமைச்சர் திரு. இராஜரத்தினம் அவர்கள் மூலம் அங்குள்ள அரசுக்கு ‘திருக்குறள்‘ நூலை அளித்துத் தமிழின் பெருமையை எடுத்துக் கூறியவர் திருக்குறளார்.

 

தமிழுலகில் இப்போது ‘வழக்காடு மன்றம்’ என்னும் பெயருடன் நடைபெற்று வருகின்ற நிகழ்ச்சியைத் தோற்றுவித்தவர் திருக்குறளாரேயாவார்.

 

ஐம்பத்திரண்டு வாரங்கள் – வாரம் ஒரு முறையாக – திருக்குறள் பேச்சினைத் தாமும், பிற அறிஞர்கள் பெருமக்களுமாக வானொலியில் நிகழ்த்தி குறள் பரப்பியவர்.

 

சென்னை வானொலி நிலையத்தில் நாள் தோறும் காலையில் திருக்குறள் ஒன்றைச் சொல்லிய பிறகு பிற நிகழ்ச்சிகளைத் தொடங்கும் முறைக்குக் காரணமானவர் திருக்குறளார் என்றே கூற வேண்டும்.

 

திருக்குறளை எளிதில் புரிந்து கொள்ள வேண்டுமானால் திருக்குறளாரின் பேச்சைக் கேட்க வேண்டும் என்கிற அளவுக்கு அதனை உள்ளத்தில் பதிய வைத்துச் சிந்தனையையும் தூண்டி விடுபவர் திருக்குறளார்.

 

திருக்குறள் என்ற கடலில் பொதிந்துள்ள கருத்துக்களைக் கடைந்தெடுத்து அதில் நிறைந்துள்ள அமிழ்தம் போன்ற கருத்துக்களை நகைச்சுவையுடன் விளக்கிக் கூறும் பேரறிஞர் திருக்குறளார்.

 

திருக்குறளார் சொற்பொழிவுகளில் ஆழம், அகலம், இனிமை, தெளிவு, நகைச்சுவை ஆகிய அனைத்தும் இருக்கின்றன.

 

பொது மேடைகளிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், ஆலய விழாக்களிலும், மாநாடுகளிலும், பட்டிமன்றங்களிலும், வழக்காடு மன்றங்களிலும், திருமண நிகழ்ச்சிகளிலும் மற்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு இதுவரை திருக்குறளார் பேசிய சொற்பொழிவுகள் எண்ணிலடங்கா என்பது பெருமைக்குரிய செய்தி.

 

 

பெரியாரும் திருக்குறளாரும்

 

திருக்குறளார் முனிசாமி பொது வாழ்க்கையில் ஈடுபட்ட போது பெரியார் கொள்கையில் ஈர்க்கப்பட்டு அவரோடு நெருங்கி பழகி வந்தார். பெரியாரைப் பற்றி குறிப்பிடுகிற போது ‘பெரியார் அவர்களின் நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர். நகைச்சுவையாக சொல்லி சிந்திக்கவும் வைப்பார். அவரிடமிருந்து தான் சிந்திக்க வைக்கிற கருத்துக்களை நகைச்சுவையோடு சொல்ல வேண்டும் எனும் உந்துதல் எனக்கு ஏற்பட்டது.

 

ஒரு சமயம் நானும் பெரியார் அவர்களும் அவரது அலுவலகத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு தொண்டர் பெரியாரிடம் தனது மகள் திருமண பத்திரிகையை கொடுத்து, திருமணத்திற்கு  வரவேண்டும் என அழைத்தார். பெரியார் அவர்களும்  திருமணப் பத்திரிகையை வாங்கி படித்துவிட்டு ‘கலப்பு திருமணம்’ என்று அச்சிடப்பட்டிருக்கிறதே, ஏன் என்று கேட்டார். அதற்கு அந்த தொண்டர், மணமகனும், மணமகளும் வேறு வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். அதனால்தான் கலப்பு திருமணம் என்று போடப்பட்டிருக்கிறது என்றார். உடனே பெரியார் இது என்ன முட்டாள்தனம்! ஒரு பெண்ணும், ஒரு ஆணும் இல்லற வாழ்வில் இணைவதுதான் ‘திருமணம்’  என்பது அதில் எங்கே ‘கலப்பு’ வந்தது? எப்போது ‘கலப்பு திருமணம்’ என்று போட வேண்டும் என்றால், ஒரு மாட்டுக்கும் ஒரு மனிதனுக்கும் திருமணம் நடந்தால் ‘கலப்பு திருமணம்’ என்று போட்டுக் கொள்ளலாம் என்று ஒரு போடு போட்டாரே பார்க்கலாம்! அவர் சொன்னதில் சிந்திக்க வைக்கிற நகைச்சுவை இருந்தது! இதை நான் பெரியார் நூற்றாண்டு விழாவில் பேசிய போது, மேடையிலிருந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அதிகமாக ரசித்து மகிழ்ந்தார்.

 

ஒரு சமயம் நான் (திருக்குறளார் முனிசாமி)  மேடையில் பேசிக் கொண்டிருந்த போது பெரியாரும் மேடையில் இருந்தார். அப்பொழுது மக்களிடையே உள்ள மூட பழக்கத்தையும் மூட நம்பிக்கையைப் பற்றியும் சொல்லி, இதைப் பயன்படுத்தி போலி சாமியார்கள் செய்கிற பித்தலாட்டத்தைப் பற்றி சொன்னேன்.

 

அதற்கு ஒரு உதாரணத்தையும் சொன்னேன். ‘ஒருவருக்கு திருமணமாகி பத்து வருடமாகியும் குழந்தையே பிறக்கவில்லை. அவர் ஒரு சாமியாரிடம் போய், தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாததை சொல்லி, குழந்தை வரம் கேட்டார்.

 

அதற்கு அந்த சாமியார், ‘நீ ஒரு முறை ராமேஸ்வரம் போய்விட்டு வா, அந்த மண்ணில் கால் வைத்து திரும்பியவுடனே உனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்’ என்றார். உடனே வந்த சாமியாரிடம் ‘ஐயா, எனக்கு சொந்த ஊரே ராமேஸ்வரம்தான்! இப்ப கூட ராமேஸ்வரத்திலிருந்து தான் வருகிறேன்’ என்றார். இதை நான் சொன்னவுடன் பெரியார் அவர்கள் மேடையிலேயே சத்தமாக சிரித்துவிட்டு ‘முனிசாமி இதை எல்லா ஊர் கூட்டத்திலும் சொல்லுங்க, அப்பதான் இந்த மக்கள் பகுத்தறிவோடு சிந்திப்பார்கள்’ என்றார்.

 

ஒருமுறை பெரியாரிடம் பேசிக் கொண்டிருந்த போது வர்ணாசிரம கொள்கை என்பது பற்றி ஒரு நண்பர் விவாதித்தார்.

 

‘ஒருவர் குலத்தொழிலை செய்யவில்லை என்றால் அடுத்த பிறவியில் ‘பன்றி’களாக பிறப்பார்கள் என்று சாஸ்திரங்கள் குறிப்பிடுவதாக சொல்கிறார்களே என்றார். உடனே பெரியார் கொஞ்சமும் தாமதிக்காமல், அப்படியென்றால் இன்று நாட்டில் திரியும் பன்றிகள் எல்லாம் போன பிறவியில் குலத்தொழில் செய்யாமல் வேறு தொழில் செய்து இப்பிறவியில் பன்றியாக பிறந்திருக்கின்றன. எனவே உயர் குலத்தில் பிறந்தவர்கள் அந்த பன்றிகளை தங்கள் மூதாதையராக வழிபட வேண்டும் என்றார்.

 

 

 

தினமணி கோயங்காவை வென்ற திருக்குறளார்

 

1952 ஜனவரி 5 – சுதந்திர இந்தியாவின் முதல் பாராளுமன்றத் தேர்தல் அன்று தான் நடந்தது.

 

இந்தியாவின் ஒட்டு மொத்த கவனமும் அப்போது திண்டிவனம் தொகுதியின் மீது தான். இதற்குக் காரணம், பத்திரிகை பலமும், பணபலமும் பொருந்திய எக்ஸ்பிரஸ் பத்திரிகை அதிபார் இராம்நாத் கோயங்கா இங்கு போட்டியிட்டார். இவரை எதிர்த்துக் களத்தில் நின்றவர் சமுதாயத்தில் மிகவும் பிறபடுத்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த, சாமானியரான ‘திருக்குறளார்’ வீ. முனிசாமி.

 

இந்தத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டுமென்பதற்காகத் தனது பலம் அத்தனையும் பிரயோகித்தார் இராம்நாத் கோயங்கா, விழுப்புரம் வீதிகளில், வானூர்தியில் இருந்து துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டன என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன், அவரது பிரச்சாரத்தின் வீச்சை.

 

இத்தகைய பலம் வாய்ந்த ஒரு மனிதரை, சாமானியரான திருக்குறளாரால் வெற்றி பெற முடியுமா? அனைவருக்கும் வியப்பு ஏற்பட்டது. ஆனாலும் இந்த வியப்புகளையெல்லாம் பொருட்படுத்தாத திருக்குறளார், மக்களை நேரிடையாக சந்தித்தார். தொகுதியில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இம்மண்ணின் மைந்தரது பாதம் பட்டது. தனது வழக்கமான நகைச்சுவைப் பேச்சால் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

 

திருக்குறளாரின் உழைப்பு, மக்களுக்கும் அவருக்கும் உள்ள நெருக்கம், எளிதாக வெற்றி பெற்று விடலாம் என நினைத்த கோயங்காவை ஒரு கட்டத்தில் நிலைகுலையச் செய்தது.

 

1951 டிசம்பர் 7ல் தனது நண்பர் ஸ்ரீராம் என்பவருக்கு கோயங்கா இப்படிக் கடிதம் எழுதுகிறார்.

 

’டிசம்பர் 1ம் தேதி வரை இந்தத் தொகுதிக்கு அருகில் எங்குமே நான் சென்றதில்லை. கடைசியில் திண்டிவனம் தொகுதியை எனக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டுவிட்டது. எனது தொகுதிக்கான தேர்தல் 1952 ஜனவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. ஒவ்வொரு நிமிடத்தையும் தொகுதிக்காக செலவழிக்காவிட்டால், முடிவு விபரீதமாகிவிடும்.

 

‘வட இந்தியர்களை எதிர்க்கும் இந்த மாகாணத்தைச் சேர்ந்த சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. என்னைத் தோற்கடிக்க உதவும் ஒரு கல்லைக் கூட அவர்கள் வீணாக்க விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் இந்தத் தொகுதியை ஏற்கத் தயங்கினேன். வேறு நல்ல தொகுதி தேவை என வற்புறுத்தினேன். எனது நலனுக்காக என்ற பேரில் இந்தத் தொகுதியை காங்கிரஸ் தலைவர்கள் ஒதுக்கிவிட்டனர்’.

 

திண்டிவனம் தொகுதியில் வெற்றி பெறுவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல என்ற உணர்வு கோயங்காவிடம் ஏற்பட்டிருந்ததையே இக்கடிதம் காட்டுகிறது.

 

தேர்தல் முடிவும் கூட அப்படித்தான் அமைந்தது. கோயங்காவை விட, ஒன்றரை லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று, மகத்தான வெற்றி பெற்றார் ‘திருக்குறளார்’ வீ. முனிசாமி. அன்று முதல் பாராளுமன்றக் கட்டிடத்திலும் திருக்குறள் ஒலிக்கத் தொடங்கியது.

 

 

 

 

 

புரட்சித்தலைவர் எம்.ஜி,ஆரும் திருக்குறளார் முனிசாமியும்

 

புரட்சித்தலைவர் அவர்கள் திருக்குறளார் முனிசாமியிடம் மிகுந்த அன்பு கொண்டிருந்தார். திருக்குறளாரை 1980ல் திண்டிவனம் பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிடச் செய்து, முழுச் செலவையும் ஏற்றுக் கொண்டார். திருக்குறளாரை ‘தமிழ் வளர்ச்சி துறை’யின் தலைவராக நியமித்து வேண்டிய வசதிகள் செய்து கொடுத்தார்.

 

திருக்குறளார் ஒரு கூட்டத்தில் பேசும் போது ‘தாலியின்’ சிறப்பு பற்றி சொன்னார். ‘தாலியினை’ தனது கணவரின் உயிராக, உணர்வுப் பூர்வமாக மதிப்பவர்கள் பெண்கள்தான். அடிக்கடி அந்த தாலியை தொட்டு கும்பிட்டுக் கொள்வார்கள். அதனால்தான் நமது முன்னோர்கள் ஆண்தான் தாலியை பெண்களுக்கு அணிவிக்கும்படி வைத்தார்கள். பெண் தாலியை ஆணுக்கு வைக்கும்படி வைக்கவில்லை.

 

அப்படி வைத்திருந்தால் ‘பனியனை கழட்டி ஆணியில் மாட்டுவது போல், தாலியையும் கழட்டி ஆணியில் மாட்டிவிட்டு போயிருப்பான்’ என்று சொன்னார். இந்த கருத்தை புரட்சித் தலைவர் அடிக்கடி திருக்குறளாரை சொல்லச் சொல்லி மகிழ்வார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

புரட்சித்தலைவியும் திருக்குறளாரும்

 

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தான் திருக்குறளார் முனிசாமியை ‘திருக்குறள் நெறி பரப்பு மையத்தின்’  தலைவராக நியமித்து அவரது இறுதி காலத்தில் ஆதரவு அளித்தார். அவருக்கு ‘திருவள்ளுவர்’ விருதினையும் அளித்தவர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்தான்.

 

ஒரு பத்திரிகை விழாவில் திருக்குறளார் பேசிய போது அம்மாவைப் பற்றி சொன்னது.

 

‘சத்திய தாய்க்கு தீங்கிழைத்தால், தீங்கிழைத்தவர்களின் அதிகாரம் ஒரு நொடியில் அழிந்து போகும் என்பது தான் வரலாறு. அதைத்தான் நமது புராணங்களும் சொல்லுகின்றன. மகாபாரதத்தில் ‘பாஞ்சாலி’க்கு துரியோதனன் தீங்கிழைத்தான். அவனது வம்சமே அழிந்து போனது. இராமாயணத்தில் இராவணன் சீதைக்கு தீங்கிழைத்தான். அவனது ஆட்சியே சிதைந்தது போனது. சிலப்பதிகாரத்தில் பாண்டிய மன்னன் ‘கண்ணகி’க்கு தவறிழைத்தான். அவனது நாடே எரிந்து போனது. சட்டசபையில் புரட்சித்தலைவிக்கு கருணாநிதி கட்சியினர் தீங்கிழைத்தார்கள். இன்றைக்கு அவர்களது ஆட்சியே அழிந்து போனது என்பதுதான் வரலாறு.’

 

ஒரு சமயம் திருக்குறளார் முனிசாமியிடம் புரட்சித்தலைவி அம்மாவைப் பற்றி  ஒருவர் கேள்வி கேட்டார். புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எதிர்கட்சி தலைவரிடம் மிகவும் கடுமையாக நடந்து கொள்கிறார்களே அது சரிதானா? என்றார். அதற்கு திருக்குறளார் முனிசாமி ஒரு கதையை சொல்லி விவரித்தார். ஒரு ஊரில் ஒரு சாமியார் ஒரு குரங்கு வளர்த்தார். நண்பர் ஒருவர் சாமியாரை பார்ப்பதற்காக போனார். உடனே சாமியார் குரங்கிடம் நண்பருக்கு தண்ணீர் எடுத்து வரச் சொன்னார். குரங்கும் எடுத்து வந்து கொடுத்தது. உடனே சாமியார் குச்சியால் குரங்கின் தலையில் ஒரு அடி கொடுத்தார். பிறகு சாமியார் குரங்கிடம் ஒரு தட்டு எடுத்து வரச் சொன்னார். குரங்கும் எடுத்து வந்து கொடுத்தது. சாமியார் குச்சியால் மீண்டும் குரங்கின் தலையில் ஒரு அடி போட்டார். உடனே சாமியாரை பார்க்க வந்த நபர், ஏன் குரங்கை அடிக்கிறீர்கள். அதுதான் நீங்கள் சொல்வதை செய்கிறதே! நான் இருக்கும் வரையாவது அதை அடிப்பதை நிறுத்துங்கள் என்றார். சாமியாரும் அடிப்பதை நிறுத்திவிட்டார். கொஞ்ச நேரம் குரங்கு சும்மா இருந்தது. சிறிது நேரம் கழித்து வந்திருந்த நபரின் மடியில் வந்து உட்கார்ந்தது. பிறகு அவரது தோளில் ஏறியது. கொஞ்ச நேரத்தில் அவரது காதில் விரலைவிட்டு குடைந்தது. அவரது தலைமுடியை பிடித்து இழுத்தது. உடனே வந்திருந்த நபர் சாமியாரை பார்த்து ‘ஐயா நீங்கள் அடித்தது சரிதான். குரங்கின் தலையில் இரண்டு அடி போடுங்கள்’ என்றார். அதுபோல் தான் எதிர்கட்சி தலைவர். அவ்வப்பொழுது அவரை அடக்கி வைத்தால் தான் மக்களை அவரிடமிருந்து காப்பாற்ற முடியும் என்று விளக்கினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பாவேந்தர் பாரதிதாசன் பார்வையில்

நாவேந்தர் திருக்குறளார்

 

திராவிட நாட்டுளீர்! உங்கள் செயற்கெலாம்

அறமே அடிப்படை ஆதல் வேண்டும்!

அறம்எனல் வள்ளுவர் அருளிய திருக்குறள்!

செல்லும் வழிக்குத் திருக்குறள் விளக்கு!

மனமா சறுக்கும் இனிய மருந்து!

கசடறக் கற்க; கற்றிலார் அறிஞர்பால்

கேட்க! கேட்க! திராவிடம் மீட்க

ஔவையார் அருளிய ஆத்திச் சூடியில்

ஒருதொடர் தன்னை – ஒன்றுக் கான

உரையை – எப்படி ஒருவர் இலேசாய்

நினைவில் நிறுத்தி இனிதுரைப் பாரோ

அப்படித் திருக்குறள் முனிசாமி அறிஞர்

முப்பால் ஆயிரத்து முன்னூற்று முப்பது

குறளையும் அவற்றிற்குக் கொடுத்த பொருளையும்

நினைவில் நிறுத்தி இனிது விளங்கும்ஓர்

ஆற்றல் உடையவர்; அவர்திருக் குறள்மலர்

வழங்கும் நகைச்சுவை மறச்சுவை பிறசுவை

ஆர்ந்தசொல் அனைத்தும் பெரும்பயன் அளிப்பவை!

அரிசி இட்டலி அளிப்பதாய்ச் சொல்லிப்

பாசிப் பயிற்றுமி படைப்பவர் அல்லர்;

அறிஞரின் பேச்சும் எழுத்தும் அருங்குறள்

தேன்ஆற்றி னின்று செம்பில்மொண் டளிப்பவை!

குறட்பயன் கொள்ள நம்திருக்

குறள்முனி சாமிசொல் கொள்வதுபோதுமே!

 

 

 

பெரியார் வாழ்த்து

 

 

திருக்குறளார் என்னுமுயர் செய்ய முனிசாமி

மருக்குலவும் வேலனருள் மன்னி – பெருமை

பவளவிழாக் கொண்டுயர்ந்து பல்லாண்டு வாழி

தவளமலை போலே தழைத்து.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

திருக்குறளாருக்காக எம்.ஜி.ஆர். செய்த புரட்சி

 

திருக்குறளார் எழுதிய உலகப் பொதுறை என்கிற திருக்குறள் விளக்க நூலை புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் வள்ளுவர் கோட்டத்தில் வெளியிட்டார். நூல் வெளியீட்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். அவர்கள் நேராக மேடைக்கு வராமல், பக்கத்திலுள்ள அறையில் சென்று அமர்ந்து கொண்டு, திருக்குறளாரை அழைத்து ‘இந்த அரிய புத்தகத்தை நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுதும் எழுதியிருக்கிறீர்கள்.  உங்களுக்கு இந்த நூலின் பதிப்பகத்தார் எவ்வளவு பணம் தருவார்கள்’ என்று கேட்டார்.

 

திருக்குறளாரும், ‘நூல் விற்பனையில் எழுத்தாளரான தனக்கு 30 சதவீதமும், பதிப்பகத்தார்க்கு 70 சதவீதமும்  கொடுக்கப்படும் என்றார்.  உடனே புரட்சித்தலைவர், வாழ்நாள் முழுதுவதும் சிந்தித்து எழுதிய உங்களுக்கு வெறும் 30 சதவீதம்தானா? என்று கேட்டு, பதிப்பகத்தாரை அழைத்து வரச் சொன்னார். இந்த நூலின் பதிப்பகத்தாரான ‘திருமகள் நிலையத்தின்’ உரிமையாளரான திரு. இராமநாதன் செட்டியார் எம்.ஜி.ஆரை சந்தித்தார். உடனே அவரிடம் அவரது உறவினர்களைப் பற்றியெல்லாம் விசாரித்துவிட்டு, திருக்குறளாருக்கு நூல் விற்பனையில் வெறும் 30 சதவீதம் கொடுப்பது மிகவும் குறைவாக இருக்கிது.

 

அதிகமாக கொடுக்க வேண்டும் என்று சொன்னார். அதற்கு செட்டியார் அவர்கள், எழுத்தாளருக்கு 30 சதவீதமும், பதிப்பகத்தாருக்கு 70 சதவீதம் என்பது தான் வழக்கத்தில் உள்ள நடைமுறை என்றார். அதற்கு புரட்சித்தலைவர் இந்த நடைமுறை சரியல்ல. நீங்க நூல் விற்பனையில் திருக்குறளாருக்கு 70 சதவீதமும், பதிப்பகத்தாருக்கு 30 சதவீதமும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு, இதற்கு ஒப்புக்கொண்டால் உடனடியாக தமிழக அரசு பத்தாயிரம் புத்தகங்களை விலைக்கு வாங்கும் என்று ஒரு போடு போட்டார். செட்டியாரும் வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார். பின்பு மேடைக்கு வந்த எம்.ஜி.ஆர். அவர்கள் திருக்குறளாருக்கு 70 சதவீதம் கொடுக்க ஒப்புக்கொண்டதை சொல்லி, தமிழக அரசு 10,000 புத்தகத்தை வாங்கும் என அறிவித்து புரட்சினை செய்தார்.

 

நடிகர் திரு. தங்கவேலு

 

நடிகர் தங்கவேலு அவர்களும் திருக்குறளார் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார். திருக்குறளார் சென்னையில் கூட்டத்தில் பேசினால், தவறாமல் தங்கவேலு அவர்கள் கலந்து கொண்டு, கூட்டத்தில் ஒருவராக இருந்து பேச்சை ரசிப்பார். ‘அறிவாளி’ திரைப்படத்தில் நடித்த போது, திருக்குறள் முனிசாமி சொன்ன நகைச்சுவை கருத்துக்களை தான் பயன்படுத்தினேன் என்று தனது பேட்டியில் சொன்னார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கலைவாணருடன் திருக்குறளார்

 

மறைந்த நடிகர் என்.எஸ்.கே. (என்.எஸ். கிருஷ்ணன்) அவர்களும், திருக்குறளார் முனிசாமி அவர்களும் நெருங்கிய நண்பர்கள். திருக்குறளார் அவர்கள் பாராளுமன்றம் சென்றும் விட்டு சென்னைக்கு வரும் போதெல்லாம், என்.எஸ்.கே. அவர்கள் அவருடைய காரை ரயில் நிலையத்துற்கே அனுப்பி, திருக்குறளாரை தன் வீட்டிற்கு அழைத்து வந்து பேசி மகிழ்வார்.

 

ஒவ்வொரு முறையும் திருக்குறளாருடன் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் பேசி முடிந்த பின், என்.எஸ்.கே. அவர்கள் திருக்குறளாரின் சட்டைப் பையில் ரூ. 1,000 அல்லது ரூ 2,000யை வைத்துவிடுவார். திருக்குறளார் ‘எதற்கு இந்த பணம் என்று கேட்டார், நீங்கள் பேசும் போது சிந்திக்க வைக்கக்கூடிய பல நகைச்சுவை உதாரணங்கள் சொன்னீர்கள். அவற்றையெல்லாம் நான் என் சினிமா படத்தில் பயன்படுத்திக் கொள்வேன். அதற்கான சன்மானம் தான் என்பார். என்.எஸ்.கே. அவர்களுக்கு பெரிய அளவில் என்.எஸ்.கே. நினைவு விழா ஒன்றினை நடத்தினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

நடிகர் திரு. பாக்கியராஜ்

 

 

நடிகர் திரு. பாக்கியராஜ் அவர்களும், திருக்குறளார் மீது மதிப்பும், மரியாதையும் கொண்டவர். தன்னுடைய ‘பாக்யா’ வார இதழில் திருக்குறளாரின் நகைச்சுவை கருத்துக்களை தவறாமல் வெளியிடுவார்.

 

தன்னுடைய ‘பாக்யா’ முதலாம் ஆண்டு விழாவின் போது, திருக்குறள் முனிசாமி தான் தலைமை தாங்கி பேசவேண்டும் என்று அவரை அழைத்துச் சென்று பெருமைப் படுத்தினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குன்றக்குடி அடிகளாருடன்

 

ஒரு சமயம், குன்றக்குடி அடிகளாரும், திருக்குறளாரும் ஒரு விழாவில் கலந்து கொண்டார்கள். அப்போது திருக்குறளார் கூட்டத்தில் பேசும் போது, சிலப்பதிகாரத்தின் மாதவி மற்றும் மணிமேகலை பற்றி குறிப்பிட்டார். மாதவியின் பெண்ணான மணிமேகலை துறவறம் பூண்டு சாமியாராக போகிறேன் என்று சொன்னவுடன், மாதவி மிகவும் வருத்தப்பட்டு, தனது தாய் ‘சித்தரத்தையை’ கூப்பிட்டு மணிமேகலைக்கு அறிவுரை சொல்லச் சொன்னாள்.

 

உடனே சித்தரத்தையும் தனது பேத்தி மணிமேகலையை பார்த்து, ‘ஏம்மா நீ போய் சாமியாராக போகிறேன் என்று சொல்றியே! நான் இளமையாக இருந்த போது என் காலடியில் பல பிரபுக்களும், ராஜாக்களும் மயங்கி கிடந்தார்கள். அதே போல மாதவியின் அழகில் மயங்கிப் போய் கோவலன் இங்கேயே மயங்கி கிடந்தார். நீ போய் சாமியாரா போகிறேன் என்று சொல்றியே! நம்மகிட்ட வந்தவன் தான் பிற்காலத்தில் சாமியாரா போவான். அப்படித்தான் பல சாமியார்கள் உருவாகியிருக்கின்றனர்’ என்று சித்தரத்தை சொன்னதை திருக்குறளார் சொன்னவுடன், குன்றக்குடி அடிகளார் எழுந்து சிரித்துக் கொண்டே, ’திருக்குறள் முனிசாமி சொன்ன மாதிரி சாமியாராக மாறினவன் நான் இல்லை, தெளிவாக சொல்லிவிடுகிறேன்’ என்று சொன்னவுடன் அரங்கமே சிரிப்பு அலையில் மிதந்தது.

 

 

 

 

 

 

 

 

நான் சொல்கிறேன்; எனக்குத் தோன்றுகிறது!

 

தந்தை பெரியாருக்குத் திருக்குறளாரிடம் மிகுந்த நன்மதிப்பும் அன்பும் உண்டு.

 

தந்தை பெரியார், தான் ஏற்பாடு செய்திருந்த ‘திருக்குறள் மாநாட்டில்’ பேசுவதற்காகத் திருக்குறளாரை அழைத்திருந்தார். குறளார், ஐயாவின் சிக்கனத்தை முன்பே அறிந்திருந்தவராகையால், ஐயாவிடம் ‘அன்பளிப்புத் தொகை’ எதனையும் எதிர்பார்க்கவில்லை. ஐயாவோ, மணியம்மையாரை அழைத்துக் குறளாருக்கு ‘எட்டு ரூபாய்’ கொடுக்கும்படி பணித்தாராம். குறளாருக்கு இப்போது போல் அப்போதும் பணம் தேவையாய் இருந்தது. அதனை அறிந்து கொண்டு தானே முன் வந்து உதவிய ஐயாவின் ‘குறிப்பறிதல் – திறனைக்’ குறளார் வியப்புடன் குறிப்பிட்டார்.

 

திருக்குறளார், ஒரு கூட்டத்தில், தந்தை பெரியார், தமிழ்நாட்டு மேடைப் பேச்சில் எவ்வாறு திருப்பத்தை ஏற்படுத்தினார் – என்று விளக்கினாராம்.

 

‘நாங்கள் எல்லாம் பேசினால் ‘வள்ளுவர் சொன்னார்’, ‘சேக்ஸ்பியர் சொன்னார்’, ‘இராமலிங்க அடிகள் பாடினார்’ என்று தான், ‘அவர் சொன்னார்‘, ‘இவர் சொன்னார்’ என்போம். ஐயாதான், ‘நான் சொல்கிறேன்; எனக்குத் தோன்றியது’ என்று பொது மேடைகளில் முதன்முதலாகத் துணிந்து பேசியவர்.’

 

குறளார், இவ்வாறு ‘அவர் அப்படிச் சொல்லியிருக்கிறார்; இவர் இப்படி சொல்லியிருக்கிறார்’, என்று வெறும் மேற்கோள்களாகக் காட்டிப் பேசும் நண்பர் ஒருவரிடம் கேட்டாராம். ‘ஏன், நான் சொல்லுகிறேன். எனக்குத் தோன்றுகிறது என்று சொல்வதுதானே!‘

 

நண்பர் பதில் சொன்னாராம் ‘எனக்குத் தோன்றுகிறது’ என்று சொன்னால் எவனும் நம்பமாட்டான். ‘நான் சொல்லுகிறேன்’ என்றால், ‘நீ யார் அதைச் சொல்வதற்கு?’ என்று கேட்பான்.

 

ஐயா, ‘தந்தை பெரியார், தனக்குத் தோன்றுகிறது என்று பேசி வந்தார் என்றால், அவருக்கு இருந்தது, தோன்றியது, தோன்றுகிறது என்று பேசினார்’ என்று உணர்ந்து குறிப்பிட்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறளார் கோபிநாதன்

 

1913 ஆம் வருடம் செப்டம்பர் மாதம் 26-ந் தேதி இன்றைய விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்த தொகைப்பாடி எனும் கிராமத்தில் தான் நமது குறளார் அவதரித்தார். வீராசாமி, வீரம்மாள் ஆகியோரின் மகனாக பிறந்த நமது குறளாரின் உடன் பிறந்தோர் தியாகராசன், சூரியநாராயணன், நடராசன் ஆகியோர் ஆவர்.

 

வழக்கறிஞர் படிப்பை அக்காலத்திலேயே படித்தவர் திருக்குறளார். அவரின் துணைவியார் ஞானம்பாளை திருச்சியில் 1939 ஆம் ஆண்டு மணமுடித்தார். இத்தம்பதியினருக்கு குமர குருபரன், பாலசுப்பிரமணியன், கோபிநாதன், ஞானசூரியன், திலகர், சுந்தரராஜன் என்ற புதல்வர்களும், தேவி குமாரி, ரேவதி ஆகிய புதல்விகளும் வாரிசுகளாக உதித்தார்கள்.

 

நாம் திருக்குறளாரைப் பற்றி எழுதலாமென முடிவெடுத்து அவருடைய குடும்பத்தாரை தொடர்பு கொள்ள முயன்ற போது நமக்கு கிடைத்தவர் திருவாளர் கோபிநாதன் அவர்கள். வழக்கறிஞரான கோபிநாதனும், அவரின் துணைவியார் சாந்தி அவர்களும் நம்மை இனிய முறையில் உபசரித்து கட்டுரை எழுதுவதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் புரிந்தனர்.

 

திரு. கோபிநாதன் அவர்கள் அ.இ.அ.தி.மு.க.வின் வழக்கறிஞர் பிரிவில் திறம்பட பணியாற்றி வருகிறார். கழகத்தின் நிரந்தர பொதுச் செயலாளரான மக்கள் முதல்வர் அம்மா அவர்களின் ஒவ்வொரு பிறந்தநாளை முன்னிட்டும் பெரும் விழா எடுத்து, பிரார்த்தனை மேற்கொள்ளும் அம்மாவின் அதி தீவிர விசுவாசி. தற்போது தமிழக அரசின் ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்கியூட்டராக பணியாற்றி வருகிறார் குறளாரின் அருந்தவப் புதல்வரான கோபிநாதன், திருக்குறளாரின் சிறப்பையும், அவருடைய குறள் மீதான பற்றையும் புரிந்துணர்ந்து குறளாரைப் பற்றிய தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் முழுவதையும் சேர்த்து வைத்திருந்ததற்காக வன்னிய குரல் சார்பாகவும், வன்னிய சமுதாயத்தின் சார்பாகவும் திரு. கோபிநாதன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மீண்டும் நன்றியினை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

 

 

அடுத்தவர் கதை பாரமும், இராமாயணமும்…

உன் கதை திருக்குறள்…

 

காரைக்குடி, திருப்பத்தூர், புதுச்சேரி, சென்னை – போன்ற பெருநகரங்களில் ‘கம்பர் விழா’ மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி பேச்சுக்களைக் கேட்கிறார்கள்.

 

தமிழகத்தின் வடபகுதியில் பெருவாரியான சிற்றூர்களில் திரௌபதி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. இக்கோவில்களில், கோடைக்காலத்து இரவுகளில் கூடும் மக்கள், ‘பாரதப் பூசாரிகள்’ படித்து விளக்கும் பாரதக் கதையை மிகவும் பொறுமையாக இருந்து கேட்கிறார்கள். கந்தல் பாய்களிலும் சாக்குகளிலும் பெரியவர்களின் இடங்களையும் தாங்கள் பிடித்துக் கொண்டு சிறுவர்கள் உறங்குவார்கள்.

 

குறளார் கேட்டார்: ‘இப்படியும் இராமாயணத்தையும் பாரதத்தையும் கேட்பதற்கு இவ்வளவு மக்கள் கூடுவதில் உள்ள இரகசியம் என்ன?

 

இருக்கிறது. இந்தக் கதைகள், அடுத்தவர் கதைகள்…! குறளார் இடைவெளி கொடுப்பார். கேட்டுக் கொண்டிருப்பவர்கள் ‘குபுக்’கென்றும் ‘பொசுக்’கென்றும் எத்தனையோ விசித்திரமான குரல்களில் சிரிப்பார்கள்.

 

குறளார் தொடர்வார் : ‘… இராமன் மனைவியை இராவணன் அடித்துக் கொண்டு போறான்…! அப்புறம்? சுக்கிரீவன் பொண்டாட்டியை வாலி வைத்துக் கொண்டான்…! அப்புறம்? தருமன், சூதில் பாஞ்சாலியையும் வைத்தான்…? அப்புறம்? பாஞ்சாலியைச் சபைக்கு இழுத்து வந்து புடவையை உருவினான், துச்சாதனன்…! அப்புறம்?

 

அடுத்தவன் கதை, அடுத்தவன் பெண்டாட்டி கதை, ‘உட்கார்ந்து பேசலாம்…!’ என்று கேட்பான்.

 

திருக்குறள், உன் கதை, கேட்கிறவன் கதை. நாம் இன்னொருவன் கதையைக் கேட்போம். நம் கதையைக் கேட்க மாட்டோம். இராமன் கதையை, இராமன் கேட்கட்டும், துரியோதனன் கதையைத் துரியோதனன் கேட்கட்டும். உன் கதையை நீ கேட்க வேண்டாமா?’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிராமத்திற்குப் புரியும் பாரதம்…

நகரத்திற்கு புரியும் இராமாயணம்…

 

இராமாயணமும், பாரதமும் பெரும்பாலான மக்களால் கேட்கப்படுகின்றன. நாடகம், திரைப்படம் என்னும் வாயில்கள் வழியாகப் பார்க்கவும்படுகின்றன. இவ்விரண்டு கதைகளுள், எக்கதையை எப்பகுதி மக்கள்   மிகவும்  விரும்புகிறார்கள்? திருக்குறளார் வீ. முனிசாமி அவர்கள் இதனை எண்ணிப் பார்த்தார்.

 

‘கிராமத்து மக்கள் மண்ணை நம்பி வாழ்பவர்கள். நிலத்தகராறு அவர்களுக்குப் பழக்கமானது. பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும்

நடந்த நிலத்தகராறு மகாபாரதம். கிராமத்தானுக்கு இது புரியும். பாரதம் கேட்கிறான்!

 

கம்பன் விழாக்கள், பெருநகரங்களில் நடைபெறுகின்றன. ஒருவன் மனைவியை இன்னொருவன் கடத்திக் கொண்டு போன கதை இராமாயணம். இது நகரத்துப் பெருமக்களுக்குப் புரியும்.

 

எவனுக்கு எது புரியுமோ, அவன் அதனைக் கேட்பான்.

 

திருக்குறள், அதனை எவன் படிக்கின்றானோ, கேட்கின்றானோ அவனைப் பற்றிச் சொல்கிறது. நமக்கு நம்மைப் பற்றித் தெரியாது; புரியாது. அதனால் தான் நமக்குத் திருக்குறள் சுவைக்கவில்லை. ஆனால், ஒருவன் தன்னை அறிவது தான் பேரறிவு. திருக்குறள் நமக்குப் பேரறிவு தரும் நூல். திருக்குறள், நம்மை நமக்கு யார் என்று காட்டுகிறது.

 

 

 

 

இவர்தாங்க பூசணிக்காய்

 

தான் முதன்முறையாகப் பாராளுமன்றத் தேர்தலுக்கு நின்ற காலத்து (1952) தேர்தல் நிகழ்ச்சிகளைக் குறளார் சுவைபட விளக்குவார்:

 

‘ஆலமரம் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை, அன்பர் ஒருவர், வாக்காளருக்கு அறிமுகம் செய்து வைப்பார். ‘இவர் தாங்க மரம்’ என்பார் வேட்பாளரும் மறுக்காமல் ‘ஆமாங்க’! என்பார்.’

 

‘இவர்தாங்க மண்வெட்டி!’

 

வேட்பாளர் மறுக்கவே மாட்டார்.

 

‘இவர்தாங்க பூசணிக்காய்!’

 

சில நேரங்களில் வாக்காளர், அறிமுகப்படுத்தும் அன்பர், வேட்பாளரை, அவரின் பூசணிக்காய் போன்ற உருவத்தைத்தான் குறிப்பிட்டுக் கேலி பேசுகிறார் என்று நினைத்துக் கொண்டு விடுவது உண்டாம்!

 

‘அரம் போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர்

மக்கட்பண்பு இல்லா தவர்’

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிணற்றில் போடுங்கள்

 

‘வாக்கு வேண்டிவரும் அன்பர், வாக்காளரிடம் உங்கள் ஓட்டைக் கிணற்றில் போடுங்கள்’ என்று வேண்டுவார். சிற்றூர் வாக்காளர், முதலில் ‘முதலில் வந்தவன் பெட்டியில் போட வேண்டும் என்றான், இவன் கிணற்றில் போட வேண்டும் என்கிறான். எங்கே போடுவது?’ என்று குழம்பிப் போய்விடுவார்.

 

‘கிணற்றில் போடுங்கள்’ என்று கேட்டுக் கொண்டவன் வேண்டியவனாக இருந்தால், வாக்காளரின் ‘ஓட்டு’ கேட்டுக் கொண்டபடியே, வாக்காளர் வீட்டுக் கிணற்றில் போடப்பட்டு விடுவதும் உண்டு. வாக்காளர், வாக்குச்சாவடியில் பெற்றுக் கொண்ட வாக்குச் சீட்டைக் கவனமாக மறைத்து வெளியே எடுத்து வந்துவிடுவார்!

 

அப்போதெல்லாம் குறியிடுவதைப் போலவே பெட்டியில் இடுவதும் மறைவாகவே இருக்கும். ‘கிணற்றில் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறானே! வேண்டியவனாயிற்றே!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறளைக் கோயங்கா எதிர்க்கிறது’

 

நேற்று (06.01.81) கடைத்தெருவில் சந்தித்துக் கொண்ட ஆசிரிய நண்பர்கள் பொதுச் செய்திகள் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். பொருளியல் துறை பேராசிரியர் திரு. மணிவண்ணன் அவர்கள், தான் எட்டாவது படித்துக் கொண்டிருந்த ஆண்டில் (1952) நடந்த பாராளுமன்றத் தேர்தலைப் பற்றி வருணித்தார்.

 

இந்நாளில் காணும் தேர்தல் காலச் சுவரொட்டிகளோ, சுவர் எழுத்துக்களோ, அந்நாளில் இத்துணை அளவுக்கு இருந்ததில்லை. வேண்டுகோள் அச்சிட்ட துண்டுத் தாள்களைக் கொடுத்துக் கொண்டு போவார்கள். தினமணி உரிமையாளர் திரு. கோயங்கா துண்டுத்தாள்களை வான ஊர்தியிலிருந்து ஊர்களின் மீது இறைப்பதற்கு ஏற்பாடு செய்தாராம். தாழப் பறந்த வான ஊர்தியில் இருந்து விழுந்து சிதறிய ‘நோட்டீசுகளை’ திரு.வி.க. சாலையில் (விழுப்புரம்) தான் ஓடி எடுத்து இருக்கிறாராம். அது மாணவர்களுக்கு அப்போது விளையாட்டு!

 

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் ‘பேரறிஞர் அண்ணா’, ‘திராவிட நாடு இதழில்’  ‘குறளைக் கோயங்கா எதிர்க்கிறது’ என்று கட்டுரை எழுதினார். இச்செய்தியைத் திருக்குறளார் ஒரு போது குறிப்பிட்டார், நான் மேலும் அப்போது கேட்டேன்.

 

கோயங்காவின் பிரச்சார முறையைக் கேலி செய்து, ஐயா, தேர்தல் மேடைகளில் பேசுவாராம்: ‘நோட்டீசுகளை வாக்காளர்களின் கைகளில் கொடுக்க வேண்டும். அவை கக்கூசுகளில் வந்து விழுகின்றன. எடுத்துக் படிக்க வேண்டி இருக்கிறது. இவர் தேர்தலில் வெற்றி பெற்றால், நாம், இவரைப் போய்ப் பார்க்க முடியாது; கக்கூசிடம் சென்றுதான் வேண்டுதலோ முறையீடோ செய்து கொள்ள வேண்டி நேரும்.’

 

ஐயா, பெற்றி பெற்றார். திருக்குறளார் தோல்வி அடைந்திருந்தால் கூட மக்கள், கேட்ட பேச்சை மறந்திருக்க மாட்டார்கள்!

‘கோழிகள் எங்கே?’

 

‘அப்போது (1952) வன்னியர் பெருமக்கள் ‘உழைப்பாளர் கட்சி’ என்று ஒன்றைத் தொடங்கி இருந்தார்கள். உழைப்பாளர் கட்சி வேட்பாளர்கள், சேவல் சின்னத்தில் போட்டியிட்டார்கள்.

 

வேட்பாளர்கள், வாக்குச்சாவடிக்குப் போகும் முன்பு, வாக்காளர்களை ஒன்றாகத் திரட்டி ஓரிடத்தில் இருக்கச் செய்திருப்பார்கள். சற்றுக் கழித்துத் திரும்பி வந்து, ‘நம்ம கோழிகள் எல்லாம் இருக்கின்றனவா!’ என்று எண்ணுவார்கள். சில தலைகள் குறைந்திருக்கும்.

 

‘கோழிகள் எங்கே?’

 

குழம்பு சட்டிக்குப் போயிருக்கும். குழம்பு சட்டிக்குப் போன கோழிகள் கூவாது! திரும்பியும் வராது. இருக்கின்ற கோழிகள் போய் விடப் போகின்றன. பிடித்துக் கூடைக்குள் போடு!’

 

  • ••

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Fill out this field
Fill out this field
Please enter a valid email address.
You need to agree with the terms to proceed

Menu